Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/content/42/10186442/html/index.php:2) in /home/content/42/10186442/html/wp-content/themes/Clipso/functions.php on line 189
Sirukathaigal - Sirukathai - Short Stories in Tamil

கடைசி முகம்

 

கதை ஆசிரியர்: ஜெயமோகன்.

…….சரி, நான் இக்கடிதத்தை எழுத வந்த விஷயத்தை சொல்கிறேன். சென்றவாரம் அனந்தன் தம்பி ஒரு கத்தை சுவடிகளை அனுப்பியிருந்தான் . எல்லாம் கொல்லம் — கோட்டயம் சாலையில் உள்ள துளசிமங்கலம் என்ற புராதன நம்பூதிரி மடத்தில் கிடைத்தவை . இந்த மடத்தைப்பற்றி நீ கேள்விப்பட்டிருப்பாயோ என்னவோ ? தெற்கு கேரளத்தில் அதர்வ வேத அதிகாரம் உள்ள இரண்டு மனைகளில் ஒன்று இது . நான்கு நூற்றாண்டுக்காலம் இந்த மனையின் நம்பூதிரிகள் முக்கியமான மந்திரவாதிகளாக விளங்கிவந்திருக்கிறார்கள். திவான் தளவாய் கேசவதாசன் மீது சில நாயர் மாடம்பிகள் ஒரு மகாமாந்திரீகனை வரவழைத்து ஏவல் செய்ததாக அச்சு கணியாரின் ‘கேரள சரித்திர வைபவம் ‘ சொல்கிறதே, அந்த மந்திரவாதி இந்தக் குடும்பத்தை சேர்ந்தவர்தான். திவான் கேசவதாசன் பிழைத்துக் கொண்டார் ,ஆனால் அதன் பிறகு இந்தமனைக்கு கெட்ட காலம் ஆரம்பித்தது .மனையின் சொத்துக்கள் முழுக்க பிடுங்கப்பட்டன . கோயிலதிகாரங்கள் நிறுத்தலாக்கப்பட்டன. படிப்படியாக அக்குடும்பத்தின் செல்வாக்கும் முக்கியத்துவமும் இல்லமலாயிற்று .இந்த வம்சத்தில் இப்போது இருப்பவர் சங்கரநாராயணன் நம்பூதிரி . இவர் கோட்டயம் பாரில் வக்கீலாக இருக்கிறார் .

கள்ளிப்பாலை

[கள்ளிப்பாலை]

துளசிமங்கலம் வீடு மிக மிகப் புராதனமான மரக்கட்டிடம் . இன்று ஒன்றுக்குமே உதவாது . அங்கே ஐம்பது வருடங்களாக யாரும் குடி இல்லை , ஒரு கேஸ் நடந்து இப்போதுதான் சங்கரநாராயணனுக்குச் சாதகமாக தீர்ப்பு வந்தது . கூரை சரிந்து ,சுவர்களும் மட்கிஇடிந்து விட்டன. வீட்டுக்குள்ளேயே ஜேஷ்டாதேவிகோவில் ஒன்றும் உண்டு . கட்டிடத்தை இடித்து விறகுவிலைக்கு விற்க சங்கரநாராயணன் முயன்றபோது கோயில் உள்ளறையிலிருந்து ஒரு சுவடிப்பெட்டி கிடைத்தது . அதில் உள்ள சுவடிகளை அனந்தன்தம்பிக்கு தந்திருக்கிறார் . அனந்தன் பரிசோதித்தபோது சரித்திர சம்பந்தமான எதுவும் இல்லாததனால் எனக்கு அனுப்பினான் . பெரிதாக ஒன்றும் இல்லைதான். நிறைய மந்திரச் சுவடிகள். பாஷா பாரதம் ஒன்று . இரண்டுவகை ராமாயணம் . எல்லாமே ஏற்கனவே தெரிந்த விஷயங்கள் .

என் ஆர்வத்தை கிளறியது ஒரு சுவடி . அதன் பெயர் ‘ ஸ்ரீ துளசிமங்கல ப்ரஃபாவம் ‘ யார் எழுதியது என்று தெரியவில்லை . மொத்தம் இருபத்தொன்று கதைகள் . எல்லாமே துளசிமங்கலத்து நம்பூதிரிகள் பல்வேறு யக்ஷிகளையும் பூதங்களையும் வென்றடக்கியது பற்றியவை . வழக்கம்போல ஏற்கனவே கேரளத்தில் பரவலாக புழக்கத்தில் இருந்த கதைகள்தான் எல்லாமே . அவற்றையெல்லாம் துளசிமங்கலத்துக்காரர்கள் செய்ததாகச் சொல்லி இடங்களையும் அதற்கேற்றபடி மாற்றியிருக்கிறார்கள் .பழைய சம்புக்களில் எல்லாம் இருக்குமே கொச்சையான தமிழ் போன்ற ஒரு மலையாளம் , அந்த நடை . இப்படி தொடங்குகிறது ‘ அதுக்கு பின்னாலே முல்லந்திருவோண ஆழ்ச்சையிலே தம்றான் திருமேனி த்றுப்பள்ளிகொண்டெழுந்த போதே .. அந்நு விசாக பூற்ணிமையாணெந்நு கண்டு மகிழ்ந்நு கொண்டாடி தன்றெ கூட்டரோடிவ்வண்ணம் ஆக்ஞாபிச்சாதாயிட்டு …. ‘ ‘ ஆனால் ஒரு கதை எனக்கு மிக ஆர்வமூட்டுவதாக இருந்தது. அதை நீ படிக்கவேண்டும் என்று பட்டது . மூலத்தில் படித்தால் உனக்கு மரை கழன்றுவிடும் . நானே கதைபோல விரித்து எழுதியிருக்கிறேன்.

கதை சுனைக்காவில் நீலி என்ற யக்ஷியைப்பற்றியது . இப்போது தேசிய நெடுஞ்சாலையாக இருக்கும் கோட்டயம் கொல்லம் பாதை முன்பு வண்டித்தடமாக இருந்தது . சாலைபோட்டது திவான் கேசவதாசன் . வண்டித்தடத்திலிருந்து கொட்டாரக்கரைக்குப் பிரியும் சாலை முன்பு சிறிய ஒற்றையடிப்பாதையாக இருந்திருக்கலாம் . கேரளத்தின் பொதுவான நில அமைப்புக்கு மாறாக இது வரண்ட, கடினமான செம்மண்பாறையாலானது . ஆகவே இப்போதுகூட அதிகமும் முந்திரிமரமே இங்கு வளர்கிறது .முன்பு பனைமரங்களும் செண்பக பாலைமரங்கள் போன்றவையும் அடர்த்தி இல்லாமல் வளர்ந்திருக்கும் காட்டுப்பகுதியாக அது இருந்தது. இப்போதும் அங்கே ஆள்வாசம் மிகக் குறைவுதான். செங்கல்பாறையை வீடுகட்ட செங்கல்லாக செதுக்கும் தொழில் இருப்பதனால் பகலில் தொழிலாளர் நடமாட்டம் இருக்கும் ,அவ்வளவுதான். சுனைக்காவில் நீலி பிரதிஷ்டை ஒரு பிரம்மாண்டமான உருளைப்பாறையின் கீழே இருக்கிறது .முன்பு கோயில் கிடையாது ,அப்பாறையின் அடியிலுள்ள சிறிய குகை ஒன்றுக்குள் விக்ரகம் நிறுவப் பட்டிருந்தது . இப்போது அதைக் கருவறையாகக் கொண்டு கான்கிரீட்டில் முகமண்டபமும் சிறுகோபுரமும் கட்டி , வரவேற்பு வளைவும் அமைத்திருக்கிறார்கள் . பெயரும் சுனைக்காவில் பகவதி என்று மாற்றப்பட்டிருக்கிறது.

ஆனாலும் இப்போதுக்கூட அங்கே போகும்போது மனம் கலக்கமடையும். காரணம் அந்த பாறைதான் .அதைப்பார்த்துக் கொண்டிருந்தால் எக்கணமும் அது உருண்டு நம்மீது விழுந்துவிடும் என்ற பிரமை ஏற்படும். அதன் உச்சியில் ஒரு கள்ளிப்பாலைமரம் ஏதோவெடிப்பிலிருந்து எழுந்து நிற்கிறது . கள்ளிப்பாலைமரம் இப்போதெல்லாம் மிகவும் குறைந்துவிட்டது . அந்த மரத்துக்கே யக்ஷிப்பாலை என்று பெயர் இருப்பதனால் யாரும் அதை வளர்ப்பதில்லை . சிறிய இலைகள் குலைகுலையாக அடர்ந்த கிளைகள் நாற்புறமும் சரிந்து கிடக்கும் அந்த மரமே ஒரு யக்ஷி கூந்தல் விரித்து நிற்பதுபோலத்தான் இருக்கும் .ஆடிமாதம்தவிர பிறமாதங்களில் கோயிலுக்கு பக்தர் வருகை இல்லை. கொட்டாரக்கரை போக அது ஒரு குறுக்குவழியாகையால் அடிக்கடி பேருந்துகள் போகும். முன்பு அவ்வழியாகப்போகிறவர்களை சுனைக்காவில் யக்ஷி கவர்ந்து அந்த பாறை உச்சிக்கு இட்டுச்சென்று உதிரம் குடித்து விட்டு கீழே உதிர்த்து விடுவது வழக்கமாக இருந்திருக்கிறது .உள்ளூர்க்காரர்கள் அவ்வழியாக போவதில்லை என்றாலும் கோட்டயம் கொல்லம் வியாபாரிகள் அவ்வழியாகச் சென்று அவ்வப்போது அகப்பட்டுக் கொள்வதுண்டு. கூட்டமாகச்சென்ற பலர் பாறையின் உச்சியில் நிலவொளியில் பந்தச்சுடரின் கரும்புகைபோல நீண்ட கூந்தல் மேலெழுந்து பறக்க கைகளை விரித்தபடி நிற்கும் யக்ஷியை கண்டிருக்கிறார்கள். சில கூட்டங்களை அவள் பின் தொடர்ந்து வந்திருக்கிறாள் , யட்சியின் மார்புக்காம்புகளிலும் கூரிய பார்வை உண்டு என்பது அடையாளம்.

துளசிமங்கலம் மனையின் மூத்த மாந்திரிகரான பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு அதர்வ வேத அடிப்படையிலான ஆபிசார வேள்விகள் செய்பவரானாலும் யக்ஷிபூதங்களை அடக்கும் வித்தை தெரிந்தவரல்ல. அதில் அவருக்கு ஆர்வம் இல்லை. நாட்டில் தெய்வ பயமும் ஒழுக்கமும் நிலவ யக்ஷியும் பூதங்களும் அவசியம்தான் என்பது அவர் எண்ணம் . ஒருமுறை கொல்லம் சாலையில் முகத்துவாரம் என்ற ஊரில் ஒரு ஆபிசார யக்ஞத்துக்காக அவர் சென்றிருந்தார் . அவரது மகனும் பிரதான சீடனுமான விஷ்ணுசர்மன் துணைக்குச் சென்றிருந்தான். வேள்வி நடந்து கொண்டிருக்கும்போதுதான் மிக அவசியமான ஒரு பொருளை எடுத்துவர மறந்துவிட்டது தெரிந்தது . அதர்வ மந்திரம் எழுதப்பட்டு நாற்பத்தொன்றுநாள் பூஜை செய்யப்பட்ட போதிபத்ரம் அது .வேள்வி மூன்றுநாள் நடக்கும். அதற்குள் அதை எடுத்துவந்துவிடலாம் .ஆனால் அது மனையின் உள்ளே ஜேஷ்டைகோயிலின் கருவறைக்குள் இருந்தது . அங்கு நம்பூதிரியும் சீடனும் தவிர பிறர் நுழையக் கூடாது. மேலும் மந்திரங்களை பிறர் பார்ப்பதும் அபாயம். ஆகவே அவர் தன் மகனையே அனுப்ப தீர்மானித்தார்.

சுனைக்காவில் யக்ஷி குடியிருக்கும் பகுதிதான் குறுக்குவழி . அவ்வழியாக சென்றால்தான் சென்று வர முடியும். நம்பூதிரி தன் மகனுக்கு மந்திரம் ஓதி உருவேற்றப்பட்ட மூன்று கூழாங்கற்களை தந்தார் .சுனைக்காவு யக்ஷி வழிமறிப்பதில்லை , அதற்கான அதிகாரம் அவளுக்கு இல்லை .பின்னால்வந்து அழைப்பாள் , சபலப் பட்டு திரும்பிப்பார்ப்பவர்கள்தான் அவள் இரை . திரும்பிப்பார்க்காதவர்களை அவள் ஒன்றுமே செய்யமுடியாது . எக்காரணத்தாலும் திரும்பிப்பார்க்கலாகாது என்றும் , திரும்பிப்பார்க்க நேரிட்டு யக்ஷி பிடிக்கவந்தால் ஒரு கூழாங்கல்லை எடுத்து அவளை எறியுமாறும் நம்பூதிரி சொன்னார். அப்படி அவன் மூன்றுமுறை தப்பிக்கலாம்

விஷ்ணு கிளம்பினான் .அவனுக்கு பயமிருந்தாலும் கூழாங்கற்கள் கையிலிருக்கும் தைரியமும் ,என்ன நடக்கிறது என்று பார்க்கும் ஆர்வமும் ,தன் மனவலிமையை சோதித்துப் பார்க்கும் துடிப்பும் இருந்தது . சாலையில் இருந்து சிறுபாதைக்கு பிரிந்ததுமே அவனது புலன்கள் எல்லாமே மும்மடங்கு வலிமைகொண்டு விட்டன . மனம் ஐந்தாக பிரிந்து ஒவ்வொரு புலனிலும் குவிந்திருந்தது . அது முழுநிலா நாள். வெட்டவெளியில் நிலவொளி கனவுத்தோற்றம்போல இளநீல நிழல்களுடன் பெருகி நிரம்பிக் கிடந்தது . தனித்தனியாக நின்ற மரங்கள் காற்றில் மெல்ல இலைகளை சிலுசிலுத்தபடி நின்றன. வானில் நிலவு அமானுடமான ஒரு மெளனத்துடன் மெல்லிய காவிநிறம்கலந்த வெண்மையுடன் ஒளிவிட, மேகச்சிதறல்கள் அதை பிரதிபலித்தன . காற்று மரங்களை உலைத்தபடி ஓடும் ஒலியும் , அவ்வப்போது சிறு பிராணிகள் சருகுகளை மிதித்தபடி ஓடும் ஒலியும் அவனை அதிரவைத்தன. தொலைவில் சுனைக்காவுப் பாறை கழுவிய ஈரம் உலராத யானை போல கரிய பளபளப்புடன் நின்றது .அதன் மீது நின்ற பாலைமரம்மீது நிலவொளி பாலருவிபோல கொட்டியது .அவன் எச்சரிக்கைகளை மறந்து மெல்ல அந்த காட்சியின் மோனத்தில் தன்னை மறந்துவிட்டான் .

ஒரு காலடியோசை கேட்டுத்தான் சுயநினைவு பெற்றான். கவனித்தபோது அது அவனது காலடியோசைதான் என்று தெரிந்தது . ஆறுதலடைந்து சில அடிதூரம் நடந்தபோது இன்னுமொரு காலடியோசைகேட்பது போலிருந்தது .பலமுறை செவிகூர்ந்த பிறகு அது தன் காலடியின் எதிரொலி என்று அறிந்தான். ஆனாலும் அவ்வொலியை மனம் மிகக் கூர்மையாக கவனித்தது . பிறகு ஒரு கணத்தில் அவனுக்கு தெளிவாயிற்று, அது எதிரொலி அல்ல . காரணம் ஒருமுறை அவன் காலடி வைப்பதற்குள்ளேயே எதிரொலி கேட்டது. அவன் உடல் குப்பென வியர்த்து விட்டது .உடல் முழுக்க பலவிதமான துடிப்புகள் வேகம் கொண்டன. மூச்சை சிரமப்பட்டு வெளிவிட்டு இழுக்கவேண்டியிருந்தது .பிடரியில் மயிர் சிலிர்த்து ஒரு மணல் விழுந்தால்கூட சருமம் உடைந்து ரத்தம் வந்துவிடும் போலிருந்தது .

மென்மையான ஒரு சிரிப்பொலி கேட்டது . மோகமும் குறும்பும் தெரியும் ஒலி. ‘ தெரிந்துவிட்டதா ? நான் அப்போதே உங்கள் பின்னால்தான் வருகிறேன் ‘ அனிச்சையாக திரும்பிய கழுத்தை அனைத்து பிரக்ஞையாலும் பிடித்து நிறுத்தவேண்டியிருந்தது . ‘ ஏன் பார்க்க மாட்டார்களோ , பயமா ? ‘ பிறகு கருணையும் அன்பும் தெளிந்த குரல் , ‘ உங்களைப்போன்ற ஓர் ஆண்மகனைத்தான் நான் காலாகாலமாக தேடிக் கொண்டிருந்தேன்… ‘ .அவன் அவள் பேச்சுகளை செவிகொடுக்காமலிருக்க முயன்றாலும் மனம் அக்குரலிலேயே குவிந்திருந்தது .அவள் பேச்சுகளுக்கெல்லாம் அவன் அந்தரங்கம் பதில்சொல்லியபடியே இருந்தது .அவன் திரும்பாதது கண்டு அவள் குரல் மாறுபட்டது . ‘ எல்லாமே கட்டுக்கதை . பெண்களைப்பற்றித்தான் யார்வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் சொல்லலாமே .நான் அப்படிப்பட்டவளில்லை .நம்புங்கள் ‘ என்று தழுதழுத்து மெல்ல விசும்பினாள். அவன் மனம் உருகியது , கால்கள் குளிர்ந்துகனத்து அசையமறுப்பதுபோல உணர்ந்தான். திரும்பமாட்டேன் திரும்பமாட்டேன் என்று மந்திரம்போல சொல்லிக் கொண்டான்.

அவள் அவனிடம் பல உணர்ச்சிகளுடன் மீண்டும் மீண்டும் பேசினாள். கொஞ்சல், அழுகை, காமச்சிணுங்கல்கள் , முனகல்கள் ,பலவித அந்தரங்க ஓசைகள்….. கடைசியில் அவள் ‘சரி , ஒத்துக் கொள்கிறேன் .நீ என்னைப்பற்றி நன்றாக தெரிந்தவன் .புலனடக்கம் உள்ளவன் .ஆனால் நீ இழப்பது என்ன என்று உனக்குத் தெரிந்திருக்கவேண்டும் . என்னைப்போன்ற ஓர் அழகியை நீ மனிதகுலத்தில் ஒருபோதும் காணமுடியாது . அழகு பற்றிய உன்னுடைய எந்தக் கற்பனையும் என்னைத் தொட்டுவிடமுடியாது….. ‘

‘ ‘நீ போய்விடு .நான் ஏமாளி இல்லை ‘ ‘என்று அவன் சொன்னபோது குரலில் உறுதி இருக்கவில்லை

‘ ‘ஒரு கணம் ?ஒரே ஒரு கணம் ? நீ பிறகு வாழ்நாள் முழுக்க வருத்தப்படுவாய்…. ‘ ‘

அவன் தன் கைகளில் இருந்த கூழாங்கற்களைப் பார்த்தான் . உதடுகளை ஈரப்படுத்தியபடி இருமனத்துடன் தடுமாறி ,சட்டென்று தீர்மானித்து , திரும்பிப்பார்த்தான் . நிலவொளியில் இளம் தாழம்பூ போல அவள் நின்றிருந்தாள் . அவனது சிந்தை பிரமித்து உறைந்திருந்த நேரத்தில் அவளது புன்னகை விகாரமடைந்து கரங்கள் நீண்டு வந்தன . அவன் சுதாரித்துக் கொண்டு ஒரு கூழாங்கல்லை எடுத்து அவள் மீது வீசினான் .அவள் பெரிய ஒரு பாறையால் தாக்கப்பட்டதுபோல அவள் தெறித்து விழுந்தாள்

அவன் ஓடி மூச்சுவாங்க நின்றபோது பின்னால் அவள் வந்துவிட்டிருந்தாள் . சுனைக்காவின் பாறை அப்படியே தொலைவில் நிற்பதுபோலப் பட்டது .நடக்க நடக்க தூரம் குறையாதது போல. ‘ என்னை இன்னொரு முறை பார்க்காமல் உன்னால் இருக்கமுடியுமா ? ‘ ‘ என்றாள் அவள் . ‘ நான் உன்னை ஏமாற்றினேன். எந்த பெண்ணும் முதலிலேயே தன்னை முழுக்க வெளிப்படுத்திவிடமாட்டாள் .நான் இன்னமும் பேரழகி… ‘ ஆனால் அவள் சொற்களை அவன் கேட்டதாகவே காட்டிக்கொள்ளவில்லை .

அவள் சென்று விட்டது போலத்தோன்றியது . அவன் செவி கூர்ந்தபோது எந்த ஓசையுமில்லை .ஆனாலும் அவன் திரும்பவில்லை . சட்டென்று அவனது அம்மாவின் குரல் கேட்டது ‘ விஷ்ணு , எங்கே போகிறாய் ? அப்பா எங்கே ? ‘ திரும்பிப் பார்க்கப்போனவன் கட்டுப்படுத்திக் கொண்டான். ‘விஷ்ணு , என்ன இது ,கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் எங்கே போகிறாய் ? உன் அக்காவுக்கு ஜன்னி கண்டிருக்கிறது அதுதான் உன்னைதேடி நானே வந்தேன்…. யக்ஷியெல்லாம் உள்ள இடம் என்கிறார்கள்.. ஆ…. ‘ அம்மாவின் பயம் நிறைந்த அலறல் ஓசைகேட்டு அவன் ‘அம்மா ‘என்று திரும்பிவிட்டான் . அக்கணமே என்ன என்று புரிந்துகொண்டு பயங்கர தோற்றத்துடன் புகைபோல எழுந்து தாக்கவந்த யக்ஷிமீது தன் கூழாங்கல்லை எறிந்தான் .

மீண்டும் அவள் பின்னால் வந்தாள் . ‘ நீ தப்பப் போவதில்லை .அது எனக்கு உறுதியாகத் தெரியும் .தாய் மீது அதிகமான பாசம் கொண்ட எவரும் பெண்களிடமிருந்து தப்பமுடியாது . ‘

‘உன் பேச்சை நான் கவனிக்கவே போவதில்லை ‘

‘நீ திரும்பிப்பார்ப்பாய் . பார்க்காதவன் என்றால் முதலிலேயே திரும்பிப் பார்த்திருக்கமாட்டாய். ‘

‘இல்லை இனி ஏமாற மாட்டேன்.. ‘ ‘

‘ உனக்கு இது மிக அரிய வாய்ப்பு .ஆண்களின் காமம் மனதில்தான் . ஆகவே அதற்கு எல்லையும் இல்லை .உன் ஆழத்தில் எத்தனையோ ரகசிய ஆசைகள் இருக்கும் . நிறைவேறாத ஆசைகள், நிறைவேறவே முடியாது என உனக்கே நன்றாகத்தெரிந்த ஆசைகள். உனக்கு நீயே எண்ணிக்கொள்ளக்கூட கூச்சப்படும் ஆசைகள் . அவற்றை இங்கே நீ நிறைவேற்றலாம் . பார், இப்போது உன்மனதில் மின்னலாக வந்துபோன அவளுடைய அதே தோற்றத்தில் நான் நின்றுகொண்டிருக்கிறேன்… ‘ ‘

அவன் தழுதழுத்த குரலில் , ‘ என்னை விட்டுவிடு ‘ என்றபடி , தலையை திருப்பாமலேயே நடந்தான் .

சற்று நேரம் கழித்து அவள் ‘சரி , உன்னிடம் என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன். உனக்கு ஒரு பரிசாக இதை அளிக்கிறேன் .ஒரு ஆணுக்கு அவனுடைய மிகச்சரியான மறுபாதி போன்ற பெண் ஒருத்தி உண்டு . அவளை அவன் முழுக்க முழுக்க தற்செயலாகவே சந்திக்கமுடியும். ஆகவே கோடானுகோடி ஆண்கள் அவளை கண்டுகொள்வதேயில்லை . அவளைக் கண்டால்கூட ஒருவேளை அவர்களால் அடையாளம் காணமுடியாதுபோகலாம் . அந்த சந்திப்பு நிகழும்போது அவன் ஆழ்மனமும் விழித்திருக்கவேண்டும் ….. ‘ ‘

‘ ‘என்னிடம் நீ எதையுமே பேச வேண்டாம் ‘ ‘

‘ ‘விஷ்ணு, இனி உன்னை நான் ஏதும் செய்யமுடியாது உன் ஊர் வரப்போகிறது .என் எல்லையும் வந்துவிட்டது . இது உன் சுயகட்டுப்பாடை மதித்து நான் அளிக்கும் பரிசு . உன்னுடைய பெண்ணை உனக்குக் காட்டுகிறேன் . அதன் பின் அவளை நீ தேடிக் கண்டுபிடிக்கலாம் . குறைந்தபட்சம் அவள் என நம்பி வேறு ஒருத்தியை மணக்காமலாவது இருக்கலாம். ‘ ‘

‘ ‘நீ போய்விடு ! போ… ‘ ‘

‘ ‘உண்மையிலேயே அவளைப் பார்க்க நீ விரும்பவில்லையா ? அவளை பார்ப்பது ஒருவகையில் நீ யார் என அறிவதும் கூட ‘ ‘

‘ ‘வேண்டாம் போய்விடு… ‘ ‘

‘ ‘நீ அறியமாட்டாய் . மண்ணில் மனிதர்களுக்கு அளிக்கபட்டுள்ள இன்பங்களில் முதன்மையானதே அப்படிப்பட்ட முழுமையான காதல் இன்பம்தான் . எத்தனையோபேர் அதற்காக தங்கள் உயிரை தயக்கமின்றி தியாகம் செய்திருக்கிறார்கள்…. அவர்களை அவ்வின்பத்தை அறியாத சாமானிய மக்கள் புரிந்துகொள்வதேயில்லை . நீயோ உயிருக்கு அஞ்சி அந்த மாபெரும் இன்பத்தை தவறவிடுகிறாய்… ‘ ‘

அவன் தன் கடைசிக் கூழாங்கல்லைப் பார்த்தான் , வியர்த்த கரங்களிலிருந்து அது நழுவிவிடும் போலிருந்தது . அவன் கால்கள் தயங்கின , சற்றுத்தள்ளி அரசமரம் தெரிந்தது . அதன் அடியில் ஒரு பிள்ளையார் சிலை . அதற்கு சற்று இப்பால் ஓடும் சிறு நீரோடைதான் யக்ஷியின் எல்லை . அவனது கால்கள் வேகம் குறைந்தன . அந்த எல்லை மெதுவாக வந்தால்போதும் என தன் மனம் எண்ணுவதை அவன் ஆச்சரியத்துடன் உணர்ந்தான் . அந்த பயணம் கத்திமுனைநடையாக இருந்தபோதிலும் அது ஓர் உச்ச அனுபவம் . ஒருபோதும் இதேபோன்ற தீவிரமான கணங்கள் இனி அவனுக்கு நிகழப்போவதில்லை . இந்த நாள்களைப்பற்றி பேசிப்பேசியே அவன் தன் எஞ்சிய நாட்களை கழிக்கவேண்டும் . அதன் இறுதித் துளியையும் சுவைக்க விரும்பினான் .

‘ ‘இதோ பார் , ஒருவேளை இதை தவறவிட்டதற்காக மனமுடைந்து நீ தற்கொலைகூட செய்ய நேரும். ‘ ‘

அவன் எல்லையை நெருங்கியபிறகு நின்று , திரும்பிப்பார்த்தான் . ‘ நீயா ? ‘ என்றான் பதறிப்போய்.

அதற்குள் யக்ஷி அவனை நெருங்க ,அவன் கூழாங்கல்லை வீசினான்.

அவன் மறுபடியும் காலெடுத்து வைப்பதற்குள் அவள் ‘ நில் ‘ என்றாள் . உரக்கச் சிரித்தபடி , ‘நம்ப முடியவில்லை அல்லவா ? நான் காட்டியது உண்மைதான் என உன் ஆழத்துக்கே தெரியும் . இப்போது தெரிந்ததா நீ எத்தனை எளிய மானுடப்புழு என்று ? எத்தனையோ கட்டுகளால் மீட்பின்றி பிணைக்கப்பட்டவன் நீ . உன்னால் ஒருபோதும் உன் மனம் நாடும் எந்த இன்பத்தையும் அடைய முடியாது .நான் சொல்வதைக்கேள் .இந்த மானுட உயிரை துறந்துவிடு…. என்னுடன் வா.. எங்கள் உலகில் கட்டுப்பாடுகளும் தயக்கங்களும் இல்லை… ‘

அவன் ஒரு காலைத்தூக்கி ஓடைக்கு அப்பால் வைத்தான். மறுகாலைத் தூக்குவதற்கு முன் அவள் திட்டவட்டமான குரலில் ‘ நில் , உன்னால் போக முடியாது .அதற்காகவே இதை இறுதியாக வைத்திருந்தேன் ‘ என்றாள் . ‘ இங்கேபார் , இப்போது நான் நீ பார்த்தே ஆகவேண்டிய ஒருத்தி . உன் ஆழத்தில் எப்போதுமே இருப்பவள்… ‘

‘ ‘இல்லை இல்லை அப்படி யாரும் இல்லை ‘ ‘ என அவன் கூவினான்

‘ ‘உன்னால் முடிந்தால் நீ போகலாம் .ஆனால் இப்போது உன் மனத்தில் எழுந்த அந்த ஆவலை என்னைப்பார்த்தால் நீ தீர்த்துக் கொள்ள முடியும். நீ கண்டிப்பாக திரும்பிப்பார்ப்பாய் .எந்த ஆணும் தவிர்க்கமுடியாது . இங்கேபார்…. ‘

விஷ்ணு நம்பூதிரியின் உடல் சுனைக்காவு பாறைக்கு அடியில் சிதறிக்கிடந்தது . அதன் பிறகுதான் பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு மந்திரங்களை கற்று யக்ஷிகளையும் பூதங்களையும் வாதைகளையும் அடக்க ஆரம்பித்தாராம் .யாராலும் அடக்கமுடியாத சுனைக்காவில் யக்ஷியை அடக்கியதும் அவர்தான்.

இந்தக்கதையை அந்தரங்கமாக உன்னால் புரிந்துகொள்ள முடியவில்லையா ? 

தொடர்புடைய சிறுகதைகள்
திடாரென்று ரேடியோ கிர்ர் என்றது. அறைக்குள் இருந்த ஆழ்ந்த அமைதியை அது கிழிக்க அத்தனைபேரும் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தனர். இளைஞன் தகாததுசெய்ததுபோன்ற சிறு உடற்குன்றலுடன் அதை நிறுத்தினான். ‘ ‘ இறைமறுப்பாளர்களின் கருவி ‘ ‘ என்றார் குழுத்தலைவர் வெறுப்புடன். ‘ ‘ அது ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன் காரை நிறுத்திவிட்டு முன்மதியவெயிலில் கண்கூச இறங்கி கோயிலை நோக்கி நடந்து சென்று கற்கள் எழுந்துகிடந்த செம்மண் சாலையில் நின்று கண்களின் மீது கைவைத்து கோபுரத்தை அண்ணாந்து பார்த்தான். சுதைச்சிற்பங்கள் தங்கள் காலடியில் நிழல் சிந்த ஒன்றுமீது ஒன்று ...
மேலும் கதையை படிக்க...
நாணி ஆசாரிச்சியைத்தான் ஊரிலே ‘நூஸ்’ என்றழைப்பார்கள். அதிகாலையிலேயே எழுந்துவிடுவாள். எப்போதும் ஏதாவது சில்லறை வியாபாரம் கையிலிருக்கும். வீட்டைவிட்டுக் கிளம்பும்போது காலிக்கடவம்தான். போகும் இடங்களில் சக்கைக்குரு, முருங்கைக்காய் என கொள்முதல் செய்வாள். அவற்றை விற்கப்போகும் இடங்களில் கிடைக்கும் வாழைக்காய்,கோழிமுட்டை எதையும் வாங்குவாள். வியாபாரம் ...
மேலும் கதையை படிக்க...
பதினேழு வருடம் முன்பு கோவளத்தில் ஒரு நட்சத்திர விடுதியில் வெயிட்டராக இருந்த போது ஒரு ஆஸ்திரேலியப் பெண்ணுக்குப் புராதன மரச்சிற்பம் ஒன்றைக் காய்கறிவிலைக்கு வாங்கிப் பொன்விலைக்கு விற்றேன். அன்று தொடங்கியது என் தொழில். இன்று நான் நகரில் மிக முக்கியமான கலைப்பொருள் ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன். ராமன் எதையோ முணுமுணுத்தது போல் இருந்தது, அனேகமாக ’ஹிமகிரிதனயே ஹேமலதே’. பாலசுப்ரமணியன் புன்னகை புரிந்தார். ராமன் நிறுத்திவிட்டு ‘சரி, விடுங்க’ என்று சிரித்தார். ’இல்ல, நான் சிலசமயம் நினைக்கறதுண்டு, உங்க விரலை சும்மா ஒரு கிராமபோனிலே கனெக்ட் பண்ணி ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன் பதினொரு மணிக்கு மேலேதான் கூட்டி வருவதாகச் சொல்லியிருந்தான் கல்யாணம். அதுவரைக்கும் அவனுக்கு செய்யும்படியாக வேலை என ஏதும் இல்லை. அவன் சென்று பார்க்கவேண்டியிருந்தவரை மதியமே சந்தித்துவிட்டான். மாலைவரை, இரவு வரை கூட நீளும் என அவன் நினைத்திருந்த வேலை ...
மேலும் கதையை படிக்க...
வண்ணத்துப் பூச்சிகளின் படுகை பேச்சிப்பாறை அணைக்கும் ஏரிக்கும் அப்பால் பன்றிமலைச் சரிவிலே இருப்பதாக சிங்கி சொல்வார். கள்வாடை எழும் ஏப்பத்துடன் இடையிடையே துப்பியும் கனைத்தும் பிசிறடிக்கும் கட்டைக் குரலில் அவர் பாடுவது இப்போதுகூட தனித்த இரவுகளில் நினைவில் ஒலிப்பதுண்டு. தோற்சிற்பம் போல ...
மேலும் கதையை படிக்க...
”ஐயா வணக்கம்” ”நமஸ்காரம்.க்ஷமமா இருங்கோ…” ”இல்லீங்க…இப்ப பேட்டியெல்லாம் எடுக்கிறதுன்னாக்க அதுக்கு ஒரு மொறை இருங்குங்க…அப்டித்தான் இருக்க முடியும்…” ”அதான் சொல்றேன்…நன்னா க்ஷமமா இருங்கோ” ”அப்டிச் சொல்றீங்களா? சரிங்க… கேள்விகளை ஆரம்பிக்கலாமுங்களா?” ”பேஷா கேளுங்கோ.. பிரஸ்னோத்தரம் இதம் ஏவம் வ பிரம்ம வதிஷ்யாமின்னு ...
மேலும் கதையை படிக்க...
கதை ஆசிரியர்: ஜெயமோகன். நாளிதழ்களின் வாரமலர்களில் கூட இந்த நூலை நீங்கள் பார்த்திருக்கக்கூடும் , ஐரோப்பிய மரபிசையில் ஆப்ரிக்கஇசையின் பங்களிப்பு ‘ .இசையாராய்ச்சி நூல்களில் கடந்த ஐம்பதுவருடங்களில்வந்த பெரும்படைப்புகளில் ஒன்று இது என்று டைம் இதழ் மதிப்பிட்டிருக்கிறது. எந்த முதல்த்தர ஆய்வுநூலையும் போலவே ...
மேலும் கதையை படிக்க...
‘இப்போது இது ஒரு பொதுமனப்பான்மை ‘ என்றார் டாக்டர் பத்மநாபன் ஆங்கிலத்தில் , அவருக்கு தமிழே வாயில் வரவில்லை. ‘எல்லாருக்குமே விண்வெளிமனிதர்கள் பற்றி ஏதாவது சொல்ல இருக்கிறது. பறக்கும் தட்டுகள், தலையில் அண்டனா கொண்ட தவளைக்கண் மனிதர்கள். விசித்திரமான வெளிச்சங்கள். ஐம்பது ...
மேலும் கதையை படிக்க...
நம்பிக்கையாளன்
மன்மதன்
நூஸ்
கண்ணாடிக்கு அப்பால்
தாயார் பாதம்
பழையமுகம்
படுகை
விலாங்கு
தேவதை
இங்கே, இங்கேயே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)