ரோபோக்களின் ஆசீர்வாதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 8, 2023
பார்வையிட்டோர்: 2,271 
 
 

(2008ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

விடிந்தால் பேரன் கல்யாணம். இந்தக் கிழம் ஒரு பரபரப்பும் இல்லாமல் இப்படிப் பொறுப்பில்லாமல் தூங்குகிறதே என்று சீதாப்பாட்டிக்குத் தோன்றியிருக்க வேண்டும் “என்னங்க, எழுந்திரிங்க” என்றாள்.

“சும்மா இரு… ஏன் அவசரப்படுதே..” சோமுக் கிழவரின் பொக்கை வாயிலிருந்து தலபுல என்று வார்த்தைகள் வந்தன.

பல்செட்டுகள் ஸ்டெரிலைஸ் செய்யப்பட்டு அவரவர் இடம் தேடிப் போய்க் கொண்டிருந்தன கன்வேயரில்.

பாட்டி சொன்னாள், “இந்தாங்க பல்செட்ட மாட்டிக்கினு ஒழுங்காப் பேசுங்க”

பல்செட்டைப் பொருத்திக் கொண்டதும் சோமுக் கிழவருக்குப் பத்து வயசு குறைந்தது. பேச்சு சரியாக வந்தது. “இந்த நவீன காலத்துல எல்லாம் ஆட்டோமேடிக், டெக்னாலஜி ரெம்ப முன்னேறிப் போச்சு. நீ இன்னும் போன நூற்றாண்டுலே இருக்கிறியே? நீ ஒன்னும் கவலைப் படாதே எல்லாம் ஏற்பாடு பண்ணியாச்சு. கரெக்டா அந்த நேரத்துக்கு நாம போனாப் போறும்…” அதைச் சொல்லும் போது அவர் கண்கள் பெருமை அடித்துக் கொண்டன.

“சரி.. சரி… கல்யாணத்துக்கு நான் எந்தப் பொடவையக் கட்டிக்கிறது?”

“கல்யாணப் பொண்ணுன்னு நெனப்பாக்கும்?” என்று சோமுக்கிழவர் கிண்டல் அடித்துச் சிரிக்க கிழவிக்கு அந்த வயதிலும் வெட்கம் பிடுங்கியது.

“எந்தப் பொடவை கட்டினா என்ன? எல்லாரும் லேசர்க் கோடுகளாத்தேன் கல்யாணத்துக்குப் போகப்போறம். அப்புறம் என்ன? எதையாச்சும் ஒன்னக் கட்டிக்கிட வேண்டியதுதானே?”

“லேசர்க் கல்யாணமின்னாலும், இங்க நம்ம ஹோம்ல நடக்கிற விருந்த நாமதானே ஹோஸ்ட் பண்றோம். நம்ம நண்பர்கள் முன்னாடி நல்லா உடுத்தியிருக்க வேண்டாமா?” சீதாப் பாட்டியின் வார்த்தைகள் நியாயமாகவே இருந்தன.

சிங்கப்பூரின் மத்தியில் இருந்த பாபா ஓல்ட் ஏஜ் ஹோம் கல்யாணக் களேபரத்துக்குத் தடபுடலாகத் தயாராகிக் கொண்டிருந்தது. கல்யாண ஏற்பாடுகளுக்காக ஒரு தொகையைக் கட்டி விட்டார் சோமு. மற்றதெல்லாம் பட்டனைத் தட்டி விட்டது போல நடந்து கொண்டிருந்தது. ஹோமின் மையப் பகுதியில் குளிரூட்டப்பட்ட கண்ணாடி ஹால். அதன் நடுவே நாற்புறங்களிலும் மிகப் பெரிய லேசர் திரை. அந்தத் திரையில்தான் இன்னும் சற்று நேரத்தில் பேரனின் வெர்ச்சுவல் மேரேஜ் அரங்கேறப் போகிறது. அதைக் கண்டுகளித்து விருந்துண்ண அந்த ஹோமின் எல்லாக் கிழங்களும் இங்கே கூடப் போகிறார்கள். அங்கிருந்த தூண்களில் பிளாஸ்டிக் வாழை மரங்களைக் கட்டியிருந்தார்கள். வண்ண விளக்குகள் அந்த ஹால் முழுதும் கண் சிமிட்டிக் கொண்டிருந்தன. ஹாலின் ஒரு பக்கத்து மேடையில் ரோபோக்களின் இசை விருந்து.

சோமு வெளியே நகரைப் பார்த்தார். சாலைகளில் எறும்பூர்வது போல கார்பனை உமிழ்ந்து கொண்டு வாகனங்கள் ஊர்ந்து கொண்டிருந்தன. பார்வையை மீட்டுக் கொண்ட போது அவர்மீது பன்னீர் தெளிக்கப்பட்டது. யார் அது?

நுழைவாயிலில் இரண்டு ரோபோக்கள் நின்று கொண்டிருந்தன. “இந்த ரோபோக்கள் பன்னீர் தெளிக்கும் போது சிரிக்குமா?” என்று சோமு கல்யாண ஏஜெண்ட்டிடம் கேட்டார். அப்படிக்கேட்டு விட்டு கிழவியைப் பெருமைப்பார்வை பார்த்தார் சோமு. அந்த ஏஜெண்ட் சோதித்து உறுதிப்படுத்த ரோபோவின் முன்னே போய் நிற்க அந்த ரோபோ அழகாய்ச் சிரித்துப் பன்னீரைச் சரியாக ஸ்பிரிங்கிள் செய்தது. இன்னொன்று புன்சிரித்துப் பூக்கொடுத்தது. கிழவி பெற்றுக்கொண்டாள்.

“தாலியை நாந்தான் எடுத்துக் கொடுக்கணும்னு பேரன் ஒரே பிடிவாதம் பிடிச்சுட்டான்” என்று பெருமைப்பட்டுக் கொண்டார் கிழவர், கிழவருக்கு நிகழ்ச்சி நிரல் முன்பே தெரிவிக்கப்பட்டு எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டு இருந்தது. நல்ல நேரம் குறிப்பதில்தான் கொஞ்சம் குழப்பம் வந்தது. புரோகிதர் கல்யாணம் நியூயார்க்கில் நடந்தாலும் இந்தியாவில் அக்கினி வளர்ப்பதால் இந்திய நேரப்படிதான் நல்லநேரம் குறிக்க வேண்டும் என்று சொல்லிவிட்டார் முடிவாக.

கிழவரின் மகனும் மருமகளும் இந்தியாவில் உள்ள ஹோமில் இருந்து உறவினர்களுடன் லாகின் செய்வார்கள். மணமக்கள் நியூயார்க் ஃபைவ் ஸ்டார் ஹோட்டலில் சந்தித்து பின் தாலிகட்டிக் கொள்கிறார்கள். எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துக் கொடுக்கும் காண்ட்ரேக்டை இண்டர் நேஷனல் சேனல்ஸ் நிறுவனம் ஏற்றுக் கொண்டிருந்தது. அந்த நிறுவனம் இது போல வெர்ச்சுவல் விழாக்களை வெற்றிகரமாக நடத்திக் கொடுக்கிறார்கள்.

பேரன் அமெரிக்காவில் சிலிகான்வேலியில் பெரும் தொழிலதிபர், இன்னொரு தொழிலதிபரின் பெண்ணை மணக்கிறான். பெற்றோர் உள்பட ஒருவரும் நேரில் வரவேண்டாம் என்று சொல்லிவிட்டான். அதனால் எல்லோருக்கும் அலைச்சல் இல்லாமல் போனது.

சோமு அவரின் எண்பதாவது வயதில் எல்லாக் கடமைகளையும் முடித்து விட்டு, சீதாப் பாட்டியுடன் இந்த ஹோமுக்கு வந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டன. இப்போது அதே வயதில் அவரின் மகனும் மருமகளும் இந்தியாவில் இதே போன்று எல்லா வசதிகளும் உள்ள ஒரு ஓல்ட் ஏஜ் ஹோமில் சேர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

செல் அதிர்ந்தது. பேரனின் செகரெட்டரியிடம் இருந்துதான். எல்லா ஏற்பாடுகளும் சரிதானே என உறுதிப்படுத்திக் கொண்டு விடைபெற்றாள் செகரெட்டரி.

எல்லாம் திட்டமிட்டபடி ஒழுங்காய் நடந்தன ஒன்றைத்தவிர. கிழங்கள் அனைவரும் கடைசி நேர எச்சரிக்கையின்படி கவச உடை அணிய வேண்டியதாகி விட்டது. காரணம் ஹோமின் கட்டாய உத்தரவு என்றார்கள். அதுபற்றி மேலும் விசாரித்தறிய நேரம் இல்லை. சீதாக் கிழவிக்குத்தான் தன் விலையுயர்ந்த பட்டுப்புடவையைப் பலர் பார்க்கக் கட்டிக் கொண்டு திரிய முடியவில்லையே என்று சிறிது வருத்தம் இருந்தது.

கவச உடையில் கிழங்கள் எல்லாம் ரோபோக்களைப் போலக் காட்சியளித்தார்கள்.

லேசர் திரை ஒளிர்ந்தது. மணமக்கள் 3டி பிம்பங்களாகத் தோன்றினார்கள். எல்லோரையும் வணங்கினார்கள். பெண்ணின் பெற்றோர், பையனின் பெற்றோர், பையனின் தாத்தா பாட்டி, நண்பர்கள் எனச் சரியான கூட்டம். புரோகிதர் பூந்தமல்லியிலிருந்து வேதம் ஓதினார். மணமக்கள் அக்கினியைச் சுற்றி வந்தார்கள். தாத்தா தாலி எடுத்துக் கொடுத்தார். பேரன் தாலி கட்டினான். கூட்டம் பூவும் அட்சதையும் தூவியது. மணமக்கள் இரு தரப்புப் பெற்றோர்களிடமும், தாத்தா பாட்டியிடமும் ஆசீர்வாதம் வாங்கினார்கள். சீதாப்பாட்டி, ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழணும்’ என்று வாழ்த்தினாள். அந்த நிகழ்வு திரையில் ரோபோக்கள் ஆசீர்வாதம் செய்வது போல இருந்தது. விருந்து ஆரம்பித்தது.

பரிசுப்பொருட்கள் குவிந்தன. அறிமுகங்கள், போட்டோ கிளிக்குகள், ஆட்ட பாட்டங்கள், 10 கோர்ஸ் உணவுப் பரிமாறல்கள், மேண்டலின் இசை எனக் கல்யாணம் அமர்க்களப்பட்டது. ‘ஹனிமூனும் வெர்ச்சுவல் ஹனிமூன்தானா?’ என்று யாரோ கேட்க கூட்டம் கொல் லெனச் சிரித்தது. பாபா ஹோமில், எல்லோரும் கவசம் அணிந்திருந்தபடியால் யார் அப்படிக் கமெண்ட் அடித்தது எனத் தெரியவில்லை. விருந்தினர் கை குலுக்கி விடை பெற்றார்கள். எல்லோருக்கும் பரிசுப் பைகள் கொடுக்கப் பட்டன. பாபா ஹோமிலும் கிழங்கள் விடை பெறும் போது ஆப்பிள் பைகள் கொடுக்கப்பட்டன.

சீதாப்பாட்டியும், சோமுக்கிழவரும் எல்லாம் முடித்துத் தங்கள் அறைக்குத் திரும்பியிருந்தார்கள். கவச உடை களைந்தார்கள். சீதாப்பாட்டியின் பட்டுப்புடவையையும், கிழவரின் பட்டுச் சொக்காயும், வேஷ்டியும் கொஞ்சமும் கசங்காதிருந்தது. இருவருக்குமே பெரிய களைப்பொன்றும் இருக்கவில்லை. தொடர்ந்து சிரித்துக் கொண்டிருந்த படியால் தாடைதான் சற்று வலித்தாற்போல் இருந்தது. பல்செட்டைக் கழற்றி விட்டு ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் போல் இருந்தது கிழவருக்கு. ஆனாலும் தூக்கம் வரத் தாமதமாகும் என்றே தோன்றியது அவருக்கு. அதுவரையில் என்ன செய்யலாம்?

செய்திச் சேனலைத் திருகினார் கிழவர். அதில் பின்வரும் செய்தி திரும்பத்திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.

“ஓர் முக்கிய அறிவிப்பு… ஓசோன் ஓட்டை, உலகச் சுற்றுப்புறச் சூழலுக்கு பெரும் மிரட்டலாக உருவெடுத்திருக்கிறது. அதனால், பகலில் சூரிய ஒளிக் கதிர் வீச்சிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மக்கள் கவச உடை அணியவேண்டும் என்று கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.”

– திண்ணை, புன்னகைக்கும் இயந்திரங்கள் (சிறுகதைகள்), முதற்பதிப்பு: 2008, மணிமேகலைப் பிரசுரம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *