கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 31, 2025
பார்வையிட்டோர்: 5,910 
 
 

(1945ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அரசன் புதிய கோயில் ஒன்றைக் கட்டினான். 

அந்தக் கோயிலில் சலவைக் கல்லால் ஆகிய அழகிய தெய்வ பிம்பம் விளங்கியது. 

பிம்பத்தின் அருகிலேயே, பளபளக்கும் நந்தா விளக்கை வைத்திருந்தார்கள். யார் வேண்டுமானா லும் எப்பொழுதும் தூரத்திலிருந்தே தேவதரிசனம் செய்யும்படியாக அவ்வளவு பளிச்சென்று இருந்தது, விளக்கின் பிரகாசம். 

பொற் குத்துவிளக்கில் அந்த வாடாவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. அது திருட்டுப் போகலா காது என்று, கர்ப்பக்கிருகத்தின் வாசலில் காவல் போட்டார்கள். 

விளக்கிலே திரி சமைப்பதற்காக, வெள்ளை வெளேரென்ற நிர்மலமான பஞ்சில் பல மாதிரிகளை வரவழைத்து அவற்றிலிருந்து மிகவும் உயர்ந்ததைத் தேர்ந்தெடுத்தார்கள். 

நந்தாவிளக்கில் ஊற்றிய எண்ணெயோ, கங்கை நீரையும் தோற்கடிக்கும்படி அத்தனை தெளிவாக இருந்தது. 

எந்த நேரத்தில் வேண்டுமாயினும் அரசன் தேவதரிசனத்துக்கு வந்து போவான். 


ஒரு நாள் அரசன் தற்செயலாக நந்தாவிளக்கை ஒரு தடவை உற்றுப் பார்த்தான். 

பொற் குத்துவிளக்கு பளபளவென்று மின்னியது. வெண்மையான ஐந்து சுடர்கள் கூத்தாடிக் கொண்டிருந்தன. ஆனால் – 

ஒரு சுடரின் அருகில் ஏதோ ஒரு சிறுகுச்சி விழுந்து கிடந்தது. 

‘தரித்திரம் பிடித்த அந்தப் பூசாரிக்கு அடி யோடு ஸௌந்தரியப் பார்வையே இல்லையே! அழகு நடமாடும் இந்த இடத்திலே இந்த விகாரமான குச்சி ஏதுக்கு? பல்லைக் குத்த ஏதாவது ஒரு சிறுகுச்சியைக் கொண்டுவந்திருப்பான்; அதைக் குத்துவிளக்கிலே வைத்துவிட்டான். ஸர்வமுட்டாள் !’ என்று நினைத் தான் அரசன். 

அவன் அதை எடுத்து வெளியே எறிந்தான். அரண்மனைக்குத் திரும்பிப் போகும்போது, ‘கோயி லிலுள்ள அழகிய நந்தாவிளக்கில் ஒரு சிறு துரும்பு கூட இருக்கக்கூடாது. அங்கே மறுபடியும் ஏதாவது குச்சி தென்பட்டால், பூசாரியைத் தூக்குமரத்தில் தொங்கவிட வேண்டியதுதான்” என்று பூசாரிக்குச் செய்தி சொல்லி அனுப்பினான். 


சிறிது நேரத்துக்கெல்லாம் பூசாரி ஓட்டமாக ஓடிவந்தான். ஆனால் அப்போது மகாராஜா போஜ னம் செய்துகொண்டிருந்தார். 

இரண்டு மணிநேரம் கழித்து அவன் மறுபடி ஓடிவந்தான். ஆனால் அப்போது மகாராஜா சுக சயனத்திலே இருந்தார். 

இரண்டு மணிக்கெல்லாம் அவன் மறுபடி வந் தான். இப்போது அவன் முகம் சோர்ந்துபோயிருந்தது. எப்படியாவது மகாராஜாவை நான் பார்த்துப் பேச ஏற்பாடு செய்யுங்கள் ” என்று அவன் அரண் மனை அதிகாரிகளின் காலைப் பிடித்தான். “அது சாத்தியமல்ல. மகாராஜா சற்று நேரம் முந்திதான் வலது புறத்திலிருந்து இடது புறமாகத் திரும்பிப் படுத்திருக்கிறார்” என்று அவர்கள் பதில் சொன் னார்கள். 

பூசாரி பாவம், என்ன செய்ய முடியும்! இரண்டு மணி நேரம் கழித்து ஓடிவந்தான். இந்தத் தடவை அவன் உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது. மகாராஜா, மகாராஜா!” என்று அவன் உரக்கக் கூவினான். 

ஆனால் மகாராஜா ஒரு புது நாட்டியக்காரியின் நர்த்தனத்தைப் பார்ப்பதிலே மூழ்கியிருந்தார்! 


நாட்டியம் முடிந்ததும் அரசன் தேவதரிசனம் செய்யப் போனான். 

கர்ப்பக்கிருகத்தின் வாசலில் பார்க்கும்போது உள்ளே அமாவாசைக் கருக்கல் பரவியிருந்தது. 

பூசாரியின் மீது அவனுக்கு அசாத்தியமான கோபம் வந்தது. சலவைக்கல் பிம்பம், பொற் குத்து விளக்கு முதலிய யாவும் இருட்டிலே மூழ்கிக் கிடந்தன. 

பூசாரியைத் தூக்கிலிட அவன் ஆக்கினை செய்வ தாக இருந்தான் ; அதற்குள் அந்த இருட்டிலிருந்து, கம்பீரமான குரல் ஒன்று, “அரசே, உண்மையான குற்றவாளி நீதான்; பூசாரி அல்ல” என்றது. 

தெய்வ பிம்பமா பேசுகிறது!’ என்று திகைத்தான் அரசன். அவன் பயந்துபோய்க் காது கொடுத்துக் கேட்டான். 

“அரசே,நந்தாவிளக்கில் ஒரு சிறு குச்சி இருப் பதைக் கண்டு, கோயிலின் அழகுக்குக் குறை வந்து விட்டது என்று நீ நினைத்தாய். விளக்கிலே ஒரு சிறு துரும்புகூட இருக்கக்கூடாது என்று பூசாரிக்கு உத்தரவு போட்டாய். ஆனால். இந்தக் கோயில், என்னுடைய பிம்பம், இந்தப் பொற் குத்துவிளக்கு ஆகிய எல்லாவற்றின் அழகும் அந்த ஒரு சிறு குச்சி யைப் பொறுத்ததே என்று உனக்குத் தெரிய வில்லை!” 

அரசன் மனத்தில் இருந்த பயம் இப்போது ஆச்சரியமாக மாறியது. அவன் காதைத் தீட்டிவைத் துக்கொண்டு கேட்கலானான். “பொற்குத்துவிளக் கிலே எரியும் ஜோதிக்குக்கூடச் சுடர் தட்டும்; கருமை ஏறும். அதைத் தூண்டி எரியச் செய்யும் சிறு குச்சியை நீ முட்டாள்தனமாகக் கோயிலுக்கு வெளியே எறிந்துவிட்டாய். இங்கே வீற்றிருக்கும் உண்மையான தெய்வம் என் பிம்பம் அல்ல; இந்தப் பொற் குத்துவிளக்கு அல்ல; சாதாரணமான அந்தச் சிறு குச்சிதான்!” 

வெளியே எறிந்துவிட்ட அந்தச் சிறுகுச்சியை அரசன் மரியாதையாகக் கோயிலுக்குள் கொண்டு வந்து, அதனால் விளக்கைத் தூண்டினான். 

பொற் குத்துவிளக்கு மீண்டும் பிரகாசமாக எரிய ஆரம்பித்தது. 

தெய்வ பிம்பம் புன்னகை புரிந்தது. 

– அரும்பு (உருவகக் கதைகள்), மூலம்: வி.ஸ.காண்டேகர், மராட்டியிலிருந்து மொழிபெயர்ப்பு: கா.ஸ்ரீ.ஸ்ரீ., முதற் பதிப்பு: 1945, கலைமகள் காரியாலயம், சென்னை.

கா.ஸ்ரீ.ஸ்ரீ. கா.ஸ்ரீ.ஸ்ரீ (காஞ்சீபுரம் ஸ்ரீரங்காச்சாரியார் ஸ்ரீனிவாசாச்சாரியார்) (டிசம்பர் 15, 1913 - ஜூலை 28, 1999) தமிழ் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளர். முதன்மையாக வி.எஸ்.காண்டேகரின் நூல்களை மொழியாக்கம் செய்தமைக்காக அறியப்படுபவர். நூல்கள் பதினந்து நாவல்கள், ஏறத்தாழ முன்னூறு சிறுகதைகள், பதினெட்டு திரைக்கதைகள், பதினெட்டு கட்டுரைத் தொகுதிகள், ஆறு நீதிக்கதைத் தொகுதிகள், ஐந்து இலக்கியத் திறனாய்வுகள், ஒன்பது ஆராய்ச்சிக் கட்டுரைகள், மூன்று சொற்பொழிவுத் தொகுப்புகள், இரண்டு சுயசரிதை நூல்கள் கா.ஸ்ரீ.ஸ்ரீயால் எழுதப்பட்டவை. கா.ஸ்ரீ.ஸ்ரீ…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *