திருடன் போலீஸ்…

திருவிழாப் பாதுகாப்புக்குப் போய் வந்த அசதியில் அயர்ந்து படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தான் துளசிதாஸ். அவன் பணியாற்றுவது காவல் துறையில். அவன் ஒரு அதிகாரிதான்.
செல்போன் அலறியது..!
‘யார் இந்த நேரத்தில்…? உயரதிகாரியாய் இருக்குமோ?!’ பதட்டத்தில் பாதி தூக்கக் கலக்கத்தில் செல்லை ஆன் செய்து ‘ ஹலோ?’ என்றான்.
‘இன்னும் பத்து நிமிஷத்தில் உன் அறையில் குண்டு வெடிக்கும்!’ அழைப்பு அணைக்கப்பட்டது.
தூக்கக் கலத்தில் கொஞ்சம் பயம் தொற்றிக் கொள்ள.. ‘யார் அழைத்தது? பார்க்க… ‘காலர் லிஸ்டைப்’ பார்த்தான். மனைவியின் செல்லிலிருந்துதான் கால் வந்திருந்தது. கால் ரெகார்டை ஓடவிட்டு மீண்டும் வாய்ஸைக் கேட்டான்.
‘இன்னும் பத்து நிமிஷத்தில் குண்டு வெடிக்கும்!’
குரல் தன் மகனுடையதுதான். விளையாட்டுக்கு அளவே இல்லையா? ஒரு ஸ்கூலில் பத்து படிக்கிறான். இப்பவே இப்படியா? விடக்கூடாது!
அவனை அழைத்தான் பதில் இல்லை… ஐந்து நிமிடம் கடந்திருந்தது. மனைவியை அழைத்து, விவரம் சொல்லி அவனைக் கண்டித்து வை! சொல்லி விட்டு மீண்டும் படுக்கையில் படுத்தான்.
நினைவில் நிழலாடியது! மகன் எப்போதும் பக்கத்து வீட்டுப் பசங்களோடு சேர்ந்து கொண்டு திருடன் போலீஸ் விளையாட்டு விளையாடுவான் பார்த்திருக்கிறான். அதுபோல் இதூம்! கண்ணை இறுக்க மூட…
‘டமால்ல்…!’ என்று சபதம் கேட்டு அலறி எழுந்தான். படுக்கை அருகே வெடி வெடித்த வாசம் நாசி துளைத்தது.
எழுந்து உட்கார்ந்தவன் தேடினான்…
படுக்கை அருகே கட்டிலுக்குக் கீழே… கொசு வத்தி எரிந்து கொண்டிருந்தது..
ஆனால்… அது இப்போது சில துண்டுகளாய்ச் சிதறிக் கிடக்க போலீஸ் மூளை சுறுசுறுப்பாய் வேலை செய்ய எழுந்து மகனைத் தேடினான்.
அதற்குள் அம்மா கைகளில் அகப்பட்டவன் அவள் காலிடுக்கில் இருந்து கொண்டு காப்பாற்ற அலறிக் கொண்டிருந்தான்.
சிக்கினால் அப்பா பின்னி எடுத்துவிடுவார் என்பது சிறுவனுக்குத் தெரியும்.
அம்மாதான் பேசினாள்…
‘பாவம் தெரியாம விளையாட்டுத்தனமா எதோ பண்ணீட்டான் விடுங்க!’
‘என்ன… விடுவதா? அதெல்லாம் முடியாது!’ மகனை முடியைப் பிடித்து இழுத்து…
‘என்னடா பண்ணினே…? உண்மையைச் சொல்லு! இல்லே.. ‘ உறுமினான்.
‘இல்லப்பா.. கொசுவத்திச் சுருளில் ஒரு சுற்றுத் தாண்டி பாதியில்… ஒரு திரி கிள்ளின தீபாவளிக்கு வாங்கின அணுகுண்டு பட்டாசை செலபன் டேப்பை ஒட்டி, நீங்க தூங்கற கட்டிலுக்குக்கீழே வைத்தேன். பிட்டு பிட்டா கொசுவத்தி எரியும் நேரத்தை தூரத்தைக் கணக்கிட்டு திரிமுனை எட்ட பத்து நிமிடம் ஆகுமெனத் தீர்மாணித்து உங்களுக்குப் போன் பண்ணினேன். கரெக்டா வெடிச்சது…! இனிமே பண்ண மாட்டேன்’ என்று அலறி அழுதான்.
‘துளசி!’… மனைவியைக் கூப்பிட்டு வரமிளகாயை எடுத்து வரச் சொல்லி, கீழே தணல் மூட்டி… மகனை உத்திரத்தில் கைகளைப் பின்னுக்குக் கட்டி மேலே தலைகீழாத் தொங்கவிட்டுவிட்டுச் சொன்னான்.
புகை கிளம்ப வரமிளகாய் கமறலில் அலறினான் மகன். மனைவி தடுக்க வந்தாள் அவளைத் தள்ளி விட்டுவிட்டுச் சொன்னான்.
‘வீட்டுக்கு அடங்காத பிள்ளை வெளியில்தான் அடங்குவான். எத்தனை பேருக்கு ஜெயிலில் கடுந்தண்டனை கொடுத்திருக்கேன்? தப்புன்னா என்னான்னு அவன் செஞ்சு காட்டிட்டான்…! தண்டனைனா என்னன்னு நான் காட்ட வேண்டாம்?!
நாளைக்கு இவன் போலீஸாகாட்டாலும் பரவாயில்லை! திருடனாகம இருக்கத்தான் இந்த தண்டனை விடு! அவனைக் காப்பாத்தாதே கால் கிலோ வரமிளகாயும் தீருமட்டும் தண்டனை அனுபவிக்கட்டும்!
மீறிக் காப்பாத்த முயன்றே… நீ தீர்ந்தே!’ மிரட்டிவிட்டு, குளிக்க பாத்ரூம் போனான்.
![]() |
இயற்பெயர்: வே.ராதாகிருஷ்ணன் புனைபெயர்: வளர்கவி கோவை பிறந்த ஊர்: ஸ்ரீவில்லிபுத்தூர். வாழ்விடம்: கோவை. கல்வித்தகுதி: எம்.ஏ (வரலாறு)எம்ஏ (தமிழ்) எம்ஃபில் தமிழ்(ஈரோடு தமிழன்பன் கவிதைகளில்). குருநாதர்: தடாகம் இளமுருகு தமிழாசிரியர். பணி: பட்டதாரி ஆசிரியர் மணி மே.நி.ப கோவை - 23 ஆண்டுகள். பகுதிநேர அறிவிப்பாளர்: ஆல் இண்டியா ரேடியோ கோவை - 18 ஆண்டுகள் ஞானவாணி கோவை - 4 ஆண்டுகள். வெளியிட்ட நால்கள் - 3 1.…மேலும் படிக்க... |