பின்தொடரும் காலம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 30, 2023
பார்வையிட்டோர்: 1,116 
 
 

முருகானந்தத்தின் அப்பா நமச்சிவாயம் மாமாவின் கண்களில் இதற்குமுன் பதற்றத்தைப் பார்த்ததாக நினைவில்லை. முதன்முதலாக அப்போதுதான் பார்த்தேன், அவரின் பதற்றம் சற்று தணியக் காத்திருந்தேன். மிக நிதானமாக இருப்பதுபோல் அவர் பேச்சைத் தொடர்ந்தாலும் மெல்லிய கம்மலோடு பேசியது அவர் நிதானத்தில் இல்லை என்பதைக் காட்டியது. முருகானந்தத்தை இப்படி ஒரு மோசமான நிலைமையில் வைத்து அவனைப் பற்றி சமாதானமாகப் பேசுவதென்பது அந்த இடத்தில் எவருக்கும் பெரும் சிரமமாகவே இருக்கும் என நினைக்கிறேன். அவரைப் பற்றி கொஞ்சம் அறிந்தவன் நான். பொதுவாக எதற்கும் பயப்படாதவர், எந்த பெரிய பிரச்சனையையும் தனியாக நின்று எளிதில் சமாளிக்க‌க் கூடியவர். அவர் கலங்கி நிற்பது அதிர்ச்சியாக, மனம் ஏற்றுக்கொள்ளும்படி இல்லாமல் இருந்தது.

மடப்புரத்து தெருக்களில் நமச்சிவாய மாமாவைக் கண்டால் ஏற்படும் பயம் அங்கு வந்து இறங்கியது முதலே தோன்றிவிட்டது. அவர் தோள்களை சற்றுக் குறுக்கி கைகள் அழுத்திப் பிடித்த ஹாண்டில்பாருடன் வேட்டியில் மறைந்திருக்கும் நீண்ட கால்களால் சைக்கிளை மிதித்து வருவதே பயம் அளிப்பதாக‌ இருக்கும். தெருக்களில் விளையாடுவது அவருக்குப் பிடிப்பதில்லை. அதுவும் கிட்டிப்புள், பளிங்கு போன்றவைகள் சுத்தமாகப் பிடிக்காது என்பதை கவனித்திருக்கிறேன். விளையாடும்போது தூரத்தில் வருவது தெரிந்தாலே அவர் கண்ணில் படாமல் ஓடிவிடுவேன், அவர் போனபின்தான் வந்து விளையாட்டைத் தொடர்வேன். சிலநேரங்களில் விளையாட்டு மும்முரத்தில் அவர் வருவதை கவனிக்காமல் போய்விடுவது உண்டு. அப்போது பக்கத்தில் வந்ததும் அவரது பரந்த கால்களில் ஒன்றை ஊன்றி வேறு எங்கோ பார்ப்பதுபோல் ‘அப்பாட்ட சொல்லட்டுங்களா தம்பி…’ என்று இழுப்பார். குரலில் இருக்கும் அழுத்தமும் தொனியும் சேர்ந்து சூடான பொருளின்மீது பட்டதுபோல‌ உடலில் ஒரு உதறல் எடுக்கும். ‘போய்ப் படிங்க, போங்க, நா பின்னாடி வாரேன்,’ என்பார். அவரைப்பார்த்து சங்கோஜத்துடன் ஒரு நமட்டுச் சிரிப்பு ஒன்றை உதிர்த்துவிட்டு தபதபவென்று ஓடிவிட வேண்டியிருக்கும். நான் போகும்வரை நின்று பார்த்துவிட்டு வேறு செல்வார்.

விளையாட்டில் வீணாகும் நேரத்தில் இரண்டு கேள்விகளைப் படித்து, நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும் என்பார், படிப்பைத் தவிர விளையாட்டில் இருக்கும் கவனம் படிப்பைப் பாதிக்கும் என்ற எண்ணமும் அவருக்கு உண்டு. கண்டிப்புடன் பிள்ளைகளை இப்படித்தான் வளர்க்கவேண்டும் என்ற கொள்கை அவருக்கு எப்போதும் இருந்தது. படிக்கிற பிள்ளைக்கு ஒரு நிமிடம்கூட வீணாகக் கூடாது, இப்போது வீடு சென்றால் கூட‌ முருகானந்தம் படித்துக் கொண்டிருப்பதை பார்க்கலாம் என்று ஒவ்வொரு பேச்சின் போதும் சொல்லிவிடுவார். என் வகுப்பில் படிக்கும் அவர் மகன் முருகானந்தம் எந்நேரமும் அதுவும் தூக்கத்தில்கூட‌ படித்துகொண்டிருப்பான் என்ற எண்ணம் நான் உட்பட வகுப்பில் உள்ள அத்தனை நண்பர்களுக்கும் இதனாலேயே ஏற்பட்டு கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானான். பள்ளியில் அவனுக்கு படிப்பாளி என்ற ஒரு பட்டப்பெயர் இருந்தது.

நமச்சிவாயம் மாமா மிகக் கனிவானவர்தான் என்றாலும் அவர்மேல் என்னிடத்தில் பயத்தை உருவாக்க அவருக்கு தெரிந்திருந்தது. மிகமென்மையாகக் கையாள வேண்டிய வித்தையாக நினைக்கத்தோன்றும் இந்த விசயத்தை மிக எளிதாகச் செய்தார். ஒரு சிறிய ‌‌நாய்குட்டியினுடைய கண்கள் போன்றவை அவருடைய கண்கள். அதில் தெரியும் பாவம், பார்ப்பவரை மிக‌ மென்மையாக‌ வசியம் செய்து இழுத்துக் கொண்டேயிருக்கும். மேலவீதி கடைத்தெருவில் ஒரு ஷாப்கடை அவருடையது. கடைக்கு வரிகட்ட வந்ததில் அப்பாவின் நண்பரானார். கரிய, நெடிய உடம்பில் தெரியும் குழைவு எப்போது எல்லோரையும் வசீகரிக்கச் செய்யும்போல. சட்டென எல்லாரும் அவரிடம் நட்பு கொண்டுவிடுவார்கள். எப்போதும் கோபப்பட்டுப் பேசியதில்லை. சொல்லப்போனால் அதிர்ந்து ஒரு வார்த்தையும் கோபப்பட்டு ஒரு வார்த்தையும் அன்றைய நாட்களில் அவர் பேசியதாக நினைவில்லை. இன்முகத்தோடு பேசுவது, வாடிக்கையாளர்களைப் பொறுமையாகக் கவனிப்பதை அவர் ஒரு வழக்கமாகக் கொண்டிருப்பதாக அப்பா சொல்லியிருக்கிறார். நான் கடைக்குச் சென்ற போதெல்லாம் என்னிடம் எத்தனை கூட்டமாக இருந்தாலும் இரண்டு வார்த்தைகள் பேசாமல் அவர் அனுப்பியதில்லை. பொதுவாக படிப்பைப் பற்றி இருக்கும். நல்லா படிக்கணும், சொன்னபேச்சைக் கேட்கணும் இந்த‌ மாதிரியானதாக‌ இருக்கும். ஆனால் வழக்கமான தேய்வழக்காக இல்லாமல் புண்படுத்தாத மென்மையான வார்த்தைகளாக‌ இருக்கும். சரி அப்படியே செய்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் சொல்லவைக்க அவருக்கு எப்படி முடிந்தது எனத் தெரியவில்லை.

முருகானந்தத்தை அவன் அப்பாவிடமிருந்து பிரித்துப் பார்க்கமுடியாது. அவனது பழக்கவழக்கங்கள், சிந்தனைகள், செய்கைகள் அனைத்தும் அவன் அப்பா அவனுள் விதைத்த‌ மிகச்சரியான விதைகள். படியவாரிய எண்ணெய் தலை, நெற்றியில் விபூதி, கையில் பெரிய சிவப்புநிற சாமிகயிறு, எப்போதும் தூய வெள்ளைநிற பின்னணி கொண்ட‌ உடைகள் என காட்சியளிக்கும் அவன் தோற்றம். தூரத்தில் வரும்போதே அது முருகானந்தம் என்று சொல்லிவிடமுடியும்.

முருகானந்தத்திடம் எப்போதும் ஒருவகை நேர்த்தியும், பண்பும் இருந்தன, பெரியவர்களை மாமா அல்லது அண்ணன் என்றே விளிப்பான். மற்றவர்கள் பேச்சின்போது கைகட்டியே கேட்பான். நமச்சிவாயம் மாமாவிடம் முருகானந்தம் ஒரு சொல் மாறி நடந்து நான் அறிந்ததில்லை. அவர் ஒரு வார்த்தை சொன்னதுமே செய்ய ஆரம்பித்துவிடுவதை கவனித்திருக்கிறேன். என்னிடம் இல்லாத பல விசயங்கள் முருகானந்தத்திடம் கண்டு நான் ஆச்சரியமும் பொறாமையும் கொண்டிருக்கிறேன். உயரம், பேச்சில் தெளிவு, மரியாதை குணங்கள் என மற்றவர்கள் சுட்டிக்காட்டும் விஷ‌ய‌ங்களில் என்னைவிட உயர்ந்திருந்தான், அதை நான் சரியாக புரிந்துகொண்டேனா எனத் தெரியவில்லை. குறிப்பாக, சிறுவயதிற்கே உரிய‌ விளையாட்டுத் தனமான பேச்சுக்கள், பால்யகாலக் குறும்புகள் போன்றவைகள் அவனிடம் இருந்ததில்லை. அதே விளையாட்டுப் பேச்சுகள், பால்யவயதுக் குறும்புகள் முருகானந்தத்திடம் நான் செய்தபோது அவன் ஒரு கண்ணியத்துடன் பொறுத்துக்கொண்டு லாவகமாக அவற்றில் எதிலும் படாமல் இருந்ததை மெதுவாக‌ப் புரிந்து கொண்டேன். அவனுக்கு இரண்டு அக்காளும் ஒரு தங்கையும் இருந்தார்கள். அப்பாவின் மூலமாக மட்டுமல்ல‌, இரண்டு அக்காக்கள் மூலமாக அந்த பக்குவத்தை அடைந்திருப்பான் என அப்போது நினைத்துக் கொள்வேன். டியூசன் சொல்லிக் கொள்ளாமல் அக்காளிடமே படித்துக் கொண்டதன். காரணமாக‌ எல்லா பாடத்திலும் அவனால் அதிக மதிப்பெண்கள் பெற முடிந்தது.

ஒருசம‌யத்தில் அது ஆறாவது முடித்த சமயம் என் நினைக்கிறேன் முருகானந்ததை ஒர் உறைவிடப்பள்ளியில் சேர்க்க முடிவுசெய்தார் நமச்சிவாயம் மாமா. பள்ளியின் தரம், அதன் ஆசிரியர்களின் தரம், அதன் முந்தைய சாதனைகள், என அனைத்தையும் கண்டபின்னே அந்த பள்ளியில் சேர்க்க முடிவு செய்தார். இங்கிருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் இருந்தது. இவ்வளவு தூரம் இருப்பதைப் பொருட்படுத்தாமல் தைரிய‌மாக அனுப்ப முடிவு செய்தது அப்போது பெரியவிசயமாக எல்லோராலும் பார்க்கப்பட்டது பிறர் பிள்ளைகளையும் தன் பிள்ளைக்கு இணையாகப் பார்க்கும் அவர் குணத்தால் என்னையும் அப்பள்ளியில் சேர்த்துவிட நினைத்தார். அப்பா மாற்றல் வருமென்பதால் பேசாமல் இருந்துவிட்டார்.

நல்லா படிக்கிற புள்ள, ஏன் மாத்தறீங்க என்றார்கள் பள்ளியில். புள்ள அப்பா அம்மாவ காணாம‌ ஏங்கிடப்போவுது என அக்கம்பக்கத்தார் கூறினார்கள். ஆனால் நமச்சிவாயம் மாமா பெரியதாக அல‌ட்டிக் கொள்ளவில்லை. எல்லோரையும் சமாளிக்கத் தெரிந்திருந்தார். அவன் எதிர்காலத்துக்கு நல்லதுன்னா பண்ணிதானே ஆகணும் எல்லாம் தாண்டிவருவான் என்றார்.

நான் கவனித்தவரையில், உடனே பலன் அளிக்காத அல்லது காலம்தாழ்த்தியேனும் அவர் எதிர்பார்த்ததைப்போல் நல்ல பலனைக் கொடுக்காத எதையும் அவர் செய்ய துணிவதில்லை நல்ல பலனளிக்கும் விஷயங்களுக்கு சொத்தை விற்றாவது செலவழிக்கவும் பயப்படுவதில்லை.. அத்தோடு இங்கேயே இருந்தால் இங்கிருக்கும் பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாட்டுத் தனத்துடன் இருக்க நேர்ந்திடும், ஆனால் உறைவிடப்பள்ளியில் அப்படி செய்யமுடியாது, அவனை ஒத்த நன்கு படிக்கும் மாணவர்களோடு தொடர்ந்து ஆசிரியரின் கண்காணிப்பிலே இருக்கதான் முடியும் என்று அவர் எண்ணினார். இப்படி முருகானந்ததிற்கு சிறப்புவகுப்புகள் நல்ல பள்ளி, என்று அத்தனையையும் அவர்தான் அவன் எதிர்காலத்தை உத்தேசித்து தேர்தெடுத்தார்.

அந்த உறைவிடப் பள்ளியில் படித்து அவர் நினைத்தது போலவே யாரும் பெறமுடியாத‌ நல்ல மதிப்பெண்களுடன் பள்ளிப்படிப்பை முடித்தான் முருகானந்தம். அப்போது பிரபலமாக இருந்த பாலிடெக்னிகின் ஒரு துறையில் அவனை சேர்த்தார். அதை முடிக்கும் முன்பே வேலையும் வீடுதேடி வந்தது. முன்னமே அதற்கான ஏற்பாடுகள் அவர் செய்திருக்க கூடுமென நினைக்கிறேன். நான் அப்போது கல்லூரியில்தான் படித்துக்கொண்டிருந்தேன். அந்தசமயத்தில் அப்பா கூறியது நினைவிருக்கிறது. ‘இப்பவே அதுவும் சின்னவயசிலயே பெரிய வேலைக்கு போய்ட்டான், வெளியே வரத்துக்குள்ள பெரிய‌ பதவியில இருப்பான் பார்’ என்றார்.

ராஜஸ்தானின் ஒரு ஊரில் வேலைக்கு சேர்ந்திருந்த புதிதில் விடுமுறைக்கு வந்திருந்த முருகானந்தம் கல்லூரியில் என்னை காணவந்திருந்தான். நன்கு ஷேவ் செய்திருந்த முகத்துடன் அப்போதைய மோஸ்தர் கால்சிராயும், சட்டையும் அணிந்திருந்தான். வேர்வையில் ரம்யமான சென்ட் வாசனையுடன், பெரிய ஆளுக்குரிய தோரணை அப்போதே வந்துவிட்டிருந்தாலும் அதே அமைதியுடனும் கண்ணியத்துடனும் நடந்துகொண்டது நினைவிருக்கிறது. உயர்பதவிக்கு மேலும் படிக்கப்போவதாகக் கூறியிருந்தான். எப்போதும்போல அவனை வியந்து பார்த்தபடி, நான் கல்லூரியை முடிப்பதற்குள் பெரிய பதவியில் இருக்கப் போகிறான் என நினைத்துக்கொண்டேன். அதற்குபின் வேறு ஊருக்கு வந்துவிடவும் பழக்கமற்றுபோய், மீண்டும் 12 ஆண்டுகளுக்கு பின் அவனது தங்கையின் திருமணத்தில் சந்திப்பதென்பது சற்று உணர்ச்சி வசப்படுத்தும் நிலையில்தான் இருந்தது.

கடைசிமகளின் திருமணத்தை விமர்சையாக செய்துவிடவேண்டும் என்ற முனைப்பு அந்த திருமண நிகழ்ச்சியில் தெரிந்தது. நான் அம்மா அப்பாவுடன் சேர்ந்து மடப்புரம் வந்தபோது ஊர் எப்படி மாறியிருக்கிறது என்ற பேச்சாகவே எங்களுக்குள் இருந்தது. நான் வளந்துவிட்டேனா அல்லது ரோடு உயரமாவிட்டதா என்ற குழப்பத்தோடு வீடுகளைக் கவனித்துவந்தேன்.

கல்யாண மண்டபத்தில் நமச்சிவாயம் மாமா எங்களை அதே சந்தோஷத்துடன் வரவேற்றார். உடல் தளர்ச்சியடைந்திருந்தாலும் அதே வேகம் அவரிடமிருந்தது. எனது வலதுகை அவரது கைக்குள் இருக்க‌ சின்ன வாஞ்சையுடன் என்னை அழைத்துச் சென்றார். அவரின் மனைவியும் மகள்களும் கல்யாணக் களைப்பில் முழுமையாக அகப்பட்டிருப்பது தெரிந்தது.

கல்யாண வேலையின் காரணமாக நடுநடுவே காணாமல் போனார் நம‌ச்சிவாயம் மாமா. திடீரென்று தோன்றுவார் ஆனால் பேசக்கூட அவருக்கு நேரமிருக்கவில்லை. உறவினர்களையும் நண்பர்களையும் ஒரு கல்யாண வீட்டில் கவனிப்பதென்பது சாதாரணமல்ல என தோன்றியது. தூங்காத களைப்பு அவர் கண்களில் தெரிந்தாலும், சிரித்த முகத்துடன் களைப்பை மறந்து இருக்க முயற்சி செய்வது அவர் முகத்தில் அதே பழைய நமச்சிவாயம் மாமாதான் கண்முன் நிறுத்தியது.

பந்தி முடிந்து கைகழுவியபோது குறுக்கே வந்த அவரை மடக்கி முருகானந்தம் எங்கே என நான் நீண்டநேரமாகக் கேட்க நினைத்திருந்ததைக் கேட்டுவிட்டேன். ஒரு சிறுயோசனைக்குப் பின், ’அழைத்துச் செல்கிறேன்,’ என்றார். அழைத்துவருகிறேன் என்று சொல்லாமல் அழைத்துச் செல்கிறேன் எனச் சொன்னதில் எழுந்த குழப்பம் கல்யாணம் முடியும்வரையில் இருந்தது.

முகூர்த்தம் முடிந்து பெண்ணை அனுப்பி வைத்தபின் சொன்னபடி அழைத்துச் செல்ல வந்தார். அடுப்படிக்கு செல்லும் பாதை, எண்ணெயும் மண்ணும் சேர்ந்து கெட்டித்துப் போன தரைவழியே அண்டாக்கள் தட்டுமுட்டு சாமான்களைக் கடந்து வரிசையாக சேரில் அமர்ந்திருந்த மனிதர்களைத் தாண்டி அழைத்துச் சென்றார். கறுத்த முகமும், பற்கள் வெளித்தள்ளி, ஒடுங்கிய கன்னத்துடன் வீல்சேரில் அமர்ந்திருந்த நபரை முதலில் எங்கோ பார்த்தது போலிருந்தது.

அது முருகானந்தம் என அறிந்த‌போது முதுகுத் தண்டில் சில்லென்ற‌ உணர்வு பரவி உடல் கொள்ளும் அவஸ்தை உணர்வை வெளிக்காட்ட முடியாமல் தவித்தேன். அவர் எதிர்பார்த்தது போலவே அவர் சொன்ன பெரிய வேலையில் சேர்ந்து கைநிறைய இருமாத சம்பளம்கூட முழுசாகப் பெறமுடியவில்லை. டவரில் வேலைசெய்தபோது மின்கசிவு காரணமாக அதிலிருந்து தூக்கி எறியப்பட்டு கீழேவிழுந்து இடுப்பெலும்பு முறிந்துவிட்டது. அன்றிலிருந்து நடைபிணமாக வீல்சேரில் அப்பாவின் உதவியுடன் இருக்கிறான். இதையேல்லாம் நமச்சிவாயம் மாமா கதைபோல கூறினாலும் ஆழ்ந்த மெளனத்தில் வேறு ஒரு உலகத்திலிருந்து கேட்டுக் கொண்டிருப்பதாக தோன்றியது. சிரிப்போ அல்லது வேறு எந்த வார்த்தை சொன்னாலுமோ அது அவனை ஏதோ ஒருவகையில் பாதிக்கும் என்ற எண்ணம் என்னை பல‌மாக ஆட்கொண்டது, ஏதுவும் பேசமுடியாமல் முட்டிவரும் கண்ணீரையும் அதை மறைக்கக் கண்களை சிமிட்டியபடியும் நமச்சிவாயம் மாமா சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் பேசாமல் இருப்பதும் கூட‌ அவனைப் பாதிப்பதாக நினைக்கத் தோன்றியது. அப்பா விசயம் புரியாமல் அவனிடம் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார். முருகானந்தத்தின் கண்களில் நான் அறிந்தேயிராத‌‌ இலக்கற்ற பார்வையும், வெறுமையும் அங்கிருந்து வெளிவரும்வரை பின் தொடர்ந்து வருவதாக உணர்ந்து உடல் சிலிர்த்தது..

வெளியில் நின்றபோது எதிரில் இருந்த ஆல‌மரத்து இலைகளின் சலசலப்பு கல்யாண மண்டபத்து இரைச்சலோடு ஒன்றுசேர்வதை மட்டுமே உணரமுடிந்தது. மரத்தின் இலைகள் காலமின்மையுடன் இணைவதைப் பிரமை பிடித்தவன் போல, மூச்சுவிடும் அசைவுகளுடன் மட்டுமே நெடுநேரம் கவனித்துக்கொண்டிருந்தேன். நினைத்தே பார்க்க முடியாதபடி காலம் மிக குறுகியதாகத் தோன்றியது. இந்த அதிர்ச்சி தனிப்பட்ட முறையில் என்னைப் பாதிப்பதாகும். ஏதோ ஒரு வகையில் அவனை என் இலக்காக, என் குறிக்கோளின் எல்லையாகக் கொண்டிருந்தேன். நான் சேர்ந்திருக்கும் நிறுவனம், வேலை, சம்பளம் பற்றிப் பேச எண்ணியிருந்தது எத்தனை அபத்தமானது என்று தோன்றியது. அவனின் நிலைமை எதிர்பாராதது. தோற்கடிக்க விரும்பும் எதிர் குத்துச் சண்டைக்காரனின் திடீர்விலகல் போல, கோல்போஸ்ட் நீக்கப்பட்டது தெரியாமல் பந்தை உதைத்துவந்து கவனித்ததும் திகைப்புடன் செய்வதறியாது நின்றுவிடும் கால்பந்தாட்ட வீரனின் மனமாக, அதை அப்போது புதியதாக கண்டுகொள்பவனாக,‌ செய்வதறியாது நீண்டநேரம் நின்றிருந்தேன்.

மெதுவாக திடமற்ற‌ நடையுடன் வந்து என்னை அழைத்துச் சென்ற நமச்சிவாயம் மாமாவின் பேச்சில் ஊசியின் கூர்முனையின் குத்தல்போல மெளன இடைவெளி எங்களிடையே தொடர்ந்து வந்தது. அவர் மென்மையாகப் பேசிய பேச்சில் ஒன்றை மட்டுமே கவனித்தேன். எல்லாப் பெண்களையும் கட்டிக் கொடுத்திட்டேன், பொண்ணுகளெல்லாம் கல்யாணமாயிப் போயிட்டாங்க, வீடே வெறுமையாயிடுச்சு. எனக்கப்புறம் முருகானந்தத்தோட‌ எதிர்காலத்த நினைச்சாத்தான் தம்பி கவலையா இருக்கு’.

– சொல்வனம், இதழ் 77, 12 நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *