கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: April 8, 2024
பார்வையிட்டோர்: 231 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பரமேஸ்வரன் மத்யமரின் அடையாளம். அவனுக்கு எல்லாமே விட்ட குறை தொட்ட குறைதான். எதிலும் திருப்தி இல்லை. எந்த செயலும் முழுமை அடைந்ததாக அவன் சரித்திரத்தில் இல்லை. படிக்கிற காலத்தில் அவன் கணக்கில் புலி. ஆனால் பள்ளி இறுதி வகுப்பில், அவன் முழுப் பரிட்சை எழுதும்போது, பாழாய் போன டைபாய்டு ஜுரம் வந்து, தேர்வையே கோட்டை விட்டான். அதனால் ஒரு ஆறு மாதம் காத்திருக்க வேண்டியிருந்தது. நடுவில் சும்மா இருப்பானேன் என்று தட்டச்சு கற்றுக் கொண்டான். ஒரே மாதத்தில் வாக்கியங்களை அடிக்கக் கற்றுக் கொண்ட அவனுக்கு பாராட்டு கிடைக்கவில்லை. திட்டு தான் கிடைத்தது. இவனைப் பார்த்து மற்றவர்களும் ஒரு மாதத்தில் பயின்று விட்டால் ஐந்து மாத பயிற்சி பணம் கோவிந்தா ஆகிவிடும் என்பதால், தட்டச்சு நிறுவனரே இவனை வெளியே அனுப்பி விட்டார்.

ஒரு வழியாக பள்ளித் தேர்வை முடித்து, குடும்ப சூழலால் வேலைக்கு போன போது அங்கேயும் எதிர்பாராத தோல்விகள். வேலையை இழுத்து நாட்களை கடத்தும் சக ஊழியர்கள் மத்தியில் மனக் கணக்காகவே இவன் போட்ட கூட்டல் கழித்தல்கள் பாராட்டுகளைப் பெற்று தரவில்லை. உடன் வேலை பார்த்த சகாக்களின் வெறுப்பை சம்பாதித்துக் கொடுத்தது.

போதாததற்கு அவனுடைய யதார்த்த பேச்சு எதிர்வினையை உண்டாக்கியது.

தன் மேலாளரிடமே, எல்லோரும் கேட்கும்படி ஒரு நாள் உண்மையைச் சொன்னது தான் ஆபத்தை அருகில் அழைத்தது.

“ஆறை ஜீரோ மாதிரி போடறீங்க சார்.. எப்படி கூட்டினாலும் டேலி ஆவாது! கொம்பை நீட்டணும் சார்.. இப்படி! “

கொல்லென்று சிரித்தது அலுவலகம். அடுத்த நாள் மாற்றல் வந்தது.. செங்கல்பட்டிற்கு! இங்கேயும் அங்கேயும் பந்தாடப்பட்டு பரமு, இப்போது சென்னைக்கு மாற்றலாகி வந்திருக்கிறான். ஆனாலும் அவனது ஸ்திதி ஏறவில்லை. வாணியைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு, அவளது அடங்காத ஆசைகளைப் பூர்த்தி செய்ய அவனது சொற்ப சம்பளம் போதவில்லை. தன் பங்கிற்கு ஏதும் செலவு வந்துவிடக் கூடாது என்று அப்பாவின் சைக்கிளை பழுது பார்த்து அதில் தான் அவன் வேலைக்கு போய்க் கொண்டிருக்கிறான்.

சைக்கிள் பழசு. ஆனால் தினம் தினம் உலகம் புதுசு புதுசாக மாறிக் கொண்டிருக்கிறது! சாலைகள் அகலமாக்கப்பட்டு, புதிய ரக வாகன்ங்கள் அதை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன. அவனுடைய பழைய சைக்கிளை மதிப்பார் இல்லை. வழி விட மறுப்போரே உண்டு. அவனுக்கும் அவனது சைக்கிளுக்கும் தினம் தினம் சோதனை ஓட்டமே!

வெறெந்த நோக்கமுமின்றி அவன் விரைந்து கொண்டிருந்தான். அவனுடைய ஒரே நோக்கம் குறித்த நேரத்தில் அலுவலகம் போய் சேருவதுதான். நேற்றே அவனுடைய கிளை மேலாளர் சொன்ன வார்த்தைகளின் உஷ்ணம் அவனை இரவெல்லாம் தூங்க விடவில்லை. மொட்டை மாடியில் சிறிது நேரம் உலாத்தியதும், வெறும் உடம்பில் சில்லென்ற கட்டாந்தரையில் படுத்ததும் கூட அதைத் தணிக்கவில்லை.

“பரமேஷ்வரன் (அவர் அப்படித்தான் ஸ்ஸையெல்லாம் ஷ் என்பார்) ஒங்களுக்கு ஆயிரம் பிரச்சினைகள் இருக்கலாம். அதற்கு கம்பெனியோ நிர்வாகமோ பொறுப்பில்லை காரணமுமில்லை. இங்க வேலை நேரம் ஒண்ணு குறிக்கப்பட்டிருக்கு. அதை எல்லோரும் ஒழுங்கா கடைபிடிக்கறாங்களான்னு கண்காணிக்கிற வேலை எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கு. மூணு நாள் லேட்டா வந்தா அரை நாள் கேஷூவல் லீவ் கட் பண்ணச் சொல்லி நிர்வாகம் போட்ட விதிமுறை இருக்கு. அப்படி கட் பண்ண ஆரம்பிச்சா ஒங்களுக்கு மாசத்துல ஏழு எட்டு நாள் கட் பண்ண வேண்டியிருக்கும். நாளையிலேர்ந்து லேட்டா வந்தா உள்ளே வராதீங்க. அப்படியே திரும்பிப் போயிடுங்க.”

இதற்கா இவ்வளவு வருத்தப்படுகிறான் இவன் என்று தானே நினைக்கிறீர்கள். அதைத் தாண்டி அவன் மேலாளர் அறைக் கதவை திறந்து வெளியே போகும்போது அவர் சன்னமாக முணுமுணுத்தது கேட்டால் நீங்கள் இப்படிச் சொல்ல மாட்டீர்கள்.

‘அம்பது வயசு கெழத்தையெல்லாம் என் தலையில கட்டி கழுத்தறுக்கறாங்க. சீட்டைக் கிழிச்சு வீட்டுக்கு அனுப்ப வேண்டியதுதானே! ஷாவ் கிராக்கி ’

அவினாஷ் என்ற மேலாளருக்கு முப்பது வயதுதான் இருக்கும். புனே கல்லூரியில் மேனேஜ்மெண்ட் படிப்பு படித்தவர். ஏற்கனவே மூன்று கம்பெனிகளில் திறமையாக வேலை பார்த்தவர். நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த கம்பெனியை மீட்டு இலாபத்திற்கு கொண்டு வந்தவர். கூடுதலாக வட இந்தியர். கம்பெனியில் தலைமை அலுவலகம் மும்பையில் இருக்கிறது. சுபாவமாகவே தென்னிந்தியாவைப் பற்றிய காழ்ப்புணர்ச்சி கொஞ்சம் கூடுதலாகவே அங்கு இருக்கும் ஆட்களுக்கு உண்டு என்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான்.

சிவதாஸ் அவனுடைய நெருங்கிய நண்பன். மிலிட்டரியிலிருந்து ஓய்வு பெற்று இந்தக் கம்பெனியில் பாதுகாப்பு அதிகாரியாக பதவி ஏற்றவன். போன வருடம் விருப்ப ஓய்வு வாங்கிக் கொண்டு தினம் ஒரு திசையாக பறந்து கொண்டிருப்பவன்.

பரமு அவனிடம்தான் தன் ஆதங்கத்தையெல்லாம் கொட்டுவான். மனைவியின் நச்சரிப்பு, பிள்ளைகளின் பிடுங்கல், கடன் தொல்லையால் ஏற்படும் மன அழுத்தம் என்று எல்லாவற்றிற்கும் அவன் உபாயம் சொல்வான்.

“ஹே! பரமு ! ஒண்ணு புரிஞ்சுக்கோ. வயசாளி ஆயிட்டா ஒரு வருஷம் கூடினா பத்து வருஷம் கூடினாப்பல மனசு எண்ணும். அப்படியே மனசு இளமையா நெனச்சுக்கிட்டாலும் ஒடம்பு அதுக்கு ஒத்துழைக்காது. சம்ஜே “

அது என்னவோ வாஸ்தவம்தான். அப்பா வாங்கிக் கொடுத்த சைக்கிளில் பள்ளிக்கூடம் போனபோதெல்லாம் இருந்த தெம்பும் வலிமையும் இப்போது காணாமல் போய் விட்டது. சைக்கிள் என்னவோ அதே சைக்கிள்தான். தினமும் துடைத்து எண்ணை போட்டு நன்றாகத்தான் வைத்திருக்கிறான். அவன் பிள்ளைகள் ஓட்டும்போது அதுவும் வேகமாகத்தான் போகிறது. அவன் ஓட்டும்போது மட்டும் எவ்வளவு அழுத்தி மிதித்தாலும் நகர மாட்டேன் என்கிறது. சமயத்தில் சாலை போக்குவரத்து சங்கடங்களில் மாட்டிக் கொண்டு அலுவலகம் போய் சேருவது பெரும்பாடாய் இருக்கிறது.

அனிச்சையாக கைக்கடிகாரத்தைப் பார்த்தான். ஒன்பதடிக்க பத்து நிமிடம் இருக்கிறது. இன்னும் நந்தனம் தாண்டவில்லை. இன்றும் பாட்டு கேட்க வேண்டுமா?

பக்கத்து சீட் சித்ரா தாம்பரத்திலிருந்து வருகிறாள். எட்டு நாற்பதுக்கெல்லாம் உள்ளே நுழைந்து விடுகிறாள். இத்தனைக்கும் அகல ரயில் பாதை போட்டு தாம்பரம் வரையில் நீட்டித்த பின் ரெயில்கள் பிதுங்கி வழிகின்றன என்று அந்தப் பக்கத்து ஆட்கள் எல்லாம் சொல்கிறார்கள். பள்ளி செல்லும் இரண்டு பெண் குழந்தைகள், வேலைக்கு செல்லும் கணவன், இத்தனை பேரையும் கவனித்து விட்டு அவளால் எப்படி நேரத்துக்கு முன்பே அலுவலகம் வர முடிகிறது? கேட்டே விட்டான்.

ரொம்ப சிம்பிள். எங்க வீட்ல எந்த கடிகாரமும் சரியான நேரத்தைக் காட்டாது. எல்லாமே பதினைந்து நிமிஷம் கூடுதலாகக் காட்டும். அதுதான் சரியான நேரம்னு மனசளவில ஒரு தீர்மானம் வச்சிருக்கோம் நாங்க எல்லோரும். ஒரு இரண்டு நாள் சங்கடமா இருக்கும். அப்புறம் பழகிடும்.

“அப்படிச் செய்து பார்த்ததில் அனாவசியமாக சண்டை வந்துவிட்டது. கல்லூரிக்கு செல்லும் மகள், பதினைந்து நிமிடம் முன்னால் கிளம்பிப் போனதில், கட் ஸர்வீஸ் பஸ் ஏறி பாதி வழியில் இறக்கி விடப்பட்டு நடந்தே கல்லூரிக்கு போனதில், ஒரு பூகம்பமே வெடித்தது வீட்டில்.

இன்று எப்படியும் நேரத்துக்கு போய்விடவேண்டும். சிக்னல் விழுந்தவுடன் விழுந்தடித்துக் கொண்டு கிடைத்த சொற்ப இடைவெளியில் புகுந்து புயலெனக் புறப்பட்டான் பரமு.

“கஸ்மாலம். வூட்ல சொல்லிக்கினு வரலியா “ என்ற ஆட்டோக்காரனின் வசவு அவன் காதுகளில் ஏறவில்லை. அவன் கண் முன் பிரமாண்டமான அளவில் ஆபிஸ் சுவர் கடிகாரம் ஆடிக்கொண்டிருந்தது.

அதில் சுற்றி வரும் விநாடி முள்ளில் கெத்தாக உடகார்ந்து கொண்டு அவினாஷ் ஏளனமாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.

“வயசாச்சு சாளேஸ்வரம் வேற! ஆனா ஜம்பம் மட்டும் போகலை. கண்ணாடி போட்டுகிட்டா கெழவனாட்டம் தெரியுமாம். போடலைன்னா மட்டும் என்ன குமரனா? இருபது ரூபாய்க்கு குடுக்கறான்னு பிளாட்பாரம் வாட்சை வாங்கி கட்டிகிட்டு, குருட்டுக் கண்ணால பாத்தா நேரமா தெரியும். அப்புறம் எப்படி நேரத்துக்கு வேலைக்கு போக முடியும். உங்க கண்ணு இருக்கற லட்சணத்துக்கு, செண்ட்ரல் ஸ்டேசன் கடிகாரத்தை கழுத்துல மாட்டிக்கிட்டாத்தான் பளிச்சுன்னு தெரியும்.”

வாணி அவன் மனைவி. ஆனால் வாயைத் திறந்தால் சாணிதான். கரும்புள்ளியும் கழுதையும்தான் பாக்கி. மற்றபடி எல்லா அவமானத்தையும் அரங்கேற்றி விடுவாள். அவளுடைய ஒரு நாள் உரையின் ஒரு பகுதிதான் மேற்சொன்னது.

அலுவலகம் மாம்பலம் மகாலட்சுமி தெருவில் இருந்தது. இந்தப் பக்கம் உஸ்மான் சாலை ஒரு வழிப் பாதை. பின்பக்கமாகத்தான் வரவேண்டும். அதற்கு ஒரு இரண்டு நிமிடம் கூடுதலாக ஆகும். அவனுடைய அதிர்ஷ்டம் இன்று வழிவிட்டே வாகனங்கள் செல்கின்றன.

இதோ இன்னும் ஒரு நிமிடம் இருக்கிறது. அவன் மகாலெட்சுமி தெருவில் நுழைந்து விட்டான். அலுவலகக் கட்டிடத்திற்குள் நுழைந்து சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு பூட்டும்போது செக்யூரிட்டி நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

“என்னா சார் இன்னைக்கு இவ்வளவு சீக்கிரம் “

இவனுக்குக்கூட நம்மைப் பார்த்தால் கிண்டல் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறதே என்று தன் விதியை நொந்து கொண்டே உள்ளே பார்வையை ஓடவிட்டான். அட அதிசயமாக இருக்கிறதே. தாம்பரம் சித்ரா இன்னும் வரவில்லை. ஒருநாளாவது அவளுக்கு முன்னால் வந்து விட்டதில் உண்மையிலேயே அவன் மனம் குதியாட்டம் போட்டது.

இன்னும் கொஞ்சம் எட்டிப் பார்த்ததில் அவினாஷம் வரவில்லை என்று தெரிந்தது. அடக் கஷ்டமே! நாம் சீக்கிரம் வரும்போது இந்தக் கிராதகன் வரவில்லையே. அவனுக்கு முன்னால் வளையாமல் நெளியாமல் ஒருநாளாவது தன் இருக்கைக்கு செல்லலாம் என்று பார்த்தால் அதில் மண் விழுந்து விடும் போலிருக்கிறதே. சரி அதனாலென்ன.. செக்யூரிட்டி பார்த்திருக்கிறான். அவன் சொல்ல மாட்டானா? சைக்கிள் ஹேண்டில் பாரிலிருந்து சாப்பாட்டுப் பையை எடுத்துக் கொண்டு, தலையை நிமிர்த்தியபடியே அவன் வாசல் கதவை நோக்கி நடந்தான்.

ஒரு பத்து படி ஏறித்தான் அலுவலக வாசல் கதவை அடைய வேண்டும். படிகளை கிரானைட் கற்களால் அமைத்திருந்தார்கள். தினமும் கடைநிலை ஊழியன் கோபால் சோப்பு போட்டு கழுவி துடைத்து பளபள வென்று வைத்திருக்கிறான். குனிந்து பார்த்தால் நடப்பவர் பிம்பம் தெரியும். கொஞ்சம் கவனம் பிசகினால் வழுக்கிக் கூட விட்டு விடும்.

தினமும் ஏறி வரும் படிகள் தான். ஆனால் நேரம் தவறி வருவதால் இதையெல்லாம் கவனிக்கும் மன நிலையில் பரமு எப்போதும் இருந்ததில்லை. இன்றுதான் அந்தப் படிகளை முதன் முறையாக ரசித்துப் பார்த்தான். ஏறக்குறைய ஒரு சிம்மாசனத்தின் படிகளைப் போல.. திடீரென்று அவனுக்கே ஒரு ராஜ கம்பீரம் வந்து விட்டது போல இருந்தது. சாப்பாட்டு பையை லேசாக சுழட்டியபடி ஒரு ராஜபார்ட் நடிகனைப் போல அவன் அந்தப் படிகளில் ஏறினான்.

முழுவதும் கண்ணாடியால் செய்யப்பட்ட கதவு. சூரிய வெளிச்சம் உள்ளே வராதபடி கறுப்பு பிலிம் ஒட்டியிருந்தார்கள். நடுநாயகமாக அதன் மேல் கணிப்பொறியில் அச்சடிக்கப்பட்ட போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

ஊழியர்கள் கவனத்திற்கு:

இன்று முதல் அலுவலக நேரம் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை.

இப்படிக்கு: முதன்மை மேலாளர்.

பரமு கைக்கடிகாரத்தைப் பார்த்தான். இருபது ரூபாய் கடிகாரம் 9.01 என்றது.

– பெப்ரவரி 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *