கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: July 18, 2023
பார்வையிட்டோர்: 1,422 
 
 

(ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஓர் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டதென்பதால் பெயர் மாற்றப் பட்டுள்ளது. மற்றவர்களைக்கூட சுஜி அப்பா, சுஜி அம்மா, சுஜி பாட்டி என்றுதான் குறிப்பிட வேண்டியுள்ளது. 

சுஜி இரண்டு நாட்களாக வீல் வீலென்று கத்துகிறாள். மம்மி வேணும் மம்மி வேணுமென்ற வார்த்தைகள் ஓய்வின்றி வந்த வண்ணம் உள்ளன.

மறு நாள் காலையில் வீடு திரும்பிவிடலாமென்று சுஜியை பாட்டியிடம் விட்டுவிட்டு பெற்றோர் வீட்டிற்குப் போன சுஜி அம்மாவால் வர இயலவில்லை. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் விபரம் ஏற்கனவே அறிந்திருந்தும் ஒரு போக்குவரத்து கூட இல்லாமலாபோகும் என்ற அலட்சிய மதிப்பீடு அம்மா வீட்டிலேயே தங்க வைத்துவிட்டது. 

வெளியில் வந்தால் காவல்துறையினர் கண் மண் தெரியாமல் மனிதர்களை அடிக்கிறார்கள். பணிசுமை குறைவான நேரங்கள் சில மனிதாபிமான காவலர்களைத் தவிர காவல்துறையை நண்பன் என்று சொல்வது சுத்தமான அக்மார்க் பொய். நண்பனும் இல்லை, கிண்பனும் இல்லை. 

முதல் இரண்டு நாட்கள் சுஜி அமைதியாகத்தான் இருந்தாள். மூன்றாம் நாள் தாயின் நினைப்பு வந்துவிட்டது. சுஜி, பாட்டியின் செல்லம். பாட்டி சொல்லை தட்டுவாள். இந்த வயதிலேயே எதிர்த்து பேசுவாள். கொஞ்சுவாள். கெஞ்சுவாள். ஆனால், இப்போது பாட்டியின் பாசமெல்லாம் எடுபடவில்லை. தந்தை அதட்டிப் பார்த்தார். சாம பேத தான தண்ட முயற்சிகள் எல்லாம் தோற்றுப்போயின. 

நேற்று இரவு மூன்று மணிக்குத்தான் கண்ணயர்ந்தாள். தூங்கி பத்து மணிக்கு விழித்ததும் மீண்டும் அழுகை தொடர்ந்தது. “ஏம்பா இவள எப்படியாவது அம்மா கிட்ட விட்டுட்டு வந்துடேன்” என்றாள் சுஜி பாட்டி. 

“வெளிய போனா போலீஸ் அடிக்கிறத பேஸ் புக், யூட்யூப்ல எல்லாம் பாக்குறிங்கல்ல” என்றார் சுஜி அப்பா. 

“கத்தி கத்தி தொண்ட காயுதுப்பா. குழந்தையோடுபோன விட்டுடுவாங்க. அவ அழுவுறத செல்போன்ல வீடியோ எடுத்துக்க. கேட்டா காமி. என்ன கிள்ளியா முழுங்கிடுவாங்க” 

யோசித்தார். “சரி போம்போது விட்டாலும் வரும்போது மறச்சிபுடுவாங்க” 

“என்னோட மருந்து சீட்ட எடுத்துக்க. மாமனார் வீட்டுக்குப் பக்கத்துல உள்ள மருந்து கடையில மருந்து வாங்கிக்கிட்டு வா. இந்த மருந்து வேற எங்கேயும் கெடைக்காதுன்னு சீட்ட காமிச்சிட்டு வந்துடேன்.” அம்மா ஐடியாக்காரி. 

வேறு வழி தெரியவில்லை. பிற்பகல் இரண்டு மணி வாக்கில் சுஜியை பைக்கில் அழைத்துக்கொண்டு கிளம்பினார். 

தெருக்கள் வெறிச்சோடிக் கிடந்தன. முக்கால்வாசி தூரம் கடந்தாகிவிட்டது. இன்னும் மூன்றே கிலோமீட்டர்தான் பாக்கி. பெரிய தெருவிலிருந்து திரும்பி நாணயக்காரத் தெருவுக்குள் நுழையும்போது இரண்டு காவலர்கள் வழியில் நின்றார்கள். ஒருவர் உதவி ஆய்வாளர். மற்றொருவர் காவலர். 

“ஏய் நிறுத்து. . நிறுத்து . .” என காவலர் கத்திக் கொண்டு வாகனத்தின் முன் சக்கரத்தில் லத்தியால் அடித்தார். வாண்டி சாயும் நிலைக்கு வர நிறுத்தி இறங்கி ஸ்டாண்ட் போட்டுவிட்டு எஸ்ஐயிடம் விபரத்தைச் சொல்லலாமென அருகில் சென்று “பாப்பா அழுவுறா அதான் அம்மாகிட்ட விடப்போறேன் சார்” என்றார். அவர் அதை காதில் வாங்குவதாக இல்லை. டமார் டமார் என காலில் அடிக்க ஆரம்பித்தார். 

“சார். பொறுங்க சார். போட்டோ கூட..” என சொல்வதற்குள் என்ன ஏது என கேட்காமல் காவலரும் சேர்ந்து பிட்டத்தில் அடிக்க ஆரம்பித்தார். பார்த்துக் கொண்டிருந்த சுஜி பயத்தில் கத்திக்கொண்டு வண்டியிலிருந்து கீழே விழுந்தாள். அடியை தாங்கிக்கொண்டு ஓடிப்போய் மகளை தூக்கி வண்டியில் வைத்து தாங்க முடியாத வலியோடு வண்டியை உதைத்து ஓட்டினார். அப்போது கூட அந்த காவலர் பின் சக்கரத்தில் காட்டுமிராண்டி போல அடிக்கிறார். நல்லவேளை விழுந்ததில் சுஜிக்கு காயம் ஏதுமில்லை. பயத்தில் உறைந்து போய் அழுகையை நிறுத்திவிட்டாள் சுஜி. 

வலியோடும் வருத்தத்தோடும் மகளை மாமனார் வீட்டில் சேர்த்துவிட்டு அருகில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் மருந்து மாத்திரைகளை வாங்கி பார்வையில் படும்படி வண்டியின் முன்னால் தொங்கவிட்டுக் கொண்டு பயத்துடன் வீடு திரும்பினார். அதிர்ஸ்டவசமாக வழியில் எந்த சனியனும் இல்லை. 

ஊரடங்கில் எல்லோரும் வீட்டில் அடைந்து கிடக்கிறார்கள். வெளியில் சென்று நோய்த் தொற்றை வலிய வாங்கிக் கொள்ள யார் விரும்புவார்கள். அவசரம் என்பது யாருக்கேனும் இருக்காதா என்ன!. ஆர அமர விசாரித்து அவர்களுக்கு விதிவிலக்கு அளித்தால் என்ன. வேண்டுமென்றே வெளியில் சுற்றினால் நடவடிக்கை எடுக்கட்டும். திருடனைகூட அடிக்க சட்டத்தில் இடமில்லை. உண்மையை வெளிக் கொண்டுவர அவனை அடித்தால் அதில் தார்மீக நியாயம் இருக்கலாம். அப்பாவிகளை சகட்டுமேனிக்கு கண்மூடித்தனமாக அடிப்பது எந்த வகையில் நியாயம். 

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அமலாக்கப் பிரிவின் செயல்பாடுகள் சரியில்லை. பெரும் புள்ளிகள் ஊழல் செய்தால் அரசியல் தலையீட்டில் உண்மைகள் மறைக்கப்படுகின்றன. ஏழை எளியோரின் நியாயங்கள் பணம் படைத்தவர்கள் எடுத்து எறியும் சில்லரையால் நீர்த்துப்போகின்றன. 

சுஜி கம்னு இருக்கிறாள். கலகலப்பு இல்லையென சுஜி  அம்மாவிடமிருந்து மறுநாள் தகவல் வந்தது. 

ஒரு வாரம் கழிந்தும் அத்தியாவசிய வேலையாக வெளியில் செல்ல பாஸ் நடைமுறைக்கு வர, அவுட் பாஸை வாங்கிக்கொண்டு மகளையும் மனைவியையும் வீட்டுக்கு அழைத்து வந்தார் சுஜி அப்பா. 

சுஜி மன நிலை பாதிக்கப்பட்டிருப்பதை உணர முடிந்தது. பாட்டியிடம்கூட முகம் கொடுத்து பேசுவதில்லை. காரணமில்லாமல் அழுதாள். டாம் அண்ட் ஜெர்ரி, ரேஞ்சர் பவர் போன்ற வழக்கமாக பார்க்கும் நிகழ்ச்சிகளை தொலைக்காட்சியில் பார்ப்பதில்லை. அவளுக்கு மிகவும் பிடித்த டோராவின் பயணங்களை வைத்து பார்க்கச் சொன்னதும் ரிமோட்டை பறித்து உடைத்து விட்டாள். 

வேறு வழியின்றி ஒரு வாரத்திற்குப் பின் குழந்தைகள் மன நல மருத்துவர் சிவராமனை அணுகினார்கள். போலீஸார் தன்னை தாக்கிய விபரத்தையும், அதனை பார்த்த பயத்தால் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்றும் சுஜி அப்பா காரணம் சொன்னார். வைத்தியரிடம் உண்மைதான் பேச வேண்டுமில்லையா. கேட்டதும் ஆடிப் போய்விட்டாள் சுஜி அம்மா. “அட பாவி மனுஷா. என்கிட்ட கூட இத சொல்லலயே” என பொங்கி எழுந்தாள். பாவி மனுஷா என்ற வார்த்தைகள் கணவர் மீது அவளுக்குள்ள ஈடுபாடின் உச்சமான சொற்கள். 

தந்தையையும் மகளையும் வெளியே அனுப்பிவிட்டு “அவர் நடவடிக்கையில ஏதாவது மாற்றங்கள் தெரியுதாம்மா?” என்று கேட்டார் சிவராமன். 

“அப்படி ஒண்ணும் இல்ல டாக்டர். பட் கொஞ்சம் அப் செட்டாத்தான் இருக்கார் டாக்டர். பாப்பா இப்படி இருக்கத்தால் இருக்குமோன்னு நெனச்சேன்.” 

“இருக்கலாம்.” 

“என்கிட்டகூட நடந்ததை சொல்லலையே. அப்படி என்ன கணவன் மனைவி உறவோ” என்று வருத்தத்தோடு அலுத்துக் கொண்டாள். 

“இதப் போய் பெருசா எடுத்துக்காதிங்க. பல ஆண்கள் அப்படிதான். வலியான விஷயங்களை வீட்டுல சொல்லாம பாரத்தை தானே சுமந்துகிட்டு இருப்பாங்க. பெண்களைப் போல அழுது ஆர்ப்பாட்டம் பண்ணமாட்டாங்க. எதற்கு குடும்பத்தார கஸ்டப் படுத்தணுங்குற குணம். ஜென்ஸோட பிஹேவியர் அது. டேக் இட் ஈஸி.” ஒரு விளக்கவுரைக்கு பின் சுஜி அப்பாவை உள்ளே அழைத்தார். 

சுஜி அப்பாவுக்கு தான் தாக்குண்டது பெரிய பாதிப்பில்லைதான். வேறு வழியும் இல்லை. பழக்கப்பட்டவர். இளமையிலேயை வறுமையை சுமந்தவர். வேலை பார்க்கும் கம்பெனியில் எதிர்கொண்ட இன்னல்கள் ஏராளம். போகப்போக சரியாகிவிடும். சுஜி மீதுதான் இப்போது கவலை. 

“பாப்பா கொஞ்சம்; ரொம்பவே பாதிக்கப்பட்டுருக்குறா. மருந்து மாத்திரையெல்லாம் அவ்வளவு எஃபக்டியுவா இருக்காது. எழுதித்தாறேன். அந்த சம்பவத்திருந்து விடுபட மனச டைவர்ட் பண்ணணும். குழந்தைளோட மிங்கிள் பண்ணி விளையாட விட கொரோனா டயத்தில பாஸிபுல் இல்ல. ‘க்ளவுட் நைன்’ என்ற சில்ரன்ஸ் ப்ளையிங்க் சென்டர் இருக்குல்ல அங்க டெய்லி அழைச்சிகிட்டுபோய் டூ திரீ ஹவர் விளையாட விடுங்க. கடவுள வேண்டிக்கிடுங்க. ஹீ ஈஸ் கிரேட். டேண்ட் வொரி” அறிவுரையும் ஆறுதலும் சொல்லி அனுப்பி வைத்தார் டாக்டர் சிவராமன். 

உடலளவில் பாதிக்கப்பட்டால் நாளடைவில் சரியாகி விடும். ஒரேயடியாக போய்விட்டால் கூட அழுது புரண்டு கண்ணீர் விட்டு, காலம் மெல்ல வேதனைகளை குறைத்து ஆறுதல் தந்துவிடும். மனநிலை பாதிக்கப்பட்டால் அதனை அனுவிப்பவருக்கே வலியின் ஆழம் தெரியும். நிரந்தர பாதிப்பு என்றால் வாழ்நாள் முழுக்க அவர்களை பராமரிப்பது யார், தங்களுக்கு பின் அவர்களின் நிலை என்னவாகும் என பெற்றோர்கள் யோசித்து யோசித்து மனம் நோந்து நடைபிணமாக வாழும் பெற்றோர்களும் உண்டு. 

சுஜி நலமாக வேண்டும். 

யார் கையில் இருக்கிறது? 

அவளுக்காக பிரார்த்திப்போம். 

– எட்டி மரக்காடு சிறுகதை தொகுப்பில் வெளியான சிறுகதை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *