கோவிலுக்குப் பக்கத்தில் குளம் வெட்டியது ஏன்?

1
கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: ஆன்மிகக் கதை
கதைப்பதிவு: November 4, 2016
பார்வையிட்டோர்: 13,707 
 

நம் ஆலயங்களின் அமைப்பில் உள்ள அற்புதங்களை விளக்கும் ​ஆன்மிகம்.

​கோவிலுக்குப் பக்கத்தில் குளம் வெட்டியது ஏன்? -​

நம் நாட்டுக் கோயில்களின் கட்டுமான அமைப்பின் சிறப்பை புரிந்து கொள்ள எந்த வித முயற்சியும் நாம் எடுத்துக் கொள்வதில்லை என்றே கூற வேண்டும். மற்ற மதங்களோடு கூட இந்து மதத்தையும் சேர்த்து அவற்றின் நிலையிலேயே இந்து மத உணர்வுகளையும் கணக்கெடுப்பது தற்போது நடந்து வரும் பெரிய தவறு. ஒவ்வொரு மதத்தின் உணர்வுக்கும் அதற்கென்றே ஏற்பட்ட சிறப்பம்சம் உள்ளது. அது ஒரு புறம் இருக்கட்டும்.

ஹிந்து மதம் என்றழைக்கப்படும் பாரத தேச சனாதன தர்மத்தில் கோயில்களின் நிர்மாண அமைப்பை பல கோணங்களில் பரிசீலித்துப் பார்த்தால் அதன் சிறப்பு புரிய வரும்.

முதலாவதாக நாம் தெரிந்து கொள்ள வேண்டியது, நம் கோயில்கள் வெறும் விசுவாசத்திற்கு நிலையமான பிரார்த்தனை மந்திரங்கள் போன்றவை அல்ல. வாரத்தில் ஒரு முறை போய் மன்னிப்பு கோரும் இடங்கள் அல்ல நம் கோயில்கள்.

நம் ஆலயங்களின் கட்டட அமைப்பின் பின்னால் ஒரு ஒழுங்கு முறை உள்ளது. ஒரு விஞ்ஞானம் இருக்கிறது. அபூர்வமான கலையின் சௌந்தர்யம் மட்டுமின்றி கட்டப்பட்ட முறையிலுள்ள நெளிவு சுளிவுகளை உற்று கவனித்தால், அந்தந்த பகுதியின் இயற்கை சூழ்நிலை, ஜல, ஸ்தல, காடுகள் இவற்றை சீர்தூக்கிப் பார்த்து, அவற்றை செழிப்பாகும் விஞ்ஞான ரகசியம் ஏதோ அவற்றில் மறைந்திருப்பது புரிய வரும். ஆனால், அந்தோ! நம் அரசியல் பலமுள்ள மேதாவிகளோ, விஞ்ஞானிகளோ இவற்றை கண்டுகொள்வதில்லை.

ஆந்திரப் பிரதேசத்திலுள்ள மகா நந்தி போன்ற ஆலயங்களைப் போன்றவையே கர்நாடகப் பகுதிகளிலும் சில சிவாலயங்கள் உள்ளன. அந்த கோவில்களின் அருகிலேயே அழகான குளங்கள் உள்ளன. அவற்றின் நீரைக் கொண்டு பல ஏக்கர் நிலங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இவற்றை உற்று நோக்குங்கால் இக்கோயில்கள் அமைந்த விதத்தில் ஏதோ விஞ்ஞான ரீதியான சிறப்பு இருப்பதாகத் தெரிகிறது.

மலைப் பகுதிகள், நதி தீரங்கள், காட்டுப் பகுதிகள் -இங்கு அமைந்துள்ள கோயில்கள் ஒவ்வொன்றும் பிரத்யேகமான முறையில் கட்டப்பட்டிருக்கும். இவை ஏனோ தானோ வென்று கட்டப்பட்ட மத சார்பான நிலையங்களாக அல்லாமல் ஒரு சிறப்பான புரிதலோடு நிர்மிக்கப்பட்டதாக தெளிவாக அறிய முடிகிறது. அந்தச் சிறப்பு என்னவாக இருக்கும் என்று ஆராய்தல் வேண்டும்.

சங்கீத, வாத்திய ஸ்வரங்களை வெளிப்படுத்தும் ஹம்பி ஆலய ஸ்தம்பங்கள் எந்த வித சிலா சாஸ்திரம், சில்ப சாஸ்திரம் மூலம் கட்டப்பட்டன என்பது பற்றி இன்று வரை யாரும் கண்டறிய வில்லை. சில கிராமங்களின் கோயில் சுவர்கள், கோபுரங்கள் அந்தந்த ஊரின் தட்ப வெப்ப நிலையைக் கூட கட்டுப் படுத்தும் திறம் அமைந்ததாகக் கட்டப்பட்டுள்ளன.

அனேக ஆலய சமீபங்களில் உள்ள குளங்கள் அந்தந்த ஊரின் நீர்நிலை அமைப்புகளை செழிப்பாகும் விதமாகவும், ஆலயங்களை திடமாக நிலை நிறுத்தும் விதமாகவும் நிர்மாணிக்கப்பட்டதாக அறிய முடிகிறது.

டேவிட் ஸ்மித் போன்ற வெளி நாட்டவர்கள் சிதம்பரம் போன்ற க்ஷேத்திரங்களில் உள்ள கோயில் கட்டட முறையில் உள்ள அற்புதங்களைப் பற்றி தம் நூல்களில் புகழ்ந்து எழுதி உள்ளார்கள். உலக நாடுகளில் எங்கேயும் காண இயலாத சிறப்பு மிக்க ஆலய கட்டட அமைப்புகள் நம் தேசத்தில் உள்ளன.

கோயில்களின் விக்ரக சில்ப நிர்மாணத்தில் – சிலைகளை (பாறைகளை) தேர்ந்தெடுப்பது முதல், செதுக்குவது வரை ஒவ்வொன்றுக்கும் ஒழுங்குமுறையோடு கூடிய சாஸ்திரம் உள்ளது. மந்திர, தந்திர சாஸ்திரம், ஸ்தல, ஜல சாஸ்திரம் போன்றவற்றை கருத்தில் கொண்டு ஒன்றுக் கொன்று பரஸ்பரம் ஆதாரமாக ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.

டாக்டர் ஜான். டி. மில்வே என்ற கலிபோர்னியா பல்கலைக் கழக ஆசிரியர், காசிக்ஷேத்ரத்தில் உள்ள த்வாதச ஆதித்யர்களின் கோவில்களை பரிசீலித்துப் பார்த்த பின், சௌர சக்தி எனப்படும் சூரிய சக்தியை ஏராளமாக கிரகிக்கும் கேந்திரங்களாக அவை அமைக்கப் பட்டுள்ளன என்று விஞ்ஞான ரீதியாக நிரூபித்தார். அதே க்ஷேத்திரத்தில் உள்ள 56 கணபதி கோயில்கள் விஸ்வ சக்தியை குவிக்கும் கேந்திரங்களாக கண்டுபிடித்து நிரூபித்துள்ளார்.
​​
​”எங்களால் ​விஞ்ஞான கருவிகளின் உதவி கொண்டு தான் இவற்றைக் கண்டு பிடிக்க முடிகிறது. ஆனால் எந்த வித கருவியும் இன்றி அநாதி புராதன காலத்திலேயே பாரத நாட்டு விஞ்ஞானிகள் இந்த கோயில் கட்டப்பட்ட இடங்களில் அச்சக்தி குவிக்கப் பட்டிருப்பதை எவ்வாறு கண்டறிந்து ஆலயங்களை நிர்மாணித்தார்களோ! ஆச்சர்யமாக இருக்கிறது. ஒரு வேளை அக்கால கட்டத்தில் அதற்குத் தகுந்த விஞ்ஞானத்தை அவர்கள் அறிந்திருந்தார்கள் போலும். அல்லது அற்புதமான தியான சக்தியைக் கொண்டு கண்டறிந்திருக்க வேண்டும்” என்று கூறி அவர் வியப்புற்றார்.

நன்கு ஆலோசித்து பார்க்கையில் பழங்கால கோயில்களுக்கு வெறும் கட்டடம் மட்டும் முக்கியமன்று; அவை கட்டப் பட்ட இடத்தில் கூட ஒரு அற்புத சக்தி ரகசியம் மறைந்துள்ளதென்று நினைக்கத் தோன்றுகிறது. இவற்றைக் கொண்டு, நம் இஷ்டத்திற்கு பழங்கால கோயில்களில் உள்ள தெய்வச் சிலைகளையும் அவற்றின் ஸ்தானங்களையும் மாற்றக் கூடாதென்பது புரிகிறது.

அதோடு கூட, ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு ஆகம சாஸ்திரம் உள்ளது. புருஷ விக்ரகம் செதுக்கும் பாறை வேறு, பெண் விக்ரகம் செதுக்கும் பாறை வேறு. மூல விக்ரகத்திற்கு உபயோகிக்கும் பாறை வேறு, பரிவார தேவதைகளுக்கான பாறை வேறு. இப்படி கற்களில் கூட சிறப்பு வேறுபாடுகள் உள்ளன.

ஆலயத்தின் அளவுகளில் கூட வேறுபாடுகள் உள்ளன. ஆலயம், கோபுரம், கர்ப்பகிருகம், அதிலுள்ள லிங்கம், மூல விக்ரகம் இவற்றை அமைப்பதற்கான நிச்சயமான சாஸ்திர பரிமாணங்கள் உள்ளன. எந்தெந்த திசையில் எந்தெந்த சிலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதற்கும் சாஸ்திரம் உளது. அதே போல் அந்த அந்த கோயில்களில் நிர்வகிக்கப் படும் பூஜை கைங்கர்யங்களால் வெளிப்படும் தெய்வ சக்தியின் அளவில் கூட சிறப்பம்சங்கள் உள்ளன.

இந்த அம்சங்களை எல்லாம் பரிசீலித்துப் பார்க்கையில், நாம் ஏதோ வேண்டுதலுக்காக உள்ளே சென்று கும்பிடு போட்டு விட்டு வரக் கூடிய சர்வ சாதாரணமான விஷயம் அல்ல கோயில் அமைப்பு என்பது புரிய வருகிறது.

ஒவ்வொரு கோயிலுக்கும் அதற்கான பிரத்யேகமான சிறப்பு உள்ளது. ஆன்மிகம், விஞ்ஞானம், சமுதாயம், தெய்வீகம், கலை, வித்யை இவற்றின் கூட்டு அமைப்பே பாரத நாட்டு ஆலயங்களின் கட்டிட அமைப்பு.

மூர்க்கமும், ஹிம்சையுமே குணமாகக் கொண்ட வெளிநாட்டவர்களின் தாக்குதலால் நாம் நிறைய ஆலயங்களை இழந்து விட்டோம். மீதி இருப்பவற்றையும் பாதுகாத்துக் கொள்ள தவறி வருகிறோம். இருக்கும் ஆலயங்களை பரிசீலனை செய்து ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் ஒளிந்துள்ள பல சிறந்த விஞ்ஞான ரகசியங்களை நாம் அறிய முடியும்.

‘நம் முன்னோர்கள் விஞ்ஞான அறிவு அற்றவர்கள்’ என்ற பாவனை நம்மில் திடமாக ஊன்றி விட்ட காரணத்தால்தான் இத்தனை அலட்சியமாக நம் ஆலயங்களை மதிப்பிடுகிறோம். இது வருந்தத் தக்க விஷயம். இத்தனையையும் மீறி, நம் பார்வைக்குப் புலப்படாத தெய்வீக சக்தி, திவ்ய மகிமை நம் ஆலயங்களின் பின்னணியில் இருக்கிறது என்பதில் எந்த ஐயமும் இல்லை.

பூமியை க்ஷேத்திரமாக​வும்​, நீரை தீர்த்தமாக​வும் ​கண்டறிந்த தபோ பலம் மிக்க முனிவர்கள் நிறைந்த திவ்ய பாரத கலாசாரத்தின் வாரிசுகளான நாம் அதன் புனிதத்தையும், சம்பிரதாய மரியாதையையும் மீறாமல் அந்த விஞ்ஞானத்தை ஆய்ந்தறியும் முயற்சி செய்தால் உலகமே வியக்கும் அளவு அற்புதங்களை வெளிப்படுத்த முடியும்.
​​
– தெலுங்கில் எழுதியவர்- ​பிரம்மஸ்ரீ ​சாமவேதம் ஷண்முக சர்மா​
– ஞான ஆலயம் -ஆகஸ்ட், 2016ல் பிரசுரமானது.​
​ ​

Print Friendly, PDF & Email

1 thought on “கோவிலுக்குப் பக்கத்தில் குளம் வெட்டியது ஏன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *