கதையாசிரியர்:
கதை வகை: மொழிபெயர்ப்பு
கதைத்தொகுப்பு: காதல்
கதைப்பதிவு: December 19, 2023
பார்வையிட்டோர்: 9,685 
 
 

(1999ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஜெர்மன் மூலம்: பால் வான் ஹெய்ஸே 

பால் வான் ஹெய்ஸே 

பால் வான் ஹெய்ஸே ஜெர்மனியில் 1830இல் பிறந்தார். 1914இல் இறந்தார். 

எண்பத்தி நாலு வருஷங்களில், பத்துப் பன்னிரண்டு நாவல்கள், அறுபது நாடகங்கள், நூற்றுக்கு மேற்பட்ட காவியங்கள், நூற்றைம்பது கதைகள் எழுதியிருக்கிறார். 

இப்ஸன், ஸோலா இவர்களின் பாணி சர்வஜனரஞ்சகமாகிக்கொண்டு வந்த சமயத்தில், இவர் அவர்களை எதிர்த்து நின்றார் அவர்களுடைய இலக்கிய பாணிகளைக் கிண்டல் செய்து பல நூல்கள் இயற்றியிருக்கிறார். 

மெர்லின், ஸ்வர்க்கத்தில் என்கிற நாவல்களும், மேரியா வான் மாக்டெலா என்ற நாடகமும், காளி என்ற கதையும், அவருடைய எழுத்திலேயே மிகவும் சிறந்தவையாகக் கொண்டாடப்படுகின்றன. 

அவருடைய கதைகளிலே கதை அம்சம் மிகவும் முக்கியமானது; “குழந்தைகள் கதை என்று ஒப்புக்கொண்டால் தான் கதையாகுமே தவிர பெரியவர்கள் மனம்போனபடி எழுதுவதெல்லாம் கதையாகாது” என்று அவரே ஒருதரம் சொல்லியிருக்கிறார். சிற்பி உளிகொண்டு உருவத்தை வெட்டி எடுப்பதுபோல, கலை எனும் உளி கொண்டு பல கதைகளை உருவாக்கியிருக்கிறார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் உயிர் வாழ்ந்த ஐரோப்பியக் கதாசிரியர்களிலே சிறந்தவர்களில் ஒருவர் அவர் என்பதில் சந்தேகமில்லை. 

1910இல் அவருக்கு நோபல் இலக்கியப் பரிசு வழங்கப்பட்டது. ‘மதிப்பிடற்கரிய கலைத்திறனுக்காகவும், இவர் நூல்களிலே பொதிந்து கிடக்கும் மேன்மையான லக்ஷியங்களை உத்தேசித்தும் இப்பரிசு பால் ஹெய்ஸேக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. தவிரவும் இவர் நாடகங்கள் கவிதை நிறைந்தவையாக இருக்கின்றன. இவர் கதைகளின் கலை உயர்வு வார்த்தைகளில் அகப்படாது. இவருடைய இலக்கிய சேவை ஒப்புயர்வற்றது’ என்ற நோபல் பதக்கத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. 

இந்தக் கதை 

பால் ஹெய்ஸேயினுடைய சிறந்த கதை இதுதான் என்பது பற்றி அபிப்பிராய பேதத்திற்கு இடமே கிடையாது. 

மேல் நாட்டவர்களின் காதல் கதைகளிலே சிறந்ததொன்றாக இது போற்றப்படுகிறது. ஷேக்ஸ்பியரின் ‘ரோமியோவும் ஜூலியட்டும்’ என்னும் நாடகத்துடன் இக்கதை பல விமர்சகர்களால் ஒப்பிடப்பட்டிருக்கிறது. 

இதை எழுதும்போது பால் ஹெய்ஸேக்கு வயது இருபத்து மூன்று தான். அவருடைய முதல் கதைத் தொகுப்பிலே (1855இல் வெளிவந்தது) இக்கதை இடம்பெற்றிருக்கிறது. 

தான் இதை எழுத நேர்ந்தது பற்றி ஆசிரியர் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார். ஹெய்ஸேயும், இன்னொரு இலக்கிய நண்பரும் இத்தாலியில் ஸொரெண்டோவில் தங் கியிருக்கும்போது, ஒவ்வொரு இரவும் ஒரு கதையோ, காவியமோ, நாடகமோ எழுதுவது என்று சபதம் செய்துகொண்டார் களாம் முதல் நாள் இரவு நண்பர் ஒரு காவியம் எழுதி வாசித்தார். ஹெய்ஸே ‘காளி’ என்ற இக் கதையை எழுதி வாசித்தாராம். 

ஸொரெண்டோவில் காலடி எடுத்து வைத்தபோது அதன் தெருவில் ஹெய்ஸே ஒரு பெண்ணைப் பார்த்தாராம் அவள் உருவமும், முகபாவமும் அவரை மிகவும் கவர்ந்தன. அவளைக் கதாநாயகியாக வைத்தே இக்கதையை எழுதினார் ஹெய்ஸே. 

கதை இத்தாலியில் நடக்கிறது, எழுதியவர் ஒரு ஜெர்மானியன். இதன் தலைப்பு (மூலத்தில்) பிரெஞ்சுப் பாஷையில் அமைந்திருந்தது. ஆனால் இது வெளிவந்தபோ தும் அதற்கப்புறமும் கதைகளில் ஈடுபாடுள்ளவர்களின் உள்ளங்களை எல்லாம் கவர்ந்துவிட்டது. 

உலகத்திலுள்ள பாஷைகள் எல்லாவற்றிலுமே இக்கதை மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழில் கூட இதற்கு முன்னர் பல உருவங்களில் வெளிவந்திருக்கிறது. 

காளி 

பொழுது இன்னும் புலரவில்லை. வெஸுவியல் மலைச் சிகரத்தில் படிந்திருந்த பனிப்படலம் இன்னும் அகலவில்லை. கிழக்கே மட்டும் வெளிரிட்டிருந்ததே தவிர வானத்திலே சிறிதும் வெளிச்சமில்லை. கடற்கரை ஓரமாக இருந்த சிறு நகரங்களெல்லாம் இருளில் ஆழ்ந் துகிடந்தன. 

கடல் நிச்சலமாக இருந்தது. 

ஸொரெண்டோ மலையின் அடிவாரத்தில், கடற்கரை யிலுள்ள சிறு கிராமத்தில் வசிப்பவர்களில் அநேகமாக எல்லோருமே செம்படவர்கள் தான். ஏழைகள். அவர் கள் வழக்கம்போலவே இன்றும் அதிகாலையில் எழுந்து தங்கள் தங்கள் அலுவல்களைச் சுறுசுறுப்பாகப் பார்த் துக் கொண்டிருந்தார்கள். மீன் பிடிக்கப் போவதற்காகச் சிலர் தங்கள் படகுகளில் பாய்விரித்து துடுப்புகள் கொண்டுவந்து போட்டுத் தயார் செய்து கொண்டிருந்தார்கள். இரவு வீசிய வலைகளில் அகப்பட்டுக்கொண்ட மீன்களைக் கரை சேர்ப்பதில் முனைந்திருந்தனர் பலர். ஆண்களுக்கு உதவியாகப் பெண்களும் தங்களால் ஆனதைச் செய்து கொண்டிருந்தார்கள். குழந்தைகளும் கிழவிகளும் வீடுகளில் தங்கிவிட்டார்கள். ஆனால் அவர்களும் சும்மா இல்லை, நூல் நூற்றுக்கொண்டிருந்தார்கள். 

இப்படி நூல் நூற்றபடியே தன் வீட்டு மொட்டை மாடியில் நின்ற ஒரு கிழவி தன் பக்கத்தில் நின்றுகொண்டிருந்த பத்து வயது நிரம்பாத ஒரு சிறுமியைப் பார்த்துச் சொன்னாள்: 

“ஷலா! அதோ பார், நமது மதகுரு, அண்டோனியோவின் படகில் ஏறி உட்காருகிறார் பார். தெரிகிறதா? அவர் காப்ரித் தீவுக்குப் போகக் கிளம்பியிருக்கிறார்போலும். பாவம்! அவர் கண்களில் தூக்கம் நிறைந்திருக்கிறது.” 

அதேசமயம் அண்டோனியோவின் படகில் உட்கார்ந்த மதகுரு நிமிர்ந்து கிழவியின் பக்கம் பார்த்தார். கிழவியின் வீடு கடற்கரையை அடுத்தே, இருபது கஜ தூரத்துக்குள்ளேயே இருந்தது. கிழவி தாழ்ந்து வணங்கித் தன் கைகளை ஆட்டி மதகுருவுக்குத் தன் வணக்கத்தைத் தெரிவித்தாள். கடற்கரையில் வேலை செய்துகொண்டிருந்த மற்றவர்களும் தங்கள் வேலைகளை அப்படியே போட்டுவிட்டு மதகுருவுக்கு வணக் கத்தைத் தெரிவித்தார்கள்; அண்டோனியோவின் பட கண்டை வந்து அதைச் சூழ்ந்து கொண்டு நின்றார்கள். அவர்களுடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு மதகுரு மௌனமாகவே தலையை அசைத்தார். 

உருவத்தில் அவர் மிகவும் சிறியவர். அவர் முகத்திலே அன்பு கனிந்த ஒரு பாவம் குடிகொண்டிருந்தது. அவ ரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவர் மிகவும் நல்லவரென்பது வெளிப்படையாகத் தெரிந்தது. 

மாடியில் நின்ற சிறுமி கிழவியைக் கேட்டாள். “ஏன் பாட்டி, இவர் எதற்காகக் காப்ரித்தீவுக்குப் போகிறார்? அங்கே வேறு யாரும் மதகுருவே கிடையாதா? நம்முடைய மதகுருவை அவர்கள் இரவல் வாங்கிக் கொள்ளுகிறார்களா?” 

“அடி அசடே!” என்றாள் கிழவி. அவள் மேலும் சொன்னாள்: “காப்ரித்தீவில் மதகுருமார் அநேகம்பேர் இருக்கிறார்கள். மிகவும் அழகான பெரிய மாதாகோயில் ஒன்றுகூட அங்கிருக்கிறது. புனிதமான மகான் ஒருவரும் இருக்கிறார். இதெல்லாம் நம் சிறிய ஊரில் ஏது? ஆனால் ஒருகாலத்தில் நம்மூரில் வசித்த ஒரு சீமாட்டி இப்போது அங்கே வசிக்கிறாள். இங்கு இருக்கும்போது அவள் வெகு காலம் நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டுக்கொண்டிருந்தாள். ‘ஆச்சு, போச்சு’ என்று அவள் படுத்த படுக்கையாகக் கிடந்தாள். அப்பொழுதெல்லாம் அவசியமான கடைசிச் சடங்குகளை நடத்தத் தயாராக நமது மதகுரு அவள் வீட்டிற்கு அடிக்கடி போய் வந்துகொண்டிருந்தார். கன்னித்தாயின் தயவு, அந்தச் சீமாட்டி ஒருவழியாக அந்தப் பூட்டுக்குத் தப்பிப் பிழைத் துக் கொண்டாள். ஆனால் அவளுக்கு அதற்குமேல் நம்மூர் ஒத்துக்கொள்ளவில்லை. காப்ரித்தீவில் வசிப்பது சௌகரியமாக இருக்குமென்று டாக்டர்கள் சொன்னார் களாம். ஊரை விட்டுப் போகும்போது அந்தச் சீமாட்டி நமது மாதா கோயிலுக்கு நிறையப் பணம் கொடுத்து விட்டுப் போனாள். அதோடு நில்லாமல் நமது மதகுரு அடிக்கடி அங்குவந்து தன்னைக் கண்டு ‘பாவமன்னிப் புத் தரவேண்டும்’ என்றும் வேண்டிக் கொண்டாளாம். நமது மதகுரு சம்மதிக்கும் வரையில் அவள் இங்கிருந்து கிளம்பவே மறுத்துவிட்டாள். இவரிடம் அவளுக்கு அவ்வளவு பக்தி. இவரும் லேசுப்பட்டவரில்லை. பெரிய இடத்தைச் சேர்ந்தவர்கள் பலர் இவரிடம் அபாரமான மதிப்பு வைத்திருக்கிறார்கள். பெரிய பெரிய பதவிகளுக் கெல்லாம் உண்மையிலேயே லாயக்கானவராம் இவர். என்னவோ நமது அதிர்ஷ்டம் இவர் நம்மிடையே இருக்கிறார். மேரித்தாய் இவரைக் காப்பாற்றுவாளாக!” என்றாள் கிழவி. 

மதகுருவை நோக்கி மறுபடியும் ஒருதரம் வணங்கினாள். 

*** 

அண்டோனியோவின் படகு கிளம்பத் தயாராக இருந் தது. வெஸ்வியஸ் மலைச்சிகரத்தின் உச்சியில் ஊசலாடிய பனிப் படலத்தைப் பார்த்தவாறே மதகுரு பட கோட்டியைக் கேட்டார்: ‘இன்று மழை வருமோ? காற்று பலமாக அடிக்குமோ?” அவர் குரலில் கவலை தேங்கியிருந்தது. 

வாலிபப் படகோட்டி பதில் அளித்தான். “இன்று அதெல் லாம் இராது. வெஸ்வியஸ் மலைமேல் ஊசலாடுவது மேகமல்ல, பனிதான். இன்னும் சூரியன் உதிக்க வில்லை. சூரியன் உதித்து இரண்டு வினாடிகளுக்கெல்லாம் அந்தப் பனி மறைந்துவிடும்.” 

“சரி கிளம்பு, வெய்யில் ஏறு முன் போய்ச் சேர்ந்துவிடலாம் என்றார் மதகுரு. 

கையில் நீண்ட துடுப்புடன் படகு தள்ளத் தயாராக நின்றான அண்டோனியோ. கரையிலிருந்த கழியில் கட்டியிருந்த படகின் கயிற்றை அவிழ்த்து விட்டுத் தள்ள வும் தள்ளினான். ஆனால் தூரத்தில் பார்த்தபடியே திடீ ரென்று நிறுத்திவிட்டான். படகில் நின்றுகொண்டிருந்த அவனுக்கு மலைச்சரிவில் உள்ள பாதையில் ஒரு மெல்லிய நெட்டையான உருவம் ஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருப்பது தெரிந்தது. “இரு இரு, நானும் வருகிறேன்” என்று சொல்வதுபோல அந்த உருவம் தன் கைக் குட்டையை உயரத்தூக்கி ஆட்டிக்கொண்டே வந்தது. 

வந்தது யார் என்று அண்டோனியோவுக்குத் தெரி யும். அவள் கையில் ஒரு சிறிய மூட்டை இருந்தது. அவள் ஆடைகள் அவளுடைய ஏழ்மையான ஸ்தி தியையும், தாழ்மையான குலத்தையும் அறிவுறுத்தின. அவள் தலைமயிர் இருண்டு அடர்ந்து வளர்ந்திருந்தது; ராணியின் தலையில் மகுடம் வைத்ததுபோல அவள் தலைமயிரைத் தூக்கி எடுத்து மேலே முடிந்திருந்தாள். தலையை ஒரு பக்கமாகச் சாய்த்துக் கொண்டு நிமிர்ந்து விறைப்பாக நடந்து வந்தாள் அவள். அவள் நடையி லும் பார்வையிலும் அலக்ஷியமும், ஒரு பயமற்ற சுபாவமும் தெரிந்தன. 

படகிலிருந்த மதகுரு படகோட்டியைக் கேட்டார். “ஏன்? யாருக்காகக் காத்திருக்கிறாய்? கிளம்பேன்.” 

“படகில் இன்னொருவரையும் ஏற்றிக்கொள்கிறேன் தந்தையே தங்கள் அனுமதியுடன்” என்றான் அண்டோனியோ. 

அந்தப் பெண்ணும் காப்ரித்தீவுக்குத்தான் போகவேண் டும். அவளையும் ஏற்றிக்கொள்வதனால் படகின் வேகம் சிறிதும் குறைந்து விடாது. சின்னஞ்சிறு பெண் அவள் இன்னும் பதினெட்டு வயது நிறையாத சிறுமி” என்றான். 

படகோட்டி இப்படிச் சொல்லிக்கொண்டிருக்கையிலே பாதையில் ஒருமூலை திரும்பிக் கடற்கரையை அடைந்துவிட்டாள் அச்சிறுமி. 

மதகுருவும் அவளைப் பார்த்தார். “ஓ! லாரெல்லாவா?” என்றார். “அவளுக்குக் காப்ரித்தீவில் என்ன வேலை?” என்று படகோட்டியைக் கேட்டார். 

தனக்குத் தெரியாது என்று சொல்பவன்போலத் தலையை அசைத்தான் அண்டோனியோ; தோள்களை ஒருதரம் உலுக்கினான். படகைத் தள்ளுவதற்குத் தயாராக நின்றான். 

சிறுமி லாரெல்லா நிமிர்ந்த தலையுடனும் நிலைத்த பார்வையுடனும் வேகமாக வந்து படகண்டை நின்றாள். 

அண்டையில் நின்ற சில வாலிபச் செம்படவர்களும் பட கோட்டிகளும் கேலியாக “வா, காளி, வா-அடங்காப்பிடாரி காளி வா,” என்று உரக்கக் கூவி அவளை வரவேற்றார்கள். மதகுருவும் அங்கிருந்ததால் அவர்கள் வேறு ஒன்றும் அதிகமாகச் சொல்லவில்லை. இல்லாவிட்டால் நிறையவே சொல்லியிருப்பார்கள் போலத்தான் இருந்தது. இம்மாதிரிக் கேலிக்கும் பரிகாசத்துக்கும் பழக்கப்பட்டவள் போல லாரெல்லா அந்த வாலிபர்களை அலக்ஷியமாக ஒரு பார்வை பார்த்தாள். அந்தப் பார்வையால் வாலிபர்களின் விஷம வார்த்தைகள் சற்றே அதிகரித்தனவே தவிரக் குறையவில்லை. மதகுரு குறுக்கிட்டுச் சொன்னார். “வா, லாரெல்லா. சௌக்கியந்தானே? நீயும் எங்களுடன் காப்ரித்தீவுக்குத்தான் வரப்போகிறாயா?” 

“வரலாமானால் வருகிறன், தந்தையே!” என்றாள் லாரெல்லா. 

“இதோ அண்டோனியோவைக் கேள். படகு அவனுடையது. நமக்கெல்லாம் அதிகாரி கடவுள். அதேபோல் இந்தப் படகுக்கு அதிகாரி அவன்தான்” என்றார் மதகுரு.. 

“இதோ அரைப்பணம் இருக்கிறது – கூலி. இது போதுமானால் நானும் படகில் வருகிறேன்” என்றாள் லாரெல்லா. ஆனால் அவள் நிமிர்ந்து படகோட்டியை நேருக்கு நேர் நோக்கவில்லை. 

“என்னைவிட உனக்குத்தான் இந்த அரைப்பணம் அதிக அவசியமானது” என்று முணுமுணுத்தான் வாலிபப் படகோட்டி. அவனும் நிமிந்து லாரெல்லாவை நேருக்கு நேர் பார்க்கவில்லை. 

படகில் ஆரஞ்சுப்பழக் கூடைகள் நிறைய இருந்தன. காப்ரித் தீவில் ஆரஞ்சுப்பழங்களுக்குக் கிராக்கி – அங்கிருந்தவர்களுக்குப் போதுமான பழங்கள் அங்கு உற்பத்தியாவதில்லை. ஆகவே அங்கு நல்ல விலைபோகும். அண்டோனியோ படகில் ஆரஞ்சுப் பழங்கள் நிறையக் கொண்டுபோய் காப்ரித்தீவில் விற்றுவிட்டுத் திரும்புவது வழக்கம். 

பழக்கூடைகள் சிலவற்றை நகர்த்திவிட்டு லாரெல்லா உட்கார இடம் பண்ணினான் அண்டோனியோ. 

ஆனால் சிறுமி முகத்தைச் சுளித்துக்கொண்டு கரையிலேயே நின்றாள். தன்னுடைய இருண்டு ஆழ்ந்த கண்களில் ஒளிவீச அவள் சொன்னாள். “கூலி கொடுக்காமல் படகில் வர நான் விரும்பவில்லை.” 

மதகுரு நிமிர்ந்து அவளைப் பார்த்தார். “வா குழந்தாய், படகில் ஏறி உட்கார்” என்றார். “அண்டோனியோ நல்ல பையன். உன்னைப்போன்ற ஏழைகளிடமும் கூலி வாங்கிப் பணம் சேர்க்க அவன் விரும்பவில்லை. நியாயந்தான் அது. வா வா, ஏறி உட்கார்”. கை கொடுத்து அவளைப் படகுக் குள் ஏற்றிவிட்டார் மதகுரு. அவர் மேலும் சொன்னார்: 

“இப்படி என் பக்கத்திலேயே உட்கார். இதோ பார், கீழே உனக்கு உறுத்தப்போகிறதே என்று அவன் சட்டையை எடுத்து விரித்திருக்கிறான். நல்ல பையன் அவன்.” 

சிறிது நேரம் மௌனமாக இருந்தார் மதகுரு. லாரெல்லா ஒரு வார்த்தையும் பேசாமல் படகோட்டியினுடைய சட்டையை ஒரு புறமாக ஒதுக்கி வைத்துவிட்டு, மதகுருவுக்கு அருகிலே உட்கார்ந்துகொண்டாள். அவள் ஒதுக்கி வைத்த சட்டையை வாலிபனும் எடுத்துக்கொள்ளவில்லை. அது அப்படியே கிடந்தது. அவன் வாய் ஏதோ முணுமுணுத்தது. துடுப்பெடுத்து படகைப் பலமாகத் தள்ளினான். அமைதியாக இருந்த கடலைக் கிழித்துக்கொண்டு சென்றது படகு. 

மதகுரு சொன்னார்: “வாலிபத்தில் எல்லோருமே இப்படித் தான். என்னைப்போன்ற கிழவர்கள் பத்துப் பேருக்குச் செய்வதைப்போல நூறு மடங்கு அதிகமாகவே செய்வான், ஒரு வாலிபன் பதினெட்டு வயது நிரம்பாத சிறுமிக்காக! அதற்காக நீ என் மன்னிப்பைக் கோர வேண்டியதில்லை அண்டோனியோ! கடவுள் செயல் அது! மனிதர்களை அப்படித்தான் படைத்திருகிறார் கடவுள்.” 

கீழ் வானத்திலே சூரியன் உதயமாகிவிட்டது. கடலில் அதன் பொன்னிறமான இளங்கிரணங்கள் வீழ்ந்து தகதகத்துக் கொண்டிருந்தன. “அந்தச் சிறிய மூட்டையில் என்ன வைத்திருக்கிறாய்?” என்று மதகுரு லாரெல்லாவை விசாரித்தார். “பட்டு, நூல், ஒரு துண்டு ரொட்டி இவ்வளவுதான் தந்தையே” என்றாள் லாரெல்லா. “ரிப்பன்கள் நெய்யும் ஒரு கிழவியிடம் பட்டை விற்றுவிடுவேன். நூலை இன்னொருத்தியிடம் விற்றுவிடுவேன். ரொட்டித் துண்டு மத்தியான்னச் சாப்பாட்டுக்கு” என்றாள். 

“பட்டும், நூலும் நீயே திரித்தது தானே!”

“ஆமாம்.” 

“நீயே ரிப்பன்கள் பின்னவும், நூல் நூற்கவும் கற்றுக் கொண்டாயல்லவா?” என்று கேட்டார் மதகுரு. “கற்றுக்கொண்டேன். ஆனால் அம்மாவுக்கு முன்னைக்கிப் போது உடம்பு மிகவும் கேவலமாகியிருக்கிறது. நான் அதிக நேரம் வீட்டில் அவளைத் தனியாக விட்டுவிட்டு வெளியே தங்கிவிட முடியாது. சொந்தமாகத் தறிவைத் துக் கொள்வது எங்களுக்கு முடியாத காரியம். நாங்கள் பணத்துக்குப் போவதெங்கே?” என்றாள் லாரெல்லா. 

“உன் தாயாருக்கு உடம்பு அதிகமாகவா இருக்கிறது? ஈஸ்டர் சமயத்தில் நான் உங்களைப் பார்க்க வந்திருந்தபோது அவள் சற்றுத் தேறியிருந்தாளே! நடமாடிக் கொண்டு கூட இருந்தாளே!” என்று கேட்டார் மதகுரு. 

லாரெல்லா சொன்னாள்: “என் அம்மாவுக்கு இப்போது உடம்பு முன்னைவிடக் கேவலமாகத்தான் இருக்கிறது. வழக்கமாகவே வசந்த காலத்தில் அதிகமாக உடம்பைப் படுத்தும். இந்த வசந்தத்தில் மிகவும் அதிகமாகிவிட்டது. இவ்வருஷம் மழை காற்று எல்லாம் சற்று அதிகமாகவே இருந்ததல்லவா; அதனாலேயே அவள் உடம்பு இன் னும் பலஹீனமாகிவிட்டது. இப்பொழுதெல்லாம் அவள் படுத்த படுக்கைதான்.” 

மதகுரு ஆறுதலாகச்சொன்னார். “குழந்தாய்! சதா ஓயாமல் பிரார்த்தனை செய். கன்னிமேரி காப்பாற்றுவாள். கவலைப்படாதே! கன்னியைப் பிரார்த்தி. நீ நல்லவளாகவும், சுறுசுறுப்பாகவும், கெட்ட வழிகளில் சொல்லாமலும் இருந்தாயானால் உன் பிரார்த்தனைக்கு மேரி நிச்சயம் செவி சாய்ப்பாள்!”.

மதகுரு சிறிது நேரம் மௌனமாக இருந்தார். பின்னர் சொன்னார். “சற்றுமுன் நீ கடற்கரையில் வந்தபோது செம்படவர்கள் உன்னை அடங்காப்பிடாரி, காளி என்றெல்லாம் கேலி செய்தார்களே, ஏன் அது? தாழ்மையுடனும் பணிவுடனும் இருக்கவேண்டிய கிறிஸ்தவச் சிறுமிக்கு ஏற்ற பெயர்கள் அல்லவே அவை…” 

சிறுமியினுடைய முகம் இருண்டது. அவள் கண்கள் கோப ஜ்வாலையைக் கக்கின. அவள் சொன்னாள்: “அவர்கள் எப்போதுமே என்னை இப்படித்தான் கேலி செய்கிறார்கள். ஏனென்றால் அவர்களுக்குத் தெரிந்த மற்ற பெண்களைப் போல அவர்களுடன் நான் கூடிக் குலாவுவதில்லை, ஆடுவதில்லை, பாடுவதும் இல்லை. வம்பளப்பதும் இல்லை. என் பக்கம் வராமல், என்னைத் தொந்தரவு செய்யாமல் இருக்கக் கூடாதா அவர்கள்? அதுதான் கிடையாது. நான் அவர்களுக்கு என்ன கெடுதி செய்தேன்?” 

மதகுரு சொன்னார்: “அதுசரி. ஆனால் நீயும் அவர்களிடம் பணிவாகவும் மரியாதையாகவும் பேசலாம், நடந்து கொள்ளலாம். இளவயசிலேயே வாழ்க்கையின் கஷ்டங்களில் அடிபடாதவர்கள் ஆடட்டும், பாடட்டும், குதிக்கட்டும். நீ அதெல்லாம் செய்யவேண்டாம். ஆனால் எவ்வளவுதான் கஷ்டப்பட்டாலும் யாருடனும் பணிவாகவும் பிரியமாகவும் இருப்பதும் பேசுவதும் நடந்து கொள்வதும் தான் அழகு.” 

மதகுருவையே பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்த லாரெல்லா கண்களைத் தாழ்த்திக்கொண்டாள். நெற்றி சுருங்க முகத்தைச் சுளித்துக்கொண்டாள். கண்களை மூடிக்கொள்ள விரும்புகிறவளைப்போல இமைகளைத் தாழ்த்தினாள். 

சிறிதுநேரம் படகில் யாருமே பேசவில்லை. 

அண்டோனியோ உட்கார்ந்து துடுப்பெடுத்துப் பட கைக் காப்ரித்தீவின் கரையை நோக்கி வேகமாகத் தள்ளிக்கொண்டு சென்றான். பனி, மேகம் இவற்றிலிருந்து விடுபட்ட சூரியன், கண்களைப் பறிக்கும் ஜோதியுடன், மலைத்தொடருக்கு மேலே வந்துவிட்டது வெஸுவியஸ் மலையின் சிகரத்தில் மட்டுமே இன்னும் இரண்டு சிறுமேகங்கள் ஊசலாடிக் கொண்டிருந் தன. ஸொரெண்டோ மலைச்சரிவிலும் சமவெளியிலும் இருந்த வீடுகள், இருண்ட ஆரஞ்சுப்பழத் தோட்டங்களால் சூழப்பட்டு, வெண்மையாகத் தூரத்தில் தெரிந்தன. 

திடீரென்று மதகுரு கேட்டார்: “ஓவியன் ஒருவன் வந் தானே லாரெல்லா, நேபிள்ஸ் நகரத்திலிருந்து. அவ னைப் பற்றி பின்னர் ஏதாவது தெரிந்ததா?” 

மௌனமாகவே லாரெல்லா தலையை அசைத்தாள். 

“அவன் உன் உருவத்தைச் சித்திரமாகத் தீட்ட விரும்பி னானே அதற்கு நீ ஏன் சம்மதிக்கவில்லை?’ 

சிறுமி சிறிதுநேரம் தயங்கினாள். பிறகு சொன்னாள்: “என் உருவப்படம் அவனுக்கு எதற்காக? ஓவியம் எழுத என்னை விட அதிக அழகுள்ளவர்கள் அகப்படமாட் டார்களா அவனுக்கு? தவிரவும் என் படத்தை வைத்துக்கொண்டு அவன் என்ன விரும்பினானோ. யார் சொல்ல முடியும். ஏதாவது மந்திரம் தந்திரம் பில்லி சூனியம் செய்து எனக்குத் தீங்கிழைக்க விரும்பினானோ என்னவோ என்று என் அம்மா பயந்தாள். அப்படத்தைக் கொண்டு என்னை அவன் கொல்ல முயன்றாலும் முயலலாம் என்று என் அம்மா சொன்னாள்” என்றாள். 

“இந்த மாதிரி அசட்டுக் கொள்கைகளில் எல்லாம் நீ நம்பிக்கை வைக்கலாமா, லாரெல்லா. அதெல்லாம் பாபகரமான சிந்தனைகள். இப்படி நம்புவது கிறிஸ்தவர்களாகிய நமக்கு அடுக்காது” என்று உற்சாகமாகச் சொன்னார் மதகுரு. “நாம் என்றும் கடவுளின் பார்வையில் உள்ளவர்கள். அவர் நம்மைக் காப்பாற்றுவார்; அவர் அனும தியின்றி உன் தலைமயிரில் ஒன்றுகூட உதிராது. உரு வப்படத்தை வைத்துக் கொண்டு ஒரு மனிதன்-அவன் தந்திரத்திலும் மந்திரத்திலும், எவ்வளவுதான் வல்லவனானாலும் சரி! கடவுளின் சித்தத்திற்கு எதிராக உனக்குத் தீங்கிழைத்துவிட முடியுமா? இவை குருட்டு நம்பிக்கைகள். தவிரவும் அந்த ஓவியன், உன்னை. மணந்து கொள்ள விரும்பினான், அல்லவா?” 

லாரெல்லா பதில் சொல்லவில்லை. 

“நீ ஏன் அவனைக் கல்யாணம் செய்துகொள்ள மறுத்தாய்? உனக்கு அவனை பிடிக்கவில்லையா? அவன் அழகானவன் என்றும், மிகவும் நாணயஸ்தன் என்றும் ஜனங்கள் என்னிடம் சொன்னார்கள். அப்படிப்பட்டவனைக் கல்யாணம் செய்து கொள்ள நீ மறுத்தது தவறு அல்லவா? நீ அவனைக் கல்யாணம் செய்து கொண்டிருந்தால் உன்னையும் உன் தாயாரையும் அவன் நல்ல நிலையில் வைத்திருப்பான். நீ எவ்வளவு நூற்றாலும் நெய்தாலும், போதுமான அளவு சம்பாதிக்க உன்னால் முடியுமா?” 

லாரெல்லா கோபமாக, ஆத்திரம் ததும்பிய குரலில் சொன்னாள்: “நாங்கள் பரம ஏழைகள். அம்மாவோ நோயாளி. நான் அவனைக் கல்யாணம் செய்துகொண்டிருந்தால் எங்களால் அவனுக்குத் தொந்தரவுதான் ஏற்பட்டிருக்குமே தவிர, சௌகரியம் ஒன்றும் இருந்திராது. அவனுக்குச் சுமையாகப் போய் உட்கார்ந்துகொள்ள நான் தயாராக இல்லை. இன்னும் ஒன்று, அம்மா திரியான மனிதனை மணந்துகொண்டு சீமாட்டியாக வாழ்க்கை நடத்துவதற்கு நான் எவ்விதத்திலும் லாயக்கானவள் அல்ல. என்னைக் கல்யாணம் செய்து கொண்டபின் அவன் உறவினர்களும் நண்பர்களும் வந்தால் நானும், என்னைக் கல்யாணம் செய்துகொண்ட காரணத்தினால் அவனும் வெட்கித் தலைகுனிய நேர்ந்திருக்கும்.” 

“நீ அர்த்தமில்லாமல் பேசுகிறாய்” என்று அவளைக் கடிந்து கொண்டார் மதகுரு. “நீ இப்படியெல்லாம் பேசுவதற்கு ஆதாரமே கிடையாது. நான் கேள்விபட்ட வரையில் அவன் மிகவும் நல்லவன், இரக்கமான சுபாவம் படைத்தவன் என்று தான் தெரிகிறது. நீ அவனை ஏற்றுக் கொண்டிருந்தாயானால் உனக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்துவிட்டு அவன் இங்கேயே தங்கிவிடக் கூடத் தயாராக இருந்தானாம் – அம்மாதிரி வேறு ஒருவன் கிடைப்பது கஷ்டம். உனக்கென்றே கடவுள் அவனைப் படைத்து அனுப்பியிருந்தார் என்று தோன்றிற்று.” 

மெதுவான குரலில், ஆனால் பிடிவாதமும் அழுத்தமும் தொனிக்க, லாரெல்லா சொன்னாள். “எனக்கு ஒருவனும் தேவையில்லை. நான் கல்யாணமே செய்து கொள்ளப் போவதில்லை.” 

“இது என்ன சபதமா? நீ கன்னிமாடத்தில் சேர்ந்து ஆயுள் பூராவும் கன்னியாகவே கழித்துவிடப் போகிறாயா?” என்று கேட்டார் மதகுரு. 

உதடுகளை இறுக மூடிக்கொண்டு தலையை அசைத் தாள் லாரெல்லா. 

மதகுரு சொன்னார்: “உன்னைக் காளி என்றும், பிடிவாதக்காரி என்றும், அடங்காப்பிடாரி என்றும் சொல்கிறார்கள், கேலியாக. இப்படியெல்லாம் கேலி செய் வது சரியல்லதான் என்றாலும், நீ பிடிவாதக்காரிதான், அடங்காப்பிடாரிதான். காளிதான் என்பது தெரிகிறது. முரட்டுப்பெண்தான், சந்தேகம் இல்லை. இப்பிரபஞ்சத்திலேயே தனியாக விடப்பட்ட ஓர் அனாதைப் பெண் நீ. உனக்கு இவ்வளவு பிடிவாதம் கூடாது. இதை நீ யோசித்துப் பார்த்ததுண்டா? அனாதைச் சிறுமி நீ. நோயால் வருந்தும் உன் தாய் உன் அசட்டுப் பிடிவாதத்தினால் இன்னும் அதிகமாக வருந்துவாள், கஷ்டப்படுவாள் என்று நீ யோசித்ததுண்டா? நாணயஸ்தன். நல்லவன் ஒருவன் முன்வந்து நியாயமான முறையில் உனக்கு உதவி செய்கிறேன் என்றால், நீ அந்த உதவியை ஏற்க மறுக்கலாமா? அது நியாயமான காரியமா? நீ அவனை மணக்க மறுத்ததற்குச் சரியான காரணங்களுண்டா? நான் கேட்டதற்குப்பதில் சொல்லாரெல்லா – சொல்லு” என்று சற்றுக் கோபமாகவே கேட்டார். 

மனசில்லாமல் மெதுவாகத் தாழ்ந்த குரலில் பதில் அளித்தாள் லாரெல்லா. “தக்க காரணமிருக்கிறது. ஆனால் அதைச் சொல்வதற்கில்லை.” 

“சொல்வதற்கில்லையா? என்னிடம் கூடவா சொல்வ தற்கில்லை. நீ உன் குற்றங்களை ஒப்புக்கொண்டு பாவ மன்னிப்புக் கோருவது என்னிடம் தானே? நான் உன் மதகுரு அல்லவா? என்னைவிட உனக்கு உற்ற நண்பன் வேறு யார்தான் இருக்கமுடியும்? சொல், உன் நன்மையையே நான் விரும்புவேன் என்று உனக்கு நம்பிக்கையில்லையா?” என்றார் மதகுரு. 

அது சரி என்று சொல்பவள் போலத் தலையை அசைத்தாள் லாரெல்லா. 

மதகுரு சொன்னார்: “குழந்தாய், உன் மனசில் உள்ளதை விண்டு என்னிடம் சொல். பயப்படாதே. நீ சொல்லும் காரணம் சரியான காரணமாக இருந்தால் நானும் சரி என்று நிச்சயமாக ஒப்புக்கொள்வேன். அதுபற்றிச் சந்தேகமில்லை. நீ சிறுமி, குழந்தை. வயசு அதிகமாகாதவள். உலக அனுபவம் அதிகம் இல்லாதவள். உன் அறிவு இன்னும் முதிரவில்லை. எதைப்பற்றியும் சரியானபடி சிந்தித்து முடிவு கட்டப் போதிய அறிவோ தெம்போ இன்னமும் ஏற்பட்டிராது உனக்கு. ஏதாவது ஓர் அசட்டுத்தனமான காரணத்தை முன்னிட்டு இப்பொழுது ஒரு காரியத்தைச் செய்துவிடுவாய். பின்னர் அதற்காக நீ வருந்த நேரிடும். உன் காரணத்தைச் சொல். அது சரியானதுதானா என்று நான் தீர்மானித்துச் சொல்கிறேன்.” 

துடுப்புப் போட்டுப் படகைத் தள்ளியபடியே எதிரே உட்கார்ந்திருந்த வாலிபப் படகோட்டியின் பக்கம் வெட்கத்துடன் தன் கண்களை ஒரு தரம் ஓட்டினாள் லாரெல்லா. படகோட்டி யோவெனில் காதுகளையும் கண்களையும் மறைக்கும்படியாகத் தன் குல்லாயை இழுத்துப் போட் டுக் கொண்டு ஏதோ தன் சொந்த யோசனைகளில் ஆழ்ந்திருப்பவன் போல உட்கார்ந்திருந்தான். தலையைத் திருப்பிக் கொண்டு கடலில் எங்கேயோ தூரத்தில் பார்த்துக்கொண்டிருந்தான். 

லாரெல்லா படகோட்டியின் பக்கம் கண்களை ஓட் டியதை மதகுரு கவனித்தார். “என் காதில் மட்டும் விழும்படியாக மெதுவாகவே சொல்” என்று சொல்லுகிறவர் போல, தலையைக் குனிந்து அவள் பக்கம் செவி சாய்த்து நகர்ந்து உட்கார்ந்து கொண்டார். 

லாரெல்லாவின் கண்கள் இரண்டும் ஒளிவீசின. “என் தகப்பனாரை உங்களுக்குத் தெரியுமா?” என்று தாழ்ந்த குரலில் கேட்டாள். 

மதகுரு சொன்னார் “உன் தகப்பனாரையா. குழந்தாய்? எனக்குத் தெரியுமே. ஏன்? அவன் இறக்கும் போது உனக்கு வயசு பத்துக்கூட நிரம்பியிராது. அவன் ஆத்மா சாந்தி பெறட்டும்! உன்னுடைய இப்பொழுதைய பிடிவாதத்துக்கும் அவனுக்கும் என்ன சம்பந்தம்?” 

“தந்தையே! உங்களுக்கு என் தகப்பனாரைச் சரிவரத் தெரியாது. என் தாய் நோயாளியாகி இப்பொழுது படுத்த படுக்கையாகக் கிடந்து அவஸ்தைப் படுவதற்கெல்லாம் என் தகப்பனார் தான் காரணம் என்று உங்களுக்குத் தெரியாது!” 

“உன் தந்தையா காரணம். அது எப்படி?” 

“என் தாயாரை என் தகப்பனார் மிகவும் துன்புறுத்தினார். அவளை அடித்தார், உதைத்தார். காலின்கீழ் தள்ளி மிதித்தார். ஆவேசம் வந்தவர்போல அவர் வீடு திரும்பி என் தாயை அடித்து உதைத்து இம்சித்த இரவுகளெல்லாம் எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கின்றன. நான் அப்பொழுது சிறுகுழந்தைதான் எனினும், எனக்கு இன்னும் அந்தக் காட்சிகள் ஞாபகம் இருக்கின்றன. என் தாயார் ஒரு வார்த்தையும் சொல்லமாட்டாள். வாயைத் திறக்கவே மாட்டாள். எதிர் வார்த்தை ஒன்றுகூடப் பேசாமல் அவர் சொன்னபடி எல்லாம் செய்வாள். அப்படியும் என் தந்தையின் கோபம் தீராது. அவளைப் போட்டு வதைப்பார். நான் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்குவதுபோலப் பாசாங்கு பண்ணிக் கொண்டு படுத்துக்கிடப்பேன். ஆனால் இரவு முழுவதும் எனக்குத் தூக்கம் வராது. என் மனம் உடைந்துவிடும் போலிருக்கும் அப்பொழுதெல்லாம். சப்தம் செய்யாமல் அழுது கொண்டே கிடப்பேன். அடியும் உதையும் கொஞ்சம் நேரம் ஆனபிறகு திடீரென்று என் தகப்பனாரின் ஆவேசம் மாறிவிடும். அடித்து உதைத் துக் கீழே தள்ளிய என் தாயாரை பிடித்துத் தூக்கி நிறுத்திவைத்து அணைத்துக்கொள்வார்; ஓயாமல் முத்தமிடுவார். மூச்சுத்திணறுகிறதே என்று அலறுவாள் என் தாயார். இதைப்பற்றி நான் யாரிடமும் ஒன்றும் சொல்லவே கூடாது என்று எனக்கு உத்தரவிட்டிருக்கிறாள். ஆனால், மாறிமாறிக் கிடைத்த அடியும் கொஞ்சுதலும் அவளுக்குத் தாங்கவில்லை. அவள் மனசும் உடலும் உடைந்து விட்டன. இவ்வளவு வருஷங்களுக்குப் பிறகும் இன்னமும் அவள் மனசும் உடலும் அந்த நாட்களின் பலன்களை அனுபவித்துக் கொண்டுதானிருக் கின்றன. அவள் தேற வில்லை. கடவுள் தான் அவளைக் காப்பாற்ற வேண்டும்! அவள் சீக்கிரமே இறந்து விடுவாளானால் அவளைக் கொலை செய்தது யார் என்று எனக்குத் தெரியும்.” 

இதையெல்லாம் லாரெல்லா சொல்லிக் கொண்டிருக்கையில் மதகுரு தன் குருவித்தலையை இப்படியும் அப்படியும் அசைத்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார். சிறுமி சொன்னதில் எவ்வளவு தூரம் நியாயம் இருந்தது என்று தீர்மானிப்பது அவருக்கே சற்றுச் சிரமமாக இருந்தது. சற்றுநேரம் யோசித்துவிட்டு அவர் சொன்னார்: “உன் தாயார் தன் கணவனை மன்னித்துவிட்டாள். அதேபோல நீயும் அவரை மன்னித்து விடு. இம்மாதிரித் துன்பமூட்டும் சிந்தனைகளையும் அடியோடு மறந்து விடுவதுதான் நல்லது. அவற்றை மனசில் வைத்து உன்னி உன்னி வருந்துவது, ஆற்றமாட்டாது தவிப்பது. நல்லதல்ல. நல்லகாலம் உனக்கு இனிப் பிறக்கும். எப்பொழுதும் கெடுதலாகவே இருந்துவிடுமா என்ன?” 

சிறுமியின் உடல் நடுங்கிற்று. அவள் குரலும் நடுங்கிற்று. அவள் சொன்னாள்: “என்னால் அதையெல்லாம் மறக்க இயலவில்லையே! நான் என்ன செய்ய?” சிறிது நேரம் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தாள். பின்னர் சொன்னாள்: “இதை மட்டும் என்னால் என் ஆயுள் உள்ளவரையில் மறக்கமுடியாது என்றுதான் தோன்றுகிறது. தந்தையே! நான் கல்யாணமே செய்துகொள்ளாமல் இருந்துவிடுவது என்று தீர்மானம் கொண்டிருப்பதற்குக் காரணமே இதுதான் – அடிப்படையான காரணம் இது தான். நான் ஒரு புருஷனை மணந்துகொண்டு அவனுக்கு அடிமைப்பட்டேனானால் அவன் என்னை அடிப்பான், உதைப்பான், அடுத்த வினாடியே அணைத்தும் கொள்வான். இதையெல்லாம் சகித்துக்கொண்டிருக்க வேண்டும். என்னால் ஆகாத காரியம் இது. அடியையும், அணைப்பையும் – இரண்டையுமே நான் விரும்ப வில்லை. இப்பொழுது என்னை அடிக்கவோ, அணைக்கவோ யாராவது நெருங்கினால் என்னைக் காப்பாற்றிக் கொள்ளப் போதிய உடல் தெம்பும், மனத்தெம்பும் இருக்கிறது எனக்கு. என் தாயாருக்கு அது இல்லை. கல்யாணம் செய்து கொண்டு கட்ட பிறகு எனக்கும் இருக்காது என்றுதான் தோன்றுகிறது. தன் தாய் என் தகப்பனை முழுமனசுடனும் நேசித்தாள். ஆகவே தான் அவர் அடிப்பதையும் அணைப்பதையும் பொறுத்துக் கொண்டிருந்தாள். அதன் பலனை இப்பொழுது அனுபவிக்கிறாள். இம்மாதிரி என்னால் ஒருவனை நேசிக்க முடியாது – ஒருவனுக்காக நான் கஷ்டமோ, சுகமோ படத் தயாராக இல்லை. அப்படி என்றும் இருக்கமாட்டேன். இது நிச்சயம்.” 

மதகுரு சொன்னார்: “நீ என்ன, பச்சைக் குழந்தை, உலகமே தெரியாமல் பேசுகிறாய்? எல்லா ஆண்களுமே உன் தகப்பனாரைப் போலவேதான் இருப்பார்களா என்ன? எல்லோரும் ஆவேசம் கொண்டு தன் மனைவிமாரைத் துன்புறுத்துகிறவர்கள்தானா என்ன? அதெல்லாம் ஒன்றுமில்லை. ஆண்களில் நல்லவர்களையே நீ கண்டதில்லையா? எவ்வளவு பேர் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சுகமாகவும், சௌக்கியமாகவும், ஆனந்தமாகவும் குடும்பம் நடத்தவில்லை? எவ்வளவோ குடும்பங்களில் அன்னியோன்னியமும், ஆசையும், அன்பும் ததும்புகின்றனவே – நீ இப்படிப்பட்ட குடும்பங்களையே கண்டதில்லையா?” 

“வெளியே பார்ப்பதற்கு எல்லாம் சரியாக இருப்பது போலத் தான் இருக்கும்” என்று தன் அழகிய தலையை ஆட்டிக் கொண்டே பதிலளித்தாள் லாரெல்லா. “எங்கள் வீட்டில் இவ்வளவும் நடந்தது வெளியே யாருக்குத் தெரியும்? என்னையும் வாய் திறக்காதே என்றாள்! அவளும் வாய்திறந்து இதை வெளிவிடமாட்டாள்! அதைவிடத் தன் உயிர்போவதே மேல் என்று அவள் எண்ணுவாள். ஏனென்றால் அவளுக்குத் தன் கணவனிடம் அவ்வளவு அன்பும் காதலும் இருந்தது. துன்பப்படும்போது உதவி வேண்டிக் கூவ மறுப்பதுதானா காதல்? எதிர்த்து நிற்கச் சக்தியற்று அவதிப்படுவதுதானா காதல்? விரோதிளையும்விட அதிகமாக என்னைப் பாடுபடுத்துகிறவனையா நான் என் காதலன் என்று கொண்டாட வேண்டும்? இதுதான் காதல் என்றால் எனக்குக் காதல் தேவையில்லை-தேவையேயில்லை!” 

மதகுரு தன் குரலைச் சற்றே உயர்த்தி சிறிது வேகத்துட னேயே பதில் அளித்தார். “நீ என்னவோ குழந்தை மாதிரிப் பேசுகிறாய். நீ சொல்வது என்னவென்று உனக்கே சரியாகப் புரியவில்லை என்று நான் நினைக்கிறேன். காலம் வரும். உன் இதயத்திலும் காதல் ஒளி வீசும் அன்பு கனியும். காதல், தானாகவே வந்து உன் உள்ளத்தில் குடிபுகுந்துவிடும். நீ அறியாமலே, உன்னைக் கேட்காமலே வந்து குடியேறிவிடும். உன் அபிப்பிராயங்களை யெல்லாம் உதறித் தள்ளிவிட்டு நீயும் காதல் பித்துப் பிடித்துத் திரிவாய்!” 

சிறிதுநேரம் சும்மா இருந்தார். லாரெல்லாவும் அந்த மௌனத்தைக் கலைக்கவில்லை. மதகுரு கடைசியில் கேட்டார்: “அந்த ஓவியன் வந்தானே! அவனும் உன் தகப்பனாரைப்போலவேதான் இருந்திருப்பான் என்று எண்ணுகிறாயா நீ?” 

“என் தாயை அடித்துக் கீழே தள்ளிவிட்டு அணைக்க வரும்போது என் தகப்பனாரின் கண்களும் முகபாவமும் எப்படியிருந்தனவோ அதே போலத்தான் இருந்தன அந்த ஓவியனின் கண்களும், முகாபாவமும், என்னுடன் பேசும்போது. அந்த முகபாவம் என் மனசில் அழியாமல் பதிந்து கிடக்கிறது. அந்தக் கண்களையும் முகபாவத்தையும் என் தகப்பனார் செத்துப் பல வருஷங்களுக்குப் பின் மறுபடியும் கண்டதும் உடனேயே நான் தெரிந்துகொண்டேன் – இவன் எப்படிப்பட்டவன் என்று அறிந்து கொண்டேன். என் உடல் சிலிர்த்தது, என் உள்ளம் நடுங்கிற்று. இது விஷயம்பற்றி இதற்குமேல் ஒரு வார்த்தை கூடப்பேச வந்துவிட்டாள் அவள். மதகுருவும் மௌனத்தில் ஆழ்ந்தார். சிறுமிக்கு புத்தி புகட்டுவதற்காக என்னென்ன சொல்லலாம் என்று அவர் வெகுநே ரம் யோசித்தார். நிறையவும் சொல்லியிருப்பார். ஆனால் படகில் தாங்கள் தனியாக இல்லையே, படகோட்டியா கிய மூன்றாவது மனிதனும் இருந்தானே என்று சும்மா இருந்துவிட்டார். லாரெல்லாவின் பேச்சில் கடைசி வாக்கியங்கள் படகோட்டியின் காதிலும் விழுந்தனபோலும். அவன் பத்து நிமிஷமாக அமைதியிழந்து, ஏதோ சொல்ல விரும்பியவன் போல இருந்தான். ஆனால் அவனும் ஒன்றும் சொல்லவில்லை; அந்த மௌனத் தைக் கலைக்கவில்லை. 

இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு படகு காப்ரித்தீவின் துறையை அடைந்தது. கரை ஓரத்தில் ஆழம் அதிகம் இல்லாததால் படகைக் கரையிலிருந்து பத்தடி தூரத்தி லேயே நிறுத்திவிட வேண்டியிருந்தது. படகை நிறுத்தி, அதற்கென்று கடலில் ஊன்றியிருந்த கம்பத்தில் கட்டி விட்டு, அண்டோனியோ ஜலத்தில் இறங்கினான். மதகுருவை தன் கைகளில் தூக்கிக் கொண்டுபோய்க் கரை சேர்த்தான் – இல்லாவிட்டால் அவர் ஆடைகளும், பாதரக்ஷைகளும் நனைந்து போய்விடும். அண்டோனியா திரும்பி வரும் வரையில் லாரெல்லா படகில் காத்திருக்கவில்லை. தன் ஆடையைத் தூக்கிப்பிடித்துக் கொண்டு, ஒரு கையில் மூட்டையையும், இன்னொரு கையில் கால் கட்டைகளையும் எடுத்துக் கொண்டு, ஜலத்தில் இறங்கி, ஜலம் சுற்றிலும் தெறிக்க நாலடி எடுத்து வைத்துக் கரை வந்து சேர்ந்தாள். 

கரையில் மதகுரு சொன்னார். “அண்டோனியோ, நான் திரும்புவதற்காக நீ காத்திருக்க வேண்டியதில்லை. நான் திரும்ப அதிக நேரம் பிடிக்கும். இன்றே திரும்புகிறேனோ, அல்லது நாளைக்குத்தான் திரும்பமுடியுமோ, அதுவும் நிச்சயமில்லை. லாரெல்லா, நீ வீடு திரும்பியதும் உன் தாயாரை நான் விசாரித்ததாகச் சொல்லு. நான் இந்த வாரமே வந்து அவளை பார்ப்பதாகச் சொன்னேன் என்றும் சொல்லு. இருட்டு முன் நீ வீடு திரும்பி விடுவதாகத்தானே உத்தேசம்?” 

“திரும்ப முடியுமானால் திரும்பி விடுவதாகத்தான் உத்தேசம்” என்று தன் ஆடையைச் சரிப்படுத்திக் கொள்வதில் ஈடுபட்டவளாக லாரெல்லா பதிலளித்தாள். 

“கூடிய சீக்கிரமே நான் திரும்பி விடவேண்டும்” என்றான் அண்டோனியோ. இதை அவன் ஓர் அலக்ஷியத்துடன் சொல்ல முயன்றான் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது. ஆனால் அவன் முயற்சி பலிக்கவில்லை என்பதும் தெளிவாகவே தெரிந்தது. 

“நான் நண்பகல் – ஆவேமேரியா-வரையில் படகுடன் இங்கு காத்திருப்பேன், நீ அதற்குள் வந்தாலும் சரி, வராவிட்டாலும் சரி – இரண்டும் எனக்கு ஒன்றுதான்.” 

மதகுரு குறுக்கிட்டார்: “நீ வரத்தான் வேண்டும், லாரெல்லா. சீக்கிரமே திரும்பி விடு. உன் தாயாரை இரவில் தனியாக இருக்க விடுவது தவறு. சீக்கிரமே திரும்பி விடு. நீ எவ்வளவு தூரம் போக வேண்டும் இங்கே?” என்று கேட்டார். 

“அனாகாப்ரியில் உள்ள ஒரு திராக்ஷைத் தோட்டம் வரையில் போகவேண்டும்” என்று பதிலளித்தாள் சிறுமி. 

“நான் எதிர்ப்புறமாகப் போகவேண்டும் – காப்ரிக்கு கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் -நீ போய் ஜல்தியே திரும்பிவிடு. உன்னையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக, என் மகனே! என்றார் மதகுரு. 

மதகுருவின் கையில் குனிந்து முத்தமிட்டுவிட்டு லாரெல்லா “போய்வரேன்” என்று ஒரு தரம் சொன்னாள். மதகுருவுக்கும் அண்டோனியோவுக்குமாகச் சேர்த்து அவள் ஒரே ஒரு தரம் தான் “போய்வரேன்” என்றாள் – அவர்கள் அதைத் தங்களுக்கிடையே எப்படி வேண்டுமானாலும் பகிர்ந்துகொள்ளட்டும் என்று அவள் எண்ணினாள் போலும். அதில் சிறு பகுதியைக் கூடத் தன் பங்காக ஏற்றுக் கொள்ளவில்லை. அண்டோனியோ. அவன் கவனமெல்லாம் மதகுருவி டம் விடை பெற்றுக்கொள்வதிலேயே இருந்தது. குல் லாயை எடுத்துவிட்டு அவருக்குத் தாழ்ந்து வணங்கினான். லாரெல்லா நின்ற பக்கம்கூட அவன் திரும்பிப் பார்க்கவில்லை. ஆனால் லாரெல்லாவும் மதகுருவும் பிரிந்து தங்கள் தங்கள் வழி சென்றபின், படகோட்டியின் கண்கள் தாமாகவே லாரெல்லா சென்ற பாதையில் சென்றன. அவள் வலது பக்கம் திரும்பி செங்குத்தான குன்றின்மேல் ஏறிச்சென்ற மலைப் பாதையிலே நடந்துகொண்டிருந்தாள். சூரிய வெப்பம் சற்றுக் கடுமையாகவே இருந்தது. நேர் எதிரில் இருந்த சூரியனை மறைக்க அவள் தன் ஒருகை விரல்களால் கண்ணுக்கு நிழல் மூடி செய்துகொண்டு நடந்தாள். அவளையே பார்த்துக் கொண்டு கடற்கரையில் நின்றான் அண்டோனியோ. 

பாதையில் ஒரு மூலை திரும்பி மறையுமுன் லாரெல்லா திரும்பிப் பார்த்தாள். காலடியிலே, குன்றிற்கடியிலே வெண் மணற்பரப்புப் பரந்து கிடந்தது. எதிரே சற்றுத் தூரத்தில் குன்றுகளும் கற்பாறைகளும் நிமிர்ந்து நின்றன. கடல் அதி அற்புதமான நீலவர்ணம் காட்டிற்று – அதிலே அலைகள் ஜோதிச் சரிகை இழைத்துக்கொண்டிருந்தன. பார்க்க வேண்டிய காக்ஷிதான்? மலைப்பாதையில் ஏறி வந்த சிரமம் சற்றுத் தீரட்டுமே என்று நிற்பவள் போல லாரெல்லா நின்றாள். ஆனால் கடற்கரையிலே நின்று அண்டோனியோ தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை அவள் கண்டாள். இருவருடைய கண்களும் சந்தித்தன. 

ஏதோ தவறு செய்வதில் அகப்பட்டுக் கொண்டு விட்டவர்கள் போல இருவரும் திடுக்கிட்டார்கள். லாரெல்லாவின் முகம் இருண்டு சிவந்தது. திரும்பித் தன் பாதையைப் பின்பற்றி அண்டோனியோ கண்ணில் படாமல் மறைந்துவிட்டாள். சூரியன் உச்சிதாண்டி மேற்கு நோக்கி இறங்க ஆரம்பித்து ஒரு மணி நேரத்துக்கு மேலாகிவிட்டது. ஆனால் அண்டோனியா காத்திருந்தான்-இரண்டு மணி நேரமாக. செம்படவர்களின் ‘டாவர்ணு’க்கு வெளியே கிடந்த விசுபலகையில் உட் கார்ந்து காத்திருந்தான். அவன் வேலைகளெல்லாம் முடிந்து இரண்டு மணி நேரமாகி விட்டது! ‘ஆவே மேரியா’ முடிந்தும் ஒரு மணி நேரமாகி விட்டது. ஊர் திரும்ப வேண்டியதுதான் பாக்கி. ஆனாலும் அவன் லாரெல்லாவுக்காகக் காத்திருப்பதாக அவன் உத்தேசிக்கவில்லை. ஆனால்….. பின் யாருக்காக, எதற்காகக் காத்திருந்தான்? 

அவன் மனசில் என்னதான் இருந்ததோ-அவனுக்கே சரியாகத் தெரியவில்லை. ஏதோ அர்த்தமற்ற ஆழ்ந்த ஒரு கவலை அவன் மனசைப் பாதித்தது. இரண்டு வினாடிக்கொருதரம் குதித்தெழுந்து போய் வெய்யிலில் நின்று நாலா பக்கமும் அண்ணாந்து கவலைதேங்கிய முகத்துடன் பார்த்தான். திடீரென்று வானத்திலே மேகங்கள் தோன்றிவிடும், புயல் அடிக்க ஆரம்பித்தாலும் ஆரம்பித்துவிடும் என்று அவன் தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். இப்பொழுது என்னவோ வெய்யில் பளிச்சென்று தான் இருந்தது. ஆனால் வானமும் கடலும் இப்பொழுது காட்டியவர்ணம் திருப்திகரமானதாக அண்டோனியோவுக்குப் படவில்லை. 

டாவர்ணின் சொந்தக்காரி வெளியேவந்து அவனுடன் பேச்சுக் கொடுத்தாள். தன் கவலையை அவளிடம் சொன்னான். “அண்டோனியோ சில நாளுக்கு முன் புயல் அடித்ததே. அன்று கடலும் வானமும் இதேமாதிரித்தான் வர்ணம் காட்டின” என்றான். “அந்தப் புயலில் மாட்டிக்கொண்டு ஓர் ஆங்கிலேயனும் அவன் குடும்பமும் கடலில் முழுக இருந்து தெய்வாதீனமாகத் தப்பினார்கள் – உனக்கு ஞாபகமிருக்கிறதா அந்த சம்பவம்?” என்று டாவர்ண்காரியைக் கேட்டான். 

அவளுக்கு ஞாபகம் இல்லை. 

அண்டோனியோ மேலும் சொன்னான்: “நான் கிளம்பவும் நாழியாகி, இரவில் இன்று புயலும் அடித்தால், என்னைப் பற்றி ஞாபகம் வைத்துக்கொள். என் ஆத்மா சாந்தி அடையக் கடவுளைப் பிரார்த்தி” என்றான். 

சிறிதுநேரம் டாவர்ணின் சொந்தக்காரி பேசாமல் இருந்தாள். பின்னர் கேட்டாள்: “உங்கள் ஊரில் இந்த சீஸனுக்குப் பணக்கார ஜனங்கள் ரொம்பப் பேர் வந்திருக்கிறார்களா?” 

“இன்னும் இல்லை. இப்பொழுதுதான் வர ஆரம்பித்திருக்கிறார்கள். முந்திய வருஷங்களைப்போல இல்லை. இவ் வருஷத்திய வஸந்தம்” என்று பதிலளித்தான் அண்டோனியோ. 

“வஸந்தமே இவ்வருஷம் சற்றுத் தாமதமாகத்தான் வந்தது இல்லையா?” என்றாள் டாவர்ண்காரி. – “காப்ரியில் நாங்கள் சம்பாதித்ததைவிடச் சற்று அதிகமாகவே சம்பாதித் திருப்பாய் நீ” என்றாள் அவள். 

“நான் சாப்பாட்டுக்கு என் படகை மட்டும் நம்பியிருப் பதில்லை. அப்படியிருந்தால் வாரத்தில் இரண்டு நாள் கூட ‘மகாராணி’ சாப்பிடப் போதிய சம்பாத்தியம் கிடைக்காது எனக்கு. நான் படகு தள்ளுவதைத் தவிர வேறு வேலைகளும் செய்கிறேன். பெரிய மனிதர்களுக்காக இரண்டு மூன்று தரம் கடிதம் கொண்டுபோய் நேபிள்ஸ் நகரில் கொடுத்துவிட்டு வந்தேன். ஒருதரம் யாரோ ஒரு சீமான் நடுக்கடலில் மீன் பிடிக்க விரும்பினார் அவரை என் படகில் ஏற்றிச் சென்றேன்,” என்றான் அண்டோனியா. “தவிரவும் பணக்கார சித்தப்பா ஒருவர் இருக்கிறார் எனக்கு. அவருக்கு ஏராளமான ஆரஞ்சுப் பழத்தோட்டங்கள் இருக்கின்றன. அவர் சொல்வார் என்னிடம், ‘அண்டோனியோ! நான் இருக்கும் வரையில் நீ கஷ்டப்பட வேண்டியதில்லை. சாகும்போதும் நான் உன்னை மறந்துவிடமாட்டேன்’ என்று. ஏதோ கடவுள் தயவு மாரிக்காலம் ஒரு வழியாகக் கழிந்துவிட்டது வஸந்தம் வந்திருக்கிறதே! ஏதாவது சம்பாதித்து விடலாம் என்றுதான் எண்ணுகிறேன்” என்றான். 

“உன் பணக்காரச் சித்தப்பாவுக்கு குழந்தை குட்டிகள் ஏதாவது உண்டா?” என்று விசாரித்தாள் டாவர்னகாரி. 

“கிடையாது. அவர் கல்யாணமே செய்துகொள்ள வில்லை. வெகுநாள் வெளி ஊரிலேயே சுற்றித் திரிந்துகொண்டிருந்தவர் அவர். நிறையப் பணம் சேர்த்துக் கொண்டு ஊர். திரும்பினார். மீன் பிடிக்க ஒரு பெரிய தொழிற்சாலை மாதிரி அமைத்து அதற்கு என்னைத் தலைவனாகப் போடுவதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறார்” என்றான் அண்டோனியோ பெருமையுடன். 

“அப்படியிருக்கையில் உனக்கென்ன கவலை அண்டோனியோ?” என்றாள் டாவர்ண்காரி. 

ஆனால் வாலிபப் படகோட்டி தலையை ஆட்டினான். “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கவலையைத் தந்திருக்கிறார் கடவுள்!” என்றான். 

“உள்ளே வந்து உட்கார். இன்னொரு பாட்டில் மது கொண்டுவரேன், சாப்பிடு” என்று உபசரித்தாள் டாவர்ண்காரி. 

தலையை ஆட்டினான் அண்டோனியோ. “உங்கள் மது உண்மையிலேயே மிகவும் காரமானது. இரண்டொரு கோப்பைகள் தான் சாப்பிட்டேன். அதற்குள்ளேயே என் தலை கிறுகிறுக்கிறது. ஒரு பாட்டில் வேண்டாம். ஒரு சிறு கோப்பை கொடு” என்று சொல்லிவிட்டு, மறுபடியும் நாற்புறமும் கண்களை ஓட்டிவிட்டு, விசுபலகையில் போய் உட்கார்ந்தாள். 

“பணக்காரச் சித்தப்பாவின் பணத்தில் இன்னும் கொஞ்சம் அதிகமாகவே நீ மதுவுக்காகச் செலவழிக்கலாமே!” என்றாள் டாவர்ண்காரி. “எங்கள் மது போதை தருவதில்லை; ரத்தத்தை அதிகமாக உஷ்ணமூட்டுவது மில்லை. இந்தா….” என்று அவன் முன் ஒரு கோப்பை மது கொண்டுவந்து வைத்தாள். பின்னர் வாசல் பக்கம் திரும்பிப் பார்த்துவிட்டுச் சொன்னாள்! “இதோ என் புருஷனும் வந்துவிட்டான். அவனுடன் உட்கார்ந்து கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிரேன்.” 

வலைகளைக் கட்டித் தோளில் போட்டுக்கொண்டு டாவர்ண்காரியின் கணவன் உள்ளே வந்தான். அவன் செம்படவன். எல்லாச் செம்படவர்களையும்போல அவனும் தலையில் சிவப்புக்குல்லா அணிந்திருந்தான். மதகுரு பார்க்க வந்திருந்த சீமாட்டிக்கென்று ஓர் அற்புதமான மீனைப் பிடித்துக் கொண்டுபோய்க் கொடுத்துவிட்டுத் திரும்பியிருந்தான் அவன். அண்டோனியோவைக் கண்டவுடன் அவன் “வா வா!” என்று உற்சாகமாகக் கூறியபடியே அவன் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டான். எல்லா விஷயங்களைப் பற்றியும் சரமாரியாகக் கேள்விகள் கேட்க ஆரம்பித்தான். 

பேச்சு சுவாரசியத்தில் முதல் பாட்டில் மது வெகு சீக்கிரமே காலியாகிவிட்டது. டாவர்ண்காரி இரண்டாவது பாட்டிலைக் கொண்டுவந்து அவர்கள் முன்வைக்கும் போது வெளியே மணலில் யாரோ நடந்து அணுகும் சப்தம் கேட்டது. அண்டோனியோ திரும்பிப் பார்த்தான். இடது பக்கம் பாதை வழியாக லாரெல்லா வந்துகொண்டிருப்பது தெரிந்தது. அவள் டாவர்ணை அணுகி அதற்குள்ளிருந்தவர்களைப் பார்த்து ஒரு தரம் தலையை அசைத்தாள். அண்டோனியோவை நோக்கினாள். 

ஆனால் டாவர்ணுக்கு வெளியிலேயே தயங்கி நின்று விட்டாள். 

அண்டோனியோ குதித்து எழுந்தான். டாவர்ண்காரியையும் அவளுடைய புருஷனையும் நோக்கி அவன் சொன்னான். 

“நான் கிளம்பவேண்டும். அவள் இன்று காலை ஸொரெண்டோவிலிருந்து மதகுருவுடன் வந்த பெண். இரவு இருட்டி விடுமுன் அவள் வீடுபோய் சேரவேண்டும். வீட்டில் அவள் தாய் சீக்காளி.” 

“அதுசரி. ஆனால் இருட்டுவதற்குத்தான் இன்னும் எவ்வளவோ பொழுது இருக்கிறதே!” என்றான் செம்பட வன்.”இன்னொரு கோப்பை மது அருந்திவிட்டுப் போகலாம்! அவளையும் கூப்பிடு. அவளும் அருந்தட்டும், இன்னொரு கோப்பை கொண்டு வா” என்று செம்படவன் தன் மனைவிக்கு உத்தரவிட்டான். 

“வந்தனம் ஐயா, ஆனால் எனக்கு மது வேண்டாம்” என்றாள் லாரெல்லா வெளியேயிருந்தபடியே. 

“மூன்று கோப்பைகளிலும் மதுவை ஊற்று. வேண்டாம் என்கிறாளே தவிர வற்புறுத்தினால் தானே சாப்பிடுவாள். சாப்பிடு, வா!” என்று லாரெல்லாவை அழைத்தான் செம்படவன். 

அண்டோனியோ குறுக்கிட்டான்: “வேண்டாம், அவள் பிடிவாதக்காரி. மனசில்லாவிட்டால் எதுவும் செய்ய உடன்பட மாட்டாள். அவளை அசைக்க யாராலும் முடியாது” என்றான். 

இப்படிச் சொல்லிவிட்டு அவன் டாவர்ண்காரியிடமும் அவள் புருஷனிடம் அவசரமாகவே விடைபெற்றுக் கொண்டு கிளம்பினான். லாரெல்லாவிடம் அவன் ஒன்றும் பேசவில்லை; அவளைத் தாண்டி நேரே தன் படகு நின்ற இடத்திற்குச் சென்றான். 

லாரெல்லா டாவர்ண்காரிக்கும் அவள் புருஷனுக்கும் தாழ்ந்து வணங்கிவிட்டுக் கிளம்பினாள். மெதுவாக தயங்கித் தயங்கிப் படகை நோக்கி அடிமேல் அடி எடுத்துவைத்து நடந்தாள். 

அவள் தயக்கத்துக்குக் காரணமிருந்தது. காலதாமதம் செய்தால் ஸொரெண்டோ போகவேண்டியவர்கள் வேறு யாராவது வந்து சேர்ந்துகொள்ள மாட்டார்களா என்று அவளுக்கு ஆசை. தனியாக அண்டோனியோவுடன் அவன் படகில் செல்ல அவளுக்கு இஷ்டமில்லை. நாலாபக்கமும் பார்த்தாள். கடற்கரையில் அவர்கள் இருவரையும் தவிர வேறு யாரையும் காணவில்லை. செம்படவர்கள் அவரவர்கள் வீட்டில் உறங்கிக் கொண்டிருப்பார்கள் அல்லது மீன்பிடிக்கக் கடலில் நெடுந்தூரம் சென்றிருப்பார்கள். சில ஸ்திரீகளும் குழந்தைகளும் தங்கள் தங்கள் வீட்டு வாசலிலே உட்கார்ந்து நூல் நூற்றுக் கொண்டிருந்தார்கள் அல்லது தூங்கி வழிந்து கொண்டிருந்தார்கள். மாலைப்பொழுதில் வெய்யில் தணியும் வரையில் யாருமே வீட்டிலிருந்து வெளிக்கிளம்பமாட்டார்கள். கூட வருவதற்கு வேறு யாரையும் காணவில்லை. இப்படிச் சுற்று முற்றும் பார்த்துக்கொண்டே லாரெல்லா அதிக நேரம் கடத்த முடியவில்லை. படகு தள்ளத் தயாராக அண்டோனியோ நின்று கொண்டிருந்தான். 

மெல்ல மெல்ல அடிமேல் அடிவைத்து ஊர்ந்து சென்ற லாரெல்லா கடைசியில் ஜலக்கரையை அடைந்தே விட்டாள். படகிலிருந்த அண்டோனியோ ஜலத்தில் குதித்து இரண்டெட்டில் கரை சேர்ந்து, லாரெல்லாவைக் குழந்தைபோல கைகளில் அணைத்துத் தூக்கிக்கொண்டுபோய் ஈரம் படாமல் படகில் சேர்த்தான். அடுத்த வினாடியே துடுப்பெடுத்துத் தள்ளவும் ஆரம்பித்துவிட்டான். நடுக்கடலை நோக்கிச் சென்றது படகு. 

படகில் ஓர் ஓரத்தில் உட்கார்ந்து துடுப்பால் தள்ளிக்கொண்டிருந்தான் அண்டோனியோ. எதிர் மூலையில் முகத்தைத் திருப்பிக்கொண்டு உட்கார்ந்தாள் லாரெல்லா. அவளுடைய முகத்தில் ஒருபாதி மட்டுமே படகோட்டியின் கண்ணில் பட்டது. எப்போதையும் விட அதிகமாகவே பிடிவாதமானதோர் பாவத்தைக் காட்டியது அவள் முகம். ஏதோ கோரம் கொண்டவள் போல ‘உர்’ரென்று முகத்தை வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவளுடைய உதடுகள் இறுக மூடி இருந்தன. காற்றிலே அவள் தலைமுடிச்சிலிருந்து விடுபட்ட சில மயிர்கள் பறந்துகொண்டிருந்தன. தலைமுடியின் நிழல் அவன் நெற்றிலும் கண்ணிலும் விழுந்தது. அவள் கண்ணிமைகள் மட்டும் அடிக்கடி இமைத்தன. மற்றபடி அசைவின்றியே அவள் உட்கார்ந்திருந்தாள். 

உண்மையிலேயே வெய்யில் உக்கிரமாகத்தான் இருந்தது. லாரெல்லாவுக்குத் தாங்க முடியவில்லை. தன் கைக்குட்டையை விரித்துத் தலைமேல் போட்டுக் கொண்டாள். தன்னுடைய சிறுமூட்டையை எடுத்து அதை அவிழ்த்து அதிலிருந்த ஒரு சிறு ரொட்டித் துண்டை எடுத்துச் சாப்பிட ஆரம்பித்தாள். அவள் ஸொரெண்டோவை விட்டுக் கிளம்பியது முதல் இது வரையில் ஒன்றுமே சாப்பிடவில்லை. 

அண்டோனியோ அவள் ரொட்டித் துண்டைக் கடித்துக் கடித்து விழுங்குவதைப் பார்த்துக்கொண்டே சிறிது நேரம் உட்கார்ந்திருந்தான். பின்னர் எழுந்து பழக்கூடைகளிலிருந்து இரண்டொரு ஆரஞ்சுப் பழங்களை எடுத்தான் – அநேகமாக எல்லாக் கூடைகளும் காலியாகவே இருந்தன. “உன் ரொட்டியுடன் இதையும் சாப்பிடு, லாரெல்லா” என்றான் அண்டோனியோ. “இதை நான் உனக்காக வைத்திருந்தேன் என்று நினைத்துக் கொள்ளாதே; கூடையிலிருந்து அவை நழுவிக் கீழே விழுந்துகிடந்தன. மற்ற பழங்களையெல்லாம் விற்றுவிட்டுத் திரும்பிய பின் தான் இவை படகில் கிடப்பதைப் பார்த்தேன்” என்றான். 

“அவற்றை நீயே சாப்பிடு. எனக்கு என் ரொட்டியே போதும்” என்றாள் லாரெல்லா. “இந்த வெய்யிலுக்கு இவை மிகவும் ருசியாக இருக்கும் களைப்பு தீரும். அவ்வளவு தூரம் வெய்யிலில் நடந்து களைத்துப் போயிருப்பாயே நீ!” என்றான் அண்டோனியோ. 

“நான் போன இடத்தில் குளிர்ந்த ஜலம் கிடைத்தது. என் களைப்பு தீர்ந்துவிட்டது” என்று சுருக்கமாகப் பதிலளித்தாள் லாரெல்லா. 

“சரி, உன் இஷ்டம்” என்றான் அண்டோனியோ. பழங்களைத் திரும்பவும் கூடைக்குள் போட்டுவிட்டான். மறுபடியும் இருவருக்குமிடையே மௌனம் நிலவியது. 

கடல் கண்ணாடி போல் இருந்தது; சலனமில்லாமலே இருந்தது. படகு மிதந்து அலைகளில் மோதும்போது கூடச் சப்தம் கேட்கவில்லை. வெண்மையான கடற்பறவைகள் ஆகாயத்திலே சந்தடி செய்யாமலே பறந்து சென்றன. 

இந்த மௌனத்தை அண்டோனியோவால் அதிக நேரம் தாங்கமுடியவில்லை. “உனக்கு வேண்டாமென்றால் இந்த ஆரஞ்சுப் பழங்களை உன் தாயாருக்காக வீட்டுக்கு எடுத்துப் போயேன்” என்றான். 

“என் வீட்டில் ஆரஞ்சுப் பழங்கள் இருக்கின்றன. தீர்ந்து விட்டால் காசுகொடுத்து வாங்கிக் கொள்வேன்” என்று இறுமாப்புடன் பதில் அளித்தாள் லாரெல்லா. 

“காசு கொடுத்து வாங்குவானேன்? இவற்றை எடுத்துக் கொள்ளேன். நான் கொடுத்ததாகச் சொல்லி உன் தாயாரிடம் கொடு” என்றான் அண்டோனியோ. 

“உன்னை என் தாயாருக்குத் தெரியவே தெரியாதே!” என்றாள் லாரெல்லா. “நான் யார் என்பதை நீதான் அவளுக்குத் தெரியப்படுத்தக் கூடாதா?” என்று கேட்டான் அண்டோனியோ. 

“எனக்கு மட்டும் உன்னைத் தெரியுமோ? எனக்கும் உன்னைத் தெரியாது” என்று பதிலளித்தாள் லாரெல்லா. 

தனக்கு அவனைத் தெரியவே தெரியாது என்று அவள் இம்மாதிரிச் சொன்னது இது முதல் தடவையல்ல. 

சென்ற வருஷம் ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த காரியம் அது. நேபிள்ஸ் நகரத்தவனான அந்த ஓவியன் அன்று தான் முதல் முதலாக ஸொரெண்டோவிற்கு வந்திருந்தான். தலையில் ஒரு குடத்தை வைத்துக் கொண்டு தெருவோடு போய்க்கொண்டிருந்த லாரெல்லாவை அந்த ஓவியன் அன்றுதான் முதல் முதலாகப் பார்த்தான். அவள் அவனைக் கவனிக்கவேயில்லை; தன்பாட்டில் போய்க்கொண்டிருந்தாள். அவளுடைய தோற்றத்தின் அழகையும் நடையின் கம்பீரத்தையும் கண்டு பிரமித்துப்போய் சித்திரக்காரன் அசையாது நின்றுவிட்டான். லாரெல்லாவைவிட்டு தன் கண்களைத் திருப்பவே அவனால் முடியவில்லை. அவளுடைய அழகிலே லயித்து நின்றுவிட்டான். 

அச்சமயம் அண்டோனியோவும் வேறு பல சிறுவர்களும் தெருவிலே பந்தாடிக் கொண்டிருந்தார்கள். ஓவியன் இப்படி லாரெல்லாவைப் பார்த்துக்கொண்டே நிற்பதைப் பார்த்த அண்டோனியோ அவன் காலைக் கட்டிப் பந்தை ஓங்கி அடித்தான். அடி விழுந்த பின்னரே ஓவியனுக்குச் சுயப்பிரக்ஞை வந்தது. கண்களை லாரெல்லாவை விட்டு எடுத்தான். பந்தை எறிந்த பையன், தவறுதலாக மேலே பட்டுவிட்டது என்று தன்னிடம் மன்னிப்புக் கேட்பான் என்று ஓவியன் எதிர்பார்த்துத் திரும்பினான். ஆனால் அண்டோனியோவின் முகத்தையும் கண்களையும் பார்த்தவுடனே ஓவியனுக்குத் தெரிந்து விட்டது அது தவறுதலாக வந்து தாக்கிய பந்தல்ல என்று அன்னியனான அவன் புது ஊரிலே முதல் நாளே சண்டையையும் வம்பையும் விலைக்கு வாங்கிக்கொள்வானேன் என்று ஒதுங்கிப்போய் விட்டான். 

ஆனால் ஊரில் இந்தப் பந்தடி சம்பவம் பலருக்கும் தெரிந்து விட்டது. லாரெல்லா வரையில் கூட எட்டிவிட் டது இது. 

ஓவியனே நேரிலே ஒருதரம் லாரெல்லாவைக் கேட்டான். “என்னை மணக்க மறுப்பது அந்தக் குரங்குப் பயல் கோட்டியின் பொருட்டா?” என்று. “எனக்கு அவனைத் தெரியக்கூடத் தெரியாதே!” என்று முகம் சிவக்க ஆத்திரத்துடன் பதில் சொன்னாள் அவள். ஆனால் அந்தப் படகோட்டி வெளைக் காதலித்த விஷயம் ஊரா ருக்கெல்லாம் தெரிந்திருந்தது போலவே அவனுக்கும் தெரிந்திருந்தது. உண்மையில் அண்டோனியோவைத் தெரிந்துகொள்ளாமல் இல்லை அவள். 

இப்பொழுது இருவரும் தனியாக ஒரே படகில் இருந்தார்கள் – மெளனமாக தங்கள் தங்கள் சிந்தனைகளில் ஈடுபட்டவர்களாக உட்கார்ந்திருந்தார்கள். ஒருவர் மனசிலிருந்தது மற்றவருக்கும் தெரியும். ஆனால் ஜன்ம விரோதிகளைப் போலப் பாவனை செய்துகொண்டு உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுடைய உள்ளங்கள் துடித்துக்கொண்டிருந்தன. உயிருக்கே ஏதோ ஆபத்து வரப்போகிறது என்று நினைப்பவர்களின் உள்ளங்கள் துடிப்பதுபோல அவர்களுடைய உள்ளங்கள் துடித்துக் கொண்டிருந்தன. 

சாதாரணமாக எப்பொழுமே சிரித்த முகத்துடனிருப்பான் அண்டோனியோ. அவன் முகத்திலே இப்பொழுது கோபம் தாண்டவமாடியது. முகம் ஒரேயடியாகச் சிவந்துபோயிருந்தது. படகு தள்ளும் துடுப்பு அவன் கையில் அகப்பட்டுக் கொண்டு அன்று இல்லாத அவஸ் தையெல்லாம்பட்டது. அவன் ஆத்திரத்தில் துடுப்புப் போட்ட வேகத்தில் கடலே கலங்கிவிடும் போல் இருந்தது. ஜலத்துளிகள் லாரெல்லாவின் மேலும் தெறித்தன. அவன் வாய் கோபமாக ஆனால் மெதுவாகவே ஏதோ முணுமுணுத்தது. 

இதையெல்லாம் கவனிக்காதவள் போலவே உட்கார்ந்திருந்தாள் லாரெல்லா. ஏதோ ஆழ்ந்த சிந்தனைகளில் மனசைப் கொடுத்து விட்டவள் போல உட் கார்ந்திருந்தாள். அவள் குனிந்து கடலைப் பார்த்தாள்; நிமிர்ந்து வானத்தைப் பார்த்தாள்–அவன் பக்கம் தவிர மற்றெல்லாப் பக்கங்களிலும் பார்த்தாள். படகிலிருந்தபடியே குனிந்து சாய்ந்து கையை சமுத்திரத்தில் நனைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஜலம் ஜில்லென்று இனிமையாக இருந்தது. கன்னங்களிலும் புருவத்திலும் நெற்றியிலும் ஈரக்கையை வைத்து உஷ்ணத்தை ஆற்றிக்கொண்டாள். தலையில் கட்டியிருந்த கைக்குட்டையை அவிழ்த்துவிட்டுக் கலைந்திருந்த தலையைச் சரிப்படுத்திக் கொண்டாள். மொத்தத்தில் படகில் தான் தனியாக இருப்பது போலவே பாவித்து நடந்துகொண்டாள். அவள் கண்ணிமைகள் மட்டும் இரண்டு நிமிஷங்களுக்கொருதரம் துடித்தன. 

கடலில் வெகு தூரம் சென்றுவிட்டது படகு. காப்ரித் தீவு பின்னால், வெகு தூரத்துக்கப்பால், வானம் பூமியைத் தொடும் இடத்தில், பனிப்படலம் போல, வெய்யிலில் தெரிந்தது. எதிரில் அவர்களுடைய ஊரின் கரை தெரிந்தது-லேசாக, வெகு தூரத்துக்கப்பால். கண்ணுக் கெட்டிய வரையில் எந்தத் திக்கிலும் கடலில் வேறு ஒரு படகும் தென்படவில்லை. கடற்பறவைகள் கூட அதிகமாகக் காணவில்லை. வெப்பத்திற்குப் பயந்து ஒதுங்கி ஒடுங்கிக் கிடந்தனபோலும்! 

அண்டோனியோ நாலா பக்கமும் மிரண்ட பார்வையுடன் திரும்பித் திரும்பிப் பார்த்தான். ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தைப்பற்றி வெகுநேரம் ஆலோசித்து விட்டுக் கடைசி யில் திடீரென்று எதிர்பாராத ஒரு முடிவுக்கு வந்தவனுடையதைப்போல இருந்தது அவன் முகம். அசாதாரணமாக வெளிரிட்டுக் காணப்பட்டது. திடுதிப்பென்று படகு தள்ளும் துடுப்பைத் தூக்கிப் படகுக்குள் போட்டான். லாரெல்லா தன்னையும் அறியாமலே, தன்னிஷ்டமில்லாமலே, சப்தம் கேட்டுத் திருப்பிப் பார்த்தாள். அவள் பயப்படவில்லை. ஆனால் அண்டோனியோ என்ன செய்கிறான் என்று கவனித்து என்ன செய்வதாக உத்தேசித்தான் என்பதை ஊகிக்க விரும்பினாள் – தானும் செய்ய வேண்டியதைச் செய்யத் தயாராக இருந்தாள். 

“உனக்கும் எனக்கும் இடையே உள்ள இந்நிலைமை இப்படியே இன்னும் நீடிப்பதை நான் விரும்பவில்லை!” என்று கர்ஜித்தான் அண்டோனியோ. “ஏதாவது ஒரு முடிவுக்கு இன்று வந்தே தீரவேண்டும்” என்றான். 

அவன் சாதாரணமாகப் பேசவில்லை. அவன் உள்ளத்திலிருந்து வாய் மூலமாக வார்த்தைகள் வெடித்தெழுந்தன. 

“இப்படியே இன்னும் நாள் கடத்திக்கொண்டிருக்க நான் தயாராக இல்லை. இவ்வளவு நாள் கடத்தியதே தவறு என்று எனக்குத் தோன்றுகிறது. நான் இன்னமும் இறக்காமல் உயிருடனிருப்பது பற்றி எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இந்நிலைமை இன்னும் சில நாள் நீடித்தால் போதும், என் உயிர்போய்விடும். நீயோ என்னைத் தெரியக்கூடத் தெரியாது என்று சாதிக்கிறாய். இவ்வளவு நாட்களாக நீ என்னைக் கண்டதேயில்லையா? என் மனசிலுள்ளதை நீ கண்டுகொண்டதேயில்லையா? உன்னை எங்காவது தூரத்தில் கண்டுவிட்டால், பைத்தியக்காரன் மாதிரி, கைக்காரியத்தைப் போட்டுவிட்டு, உன்னை வளைய வளைய வந்துகொண்டிருந்தேனே – அப்பொழுதெல்லாம்கூட நீ என்னை அறியமாட்டாயா? உண்மையிலேயே நீ என்னை அறியமாட்டாயா? நான் உனக்குச் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது – இன்றுதான் சந்தர்ப்பம் வாய்த்தது!” என்றான் அண்டோனியோ. 

முகத்திலே ஒரு கேலிச் சிரிப்பு மலர அவனையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள் லாரெல்லா. அண்டோனியோ மேலும் சொன்னான்: “என் உள்ளம் நிறைந்திருக்கிறது; வழிந்தோடுகிறது. இதை நீ கவனித்ததேயில்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை. நீ என்னைக் கண்டபோதெல்லாம் முகத்தைச் சுளித்துக் கொண்டு உதட்டைப் பிதுக்கிக்கொண்டு கண்களைத் திருப்பிக்கொண்டு போய்விடுவாய், ஏன்?” 

லாரெல்லா பதறாமல் சாவதானமாக பதில் சொன்னாள்: “நான் உன்னிடம் சொல்ல என்ன இருக்கிறது? ஒன்றுமேயில்லை. என் காரியங்களில், என் வாழ்க்கையில் குறுக்கிட முயன்றாய் நீ என்பதை நான் கண்டு கொண்டதாகவே வைத்துக்கொள். உன் உள்ளம் என்னை விரும்பியது என்பதை நான் அறிந்ததாகவே வைத்துக் கொள். அதனால் என்ன? என் உள்ளம் உன்னை விரும்பவில்லை. உன்னை ஏற்றுக்கொள்ள நான் தயாராக இல்லை. கண்ட இடங்களிலெல்லாம் நின்று நான் உன்னுடன் வார்த்தையாட வேண்டுமென்று விரும்புகிறாயா நீ? ஜனங்கள் இம்மாதிரி விஷயங்களைப்பற்றி எவ்வளவு நிஷ்டூரமாகப் பேசுவார்கள் என்று எனக்குத் தெரியும். வீண் வம்புக்கு இடம் வைத்துக்கொள்ள விரும்பவில்லை நான். உன்னை என் கணவனாக அங்கீகரிக்க நான் விரும்பவில்லை. அதற்கப்புறம் உன்னுடன் எனக்கென்ன பேச்சு? உன்னை மட்டும் என்ன? நான் யாரையுமே என் கணவனாக ஏற்று அங்கீகரிக்கத் தயாராக இல்லை!” 

“என்னையோ, வேறு எவனையோ அங்கீகரிக்கத் தயாராக இல்லை என்று நீ இப்பொழுது சொல்லுகிறாய்! எப்போதும் இப்படியே எண்ணுவாய் என்பது என்ன நிச்சயம்? அந்த ஓவியனை உனக்குப் பிடிக்கவில்லை. வேண்டாம் என்று தட்டிக் கழித்துவிட்டாய். ஆனால் இன்னும் சில நாளில் தனிமை கசந்துவிடும். அப்புறம் நீ எவ்வளவுதான் அடங்காப் பிடாரியாக இருந்தாலும் ஒருவனுக்கு அடங்கி வாழவேண்டும் என்று ஆசை உன் உள்ளத்திலே தோன்றிவிடும். யார் முதலில் வருகிறானோ அவனை அங்கீகரிக்க நீ தயாராக இருப்பாய்!” என்றான் அண்டோனியோ ஆத்திரத்துடன். 

“அப்படி நடக்காது” என்றாள் லாரெல்லா. ஆனால் அடுத்த நிமிஷமே குரலை மாற்றிக்கொண்டு பிடிவாதத்துடன் சொன்னாள்: “யார் சொல்ல முடியும்? பின்னால் என்ன நடக்குமோ, யார் தெரிந்து சொல்ல முடியும்? என் மனசும் மாறலாம். பின்னர் ஒரு காலத்தில். அதைப்பற்றி உனக்கு ஆகவேண்டியது என்ன?” 

“எனக்கு ஆகவேண்டியது என்ன என்றா கேட்கிறாய் நீ” என்று ஆத்திரம் பொங்கக் கேட்டுக்கொண்டே, உட்கார்ந்திருந்த அண்டோனியோ, எழுந்து அவளை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தான். படகு தொட்டில் போல ஆடி அலைந்தது — ஏதோ அடக்க முடியாத ஆனந்தத்தோடு அது அலைகடல்மேல் நாட்டியம் ஆடியது போலும்! “அதுபற்றி எனக்கென்ன? என்று கேட்கிறாய் நீ. தாராளமாகக் கேட்டு விட்டாய் வாய்விட்டு! எனக்கென்ன அதுபற்றி என்பது உனக்கு உண்மையிலேயே தெரியாதா? உனக்கா தெரியாது? எல்லாம் தெரியும்! வேஷம் போடுகிறாய் நீ! ஆனால் ஒன்று சொல்கிறேன். நீ வேறு யாரையாவது மணந்து கொள்வது என்று நிச்சயம் செய்தாயானால்-உஷார்! அந்த மனிதனை ஜாக்கிரதையாகவே இருக்கச் சொல்லு. நான் உயிருடனிருக்கும் வரையில் நீ வேறு ஒருவனை மணம் செய்து கொள்வது என்பது நடக்காத காரியம். அவன் மென்னியை முறித்து எறிந்து விடுவேன்!” 

நிதானத்தை இழந்து விடாமல் லாரெல்லா பதில் அளித்தாள். “உனக்கென்ன, நான் ஏதாவது வாக்களித்தேனா? உன்னைக் காதலிப்பதாக நான் என்றாவது சொன்னதுண்டா? உனக்குப் பித்துப் பிடித்திருக்கிறது என்றால் அதற்கு நானா பிணை? என்னைக் கைப்பிடிக்கவோ தண்டிக்கவோ உனக்கென்ன உரிமை இருக்கிறது?” 

அண்டோனியோ தன் மனசில் பொங்கியெழுந்த உணர்ச்சி களை அடக்கமாட்டாமல், ஆவேசத்துடன் உரத்த குரலில் சொன்னான், “ஆஹா! எனக்கும் தெரியும். உன்னை வற்புறுத்த எனக்கு என்ன உரிமையிருக்கிறது? லாயர் பித்தலாட்டக்காரன் எவனும் என் உரி மையை ஸ்தாபிக்க லத்தீனில் எழுதிவைக்கவில்லை. என் உரிமையை ஸ்தாபிக்க முத்திரைப் பத்திரம் எதுவும் என்னிடம் கிடையாது. ஆனால் என் மனசு சொல்லுகிறது-என் உள்ளம் சொல்கிறது – இது என் உரிமை என்று. நாணயஸ்தனாக நல்வாழ்வு வாழ்ந்து விட்டு இறப்பவனுக்கு மோக்ஷம் கிட்டும். மோக்ஷம் அவனுடைய உரிமை என்று நம் வேதம் கூறுகிறது. அதேபோல என் உள்ளம் கூறுகிறது – நீ எனக்கு உரியவள் என்று. எனக்கே உரியவள் நீ என்று என் உள்ளம் கூறுகிறது. மறுபேச்சுக்கு இடம் ஏது? நீ வேறு ஒருவனைக் கல்யாணம் செய்து கொள்வதைப் பார்த்துக்கொண்டு நான் சும்மா இருந்து விடுவேன் என்றா நினைக்கிறாய் நீ? ஊரில் அதற கப்பு றம் மற்ற பெண்கள் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள்-பேடி என்றல்லவா நினைத்து விடுவார்கள்!” 

லாரெல்லா சற்றும் அசைந்து கொடுக்கவில்லை. முன்னிலும் அதிகப் பிடிவாதத்துடனேயே பதில் அளித்தாள்: “நீ என்ன வேண்டுமானாலும் செய்துகொள். இந்தமாதிரிப் பயமுறுத்தல்களுக்கெல்லாம் மசிந்துவிடுகிற பேர்வழி நான் அல்ல என்பது உனக்கே தெரிந்திருக்க வேண்டும். நான் என் இஷ்டப்படி, என் மனசுபடிதான் நடப்பேன்” என்றாள். 

“நீ இப்படி சொல்லிக்கொண்டு என்னை ஏய்க்க முடி யாது” என்று இரைந்தான் அண்டோனியோ. ‘சாமி வந்த வன்’ போல அவன் ஆடினான். அவன் அடக்க முயன்ற கோபமும் ஆத்திரமும் ரோஷமும் பீறிட்டுக்கொண்டு வெளிவந்தன. “உன்னைப் போன்ற ஒரு ‘காளி’க்காக நான் என் வாழ்நாள் முழுவதையும் பாழாக்கிக்கொள்ள விரும்பவில்லை. நீ பிடிவாதக்காரியாக இருக்கலாம்; ரோஷக்காரியாக இருக்கலாம். ஆனால் உன் பிடிவாதமும் ரோஷமும் என்னிடம் பலிக்காது. இங்கு நடுக்கடலில் இப்படகில் நாமிருவரும் தனியாக இருக்கிறோம் என்பது ஞாபகம் இருக்கட்டும் உனக்கு. என் இஷ்டப்படி செய்ய உன்னை நான் இங்கு கட்டாயப்படுத்த முடியும் என்பதும் ஞாபகம் இருக்கட்டும் உனக்கு.” 

திடுக்கிட்டுத் தூக்கி வாரிப் போட்டது அவளுக்கு. ஆனால் அவள் பயப்படவில்லை. பயமற்ற துணிச்சலான கண்களுடன் அலட்சியமான பாவத்திலே அவனை நோக்கினாள். “வேண்டுமானால், உனக்கு தைரியமிருந்தால், இங்கேயே என்னைக் கொன்றுபோட்டு விடேன்” என்றாள் மிருதுவான குரலில். 

“நான் எதையுமே அரை குறையாகச் செய்வது கிடை யாது” என்றான் அண்டோனியோ. அவன் குரல் கீறிச்சிட்டது. யாரோ குரல்வளையைப் பிடித்து அழுத்துவது போன்ற ஓர் உணர்ச்சி ஏற்பட்டது அவனுக்கு. “இவ்வாழ்ந்த கடலிலே நம்மிருவருக்கும் இடம் கிடைக்கும். நாம் ஒன்றாக வாழத்தான் கொடுத்து வைக்கவில்லை. ஒன்றாகவே இறந்து விடுவோம். பெண்ணே! என்னால் உன்னை அடைய முடியவில்லை. உனக்கு எவ்வுதவியும் நான் செய்யவில்லை.” ஏதோ பயங்கரமான கனவு கண்டு பாதியில் விழித்துக் கொண்டவன்போல மிரண்ட பார்வையுடன் தாழ்ந்த குரலில் பேசினான் அவன். 

அவன் குரலிலே அளவு கடந்த ஏக்கமும் பரிதாபமும் தொனித்தன. “நாம் இருவரும் ஒன்றாகவே, இவ்வினாடியே கடலில் வீழ்ந்து மூழ்குவோம் – சேர்ந்தே உயிரை விடுவோம் – இதே வினாடியில்!” 

இப்படிக் கூவிக்கொண்டே அண்டோனியோ பாய்ந்து அவளை அணுகி அணைத்துக் கொண்டான். ஆனால் அடுத்த வினாடி “ஆ!” என்று அலறியவாறே தன் வலது கையை இழுத்துக் கொண்டான். அவனது கையிருந்து ரத்தம் பெருக்கெடுத்துப் பீச்சிற்று. தன் கூரிய பற்களால் லாரெல்லா அவன் கையைக் கடித்துவிட்டாள். 

“ஓஹோ! உன் இஷ்டப்படி நான் நடப்பேன் என்று எண்ணினாயோ நீ!” என்று கூவி நகைத்தாள் லாரெல்லா. அசாதாரணமான ஒரு வேகத்துடன் அவன் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டாள். அவனை உதறித் தள்ளினாள். “உன்வசம் தனியாகச் சிக்கிக் கொண்டேன் என்று எண்ணினாயோ நீ!” என்று கேட்டுக்கொண்டே படகிலிருந்து கடலில் குதித்து விட்டாள். 

ஒருதரம் முழுகினாள். அடுத்த வினாடியே ஜலமட்டத் துக்கு எழுந்தாள். அவள் ஆடைகள் நனைந்து உடம்போடு ஒட்டிக் கொண்டன. அவள் கூந்தல் அவிழ்ந்து கடலில் புரண்டது. திரும்பிப் பார்க்காமல் தீர்மானமாகக் கைபோட்டு கடலில் ஸொரெண்டோ கரை நோக்கி அவள் நீந்தத் தொடங்கினாள். 

திடீரென்று அண்டோனியோவைப் பயம் சூழ்ந்து கொண்டது. பீதியால் மரத்துப் போனவனாக அவன் சிறிது நேரம் நின்றான். கடலில் நீந்திக்கொண்டிருந்த லாரெல்லாவைப் பார்த்தான். ஏதோ ஓர் அற்புதமான விஷயத்தைக் கண்டன போல அவன் கண்களும் மனசும் திகைத்தன. பின்னர் தலையை ஒரு தரம் உலுக்கிக் கொண்டான். துடுப்பெடுத்து லாரெல்லாவை நோக்கிப் படகைத் தள்ளினான். அவனுடைய வலது கையில் லாரெல்லா கடித்த இடத்திலிருத்து செக்கச்செவே லென்று ரத்தம் பீறிட்டுக் கொண்டு வந்து படகின் அடிப்பாகத்தையெல்லாம் சிவப்பாக்கிக் கொண்டிருந்தது. ஆனால் அதை அவன் லக்ஷியம் பண்ணவேயில்லை. 

லாரெல்லா வேகமாகத்தான் நீந்திக்கொண்டிருந்தாள். எனினும் படகு அதிசீக்கிரமாகவே அவளண்டையில் வந்துவிட்டது. அண்டோனியோ உரத்த குரலில் அவ ளைப் பார்த்துச் சொன்னான். “கன்னித் தாயின் பேரில் ஆணை! மேரி சாக்ஷியாகச் சொல்லுகிறேன்-நான் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொண்டு விட்டேன்! இனி அப்படி நடக்காது! மறுபடியும் படகில் ஏறிக்கொள். ஏதோ என் அறிவை மயக்கி இந்தப் பைத்தியக்காரத்தனமான காரியத்துக்குத் தூண்டி விட்டது. ஏதோ மின்வெட்டுப் போல அந்தப் பைத்தியம் தோன்றி மறைந்துவிட்டது. இனி அப்படி நடக்காது – நான் இனி ஒருக்காலும் அப்படி நடந்துகொள்ள மாட்டேன்! நான் என்ன செய்தேன். என்ன சொன்னேன் என்று எனக்கே சரி வரத் தெரியறுவில்லை. என்னை மன்னித்துவிடு என்று கேட்க நான் விரும்பில்லை. நான் இனிமேல் அப்படிப் பைத்தியக்காரத்தனமாக நடந்துகொள்ளமாட்டேன் என்பது நிச்சயம் கன்னி மேரியின் பேரில் ஆணையிட்டுச் சொல்கிறேன். படகில் ஏறி உட்கார்.” 

அவன் சொன்னது எதுவும் காதில் விழாதவள்போல லாரெல்லா நீந்திக் கொண்டிருந்தாள். படகுடனே அவளைப் பின் தொடர்ந்தான் அண்டோனியோ. அவன் மேலும் சொன்னான்: “கரை இரண்டு மைலுக்கப்பால் இருக்கிறது. உன்னால் அவ்வளவு தூரம் நீந்த முடியாது. வேண்டாம். படகில் ஏறிக்கொள். உன்னையும் இழந்து விட்டாளானால் உன் தாய் என்ன செய்வாள், யோசித்துப் பார். நீ கடலில் உயிரை விட்டாயானால் நானும் உன்னுடன் உயிரை விட்டுவிடுவேன். நான் தனியே ஊர் திரும்ப மாட்டேன்!” தலையை நிமிர்த்தி கரைக்கும் தனக்கும் இடையே இருந்த தூரத்தை நிர்ணயிக்க முயன்றாள் லாரெல்லா. உண்மையில் இரண்டு மைல்களுக்கும் அதிகமாகவே இருக்கும் போலத் தான் இருந்தது. அவ்வளவு தூரமும் நீந்திக் கடப்பது என்பது நடக்காத காரியம்தான். வாய்திறந்து பதில் எதுவும் சொல்லாமல் படகை நோக்கி நீந்திவந்தாள். படகின் ஓரத்தில் தன் கைகளை வைத்தாள். படகுக்குள் அவளை ஏற் றிவிடும் உத்தேசத்துடன் படகோட்டி எழுந்துவந்தான். ஆனால் அவனுக்காகக் காத்திராமல் லாரெல்லா ஒரு தாவுத் தாவிப் படகுக்குள் வந்துவிட்டாள். ஆனால் அவள் ஏறும்போது படகு சாய்ந்து நிமிர்ந்ததில் அண்டோனியோவின் சட்டை கடலுக்குள் விழுந்துவிட்டது. 

தான் முந்தி உட்கார்ந்திருந்த இடத்திலே போய் அமர்ந்து கொண்டாள் லாரெல்லா. அண்டோனியோவும் ஒரு வார்த்தையும் பேசாமல் மறுபடியும் துடுப்பெடுத்துத் தள்ளலானான். நனைந்து போயிருந்த தன் ஆடைகளைப் பிழிந்து சீர்ப்படுத்திக்கொண்டாள். படகின் அடிப்பாகம் ரத்தம் சிந்திச் சிவந்திருப்பதை அதற்கப்புறம்தான் அவள் பார்த்தாள். திடுக்கிட்டு நிமிர்ந்து படகோட்டியின் கையைப் பார்த்தாள். காயமே எதுவும் இல்லாதவன் போல சாதாரணமாகத் துடுப்புப் போட் டுக் கொண்டிருந்தான் அவன். ஆனால் அவன் கையிலிருந்த காயத்திலிருந்து இன்னமும் ரத்தம் கசிந்து கொண்டிருப்பதைக் கண்டாள் லாரெல்லா. 

“இதைப் போட்டுக் காயத்தைக் கட்டு” என்று சொல்லி லாரெல்லா தன் கைக்குட்டையை எடுத்து அவன் பக்கம் நீட்டினாள். 

வேண்டாம் என்கிற பாவனையாக அவன் தலையை ஆட்டினான். 

சிறிது நேரம் அவனைப் பார்த்தபடியே சும்மா உட் கார்ந்திருந்தாள் லாரெல்லா. பின்னர் எழுந்து அவனை அணுகி அவன் கைக் காயத்தின்மேல் தன் கைக்குட்டையை வைத்து இறுகக் கட்டினாள். 

அதற்குப் பிறகு அவன் தடுத்தும் கேளாமல் ஒரு துடுப்பை எடுத்துக்கொண்டு அவன் எதிரே உட்கார்ந்து அவளும் படகு தள்ளினாள். அவனை நிமிர்ந்து நேருக்கு நேராக அவள் பார்க்கவில்லை. ஆனால் அவள் பிடித்திருந்த துடுப்பிலும் அவன் ரத்தம் சிந்தி ஓடியிருந்தது. இருவர் முகமும் வெளிரிட்டிருந்தது. ஆனால் இருவரும் மௌனமாகவே இருந்தார்கள். இருவரும் துடுப்பெடுத்துத் தள்ள படகு வேகமாகவே கரையை அணுகிற்று. 

மீன் பிடிக்கக் கடலில் சிறிது தூரம் வந்திருந்த செம்படவர்கள் – அவர்களுடைய ஊர்க்காரர்கள் – இருவரையும் பார்த்ததும் கேலியாக ஏதோ சொன்னார்கள். 

இருவரும் வாய் திறந்து பதில் பேசாமல் மௌனம் சாதித்து விட்டார்கள். 

அவர்கள் தங்கள் ஊர்க்கரையை அடைந்தபோது வானத்தில் உயரத்திலேயே இருந்தது சூரியன். அஸ்தமிக்க இன்னும் வெகு நேரம் இருந்தது. லாரெல்லாவின் ஆடைகள் அநேகமாக உலர்ந்துவிட்டன. அவற்றைச் சரிப்படுத்திக்கொண்டு எழுந்து லாரெல்லா படகிலிருந்து கரைமேல் குதித்தாள். 

மதகுருவையும் லாரெல்லாவையும் ஏற்றிக்கொண்டு காலையில் அண்டோனியோவின் படகு கிளம்பும்போது மாடியில் நூல் நூற்றுக்கொண்டு நின்ற கிழவி இப்பொழுதும் நூல் நூற்றபடியே அந்த மாடியில் நின்று கொண்டிருந்தாள். மாடியிலிருந்தபடியே அவள் உரக்கக் கேட் டாள்: “கையில் என்ன, அண்டோனியோ – கட்டுப் போட்டிருக்கியே! படகெல்லாம் ரத்தமாக இருக்கிறதே!” 

வாலிபன் அலக்ஷியம் தொனித்த குரலில் உரக்கவே பதில் அளித்தான்: “ஒன்றுமில்லை பாட்டி. ஏதோ ஓர் ஆணி வெளியே நீட்டிக்கொண்டிருந்தது – கையைக் கிழித்துவிட்டது. ரத்தம் செத்தவனானால் பாதகமில்லை. ஆனால் எனக்கு ரத்தம் பீறிட்டுக்கொண்டு வந்துவிட்டது. படகெல்லாம் ரத்தமாகிவிட்டது. நாளைக்குக் காலையில் கை சரியாகப் போய் விடும்!” 

“இரு சற்று அங்கேயே, தம்பி. நான் வந்து மருந்து வைத்துக் கட்டுகிறேன்” என்றாள் கிழவி. 

“வேண்டாம் பாட்டி. அவ்வளவு சிரமம் உனக்கு எதற்கு? அதில் மருந்து வைத்துக் கட்டிவிட்டேன். நாளைக்கு ஆணி கிழித்த இடமே தெரியாது. எனக்கு இதெல்லாம் லக்ஷியமேயில்லை” என்றான் அண்டோனியோ. 

குன்றுகளின் சரிவில் ஏறிச்செல்லும் பாதையில் திரும்பி நின்ற படியே லாரெல்லா “நான் போய்வருகிறேன்” என்றாள். 

அவள் பக்கம் திரும்பிப் பார்க்காமலே “போய் வா” என்று விடை கொடுத்தான் அண்டோனியோ. அவள் போன பின் துடுப்புகளையும், காலியான பழக்கூடைகளையும் தூக்கிக் கொண்டு கடற்கரையின் அருகிலேயே இருந்த தன்னுடைய சிறு குடிசைக்குள் புகுந்தான் அவன். 


அண்டோனியோவின் குடிசை மிகவும் சிறியதுதான். அதில் இரண்டே இரண்டு அறைகள் தான் இருந்தன. அவற்றில் தனிமையில் அண்டோனியோ குறுக்கும் நெடுக்கும் உலாவிக் கொண்டிருந்தான். 

திறந்திருந்த ஜன்னல்கள் வழியாகக் குளிர்காற்று விசிறி விசிறி அடித்துக்கொண்டிருந்தது. அமைதியாகப் பரந்து கிடந்த கடலில் அடித்ததைவிடக் குளுமையாக இருந்தது இக்காற்று. 

தனிமை அப்போது அவன் மனசுக்கு மிகவும் இதமாக இருந்தது. அறையின் ஒரு மூலையில் இருந்த கன்னித் தாயின் விக்கிரஹத்துக்கு எதிரேபோய் அதைப் பார்த்த படியே வெகு நேரம் நின்றான். கன்னித்தாய் விக்கிரஹத்தின் தலையில் இருந்த மகுடத்தில் நட்சத்திரங்கள் ஜ்வலித்தன – ஜிகினாத் தகட்டால் செய்து ஒட்டிய நட்சத்திரங்கள். ஆனால் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்ற சிந்தனையே, அவசியமே தோன்றவில்லை அவனுக்கு. எதற்காக, எதை வேண்டி இனிப் பிரார்த்தனை செய்வது? பிரார்த்தனை செய்யவேண்டிய அவசியமே போய் விட்டது. கடவுள் இனித் தனக்கு உதவி செய்யமாட்டார் என்று ஓர் எண்ணம் அவன் உள்ளத்தைப் பிளந்தது. ஆசைப்பட்டு வேண்டியது எல்லாவற்றையும்தான் இழந்துவிட்டானே! 

பகல் பொழுது முடியாதா என்றிருந்தது! இரவு வராதா என்று எங்கினான். அவன் உடல் அலுத்துப் போயிருந்தது; மனம் சலித்துப் போயிருந்தது. அவன் உடலிலிருந்து வெளியேறிய பத்தம். அவன் எதிர்பார்த்ததையும் விட, அவன் ஒப்புக் கொண்டதையும்விட, அதிகமாகவே அவனைப் பாதித்திருந்தது. அவன் கை வலி அதிகமாகவே இருந்தது. ஒரு சிறு முக்காலியின்மேல் உட்கார்ந்து காயத்தின் மேல் கட்டியிருந்த கைக்குட்டையை அவிழ்த்தெடுத்தான். முழங்கை வரையில் பெரிசாக வீங்கியிருந்தது. 

சுத்த ஜலம் விட்டுக் காயத்தை நன்றாக அலம்பினான். ஜலத்தின் குளுமை வலிக்கு இதமாக இருந்தது. லாரெல்லாவின் பல்லின் குறிகள் காயத்தில் நன்கு தெரிந்தன. 

அண்டோனியோ தனக்குத்தானே சொல்லிக்கொண்டான். “இவள் செய்தது சரிதான். நான் ஒரு மிருகம் போலத்தான் நடந்து கொண்டேன்! வேறு என்ன? சரியான புத்தி கற்பித்தாள் எனக்கு அவள். நாளைக் காலையிலேயே அவளுடைய கைக்குட்டையை ஜோஸப்பே மூலம் அனுப்பிவிடுகிறேன். இனி மேல் நான் அவள் கண் எதிரே தென்படுவதற்கும் தகுதியற்றவன்.” 

வெகு ஜாக்கிரத்தையாக லாரெல்லாவின் கைக்குட்டையை சுத்தம் செய்து வெய்யிலில் உலர்த்தினான். 

மறுபடியும் காயத்தை கட்டினான். பல்லாலும் இடது கையாலும் துணியைப் பற்றிக்கொண்டு காயத்தின்மேல் துணியைச் சரியாகக் கட்ட முடியவில்லை. ஏதோ கட்டினான். படுக்கையில் சாய்ந்தான். கண்களை மூடிவிட்டான். 

தூங்கிவிட்டான் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அது சரியான தூக்கம் அல்ல. 

பிரகாசமான சந்திர வெளிச்சம் கண்ணில் தாக்கவே அவன் இரவில் விழித்துக் கொண்டான். கை அதிகமாக வலித்தது. மறுபடியும் சுத்த ஜலம் விட்டு அலம்பிக் கட்டலாம் என்று எழுந்தான் அண்டோனியோ. அச்சமயம் குடிசையின் வெளிக் கதவு திறக்கப்படும் சப்தம் கேட்டது. 

அடுத்த வினாடி, லாரெல்லா வந்து அவன் முன் நின்றாள். ஒன்றும் பேசாமலே அவள் அவனிருந்த அறைக்குள் வந்தாள். தன் கையிலிருந்த சிறு கூடையை மேஜைமேல் வைத்தாள். தலையில் கட்டியிருந்த கைக் குட்டையை அவிழ்த்து எடுத்தாள். பின்னர் ஓர் ஆழ்ந்த நீண்ட பெருமூச்சு விட்டாள். 

“உன் கைக்குட்டையை வாங்கிக்கொண்டு போக வந்தாயா?” என்று கேட்டான் அண்டோனியோ. “நீ இதற்காக வந்திருக்க வேண்டியதில்லை. அவ்வளவு சிரமம் எதற்கு உனக்கு? நாளைக் காலையில் அதை ஜோசப்பேயிடம் கொடுத்தனுப்புவதாக இருந்தேன்.” 

“கைக்குட்டைக்காக வரவில்லை நான்” என்றாள் லாரெல்லா அவசர அவசரமாக. “உன் கைக் காயத்துக்குப் போட, குன்றில் பச்சிலை தேடிக் கொண்டு வந்திருக்கிறேன்; இதோ பார்” என்று தன் கூடையைத் திறந்து காண்பித்தாள் அவள். “ஏன் இவ்வளவு சிரமம் உனக்கு?” என்றான் அண்டோனியோ. ஆனால் இதை அவன் மனக்கசப்புடன் சொல்லவில்லை. “நீ எனக்காக இவ்வளவு சிரமப்படவேண்டியதில்லை. காயம் ஒன்றும் அப்படிப் பிரமாதமானதில்லை. தவிரவும் யாராவது தானாகவே செய்து கொண்ட கெடுதிக்கு ஏற்ற பலனை அனுபவிக்காமல் இருக்கமுடியுமா! எனக்கேற்ற சிக்ஷை விதித்தாய் நீ! ஆனால் நீ இந்த நேரத்தில் இங்கு இப்படித் தனித்து வரலாமா? யாராவது பார்த்தால் என்ன சொல்வார்கள்? எப்படி ஊரார் வம்பளப்பார்கள் என்று உனக்குத் தெரியாதா? சொல்வது என்ன என்று அறியாமலே பிதற்ற ஆரம்பித்து விடுவார்களே!” 

ஆவேசத்துடன் பதிலளித்தாள் லாரெல்லா. “யார் என்ன சொல்வார்கள் என்பது பற்றி என்றுமே நான் கவலைப்பட்டதில்லை. இனியும் படமாட்டேன்! உன் கை ரணம் ஆறப் பச்சிலை வைத்துக் கட்டுவதற்காக வந்தேன் நான். தானே மருந்து போட்டுச் சரியாகக் கட்டிக் கொள்ள முடியாது.” 

“மருந்துக்கு அவசியமேயில்லை. நான் சொல்கிறேன். நாளைக்குச் சரியாகிவிடும்” என்றான் அண்டோனியோ. 

“காயத்தை நானே பார்த்தால் தான் எனக்கு நம்பிக்கை வரும்” என்றாள் லாரெல்லா. அவனுடைய வலது கரத்தைப் பிடித்துக் கொண்டு அவன் தொளதொளவென்று கட்டியிருந்த கட்டை அவிழ்த்தாள். அவளைத் தடுக்கப் போதிய தெம்பில்லை அண்டோனியோவுக்கு. 

கட்டை அவிழ்த்து காயத்தின் ஆழத்தையும், கையின் வீக்கத்தையும் பார்த்ததும் லாரெல்லாவுக்குப் பயமாக இருந்தது. “கடவுளே!” என்று கூச்சலிட்டாள். 

“சற்றே வீங்கியிருக்கிறது!” என்றான் அண்டோனியோ. “ஒன்றும் பெரிசில்லை. நாளைக்குத் தானே சரியாகிவிடும்” என்றான். 

லாரெல்லா தலையை ஆட்டினாள். “நீ மறுபடியும் துடுப்பெடுத்துப் படகு தள்ள ஆரம்பிக்க ஒரு வாரமாவது பிடிக்குமா?’ 

“இரண்டொரு நாள் ஆகலாம். அதனால் என்ன?” என்று சாதாரணமான குரலில் பதிலளித்தான் அண்டோனியோ. 

காயத்தை நன்றாகக் கழுவினாள் லாரெல்லா. காயத்தின் மேல் பச்சிலைகளை வைத்து நல்ல துணியைப் போட்டு இறுகக் கட்டினாள். வலி அப்பொழுதே சற்று மட்டுப்பட்டிருப்பது போலிருந்தது அவனுக்கு. 

கட்டுக்கட்டி முடிந்ததும் அண்டோனியோ சொன்னான்: “உனக்கு என் நன்றி பல விதங்களிலும் உரியதாகிறது. என் நன்றியை ஏற்றுக்கொள். உன்னை நான் ஒரே ஒரு விஷயம் மட்டும் வேண்டிக்கொள்கிறேன். என் மேல் சிறிதேனும் இரக்கம் உனக்கும் இருக்குமானால் படகில் இன்று நடந்ததையெல்லாம் நீ மறந்துவிடு. என்னை மன்னித்துவிடு ஏதோ பைத்தியக்காரன் என்று எண்ணி என்னை மன்னித்துவிடு. நான் அப்போது சொன்னதையும் செய்ததையும் தயைசெய்து மறந்துவிடு. அதெல்லாம் எப்படி நேர்ந்தது என்று எனக்கே தெரியவில்லை. பிசகு உன்மேல் இல்லை; நிச்சயமாக இல்லை. பூராவும் என் தவறுதான். உன் மனசு கஷ்டப்படும்படியாக நான் இனி ஒரு வார்த்தையும் பேச மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன்.” 

லாரெல்லா குறுக்கிட்டுச் சொன்னாள்: “நீதான் என்னை மன்னிக்க வேண்டும். பிசகு என்மேல் தான். நான் வேறு விதமாகப் பேசியிருந்தேனானால் இதெல்லாம் நேர்ந்தேயிராது. என் பிடிவாதமும், கட்டுக்கடங்காத வார்த்தைகளுமே உனக்குக் கோபமூட்டிவிட்டன. இப்படி நான் ஒரு கொடிய மிருகம் போல உன்மேல் விழுந்து பல்லால் பிடுங்கியது…” 

“தற்காப்புக்காக நீ என்னைக் கடித்தாய். வேறு என்ன?” என்றான் அண்டோனியோ. “இல்லாவிட்டால் என் புத்தி சரிப்பட்டிராது. நீ சரியான நேரத்தில் எனக்குப் புத்தி கற்பித்தாய். நீ செய்தது சரி. நான் செய்ததே தப்பு. நீ தான் என்னை மன்னிக்கவேண்டும். இந்தா உன் கைக் குட்டை. எடுத்துக்கொண்டு போ.” 

கைக்குட்டையை எடுத்து அவளிடம் நீட்டினான். அதை அவள் உடனே வாங்கிக்கொள்ளவில்லை. தயங்கினாள். அவள் உள்ளத்துக்குள் ஏதோ ஒரு போராட்டம் நடந்தது போலும். கடைசியில் அவள் சொன்னாள்: “இதோ பார். படகில் இருந்த உன் சட்டை கடலுக்குள் விழுந்து விட்டது. என் தவறுதான் அது. நீ இன்று ஆரஞ்சுப் பழம் விற்ற பணம் பூராவும் சட்டையில் தானே இருந்தது? இதைப்பற்றி எனக்குப் பின்னால் தான் ஞாபகம் வந்தது. அந்தப் பணத்துக்கு ஈடாகக் கொடுக்க என்னிடம் பணம் கிடையாது – நான் ஏழை. என் வீட்டிலுள்ள சாமான்களும் சொல்பமே அவையும் என்னுடையவை அல்ல, என் தாயாருடையவை. ஆனால் வெள்ளிச் சிலுவை ஒன்றிருக்கிறது – இதோ. என்னை மணம் புரிந்துகொள்ள விரும்பிய அந்த ஓவியன் இதை எனக்குப் பரிசாகக் கொடுக்கவந்தான் – நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அதை அவன் எடுத்துக்கொண்டு போகவில்லை. என் மேஜை மேலேயே போட்டுவிட்டுப் போய்விட்டான். இன்று வரையில் நான் அதைத் தொட்டதுகூட இல்லை. கடலில் என் அஜாக்கிரதையால் விழுந்துவிட்ட உன் பணத்துக்கு ஈடுகட்ட இது போதுமோ என்று என்னுடன் எடுத்துவந்தேன். இதை விற்றுப் பணத்தை எடுத்துக்கொள் – நல்ல வெள்ளி, கனமாகவும் இருக்கிறது. நீ இழந்துவிட்ட பணத்தைச் சரிக்கட்ட இது விற்று வருவது போதாவிட்டால், நான் சில நாளில் நூல் நூற்று விற்று பாக்கியையும் தந்து விடுகிறேன்.” 

சிலுவையைப் பெற்றுக்கொள்ள மறுத்தான் அண்டோ னியோ. “நான் அதை வாங்கிக்கொள்ள மாட்டேன் எக்காரணத்தைக் கொண்டும் வாங்கிக்கொள்ள மாட்டேன்” என்றான். “நீ வாங்கிக்கொள்ளத்தான் வேண்டும்” என்றாள் லாரெல்லா. “உன் கை எவ்வளவு நாள் சுவாதீனமில்லாமல் இருக்குமோ, யார் சொல்ல முடியும்? வேலை செய்யாவிட்டால் சாப்பிடுவது எப்படி? தவிரவும் இது எனக்குத் தேவையில்லை.” 

“உனக்குத் தேவையில்லாவிட்டால் அதைக் கொண்டு போய் நடுக்கடலில் எறிந்துவிடு” என்றான் அண்டோனியோ. 

“நான் உனக்கு இதை இனாமாகக் கொடுக்கவில்லையே; கடலில் விழுந்துவிட்ட..” என்று லாரெல்லா எவ்வளவோ வற்புறுத்திச் சொல்லிப் பார்த்தாள். ஆனால் அவன் அதை வாங்கிக்கொள்ள மறுத்து விட்டான். 

கடைசியில் ஒருவிதமான பதட்டத்துடன் அவன் சொன்னான்: “அண்டோனியோ என்று ஒரு மனிதன் இருப்பதையே மறந்து விடுவதுதான் நீ எனக்குச் செய்யக்கூடிய பேருபகாரம். தெருவில் எங்காவது என்னைச் சந்தித்தாயானால் முகத்தைத் திருப்பிக்கொண்டு போய்விடு. இதுவே நான் உன்னை வேண்டுவது. நேரமாகிறது, போய் வா. இதுவே நமது கடைசிச் சந்திப்பாக இருக்கட்டும்! கடவுள் உன்னைக் காப்பாற்றுவாராக!…. போய் வா.” 

தன் கைக்குட்டையை வாங்கிக் கூடையில் வைத்துக் கொண்டாள் லாரெல்லா. அதன்மேல் வெள்ளிச் சிலுவையை வைத்தாள். கூடையை மூடினாள். ஆனால் நகரவில்லை. 

இரண்டு நிமிஷங்களுக்குப் பிறகு அண்டோனியோ நிமிர்ந்து அவள் முகத்தைப் பார்த்தபோது திடுக்கிட்டுப் போனான். அவள் கன்னங்களிலே கண்ணீர் வழிந்து ஓடிக்கொண்டிருந்தது. அவள் அதை லக்ஷியம் செய்யாமலே நின்றாள். 

“புனிதத்தாயே, மேரி!” என்று கூவினான் அண்டோனியோ. “உனக்கு உடம்பு சரியாக இல்லையா? என்ன இப்படி நடுங்குகிறதே!” 

“ஒன்றுமில்லை. நேரமாகிறது. வீடு திரும்ப வேண் டும்” என்று, அழுகை நிறைந்த குரலுடன் சொல்லிவிட்டுத் திரும்பினாள் லாரெல்லா. வாசற் கதவை நோக்கி இரண்டடி எடுத்து வைத்தாள். அவள் நடை தள்ளாடியது. சுவரில் சாய்ந்து கொண்டு நின்றாள். முகத்தைத் திருப்பிக்கொண்டு உரக்க விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டாள். 

அண்டோனியோ தயக்கத்துடன் அவளை அணுகினான். ஆனால் அவன் நெருங்கி வரும்வரையில் காத்திருக்கவில்லை லாரெல்லா. திடீரென்று திரும்பி அவன் மேல் விழுந்து அணைத்துக்கொண்டாள். இரு கரங்களாலும் அவன் கழுத்தை இறுகக் கட்டிக்கொண்டாள். 

விம்மல்களுக்கிடையே அவள் சொன்னாள்: “எனக்கு இது தாங்கவில்லை. நானே குற்றவாளி, தவறுசெய்தவள் என்று என் மனசு என்னையே குத்திக் காட்டுகிறது. நீயோ இரக்கத்துடனும் அனுதாபத்துடனும் அளவுகடந்த அன்புடனும் குற்றமெல்லாம் உன்னுடையதே போலப் பேசுகிறாய். உன் அன்பும் இரக்கமும் என் மனசைப் பிளக்கின்றன. என்னை அடி, உதை, கொல்லு நான் பட்டுக் கொள்கிறேன். என்னை வைது திட்டு, கேட்டுக்கொள்கிறேன். என்னைக் காதலிப்பதாக நீ சொன்னாயல்லவா அந்தக் காதல் என் காரியத்தால் மாறிவிடவில்லையானால், என்னை உன் மனைவியாக ஏற்றுக்கொள். உன் அடிமையாக என்னை வைத்துக் கொள். நீ என்னை எப்படி நடத்தினாலும் குறைப்பட மாட்டேன் நான். உன் அன்பின் நிழலிலிருக்க எனக்கு இடங்கொடு” என்று சொல்லி அவன் மார்பில் முகத்தைப் புதைத்துக்கொண்டு விம்மி விம்மி அழுதாள். 

ஆச்சரியத்தால் ஸ்தம்பித்து நின்றான் அண்டோனியோ. லாரெல்லாவிடம் காணப்பட்ட மாறுதல் உண்மையிலேயே ஆச்சரியகரமானது. பேசமுடியாமல் சிறிது நேரம் திணறினான் அவன். கடைசியில் சொன்னான் அவன்: “நான் உன்னைக் காதலிக்கிறேனா இல்லையா என்பது உனக்குச் சந்தேகமாக இருக்கிறதா? என் இருதயத்திலிருந்து ரத்தம் பூராவும் அந்தச் சிறு காயம் வழியாக வெளியே வந்துவிட்டது என்றா நினைக்கிறாய் நீ? என் இதயத்தில் ரத்தமில்லாது போகும் போதுதான் என் காதலும் இல்லாது போகும்! கன்னித்தாய் சாக்ஷியாகச் சொல்லுகிறேன், என் உள்ளத்திலே நீதான் நிறைந்தி ருக்கிறாய். என் உள்ளம் உன்னைக் கூவி அழைப்பதை நீ அறிந்து கொள்ளவில்லையா? ஆனால் என்னைப் பரிகசிக்கும் உத்தேசத்துடனோ அல்லது கேவலம் அனுதாபத்துடேனா இப்படி நீ சொல்வதாக இருந்தால், நான் உன்னை அங்கீகரிக்க விரும்பவில்லை. இவ்விஷயத்தை இவ்வினாடியே மறந்துவிட நான் தயார். வெறுமனே ஏதாவது சொல்லி என்னைத் துன்புறுத்தாதே!” என்றான் அவன். 

“இல்லை” என்றாள் லாரெல்லா. நீர் நிறைந்த கண்க ளுடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தாள். அவர்களுடைய கண்கள் சந்தித்தன. ஒருவரும் இப்போது முகத்தைத் திருப்பிக் கொள்ளவில்லை. லாரெல்லா சொன்னாள்: “நான் உண்மையிலேயே மனப்பூர்வமாக உன்னை காதலிப்பதால் தான் உன்னை மணப்பதாக வாக்களிக்கிறேன். உன்னிடம் காதல் கொண்டுவிடக்கூடாதே என் றுதான் நான் இவ்வளவு நாள் உன்னிடமிருந்து விலகி நிற்க முயன்றேன். பயந்தான் என்னை ஆத்திரமாகவும், பிடிவாதமாகவும் பேசத் தூண்டியது. என் உள்ளத்தி லும் காதல் நிறைந்துதான் இருந்தது. ஆனால் அதை நான் அங்கீகரிக்கவில்லை. அடங்காப்பிடாரியாக, காளியாகவே இருக்க நான் விரும்பினேன். இன்று தான் என் உண்மை உள்ளம் எனக்கே தெரிந்தது. உன்னால், உன் அன்பால், உன்னிடம் கோபித்துக்கொண்ட தெல்லாம் என்னையே ஏமாற்றிக்கொள்ள நான் போட்ட வேஷமே தவிர வேறு அல்ல. இனிமேல் பாரேன் – நான் உன்னிடம் நடந்துகொள்கிறேன் பாரேன். தெருவில் என்னைப் பார்த்தால் பார்க்காததுபோலப் போய்விடு என்றாயே நீ அப்படி இனிமேல் என்னால் போக முடியுமா? சந்தேகப்படாதே! உண்மையில் நான் உன்னையே காதலிக்கிறேன். உன்னையே மணந்துகொள்வேன். அதற்கு அறிகுறியாக நான் உன்னை முத்தமிடுகிறேன். என்னை முத்தமிட்டாள் லாரெல்லா என்று நீ தைரியமாகச் சொல்லிக்கொள்ளலாம். காளி லாரெல்லா தன் கணவனைத் தவிர வேறு யாரையும் முத்தமிடமாட்டாள் என்பது நிச்சயம்.” 

உதட்டோடு உதடு வைத்து மூன்று தரம் அவனை முத்தமிட்டாள் லாரெல்லா. பிறகு அவன் கைகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு சொன்னாள். “காதலனே, போய் வருகிறேன். என் காதலனே, இன்று நிம்மதியாகத் தூங்கு. கை சரியாகட்டும். நீ என்னுடன் வரத்தேவையில்லை. எங்கும் தனியாகச் செல்வேன் நான் எவனையும் கண்டு இதுவரை லாரெல்லா பயந்ததில்லை- உன்னைத் தவிர!” 

அடுத்த வினாடி அவள் அண்டோனியோவின் குடிசைக் கதவைத் திறந்து கொண்டு வெளியேறி மறைந்துவிட்டாள். 

நிச்சலமாக இருந்த கடலையும், வானத்திலே நிலவொளியில் மினுமினுத்த நட்சத்திரங்களையும் பார்த்துக் கொண்டே வெகுநேரம் ஜன்னலண்டையில் நின்றான் அண்டோனியோ. நிற்கச் சக்தியில்லாது போகும் வரையில், தூக்கத்தால் தலை சுழன்று வானத்து நட்சத்திரங்கள் கண்ணெதிரில் நாட்டிய மாடுவதுபோலத் தோன்றத் தொடங்கும் வரையில் அப்படியே நின்றான். 

மாதாகோயிலில் பாவமன்னிப்புத் தரும் அறையிலே மதகுரு உட்கார்ந்திருந்தார். அவர் முகம் சந்தோஷத்தால் மலர்ந் இருந்தது. அவர் எதிரே லாரெல்லா நின்று கொண்டிருந்தாள் மண்டியிட்டுச் சொல்லவேண்டியதை எல்லாம் சொல்லிப் பாவமன்னிப்புப் பெற்றுக்கொண்டு நின்றாள். அவள் முகம் வெட்கத்தால் சற்றே சிவந்திருந்தது. 

மதகுரு தனக்குத்தானே சொல்லிக்கொண்டார்: “இவளுடைய பிடிவாதத்தையும் பொல்லாத்தனத்தையும் சரியானபடி கண்டிக்காதது என்மேல் பிசகு என்று எண்ணி நான் வருந்திக் கொண்டிருந்தேன்; ஆனால் கடவுளின் மாயவழிகள் குறுகிய மனிதப் பார்வைக்கு எட்டுவதில்லை. இவ்வளவு சீக்கிரமே அடங்காப்பிடாரியை அடக்கி கடவுள் அவள் உள்ளத்திலே அன்பு கனிய காதல் சுரக்கச் செய்வார் என்று யார் தான் எதிர் பார்த்திருக்க முடியும்? கடவுள் அவளுக்குச் சகல சௌபாக்கியங்களையும் தருவார். லாரெல்லாவின்- காளியின் மூத்த மகன் படகோட்டும்போது அவன் படகில் ஏறிச் செல்லும் பாக்கியத்தை எனக்குக் கடவுள் அருளட்டும் – அதுவரையில் உயிர்வாழ நான் விரும்புகிறேன். காளிக்குக் கடவுள் கிருபை புரிவாராக!”

ஜெர்மன் மூலம்: பால் வான் ஹெய்ஸே

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *