6.29=6.30Xஆச்சர்யம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 14, 2024
பார்வையிட்டோர்: 4,552 
 
 

(1968ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

மணிக்கு எத்தனை மைல் செல்லக் கூடியது என்று குறிப்பிட்ட காலம் பழங்காலமாகி வருகிறது.

நொடிக்கு எத்தனை மைல் என்று கணக்கிடப் படுவது இக்காலம்!

ஒலியையும் ஒளியையும் மிஞ்சும் வேகத்தில் வாகனங்களும் சாதனங்களும் உருவாகும் காலம் இது!

காலையில் ஒரு தோசையும் காப்பியும் சாப்பிட்டு, விட்டு விமானம் ஏறினால் நண்பகல் உணவுக்கு லண்ட னில் இருக்கலாம்.

இரவு 7 மணிக்குச் சிங்கப்பூரை விட்டுக் கிளம்பு கிறவர் அடுத்த இரண்டு மணி நேரத்தில் சென்னை சேர்ந்து அங்கு ஒரு தியேட்டரில் படம் பார்க்கிறார்.

கண்களை ஒரு முறை மூடித் திறப்பதற்குள் சந்திர மண்டலம் போய்வரச் சாத்தியப்படுமா என்ற ஆராய்ச்சி நடைபெறுகின்ற இந்தக் காலத்திலேயே நாம் அன்றாடம் அனுபவித்துக்கொண்டிருக்கும் ஒரு ‘சித்திரவதைக் கொடுமை’யைப் பற்றி யாராகிலும் சிந்தித்துப் பார்க்கிறார்களா? இல்லை.

‘காத்திருப்பது’ என்னும் வெங்கொடுமை தான் அது. ஒரு பக்கம் காற்று வேகத்தில் பறந்து உலகம் நேரத்தை மிச்சப்படுத்துகிறது. மறுபக்கம் மணிக்கணக்கில் -நாள் கணக்கில்-வாரக் கணக்கில்-மாமாங் கக் கணக்கில்-காத்திருக்க நேர்ந்து ஏராளமான நேரம் வீணாகிறது. இமாலயக் கொடுமை!

ஒட்டுக்கடையில் வெற்றிலைப் பாக்கு வாங்குவதி லிருந்து மோட்டார் கார் வாங்குவதுவரை எதற் கெடுத்தாலும் காத்து நிற்கத்தான் நேரிடுகிறது.

வாங்குவது போகட்டும். கொடுப்பதற்கும் சில சமயங்களில் ‘கொடுக்குப் பிடித்து’ நிற்கிறோம்!

வீட்டில் பூதம்போல் காக்கப் பயந்து பணத்தைப் பாங்கியிலேயே போட்டுவைக்கப் போனால் அங்கேயும் காத்திருந்துதான் போட முடிகிறது!

நோயாளிகளைக் காத்திருக்க வைப்பவர் தான் பேர்பெற்ற டாக்டர் என்று ஒரு பேச்சு உலவுகிறது. காய்ச்சல் என்று ஆஸ்பத்திரிக்குப் போனால் அங்கே காத்திருந்து டாக்டரைப் பார்ப்பதற்குள் காய்ச்சலோடு தலைவலி, வயிற்றுவலி, நெஞ்சு வலி எல்லாம் சேர்ந்துகொள்வது தனிக் கதை.

வீட்டிலிருப்பவர்கள் எப்போது வெளியே போவார்கள் என்று திருடர்கள் காத்திருப்பார்கள். சந்தர்ப்பத்தை எதிர் நோக்கிக் காதலர்கள் காத்திருக் கிறார்கள்.

கடற்கரையிலோ பூந்தோட்டத்திலோ சந்து பொந்துகளிலோ காத்திருக்கும் கா தலிகள் ‘காத்திருந் தேன், காத்திருந்தேன் காலமெல்லாம் காத்திருந் தேன்’ என்று பாடுகிறார்கள். காத்திருக்க வைப்பது கா தலின் லட் சணங்களில் ஒன்றாகும்.

பிரமுகர்களைப் பேட்டி காண்பதற்காக காத்திருப்பது பிரபலமான சங்கதி.

தினசரிப் பத்திரிகை எப்போது வரும் என்று வாசகர்கள் காத்துச்கிடக்கிறார்கள். தாம் எழுதிய விஷயம் அதில் எப்போது வரும் என்று எழுத்தாளர் கள் காத்திருப்பார்கள். இவர்களிடம் பத்திரிகையை விற்றுவிட்டுக் காசு வாங்குவதற்காகக் கடைக்காரர் காத்து நிற்பார். ஆக, சுற்றி வளைத்துப் பார்த்தால் எந்தவொரு மனிதனும் எதற்காகவேனும் எங்கா கிலும் காத்திருப்பது தவிர்க்க முடியாத விவகாரமாயிருக்கிறது.

காத்திருக்க வைக்காமல் உடனுக்குடன் வருகிறவர் களைக் கவனித்து அனுப்பும் அதிகாரிகளோ அலுவலர் களோ அகிலத்தில் எந்தப் பகுதியிலாவது அகப் படுவார்களா என்பது சந்தேகம் தான்.

காத்திருத்தல் என்பது கடவுள் மனித ஜீவனைச் சிருஷ்டிக்கும்போதே அதன் தலையில் எழுதிவிடும் விதி போலும்!

பத்து மாத காலம் நம்மைக் காத்திருக்க வைத்துத்தானே ‘சிங்காரப் பாப்பா’ நம் கைகளில் தவழுகிறது.

அப்போதிருந்தே ஆரம்பமாகி விடுகிறது காத்திருத்தல்.

முதலில் நோய்த் தடுப்புக்கு ஊசி போட ஆஸ்பத்திரியில் காத்திருக்கிறது குழந்தை. அப்புறம், பள்ளிக்கூடத்தில் இடத்துக்கு, தேர்வு எழுதிவிட்டு முடிவுக்கு, முடிவு தெரிந்ததும் வேலைக்கு, வேலை கிடைத்ததும் திருமணத்துக்கு திருமணமானதும்…… காத்திருக்க வேண்டிய ஒரு பிறவியைப் புதிதாகப் பெற்றெடுக்கக் காத்திருத்கிறார்கள்.

நம்மைப் பூரணமாக வெற்றிகொண்ட ஒரு பழக் கம்…காத்திருத்தல், அதற்காக எவ்வளவு காலம் காத் திருந்ததோ அது?

இப்போது யாருமே காத்திருப்பதைப் பற்றிப் பயப்படுவதில்லை. கவலைப்படுவதுமில்லை. வேறு வழி யில்லாமல் அதற்கு முன்கூட்டியே நாம் தயாரா கிறோம்.

பிற்பகல் இரண்டு மணிக்கு ஒரு காரியம் இருந் தால்—ஒரு பிரமுகரைப் பார்க்க வேண்டுமானால் காலை ஆறு மணிக்கே சென்று காத்திருக்கத் தொடங்கு கிறோம்.

இப்படிக் காத்துக் கிடந்து கடைசியில் அந்தக் காரியம் நடைபெறாமல் வீடு திரும்ப நேரும்போது தான் மனுசனுக்குப் பற்றிக்கொண்டு வருகிறது.

‘கடவுள் மனுசனாகப் பிறக்க வேண்டும். கால் கடுக்கக் காத்துக் கிடந்து வாடவேண்டும்’ என்று சபித்த பின்னரும்கூட ஆத்திரம் அடங்காது.

‘என்னய்யா, வேலை மெனக்கெட்டு இவ்வளவு நேரம் காத்திருந்தேனே. இப்படித் திருப்பியடிக்கி றீங்களே, அடுக்குமா இந்த அநியாயம்?’ என்று குமுறிக் கொத்தளித்தால், ‘தப்பு உங்களுடையது தானே. அந்த அத்தாட்சியை எடுத்து வராததற்கு நாங்கள் என்ன செய்வோம்?’ என்பார்கள். நாம் தலை குனிகிறோம்.

அது ஒரு பேருண்மை தான். இந்தக் காலத்தில் எந்தக் காரியத்துக்கும் அத்தாட்சிகள் தாம் தேவைப் படுகின்றன.

மனிதனைப் பார்த்துக்கொண்டே, நீ மனிதன் தான் என்பதற்குரிய அத்தாட்சிகள் எங்கே என்று கேட்கக் கூடிய காலம் இது!

ஓர் அத்தாட்சி பெறுவதற்கு பெறுவதற்கு மற்றும் பல அத்தாட்சிகள் துணை புரியவேண்டும். மொத்தத்தில் இந்த அத்தாட்சிகளைப் பெறுவதற்காக நாம்எவ்வளவு நேரமோ காத்துக் கிடந்திருப்போம்?

அத்தாட்சிகள் எனும் நூலின் ஆதரவில்தான் வாழ்க்கை என்னும் பட்டம் வானளாவப் பறக்கிறது எனலாம்! சர்வம் அத்தாட்சி மயம்!

இந்த இடத்தில் ஒரு சின்னக் குறிப்பு, அதாவது அத்தாட்சி என்று சான்றிதழ். சர்டிபிகேட், தஸ்தா வேஜு போன்றவற்றையே இங்கு குறிப்பிடுகிறேன்- ‘அத்தாச்சி’யையல்ல!

‘அத்தாச்சி மணி பத்தாச்சி அண்ணனுக்குச் சோறுபோட மணியாச்சு’ என்கிற வேடிக்கைப் பாட்டு, சம்பந்தமில்லாமல் இந்தச் சமயத்தில் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது! நிற்க…

ஒரு தனி மனிதனுக்குச் சுமார் ஐம்பது அத்தாட்சிகள் உள்ளன.

பிறப்புச் சான்றிதழ்

படிப்புச் சான்றிதழ்

அலுவல் சான்றிதழ்

அடையாளக் கார்டு

குடியுரிமைப் பத்திரம்

‘டிரைவிங் லைசன்ஸ்’…அது இது என்று சில பேர் ஐம்பதுக்கு மேலும் பல அத்தாட்சிகளை வைத்திருப் பார்கள்.

ஒருவருக்கே இத்தனையென்றால் ஏழெட்டுப்பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு எத்தனையிருக்கும்? சேர்த் துக் கட்டினால் ஒரு ‘லோரி’யில் ஏற்றலாமே!

‘ஒரு காரியத்துக்காக ஏதேனுமோர் அலுவலகத் துக்குச் செல்லும்போது இவை பூராவையும் அள்ளிக் கொண்டு போனால் தான் அதிசாரிக்குத் திருப்தி எற்படும்; காரியமும் முடியும். அவற்றில் ஒன்றிரண்டு இல்லாவிட்டால்.. காரியம் முடியாததோடு நாம் காத்துநின்ற நேரமும் வீணாகி அந்த அதிகாரியின் கோபத்துக்கும் ஆளாகிறோம்.

இந்தப் பரிதாபத்திலிருந்து மீள்வ தற்காகப் பல நாள் சிந்தித்துக் கடைசியில் மனப்பாடம் என்னும் மார்க்கத்தைக் கண்டுபிடித்தேன்.

அதன்படி, இப்போது என்னுடைய குடும்பத்துக்கு உரிய நூற்றுக்கணக்கான அத்தாட்சிகள் அவ்வளவும் எனக்கு எழுத்துக்கு எழுத்து மனப்பாடம்!

அடையாளக் கார்டு எண் வேண்டுமோ? ‘பட் பட், டென்று பதில் சொல்வேன்.

மனைவியின் பாஸ்போர்ட் நம்பரா? அவளுக்கு நகை வாங்கிய ரசீது நம்பரா? எதுவானாலும் உடனே பகர்வேன்.

குழந்தைகளின் பிறந்த தேதி விவரமா? பிறப்புச் சான்றிதழ்களின் இலக்கங்களா?-எல்லாமே எனக்கு அத்துபடி!

மாணவர்கள் பரீட்சைக்குப் படிக்கிற மாதிரி பலமாத காலம் இரவு பகல் கண் விழித்து உருப் போட்டதன் பலன் அது? சும்மா அல்ல.

இந்த மனப்பாடத்தின் மகத்தான உதவியுடன் எத்தனையோ அலுவலகங்களில் எவ்வளவோ காரியங் களைச் சாதித்துக் கொண்டதுண்டு—அத்தாட்சிகள் இல்லாமல்!

ஒரு சமயம் என் குழந்தையைப் பள்ளியில் பதிவு செய்யச் சென்றிருந்தேன். கால் கடுக்கப் பல மணி நேரம் காத்திருந்துவிட்டு அதிகாரி முன் போய் நின்றேன். எடுத்த எடுப்பிலேயே அவர் கேட்டார், ‘எங்கே குழந்தையின் பெர்த் சர்டிபிகேட்?’

‘கொண்டுவர மறந்துவிட்டேன். ஆனால். இன்ன தேதியில் இன்ன ஆஸ்பத்திரியில் அக்குழந்தை பிறந்தது என்கிற சரியான விவரமும் சர்டிபிகேட் நம்பரும் எனக்குத் தெரியும்’-சிறிதும் தயக்கமின்றிக் கணீரென்ற குரலில் கூறினேன்.

அதிகாரி ஒருதரம் என்னை முறைத்துப் பார்த்து விட்டு ‘நீ சொல்வதை எப்படி நம்புவது?’ என்றார்.

‘அதே சர்டிபிகேட்டை நாளைக்கு எடுத்துவந்து காட்டுகிறேன். ஒப்பிட்டுப் பார்த்துக்கொண்டு அப்புறம் கேளுங்கள்’, என்றேன் சவால் விடும் தோரணையில்.

‘சரி. நீ வெகுநேரம் காத்து நின்றிருக்கிறாய். வெறுமனே திருப்பியனுப்பவும் எனக்கு மனசில்லை, விவரங்களைச் சொல். பதிக்கிறேன். ஆனால், நாளைக்கு அதை எடுத்துவந்து காட்ட மறந்து விடாதே…தெரியுமா?’ என்றார்.

காரியம் முடிந்தது! மனப் பாடத்தின் மகிமையே மகிமை! இதுபோல் பல சந்தர்ப்பங்களில் மனப்பாடம் கை கொடுத்து உதவியிருக்கிறது. அதை எண்ணி எண்ணி நான் பெருமை கொள்ளாத நேரமேயில்லை!

சிலபேர் வேறு எது எதையோ மனப்பாடம் செய்துகொண்டு பெருமைப் படுகிறார்கள்—விஷயம் தெரியாதவர்கள்.

இன்றைய உலகில் இதுவன்றோ மிகவும் அவசியமான முயற்சி ஒவ்வொருவருக்கும் தேவைப்படும் படிப்பு! என்னைப்போல் எல்லாரும் அத்தாட்சிகளை மனப்பாடம் செய்துகொண்டார்களானால் எவ்வளவோ சௌகரியமாயிருக்குமே-அவர்களுக்குத்தான்!

இந்த நல்ல எண்ணத்தோடு நான் கூறுவதை யாருமே செவிமடுக்க மறுக்கிறார்களே, ஏன்? ‘அத்தாட்சிகளைக் கரைத்துக் குடியுங்கள். என்னைப் பின் பற்றுங்கள்’ என்று நான் பிரச்சாரம் புரிவதைப் பார்த்துச் சிரிக்கிறார்களே, ஏன்?

ஏனோ தெரியவில்லை-விடாப்பிடியாக என் பிரச்சாரம் தொடர்ந்தது. வலுத்தது என்னைக் கண்டதும் மற்றவர்கள் ஓடி ஒளிய முயன்றாலும் விடுவதில்லை. விரட்டிப் பிடித்து உபதேசிப்பேன்.

இருபத்து நான்கு மணி நேரமும் என் பேச்சும் மூச்சும் அதே பிரச்சாரம் தான்!

அண்மையில் எனக்கு அப்படியோர் அனுபவம் ஏற்படவில்லையென்றால் என் பிரச்சாரம் எங்குபோய் நின்றிருக்குமோ? நான் எங்கேபோய் சேர்ந் திருப்பேனோ?

மகப்பேறு மருத்துவமனையில்—அதாவது பிரசவ ஆஸ்பத்திரியில் சேர்ப்பிக்க மனைவியைக் கூட்டிப் போனேன். அங்கிருந்த அதிகாரி என்னிடமிருந்த அத்தாட்சிகளைப் பார்த்துக் குறித்துக்கொண்டு மேலும் விவரங்கள் கோரினார். எனக்குத்தான் அனைத்தும் மனப்பாடமாயிற்றே! சளைப்பேனா?

சுமார் இருபது கேள்விகள் இருக்கும். ‘பட்பட்’ டென்று வீசினேன் பதில்களை! எழுதிக்கொண்டார். கடைசியில் ‘உங்களுக்கு இதற்கு முன் எத்தனை பிள்ளைகள்’ என்று கேட்டார்.

‘பட்பட்’—அதாவது உடனே பதில்!

‘அந்தக் குழந்தைகளின் பிறந்த தேதி?’ ‘பட்பட்’-பட்டாசு வெடிப்பதில்.

‘அவற்றின் பிறந்த சான்றிதழ்களின் நம்பர்?”

‘பட்பட்’-எனது சடபுடாப் பதிலைக் கேட்டு அசந்து போனார் அதிகாரி. பெருமையுடனும் தலைக் கனத்தோடும் நிமிர்ந்து நின்று புன்னகை பூத்தேன், அப்போது கேட்டாரய்யா ஒரு கேள்வி;

‘அந்தக் குழந்தைகள் பிறக்கும்போது இருந்த எடை எவ்வளவு?’

என் தலையிலே அடி விழுந்தாற்போலிருந்தது. இது நான் மனப்பாடம் செய்யாத விஷயம். இதை யெல்லாம் எங்கே கேட்கப் போகிறார்கள் என்று அலட்சியமாக விட்டுவைத்த விவகாரம். கேட்டு விட்டார்களே!

இப்படி விட்டு வைத்த சேதிகள் இன்னும் எத்தனை உள்ளனவோ? எது எதைக் கேட்கப் போகிறாரோ இவர்?

தலை சுற்றி மயக்கமுற்று நினைவிழந்து தடா லென்று விழுந்துவிட்டேன்.

விழும்போது சரியாக மணி 6-29! நினைவு மீண்டு நான் கண் விழித்தபோது நேரம் 6-30! ஒரே ஒரு நிமிடத்திற்குள் எனக்கு மயக்கத்தைத் தெளிவித்து விடடார்களே-காத்திருக்க விடாமல்! அதுதான் ஆச்சரியமான சங்கதியாக எனக்குத் தோன்றுகிறது!

– மீன் வாங்கலையோ, முதற் பதிப்பு: 1968, மாதவி இலக்கிய மன்றம், சிங்கப்பூர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *