வெடில் மாணிக்கம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 2, 2022
பார்வையிட்டோர்: 2,555 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஊரில் மாணிக்கம் என்று கேட்டால் யாருமே தெரியாது என்றுதான் சொல்லுவார்கள். ஆனால் வெடில் மாணிக்கம் என்று கேட்டால் சிறுபால் குடிப்பிள்ளை கூடக் காட்டும்.

ஏன் இப்படிப் பிரபல்யம் என்றா கேட்கிறீர்கள்? விடிந்தால் பொழுதுபடும் வரை பொழுது பட்டால் விடியும் வரை அதாவது சதா இருபத்தி நான்கு மணித்தியாலமும் புழுகுவதில் விண்ணன்.

சிறிய வெடிப்புழுகு தொடக்கம் பெரிய அண்டப் புழுகு வரை புழுகியே தள்ளுவார். இவருடைய வெடிப்புழுகு கதையைக் கேட்டு வயிற்றில் இருக்கும் குழந்தை கூடப் பிறந்து விடும்.

அந்த அளவிற்கு வெடி விடுவதென்றால் அவரைப் பற்றிக் கூறவும் வேண்டுமா? இதனால் அவரை வெடில் மன்னன் மாணிக்கம் என்று அழைப்பர். அதையே வெடில் மாணிக்க மென்றும் சுருக்கமாக அழைப்பதுண்டு.

எச்சில் கையால் கூட காக்கா துரத்தாத வெடில் மாணிக் கம் சாதாரண ஆள் எனநினைத்து விடாதீர்கள். அமெரிக்கா வில் என்ஜினியராக இருந்தவர். அவருடைய வீட்டிற்கு ஈ கூடப் போவதில்லை. ஆனால் அவருடைய அமெரிக்க வெடிகளை கேட்டு ரசிப்பதற்காக வேலையில்லா கூட்டங்கள் அங்கு செல்லத் தவறுவதேயில்லை.

அன்றும் வழமைபோல வேலையில்லாக் கூட்டம் அவரைச் சூழ்ந்து கொண்டு அவருடைய அமெரிக்க வெடிகளைக் கிளறத் தொடங்கியது.

‘மாணிக்க அண்ண! நீங்க அமெரிக்காவில் எந்தக் கொம்பனியில் வேலை செய்தனீங்க’ என்று மாணிக்க அண்ணனின் வெடிலுக்கு வித்திட்டான் சங்கர்.

‘அத ஏண்டாம்பி கேட்கிறயள். நான் வேலை செய்தது ஒரு கோழி முட்டைக் கொம்பனி. அதில் நான் என்ஜினிய ராக இருந்தனான்.

அமெரிக்கா வல்லரசு நாடு தானே. அதால எங்களுக் கெல்லாம் துவக்குத் தந்திருந்தவங்க. எங்கட கொம்பனியில் கோழி முட்டையைக் குடிக்கிறதுக்காக புறாக் கூட்டம் வாறது. சும்மாவெண்டாலும் அமெரிக்கப் புறாவெலுவா. அதனால எல்லாம் வெள்ளை வெளேர் என்று இருக்கும். ஒருநாள் கோழி முட்டையைக் குடிக்கிறதற்காக ஒரு புறாக் கூட்டம் வந்தது.

அது எம்மாத்திரம் எண்டு தெரியுமா? எனக்குச் சரியான கோபந்தான் வந்தது. உடனே எடுத்தான் துவக்க . துவக்கக் கண்டா புறா நிக்குமா? அப்படியே கூட்டமாகப் பறந்தாங்க. நான் உடனே துவக்க சுத்திப் போட்டு வைச்சேன் ஒரு வெடி! அதை ஏண்டா தம்பி கேட்பான்? அந்தச் சன்னம் சுத்திச் சுத்திப் போய்ப்பட அப்படியே மல்லிகைப்பூச் செரியிறாப் போல கொட்டுப்பட்டுச்சிடா தம்பி புறாவெல்லாம்.”

கதையைத் தொடர்வதற்காக. ‘பிறகு என்ன நடந்தது!’ என்றான் புஸ்பராஜ்.

மாணிக்க அண்ணன் கையிலிருந்த சுருட்டை இரண்டு இழு இழுத்து ஒருமுறை செருமிக்கொண்டு தொடர்ந்தார்.

‘புறாவைச்’ சுட்டதை கண்ட எங்கட வெள்ளைக்கார பொஸ்சிற்கு என்னை நல்லாப் புடிச்சுப் போச்சி. அதனால் என்னை மாணிக்ஸ் … மாணிக்ஸ்..என்று அன்போடு அழைத்து அவரோட எல்லா இடமும் கூட்டிப் போவார்.

ஒரு நாள் நானும் எங்கட வெள்ளைக்கார பொஸ்சும் ஜீப்பில போய்க் கொண்டிருந்தம். ஆனா இங்கத்தையப் போல ரோட்டால போரல்ல அங்கெல்லாம் தண்டபாலத் தாலதான் ஜீப் ஓடும்.

அப்ப ஜீப்பில் தண்டவாளத்தால் இருவரும் போய்க் கொண்டிருக்கம் நடுத் தண்ட பாளத்தில் இரண்டு சிங்கம் நிண்டுது.

எங்களுக்கு என்ன செய்யுற தென்றே தெரியாமல் போயிற்று ஏனெண்டா ஆண் சிங்கத்தைச் சுட்டால் பெண் சிங்கம் எங்களில் பாயும். பெண் சிங்கத்தைச் சுட்டால் ஆண் சிங்கம் எங்களுக்கு பாயும்.

எங்கட பொஸ் சீரியஸாக சிந்தித்துக் கொண்டிருந்தார் நான் உடனே சிம்பிளா இறங்கி, துவக்கை எடுத்து வைத்தேன் ஒரு வெடி. அதை ஏண்டா தம்பி கேட்பான்? அந்தச் சன்னம் ரெண்டு சிங்கத்திற்கும் இடையால போய் அந்தத் தண்டபாலத்தில் அடிச்சுத் திரும்பி வந்து ஒரு சிங்கத்தைக் கொன்று போட்டு திரும்பி அடுத்த சிங்கத்தையும் கொண்டு போட்டுது.

இதைப் பார்த்த பொஸ்சிற்கு சந்தோசம் பொறுக்காமல் ‘யூ ஆர் கிளவர்’ என்று கூறிக் கை தந்தார்.

‘அப்ப நீங்க அமெரிக்காவிலேயே பெரிய வெடிக்காரன் போல…’ என்று கதையைத் தூண்டினான் சங்கரன்.

‘நீங்க சரியான கெட்டிக்கார ஆள் தான் மாணிக்க அண்ண’ என்றார்கள் சங்கரனும், கந்தசாமியும் சேர்ந்து.

‘உங்களுக்கு எப்படியண்ண தலையில் மொட்ட விழுந்தது’ என்று கேட்டான் புஸ்பராஜ்.

‘அது ஒரு பெரிய கதைடா தம்பி, அந்த நாளையில் எனக்கு நல்ல அடர்த்தியான தலைமயிர். நான் அமெரிக்காவில் இருக்கும் போது அங்கத்தைய நாகரிகப்படி நல்லாக் கிப்பி வளர்த்திருந்தனான்.

ஒரு நாள் நானும் பொஸ்சும் ஜீப்பில் போய்க்கொண்டிருந்தம். அது ஒரு சரியான யானைக் காடு. ஒரு யானை வந்து எங்கட ஜீப்பை மறிச்சுப்போட்டுது.

அப்போது எங்கட பொஸ் முன்னுக்கு ஜீப்பை விட ஏலாமல் நடுங்கிக்கொண்டிருந்தார். உடனே யானை ஜீப்பிற்குக் கிட்ட வந்து தும்பிக்கையால் என்ட கிப்பியில் பிடிச்சுது.

நான் என்ன செய்தனென்டா?, எட்டி யானையிட வாலில பிடிச்சி சுண்டிப் போட்டு தூக்கி ஒரு எறி எறிஞ்சன்.

யாளை ஒரு பக்கம் போய் விழுந்தது. விழுந்த யானை சும்மா விழுந்ததா?. இல்லை தும்பிக்கையோட முன் கிப்பித் தலைமயிரைக் கொண்டு போயிற்று. அதற்குப் பிறகு தான் எனக்கு முன் மொட்டை பின் குடும்பியாக வந்தது.

‘இவ்வளவு கெட்டித்தனமாக வெள்ளைக்காரக் கொம்பனியில வேலை செய்தனீங்க, ஏன் அண்ணன் வேலையை விட்டுப் போட்டு மட்டக்களப்பிற்கு வந்தனீங்க’ என்று குரல் கொடுத்தான் சங்கரன்.

‘அத ஏன்டா கேட்பான் தம்பி? யானையை வாலில் பிடிச்சு எறிஞ்ச கெட்டித் தனத்தைப் பார்த்து, எனக்கு எங்கட பொஸ் புறமோசன் தந்தார். அதோட ஒபிசில ஏசி (எயர் கண்டிஷன்) அறையும் தந்தார்.

நான் ஏசி அறைக்குள்ள போய் கதிரையில் இருந்தன். இருந்தவுடனே எனக்கு மட்டக்களப்பில் கச்சான் காற்றுக் காலத்தில் மாமரத்திற்குக் கீழே பாய் போட்டுப் படுத்துக் கொண்டிருக்கிற எண்ணம் தான் வந்தது.

அதனால கதிரையில் இருந்து பைலை முகத்தில் வாசிக்கிற மாதிரி வைத்துக்கொண்டு, பூனை கண்ணை மூடித்து பாலைக் குடிக்கிற மாதிரி நித்திரை கொண்டுற்றன்.

கொஞ்ச நேரத்தால் எங்கட பொஸ் வந்திருக்கார். ஆனால் நான் நல்ல நித்திரை, பல தடவை கூப்பிட்டுப் பார்த்திருக்கார் . நான் எழும்பவே இல்லை.

வெள்ளைக்காரனென்ட படியால கடமை நேரத்தில் இப்படிப் படுத்தது அவருக்கு சரியான கோபம் வந்திட்டு போல.

அடுத்த நாள் காலையில் இலங்கைக்குப் போற எல்லா ஆயத்தமும் செய்து வைத்திருந்தார்.

நான் பலமுறை மன்றாடிப் பார்த்தன். கடமை நேரத்தில் கடமையில் இருந்து தவறியது பிழையே பிழை என்று இலங்கைக்கே திருப்பி அனுப்பிட்டார்.

நான் என்ன செய்வதென்று முன் மொட்டை பின் குடும்பி தான் மிச்சம் என நினைத்துக்கொண்டு இலங்கைக்கு வந்தேன். என்று கூறி மூக்குக் கண்ணாடியைக் கழற்றிக் கண்ணீரைத் துடைத்தார் வெடில் மாணிக்கம்.

– ஓ. கே.குணநாதன் நகைச்சுவை கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1993, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *