சிரிப்பு வழக்கு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 2, 2022
பார்வையிட்டோர்: 2,791 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

என்றுமில்லாதவாறு அன்று அந்த அரண்மனை வாசலில் கட்டப்பட்டிருந்த ஆராய்ச்சி மணி அடித்து ஓய்ந்தது.

மணியோசையைக் கேட்ட அரசன் திடுக்கிட்டெழுந்து ‘தளபதியாரே! என்றுமே இல்லாதவாறு இன்று எமது ஆராய்ச்சி மணி ஒலிக்கிறது. எங்கோ ஒரு மூலையில் தவறொன்று நடந்திருக்க வேண்டும். எனவே உடனடியாகச் சென்று அரண்மனை வாயிலைப் பாரும் தளபதியாரே!’

ஊதிப் பருத்த யானையின் தோற்றத்தையுடைய தளபதி பூனையின் வீரத்துடன் பதுங்கிப் பதுங்கி அரண்மனை வாயிலை நோக்கிச் சென்றார்.

ஆனாலும் அவருக்குப் பயம் பீடித்துக்கொள்ளவே அருகில் நின்ற ஆண்டவன் படைப்பிலே எல்லோரையும் படைத்து விட்டு மிஞ்சிய மிச்ச சொச்சங்களைக்கொண்டு படைக்கப்பட்ட தோற்றத்தைக் கொண்ட ஒன்றரை முழக் கொட்டாசான காவலாளியையும் உதவிக்கு அழைத்துக்கொண்டு இருவருமாக அரண்மனை வாயிலை நெருங்கினர்.

அரண்மனை வாயிலை நெருங்கியதுதான் தாமதம். இருவரும் பதறியடித்துக்கொண்டு அரசனை நோக்கி ஓடி வந்தனர்.

அரசனைக் கண்ட இருவரும் ‘அரசே! ஆபத்து ! ஆபத்து!’ என்று ஓலமிட்டனர்.

அதைக் கேட்ட அரசன் என்ன ‘தளபதியாரே உளறுகின்றீர்!’ என்று அதட்டினார்.

‘அரசே! எமது அரண்மனையை நோக்கி யாரோ படை எடுத்து வந்திருக்கிறார்கள்!’

இப்பேச்சைக் கேட்ட அரசருக்குக் கோபத்தால் மீசை துடிக்கவே, ‘தளபதியாரே! படையெடுப்பா! அதுவும் எமது அரண்மனையை நோக்கியா? அப்படியானால் அது யாரது?’

‘ஆம் அரசே! எமது அரண்மனையைப் புடைசூழ பெண்கள் குழாம் ஒன்று படையெடுத்து வந்திருக்கிறது!’

‘அப்படியா தளபதியாரே! உடனடியாகச் சென்று அவர்களிடம் கனரக ஆயுதம் என்ன உள்ளதென்று பார்த்துவாரும்’ என்றவாறு நீண்ட பெருமூச்சொன்றை விட்டவண்ணம் தனது மீசையை ஒரு தடவை தடவிக்கொண்டான் அரசன்.

அரசனின் கட்டளையை ஏற்று அரண்மனை வாயிலை அடைந்த தளபதி சில நிமிடங்களில் மீண்டும் பரபரப்புடன் ஓடிவந்தான்.

அவன் வந்ததும் வராததுமாக அரசனின் காலிலே விழுந்து காலைக் கட்டிப் பிடித்துக்கொண்டு ‘அரசே! நாம் அவர்களுடன் யுத்தம் செய்து வெல்ல முடியாதளவிற்கு கனரக ஆயுதங்களுடன் வந்திருக்கின்றனர்’.

‘அப்படியென்ன கனரக ஆயுதம் வைத்திருக்கின்றனர் தள பதியாரே!’

‘அரசே! காலிலே செருப்பு!…கையிலே பத்திரிகையும் பேனாவும்!’

‘ஆ..ஆ..’ என அசட்டுச் சிரிப்புச் சிரித்துக்கொண்ட அரசன், தளபதியை நோக்கி ‘தளபதியாரே! உமக்கு என்ன பைத்தியம் கியித்தியம் பிடித்துவிட்டதோ! பத்திரிகையையும் பேனையையும் செருப்பையும் பார்த்து கனரக ஆயுதம் என்று கூறுகிறீரே! அது எப்படிக் கனரக ஆயுதமாக முடியும்!’

‘அரசே! ஆயுதமுனையைவிட பேனா முனையும் அதன் பத்திரிகையும் வலிமை கூடியது. ஆயுதமுனையால் வெல்லமுடியாததை பேனாமுனையால் வெல்லலாம். அதனால் தான் அதனைக் கனரக ஆயுதம் என்றேன்!’

‘தளபதியாரே! அப்படியாயின் செருப்பு..!’

‘அரசே! துப்பாக்கிக் குண்டடிபட்டு இறந்த ஒருவனை வீரன், மறவன் என்று உலகம் போற்றும். ஆனால் செருப்படி பட்டவனை கையாலாகாதவன், கோழை என்று சமூகம் தூற்றும். எனவேதான் துப்பாக்கியை விட செருப்பை கனரக ஆயுதம் என்று கூறினேன்.

‘சரி தளபதியாரே, உடனடியாக ஓடிச்சென்று எமது அரண்மனையைப் புடை சூழ்ந்திருக்கும் பெண்கள் கூட்டத்தை அழைத்து வாருங்கள்’.

அரசனின் கட்டளையைக் கேட்ட தளபதி துள்ளிக் குதித்து ‘கேற்’ வரை சென்று அவர்களை உள்ளே வர அனுமதித்தார் .

கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அரசனை நெருங்கியது. நெருங்கியதுதான் தாமதம் அக் கூட்டத்தில் இருந்த ஒரேயொரு ஆண்மகனான மொட்டைத் தலை தங்கராசா அரசனைப் பார்த்து, கையிலிருந்த பத்திரிகையை கமுக்கட்டுக்குள் இடுக்க் கொண்டு கூனிக்குறுகி நின்று பேச்சை ஆரம்பித்தார்.

“அரசே நான் உண்மை என்ற பத்திரிகையில் நகைச் சுவை எழுதுபவன் ஒரு விசித்திரமான வழக்குடன் வந்திருக்கிறேன். இந்த வழக்கைத் திர்த்து வைக்க வேண்டுமென்பதே இந்த அடியேனின் அவா”.

“நல்லது கதாசிரியரே. அடியெனின் வழக்கைத் தீர்த்து வைக்க நாமும் அவாக் கொண்டுள்ளோம். எனவே தாங்கள் வழக்கைக் கூறலாம்”.

இவ்வளவு இலகுவில் அரசன் தனது வழக்கை ஏற்றுக் கொள்ளுவார் என்று நினைத்திராத கதாசிரியருக்கு மகிழ்ச்சி பொங்க மகிழ்ச்சியால் தோன்றிய சிரிப்பில் கன்னம் குழி விழகி தோன்றிய எச்சிலை மென்று விழுங்கிக் கொண்டு வழக்கைக் கூற ஆரம்பித்தார்.

“அரசே உண்மை பத்திரிகையில் நகைச்சுவை எழுதி வருப வன் நான். ஆனால் எழுதப்படும் ஒவ்வொரு நகைச்சுவையும் ஆண்களின் வண்டவாளங்கனைக் குத்திக் குடைந்து, சிலம்படி செல்லையா, செருப்படி சிதம்பரம், மொட்டை மாணிக்கம், போன்ற தலையங்கங்களில் எழுதப்படுவது வழக்கம்.

அவை ஒவ்வொன்றும் முழுக்க முழுக்க ஆண்களையே சாடி இருக்கும். இதை பார்த்துப் பத்திரிகையில் படிக்கும் பெண்கள் கூட்டமோ , பெண்களைப் பற்றிய நகைச்சுவையே இல்லையா? அப்படியானால் ஆண்கள் கூட்டமெல்லாம் மொக்குக் கேஸ் கள்தானா? அதனால் தானே ஆண்களைப் பற்றிய நகைச் சுவை நிறைய வருகுது என்று ஒருவித கேலியான – கேள்வி களைப் பத்திரிகை மூலமாக் கேக்குறாங்க. என் மனது பொறுக்குதில்ல. அதனாலதான் அவங்களை எல்லாம் தேடிப் பிடிச்சு உங்க முன்னால நீதி விசாரணைக்காகக் கொண்டு வந்திருக்கிறேன்.

கதாசிரியர் கூறி முடித்ததும், அரசன் கதாசிரியரைப் பார்த்து ‘கதாசிரியரே, நீர் ஏன் பெண்களைப் பற்றி நகைச்சுவை எழுதுவதில்லை?’ என்று கேட்டார்.

அதற்கு கதாசிரியரோ ‘அரசே! தமிழ்ப் பெண்களுக்கு தக்க மரியாதை கொடுக்கும் நாடு எமது நாடு.

தாய்க் குலங்களைக் கட்டிக் காத்த கண்ணகி, துரோபதை போன்றவர்களுக்கு சிலை வைத்து பூசித்து வணங்கும் நாடு எமது நாடு. அப்படியிருக்கும் போது பெண்களைப் பற்றிக் கேலி செய்து நகைச்சுவை எப்படி எழுத முடியும்?

அதற்காகப் பெண்களைப்பற்றிய நகைச்சுவை இல்லை யென்றில்லை. உதாரணமாக ஒரு பெண்சாதியையும் புருஷனையும் எடுத்துக்கொண்டால் பெண்சாதிக்குப் புருஷன் அடிப்பது வழக்கம். அதுமட்டுமல்ல அரசே! இங்கிருக்கிற பெண்களையும் அழையுங்கள். ஆயிரம் ஆயிரம் நகைச்சுவை பெற முடியும்” என்று கூறினார்.

‘அப்படியா! நல்லது கதாசிரியரே! உமது விருப்பத்தின் பேரில் முதலாவது பெண்ணை அழைப்போம்!’ என்று கூறி ஒரு பெண்ணை அழைத்தார்.

கூட்டத்தில் இருந்து கிளிசல்கள் போல் உடம்பு முழுவதும் சிறு துவாரங்களைக் கொண்ட நவநாகரீக உடையணிந்த ஒரு பெண் அரசனை நோக்கி வந்தாள்.

இவ்வுடையைக் கண்ட அரசன் அப்பெண்ணைப் பார்த்து ‘நவநாகரீக மங்கையே வருக! மங்கையே! உமது சட்டைக்கு என்ன நடந்தது! வரும்போது ஏதும் முள்ளுக் கம்பி வேலியில் விழுந்தீரோ!’ என்று கேட்டார்.

அரசன் இப்படிக் கேட்டதும் அங்கிருந்த அனைவருமே கொல்லெனச் சிரித்துவிட்டார்கள். அந்தச் சிரிப்பொலியினூடே அப்பெண் மீண்டும் கூட்டத்துடன் சேர்ந்து ஒளிந்துகொண்டாள்.

மீண்டும் அரசன் இன்னொரு பெண்ணை வருமாறு அழைத்தான். அக்கூட்டத்திலிருந்து ஒரு பெண் அரசனை நோக்கிச் சென்றாள்.

அவள் அழகாக மெல்லிய நீல நிறத்தில் ‘கவுண்’ அணிந்திருந்தாள். அச்சட்டையின் இரண்டு புறத்திலும் சில அங்குல நீளத்தில் ஒரு வெட்டு இருந்தது.

இதைக் கண்ணால் ரசித்துக்கொண்ட அரசன் ‘பெண்ணே! நாட்டில் வாழ்க்கைச் செலவு கூடி மனிதன் உடுப்பதற்கே உடையில்லாமல் திண்டாடும் இந்த நேரத்தில் நீங்கள் சட்டையை கிழிச்சுப்போட்டுப் போட்டிருக்கிறீர்களே!’ என்று கூறினான்.

இதைக் கேட்ட அப்பெண் சிரிப்பை அடக்க முடியாமல் மறு பேச்சுப் பேசாமல் நைசாக நழுவிவிட்டாள்.

இதேபோல அவளைத் தொடர்ந்து இன்னொரு பெண் வந்தாள். அவள் பஞ்சாபி உடை அணிந்திருந்தாள்.

இதைக்கண்ட அரசனுக்கு மகிழ்ச்சி கரைபுரண்டோடியது.

உடனே அப்பெண்ணை நோக்கி இருந்து கதைத்த அரசன் எழுந்து ‘தமிழ்ப் பண்பாடுகளும் கலாசாரங்களும் மறைந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்திலே தமிழர்களின் கலா சார உடையான வாலா மணியும் சால்வையும் அணிந்து தமி ழர்களின் கலாசாரம் காக்க வந்திருக்கும் இளநங்கையே வருக ! வருக! உங்கள் வரவு நல்வரவாகுக!’ என்றான்.

இதைக் கேட்ட அப்பெண் திடீரென ‘அரசே! இது வாலா மணியும் பஞ்சாபியும் அல்ல! இது பஞ்சாபி’ என்றாள்.

இந்த வார்த்தை வந்ததும் மண்டபமே சிரிப்பொலியால் அதிர்ந்தது.

அரசனுக்குப் புதிய யோசனை ஒன்று தோன்ற அக்கூட்டத் தில் நின்ற ஒரு வயதான கிழவியை அழைத்தான். அக் கிழவி ஏதோ நாட்டூரிலிருந்து வந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவள் ‘பிளவுஸ்’ அணியாமல் கண்ணாடி போன்ற சேலையை அணிந்திருந்தாள்.

அரசன் அவளைப் பார்த்துப் பல கேன்விகளை தொடுக்க ஆரம்பித்தார்.

‘பாட்டி! நீங்க உடுத்திருக்கிற சேலைக்கு பெயரென்ன?’

‘சிலுக்குடா மோனை!’

‘அப்படியெண்டா…பாட்டி நீங்க சேலை உடுத்திருக்கிறது என்ன ஸ்ரைல்?’

“இதுதாண்டா தம்பி ஜெயமாலினி இறசுற்றயில் எண்டுது!’

‘நல்லது பாட்டி! இன்றைக்கு என்ன சாப்பிட்டீங்க?’

நதியாச் சொதி (முருங்கை இலை) ஸ்ரீதேவி பொரியல், (அப்பளம்) குயிலி குளம்பு (மரவள்ளி) அவ்வளவு தானடாம்பி’ என்று கூறி முடித்தாள் பொக்கு வாய்க் கிழவி.

இதைக் கேட்டதும் அனைவரும் மண்டபம் அதிர வயிறு குலுங்கச் சிரித்தனர். அத்தோடு ஆண்கள் நகைச்சுவையை குறை கூறிய பெண்களும் சேர்ந்து சிரித்துக்கொண்டேயிருந்தனர்.

– ஓ. கே.குணநாதன் நகைச்சுவை கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1993, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *