கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: August 27, 2018
பார்வையிட்டோர்: 24,623 
 
 

எல்லாருமே அலுவலகத்தில் பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். மணியும் 1:30 நெருங்கிக் கொண்டிருந்தது. அருகில் இருப்பவருக்கு பசி வர ஆரம்பித்துவிட்டது. எங்கள் டீமில் அனைத்து நபர்களையும் சாப்பாட்டுக்கு ஒன்றாக அழைத்துச் செல்வது என்பது கடினமான பாறையை சிறு ஆணி கொண்டு பிளக்க முயற்சிப்பதாகும். இருந்தாலும் ஒவ்வொரு நாளும் அதில் வெற்றியே கிடைக்கும்.

ஒரு வழியாக எல்லாருமே சாப்பிட வந்தாயிற்று. இப்போது இன்னொரு பிரச்சனை என்னவென்றால் இடம் தேட வேண்டும். ஒன்று இரண்டு என்றால் பரவாயில்லை. நாங்களோ பத்து பேர் உள்ளோம் அதுவும் சேர்ந்தே தான் சாப்பிடுவோம். இன்று ஒரு நண்பர் மட்டும் வீட்டிலிருந்தே வேலை செய்கிறார் ஆகவே இன்றைய கணக்கில் ஒன்பது நபர் தான்.

ஒவ்வொரு டேபிள் அருகில் சென்று அவர்கள் சாப்பிட்டார்களா இல்லையா என்ற நோட்டமிட்டுக் கொண்டே கடைசி டேபிள் வரை சென்று மறுபடியும் அப்படியே திரும்பி வந்தோம். ஒரு வழிய ஆறு பேர் அமரும் படி இடம் கிடைத்தது. இந்த ஆறு பேரும் வீட்டில் இருந்து சாப்பாடு கொண்டு வந்தவர்கள். மீதம் உள்ள மூன்று பேரும் சாப்பாடு வாங்க வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர்.

அவரங்கள் வருவதற்குள் இடம் கிடைத்தால் நல்லது இல்லையேல் அருகருகே இருக்கை போட்டு சமாளித்துக் கொள்ளலாம் என்றபடி பேசிக் கொண்டிருந்தோம்.

உட்கார்ந்த கொஞ்ச நேரத்தில் அருகில் இருந்தவர்களும் நாங்க போடுற சத்தத்தில் விரைவாக சாப்பிட்டு விட்டு கிளம்பினார். அந்த நேரத்தில் மற்ற மூன்று நபர்களும் சாப்பாடு வாங்கி வந்தாயிற்று..

டேபிளின் கடைசியில் நான் . எனது வலப்புறம் முறையே முத்து பூர்ணா ராம் கடைசியில் மது. எனக்கு எதிரே நவீன் அவரின் இடப்புறம் முறையே தீபிகா கார்த்திக் மற்றும் லட்சுமி.

ஒரு வழியாக சாப்பிட ஆரம்பித்துவிட்டோம். ஒவ்வொரு நாளும் சாப்பிடும் போது ஏதாவது பேசுவது வழக்கம். முன்னெல்லாம் அரசியல் தொடர்பாக பேச ஆரம்பித்தோம் அதனால் சில பல கருத்து மோதலோடு நண்பருக்குள்ளேயே பிரச்சனை வருவது போல் தெரிந்ததால் அரசியல் பேச வேண்டாமென்று முடிவெடுத்து விட்டோம்.

சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே நண்பர் ஒருவர் இரண்டு மணிக்கு ஒரு மீட்டிங் இருக்குன்னு சொல்லிட்டு தன் கையில் கட்டியுள்ள வாட்சைப் பார்த்தார். உடனே தீபிகா வாட்சைப் பற்றி பேச துவங்கி விட்டார்.

அனைவரிடத்திலும் அவரவர்களின் வாட்ச் பற்றி பேசிக் கொண்டே வந்து கடைசியில் அவர் கேள்வி என் பக்கம் திரும்பியது.

ஏன் நீங்க வாட்ச் கட்ட மாட்டீங்களா என்று.

ஆம், பிடிக்காது என்றேன்.

சரி, ஏன் என்றார் தீபிகா.

பெருசா ஒண்ணும் காரணமில்லை என்றேன்.

அப்படி என்றால் சொல்ல வேண்டியதுதானே என்றார் பதிலுக்கு.

எங்கள் குழுவில் தெலுங்கு பேசும் நண்பர் ஒருவரும் உள்ளார். அவர் பெயர் தான் நவீன் எனக்கு எதிரே உட்காந்து கொண்டிருக்கிறார். அவருக்கு தமிழ் தெரியாத காரணத்தினால் ஏதாவது நாங்கள் தமிழில் பேசினால் அதை அப்படியே ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்ல வேண்டும்.

இப்போது நான் தீபிகாவுக்கு பதில்

சொல்ல வரும் நேரத்தில் நவீனிடம் முத்து நாங்கள் பேசிய உரையாடல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார்.

அதனுடன் முட்டாள்கள் தான் கைக்கடிகாரம் கட்டுவார்கள் என்று மகேஷ் சொன்னதாக ஆங்கிலத்தில் சொல்லிவிட்டார்.

இவர் சொல்லி முடித்ததும் நானும் தீபிகாவும் சிரிக்க ஆரம்பித்து விட்டோம்.

அங்கு ஒருத்தர் மட்டும் கண்களில் கோர வெறுப்பை உமிழ்ந்த படி என்னை உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கு நண்பர்கள் பொதுவாகவே சாப்பாட்டில் காரம் அதிகமாக சேர்ப்பார்கள். அதனாலோ என்னவோ அவர் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார்.

அவரின் கண்கள் என்னிடம் நெருப்பை உமிழ்ந்தன. என்னை மீறி என் உதடுகள் சிரிக்க எத்தனிக்கின்றன. உடன் இருக்கும் முத்துவும் தீபிகாவும் என்ன இருந்தாலும் நீங்க இப்படி சொல்லி இருக்கக் கூடாதென்று ஆங்கிலத்தில் சொல்லி சொல்லி

அவரை கூட கொஞ்சம் கோபமாக்கினார்கள்.

இங்கு நடந்தவைகள் எதுவும் முத்து மற்றும் தீபிகாவைத் தாண்டி யரையையும் தெளிவாக சென்றடையவில்லை. ஆதலால் லட்சுமி அங்கிருந்து என்னாச்சு என்ன பிரச்சனை என்று வேண்டுமென்றே பிரச்சனை உருவாக்குவது போல் கேட்டார்.

முத்து உடனே மகேசுக்கு வாட்ச் கட்ட பிடிக்காதம் என்றார் ஒரு புன்முறுவலுடன்.

லட்சுமி சலிப்போடு ஆமா அவருக்கு என்ன தான் பிடிக்கும் என்றார். இருந்தாலும் காரணம் தெரிந்திருக்க வேண்டும் என்ற ஆவலில் எதற்கு பிடிக்காதம் என்றார்.

ஏற்கனவே இங்கே சூடா இருக்கு அதிலேயும் முத்து சும்மா இல்லாமல் மேலும் ஒரு வார்த்தை சேர்த்து

அடி முட்டாள் தான் வாட்ச் கட்டுவாங்களாம் அதனால தான் அவரு கட்ட மாட்டேங்குறார் என்று சடக்குன்னு

ஒரு அணுகுண்டையே தூக்கி போட்டுட்டார்.

சபையில் என்னைத் தவிர அனைவருமே கையில் வாட்சோடு இருந்தனர். ஒவ்வொருவரும் என்னை வித்தியாசமாக பார்க்கத் துவங்கினர்.

யாரும் பார்க்காத மாதிரி முத்துவும் தீபிகாவும் சிரித்துக் கொண்டே இருக்கின்றனர். இருந்தாலும் மகேஷ் இப்படி நீங்க சொல்லிருக்க கூடாதுன்னு வேற அறிவுரை. இப்போது நான் அப்படி சொல்லலைன்னு சொன்ன கூட யாரும் நம்ப மாட்டார்கள்.

இந்தப் பக்கம் நவீனுக்குத் தான் கோபம் என்று நினைத்தால் தீபிகா முத்துவைத் தவிர அனைவருமே என்னிடம் கோபமாக உள்ளனர் என்பது எனக்கு புரியத் தொடங்கியது. அந்த கணத்தில் முத்து எதார்த்தமாக லட்சுமியைக் கூப்பிட்டு மகேஷ் கருத்தை பத்தி நீங்க என்ன நினைக்கீங்கன்னு கேட்டுட்டார்.

இவ்ளோ நேரம் அவங்க லட்சுமியா தான் இருந்தாங்க.

கொஞ்சம் கொஞ்சமா சந்திரமுகியா மாறிட்டு வந்து டக்குனு கோபப் பட்டுட்டாங்க.

வாட்ச் போடுறது அவங்கவங்க விருப்பம் இதுல யாருக்கும் தலையிட உரிமை இல்லை.

வாட்ச் போட்டவங்க முட்டாலும் இல்ல போடாதவங்க அறிவாளியும் இல்ல.

உங்க நடவடிக்கையில யாராச்சும் தப்பா பேசினா உங்களுக்கு எப்படி இருக்கும். அத மாதிரி தான மத்தவங்க வருத்தப்படுவாங்க அப்படி இப்படின்னு ரெண்டு நிமிஷம் விடாம என்ன திட்ட ஆரம்பிச்சுட்டாங்க.

முத்துவும் தீபிகாவும் ஒரு பக்கம் உட்கார்ந்த இருக்கையில் இருந்து விழாத குறையா சிரிச்சிட்டே இருக்காங்க. எனக்கு மனசுக்குள் கொஞ்சம் வருத்தம். நான் பண்ணாத தப்பிற்கு இப்படி திட்டு வாங்கிட்டு இருக்கோமே என்று. கோபத்தை அடக்கிக் கொண்டு நான் அப்படி சொல்லலைன்னு சொல்றேன் முத்து இடையில் வந்து பொய் சொல்லாதீங்க மகேஷ்ன்னு சொல்றார். எல்லாரும் அவரைத் தான் நம்புறாங்க.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று கூட யாரும் கேட்கவில்லை. கொஞ்ச நேரம் ஏதும் பேசாமல் உட்கார்ந்திருந்தேன் ஒரு வேளை என்னை தான் அவர்கள் முட்டாளாக நினைக்கிறார்களோ என்ற எண்ணத்தில்.

அனைவரும் சாப்பிட பின்பு கிளம்பலாம் என யாரோ ஒருவர் சொல்ல கை கழுவ எழுந்து நடந்து போய்க் கொண்டிருந்தோம்.

செல்லும் போது என் காதில் விழுந்தது

நீ தான அவனுக்கு திமிரு அதிகம்ன்னு சொன்ன என்று. திரும்பிப் பார்த்தால்

ஆறு பேர் சாப்பிட்டுக் கொண்டிருந்த அந்த டேபிளில் ஒருவர் உரையாடலை துவகுக்கிறார்..

Print Friendly, PDF & Email

4 thoughts on “வாட்ச்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *