முப்பத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நித்தியகல்யாணி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 7,241 
 

முப்பத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் நித்தியகல்யாணி சொன்ன விக்கிரமாதித்தனைக் கண்ட சாலிவாகனன் கதை

“கேளாய், போஜனே! நகரே ‘நவராத்திரி விழா’க் கோலம் பூண்டிருந்த சமயம் அது. மிஸ்டர் விக்கிரமாதித்தர் குடும்ப சமேதராகக் கடை வீதிக்குச் சென்று, அந்த வருடம் கொலு வைப்பதற்காகப் புதிய புதிய பொம்மைகளைத் தேடித் தேடி வாங்கிக்கொண்டிருந்தார். அதுகாலை அவரைக் கண்ட அவருடைய நண்பர் ஒருவர், ‘ஹெல்லோ, மிஸ்டர் விக்கிரமாதித்தன்! ஹெள ஆர் யூ?’ என்று விசாரிக்க, ‘விசாரிப்பதைத் தமிழில் விசாரிக்கக் கூடாதா, ஐயா?’ என்று விக்கிரமாதித்தர் கொஞ்சம் தமிழ்ப் பற்றோடு கேட்க, ‘இது கலப்பட யுகம் சுவாமி! இந்த யுகத்தில் அரசியல்வாதிகளைத் தவிர வேறு யார் எதில் அசலைத் தேடிக்கொண்டிருக்க முடியும்?’ என்று அவர் சிரித்துக்கொண்டே வந்து மிஸ்டர் விக்கிரமாதித்தரின் கையைப் பிடித்துக் ‘குலுக்கு, குலுக்கு’ என்று குலுக்க, இந்தக் காட்சியைக் கவனித்துக்கொண்டிருந்த பாதையோரத்துப் பொம்மைக் கடைக்காரர் ஒருவர் சட்டென்று எழுந்து தன் மேல் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக் கொண்டு நின்று, ‘வாருங்கள், வாருங்கள்!’ என்று விக்கிரமாதித்தரை அகமும் முகமும் ஒருங்கே மலர வரவேற்க, ‘யார் நீங்கள், ஏற்கெனவே என்னை உங்களுக்குத் தெரியுமா?’ என்று விக்கிரமாதித்தர் ஒன்றும் புரியாமல் அவரை விசாரிக்க, ‘இதற்கு முன் தெரியாது, இப்போதுதான் தெரியும். இவர் ‘ஹெல்லோ, மிஸ்டர் விக்கிரமாதித்தன்’ என்று சொன்னதும் நான் உங்களை இனம் கண்டுகொண்டுவிட்டேன்!’ என்ற அவர், ‘என் பெயர் சாலிவாகனன்!’ என்று சற்றே கூச்சத்துடன் தன் பெயரைக் கடைசியாகச் சொல்லி நிறுத்த, மிஸ்டர் விக்கிரமாதித்தர் திடுக்கிட்டுத் தம்முடைய கழுத்தைத் தொட்டுப் பார்த்துக்கொள்ள, சாலிவாகனன் சிரித்து, ‘என் பெயர் சாலிவாகனன் என்று சொன்னதும் உங்களுக்கு அந்தப் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதை ஞாபகத்துக்கு வந்து விட்டதுபோல் இருக்கிறது! பயப்படாதீர்கள், நானும் அந்தச் சாலிவாகனன் அல்ல; நீங்களும் அந்த விக்கிரமாதித்தன் அல்ல. என்னால் உங்கள் கழுத்து ஏன் துண்டாகப்போகிறது?’ என்று சிரிக்க, ‘யார் கண்டது? அந்த சாலிவாகனனைப் போலவே நீங்களும், ‘சூ, மந்திரக்காளி!’ என்றதும் உங்களுடைய யானைப் பொம்மை, குதிரைப் பொம்மை, போர்வீரன் பொம்மைகளெல்லாம் உயிர் பெற்று எழுந்து வந்து என்னை எதிர்க்கலாம்; அவற்றையும் எதிர்க்க முடியாமல், உங்கள் கையாலும் சாக விரும்பாமல் நான் தற்கொலை செய்துகொள்ள ஓடலாம்; அப்போதும் நீங்கள் என்னை விடாமல் துரத்தி, உங்களுடைய சக்கராயுதத்தை மந்திரித்து ஏவி என் கழுத்தை அறுக்கலாம். எதற்கும் நான் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், பாருங்கள்!’ என்று விக்கிரமாதித்தர் மீண்டும் தம் கழுத்தைத் தொட்டுப் பார்த்துக்கொள்ள, ‘அது சாலிவாகனன் சகாப்தம்; இது நேரு சகாப்தம். அப்போது ஊருக்கு ஒரு ராசா இருந்தான். .ஒரு ராசா இன்னொரு ராசாவை ஒழித்துக் கட்டி, அவனுடைய ராஜ்யத்தைப் பிடுங்கிக் கொள்வதிலேயே எப்போதும் கண்ணும் கருத்துமாயிருந்தான். இப்போதுதான் நாம் எல்லோருமே ராசாக்களாகிவிட்டோமே! ஒருவரை ஒருவர் ஏன் ஒழிக்க வேண்டும்? உங்களைப்போல் ‘ஒருவருக்கொருவர் உதவி வாழ்தல்’ என்ற முறையைப் பின்பற்றி வாழ்ந்தால் போதாதா?’ என்று சாலிவாகனன் சொல்ல, ‘அப்படியானால் உம்மைக் கண்டு நான் பயப்பட வேண்டியதில்லை என்கிறீர்; அப்படித்தானே? சரி, அந்தப் பொம்மையை எடும், இந்தப் பொம்மையை எடும்’ என்று தமக்குப் பிடித்த பொம்மைகளை யெல்லாம் பொறுக்கி எடுத்து விக்கிரமாதித்தர் பாதாளசாமியிடம் கொடுக்க, அவன் அவற்றை வாங்கிக் கொண்டு போய்க் காரில் வைத்துவிட்டு வர, மிஸ்டர் விக்கிரமாதித்தர் ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்துச் சாலிவாகனனிடம் நீட்டுவாராயினர்.

நோட்டைப் பார்த்தார் சாலிவாகனர்; சிரித்தார். ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்றார் விக்கிரமாதித்தர்; ‘ஒன்றுமில்லை. எத்தனையோ பேர் என் கடைக்கு வருகிறார்கள்; அவர்களெல்லாம் விலை பேசி முடிந்த பிறகே என்னிடமிருந்து எந்தப் பொம்மையையும் எடுத்துச் செல்கிறார்கள். நீங்களோ எந்த விலையும் பேசாமலே என்னிடமிருந்து எல்லாப் பொம்மைகளையும் எடுத்துச் சென்றீர்கள். அதிலிருந்து ‘நீங்கள் என்னை வியாபாரியாக மதிக்கவில்லை; கலைஞனாக மதிக்கிறீர்கள்’ என்று நான் நினைத்தேன். இப்போது நோட்டை நீட்டுகிறீர்கள்; இதிலிருந்து நான் என்ன நினைப்பது? நீங்கள் என்னைக் கலைஞனாக மதிக்கிறீர்கள் என்று நினைப்பதா, வியாபாரியாக மதிக்கிறீர்கள் என்று நினைப்பதா?’ என்று சாலிவாகனன் கேட்க, ‘கலைஞனாகத்தான் மதிக்கிறேன்’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, ‘அது போதும் எனக்கு; இந்தப் பணம் வேண்டாம். ஏனெனில் மற்றவர்களுக்கு வியாபாரியாகக் காட்சி அளித்தாலும் உங்களைப் பொறுத்தவரை நான் கலைஞனாகவே காட்சி அளிக்க விரும்புகிறேன்’ என்று சொல்லி அவன் அவரை வணங்கி விடை கொடுக்க, ‘கலைஞனுக்கு மட்டும் வாயும் வயிறும் இல்லையா, என்ன? மற்றவர்களுக்கு எண்ணிக் கொடுத்தால் கலைஞனுக்கு எண்ணாமல் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால் தான் எந்த விதமான விலையும் பேசாமல், எந்த விதமான கணக்கும் பார்க்காமல் என்னால் முடிந்த இச் சிறு தொகையை உங்களுக்குக் காணிக்கையாக அளிக்கிறேன். தயவு செய்து ஏற்றுக்கொள்ள வேணும்’ என்று மிஸ்டர் விக்கிரமாதித்தர் அந்த நோட்டை அவருடைய கையில் திணித்துவிட்டு மேலே செல்வாராயினர்.”

முப்பத்திரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான நித்திய கல்யாணி இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “இனிமேல் நீங்கள் போகலாம்; போய் மிஸ்டர் விக்கிரமாதித்தரைப் பார்க்கலாம்!’ என்று அவர் இருந்த அறைக்கு வழி காட்ட, போஜனும் நீதிதேவனும் அப்போதும் தங்கள் கொட்டாவியை மறக்காமல் விட்டுக்கொண்டே போய் அவரைப் பார்க்க, “இரண்டு மாதங்களுக்கு முன்னால் அல்லவா நீங்கள் வந்து என்னைப் பார்ப்பதாக எழுதியிருந்தீர்கள்? இவ்வளவு தாமதமாக வந்து நிற்கிறீர்களே, என்ன காரணம்?” என்று விக்கிரமாதித்தர் கேட்க, “நாங்கள் என்னவோ இரண்டு மாதங்களுக்கு முன்னாலேயே உங்களைப் பார்க்க வரத்தான் வந்தோம்; உங்கள் ரிஸப்ஷனிஸ்ட்டுகள்தான் தினம் ஒரு கதையாகச் சொல்லி, உங்களை அப்பொழுதே பார்க்க விடாமல் எங்களைத் தடுத்து விட்டார்கள்!” என்று போஜனும் நீதிதேவனும் சொல்ல, “எங்கே, கூப்பிடு அவர்களை!” என்று விக்கிரமாதித்தர் தம் ஆபீஸ் பையனை விட்டு அவர்களை அழைத்து வரச் செய்து, “நீங்களா இவர்களுக்குத் தினம் ஒரு கதையாகச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்க, “நாங்களாவது, இவர்களுக்குக் கதை சொல்வதாவது! இவர்கள் தினந்தோறும் வருவார்கள்; எங்களைப் பார்த்ததும் அப்படியே ஒரு கணம் அசந்து போய் நிற்பார்கள். மறுகணம் இவர்களில் ஒருவர் கதை சொல்ல ஆரம்பிப்பார்; இன்னொருவர் கேட்பார். கடைசியில் இருவரும் சேர்ந்தாற்போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்கிப் போய் விடுவார்கள்!” என்று அவர்கள் சொல்ல, “உண்மையைச் சொல்லுங்கள்; உங்களில் யார் கதை சொன்னது?” என்று விக்கிரமாதித்தர் போஜனையும் நீதிதேவனையும் கேட்க, ‘’நான்தான் சொன்னேன்!” என்று நீதிதேவன் மென்று விழுங்க, “இதற்குத்தான் உம்மை நான் அந்தப் பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதையைப் படிக்க வேண்டாம், படிக்கவேண்டாம் என்று படித்துப் படித்துச் சொன்னேன்; நீர் கேட்கவில்லை. தினம் ஒரு கதையாகப் படித்துவிட்டு இங்கே வந்தீர்; இவர்களைப் பார்த்துப் பதுமைகள் என்று நினைத்து அப்படியே மயங்கிநின்றீர். அந்த மயக்கத்தில் நீர் உம்மை மறந்து சொன்ன கதைகளை நானும் என்னை மறந்து இத்தனை நாட்களாகக் கேட்டுத் தொலைத்திருக்கிறேன்!” என்று போஜன் சொல்ல, ‘அசடுகள், அசடுகள்! பெண்கள் என்னத்தைச் சொன்னாலும் அதை அப்படியே நம்பிவிடும் அசடுகள்!’ என்று தங்களுக்குள் எண்ணிச் சிரித்துக்கொண்டே ரிஸப்ஷனிஸ்ட்டுகள் அவரவர்கள் இடத்துக்குச் செல்ல, “சரி, இப்போது நீங்கள் என் சிம்மாசனத்துக்காக வந்திருக்கிறீர்களா? இல்லை, வேறு எதற்காகவாவது வந்து இருக்கிறீர்களா?” என்று விக்கிரமாதித்தர் போஜனையும் நீதிதேவனையும் கேட்க, “இப்போதுதான் ராசாக்களே இல்லையே, சிம்மாசனம் எங்கே இருக்கும்? நாங்கள் அதற்காக வரவில்லை; கர்ப்பத் தடைக்குப் புதிய மருந்து ஒன்றை நாங்கள் தயார் செய்திருக்கிறோம். அதை உங்கள் கம்பெனியின் மூலம் விற்றுத் தர வேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்ளவே நாங்கள் வந்திருக்கிறோம்” என்று அவர்கள் சொல்ல, “மன்னிக்க வேண்டும்; ஏற்கெனவே இந்த உலகத்தில் பிறந்த குற்றத்தைச் செய்திருக்கும் நான், இனி பிறக்கப் போகிறவர்களைத் தடுக்கும் குற்றத்தையும் செய்ய விரும்பவில்லை. நீங்கள் வேண்டுமானால் உணவு உற்பத்தியை அதிகரிப்பதற்கு வேண்டிய முயற்சிகளில் இறங்கி, புதிய விதை, புதிய உரம் போன்றவற்றைக் கண்டு பிடியுங்கள். அதற்கு வேண்டிய ஊக்கமும் ஆக்கமும் அளிக்க நான் எப்பொழுதும் தயார்’ என்று சொல்லி, மிஸ்டர் விக்கிரமாதித்தர் அவர்களை அனுப்பி வைப்பாராயினர்.

இத்துடன் மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள் முற்றியது.

காண்க… காண்க… காண்க….. .

வாழி வாழி,
மிஸ்டர் விக்கிரமாதித்தன்
ஏடு இஸட் வாழி!
வாழி வாழி,
மிஸ்டர் விக்கிரமாதித்தனைப்
படித்தார் வாழி!
வாழி, வாழி,
மிஸ்டர் விக்கிரமாதித்தனைப்
படிக்கக் கேட்டார் வாழி!
வாழி, வாழி,
மிஸ்டர் விக்கிரமாதித்தனைப்
படிக்காதாரும் வாழி!

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *