முந்திரி

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: February 25, 2013
பார்வையிட்டோர்: 21,474 
 
 

வணக்கம் நேயர்களே, இது உங்கள் அபிமான, ‘விபரீத விஐபி-க்கள்’ நிகழ்ச்சி.

ஒவ்வொரு வாரமும், வெவ்வேற துறையைச் சேர்ந்த எக்குத்தப்பான ஆசாமிகளைச் சந்திச்சு உரையாடிகிட்டிருக்கோம், அவங்களோட அனுபவங்கள் எல்லாமே, சூடாவும் சுவையாவும் இருக்குன்னு நீங்க லெட்டர் மேல லெட்டர் எழுதிப்
பாராட்டறீங்க. எல்லோருக்கும் எங்களோட நன்றி!

என்ன யோசிக்கறீங்க? இந்த வாரம் நாம சந்திக்கப்போற ‘விபரீத விஐபி’ யார்ன்னுதானே? சொல்றோம் பொறுங்க, அதுக்குமுன்னாடி ஒரு சின்ன விளம்பர

ப்ரேக்.

டொட்டடொய்ங்

பத்துப் பதினஞ்சு வருஷங்களுக்குமுன்னாடி, எல்லாத் தமிழ்ப் பேப்பர்கள், பத்திரிகைகளிலும் ஒரு சின்னப் பையனோட ஃபோட்டோவைப் பார்த்திருப்பீங்க, ஒரு கையில பேட்மின்டன் மட்டை, இன்னொரு கையில கட்டை விரல் உயர்த்தி ‘தம்ப்ஸ் அப்’ சின்னம்ன்னு அந்தப் பொடியன் கொடுத்த போஸ், தூர்தர்ஷன், பிபிசி ரேஞ்சுக்குப் பிரபலம்.

அந்தப் பையன் பெயர், மகேஸ்வரன். பத்து வயசுக்குள்ள தேசிய லெவல்ல பல ஜூனியர் பேட்மின்டன் போட்டிகள்ல கலந்துகிட்டு கோப்பைகளை வாங்கிக் குவிச்ச மழலை மேதை.

அப்போ மகேஸ்வரனைப் பார்த்த எல்லோரும், ‘இந்தியாவோட அடுத்த சச்சின் டெண்டுல்கர் இவன்தான்’னு கற்பூரம் அணைச்சு சத்தியம் செஞ்சாங்க. சச்சினால கிரிக்கெட் வாழ்ந்ததுபோல, மகேஸ்வரனால இந்தியாவில பேட்மின்டனுக்கு யோகம்
அடிக்கப்போகுதுன்னு ஒருத்தர் விடாம பாராட்டினாங்க.

அதுக்கு ஏத்தமாதிரி, மகேஸ்வரன் கலந்துகிட்ட எல்லாப் போட்டிகள்லயும் ‘நம்பர் 1’க்குக் கீழே இறங்கவே இல்லை. ‘கூடிய சீக்கிரம், என் மகன் இந்தியா சார்பா ஒலிம்பிக்ஸ்லவிளையாடப்போறான்’னு அவனோட அப்பாகூட ரொம்பப் பெருமையாப் பேட்டி கொடுத்திருந்தார்.

ஆனா, அதுக்கப்புறம் அந்த மகேஸ்வரனுக்கு என்ன ஆச்சு? இன்னிக்குவரைக்கும் யாருக்கும் தெரியலை. ஒரு சின்ன நட்சத்திரம், அப்படியே காணாம போயிடுச்சு.

நாலு வருஷம்முன்னாடி, மகேஸ்வரன்மாதிரியே இன்னொரு பொடிப் பையன் இந்தியாவிலயே பெரிய ஜூனியர் சாம்பியன்னு பட்டம் வாங்கினான், அவன் பெயர் நாகார்ஜுன்.

அந்த நாகார்ஜுன், பழைய மகேஸ்வரனோட சொந்த சித்தப்பா பையன், அது உங்களுக்குத் தெரியுமா?

சான்ஸே இல்லை. ஏன்னா, நாம எல்லோரும் மகேஸ்வரனைச் சுத்தமா மறந்துபோயிட்டோம். அத்தனை பிரமாதமா விளையாடிகிட்டிருந்த பையனுக்கு என்ன ஆச்சு, ஏன் இப்படி ஒரு லோக்கல் போட்டியிலகூட கலந்துக்காம காணாமயே போயிட்டான்னு யாருமே அக்கறைப்படலை.

நாம விடுவோமா? நம்ம ‘விபரீத விஐபி-க்கள்’ நிகழ்ச்சிக்காக, மகேஸ்வரனைத் தேடிப் பிடிச்சோம். டிவி பேட்டியா-ன்னு பதறிப்போய் ஓடினவரைக் கஷ்டப்பட்டுச் சம்மதிக்கவெச்சு, இங்கே கூட்டிட்டு வந்திருக்கோம்.

ஒரு காலத்தில, குமுதம், விகடன், கல்கி தொடங்கி, ஞான பூமி, மங்கையர் மலர்வரைக்கும் ஒரு பத்திரிகை விடாம வண்ணப் படத்தோட பேட்டி கொடுத்த மகேஸ்வரன், இன்னிக்கு டிவி-ன்னதும் ஏன் இப்படி டென்ஷனாகணும்? காரணம் இருக்குங்க.

அப்போதைய மகேஸ்வரன், இந்தியாவின் குட்டி நட்சத்திரம். ஆனால் இன்னிக்கு, அவர் சரியான குண்டு நட்சத்திரமாகிட்டார்.

ஆமாங்க, உசிலைமணி, பிந்துகோஷ் வகையறாக்களுக்குச் சவால் விடற அளவுக்குக் குண்டாயிட்டார் மகேஸ்வரன், இப்பல்லாம் அவர் நினைச்சாலும்கூட, ஓடியாடி பேட்மின்டன் விளையாடமுடியாது, ரொம்ப வற்புறுத்தினா செஸ், தாயக்கட்டம்ன்னு எதுனா உட்கார்ந்துகிட்டே விளையாடினாதான் உண்டு.

நடுவில என்னாச்சு? மகேஸ்வரன் இப்படி ‘மெகா’ஸ்வரனா மாறினது எப்படி? அவரே சொல்றார் கேளுங்க.

‘வணக்கம் மிஸ்டர் மகேஸ்வரன்’

‘நேயர்கள் எல்லோருக்கும் வணக்கம்’

‘மகேஸ்வரன், உங்களை ஒரு கேள்வி கேட்டாத் தப்பா நினைச்சுக்கமாட்டீங்களே?’

‘என்னங்க இது? கேள்வி கேட்டுப் பேட்டி எடுக்கறதுக்குதானே இங்க கூட்டிட்டு வந்தீங்க? இதில தப்பா நினைக்கிறதுக்கு என்ன இருக்கு? தாராளமாக் கேளுங்க’

‘நிஜமா, இந்த ஃபோட்டோவில இருக்கிற மகேஸ்வரன் நீங்கதானா?’

‘ஆமாங்க, முகத்தில அதே சாயல் தெரியுது பாருங்க’

‘முகம் சரி, மத்ததெல்லாம் என்ன ஆச்சு? ஏன் இப்படி விபரீதமா ஊதிப்போயிட்டீங்க சார்?’

‘இதுக்குப்பின்னாடி, ஒரு பெரிய கதை இருக்குங்க, விவரமாச் சொல்லட்டுமா?’

‘ஓ, தாராளமாச் சொல்லுங்க, நேயர்கள் ஆவலோட காத்திருக்காங்க’

‘நாலரை வயசிலயே, நான் பேட்மின்டன் விளையாட ஆரம்பிச்சுட்டதா எங்கப்பா சொல்லுவார், அவரே என்னை டெய்லி பயிற்சிக்குக் கூட்டிட்டுப் போய், ஒவ்வொரு விஷயமா சொல்லிக்கொடுத்தார், என் வயசுப் பசங்க எல்லோரையும்விட நான் பிரமாதமா விளையாடறேன்னு அவருக்குப் பெருமை’

‘அப்போ எங்க ஸ்கூல்ல பேட்மின்டன் டீம்ன்னு எதுவுமே இல்லை, எனக்காக அப்படி ஒண்ணை உருவாக்கி, போட்டிகளுக்கெல்லாம் அனுப்பிவெச்சாங்க, அப்பாவோட ஜாலியா டூர்மாதிரி போயிட்டு வருவேன், அதே துள்ளலோட விளையாடுவேன், ஜெயிச்சுடுவேன், அவ்ளோதான்’

‘எனக்குன்னு தனித் திறமை எதுவும் இருந்தமாதிரி எனக்குத் தெரியலை, அதிகத் தப்பு செய்யாம விளையாடுவேன், ஜெயிப்பேன், அதுக்குமேல ஒண்ணும் சொல்றதுக்கில்லை’

‘நான் இப்படித் தொடர்ந்து ஜெயிச்சுகிட்டே இருந்த விஷயம், பத்திரிகைகளுக்குத் தெரிஞ்சு, என்னைப்பத்தி நிறைய ந்யூஸ் வெளியிட்டாங்க, அடுத்தடுத்து, மாவட்ட டீம்ல, ஸ்டேட் லெவல்ல விளையாடறதுக்குக்கூட சான்ஸ் கிடைச்சது’

‘அப்போதான், என் தம்பி, அதாவது சித்தப்பா பையன் நாகார்ஜுனும் பேட்மின்டன் விளையாட ஆரம்பிச்சான், அப்போ அவனுக்கு வயசு அஞ்சோ, ஆறோ இருக்கும்’

‘பெருமைக்காக சொல்லலை, என்னோட ஒப்பிட்டா, என் தம்பிக்கு அவ்வளவாத் திறமை போதாது, ஏதோ தத்தக்கா, புத்தக்கான்னு குதிப்பான், அவ்ளோதான்’

‘ஆனா, எங்கப்பாவுக்கு அவன்மேல பயங்கர நம்பிக்கை, தம்பிக்கு நீதான் ப்ராக்டிஸ் தரணும்ன்னு கண்டிப்பாச் சொல்லிட்டார்’

‘சின்னப் பையன், இவனுக்கு நான் கையைப் பிடிச்சு ஆனா, ஆவன்னா சொல்லித்தரணுமா-ன்னு யோசிச்சேன், அதுக்கும் ஒரு வழி கண்டுபிடிச்சேன்’

‘டெய்லி நானும் நாகார்ஜுனும் ஒரு கேம் விளையாடுவோம், அதில முதல்ல யார் 15 பாயின்ட் எடுக்கறாங்களோ அவங்களுக்குதான் வெற்றி’

‘நான் அப்பவே ஸ்டேட் லெவல் ப்ளேயர், என் தம்பி ஒரு கத்துக்குட்டி, கேட்கணுமா? தினமும், ஒவ்வொரு கேம்லயும் நான்தான் ஜெயிப்பேன், பதினஞ்சுக்கு ஜீரோ, பதினஞ்சுக்கு ரெண்டு, பதினஞ்சுக்கு அஞ்சுன்னு திரும்பத் திரும்ப மண்ணைக் கவ்வினான் நாகார்ஜுன்’

‘கொஞ்ச நாள்ல, இந்த ஆட்டம் எனக்கு போரடிக்க ஆரம்பிச்சுது, பின்னே? மறுபடி மறுபடி ஜெயிச்சுகிட்டே இருந்தா சலிப்பா இருக்காதா?’

‘அப்பதான், என் தம்பி நாகார்ஜுன் ஒரு கொடுமை பண்ணினான், ‘அண்ணா, டெய்லி சும்மா ஏன் விளையாடணும்? நாம ஒரு சின்ன ப்ரைஸ் வெச்சுகிட்டு விளையாடுவோம்’ன்னான்’

‘என்ன ப்ரைஸ்ன்னு கேட்டேன், ஒரு டப்பா முந்திரிப்பருப்பைக் காட்டினான்’

‘அதாவது, நான் ஒவ்வொரு பாயின்ட் ஜெயிக்கும்போதும், அந்த முந்திரி டப்பாவில இருந்து ஒரு பருப்பை எடுத்து என் பாக்கெட்ல போட்டுக்கலாம், இதேமாதிரி அவன் ஒரு பாயின்ட் ஜெயிச்சா, அவனுக்கு ஒரு முந்திரிப் பருப்பு’

‘இப்படியே ஒவ்வொண்ணா எடுத்து எடுத்து, கடைசியில யார் ஜெயிக்கறாங்களோ, அவங்களுக்கு மொத்த முந்திரிப்பருப்பும் சமர்ப்பணம், அவ்ளோதான் விஷயம்’

‘உங்களுக்குக் கேட்க அபத்தமா இருக்கும், ஆனா அப்போ எனக்கு, இது ஒரு புதுமையான போட்டியாத் தோணிச்சு, ஓகேன்னு ஒத்துகிட்டேன்’

‘அவ்ளோதான், டெய்லி ஒவ்வொரு டப்பா முந்திரியாப் பிரிச்சோம், எல்லாப் போட்டியிலயும் நானே ஜெயிச்சு, மொத்த முந்திரியையும் அபேஸ் பண்ணினேன்’

‘நாகார்ஜுன் கவலைப்படறமாதிரி தெரியலை, அடுத்த நாளும் ஒரு டப்பா முந்திரியோட வருவான், என்னை எதிர்த்து விளையாடி மண்ணைக் கவ்வுவான், நான் முந்திரியைக் கவ்வுவேன்’

‘இப்படி டெய்லி ஒரு முந்திரி டப்பா சாப்பிட்டு சாப்பிட்டு, மெல்ல அதுக்கு அடிமையாயிட்டேன், கேம் இல்லாதபோதுகூட, ஹோட்டலுக்குப்போய், ஒரு ப்ளேட் நிறைய வறுத்த முந்திரி வாங்கி வெச்சுகிட்டு மொசுக்குவேன்’

‘அதுதான் சார் என்னோட சரிவுக்கு ஆரம்பம், நல்லா விளையாடிகிட்டிருந்த பையன், இப்படி முந்திரியாத் தின்னு குண்டு போட ஆரம்பிச்சேன், முன்னைப்போல ஓடியாடி விளையாட முடியலை’

‘அப்பதான், என் தம்பி நாகார்ஜுனுக்கு திடுதிப்புன்னு வீரம் வந்துடுச்சு, கொஞ்சம் கொஞ்சமா அவன் என்னை ஜெயிக்க ஆரம்பிச்சான்’

‘இதனால, முந்திரிப் பருப்பு டப்பா முழுக்க அவன் கைக்குப் போயிடும், ஆனா, அவன் அதைச் சாப்பிடமாட்டான், நாளைக்கு கேம்க்கு வெச்சுக்கலாம்ன்னு கூலா சொல்லிடுவான்’

‘பாருங்க சார், அவன் எத்தனை பெரிய புத்திசாலி, நான் எத்தனை பெரிய முட்டாள்ன்னு, அவனைப்போல நானும் முந்திரிப் பருப்பைச் சூறையாடி ஏப்பம் விடாம இருந்திருந்தா, இப்படி குண்டடிச்சிருக்கமாட்டேன், சொந்தத் தம்பிகிட்டேயே முந்திரிப் பருப்பு திருடித் திங்கற கேவலம் ஏற்பட்டிருக்காது’

‘ஹூம், இப்போ யோசிச்சு என்ன பிரயோஜனம்? மூட்டை மூட்டையா முந்திரியைத் தின்னு, அதில பாதி இப்ப என் வயித்தில ஏறிக் கிடக்கு, கடைசியா பேட்மின்டன் மட்டையை நான் தொட்டு ஒரு மாமாங்கம் ஆகப்போகுது’

‘என்னோட விளையாடித் தோத்துகிட்டிருந்த அந்தப் பய நாகார்ஜுன், இப்ப ஜூனியர் சாம்பியன், நாளைக்கே இந்தியாவுக்காக ஒலிம்பிக்ஸ்ல விளையாடப்போறான்னு அவங்கப்பா தினகரன்ல் பேட்டி கொடுக்கறார்’

‘ஆனா நான்? ஸ்போர்ட்ஸ் கோட்டா மார்க்ல எஞ்சினியரிங் படிச்சு, ஏதோ கிடைச்ச வேலையில உட்கார்ந்த இடத்தில குப்பை கொட்டிகிட்டிருக்கேன்’

‘உங்க வாழ்க்கைக் கதையை ரொம்ப சுவாரஸ்யமா சொன்னீங்க மிஸ்டர் மகேஸ்வரன், ரொம்ப மகிழ்ச்சி, நன்றி’

‘நேயர்களே, மீண்டும் அடுத்த வாரம், இன்னொரு வித்தியாசமான விஐபியோட சந்திப்போம், நன்றி, வணக்கம்.’

‘மிஸ்டர் மகேஸ்வரன், ஒரு நிமிஷம் …’

‘என்னங்க? பேட்டிதான் முடிஞ்சுடுச்சே’

‘எங்க டிவியில யார் பேட்டிக்கு வந்தாலும், அவங்களுக்கு ஒரு நினைவுப் பரிசு கொடுக்கறது வழக்கம்’

‘அப்படியா, ரொம்ப சந்தோஷம், கிஃப்ட் பார்சல் ரொம்பப் பிரமாதமா இருக்கே’

‘பெரிசா ஒண்ணுமில்லை சார், சிம்பிளா, ஒரு கிலோ முந்திரி கேக்!’

‘ஐயோ, ஆளை விடுங்க சாமி!’

– என்.சொக்கன் [nchokkan@gmail.com] (ஜூன் 2008)

Print Friendly, PDF & Email

2 thoughts on “முந்திரி

  1. மிக அற்புதமான கதைகள். தங்களுக்கு மிக மிக நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *