சுமார் ஐந்து வருடங்களுக்கு முன் என் மாமா தன் அலுவலகத்திலிருந்து ஓய்வு பெற்றார். அந்தத் தினத்தை அவர் மறந்திருந்தாலும் நான் மறக்கவில்லை. அவருக்கு அன்றைய தினம் போட்ட சந்தன மாலையைப் பாதுகாத்துப் பத்திரப்படுத்த வேண்டிய பொறுப்பு என்னுடையதாகிவிட்டது. சந்தன மாலைக்கும் சந்தனத்துக்கும் பொட்டுச் சம்பந்தம் கிடையாது என்பது நேயர்கள் அறிந்ததே. எனக்குத் தெரிந்து எந்த சந்தனமாலையும் மணந்ததாக சரித்திரம் இல்லை.
சில, பல, பெரிய, சிறிய சைஸ் மஞ்சள் நிற உருண்டைகள், ஜரிகை நூல்கள், வட்ட வட்டமாகக் கத்தரித்த ஜரிகைப் பூக்கள், நுகத்தடி போல் கழுத்தில் அமர நூல் சுற்றிய பிரம்பு இவற்றின் கலவையே சந்தன மாலை. சந்தனத்தைத் தவிர எல்லாம் அந்த மாலையில் இருக்கும். மஞ்சள் நிற உருண்டைகளைப் பார்த்து சிலர் அதெல்லாம் சந்தனத்தை அரைத்து அரைத்துச் செய்யப்பட்ட உருண்டைகளோ என்று அறியாத்தனமாக நினைத்துக் கொள்வதுண்டு.
சந்தன உருண்டை என்பது மைதாவால் செய்யப்பட்டு, மஞ்சள் சாயம் ஏற்றப்பட்ட மாவு உருண்டைகள். போட்ட சில நாட்களுக்கு மாலை மகா கம்பீரமாகப் பளபளக்கும். நாளடைவில் அதை எங்காவது தொலைத்துத் தலை முழுகலாம் என்றே தொண்ணூற்றொன்பது சதவிகிதத்தினர் நினைத்து அதற்கான முயற்சிகளும் செய்கின்றனர்.
ஒரு சந்தன மாலையை “ஜஸ்ட் லைக் தட்’ குப்பைத்தொட்டியில் வீசிவிட முடியாது. யாருக்காவது போட்டு விடலாம் என்ற யோசனையையும் மனச்சாட்சியுள்ள யாரும் வரவேற்க மாட்டார்கள். புத்தம் புதுசிலே போட மனம் வரலை. பழசாயிட்டாலும் இதையா போடுவது என்று மனசு வரலை.
அதை என்ன செய்யலாம்? என்று வீட்டில் பொதுக்குழு வைத்து விவாதிக்க முடியாது. மேலும் அந்த மைதா மாவானது பரமசிவன் கழுத்திலிருந்துகொண்டு, “”கருடா செüக்யமா?” என்று நம்மை தெனாவெட்டாக விசாரிக்கக்கூடியது. சாமி அலமாரியில் ஏதாவது ஒரு சராசரி சாமி படத்தின்மேல் அதை மாட்டியிருப்பார்கள்.
அந்த மாலையில் சொந்தக்காரர் ஜீவியவந்தராக வீட்டில் உலவிக்கொண்டிருந்தால், நாக மாணிக்கத்தை நல்ல பாம்பு காப்பதுபோல சகல திசைகளிலிருந்தும் அவ்வப்பொழுது அதை நோட்டமிட்டவாறு இருப்பார். காலை, மதியம், சாயரட்சை, இரவு இப்படியாக.
அந்த மாலை வனப்பு குன்றி உலர்ந்து கறுத்து, ஜரிகையெல்லாம் பழசாகிப் பார்க்க சகிக்காத நிலைமையை ஆறு அல்லது ஏழு மாதத்தில் கியாரண்டியாக அடைந்துவிடும். “அதை வேணும்னா எடுத்து நிலைப்படியிலே தொங்கவிட்டுடலாமா?’ என்று கீழ்த்தலைமுறை கேட்டுவிட்டால் மேலோர் துடிதுடித்துப் போவார். மற்றவர் கெüரவம் பார்க்காமல் தந்தால்கூட இங்கிருக்கிறவங்களுக்குப் பொறுக்கவில்லை என்று தன்னிரக்கம் கலந்த சீறல் ஒன்று வெளிப்படும்.
ஸ்வாமி அலமாரியையே அசிங்கப்படுத்துகிற அளவுக்கு சந்தன மாலை பழைமை அடைந்தவுடன், யாராவது துணிச்சலாக அதை உரியவர் பார்க்காத நேரத்தில் நிர்மால்யத்தோடு (பழைய பூக்களோடு) குப்பைத்தொட்டிக்கு அனுப்பிவிடத் தயாராயிருப்பார்கள். ஆனால் மாலைக்கு உரியவர் வந்து ஆகாயத்துக்கும் பூமிக்குமாகக் குதித்தால் என்ன செய்வது? என்று மேற்படி மாலையைத் தாற்காலிக இடமாற்றம் செய்து ஓர் இடத்தில் பதுக்கி வைப்பதும் உண்டு.
உரியவர் நாலு நாள் கவனிக்கவில்லையென்றால் அதை ஒரு வழியாக தொலைத்துவிட முடியும் என்ற தைரியம் பிறக்கும். எனக்கும் அப்படித்தான் தைரியம் பிறந்தது.
ஒரு தினம் மாமா அசந்து தூங்கும் விடியற்காலையில் அந்த மாலையைக் கொண்டுபோய் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு,””சாமி! கடவுளே! சீக்கிரம் குப்பை லாரி வந்து குப்பை அகற்றப்பட வேண்டும்” என்று பிரார்த்தனை செய்தவாறு வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்துகொண்டிருந்தேன்.
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி.
சோதனையாக குப்பை லாரி வரவில்லை.
மாமூலாக வரும் பூம்பூம் மாட்டுக்காரர் வந்து சேர்ந்தான். “பீரியாடிகல் விஸிட்’ அடிப்படையில் காசு கேட்க வந்தவன் பீப்பியை ஓசைப்படுத்தினான். மாமா (சந்தன மாலைக்கு உரியவர்) வெளியே வந்து பார்த்தார். பூம் பூம்காரன் வாத்தியம் வாசிக்காதிருக்க அவர் ஐந்து ரூபாய் தருவது வழக்கம்.
ரூபாய் எடுத்தவர் “அடேய்!’ என்று ஓர் ஆச்சரியக் கத்தல் போட்டார் தெரு பூரா கேட்கும்படி.
மாட்டுக் கழுத்தில் அவரது சந்தன மாலை!
“”அடப்பாவி! இது ஏதுடா சந்தன மாலை! என்னது மாதிரியே இருக்கே! என்னுதேதான்! சாமி படம் போட்ட பூ நான்தான் ஒட்ட வைத்திருந்தேன்”
“”ஏண்டா கழுதே? எங்கேடா திருடினே இதை? உன்னை போலீஸில் பிடித்துக்கொடுத்தால் என்ன?” என்று கத்தினார்.
“”சாமி! சாமி! இந்தக் குப்பைத்தொட்டியிலே கிடந்ததுங்க. பொறுக்கினேன், நம்ம பஸவனுக்கு (மாடு) அழகாய் இருக்குமேன்னு கழுத்திலே போட்டேன். உனக்கு வேணும்னா கொடுத்துடறேன் சாமி” என்றான்.
“”அதைக்கொடு முதலிலே” அவனுக்குப் பத்து ரூபாய் நோட்டு ஒன்றைக் கொடுத்துவிட்டு சந்தன மாலையை எடுத்துப் போய், கழுவு கழுவு என்று கழுவினார்.
அழுக்குப் போவதற்குச் சற்று ஊற வைத்துக் கழுவினார்.
உவ்வே!
மாவு கரைந்து கஞ்சியும் நூலுமாய் சந்தன மாலை கண்ராவியாகிவிட்டது.
வெயிலில் சில நாள் உலர வைத்தார். சரியாக உலராததால் பொறுமையிழந்து வாணலியில் போட்டு லேசாகப் புரட்டிப் பார்த்தார். மைதா மாவாதலால் வறட்டு வாணலியில் உஷ்ணம் தாளாமல் குய்யோ முறையோ என்று சில உருண்டைகள் கருகின.
சமையலறை பூரா ஒரே வாடை. “”என்ன கருகுகிறது?”
என்று வீட்டு அங்கத்தினர் அத்தனை பேரும் கிச்சனில் ஆஜர். மனைவி அவசரமாக ஸ்டவ்வை அணைத்தாள்.
போர்க்காலப் பரபரப்புடன் வாணலியில் ஒரு மக்குத் தண்ணீரை பெரிய பையன் ஊற்றினான்.
ஒரு கூடங்குளப் பரபரப்புடன் சமையலறை திமிலோகப்பட்டது. சர்ச்சைக்குரிய சந்தன மாலை வெந்தும் வேகாததுமாய், உலர்ந்தும் உலராததுமாய் தவம் மாறிய சாமியார் மாதிரி பொலிவிழந்து கரண்டிக் காம்பில் காட்சியளித்தது.
“”கடுகு மிளகாய் தாளித்தால் உப்புமா ஆனாலும் ஆகக்கூடும்” என்று பையன் கிண்டலடித்தான்.
மாமா படுசோகமாக அதைத் தூக்கிக்கொண்டு குப்பைத்தொட்டியை நோக்கி நடந்தார். அதிர்ஷ்டத்தை என்னவென்று சொல்வது! குப்பை லாரியே காத்திருந்தது.
தேவர்கள் புஷ்பக விமானத்தில் வந்து பக்தனை சொர்க்கத்துக்கு அழைத்துப் போவது போல மாமாவின் சந்தன மாலையை குப்பை லாரி சகல மரியாதையுடன் ஏற்றிக்கொண்டு நகர்ந்தது.
என் வாழ்க்கையில் ஒரு மகத்தான பொறுப்பு தீர்ந்தது.
– ஏப்ரல் 2012