போடு! சண்டை போடு!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 24, 2023
பார்வையிட்டோர்: 14,503 
 
 

முட்டை முழி சாரங்கனை ஒரு பேக்குடு என்று நினைத்தது தவறு. சரோஜாவோடு சண்டை போட்டு அவளை ஊருக்கு அனுப்பு என்ற இந்த ஒன் லைனை அவன் ஆரம்பித்ததே மணிரத்னம் படத்தின் முதல் ஸீன் மாதிரி இருந்தது. “ஆத்மா, பொண்டாட்டின்னா சண்டை போடணும்டா! சண்டையே வர்லேன்னா, மேட்டரே வேற” என்றான். என்ன அமர்க்களமான ஓப்பனிங்! அவனுக்கு இல்வாழ்க்கையில் கரைகண்ட வித்தகன் என்ற பட்டத்தை தரலாம். சரி, விஷயத்துக்கு வருகிறேன். 

சாதாரணமாக ஆபீஸ் விட்டதும் எங்களை மாதிரியான சம்சாரிகள் சாரைப் பாம்பு மாதிரி ஒவ்வொருவராக வீட்டுக்கு ஓடுவதுதான் வழக்கம். ஆனால் சில மாதங்களாகவே கொஞ்சம் மாறியிருக்கிறது. என்னை விட்டுவிட்டு மற்றவர்களெல்லாம் ரகசியமாய் பேசிக்கொள்கிறார்கள். ஐந்து மணிக்கு அப்புறம் ஆர்கேயையும் ஜேபியையும் ஆபீஸில் பார்ப்பது என்பது நூறு எபிசோடுகளிலேயே முடிந்துவிட்ட சீரியல் மாதிரி. போன வாரம் அவர்களோடு டேனியல் ராஜும் கூட்டணி. திருட்டுப் பயல்கள். உலகத்திலேயே மிகக் கொடுமையான விஷயம், நண்பர்கள் கூட்டத்தில் காரணம் சொல்லாமல் நம்மை ஒதுக்கி வைப்பதுதான். 

நேற்று என்னால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. மழைக்கு முன்னால் அங்கும் இங்கும் பறக்கும் கரப்பான் பூச்சிகளாக மூணு மணியிலிருந்தே மூர்த்தியும் ப்ரகாஷும் பிஸியோ பிஸி. இவ்வளவிலும் சாரங்கனிடம் கலக்ஷனுக்கு வந்து, அவன் ஸ்டைலாக பர்ஸைப் பிரித்து ஜொள் ஒழுகக் கொடுத்த நூறு ரூபாயைக் கொத்திக் கொண்டு ஓடினார்களே தவிர என்னை கண்டு கொள்ளவேயில்லை. அவர்கள் போனதும், சாரங்கனை பிறாண்டியதில்… மூர்த்தி வொய்ப் டெலிவரிக்கு நேற்று ஊருக்குப் போயிருக்கிறாளாம். இன்று அவன் வீட்டில் பார்ட்டியாம். எல்லாம் உண்டாம். ஏன் என்னை சேர்த்துக் கொள்ளவில்லை என்று கேட்டதற்கு, அளித்த விவரங்களில் சாரங்கன் எனக்கு கிருஷ்ணனாகவே தெரிந்தான். சில துளிகளை இங்கே கொஞ்சம் சிந்தியிருக்கிறேன். நீங்களும் ஞானம் பெறுவீர்களாக. 

ஒரே மனம் இரு உயிர் என்பதெல்லாம் சுத்த பேத்தல். வெறும் இனிப்பே வாழ்க்கை அல்ல. நடுநடுவே காரம் வேண்டும். பொண்டாட்டி ஊர்ல இல்லையென்றால் பல சௌகர்யங்கள். கல்யாணத்துக்கு முன்னால் சுதந்திரமாக சுற்றித் திரிந்த ஹாஸ்டல் வாழ்க்கையை மீண்டும் ரீப்ளே செய்யமுடியும். காலையில் இஷ்டம் போல் எழுந்திருக்கலாம். ஷேவிங் பிரஷை உடனே அலம்பி வை என்று யாரும் கண்டிக்கமாட்டார்கள். சத்தமாய் பாட்டு கேட்கலாம். அபஸ்வரமாக பாடலாம். ராத்திரிக்கு எப்போது வேணும்னாலும் வீட்டுக்கு போகலாம். நோ வெஜிடபிள் பர்ச்சேஸ். நோ அழுகாச்சி ஸீரியல்ஸ். இது மாதிரி எவ்வளவோ. அதுவும் சண்டை போட்டுட்டு போவது என்பது பூர்வ ஜன்ம பூஜா பலன். போன பிறவியில் பசு மாட்டுக்கு வாழைப்பழம் கொடுத்தவர்களுக்கு மட்டுமே அந்த பாக்கியம் கிட்டும். சமாதானம் ஆன பிறகு கிடைக்கும் இன்பத்தை எழுத்தில் தேடுபவர்கள் படு அசடுகள். அவர்களுக்காக சொல்லித் தொலைக்க வேண்டுமென்றால் தகதக தங்க வேட்டை சட்டியில் உள்ள அனைத்து தங்கக் காசுகளும் அவர்களுக்கே கிடைத்த மாதிரி. 

கணவன் மனைவி சண்டையில் ஒருவரை ஒருவர் மொத்திக் கொண்டே பலர் வேடிக்கை பார்க்கச் செய்வது வல்லினம். ‘காச்’ ‘மூச்’ என்று கத்திக் கொண்டு ப்ளட் பிரஷர் எகிற கோபாவதாரம் எடுத்து தங்களையும் குழந்தைகளையும் ஏக டென்ஷனுக்கு உள்ளாக்குவது இடையினம். இங்கிலீஷ் சினிமா பாணியில் டைட்டோ டைட் க்ளோசப்பில் மூஞ்சிக்கு முன்னால் லிமிட்டாக சுள்ளென இரண்டு வார்த்தைகள் சொல்லிவிட்டு, அதன் பாதிப்பிலேயே விறைத்துக் கொண்டு விலகி போய்விடுவது மெல்லினம். முதல் இரண்டும் அணுகுண்டு, சர வெடிகளாக உள்ளும் வெளியிலும் பாதிப்பு இருக்கும். மூன்றாவதில் போலீஸ் அடிப்பது மாதிரி. வெளிக்காயங்களே இருக்காது. மனசுக்குள் பூகம்பமும் சுனாமியும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். 

“நான் மூன்றாவதை டிக் செஞ்சுக்கறேன்” என்றேன், அவசரமாக. சாரங்கன் சங்கு. சக்கரத்தை இன்னும் விடவில்லை. “ஆத்மா, இதெல்லாம் ஒரு ஜாலிக்குடா ஆபீஸ்ல, வீட்ல, வெளில எவ்வளவு டென்ஷன் இருக்கு. அதையெல்லாம் கொறைக்க வேண்டாமா. அவங்களோட கும்மாளம் போடும் போது பத்து வயசு சல்லுன்னு கொறையுது. குஜால்தான். வர்ற சனிக்கிழமை உன் வீட்டில் பார்ட்டி. போ, சண்டை போடு. ஆல் த பெஸ்ட்” ப்ளூடோவிடம் மாட்டிக் கொண்ட டாம் மாதிரி மேலும் கீழுமாக தலையாட்டினேன். 

சரோஜா என் மாமா பெண்தான். நான் இவ்வளவுதான் என்று அவளுக்கு முன்னமேயே தெரியும் என்பதால், எங்களுக்குள் இதுவரை சண்டையே வந்ததில்லை. தவிர, அவளைப் பொறுத்தவரை கணவர் பரமசிவனுக்கு சமானம். அவருக்கு எல்லா சௌகர்யங்களையும் செய்வதுதான் ஒரு பதிவிரதையின் தலையாய கடமை என்பதை ஒரு வேத வாக்கியமாக எடுத்துக் கொண்டவள். 

சரோஜாவிடம் எப்படி சண்டை போடுவது? கருமமே கண்ணாயினனாக இரவு முழுவதும் கண்துஞ்சாமல் ரிஹர்சல்கள் செய்து, வீராவேசத்தோடு ‘டாய்’ என்று போர்வீரன் மாதிரி கத்தியை சுழற்றிக்கொண்டு களத்தில் குதித்தால், அதை கொஞ்சம் கூட அன்கண்டுகபிளாக இருந்து, என்ன சின்னப் புள்ளத்தனமாக இருக்குன்னு ஒரு ப்ளெயின் லுக் விட்டால் என்ன ஆவது? இம்சை அரசன் 23 ம் புலிகேசி லெவலுக்கு நான் ஆனதுதான் செம காமெடி. 

ஒவ்வொன்றாய் வருகிறேன். பல கல்யாணங்களில் காப்பியில்தான் சண்டை ஆரம்பிக்கும். அதை நம்பி, “தூ… காப்பியா இது ? இல்லே, காப்பி பாத்திரம் அலம்பின தண்ணியா?” என்று கத்தி விட்டு பார்த்தால், ஏதோ இமாலய தவறு செய்துவிட்டவளாக கைகள் நடுங்க, “அப்படியா. கொஞ்சம் பொறுங்க. நல்ல காப்பி கொண்டு வர்றேன்.” என்று சொல்லிக் கொண்டே கிச்சனுக்குள் ஓட, டெண்டுல்கர் முதல் பந்தில் அவுட். 

அதனால் என்ன? உடனே அடுத்த அஸ்திரம். “ஆமா, என்னிக்கி காப்பி நல்லா போட்டிருக்கே. உன் மூஞ்சி.” இதற்கு நிச்சயம் கோபம் வரப் போகிறது. 

பாதி தூரம் போனவள், திரும்பிப் பார்த்து, ” ஏங்க? என்ன ஆச்சு? ராத்திரி சரியா தூங்கலையா? யார் மேலயோ இருக்கும் கோவத்த என்கிட்டே ஏங்க காட்டுறீங்க.” போய்விட்டாள். இங்கே ரன் அவுட் 

‘உன் மேலத்தாண்டீ’ என்று கத்த வேண்டும் போலிருந்தது. ஆனால் அது மெல்லினமாக இருக்காது. கிச்சனுக்குள் துரத்திக் கொண்டு போய் அடுத்தடுத்த சீண்டல்களில்… ம்ஹும்.. அசரவில்லை. ஒரு கட்டத்தில் என் பிடுங்கல்கள் அதிகமாகிப் போய் அழ ஆரம்பிக்க, எனக்குள்ளும் அழுகை வர, இண்டர்வல் விட்டுவிட்டேன். ‘டேய் ஆத்மா. ரூட்டை மாத்து.’ஐடியா வறட்சியில் தடுமாறினேன். எது எதற்கோ புத்தகம் எழுதுகிறார்கள். இதற்கு எழுதியிருந்தால் டா வின்சி கோட் தோற்று போயிருக்கும். 

ஒன்பது மணிக்கெல்லாம் என் அழகான ராட்சசி சுடச் சுட மொறு மொறு தோசையை அதன் பக்க வாத்தியங்களோடு கொண்டு வந்து நீட்டினாள். ஐடியா! அம்மா வந்தாள். என்னதான் சொந்த அத்தை என்றாலும் மாமியார் அல்லவா? 

“என்ன செய்யி. என் அம்மா சுடற தோசை மாதிரி செய்ய உனக்கு வராது” எப்படி கும்ப்ளே கூக்ளி ! 

“ஆமாங்க. நானே உங்க கிட்டே சொல்லணும்னு இருந்தேன். ஒடனே ஃபோன் போட்டு அத்தைய வரச் சொல்லுங்க. ரொம்ப நாளாச்சு. எனக்கும் தோசை, அடையெல்லாம் சுட கத்துக்கிட்ட மாதிரி ஆச்சு”. 

போச்சு. எனக்குள் கண்ணாடிக் கோட்டை தடதடவென சரிந்தது. கிரேசி மோகன் பாணியில் ‘என்ன எழவுடா இது’ என்று சொல்லத் தோன்றியது. அம்மா சென்டிமெண்டே எடுபடாத போது நாத்தனார் சென்டிமெண்ட் எப்படி எடுபடும்? அடுத்த வாரம் வரப்போகிற அவள் பிறந்த நாளுக்காக ரகசியமாக வாங்கி வைத்திருந்த காஸ்ட்லியான ஜோதிகா புடவையை என் தங்கை கல்யாணிக்கு கொடுக்கப் போகிறேன் என்று அரை மனசோடுதான் சொன்னேன். அதுவும் சானியா எதிர் கொண்ட செரீனா மாதிரி ஆகிவிட்டது. 

விட்டால் போதும் என்று ஆபீஸ் வந்துவிட்டேன். கிருஷ்ண பரமாத்மா சாரங்கன் விஸ்வரூபம் எடுத்தான். “நீ சுத்த பேக்குடு. (தேவையா?) டேய். சண்டைக்கான நுனி லேசுல கிடைக்காது. தேடணும்டா. நூல் கண்டு நுனியத் தேடாம உன் இஷ்டத்துக்கு கட் பண்ணி இழுக்கக் கூடாது.போ. நல்லா ஹோம் வொர்க் செய். வெய்ஃபுக்கு எந்த விஷயம் ரொம்ப பிடிக்கும்னு பார்த்து, அதுல சீண்டுடா, மடையா (போதும்டா, சாமி!).” 

முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆனாலென்ன? இரண்டாவது இன்னிங்ஸில் சென்சுரிதான். மூஞ்சியில் மூட் அவுட்டை தக்க வைத்துக் கொண்டே ஐடியாவுக்கு குட்டி போட்ட பூனை மாதிரி அலைந்தேன். பேப்பரை புரட்டி… மேஜை டிராயரில் தேடி… ஃப்ரிட்ஜை திறந்து பார்த்து.. டிவி…. 

யெஸ். கிடைத்து விட்டது. சப்பை மேட்டர்தான். ஆனால் ஒர்க்கௌட் ஆகும். சரியாக ஆறரை மணியானதும் சரோ டிவியை போட, விடு ஜூட் “இனிமே இந்த வீட்ல சீரியலே கிடையாது” ரிமோட்டை பிடுங்கி,சிவப்பு பட்டனை அழுத்தினேன். அது ‘க்யிக்’ என்ற சத்தத்தோடு மௌனமானது. 

தீபாவளி பட்டாசில் சுறுசுறுவென தீப்பிடித்து கொண்டே வந்து கடைசியில் பாரம் தாங்காத வண்டி மாடாக உமைக் கோட்டானாகி எரிச்சலைத் தருவது ஒரு வகை. இரண்டாவது, ‘பிசற்ட்’ ‘பிசற்ட்’ என்று அடிபட்ட கரப்பான் பூச்சி மாதிரி ஆறஅமர இழுத்துக் கொண்டே போய், இது தேறாது என்று நினைக்கும் போது காதை பிளக்கும் ஓசையில் வெடித்து தூள் கிளப்பும். சரோ இரண்டாவது வகையில் வந்தாள். ஆனந்தத்தை அரை மனசோடு விட்டுக் கொடுத்து விட்டு சட்டி மாதிரி மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டு பால்கனிக்கும் கிச்சனுக்கும் அலைந்தாள். அக்கம் பக்கத்து வீடுகளிலிருந்து முஹூர்த்தம் டைட்டில் சாங் அலைஅலையாய் வர, முணுமுணுக்கத் தொடங்கினாள். கொஞ்சம் கெஞ்சிப் பார்த்தாள். ம்.. ஹூம். இது தேறாது என்று இருந்த போது, வந்ததே பாருங்கள் கோபம்… 

ரகசிய போலீஸ் 115 எம்.ஜி.ஆர். ஜெயலலிதா மாதிரிதான் எங்கள் சண்டை ஆரம்பித்தது. “எனக்கு ரோஜா பார்க்கணும். உங்களுக்கு பிடிக்கலைன்னா பெட் ரூமுக்கு போய் கதவை சாத்திக்குங்க. நான் பார்க்கத்தான் போறேன்.” 

“கூடாது” டிவிக்கு குறுக்கே எக்ஸ் மாதிரி நின்று கொண்டேன். ‘பார்ப்பேன்’ ‘கூடாது’ என்பதை அடுத்தடுத்து ஐந்து முறை கூட்டிக் கொள்ளுங்கள். 

“இது எங்கப்பா வாங்கிக் கொடுத்தது. நான் பார்ப்பேன்” என்னைத் தள்ளி விட்டு தீர்மானமாக டிவியை போட எத்தனித்தாள். 

“அப்படியா? உங்க அப்பாவோட ஓட்டை டிவிய எடுத்துக்கிட்டு அங்கயே போய் பாரு. இப்ப இங்க டிவிய போட்ட ஒரு கொலை விழும். ஆமா. தெரிஞ்சுக்க.” 

சிவப்பு துணியை கண்ட ஸ்பெயின் காளையாக ஆனாள் சரோ. புழுதி பறக்க மகா யுத்தம் தொடங்கி விட்டது. பற்றி எரியும் வைக்கோல் போர் அளவுக்கு கோபம் கொப்பளிக்க திகட்டத் திகட்ட சண்டையோ சண்டை. ஏ ஒன் சண்டை 

“உங்களுக்கு எல்லாம் செஞ்சு செஞ்சு கொழுப்பு அதிகமாயிடுச்சு. அதான் துள்ளறீங்க. நான் இல்லாம ஒரு மாசம் இருந்து பாருங்க. அப்ப என் அருமை தெரியும்.” விறுக் விறுக்கென்று ஃபோனை எடுத்து பட்டன்களை தட்டினாள். தம்பியை வரச் சொன்னாள். “டேய்! வர்றதுதான் வர்ற. கோலங்கள் ஸ்டார்ட் ஆகறத்துக்கு முன்னால வா. சீக்கிரம். இன்னிக்கு அபிக்கு என்ன ஆச்சோ தெரியலையே?” 

மச்சினன் சேது வந்தான். என்னை அலட்சியமாகப் பார்த்தான். அக்காவை அழைத்துக் கொண்டு போய்விட்டான். போகும் போது அவன் அப்பா என்கிற என் மாமாவை ஞாபகப் படுத்திவிட்டுப் போனான். ஜெயித்து விட்டோம் என்று துள்ளிக் குதித்த குத்துச் சண்டைக்காரன் கயிறு தடுக்கி கீழே விழுந்த மாதிரி ஆனேன். எனக்கு மாமா என்றால் இன்றைக்கும் பயம். கலாபவன் மணி மாதிரி முக பாவனைகளிலேயே மிரட்டுவார். மாப்பிள்ளையாயிற்றே என்கிற மரியாதை துளியும் கிடையாது. கீழே நெருப்பை மூட்டி அதற்கு மேல் நான் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்க கலாபவன் மணி மாமா கெக்க பிக்கெ சிரிப்புடன் குட்டிக்கரணம் அடித்து சுற்றி சுற்றி வருவது போல இருந்தது. சரோவை அனுப்பியாயிற்று. மாமாவை எப்படி சமாளிப்பது? இருக்கவே இருக்கிறான் சாரங்கன். 

ஆபீஸ் வந்ததும் விஷயத்தை சொன்னால் சாரங்கன் முதற்கொண்டு எல்லோரும் பார்ட்டியில் குறியாய் இருந்தார்களே தவிர மணி மாமா மேட்டருக்கு யாரும் ஐடியா தரவில்லை. மனசளவில் நொந்து நூலாகி ஏழு மணிவாக்கில் வீடு திரும்பிய எனக்கு ஆயிரம் வோல்ட் அதிர்ச்சி. வீட்டில் லைட் எரிந்து கொண்டிருந்தது! சரோ வந்துவிட்டாளா? பீர் பாட்டில்களும் ஆம்லெட் தட்டுகளும் என் கண் முன்னே வந்து மோதி விலக பேக்கிரவுண்டில் சரோ பத்திரகாளியாய் தெரிந்தாள். பின்னங்கால் பிடறி பட இரண்டாவது மாடிக்கு இரண்டே செகண்டில் ஓடி மூச்சிறைக்க நின்றால்… 

மச்சினன் சேது வரவேற்றான். “எனக்கு இங்க இருக்க இஷ்டமேயில்ல. அக்காதான் சொல்லிச்சு. அத்தான் மனசு சரியாற வரைக்கும் நீ அங்கன இருந்து ஹெல்ப் பண்ணுன்னு. உங்களுக்கு சமைக்க தெரியாதாம். அப்படியே செஞ்சாலும் சரியா சாப்பிட மாட்டீங்களாம். அதனால என்னை செய்ய சொல்லியிருக்காங்க. எவ்வளவு நல்ல அக்கா. நீங்களும் இருக்கீங்களே…” 

இன்னும் அரை மணியில் பார்ட்டி கோஷ்டிகள் வந்துவிடும். முதலில் அவர்களை வந்துவிடாமல் தடுப்பதா இல்லை இவனிடமும் சண்டை போட்டு துரத்தியடிப்பதா என்ற மாறுபட்ட சிந்தனைகள் இரண்டு ஜப்பானிய சுமோக்களாக என் தலைக்குள் நெருங்கி வந்து தொந்தியால் அழுத்த, மயங்கி சரியும் வேளையில் கலாபவன் மணி மாமாவின் பிரும்மாண்ட உருவம் கண்ணுக்குள் தெரிந்தது. 

– 11 பிப்ரவரி 2007, சில ரகசியங்கள் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பதிப்பு: மார்ச் 2018, வெளியிடு : FreeTamilEbooks.com

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *