நம் அனைவருடைய பெயர்களும் நம்மைக் கேட்காமலே நம் பெற்றோர்களால் நமக்கு வைக்கப்பட்டு விடுகின்றன. நம்மில் சிலருக்கு நம்முடைய பெயரையே பிடிப்பதில்லை.
பின் என்ன? குஞ்சிதபாதம்; பாவாடைசாமி என்று பெயர்கள் வைத்தால் நமக்கு எப்படிப் பிடிக்கும் ? நம்மைக் கூப்பிடுபவர்கள் வேண்டுமென்றே அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு ‘எலே குஞ்சு’ ‘எலே பாவாடை’ என்று கூப்பிட்டால் நாம் என்ன செய்ய முடியும்?
நான் படித்து வளர்ந்து வயசுக்கு வந்தபோது இருந்த ஊர் திம்மராஜபுரம். திம்மராஜபுரத்தில் பிறக்கும் குழைந்தைகளுக்கு இந்திய தேசத்தின் தலைவர் ஒருத்தரின் பெயரை வைப்பதென்பது கட்டாயமாக்கப்பட்ட ஒரு வழக்கமாகவே ஒரு காலத்தில் இருந்து வந்தது.
ஒவ்வொரு வீட்டிலும் காந்தி; நேரு; பட்டேல்; நேதாஜி என்ற பெயர்களில் பையன்கள் இருப்பார்கள். என் நண்பன் ஒருவனின் வீட்டில் வினோபா என்ற பெயரில்கூட ஒரு தம்பி இருந்தான். அதே மாதிரி கமலா நேரு; விஜயலட்சுமி பண்டிட்; கஸ்தூரிபாய் என்ற பெயர்களிலும் திம்மராஜபுரத்தில் நிறையப் பொம்பளைப் பிள்ளைகள் இருந்தார்கள்.
குழந்தைகளுக்கு தேசத் தலைவர்களின் பெயரை வைப்பது சந்தோஷப்பட வேண்டிய விஷயம்தான். அது ஒரு விதத்தில் தேசப்பக்தியைக் காட்டுகிற சமாச்சாரமும்தான். ஆனால் என் கேள்வி என்னவென்றால், குழந்தைகளுக்கு தேசத் தலைவர்கள் பெயரை வைத்துவிட்டாலே போதுமா? அந்தப் பெயர்களை சரியாக உச்சரித்து நாகரீகமாக உபயோகித்து தேசத் தலைவர்களின் பெயர்களைக் கெளரவப்படுத்த வேண்டாமா? திம்மராஜபுரத்து மக்களுக்கு அந்த வழக்கம்தான் இல்லாமல் போய்விட்டது.
“எங்கே இந்த காந்திக் குரங்கை?” “நேரு கழுதை வீட்டுக்கு வரட்டும் காலை ஒடிக்கிறேன்” “டேய் பட்டேல் சனியனே, ஒழங்கா படிக்கிறியா இல்லை பல்லைத் தட்டவா?” இப்படிப் பல வீடுகளில் வசைப் புராணம் விதவிதமாகப் போய்க் கொண்டிருக்கும்.
ஒவ்வொரு தேசத் தலைவர் பெயரும் எல்லோருடைய வாயிலும் எவ்வளவு மோசமாக விழுந்து புறப்படணுமோ அவ்வளவு மோசமாக விழுந்து புறப்பட்டுக் கொண்டிருக்கும். பல நேரங்களில் தலைவர்களின் பெயர்கள் ரொம்பக் கொச்சையாகவே மலினப்படுத்தப்படும்.
எங்கள் பக்கத்துத் தெருவில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான். அவன் பெயர் காந்தி. ஏதாச்சும் அவன்கூட விளையாடலாம் என்ற நினைப்பில் அவனுடைய வீட்டு வாசலில் போய் நின்றுகொண்டு “காந்தி காந்தி” என்று நாங்கள் மூன்று நான்கு பேராகச் சேர்ந்துகொண்டு பெரிதாகக் குரல் கொடுப்போம்.
காந்தி வெளியே வந்து எட்டிப் பார்க்கமாட்டான். காந்தியின் அப்பாதான் எட்டிப் பார்ப்பார். அதுவும் வாசல் கதவைத் திறக்காமல் ஜன்னல் வழியாகத்தான் எட்டிப் பார்ப்பார். “காந்தியும் இல்லை பூந்தியும் இல்லை, போங்கடா” என்று எங்களை விரட்டுவார். அதனால் அந்தக் காந்தியின் பெயர் எங்கள் மத்தியில் ‘பூந்தி காந்தி’ என்றாகி பிறகு எப்படி என்றே தெரியாமல் ஒருநாள் ‘ஜிலேபி காந்தி’யாகி விட்டது. அதன்பிறகு அவனை ‘ஜிலேபி காந்தி’ என்று சொன்னால்தான் தெரியும் என்கிற மாதிரி ஆகிவிட்டது கதை.
குழந்தைகளுக்கு இப்படிப் பெயர்கள் வைத்தார்கள் என்றால், திம்மராஜபுரத்தில் பெரியவர்களுக்கு விதவிதமாக அடைமொழி வைத்துவிடுவார்கள். நிறைய சங்கர ஐயர்கள் இருந்ததால், ‘மோர்க்குழம்பு சங்கர ஐயர்’ என்று ஒருவரின் பெயர். அவருக்கு மோர்க்குழம்பு என்றால் ரொம்பப் பிடிக்குமாம். என்னுடைய அப்பா அப்போது பெரிய மீசை வைத்திருந்ததால் என்னை ‘மீசைக்காரர் பையன்’ என்பார்கள். நிறைய கண்ணன்கள் இருந்ததால் இப்படி…
இன்னொரு கதையும் இருக்கிறது.
எங்கள் நட்பு வட்டாரத்தில் பெரியார் என்று ஒருவன் இருந்தான். அவன் அப்பா திராவிடக் கட்சியில் இருந்தார். வீட்டில் எல்லோரும் தமிழ் தமிழ் என்று பம்மாத்து காட்டுவார்கள். அந்தப் பெரியார் எங்களைவிட பத்து வயதுகள் பெரியவன். குளிக்கவே மாட்டான். அழுக்காகவே காட்சி தருவான். இதில் எப்போதும் கருப்புச்சட்டை வேறு. எங்களிடம் நிறைய ‘செக்ஸ்’ பற்றிப் பேசுவான்; செக்ஸ் ஜோக்ஸ் எல்லாம் சொல்லுவான். எல்லாம் தெரிந்தமாதிரி ஆண் பெண் உடற்கூறுகளைப் பற்றி விலாவாரியாகச் சொல்லி எங்களை மலைக்க வைப்பான். (யார் கண்டது; ஒருவேளை அவனுக்கு அதுவும் தெரிந்திருக்குமோ என்னவோ!?) அவன்தான் எங்களுக்கு ‘மெக்ஸிகோ நாட்டு சலவைக்காரன்’ ஜோக் சொல்லி எங்களை அதிரவைத்தது.
இதில் இன்னொரு பெரிய சோகம் என்னவென்றால், ஒழுக்கமில்லாத பழக்க வழக்கங்கள் தேசத் தலைவர்களின் பெயர்களைக் கொண்டிருந்த பையன்களிடத்தின் தினசரி வாழ்க்கையிலும் நிறைய இருந்தது.
உதாரணத்திற்கு ஒரு பையனைப் பற்றி முதலில் பார்ப்போம். என்னுடைய மாமாக்களில் ஒருத்தர் அவருடைய மூத்த மகனுக்கு ‘ஜவஹர்’ என்று ஆசையாகப் பெயர் வைத்தார். என் மாமா மகனான இந்த ‘ஜவஹர்’ பணம் திருடுவதில் முதல் குடிமகனாக இருந்தான். என் மாமா வீட்டில் பணத்தைப் பீரோவில் வைத்துப் பூட்டி சாவியை பொதுவாக பெரியவர்கள் யாராவது பத்திரமாக இடுப்பில் செருகி வைத்திருப்பார்கள். தப்பித் தவறி ஞாபக மறதியாக சாவியை எங்கேயாவது வைத்து அது மாமா மகன் ஜவஹரின் கண்ணில் பட்டுவிட்டால் ரொம்ப ஆபத்து. அடுத்த நிமிடம் பணத்துடன் ஜவஹரும் சேர்ந்து காணாமல் போய்விடுவான்.
பணம் ஒரு கை நிறைய கிடைத்தால் ஜவஹர் மதுரைக்குப் போவான்; பணம் இரண்டு கையளவிற்குக் கிடைத்தால் திருச்சிக்குச் செல்வான்; பணம் பக்கெட் நிறைய அகப்பட்டால் ரயில் பிடித்து ஜவஹர் போய்ச் சேருமிடம் சென்னைப் பட்டணம். ஆனால் எவ்வளவு பெரிய தொகை கிடைத்தாலும் ஜவஹர் சென்னையைத் தாண்ட மாட்டான். மொழி தெரியாத ஊரிலெல்லாம் போய் மாட்டிக் கொள்ளக்கூடாது என்பதில் அவன் உஷாராக இருந்தான்.
கைக்காசு தீரும்வரை ஊர் சுற்றிக் கொண்டிருப்பான். காசெல்லாம் தீர்ந்ததும் போன ஜோரிலேயே பயமில்லாமல் உடனே ஊர் திரும்பிவிடுவான். ஆனால் ஒன்று; ஊர் திரும்பியவுடனே வீட்டுக்குப் போய்விட மாட்டான். அப்பதான் பயம் ஆரம்பிக்கும்…
முதலில் ஒருநாள் பூராவும் ஊர்க்கோடியில் பட்டும் படாததுமாக கண்ணில் தென்பட்டுக் கொண்டிருப்பான். இரண்டாவது நாள், நான்காவது தெருவில் யார் வீட்டு வாசலிலாவது திண்ணையில் வந்து உட்கார்ந்திருப்பான். மூன்றாவது நாள் ரொம்ப முக்கியமான நாள். ஜவஹர் அன்று அவனுடைய வீடு இருக்கிற தெருவிற்கு வந்துவிடுவான். நகத்தைக் கடித்துத் துப்பியபடி தெரு முனையிலேயே நின்று கொண்டிருப்பான். வீட்டிற்குள் நுழைகிற வேலை அவனுடையது இல்லை. அந்த வேலையை என் மாமா பார்த்துக்கொள்வார்.
ஜவஹர் அப்பாவி போல நின்று கொண்டிருக்கும் இடத்தை நோக்கி தன் முழுக்கைச் சட்டையை மடித்துவிட்டபடி என் மாமா வேகமாகவும் ஆத்திரமாகவும் வருவார். ஜவஹரின் தலைமுடியை அப்படியே கொத்தாகப் பிடிப்பார். பின்பு அப்படியே அவனைத் தரதரவென்று வீட்டுக்குள் இழுத்துப் போவார். அப்புறம் ஜவஹரின் வீட்டில் தீபாவளிதான். திடும் திடும் என ஜவஹரின் முதுகில் வீட்டில் இருக்கும் ஒருத்தர் பாக்கி வைக்காமல் பெரிய பெரிய வெடிகள் வெடிப்பார்கள்! வெடிச் சத்தமும் காதை அடைக்கும்….