அந்த நிறுவனத்திலிருந்து இன்டர்வியூ கடிதம் வந்தது முதல், ராகவனுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. அதுதான் அவனுக்கு முதல் அனுபவம் என்பதால், இன்டர்வியூவில் கேள்விகளுக்கு எப்படிப் பதிலளிக்க வேண்டும், அங்கே எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று புரியாமல் தவித்தான். பின்பு, அந்த அழைப்புக் கடிதத்தை எடுத்துக்கொண்டு போய், பக்கத்து வீட்டு பலராமனிடம் காட்டி ஆலோசனை கேட்டான். பெரிய வங்கி ஒன்றில் உயர்பதவி வகித்து, ஓய்வு பெற்றவர் அவர்.
‘‘அட! இது நல்ல கம்பெனிடா! என் சினேகிதனோட பையன் ஒருத்தன் இந்த கம்பெனில பி.எஸ்.ஸா இருக்கான். முதல்ல நீ இன்டர்வியூவை நல்லவிதமா பண்ணுடா, பார்த்துக்கலாம்’’ என்று தட்டிக்கொடுத்தார்.
‘‘எனக்கு இதுதான் முதல் இன்டர் வியூ மாமா! என்னவெல்லாம் கேள்வி கேட்பாங்க… எப்படியெல்லாம் அங்கே நடந்துக்கணும்னு சொல்லுங்களேன்!’’ என்றான்.
‘‘ஒண்ணும் பயப்படாதே! கேள்விக் கெல்லாம் தயங்காம, தைரியமா பதில் சொல்லு! தெரியாததை தெரியலேன்னு சொல்லிடு. பேந்தப் பேந்த முழிச்சுக்கிட்டு உட்கார்ந்து டயத்தை வேஸ்ட் பண்ணாதே! அப்புறம், அங்கே நீ எப்படிப் பொறுப்பா நடந்துக்கறேங்கறதைக் கவனிச்சும் மார்க் போடுவாங்க. உதாரணமா, என் அனுபவத் தையே சொல்றேனே… நான் இன்டர்வியூ முடிஞ்சு, அந்த அறையைவிட்டு வெளியே வர்றபோது, அங்கே வாஷ்பேஸின் குழாய் ஒழுகிட்டு இருந்துது. அதைச் சரியா மூடி வெச்சேன். கதவுப் பக்கத்துல ஒரு காலண்டர்ல தேதி கிழிக்காம இருந்துது. பொறுப்பா அதைக் கிழிச்சுட்டு வந்தேன். அதைப் பார்த்து, இன்டர்வியூ ஆபீஸர் முகத்துல ஒரு புன்னகை பூத்துது. என்னோட இந்தப் பொறுப்பு உணர்ச்சி யைப் பார்த்துதான் எனக்கு அந்த வேலையே கிடைச்சுதுன்னா பார்த்துக்கோ!’’
‘‘சரி மாமா, நானும் அப்படியே பொறுப்பா நடந்துக்கறேன்!’’
மறுநாள்… அந்த இன்டர்வியூக்குப் போய்விட்டுத் திரும்பியபோது அவனுக்கு மனநிறைவாக இருந்தது. அந்த ஆபீஸர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம், தான் சரியாக பதில் சொன்னதோடு மட்டுமின்றி, கேள்விகளுக்கு இடையில் அவருக்கு போன் கால் வந்தபோது, தான் ரிஸீவரை எடுத்துத் துடைத்து அவரிடம் நீட்டியதையும், அவர் போனில் பேசிய அந்த ஐந்து நிமிடங்கள் தான் சும்மா உட்கார்ந்திருக்காமல், மேஜையில் கலைந்துகிடந்த பேப்பர்களையெல்லாம் ஒழுங்குபடுத்தி, பென்சில், பேனாக்களை அவற்றுக்குரிய இடங்களில் வைத்ததையும், போனில் அவர் யாரிடமோ கிரிக்கெட் ஸ்கோர் கேட்க, தான் முந்திக்கொண்டு ஸ்கோரைச் சொன்னதையும் பெருமை யோடு நினைத்துப் பார்த்து மகிழ்ந்தபடி, அந்த கம்பெனியிலிருந்து அப்பாயின்ட் மென்ட் ஆர்டர் வரும் நாளுக்காக ஆவலுடன் காத்திருந்தான்.
மூன்றாம் நாள் மாலை, அவனைக் கூப்பிட்டு அனுப்பினார் பக்கத்து வீட்டு பலராமன். போனான்.
‘‘இன்னிக்குக் காலைல மார்க்கெட்ல, நான் சொன்னேனே… அந்த பி.எஸ். ஜெயராமனைப் பார்த்தேன். உன்னைப் பத்தி அவன்கிட்ட விசாரிச்சேன். அவன் சொன்னதைக் கேட்டதும், எனக்கு என்னவோ போல ஆயிடுச்சு!’’ என்றார்.
‘‘என்ன சொன்னார் மாமா?’’ என்று பதற்றத்துடன் கேட்டான் ராகவன்.
‘‘உன்னை இன்டர்வியூ பண்ணின அந்த ஆபீஸர் ஒரு முசுடு பேர்வழியாம்! நீ அந்த இன்டர்வியூ ரூம்ல கையை காலை அடக்கி வெச்சுக்கிட்டு சும்மா இருந்திருக்கப்படாதோ? நீ பண்ணின வேலையையெல்லாம் பார்த்துட்டு, சரியான ‘காக்கா’ பேர்வழியா இருப்பி யோன்னு அந்த ஜெயராமன்கிட்ட கமென்ட் அடிச்சானாம்! ஏன்டா, இன்டர்வியூக்குப் போனோமா, அவங் களுக்குத் திருப்தியா இருக்கிற மாதிரி பதில் சொன்னோமானு இல்லாம, நீ ஏண்டா அங்கே கண்டதையெல்லாம் நோண்டிட்டு இருந்தே? ஹ¨ம்… எனக்கென் னவோ ஆர்டர் வரும்னு நம்பிக்கையே இல்லே! சரி சரி, அடுத்த இன்டர்வியூலயாவது புத்திசாலித்தனமா நடந்து, ஆர்டர் வாங்கற வழியைப் பாரு!’’ என்று அட்வைஸ் செய்துவிட்டு உள்ளே போனார் பலராமன்.
பேந்தப் பேந்த விழித்தபடி நின்றிருந்தான் ராகவன்.
– வெளியான தேதி: 30 ஏப்ரல் 2006
நல்ல கதையா இருக்கு..
எனது சிறுகதை இத்தளத்தில் பிரசுரமானதை இன்றுதான் (05.11.2013)கண்டேன். மனமார்ந்த நன்றி.
– கிரிஜா மணாளன்.