பாலிடிக்ஸ் ப்ளஸ் டூ!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 21, 2022
பார்வையிட்டோர்: 11,703 
 

ஆந்திர குருட்சேத்திரத்தில் தெலுங்குதேச மன்னர் கலியுகக் கிருஷ்ண பரமாத்மா என்.டி.ராமா ராவ் அவர்கள் தெலுங்குதேச ஊழியர்களுக்காக அரசியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கவேண்டும்’ என்று திருவாய் மலர்ந்தருளியிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன.

ராமராவ்காருவின் மேற்கூறிய ஆசை அகில இந்திய ரீதியில் செயலாக்கப்படவேண்டிய விஷயம் என்று தோன்றுகிறது. இதைக் கல்லூரியோடு மட்டும் நிறுத்தக் கூடாது. அரசியல் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் ஆரம்பித்து அரசியல் ‘கிண்டர் – கார்டன்கள்’ அரசியல் ‘ப்ளஸ்-டூக்கள்’, அரசியல் ஆராய்ச்சி நிறுவனங்கள் என்று தோன்ற வேண்டும்.

அட ராமாராவே! (அட ராமா என்பதற்குப் பதிலாக….) அரசியல் கார்ப்பரேஷன் ஸ்கூல்களை மறந்துவிட்டோமே! போகிற போக்கில் டி.வி. க்விஸ் நிகழ்ச்சிகளில் “கார்ப்பரேஷன் என்றால் என்ன?” என்று கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை . அதற்கு ஒருவர் எழுந்து, “தற்போதைய பெட்ரோல் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசாங்கமே ரேஷன்’ முறையில் கார்களை விற்பதற்கு கார்ப்பரேஷன் என்று பெயர்” என்று பதிலளித்தாலும் அளிக்கலாம்.

விஷயத்துக்கு வருவோம். சில குழந்தைகளின் நடவடிக்கைகளைப் பார்த்தாலே அவை பிற்காலத்தில் பெரிய அரசியல்வாதிகளாக வரக்கூடியவர்கள் என்று தெரிந்துவிடும். உதாரணமாக எப்போதும் செருப்பு, பூட்ஸ் இப்படிக் காலணிகளைக் கையில் வைத்துக்கொண்டு விளையாடும் குழந்தைகள், பெற்றோர்கள் சொல்லும் சாதாரண வேலைகளைச் செய்வதற்குக்கூட ‘லஞ்ச மாக சாக்லேட், மிட்டாய் கேட்கும் பிள்ளைகள், ஒரு இடத்தில் நிற்காமல் எப்போதும் வீட்டில் ஒவ்வோர் இடமாக ஓடிக்கொண்டே சூறாவளிச் சுற்றுப் பயணம்’ செய்யும் சிறுவர்கள், பின்னால் செய்யப் போகும் கட்சித் தாவலுக்கு அறிகுறியாக, பிறந்த ஆறாவது மாதத்திலேயே விளையாட்டுச் சாமான்கள் வைத்திருக்கும் விருந்தாளிகளிடம் வேற்று முகம் பாராமல் தாவும் பிழைக்கத் தெரிந்த பிஞ்சுகள், எவ்வளவுதான் அலங்காரம் செய்தாலும் உடனடியாக வீதி மணலில் புரண்டு எழுந்து ஊழல் மன்னனாக’ மாறிவிடும் மழலைகள், சாக்லேட், மிட்டாய் போன்றவற்றை ‘காக்காய் கடி’ கடித்துக் கொடுத்து தாஜா செய்து, தனது தற்காப்புக்காக பொடி ஆட்களைத் தயார் செய்து வைத்திருக்கும் பால் தலைவர்கள்… இத்தகைய குழந்தைகள் இந்த ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் அவசியம் சேர்க்கப்படவேண்டிய குழந்தைகள். ஆத்திச்சூடி’ இல்லாமல் ஆரம்பக் கல்வியா? ஒளவையாரின் ஆத்திச்சூடியை நடைமுறை அரசியலுக்கேற்ப கீழ்க்கண்டவாறு மாற்றியமைத்து அரசியல் குழந்தைகளின் செவிப்பறையில் ஓதவேண்டும்.

அன்னையும் (இந்திரா) பிள்ளையும்
(ராஜீவ்) முன்னெறி தெய்வம்.
ஆலய உடைமைகள் (திருப்பதி)
அரசாங்கம் கையிலே.
இயல்வது கரவேல் இயன்ற வரையில்
லஞ்சத்தைக் கறந்து விடு).
ஈவது மறவேல் (ஆங்கிலத்தில் ஈவ் என்றால்
தாய்க்குலத்தைக் குறிக்கும்
தேர்தல் சமயங்களில் தாய்குலத்தை
தாஜா பண்ண மறவாதே)

பிள்ளைகளுக்குச் சீருடையாக (uniform) சொக்காய் நிஜாருக்குப் பதிலாக, தழையத்தழைய வேட்டியும், தோளிலிருந்து புரளும் துண்டும் அளிக்கலாம். பிற்காலத்தில் அவர்கள் ஓட்டு கேட்க வீடு வீடாக ஏறி இறங்கும் போது தழையப் புரளும் வேட்டியால் தடுக்கி விழாமலிருக்கச் சிறு வயதிலேயே அவர்களுக்கு இந்த சீருடைப் பயிற்சியை அளிப்பது நல்லது.

பள்ளிக்கூடம் துவங்குவதற்கு முன்பாக ப்ரேயராக பிரபலமான கட்சிப் பாடல்களையும் டேப் சங்கீதங்களையும் ஒலிபெருக்கியில் போட்டு அலற வைத்து மாணவர்களுக்கு அரசியல் இசை ஞானத்தை உண்டாக்கலாம். சாம்பிளுக்கு ஒரு டேப் சங்கீதம்.

‘டாப் டக்கரு அண்ணாச்சி…
டால்டா விலை என்னாச்சு….
டக்கரு டக்கரு தம்பிகளா….
தலைவர் பேச்சை நம்புங்கடா…’

மேலே கூறப்பட்ட தத்துவம் ததும்பும் பாடல்களை நர்சரி ரைம் ‘களாகக் கற்றுக் கொடுத்துக் குழந்தைகளுக்குத் தமிழ் ஆர்வத்தை உண்டாக்கலாம்.

வகுப்பறையில் ஆசிரியர் நுழைந்ததும் மாணவர்கள் வெறித்தனமாக விசிலடித்து அவரை வரவேற்று ‘குட்மானிங் சார்!’ என்பதற்குப் பதிலாக ‘குட்மார்னிங் அண்ணே!’ என்று காட்டுத்தனமாகக் கூவும் பழக்கத்தை ஏற்படுத்தவேண்டும். பதிலுக்கு ஆசிரிய அண்ணனும் ‘குட்மார்னிங் தம்பிகளே!’ என்று கூறி, அண்ணன் – தம்பி சகோதர பாசத்தைத் தோற்றுவிக்க முயல வேண்டும்.

வகுப்புக்கு லீடரை தேர்ந்தெடுக்கப் பின்வரும் வழியை ஆசிரிய அண்ணன்கள் பின்பற்றலாம். எந்த ஒரு மாணவன் வாயில் விரலை வைக்காமல் அட்டகர்சமான சத்தத்தோடு விசிலடித்து ஆசிரிய அண்ணனை ஸ்தம்பிக்க வைக்கிறானோ அவனே வகுப்புக்கு ‘லீடராகும்’ – தகுதி பெற்றவன்.

வகுப்புகளை ஆறாவது மாவட்டம், ஏழாவது மாவட்டம் என்றும், செக்ஷன்களை ஏ வட்டம், பி வட்டம் என்றும் கொள்ளலாம். இந்த முறை மாணவர்களின் வட்ட, மாவட்ட அறிவை விருத்தி செய்ய அனுகூலமாக இருக்கும். மேலும், இந்த அரையாண்டுத் தேர்வு, இறுதி ஆண்டுத் தேர்வுகளை சட்டசபைத் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் என்று கவர்ச்சிகரமாக மாற்றியமைக்கலாம். மாதத்துக்கு ஒரு முறை வகுப்பு ஆசிரியரே நடத்தும் சிறுசிறு பரீட்சைகளை இடைத் தேர்தல்களாக வைத்துக் கொள்ளலாம். இந்த ரீதியில் பார்த்தால் வீட்டில் செய்ய வேண்டிய ‘ஹோம் – ஒர்க்’ கட்சிப் பணியாகிறது.

நாற்பது மார்க்குகளுக்குக் குறைவாகத் தேர்வில் எடுத்த மாணவனிடம், “நீ பெயிலாகிவிட்டாய்” என்று கூறுவதைவிட “உனக்கு டெபாசிட் போய்விட்டது” என்று கூறினால் அவனும் பெருந்தன்மையோடு ‘மறப்போம் மன்னிப்போம்’ பாவனையில் அடுத்தத் தேர்தலுக்குத் தன்னைத் தயார் செய்து கொள்ள முயல்வான்.

வாரத்துக்கு ஒரு முறையேனும் பள்ளியின் மத்திய ஹாலில் வண்ண அலங்கார மேடை போட்டுப் பொதுக் கூட்டமும், பேச்சுப் போட்டியும் நடத்தவேண்டும். கொடுத்தத் தலைப்புக்குச் சிறிதும் சம்பந்தமில்லாது தெளிவாக அதே சமயத்தில் எந்தவிதக் குழப்பமுமின்றி உளறும் மாணவனைச் சிறந்த பேச்சாளனாகத் தேர்ந்தெடுத்து அவனுக்குப் பள்ளியின் சார்பாக மலர்க் கிரீடமும் கலர் சாக்பீஸ் மாலையும் அணிவிக்க வேண்டும். வசதியுள்ள மாணவர்கள் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவனுக்கு எடைக்கு எடை குச்சி ஐஸோ அல்லது கமர்கட்டோ தரலாம்.

பள்ளி மைதானத்தில் செருப்பு எறிதல், சோடா பாட்டில் வீசுதல், சரமாரியாகக் கல் மழை பொழிதல் போன்ற வீர விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கலாம்… முக்கியமாக மாணவர்கள் செருப்பு எறிதலில் அவசியம் தங்கப் பதக்கம் வாங்கும் அளவு திறமை உள்ளவர்களாக இருக்கவேண்டும். நாளை பொறுப்பு வரும்போது கையில் கொடுக்கப்படும் பாட்டாவை விடக் காலில் அணிந்திருக்கும் ‘பாட்டா’ எவ்வளவு முக்கியமானது என்பதை இன்றிலிருந்தே அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

அரசியல் கல்லூரியில் கெட்ட வார்த்தை தான் ‘ஃபஸ்ட் லாங்வேஜ்’. ‘மேற்படிப்பு முடித்து டெல்லி செல்பவர்கள் கெட்ட வார்த்தையில் திட்டுவதற்கு வசதியாக ஹிந்தி கெட்ட வார்த்தையை செகண்ட்’ லாங்வேஜாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தது, கணிதம். எதை எதால் வகுத்தாலும் பெருக்கினாலும் கூட்டினாலும் கழித்தாலும் தனக்குச் சாதகமான விடையை வரவழைத்துக்கொள்ள சாமர்த்திய கணிதம் சொல்லித் தரப்படும். அரசியல் கணிதத்தில் ‘ஸ்பெஷலைஸ்’ செய்ய விரும்புபவர்கள் ‘லஞ்ச கணிதத்தை ‘மேஜராக’ எடுத்துக்கொள்ளலாம்.

லஞ்ச கணிதத்தில் தேர்ச்சியடைய விரும்புபவர்களுக்குப் பேராசிரியர் கபாலீஸ்வரரின்’ அரசியல் லஞ்ச அனாலிஸிஸ்’ புத்தகத்தைப் பாடமாக வைக்கலாம்.

ஊழல் திரவத்தை நியூட்ரலைஸ்’ செய்ய கமிஷன்’ அமிலம் பத்து ஸிஸியும்’, ‘நீதிபதி மாற்றல் உப்பு இரண்டு தேக்கரண்டியும் கலந்து பத்திரிகை’ பர்னரில் கொதிக்க வைத்து, பின் ஆற அமர வைத்து மறக்கச் செய்யும் அரசியல் கெமிஸ்டரியும் உண்டு.

ஆளும் கட்சியின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ஆக்ஷனுக்கு நேர் எதிர் ஆக்ஷனாகவும் அதே சமயத்தில் சமமான ஆக்ஷனாகவும் குற்றம் சாட்டும் ‘பிஸிக்ஸை’ சொல்லித்தர இந்த அரசியல் கல்லூரியில் பல நியூட்டன்கள் ‘ ஆசிரியராகச் சேரலாம்.

ஒருவேளை இம்மாதிரி அரசியல் கல்லூரிகளில் பயின்று தேறியும்கூட (காப்பியடித்தாவது) பரம சாதுவாக ‘சிவனே’ என்று இருக்கும் பட்டதாரிகளை கவர்னராக நியமிக்கலாம்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓட்டளிக்கும் அர்ச்சுனர்களே! அரசியல் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் அமைப்பு உங்களுக்கு ஓரளவு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

அடுத்து வரும் தேர்தல்களில் உங்களிடம் ஓட்டு கேட்க வரும் அரசியல் கல்லூரியில் படித்துத் தேறியவர்கள் தானா என்று தெரிந்து கொள்ள உடம்பில் கறுப்பு கவுனோடு தலையில் பட்டமளிப்புக் குல்லாயும், கையில் பல்கலைக்கழக சர்டிபிகேட்டும் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தைக் காட்டச் சொல்லுங்கள். அதன்பின் அவர்கள் முதுகுப் பகுதியில் அரசியல் கல்லூரியில் படித்துத் தேறியதற்கு அத்தாட்சியாக ஐ.எஸ்.ஐ. சின்னம் பச்சை குத்தப்பட்டிருக்கிறதா என்று பரிசீலனை செய்யுங்கள்.

தயவு செய்து போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள்! கடைசியாக ஒன்றை மட்டும் மறக்காமல் செய்ய வேண்டும். அரசியல் பல்கலைக்கழகத்துக்கு என்று ஒரு கொள்கை (Motto) வேண்டுமல்லவா? அதற்காக ‘கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் செருப்பு’ என்ற புது மொழி இருக்கவே இருக்கிறது. ஜமாய்த்துவிட வேண்டியதுதானே!

– ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *