கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: சமூக நீதி
கதைப்பதிவு: May 24, 2022
பார்வையிட்டோர்: 8,834 
 

(1944 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ராயப்பன் எங்கள் விற்பனைப் பையன்களுள் ஒருவன்.

கிறிஸ்தவப் பையன். ஆனால் அவன் வழக்கம். இரவில் எங்கேயாவது ஒரு விநாயகரைத் தொழுது விட்டு அங்கேயே விநாயகருக்குப் பின் படுத்துத் தூங்கிவிடுவான். வேறு நல்ல இடம் சொன்னாலும் அங்கே படுக்கமாட்டான்.

“ஏன் இவ்வாறு செய்கிறாய்?’ என்று கேட்டால் சும்மா சிரிப்பான். ரொம்ப வற்புறுத்தினால், ‘அது தான் எனக்கு மனம் நிம்மதி’ என்பான்.

“உங்கள் அப்பா கிறிஸ்தவராயிருந்தாரா, அல் லது நீ அதில் சேர்ந்தாயா? என்று சிலர் கேட்பார் கள். “நானே சேர்ந்தேன்” என்று அகங்காரமாகச் சொல்லிவிட்டு, பேப்பர் விற்க ஓடிப்போவான்.

கிருஷ்ணகிரித் தாலூகா பஞ்சுப்பட்டி கர்ணம் கந்தசாமி அய்யருக்குக் குழந்தை பிறந்த ஆறாவது மாதத்தில், மனைவி ஊருக்கு வெளியே பிசாசு குட்டையில் கால் கழுவி ஏறும் போது கால் வழுக்கிவிட்டு, “ஐயையோ! குழந்தைக்கு என்ன கதி என்று கத றிக்கொண்டு மூழ்கிவிட்டாள். கந்தசாமி அய்யர் சில வருஷங்கள் கழித்து மறு விவாகம் செய்துகொண் டார். கொஞ்ச காலம் சரியாக நடந்து வந்தது. பிறகு பையன் வேங்கடராயனுக்கும் சித்திக்கும் பிடிக்க வில்லை. காரணமில்லாமல் துவேஷம் முற்றிப் போயிற்று. சொன்னதைக் கேட்கமாட்டேன் என் கிறான் என்று அவள் அடிப்பாள். தகப்பனாரிடம் அழுது கொண்டு போவான். அழுவதைக் கண்டு அவ ரும் அடிப்பார். “நீ நாசமாகப் போக என்பார். குழந்தைக்கு இது ஒன்றும் விளங்கவில்லை. தெரு நாயை யாராவது அடித்தோ , கல் வீசியோ தொந்தரவு செய்து, அது கத்திக்கொண்டு ஓடிப்போவதைக் கண் டால் வேங்கடராயன். “அந்த நாய், பாவம். என்னைப் போலவே கஷ்டப்படுகிறது” என்று அதையே பார்த் துக்கொண்டு நிற்பான். வேங்கடராயனுக்கு வயது ஏழு ஆயிற்று. பள்ளிக்கூடத்திற்கும் போய் வந்து கொண்டிருந்தான். ஆனால் அவனுக்குப் படிப்பில் மனம் செல்லவில்லை. வாத்தியார்கள் அதட்டிப் பார்த் தார்கள்; கொஞ்சம் அடித்தும் பார்த்தார்கள். ‘சுத்த மக்கு, ஒன்றுக்கும் பயனில்லை என்று தீர்மானித்து, போன போக்கில் விட்டுவிட்டார்கள்.

ஒருநாள் மற்றொரு பள்ளிக்கூடப் பையன் , சவுரி முத்து என்பவன் . வேங்கடராயனைத் தன் வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனான். போய்ச் சேரும்போது அந்தப் பையனுடைய தாயார் வீட்டு வாசலில் காத்துக் கொண்டிருந்தாள். மகன் வந்ததும், ‘முத்து! வந்தாயா? என்று அணைத்து முத்தமிட்டு வீட்டுக்குள் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனாள்.

“இவன் யார், உன்கூட?” என்று கேட்டாள்.

“என்னோடு படிக்கும் பையன், கர்ணம் அய்யரின் மகன். சும்மா அழைத்து வந்தேன். இவனுக்கும் பட்ச ணம் கொடு என்றான் சவுரி.

சவுரிமுத்து வீட்டில் வேங்கடராயன் கண்டதெல் லாம் அவனுக்கு வியப்பாக இருந்தது. இரண்டு மூன்று நாள் சவுரியுடன் அவன் வீட்டுக்குப் போய் வந்தான்.

“சவுரி தாயாரைப்போல் ஏன் என் தாயும் அன் பாக இருக்கமாட்டேன் என்கிறாள்? சவுரியின் தாயார் போல் எனக்கும் ஒரு தாயார் இருக்கக்கூடாதா? என்று யோசிக்கலானான். பிறகு ஒருநாள் சவுரியை தனியாக அழைத்துப் போய் . ” சவுரி ! தாயார்கள் எப்படி உண்டாகிறார்கள்? உனக்கு எப்படி உன் அம்மா கிடைத்தாள்? என்று கேட்டான்.

சவுரிமுத்துவுக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. குழந்தைகளுக்குத் தாய்மார்கள் எப்படி வந்து சேரு கிறார்கள் என்பது அவனுக்கும் தெரியவில்லை. கடைசியாக, ‘கடவுள் கொடுக்கிறார். உனக்கு ஏனோ ஆண்ட வன் நல்ல தாயாரைக் கொடுக்கவில்லை. அவருக்கு உன்மேல் கோபம் போலிருக்கிறது” என்றான்.

பிறகு சவுரியின் தாயாரும் வந்து சேர்ந்தாள்.

“அம்மா! இந்தப் பையன் தாயார் இவனை ரொம்ப அடிக்கிறாளாமே! ஏனம்மா இப்படி? பாவம். இவனுக்கும் உன்னைப்போல் ஒரு நல்ல அம்மா கிடைக்கக்கூடாதா?” என்றான் சவுரி.

மேரியம்மாள் சிரித்துவிட்டு. வேங்கடராயனைப் பார்த்து, “நீ நல்ல பையனாக இருந்தால் உன் தாயும் உன்னை அடிக்கமாட்டாள்” என்றாள். சொல்லிக் கொண்டே தன் மகன் முகத்தைத் தடவி, உச்சிமேல் ஒரு முத்தமிட்டாள்.

“எனக்கு எப்போ என் தாயார் வந்தாள்? சவு ரிக்கு நீங்கள் எப்போ வந்தீர்கள்? என்றான் வேங் கடராயன்.

மேரியம்மா மறுபடியும் குலுங்கச் சிரித்து. “பாவம், பையனுக்கு ஒன்றும் தெரியாது போலிருக் கிறது! அப்பனே, உன் தாயார் நீ சிறு குழந்தையாக இருக்கும் போதே பிசாசு குட்டையில் கால் வழுக்கி முழுகிப் போய் செத்துப் போனாள். உன் தகப்பனார் கர்ணம் அய்யர் மறு கல்யாணம் செய்து கொண்டார். நானும் கூட வெற்றிலை பாக்குக்குப் போயிருந்தேன். உன்னை அடிப்பது உன் தாயார் அல்ல. உன் தாயார் இறந்து போய்விட்டாள்” என்றாள்.

.. என் அம்மா இப்போது எங்கே இருப்பாள்? என்று கேட்டான் வேங்கடராயன். கண்களை அகலத் திறந்து கொண்டு.

“அப்பா . குழந்தாய், நீ தேவனை வேண்டிக் கொள். உன் அம்மா உன்னிடம் வருவாள்” என்றாள்.

“தேவன் யார்? அவனை எங்கே வேண்டிக்கொள் ளலாம்?” என்றான் வேங்கடராயன்.

“அப்பனே, பார்! அதோ படம்!” என்று சுவரில் உயரத்தில் தொங்கிய ஏசு கிறிஸ்துவின் தாயான மேரியம்மையின் படத்தைக் காட்டினாள்.

வேங்கடராயன் வெகு நேரம் படத்தைப் பார்த்த வண்ணமாகவே நின்றான். அந்தப் படம் அவனுக்கு ஒரு புது உயிர் தந்தது. பிறகு வீட்டுக்குப் போகப் புறப்பட்டான். வழியில் மாதா கோயில் . அங்கே சென்று ஜன்னல் வழியாக உள்ளே எட்டிப் பார்த் தான். அங்கேயும் சுவரில் ஒரு பெரிய படம் இருந் தது. அதையே பார்த்துக்கொண்டு நின்றான். வர வர சித்திரம் உயிர்கொண்டு சுவரிலிருந்து அன்பே உருக்கொண்டாற்போல் ஒரு ஸ்திரீ கீழே இறங்கி னாள். மறு நிமிஷம் அவன் பக்கத்தில் நின்றாள். தான் வேண்டியவாறு தன் தாய் வந்துவிட்டாள் என்று எண்ணி உள்ளம் பொங்கினான்.

“அப்பனே. குழந்தாய் வேங்கடராயா.. என் றாள். ஆகா . அந்தக் குரலோ! தன் முகத்தின் மேல் அவள் கையால் தடவித் தீண்டியபோது பரவசமடைந் தான். தன் தாயை அடைந்து விட்டான் வேங்கட ராயன் / கட்டி யணைத்து முத்தமிட்டாள். ”வா. என்னோடு என்று எங்கேயோ அழைத்துப் போனாள். வெகு தூரம் நடந்து போனார்கள். அங்கங்கே நின்று. பையனைத் தூக்கிக் கட்டி யணைத்து முத்தமிடுவாள். “அப்பா இவ்வளவு நாள் கஷ்டப்பட்டாயே ஏன் என்னை முந்தியே கூப்பிடவில்லை? என்றாள்.

“எனக்குத் தெரியவில்லையம்மா” என்று வேங்கட ராயன் சொல்லி அழுதான். “அழாதே..” என்று தன் சேலைத் தலைப்பால் அவன் கண்ணைத் துடைத்தாள்.

வெகுதூரம் நடந்த பின், பாதிரியார் வீடு வந்தது. தோட்டத்திற்குள் வீடு. கேட்டண்டை வேங்கட ராயன் நின்று. இது நல்ல இடம். இங்கேயே தோட் டத்தில் உட்கார்ந்துகொண்டு காலங் கழிக்கலாம். வீட்டுக்குப் போனால் அவள் திட்டுவாள்’ என்றான். இப்படிச் சொல்லிவிட்டு கேட்டுக்குள் நுழையப் போனான்.

“அங்கே போக வேண்டாம்” என்று தாயார் அவனைத் தடுத்தாள்.

“ஏன்? போனால் என்ன?” என்றான் வேங்கட ராயன்.

“வேண்டாம் யாராவது வருவார்கள், வந்தால் நான் இருக்க முடியாது. போய்விடுவேன்” என்றாள்.

“தாகமா யிருக்கிறது. தோட்டத்துக் கிணற்றில் தண்ணீர் குடித்துவிட்டு வரலாம். வா . போகலாம்” என்று அவள் கையைப் பிடித்துக்கொண்டு கேட்டுக் குள் சென்றான்.

“குழந்தாய்! நீ யார்?” என்று பாதிரியார் சொல்லி, வாயிலிருந்த சுருட்டைக் கையில் எடுத்த படியே பக்கத்தில் நெருங்கினார். தாயார் மறைந்து போனாள்!

“அம்மா ! அம்மா என்று வேங்கடராயன் ஒரு பெரிய கூக்குரலிட்டான். “எங்கே போனாய்? வார் வா” என்று பாதிரியாரைக் கவனியாமல் கத்திக் கொண்டு இங்குமங்கும் தோட்டத்தில் மரங்களுக் கிடையே ஓடினான்.

பாதிரியார் பையனைச் சமாதானஞ் செய்து வீட் டுக்குள் கூட்டிக்கொண்டு போய் உட்கார வைத்துத் தண்ணீர் கொடுத்து, ”குழந்தாய், நீ யார்? என்று விசாரிக்கலானார். பையனுக்கு நல்ல சுரம்.

“குழந்தாய்! ஏசுநாதர்தான் நம்மை ரட்சிப்பார். அவரே தேவனின் ஒப்பற்ற ஒரு மகன். அதோ பார் அவர் படம். அவர் உன்னை ரட்சிப்பார். அதோ பார். அவரை இவ்வுலகில் பெற்ற புனிதமான தாயார் மேரியம்மை. இவள் தான் உன் மேல் பிரியமும் கருணையும் கொண்டு உன்னை இங்கே அழைத்து வந்துவிட்டுப் போனாள்.

“இல்லை, இல்லை. அவள் என் அம்மா. மேரியம்மையல்ல. அவளை நான் தேடிப் பிடிப்பேன். அவளைக் காணாமல் நான் இருக்கமுடியாது” என்று கதறிக்கொண்டு வெளியே சுரத்துடன் ஓடிப்போனான். இருட்டு. பாதிரியார் பின்தொடர்ந்து போகவில்லை.

இங்குமங்கும் அலைந்து வண்டிப்பேட்டை விநாயகர் மண்டபத்தை யடைந்தான். அங்கே ஒருவருமில்லை. அது சந்தை நாளல்ல. பிள்ளையார் முன் யாரோ ஏற்றி வைத்திருந்த ஒரு சிறு விளக்கு மினுக்கு மினுக் கென்று எரிந்துகொண்டிருந்தது. அவ்விடம் போய் வேங்கடராயன் கீழே விழுந்தான். “அம்மா! அம்மா” என்று மெதுவாகச் சொல்லிக்கொண்டே கிடந்தான். பிறகு தூங்கிப்போனான். நள்ளிரவில் திடீர் என்று எழுந்து உட்கார்ந்தான். தாயும் பக்கத்தில் உட்கார்ந் திருந்தாள்!

“அம்மா” என்று கெட்டியாய்ப் பிடித்து அணைத் துக்கொண்டான். “என்னை விட்டுப் போகமாட்டாயே?” என்று கதறினான்.

“இல்லை. இல்லை” என்று அவள் இவனுடைய முகத்தைத் தடவி முத்தமிட்டாள். “நீ தினமும் இங்கேயே வந்து படுத்துக்கொள். நானும் வருவேன். பகலில் நான் வரமுடியாது” என்றாள். விடியற் காலம் வெளிச்சத்திற்கு முன் மறைந்து போனாள்.

அன்று முதல் வேங்கடராயன் வண்டிப்பேட்டைப் பிள்ளையார் மண்டபத்தில் தான் படுப்பது. அவன் முகத்தில் ஒரு புதிய காந்தி உண்டாயிற்று. பகலெல்லாம் கண்டபடி பாடித் திரிந்துகொண்டிருப்பான். பையனுக்குப் பித்துப் பிடித்துவிட்டது என்று ஊரார் பரிதாபப்பட்டார்கள். வேங்கடராயனோ ஆனந்தக் கடலில் குளித்து விளையாடித் திரிவான். இரவு வண்டிப்பேட்டை விநாயகரை மூன்று தரம் சுற்றிக் கும் பிட்டு அங்கேயே படுப்பான். தாயாரும் தவறாமல் வந்துவிடுவாள். இப்படியே பல நாட்கள் சென்றன.

“ஐயோ, பாவம்! இந்தச் சின்னஞ் சிறுகுழந்தை இப்படியாயிற்றே?” என்று குளத்தங்கரையில் தாய் மார்கள் மெதுவாகப் பேசுவார்கள்.

“வெறும் வேஷம்” என்பாள் கந்தசாமி அய்யர் மனைவி.

“வேஷமோ, எதுவோ, பகவானுக்குத்தான் தெரியும்” என்று கந்தசாமி அய்யர் மனதை ஸ்திரப்படுத்திக்கொள்ளப் பார்ப்பார். ஊரில் மற்றக் குழந்தைகளைக் கண்டால் அவருக்கு வெறுப்பும் கோபமும் வரும்.

ஒருநாள் வேங்கடராயன் வழக்கம்போல் மண்டபத்திற்குப் படுக்கப் போனான். பிள்ளையாரைக் காணவில்லை! மண்டபமும் பிரிந்து கீழே கல்லும் கம்பமு மாய்க் கிடந்தது. யாரோ ஒரு செட்டியார் புண்ணியம் சம்பாதிக்கக் கோயிலைப் பிரித்துத் திருப்பணிப் செய்யத் தீர்மானித்து வேலை துவக்கப்பட்டது. பிள்ளையாரை அப்படியே எங்கேயோ கொண்டு போய் வைத்திருந் தார்கள்.

பிரித்துப் போட்ட மண்டபத்துக் கற்களுக் கிடையே வேங்கடராயன் இரவெல்லாம் தூங்காமல் மௌனமாக உட்கார்ந்திருந்தான். அன்று தாயார் வரவில்லை. பித்தமும் தெளிந்துவிட்டது. உலகம் பழையபடி அன்பு வற்றி நின்றது!

ஒரு நாள் வேங்கடராயன் மாதா கோயிலுக்குப் போனான். பழைய ஜன்னலில் எட்டிப் பார்த்தான். சுவரில் மேரியமமை படத்தைக் கண்டான். தன் தாய் மாதிரித்தான் இருந்தது. ஆனால் படத்திலிருந்து இப்போது யாரும் இறங்கிவரவில்லை. சித்திரம் சித்திர மாகவே நின்றது.

பல நாள். பிரித்துப் போட்ட மண்டபத்தண்டை யும் மாதா கோயிலண்டையும் ஏதோ கெட்டுப்போன பொருளைத் தேடுவது போல் தேடித் தேடித் திரிந்தான். ஒருநாள் பாதிரியாரண்டை மறுபடியும் போனான்.

“சாமி! நான் கிறிஸ்தவனாகப் போகிறேன்” என்றான்.

பாதிரியார் பையனை மிகவும் அன்புடன் அழைத்து விசாரித்தார்.

பாதிரியாரும் கர்ணம் கந்தசாமி அய்யரும் பேசுகிறார்கள் :

“ஐயரே. மேரியம்மையின் கருணையினால் உங்கள் மகனுக்குப் பைத்தியம் சுவஸ்தப்பட்டது. அவன் ஞான ஸ்நானம் அடைய வேண்டுமென்று கேட்கிறான். ஆண்டவன் இச்சைக்கு நாம் தடை செய்யலாகாது.”

“ஐயோ. நாங்கள் பிராமணர்கள் ஆயிற்றே? இது முடியாது.”

பாதிரியார் அதன்மேல் வற்புறுத்தவில்லை, விட்டு விட்டார்.

“போனால் போகட்டுமே! இதற்கு வேறு விமோசனமில்லை. வேஷமோ உண்மையோ, பைத்தியம் நீங்கி எங்கேயாவது சுகமாக இருக்கட்டும். ஒப்புக்கொள்ளுங்கள்” என்றாள் அய்யர் மனைவி.

“ராம, ராம! அப்படிச் சொல்லாதே” என்றார் கந்தசாமி அய்யர்.

பிறகு ஒருநாள் பையனை ஊரில் காணோம். எங்கேயோ மறைந்து போனான். சென்னையில் வேறு ஒரு பெரிய பாதிரியாரிடம் ஞான ஸ்நானம் பெற்று வேங்கடராயன் – ராயப்பனாகிவிட்டான். பேப்பர் விற்கும் பையனாக அமர்ந்தான். தாய் தகப்பனாருக்குச் சங்கதி தெரியாது.

கிறிஸ்தவனானாலும் ராயப்பன். பிள்ளையாரின் கல் விக்கிரகம் எங்கே கண்டாலும் நின்று கை கூப்பிச் செல்லுவான். இரவு தூங்குவது ஏதாவது ஒரு விநாயகருக்குப் பக்கத்தில் தான். இன்னும் தாயாரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறான் போல் தானிருக்கிறது. மற்றப் பேப்பர் பையன்களுக்கு இவன் மேல் மிகவும் பிரியம்.

“கதைக்குக் காலில்லை. ஆனால் கருத்திருக்க வேண்டுமல்லவா? கருத்தென்ன? கொஞ்சம் விளக்கினால் நன்றாக விருக்கும்” என்றான் விகடன்.

“ஒரு கருத்துமில்லை. மனதுக்கு நிம்மதி. அவ்வளவுதான்!” என்று சிரித்தார் ராஜாஜி.

“என்ன ராயப்பன் சிரிப்பு சிரிக்கிறீர்? ஒருவேளை மறு விவாகம் கூடாது என்ற பிரசாரமோ?”

“இல்லை, இல்லை. விவாகம் எப்போதும் நல்லது.”

“விநாயகர் பூசை மிகவும் நல்லது என்ற பிரசாரமோ?..”

“எந்தப் பூசையும் நல்லதுதானே? அப்படியும் வைத்துக்கொள்ளலாம்.”

“ஒருவேளை மாற்றாந் தாய்களுக்கு எச்சரிக்கையோ ?..”

“உங்கள் பத்திரிகையை மாற்றாந் தாய்கள் படிப்பது உண்டோ? அப்படியானால் ரொம்ப நல்லது.”

“இந்தக் காலத்தில் சொந்தத் தாய்மார்களைக் காட்டிலும் இரண்டாம் தாரங்களே குழந்தைகளை அக்கறையோடு கவனிக்கிறார்களே?”

“இருக்கலாம். காலம் மாறிப் போயிற்று. ஆனால் மாற்றாந்தாய்ப் பான்மையைப் பல உருவத்தில் காணலாம். ஒரு சிறு குழந்தையை மருமகளாகப் பெற்ற மாமியாரும் ஒரு மாற்றாந் தாய்தான். ஒரு வேலைக்காரக் குழந்தையைக் கூலிக்கென்று அழைத்துக் கொண்ட எஜமானியம்மாவும் ஒருவித மாற்றாந் தாய் தான். நாய்க்குட்டியை வளர்க்கும் ஒரு பெரிய மனி தரும் மாற்றாந் தாய் தருமத்தில் தான் நிற்கிறார். வளரும் உடலும் உள்ளமும் கொண்ட எந்த ஒரு ஜீவனும் – அதைப் பாதுகாத்து வரும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட ஆணோ பெண்ணோ யாராயினும் சரி- மாற்றாந் தாயும் குழந்தையுமாகத்தான் அமைந்து நிற்கிறார்கள். பெற்ற தாயின் அன்பு ஒன்றே இயற்கை அன்பு. மற்ற அன்புவகைகளுக்கு அதுவே ஆதரிசமும் ஆகும். மற்றவர்கள் எல்லாரும் வெகு ஜாக்கிரதையாகவும், பகுத்தறிவுடனும், தெய்வ பக்தி யுடனும் தாய்போல் நடந்துகொள்ள வேண்டும். வள ரும் குழந்தையின் உடலுக்கு நெய் வேண்டும். குழந் தையின் வளரும் உள்ளத்திற்கு அன்பே நெய் ஆகும்: அதை ஊட்டாவிடின் உள்ளம் வறண்டு போகும்.”

“தலை வலிக்கிறது. தயவு செய்து சொற்பொழிவை நிறுத்துங்கள். எங்கள் பேப்பர் பையன்களை நாங்க ளென்னவோ கூடிய அளவு அன்போடுதான் கவனித்து வருகிறோம். கொஞ்சம் குறும்புக்காரப் புள்ளிகள் தான். ஆனாலும் பொறுமையை இழக்கமாட்டோம்..”

“ரொம்ப சந்தோஷம். ராயப்பனை நன்றாக விசாரித்துக் கொள்ளுங்கள். சில சமயம் அவன் விளங்காதவாறு நடந்துகொண்டால் கோபித்துக் கொள்ளாதீர்கள்; விநாயகர் கோயிலுக்கு அனுப்பி விடுங்கள்”.

* இந்தக் கதை முதலில் ஆனந்த விகடன் பத்திரிகையில் வந்தது.

– ராஜாஜி சிறுகதைகள், முதற் பதிப்பு: 1944, புதுமைப் பதிப்பகம், காரைக்குடி

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *