ஒருவிட்டில் கன்னம் வைத்துத் திருடும்போது சுவர் இடிந்து விழுந்து கள்வன் ஒருவன் இறந்து போனான. கள்வனின் மனைவி, “ஈரச் சுவரை கட்டி வைத்து என் கணவரைக் கொன்றுவிட்டார்கள்” என்று வழக்குப் போட்டாள். மன்னன் விசாரிக்கப் போனான். வீட்டுக்காரன் சொன்னான்.
“சுவரை நான் வைக்கவில்லை. ஒட்டன்தான் வைத்தான்” என்றான்.
ஒட்டனைக் கூப்பிட்டு விசாரித்தபோது, “இதற்கு நான் பொறுப்பு அல்ல. சித்தாள்தான் ஒரு குடம் தண்ணிரை அதிகமாக ஊற்றிவிட்டாள்” என்று கூறினான். சித்தாளைக் கூப்பிட்டு விசாரித்தபோது, “ஒரு வண்டி மண்ணுக்கு 9 குடம் தண்ணிர்தான் கணக்கு. நானும் 9 குடம் தண்ணிர்தான் ஊற்றினேன். குயவன் தான் அந்தப் பானையை சற்றுப் பெரிதாகச் செய்து விட்டான் நான் என்ன செய்ய என்றாள்.
மன்னன் குயவனைக் கூப்பிட்டு விசாரித்தான். நான் வழக்கம்போல்தான் பானையைச் செய்து கொண்டிருந்தேன். நம் கோவிலில் சதிராடும் தாசி என் வீட்டின் வழியே போய்க்கொண்டிருந்தாள், அதை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது குடம் சற்று பெரியதாகப் போய்விட்டது. நான் என்ன செய்ய?” என்று அவன் சொன்னான். மன்னன் தாசியைக் கூப்பிட்டு விசாரித்தான்.
நான் நகை செய்யக் கொடுத்திருந்த ஆசாரி ஒரு மாதமாகியும் நகையைக் கொடுக்கவில்லை. அதைக் கேட்கத்தான் நான் அப்பக்கம் போனேன்; என்மீது தவறில்லை என்று அவள் கூறினாள்.
மன்னன் ஆசாரியைக் கூப்பிட்டு விசாரிக்க, அவன் ஒன்றும் சரியாக பதில் சொல்லவில்லை. கோபம் கொண்ட மன்னன் அவனைக் கழுவில் ஏற்ற உத்தரவு போட்டுவிட்டான் காவலர்கள் அவனை கழுமரத்தின் அருகே அழைத்துப் போனார்கள். வேடிக்கைப் பார்க்க ஒரு கூட்டமே தொடர்ந்து போயிற்று. கழுமரத்தில் நின்ற ஆசாரியோ “சிரி சிரி” என்று சிரித்தான். காவலர்கள் ஆசாரியை இதுபற்றி விசாரித்தபோது இந்தக் கழுமரம் “நான் எவ்வளவு மொத்தமாக இருக்கிறேன். நீ தட்டைக் குச்சிமாதிரி இருக்கிறாயே; என்று என்னைப் பார்த்து சிரித்தது. அதனால்தான் நானும் சிரித்தேன்” என்றான்.
கழுவிலேற்ற வந்த காவலர்கள். கூட்டத்தில் இருந்தவர்கள் பலரையும் உற்றுப் பார்த்தார்கள். அங்கு ஒரு கோமுட்டி செட்டியார் வருத்த உடலும், தொந்தியுமாகக் காட்சியளித்தார். காவலர்கள் ஆசாரியை விட்டுவிட்டு, அந்தப் பழுத்த கோமுட்டி செட்டியாரைக் கழுவிலேற்றிப் போய்விட்டார்கள்.
இப்படி ஒரு நாடு; இப்படி ஒரு மன்னன்: இப்படி ஒரு திருடன்: இப்படி ஒரு வழக்கு இப்படி ஒருமக்கள்: இப்படி ஒருகதை உண்டா? என்று கேட்காதீர்கள். எனக்கு அதுபற்றி தெரியாது. “பாரக் கழுவிற்கு பழுத்த கோமுட்டி” என்ற பழமொழி மட்டும் தமிழகத்தில் இருந்து வருகிறது. என்பது உண்மை.
– அறிவுக் கதைகள், மூன்றாம் பதிப்பு: 1998, பாரி நிலையம், சென்னை