பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன பாப விமோசனம் தேடிய பக்தர் கதை
“விக்கிரமாதித்தர் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக்கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன இருபத்தி நான்காவது கதையாவது:
‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! தற்போது நான் வாசம் செய்து வரும் முருங்கை மரத்துக்குக் கீழே பிள்ளையார் கோயில் ஒன்று இருக்கிறதல்லவா? அந்தக் கோயிலுக்குத் தினந்தோறும் ஒரு பக்தர் வருவதுண்டு. அவர் காலையில் அலுவலகத்துக்குப் போகும் போதும் சரி, மாலையில் வீடு திரும்பும்போதும் சரி, அங்குள்ள பிள்ளையாரை முறைப்படி மும்முறை வணங்காமல் செல்ல மாட்டார். அங்ஙனம் வணங்கும்போது, காலையில் மூன்று குட்டுக்கள், மூன்று தோப்புக் கரணங்களுடன் தம்முடைய பிரார்த்தனையை முடித்துக் கொள்ளும் அவர், மாலையில் அவ்வாறு முடித்துக் கொள்ளமாட்டார். ஒரு நாள் மாலை அவருடைய குட்டுக்களும் தோப்புக்கரணங்களும் நாலு, ஐந்து, ஆறு, ஏழு என்று கூடிக்கொண்டே போகும்; இன்னொரு நாள் மாலை அந்த ஏழைக்கூட எட்டிப் பிடிக்காமல் ஆறு, ஐந்து, நாலு என்று குறைந்து கொண்டே வரும். இங்ஙனம் ஏறுவதும் இறங்குவதுமாயிருந்த அவருடைய பிரார்த்தனையை நீண்ட நாட்களாகக் கவனித்துக் கொண்டு வந்த ஒருவர், ஒரு நாள் அவரை மெல்ல நெருங்கி, ‘காலையில் மூன்று குட்டுக்கள், மூன்று தோப்புக்கரணங்களுடன் உங்கள் பிரார்த்தனையை முடித்துக்கொள்ளும் நீங்கள், மாலையில் ஏன் அவ்வாறு முடித்துக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்?’ என்று கேட்க, ‘காலையில் நான் செய்யும் பிரார்த்தனை எனக்காகச் செய்வது; அதற்கு மூன்று குட்டுக்களும் மூன்று தோப்புக் கரணங்களுமே போதும். மாலையில் நான் செய்யும் பிரார்த்தனை வேறொருவருக்காகச் செய்வது; அதற்கு அவை போதுவதில்லை!’ என்று சொல்லிவிட்டு அவர் மெல்ல நழுவ, ‘யார் அந்த மரியாதைக்குரியவர்? உங்கள் மனைவியாரா?’ என்று அவர் பின்னும் மரியாதையுடன் கேட்க, ‘அதெல்லாம் ஒன்றுமில்லை; அவர் என் மேலதிகாரி. அவருடைய அந்தரங்கக் காரியதரிசியாக வேலை பார்க்கிறேன் நான். தினந்தோறும் அவரைத் தரிசிக்க எத்தனையோ பேர் வருகிறார்கள்; அவருடன் நேரிலும், ‘போ’னிலும் பேச எத்தனையோ பேர் விரும்புகிறார்கள். அவர்களில் சிலரை அவர் பார்க்கவே விரும்புவதில்லை; இன்னும் சிலருடன் நேரிலும் சரி, ‘போ’னிலும் சரி, அவர் பேசவே விரும்புவதில்லை. அவர்களையெல்லாம் அதிகாரியின் கட்டளைப்படி நாள்தோறும் விதம் விதமான பொய்களை உருவாக்கி, அவற்றை அழகான முறையில் எடுத்துச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருப்பதுதான் எனக்கு அங்கே முக்கியமான வேலையா யிருந்து வருகிறது. நானோ சொந்த வாழ்க்கையில் பொய் சொல்லக் கூசுபவன்; சொன்னால் பாவம் என்று நான்மறைகள் சொல்வதை அப்படியே நம்புபவன். ஆகவே, அங்கு சொல்லும் ஒவ்வொரு பொய்க்கும் ஒரு குட்டு, ஒரு தோப்புக்கரணம் வீதம் ஒரு நாளைக்கு எத்தனை பொய்கள் சொல்கிறேனோ, அத்தனை பொய்களுக்கும் சேர்ந்தாற்போல் இங்கே குட்டுக்களும், தோப்புக்கரணங்களும் போட்டுப் பிராயச் சித்தம் செய்துகொண்டு விடுகிறேன்!’ என்று அவர் சொல்ல, ‘இப்படியும் ஒரு பக்தன் உண்டா?’ என்று அவரைக் கேட்டவர் அயர்ந்து போய் நிற்பாராயினர்.’
பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘வயிற்றுக்காக அங்கே பொய்யும், ஆத்மாவுக்காக இங்கே பிராயச்சித்தமும் செய்துகொள்ளும் அந்த பக்தனை என்ன பக்தன் என்று சொல்வது?’ என விக்கிரமாதித்தரைக் கேட்க, ஏற்கெனவே சொன்ன இருபத்து மூன்று கதைகளுக்குப் பின்னால் பாதாளம் போட்ட கேள்விகளுக்கெல்லாம் ‘டக், டக்’ என்று பதில் சொல்லிக்கொண்டு வந்த விக்கிரமாதித்தர், இந்த இருபத்து நான்காம் கதைக்குப் பின்னால் போட்ட கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் சிட்டியைப் பார்த்து விழிக்க, சிட்டியும் ஒன்றும் புரியாதவர்போல் விக்கிரமாதித் தரைப் பார்த்து விழிக்க, ஆஆஆச்சச்சரியத்துடன் ‘ஆ!’ என்று வாயைப் பிளந்த பாதாளம், ‘அகப்பட்டுக் கொண்டீர்களா? வாருங்கள்!’ என்று தன்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு போக வந்த அவர்கள் இருவரையும் தன்னுடைய மேல் துண்டால் தானே சேர்த்துக் கட்டி இழுக்க, ‘என்னை எங்கு அழைக்கின்றாய்? இயம்பு, பைத்தியமே!’ என்று விக்கிர மாதித்தராகப்பட்டவர் அந்தக் காலத்து நாடக மேடைக் கோவலன் மாதவியைப் பார்த்துப் பாடியதுபோல் பாட, ‘எனக்கா பைத்தியம்? என்னைப் பைத்தியமாக்கிய பவானி அதோ இருக்கிறாள் வாருங்கள்; வந்து பாருங்கள்!’ என்று அதுவரை ’பைத்தியம் பிடித்த பாதாளம்’ போல் இருந்தவன், ‘பைத்தியம் தெளிந்த பாதாளசாமி’யாகி அவர்களை அருகிலிருந்த ஒரு வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போய், ‘பவானி! ஏ, பவானி!’ என்று குரல் கொடுக்க, அந்த வீட்டுக்குப் பின்னாலிருந்து வந்த, ஒரு பெண்ணழகி, ‘என்ன பவானிக்கு?’ என்று கேட்க, ‘இருபத்து நான்காவது கதைக்குப் பின்னால் நீ போட்ட கேள்விக்கு விக்கிரமாதித்தரும், சிட்டியும் பதில் சொல்லா விட்டால் என்னைக் கலியாணம் செய்து கொள்வதாகச் சொன்னாயல்லவா? இதோ, அந்த விக்கிரமாதித்தரையும் சிட்டியையும் இங்கேயே அழைத்துக்கொண்டு வந்து விட்டேன். நீயே வேண்டுமானாலும் அந்தக் கேள்வியை இவர்களிடம் கேட்டுப் பார்; இவர்களாலும் அதற்குப் பதில் சொல்ல முடியவில்லை!’ என்று அவன் குதிக்க, அவள் அவர்கள் இருவரையும் கடைக் கண்ணால் நோக்கிவிட்டுக் ‘களுக்’கென்று சிரிப்பாளாயினள்.
என்ன பெண்ணே, சிரிக்கிறாய்?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘ஒன்றுமில்லை, சும்மாத்தான்!’ என்று அவள் சொல்ல, ‘சரி, இவனைக் கலியாணம் செய்துகொள்வதில் இனி ஒன்றும் தடையில்லையே?’ என்று அவர் கேட்க, ‘ஊஹும்’ என்று அவள் தலையசைக்க, அடுத்த முகூர்த்தத் திலேயே அவர்கள் இருவருக்கும் ‘மனம்போல் மாங்கல்யதாரணம்’ செய்து வைத்துவிட்டு, ‘இனியாவது முருங்கை மரத்தடிப் பிள்ளையாருக்கு ஏற்கெனவே தொள்ளாயிரத்துத் தொண்ணுாற்றொன்பது தேங்காய்களைச் சூறை விட்டிருக்கும் அந்தப் பிரம்மச்சாரி, எஞ்சியுள்ள ஒரே காயையும் சூறை விட்டுத் தன் பிரார்த்தனையை முடித்துக் கொள்ளலாம் அல்லவா? அதற்குக் குறுக்கே நீ நிற்க மாட்டாயே?’ என்று பாதாளசாமியை நோக்கி விக்கிரமாதித்தர் சிரித்துக் கொண்டே கேட்க, ‘ஏற்கெனவே கலியாணப் பைத்தியம் பிடித்திருந்த நான், எனக்கு முன்னால் இன்னொருவன் கலியாணம் செய்துகொள்வதை விரும்ப வில்லை. அதனால் அவன் செய்த பிரார்த்தனை நானே ‘அசரீரி’ யாயிருந்து அவனுக்குச் சொல்லிக் கொடுத்த பிரார்த்தனையா யிருந்தும் அதை நான் நிறைவேற விடாமல் தடுத்து வந்தேன். இப்போதுதான் எனக்குக் கலியாணமாகி விட்டதே! இனி அவன் பிரார்த்தனைக்கும் நான் தடையா யிருக்கமாட்டேன்; கலியாணத்துக்கும் தடையா யிருக்க மாட்டேன்!’ என்று பாதாளசாமியும் சிரித்துக்கொண்டே சொல்ல, அதைப் பக்கத்திலிருந்து கேட்டுக் கொண்டிருந்த பிரம்மச்சாரி அக்கணமே தனக்கும் கலியாணமாகிவிட்டது போன்ற திருப்தியுடன் அங்கிருந்து செல்ல, ‘கேளாய், பாதாளசாமி! இருபத்து மூன்று கதைகளுக்குப் பின்னால் நீ போட்ட கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டு வந்த நான், இருபத்து நான்காவது கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் இருப்பேனா? அவசியம் சொல்லியிருப்பேன். சொன்னால் ‘பாதாளத்தின் கதை இந்த யுகத்தில் முடியாது’ என்று சொல்லி என்னைத் தடுத்தவன் யார் தெரியுமா? இதோ நிற்கிறானே, என் தம்பியும் என்னுடைய அந்தரங்கக் காரியதரிசியுமான சிட்டி, இவன்தான். இவனுடைய யோசனைப்படி நடந்திராவிட்டால் இவன் சொன்னதுபோல் உன்னுடைய கதையும் முடிந்திருக்காது; அந்தப் பிரம்மச் சாரியின் பிரார்த்தனையும் நிறைவேறி யிருக்காது!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, ‘அந்தப் பதிலை இப்போதுதான் சொல்லுங்களேன்?’ என்று பவானியாகப்பட்டவள் அப்போதும் அவரை விடாமல் கேட்க, ‘வயிற்றுக்காக அங்கே பொய்யும், ஆத்மாவுக்காக இங்கே பிராயச்சித்தமும் செய்து கொள்ளும் அவன் உண்மையில் பக்தன் அல்ல; எத்தன். இந்தப் பிறவியில் தான் பிழைப்பதற்காக அவன் அங்கே நல்லவனாக நடித்து அதிகாரியைப் பார்க்க வருபவர்களை ஏமாற்றுகிறான்; அடுத்த பிறவியில் தனக்கு எந்த விதமான ஆபத்தும் நேர்ந்துவிடக் கூடாதே என்பதற்காக அவன் இங்கே பரம பக்தனாக நடித்துக் கடவுளையும் ஏமாற்றப் பார்க்கிறான்!’ என்று விக்கிரமாதித்தராகப்பட்டவர் சொல்ல, ‘அதெல்லாம் ஒன்றுமில்லை; அவன்தான் அசல் மனிதன்! அப்படி இருப்பவனால்தான் இந்தக் காலத்தில் பிழைக்க முடிகிறது; அவனைப் போன்றவர்களைத்தான் இந்த உலகம் ‘உத்தமர்கள்’ என்று போற்றுகிறது!’ என்று பவானி சொல்ல, ‘நாய் வேண்டுமானால் அப்படிப் பிழைக்கலாம்; மனிதன் அப்படிப் பிழைக்கக் கூடாது!’ என்று சொல்லிவிட்டு விக்கிரமாதித்தர் செல்ல, ‘கடைசியாக ஒரு விண்ணப்பம்’ என்று பாதாளசாமி தலையைச் சொறிவானாயினன்.
‘என்ன?’ என்றார் விக்கிரமாதித்தர்; ‘இருந்த வேலையை விட்டுவிட்டு இவள் கேட்ட கேள்விக்குப் பதில் தேடி அலைந்தேன். இப்போது வேலை வேண்டுமே!’ என்றான் பாதாளசாமி.
‘என்ன வேலை தெரியும்?’ என்றார் அவர்; ‘ஒரு காலத்தில் சொந்தமாக டாக்சி வைத்து ஓட்டிக் கொண்டிருந்தவன் நான்; அதனால் கார் ஓட்டத் தெரியும்’ என்றான் இவன்.
‘அப்படியானால் எங்கள் காரை இனி நீயே ஓட்டலாம்; வா!’ என்று அவனை அழைத்துக்கொண்டு மிஸ்டர் விக்கிரமாதித்தர் காரை நோக்கி நடக்க, சிட்டியும் அவர்களைத் தொடர்ந்து நடப்பாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு…..”
இரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் மதனா சொன்ன பாதாளக் கதை முடிந்தது
– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை