பன்னிரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சாந்தா

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 2,040 
 
 

பன்னிரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சாந்தா சொன்ன சர்வ கட்சி நேசன் கதை

“கேளாய், போஜனே! ஒரு நாள் காலை எங்கள் விக்கிரமாதித்தர் வெளியே செல்லத் தயாராகிக் கொண்டிருந்த காலை, ‘பார்வையாளர் அறை’யைச் சேர்ந்த பையன் ஒருவன், அவரைப் பார்க்க வந்திருந்த யாரோ ஒருவர் பூர்த்தி செய்து கொடுத்த ‘பார்வையாளர் சீட்டு’ ஒன்றைக் கொண்டு வந்து அவரிடம் கொடுக்க, அதை அவர் வாங்கிப் பார்க்க அதில் கண்டிருந்ததாவது:

⁠பெயர் : சர்வகட்சி சாரநாதன்

⁠விலாசம் : இன்பசாகரம், கபாலீஸ்வரம்

⁠விஷயம் : புத்தக விஷயம்

‘இதென்ன வேடிக்கை? பெயரைப் பார்த்தால் சர்வ கட்சி சாரநாதனாயிருக்கிறது! விலாசத்தைப் பார்த்தால் இன்ப சாகரம், கபாலீஸ்வரமாயிருக்கிறது! ‘இன்பசாகரம்’ என்றால் தாதுபுஷ்டி லேகியம், மாத்திரை-இப்படி ஏதாவது செய்து விற்பவராயிருப்பாரோ என்னவோ, தெரிய வில்லையே? அப்படி ஏதாவது இருந்தால் விஷயம் ஏன் புத்தக விஷயமாயிருக்கப்போகிறது? என்று பலவாறு சிந்தித்து, ஒன்றும் புரியாமல் தம்மைத் தாமே நிந்தித்து, ‘எதற்கும் வீடு தேடி வந்த ஆசாமியைப் பார்த்துத்தான் வைப்போமே!’ என்று எண்ணியவராய், ‘உள்ளே வரச் சொல்!’ என்று அவர் பையனிடம் சொல்லி அனுப்புவாராயினர்.

அங்ஙனமே பையன் போய்ச் சொல்ல, உடையில் ராஜாஜியையும், நாசித் துவாரங்கள் இரண்டும் சற்றே அகன்றிருந்ததால் முகத்தில் கோயில் விதானங்களின் உச்சியில் உள்ள ஆளியையும் ஒத்திருந்த நெட்டையர் ஒருவர் உள்ளே நுழைந்து, ‘குட்மார்னிங், ஜெய் ஹிந்த், வணக்கம்!’ என்று சொல்லிவிட்டு, ‘முதன் முதலாக உங்களைச் சந்திப்பதால் உங்களுக்கு எந்த வணக்கம் பிடிக்கும் என்று எனக்குத் தெரியவில்லை. ஆகவே, மூன்று விதமான வணக்கங்களையும் சொல்லி வைத்தேன்; உங்களுக்கு எது பிடிக்குமோ அதை ஏற்றுக் கொள்ளுங்கள்!’ என்று சொல்ல, மனிதனை மனிதன் வணங்குவதே எனக்குப் பிடிக்காது. தப்பித் தவறி யாராவது வணங்கினால் அவர்களிடம் நான் மிகவும் எச்சரிக்கையாயிருப்பது வழக்கம்!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, வந்தவர் காது கொஞ்சம் கேட்காத தோஷத்தால் கேட்டவர் போல் சிரித்து, ‘இந்தக் காலத்திலும் வெள்ளையரைப் பிடிக்கும் சிலர் இங்கே இருக்கிறார்கள் அல்லவா? அவர்களைக் கண்டால் நான் ‘குட் மார்னிங்’ என்று சொல்வேன். காங்கிரஸ்காரனைக் கண்டால் ஜெய் ஹிந்த், தி.மு.க. வைக் கண்டால் வணக்கம். நமக்கு ஏன் ஒருவருடைய பொல்லாப்பு? வியாபாரம் நமக்கு முக்கியமா? கட்சி நமக்கு முக்கியமா? என்று கேட்க, ‘நமக்கு, நமக்கு என்று சொல்லி என்னையும் உங்கள் சர்வ கட்சியில் சேர்த்துக்கொண்டு விட்டீரே? எனக்கு என்று சொல்லும்!’ என்று விக்கிரமாதித்தர் திருத்த, வந்தவர் அதையும் ஒரு சிரிப்புச் சிரித்துச் சமாளிப்பாராயினர்.

‘சரி, விஷயத்துக்கு வாருங்கள்!’ என்று விக்கிரமாதித்தர் அவரைத் தூண்ட, ‘என்னை உங்களுக்குத் தெரிந்திருக்கு மென்று நினைக்கிறேன். ‘சர்வகட்சி சாரநாதன்’ என்று மட்டும் அல்ல; ‘இன்பசாகரம் சாரநாதன்’ என்றும் என்னை அழைப்பார்கள்!’ என்று வந்தவர் ஆரம்பிக்க, ‘இன்பசாகரம் என்றால் தாதுபுஷ்டி லேகியம், மாத்திரை ஏதாவது தயார் செய்து விற்க வந்திருக்கிறீரா, என்ன? அப்படி ஏதாவது இருந்தால் இப்போதே சொல்லிவிடும். அனாவசியமாகப் பேசி, உம்முடைய நேரத்தையும் என்னுடைய நேரத்தையும் வீணாக்கிக் கொண்டிருக்க வேண்டாம். அவற்றையெல்லாம் வாங்கிச் சாப்பிடக் கூடிய வயதை நான் இன்னும் அடையவில்லை!’ என்று விக்கிரமாதித்தர் குறுக்கிட்டுச் சொல்ல, ‘இலக்கிய இன்பம் ஊட்டுவதுதான் என்னுடைய வியாபாரமே தவிர, இல்லற இன்பம் ஊட்டுவதல்ல’ என்று வந்தவர் அதை மறுக்க, ‘இலக்கியத்துக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?’ என்று விக்கிரமாதித்தராகப்பட்டவர் கேட்க, ‘சம்பந்தப்படுத்தத்தானே வந்திருக்கிறேன்!’ என்று வந்தவரான சர்வகட்சி சாரநாதனாகப்பட்டவர் சொல்லலுற்றாஆர், சொல்லலுற்றாஆர், சொல்லலுற்றாஆஆர்:

‘ஊர்பேர் தெரியாமல் இருந்த எத்தனையோ பேரை இந்த உலகத்துக்கே தெரிந்தவர்களாக்கிய பெருமை எனக்கு உண்டு. அவர்களில் ஒரே ஒருவரைப் பற்றி மட்டும் இங்கே சொல்கிறேன். தயவு செய்து செவி மடுக்க வேணும். ‘தன்னலக் கழகத் தலைவரான-மறந்துவிட்டேன், தமிழ் நலக்கழகத் தலைவரான திருப்பதி திருஞானத்தை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். இப்போது என் ஆஸ்தான எழுத்தாளராக விளங்கும் அவருக்குப் பேச வரும் அளவுக்கு அப்போது எழுத வருவதில்லை. அதற்காக அவரை நான் விட்டேனா? ‘பேசிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது; எழுதவும் வேண்டும். இது காங்கிரஸ் சீசன்; கட்டபொம்மனையும் வ.உ.சி. யையும் ஒரு கை பாரும்!’ என்றேன். அவர் தயங்கினார்; ‘தயங்காதீர்!’ என்று அவர்களைப் பற்றி ஏற்கெனவே சிலர் எழுதியிருந்த புத்தகங்களை வாங்கி அவரிடம் கொடுத்து, ‘இவற்றை வைத்துக்கொண்டு இதேமாதிரி உம்முடைய சொந்த நடையில் எழுதிப் பாரும்; பேச வருவதோடு எழுதவும் வந்துவிடும்’ என்றேன்; எழுதினார். அதற்காக அவர் எனக்கு நன்றி தெரிவிக்கலாம். அதுதான் இல்லையென்றால் அந்தப் புத்தகங்களுக்கு ‘ராயல்டி’யாவது கேட்காமல் இருந்திருக்கலாம். கேட்டார்; என் வயிறெரியக் கேட்டார்!’ என்று வந்தவர் தன் வயிற்றில் தானே ஓர் அடி அடித்துக்கொண்டு, ‘இந்த உலகத்தில் எனக்குப் பிடிக்காத விஷயம் ஏதாவது ஒன்று உண்டு என்றால், அது இந்த எழுத்தாளர்கள் தாங்கள் எழுதும் புத்தகங்களுக்கு ‘ராயல்டி’ கேட்கும் விஷயம்தான். எதற்காக இவர்களுக்கு ‘ராயல்டி’ கொடுக்கவேண்டும்? தாங்கள் எழுதும் புத்தகங்களுக்கு இவர்கள் செய்யும் முதலீடெல்லாம் மூளை ஒன்றுதானே? அதற்கா ராயல்டி? நாங்களோ பணத்தை முதலீடு செய்கிறோம். அதை வட்டிக்கு விட்டால் வட்டி வரும்; மூளையை விட்டால் என்ன வரும்? வட்டி வருமா? பாண்டு, பத்திரம் எழுதுவோர் ‘எழுத்துக் கூலி’ என்று ஏதோ ஒன்று கேட்பது போல இவர்களும் வேண்டுமானால் கேட்கலாம். நாங்களும் ‘போகிறது, போ!’ என்று ஐம்பது ரூபாயை ஐம்பது தவணைகளிலாவது கொடுத்துத் தொலைக்கலாம். இது தெரியாமல் அவர் அந்த ‘ராயல்டி கேட்கும் மாபாவ’த்தைச் செய்யத் துணிந்தார். அதற்கும் நான் பின் வாங்கவில்லை; சொன்னது சொன்னபடி ‘பில்’ போட்டுக் கொடுக்க இருக்கவே இருக்கிறது ‘அனுமான் அச்சகம்’ என்று துணிந்து, ஆயிரம் பிரதிகளுக்குரிய ‘ராயல்டி’யை அவரிடம் கொடுத்து எழுதி வாங்கிக்கொண்டு, என்னுடைய நன்மைக்காக மட்டுமல்ல, அவருடைய நன்மைக்காகவும் இரண்டாயிரம் பிரதிகள் அவருக்குத் தெரியாமல் அச்சிட்டு விற்றேன். ‘இது அநியாயமில்லையா?’ என்று நீங்கள் கேட்கலாம். இந்த அநியாயத்தை நான் செய்திராவிட்டால் அவரும் இவ்வளவு சீக்கிரம் பெரிய மனிதராகியிருக்க முடியாது; நானும் இவ்வளவு சீக்கிரம் பெரிய பிரசுரகர்த்தராகியிருக்க முடியாது…’

இங்ஙனம் தன் அருமைத் தலைவரும், தனக்குத் ‘தூண்டில் முள்’ போல் நாளது வரை விளங்கிவருபவருமான திருப்பதி திருஞானம் பெரிய மனிதரான கதையையும், தான் பெரிய பிரசுரகர்த்தரான கதையையும் சர்வகட்சி சாரநாதனாகப்பட்டவர் சொல்லிக்கொண்டு வந்தகாலை, ‘தேவகோட்டை அண்ணாமலை, தேவக்கோட்டை அண்ணாமலை’ என்று சொல்லா நின்ற ஒரு பிரமுகர் ஏதோ காரியமாக மிஸ்டர் விக்கிரமாதித்தரைப் பார்க்க வர, அவரைக் கண்டதும் சர்வகட்சி சாரநாதன் தன் முதுகில் யாரோ திடீரென்று அறைந்தாற்போல் துடித்து, நெளிந்து, ‘ஆத்தாடி!’ என்று தன் முதுகைத் தானே தேய்த்துவிட்டுக் கொள்ள, விக்கிரமாதித்தர் ஒன்றும் புரியாமல், ‘ஏன், என்ன விஷயம்?’ என்று திகைக்க, ‘ஒன்றுமில்லை; ஒன்றுமில்லை!’ என்று அவர் இளிக்க, தேவக்கோட்டை அண்ணாமலையாகப் பட்டவர் சிரித்துக்கொண்டே, ‘அவர் அதைச் சொல்ல மாட்டார்; நான் வேண்டுமானால் சொல்கிறேன்?’ என்று தொடங்கி, ‘சிறு வயதில் இந்தப் பிள்ளையாண்டான் என் புத்தகக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். வி.பி.பி. ஆர்டர் ஏதாவது வந்தால் அதற்குரிய புத்தகத்தை என் கடையிலிருந்து எடுத்து அனுப்பிவிட்டு, பணத்தைத் தவறுதலாகத் தன் அறையின் விலாசத்துக்கு வரவழைத்துக் கொண்டு விடுவது இவனுடைய வழக்கம். இதை அறிந்த நான் இவனை ஒரு நாள் முதுகில் அறைந்து, கடையை விட்டே விரட்டிவிட்டேன். அதிலிருந்து என்னை எங்கே கண்டாலும் இவன் தன் முதுகை இப்படித்தான் தேய்த்து விட்டுக்கொள்வது வழக்கம்!’ என்று நாசூக்காகக் குட்டை உடைக்க, ‘மனுஷன் அந்த மட்டும் ‘தவறுதலாக’ என்று ஒரு வார்த்தை சேர்த்துச் சொல்லிவைத்தாரே!’ என்று சர்வகட்சி சாரநாதனாகப்பட்டவர் வழக்கம்போல் சிரித்து, ‘ஆமாம், ஆமாம்; தவறுதலாகத்தான் அப்படி நான் செய்து விட்டேன்!’ என்று சமாளிக்க, ‘தவறு செய்தாலும் அதைச் சரியான முறையில் செய்திருக்கிறீர்! பணத்தை வேறு யாருடைய விலாசத்துக்காவது போய்ச் சேரும்படியான தவற்றைச் செய்துவிடாமல், உம்முடைய விலாசத்துக்கே வந்து சேரும்படியான தவற்றையல்லவா செய்திருக்கிறீர்!’ என்று விக்கிரமாதித்தர் சமாதானம் சொல்ல, ‘ஆமாம் ஆமாம்; முதலில் நீங்கள் அவரைக் கவனித்து அனுப்புங்கள்!’ என்று சர்வகட்சி சாரநாதன் தேவகோட்டை அண்ணாமலையை அவருக்குத் தெரியாமல் சுட்டிக் காட்ட, விக்கிரமாதித்தரும் அப்படியே அவரைக் கவனித்து அனுப்ப, சர்வகட்சி சாரநாதனாகப்பட்டவர் விட்ட இடத்திலிருந்து தொட்டுக் கொண்டு சொன்னதாவது:

‘…… காங்கிரஸ் சீசன் போய் இலக்கிய சீசன் வந்தது. அந்த சீஸனுக்குத் தகுந்தாற்போல் ஏதாவது புத்தகங்கள் எழுதுமாறு நான் தன்னலக் கழகத் தலைவரை-தவறு, தமிழ் நலக் கழகத் தலைவரைத் தூண்டினேன். ‘அக நானுறு, புற நானூறு, பத்துப் பாட்டு, எட்டுத்தொகை என்றால் என் கிட்டக்கூட வர வேண்டாம்; அவற்றுக்கும் எனக்கும் வெகு வெகு வெகு தூரம்!’ என்றார். ‘தமிழ், தமிழ் என்று சொல்லித் தமிழால் பிழைத்துக்கொண்டு இப்படிச் சொல்லலாமா? தவறாச்சே! படிக்க எளிதாயிருக்கும் கம்பனையும் வள்ளுவனையுமாவது ஒரு பிடி பிடியுங்களேன்!’ என்றேன்; ‘தங்களை யாரும் பிடிக்கக் கூடாது என்பதற்காகவே அவர்கள் தங்களுடைய நூல்களைப் பிறருடைய தயவில் யாரும் படிக்க வேண்டிய அவசியமில்லாமல் செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அப்படியும் ‘விடுவோமா உங்களை?’ என்று பலர் அவர்களைத் தொற்றிக்கொண்டு திரிகிறார்கள். அவர்கள் போதாதென்று நானுமா அந்தக் கம்பனையும் வள்ளுவனையும் தொற்றிக்கொண்டு திரியவேண்டும்?’ என்றார். ‘சரி, சிலப்பதிகாரம்?’ என்றேன் நான்; ‘அதையும் தான் சிலர் கோவலன், கண்ணகி, மாதவி, மணிமேகலை என்று ‘பார்ட், பார்ட்’டாகப் பிய்த்து எடுத்துவிட்டார்களே?’ என்றார் அவர். ‘அதனால் என்ன, கண்ணகியின் கால் சிலம்பை யாரும் இதுவரை கழட்டி எடுக்கவில்லைபோல் இருக்கிறதே? நான் வேண்டுமானால் காலைப் பிடித்துக் கொள்கிறேன், நீர் கழட்டி எடும்!’ என்றேன்; ‘அது வேண்டுமானால் செய்யலாம்!’ என்றார் அவர். ஆனால் அதுவும் அவருடைய பேச்சுக்குப் பயன்பட்ட அளவு எழுத்துக்குப் பயன்படவில்லை. அதற்கும் சளைக்கவில்லை நான்; எப்படியும் அவரைப் பெரிய மனிதராக்கிவிட்டே மறு வேலை பார்ப்பது என்ற தீர்மானத்துடன், அன்பளிப்புப் பிரதி ஒன்றோடு ஆத்ம திருப்தியடையும் சிலரை அணுகி, ‘திருப்பதி திருஞானம்’ குறித்துத் தலைக்கு ஒரு சிறப்புக் கட்டுரை எழுதித் தருமாறு வழக்கம்போல் சிரித்துக் கொண்டே கேட்டேன். கைமேல் பலன் கிடைத்தது; அந்தக் கட்டுரைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டு, அதற்கென்று ஒரு விழாவே நடத்தினேன். அதனால் அவருடைய புகழும் பல்கிப் பெருகிற்று; என்னுடைய ‘பாங்க் பாலன்ஸ்’ஸும் ஏதோ கொஞ்சம் பல்கிப் பெருகிற்று. அந்த முறையைப் பின்பற்றி……’

சர்வகட்சி சாராநாதன் மேலே சொல்லி முடிப்பதற்குள் ‘அடேடே, குட்டையன் செட்டியாரா? வாங்க, வாங்க!’ என்று முகமன் கூறி அவரை வரவேற்றுக்கொண்டே பாதாளம் உள்ளே வர, ‘அட, நீ வேறே இங்கே இருக்கிறாயா? அது தெரியாமல் போச்சே எனக்கு!’ என்று பூர்வாசிரமத்தில் குட்டையன் செட்டியாராக இருந்த சர்வகட்சி சாரநாதன் இடியுண்ட நாகம்போல் மிரள, ‘வட்டி, கிட்டி என்று சொல்லும்போதே நான் நினைத்தேன். நீர் செட்டியாராய்த் தான் இருக்க வேண்டுமென்று. அது சரியாய்ப் போய் விட்டது!’ என்ற விக்கிரமாதித்தர், ‘ஏண்டா, பாதாளம்! இவரை உனக்கு ஏற்கெனவே தெரியுமா?’ என்று கேட்க, ‘என்ன அப்படிக் கேட்டுவிட்டீர்களே? இவரால் தானே நான் சொந்தமாக டாக்ஸி வாங்கி ஒட்ட ஆரம்பித்தேன்?’ என்று அவன் சொல்ல, ‘ஓஹோ! இவர்தான் உனக்கு முதன் முதலாகத் தம் பணத்தைப் போட்டுச் சொந்த டாக்ஸி வாங்கிக் கொடுத்தாரா?’ என்று விக்கிரமாதித்தர் கடாவ, ‘நல்லாச் சொன்னீர்களே, இவரா கொடுப்பார்? யாராவது கொடுக்க வந்தால்கூட அதைச் சுக்கிராச்சாரியார்போல் இவர் குறுக்கே வந்து தடுப்பாரே? கதையைக் கொஞ்சம் கேளுங்கள்’ என்று பாதாளம் சொன்னதாவது:

பாதாளம் சொன்ன பத்துப் புத்தகங்கள் கதை

‘நெட்டையரான இந்தக் குட்டையன் செட்டியார் புத்தக வியாபாரம் மட்டும் செய்து வரவில்லை; வேறு எத்தனையோ வகையான வியாபாரங்கள் செய்து வந்தார். அவற்றில் சில வெளியே சொல்லக் கூடியவை; சில வெளியே சொல்லக் கூடாதவை. அந்த வியாபாரங்களில் ஒன்று, இவர் சில டாக்சிகளை வாங்கி ஓட்டியது. என்னுடைய போதாத காலம், இவருடைய டாக்ஸி டிரைவர்களில் ஒருவனாக நானும் அப்போது இருந்து வந்தேன்.

ஒரு நாள் பத்துப் புத்தகங்களுடன் ஓர் எழுத்தாளர் இவரைத் தேடி வர, அந்தப் புத்தகங்களை இவர் வாங்கிப் பார்த்துவிட்டு, ‘எல்லாம் இந்தியிலிருந்து மொழி பெயர்த்த நாவல்களாக அல்லவா இருக்கின்றன? இவற்றுக்காக உமக்குப் பணம் கொடுப்பது போதாதென்று இந்தி ஆசிரியருக்குமல்லவா ஏதாவது கொடுத்துத் தொலைக்க வேண்டும்?’ என்று தன் கண்ணிலிருந்து வடிந்த ரத்தத்தைத் தன்னுடைய மேல் துண்டால் துடைத்துக் கொண்டே சொல்ல, ‘வேண்டாம்; அந்த நூலாசிரியர் இறந்து ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், சட்டப்படி நீர் அவருக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம்!’ என்று வந்தவர் அபயம் அளிக்க, ‘அதே மாதிரி நீரும் செத்து ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கக் கூடாதா?’ என்று இவர் முணுமுணுத்துக் கொண்டே, ‘சரி, இந்தப் பத்துப் புத்தகங்களுக்கும் நீர் என்ன எதிர்பார்க்கிறீர்?’ என்று கேட்க, ‘இவற்றை நானே வெளியிடலாமென்று இருந்தேன். அதற்குள் என் மனைவி உடல் நலம் கெட்டுப் படுத்த படுக்கையாகி விட்டாள். அவளுடைய வைத்தியச் செலவுக்கு இவற்றைத்தான் இப்போது நம்பியிருக்கிறேன்!’ என்று அவர் சொல்ல, ‘அப்படியானால் நான் சொல்வதைக் கேளும்; உமக்கு மொத்தமாக ஒரு தொகை கிடைக்கும்!’ என்று இவர் ஏதோ கணக்குப் போட, ‘அந்தத் தொகை தம்மால் மட்டும் தூக்கிச் செல்லக் கூடிய தொகையாயிருக்குமா? அல்லது ஆட்டோ, டாக்ஸி-இப்படி ஏதாவது ஒன்றின் உதவியை நாடவேண்டிய தொகையாயிருக்குமா?’ என்று அவர் சாலையைப் பார்க்க, இவர் ஒரு கனைப்புக் கனைத்துக் கொண்டு, ‘ஒரு பதிப்புக்கு மேல் இந்தப் புத்தகங்களை வெளியிட முடியாது. ஆகவே இந்தப் பத்துப் புத்தகங்களுக்கும் மொத்தமாக ரூபாய் இருநூறு கொடுத்து விடுகிறேன்; இவற்றின் உரிமை முழுவதையும் எனக்கே நீர் எழுதிக் கொடுத்துவிட வேண்டும். என்ன, சம்மதமா?’ என்று கேட்க, அவர் அப்போதிருந்த நிலையில், ‘ம்’ என்று வேண்டாவெறுப்பாகத் தலையை ஆட்ட, ‘ஜெயந்தி, பரிமளா, கோமளம், ராதா, கீதா, கறுப்புப் பெண், சிவப்புப் பெண், இந்திரன், சந்திரன் ஆக பத்துப் புத்தகங்களின் முழு முழு முழு உரிமையும் பதிப்பகத்தாருக்கே, பதிப்பகத்தாருக்கே, பதிப்பகத்தாருக்கே! இவற்றுக்கும் இவற்றை மொழி பெயர்த்தவருக்கும், ஏழேழு ஜன்மங்களுக்கும் (ஏழேழு என்பது நாற்பத்தொன்பது தலைமுறைகளையும், நாற்பத்தொன்பது ஜன்மங்களையும் (இருந்தால்) குறிக்கும்.) எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது, கிடையாது, கிடையவே கிடையாது!’ என்று இவர் எழுதி வாங்கிக் கொண்டு பத்து ரூபாய் நோட்டொன்றை எடுத்து அவரிடம் நீட்ட, ‘பாக்கி ரூபாய் நூற்றுத் தொண்ணுறு?’ என்று அவர் திடுக்கிட்டுக் கேட்க, ‘பணந்தானே? யாரிடம் இருந்தால் என்ன? இப்போதைக்கு இதை எடுத்துக்கொண்டு போய் இன்றையச் செலவைப் பாரும்; நாளைக்கு வாரும்!’ என்று சொல்லி, இவர் அவரை வழி அனுப்பி வைப்பாராயினர்.

இப்படியாகத்தானே இவர் ‘நாளை, நாளை’ என்று அவரை இழுத்தடிக்க, அவர் ‘நாளைப் போவார் நாயனா’ராகி வந்துபோக, ரூபாய் நூறு தீர்ந்து, பாக்கி ரூபாய் நூறு இருந்த காலை, அவர் ஒரு நாள் மாலை தலைவிரி கோலமாக ‘இன்பசாகர’த்துக்கு ஓடிவந்து, ‘போய்விட்டாள்; என் மனைவி போதிய வைத்திய வசதியில்லாமல் போயே போய்விட்டாள்!’ என்று அலற. ‘இதென்னடா வம்பு?’ என்று இவர் துணிந்து நூறு ரூபாய் நோட்டொன்றை எடுத்து அவரிடம் நீட்ட, ‘ஆ! ரூபாய் நூறா? எனக்கா! ஒரே தடவையிலா?’ என்று அவர் தம் வாயை நிஜமாகவே பிளந்து வைப்பாராயினர்.

அதைக் கண்டு பயந்துபோன இவர், ‘செத்தவன் வேறு எங்கேயாவது போய்ச் செத்திருக்கக் கூடாதா? இங்கே வந்துதானா செத்துத் தொலைய வேண்டும்?’ என்று மருண்டு, மிரண்டு, ‘அப்பா, பாதாளம்! போலீசாரின் தொல்லையிலிருந்து நீதான் என்னைக் காப்பாற்ற வேண்டும்!’ என்று என்னைக் கெஞ்ச, ‘உங்களை என்னால் எப்படிக் காப்பாற்ற முடியும்?’ என்று நான் கேட்க, ‘இவனைத் தூக்கி நம் டாக்சியில் போட்டுக்கொண்டு போய் ஏதாவது ஒரு போலீஸ் ஸ்டேஷனில் நில். ‘என்ன?’ என்று போலீசார் கேட்டால், ‘யாரோ ஒரு பிரயாணி; வழியில், ‘மார்பை அடைக்கிறது; சோடா வாங்கி வருகிறாயா?’ என்றார். ‘சரி’ என்று நான் வண்டியை நிறுத்தி விட்டு ஓடினேன்; திரும்பி வந்து பார்த்தால் பிளந்த வாயோடு வண்டியில் கிடந்தார்!’ என்று சொல்லிவிடு. அதற்கு மேல் அவர்கள் பாடு, அவன் பாடு! நம்மைப் பிடித்த தலைவலி விட்டுப் போகும்!’ என்று இவர் சொல்ல, நான் அன்றிருந்த நிலையில் அதைத் தட்ட முடியாமல் அப்படியே செய்ய, அது ‘இயற்கை மரணம்’ என்று தெரியும் வரை நான் போலீசார் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடு கொடுத்து விட்டு, அதற்குப் பின் இவருடைய வேலைக்கும் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு, ஊரிலிருந்த நிலத்தை விற்றுச் சொந்தமாக ஒரு டாக்சி வாங்கி ஓட்டலானேன். என் கதை இப்படியாக, அந்த எழுத்தாளருக்கோ ஒரே ஒரு பெண்; இந்தப் புண்ணியவானால் அவள் இப்போது அனாதையாகி, ஒளவை ஆசிரமத்தில் இருக்கிறாள். இவரோ அவளுடைய தகப்பனார் எலும் பொடிய மொழி பெயர்த்துக் கொடுத்த பத்துப் புத்தகங்களையும் இதுவரை பத்துப் பதிப்புக்களுக்கு மேல் வெளியிட்டுப் பணம் பண்ணியிருக்கிறார்; இனி மேலும் பண்ணுவார் – அதுதான் ஏழேழு நாற்பத்தொன்பது தலை முறைகளுக்கும் சேர்த்து, அன்றே இவர் அவரிடம் எழுதி வாங்கிவிட்டாரே! இதுதான் அந்தப் பரிதாபத்துக்குரிய எழுத்தாளரின் பத்துப் புத்தகங்களின் கதை!’

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்ததும், ‘சரிதான்; இவருடைய இன்ப சாகரம் எழுத்தாளர்களுக்கெல்லாம் ஒரே துன்பசாகரமாயிருக்கும் போலிருக்கிறது!’ என்று சொல்லிக்கொண்டே விக்கிரமாதித்தர் திரும்ப, ‘அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை; அந்தப் பெண்ணை ஒளவை ஆசிரமத்தில் சேர்ந்தவன்கூட நான்தான்!’ என்று சர்வகட்சி சாரநாதன் சர்வ பவ்யத்துடன் சொல்ல, அதுதான் சமயமென்று, ‘அப்படியா சமாசாரம்? இப்போது என்ன சொல்கிறீர்? அந்தப் பெண்ணுக்காவது உம்முடைய செலவில் ஒரு கலியாணத்தைப் பண்ணி வைக்கிறீரா, இல்லையா? இல்லையென்றால் சொல்லும்; ஓர் எழுத்தாளரின் திடீர் மரணத்துக்குக் காரணமான உம்மை நான் இப்போதே போலீசாரிடம் ஒப்படைத்துவிடுகிறேன்!’ என்று விக்கிரமாதித்தர் மிரட்ட, ‘ஐயோ, வேண்டாம்! அப்படியே பண்ணி வைக்கிறேன்! என்று அவர் அலற, ‘சரி, இலக்கியத்துக்கும் எனக்கும் ஏதோ சம்பந்தப்படுத்தி வைக்கப் போகிறேன் என்றீரே, அது என்ன சம்பந்தம்?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘தன்னலக் கழகத் தலைவருக்குப் பெருமையையும் புகழையும் தேடி வைத்ததுபோல் உங்களுக்கும் தேடி வைக்க வேண்டுமென்று எனக்கு ரொம்ப நாட்களாக ஆசை. அதற்காக உங்கள் பேரால் பலரை நெருங்கி, உங்களுடைய அருமை பெருமைகளைப் பற்றிச் சிறப்புக் கட்டுரைகள் எழுதச் சொல்லி, அவற்றைத் தொகுத்துப் புத்தகமாக வெளியிட வேண்டுமென்று நினைக்கிறேன். அதற்கு உங்களிடம் அனுமதி பெறவே வந்தேன்!’ என்று சொல்ல, ‘பலர் என்றால் யார், யார்? அன்பளிப்பாக ஒரு பிரதி பெறுவதோடு ஆத்ம திருப்தி அடைபவர்களா?’ என்று விக்கிரமாதித்தர் கேட்க, ‘அதைப் பற்றி நமக்கென்ன? நமக்கு வேண்டியது புகழும் பெருமையும்தானே?’ என்று சர்வகட்சி சாரநாதன் சற்றே மறந்திருந்த சிரிப்பை உதிர்க்க, ‘புகழும் பெருமையும் நம்மைத் தேடி வர வேண்டும். அவற்றைத் தேடி நாம் போகக்கூடாது. அவ்வாறு தேடும் புகழும் பெருமையும் நிலைக்கவும் நிலைக்காது. போய் வாரும் ஐயா, போய் வாரும்!’ என்று விக்கிரமாதித்தர் அவர் கை கூப்புவதற்கு முன்னால் தாமே தம் கையை ஓர் அடி அடித்துக் கூப்ப, ‘குட்மார்னிங், ஜெய்ஹிந்த், வணக்கம்!’ என்று உளறிக் கொண்டே, ‘தப்பினோம், பிழைத்தோம்!’ என்பதாகத்தானே சர்வ கட்சி நேசன் ‘ஓடு, ஓடு’ என்று ஓடுவாராயினர்.”

பன்னிரண்டாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட்டான சாந்தா இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, “நாளைக்கு வாருங்கள்; பதின்மூன்றாவது மாடி ரிஸப்ஷனிஸ்ட் சூரியா சொல்லும் கதையைக் கேளுங்கள்!’ என்று சொல்ல, “கேட்கிறோம், கேட்கிறோம், கேட்காமல் எங்கே போகப் போகிறோம்?” என்று போஜனும் நீதிதேவனும் வழக்கம் போல் கொட்டாவி விட்டுக்கொண்டே கீழே இறங்குவாராயினர் என்றவாறு… என்றவாறு… என்றவாறு…

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *