டாம் டாம் தாமோதரன்

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 22, 2014
பார்வையிட்டோர்: 14,587 
 
 

“டாம் டாம்! வாழ்க! தானைத்தலைவர் தாமோதரன் வாழ்க!வருங்கால அமைச்சர் தாமோதரன் வாழ்க! என்ற கோசம் அந்த தெருவையே இரண்டாக்கியது. தாமோதரன் திறந்த ஜீப்பில் நின்றபடி கழுத்து நிநைய மாலைகளுடன் தன் சகாக்களுடன் வந்து கொன்டிருந்தார். தெருவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கூடியிருந்தார்கள்.

வீட்டின் அருகே ஜீப் நின்றதும் இறங்கியவர், சரி..சரி..நீங்க போங்க..நாளைக்கு கூட்டத்தில் சந்திக்கலாம் என்று தனது ஆதரவாளர்களிடம் சொல்லிவிட்டு கழுத்தில் இருந்த மாலைகளை கழட்டி எடுத்து கையில் வைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தார்.

“மங்களம். .மங்களம்… என்ன பண்றே வீட்டுக்குள்ளே…பலமாக கூப்பிட்டார்.

என்னது…இன்னக்கி வந்ததும் வராததுமா அதிகாரம் கொடி கட்டி பறக்குது…கையிலெ மாலை வேற..என்ன விஷயம்.? .கரண்டியுடன் வந்து கொண்டேகேட்டாள்.

மங்களம்..கோவிச்சுக்காதே..மனுஷன் களைப்போடு வீட்டுக்கு வந்திருக்கான் ..ஒரு டம்ளர் மோர் கொண்டு வாயேன் .என்று .குழைந்தபடியே கேட்டார்.

“மோர் கிடக்கட்டும்..ஒரு டம்ளர் தண்ணி கூட கொடுக்கமாட்டேன். நான் என்ன சொன்னா நீங்க என்ன பண்ணிட்டு வந்திருக்கீங்க?” கோபமாக கேட்டாள்.

“என்னடி சொல்றே”.?..புரியாமல் கேட்டார்.

பின்னே என்னங்க..பொண்னுக்கு கல்யாணம் நிச்சயம் பண்ணிட்டு கல்யாண செலவுக்கு பணம் பத்தாம யார்கிட்ட கேட்கலாம்னு யோசிக்கறதை விட்டுட்டு உங்க விருப்பத்துக்கு செலவு செஞ்சி “எம்.எல்.ஏ”க்கு நிக்கறீங்களே…பொறுப்புள்ள ஒரு அப்பன் பண்ற வேலையா இது.. .படபடவென்று பேசினாள்

தாமோதரன் பலமாக சிரித்தார்.,அடியேய்..சரியான பைத்தியக்காரியா இருக்கியே,, நம்ம பொண்ணு கல்யாணத்துக்கு யார் கிட்டேயும் கடன் கேக்கக்கூடதுன்னுதான் இந்த தேர்தலிலே நிக்கறேன்..
“ஏங்க..உங்களுக்கு பைத்தியம் ஒண்னும் பிடிக்கலையே..தேர்தல்ல நின்னா பனம் செலவு தானே ஆகும்..எப்படி வரும்?”..குழப்பத்துடன் கேட்டாள்.

அங்கேதான் தாமோதரன் யார்னு உனக்கு தெரியலை..இந்த காலத்துலே சீக்கிரமா பணம் சம்பாதிக்கணும்னா அரசியலை விட்டா வேற எதுவும் கிடையாது..பணமும் கிடைக்கும், செல்வாக்கும் கிடைக்கும்..உனக்கு ஒரு இரகசியம் சொல்லட்டுமா?…

என்னங்க அது? ஆர்வம் தாஙக முடியாமல் கேட்டாள்.

“நான் இந்த எம்.எல்.ஏ தேர்தல்லே சுயேட்சையா நிக்க§றேன். கண்டிப்பா ஜெயிக்கமுடியாது. அது எனக்கு நல்லாவே தெரியும்..

அப்புறம் எதுக்கு தேவையில்லாமல் செலவு செஞ்சி ,,பணத்தை பாழாக்குறீங்க? எரிச்சலுடன் கேட்டாள்.

இவ்வளவு நாள் என்னோடு வாழ்ந்தும் கூட என்னைப் பத்தி சரியா புரிஞிக்கலையே..நான் நிறைய பணத்தை செலவு செய்து ஜனங்ககிடடே ஒட்டு கேக்கற மாதிரி நடிப்பேன்.எதிர்த்து நிக்கறவங்க சமரசத்துக்கு வருவாஙக..நான் முடியாதுன்னு பிடிவாதம் பண்ற மாதிரி பண்ணிட்டு கடைசி நேரத்துலே வர்ற `அன்பளிப்பை` வாங்கிகிட்டு வாபஸ் வாங்கிடுவேன்”எப்படி என் ஐடியா? கண்ணை சிமிட்டியபடியே கேட்டார்.

“எனக்கென்னமோ இது சரி பட்டு வரும்னு தெரியலை..கொக்கு தலையிலெ வெண்ணை வைக்கிற மாதிரி இருக்கு..இது சரிப்பட்டு வருமா? இது எதுல போய்முடியுதோ தெரியலை… கவலையுடன் கேட்டாள்.

நீ ஏண்டி பயப்படறே? “சீக்கிரத்துலே காசு சம்பாதிக்கனும்னா இதுதான் வழி…லட்சக்கணக்குலெ பணம் விளையாடும் நேரம் இது.. இதுதான் சரியான நேரம். இந்த தாமோதரன் போட்ட கணக்கு என்னைக்கும் தப்பாது.என்னோட வாக்குறுதிகளை மேடையிலே பேசும்போது நீ கேட்டிருக்கனுமே… உலகத்திலேயே யாரும் இந்த மாதிரி தேர்தல் வாக்குறுதி கொடுத்திருக்கமுடியாது. நான் கொடுத்த வாக்குறுதியாலே என் பேர் தமிழ்நாடு முழுவதும் , ஏன் ஆல் இந்தியா லெவல்லே என்னைப்பற்றி பேசிக்கிட்டிருக்காங்க… ரேடியோ, டி.வி யிலும் என்னைப்பத்தி செய்தி வர்றது தெரியாம பணத்தை பத்தி கவலைப்படறே..கவலையை விடு..நம்ம பொண்ணு கல்யாணத்தை ஜாம் ஜாம்னு பண்ணிடலாம்..நீ பாக்கத்தானே போறே…மேடையிலே பேசனது பத்தாதுன்னு வீட்டுலேயும் பேச வைச்சுட்டே..போயீ கொஞ்சம் மோர் கொண்டு வா” என்றபடி சோர்வுடன் சோபாவில் சாய்ந்தார்.

“வணக்கம் சார் “

வணக்கம் .. வணக்கம்..யார் நீங்க?

நான் “டமாரம் “ பத்திரிக்கை நிருபர். உங்களை பேட்டி எடுக்க வந்திருக்கேன் சார்.

பேட்டியா?

ஏன் சார், பேட்டின்னா உங்களுக்கு பிடிக்காதா?

அப்படியெல்லாம் இல்லை..இப்ப நான் பிரச்சாரத்துக்கு போய்ட்டிருக்கேன்..இன்னொரு நாளைக்கு வைச்சுக்கலாமே?

சார்..சார்..நீங்க அப்படி சொல்லக்கூடாது..நங்க கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளால் ஒரே நாள்லே ஆல் இண்டியா லெவல்லே பிரபலம் ஆயிட்டீங்க.இந்த வார பத்திரிக்கையிலே உங்க பேட்டி வரணும் சார்..ப்ளீஸ் சார்…ஒரு கால் மணி நேரம் போதும் சார்..மறுத்திடாதீங்க சார்…” கெஞ்சினார் நிருபர்.

அவருக்கே ரொம்ப பாவமாக இருந்தது.யோசிப்பதுபோல் பாவனை செய்து விட்டு சரி, ரொம்ப தூரம் கேட்டுக்கிறீங்க.. என்றபடி டேபிள் மேல் இருந்த ஜூசை குடித்து விட்டு சால்வையை தோளின் மேல் ஸ்டைலாக போட்டுக்கொண்டு, கேட்கிற கேள்விகள் சுருக்கமாக இருக்கட்டும்..எனக்கு டயமே இல்லை..கேளுங்க..

ரொம்ப நன்றி சார்.. அதிகமா கேல்விகள் கேட்டு உங்க டைமை வேஸ்ட் செய்ய மாட்டேன் சார்..உங்க வாக்குறுதகள் பற்றி ஒரு சிறு விளக்கம் கொடுத்தால் போதும்..மீதி அடுத்த வார பேட்டியில் போட்டுக்கலாம் சார்..”
சரி கேளுங்க….
கேட்கிறேன் சார்..என்று மடமடவென்று நோட்டும் பென்சிலும் எடுத்து வைத்துக்கொண்டு எதிரே உட்கார்ந்தார் நிருபர்.

சார்..நீங்க மொதம் பனிரெண்டு வாக்குறுதிகள் மக்களிடம் அறிவித்து யாருமே தர முடியாத அளவுக்கு கொடுத்திருக்கீங்க… அதுக்காக “டமாரம்” பத்திரிக்கை சார்பாக முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

“நன்றி” என்பது போல் புன்னகையுடன் தலையசைத்தார்.

“சார்..உங்களுடைய வாக்குறுதிகள் எல்லாமே சுத்த “ஹம்பக்” ன்னு எதிக்கட்சியினர் சொல்றாங்க. உங்க்ச் வாக்குறுதியை படித்தாலே எங்களுக்கும் அந்த சந்தேகம்தான் வருது. நீங்க ஜெயிச்சால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியுமா..நிதி வசதி நிறைய வேணுமே..அதுக்கு என்ன செய்யப்போறீங்க..?”

“நீங்க இந்த தாமோதரனைப் பற்றி என்ன நினைச்சிட்டிருக்கீங்க? கொடுத்த வாக்குறுதிகள் எல்லாமே நிறைவேற்றணும்னா அது என்ன நியாயம்? வாக்கு கொடுப்பது வேட்பாளரின் கடமை. வாக்களிப்பது வாக்காளரின் கடமை.”தேர்தல் முடிந்ததும் கனவு மாதிரி மறந்துடணும்.அதையே நினைச்சிக்கிட்டு இருந்தால் அது என் தப்பில்லை..ஜனங்கள் பக்குவப்படலைன்னுதான் அர்த்தம்…அதனாலே வேற கேள்வி கேளுங்க” ..கோபமாகச் சொன்னார்.

சார்..மாசத்துக்கு நாலு “துடைப்பம்” எல்லார் வீட்டுக்கும் தர்ற்தா சொல்லியிருக்கீங்க..அது பத்தி சொல்ல முடியுமா?

மக்கள் வீட்டை சுத்தமாகவும், சுகாதாரத்துடனும் வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான்..

“சாக்கடை” வாருவதற்கு “மண்வெட்டி”தர்றதா சொல்லியிருக்கீங்க..அது பற்றி சொல்ல முடியுமா?

‘கவர்மெண்ட்லே வேலை செய்யற துப்புறவு தொழிலாளர்கள் எல்லா சாக்கடையை அள்ள முடியாது. அந்த சகோதரர்களின் வேலைப்பளுவை குறைக்கத்தான் இந்த வாக்குறுதி”

“வீட்டுக்கு வீடு’ பெனாயில்’ பாட்டில் தர்றதாசொல்லியிருக்கீங்க§ளே?

ஆமாம். சொன்னேன். என்னுடைய ‘தொகுதியிலே யார் வீட்டிலும் அசுத்த வாசனையே வரக்கூடாது. அது எனக்கு பிடிக்காது.

லெட்ரின் வசதி இல்லாத வீடுகளுக்கு பெரிய பிளாஸ்டிக் பக்கெட்டும் ,பித்தளை சொம்பும் தர்றது பற்றி என்ன சொல்றீங்க?

“ஏதோ என்னாலே முடிந்த சின்ன உதவி. எத்தனையோ பேர் அடிப்படை வசதி இல்லாத வீட்டுலே குடியிருக்காங்க. அந்த சகோதர சகோதரிக்களுக்காக என்னாலே முடிந்த சின்ன உதவி.. ஒரு சின்ன திருத்தம்..பிளாஸ்டிக் பக்கெட்டுகள் மட்டும் மாதம் ஒன்று தரப்படும்”

“கொசுவலை தர்றது பற்றி சொல்லமுடியுமா?”

கண்டிப்பாக கொடுத்தே ஆகணும்..இல்லாவிட்டால் மலேரியா, டைபாய்டு, காய்ச்சல்லே சிரமப்படுவாங்க.. சகோதரர்கள் சிரமப்படுவது எனக்கு பிடிக்காது.

சார், “கொசுவலை சர்ட்” கொடுப்பது பற்றி..
“ரோட்டிலே நிறைய இடத்துலே ‘லைட்டே’ இல்லாத இடத்துலே நடக்கும்போது கொசுக்கள் அதிகமா கடிக்க வாய்ப்பிருக்குது.அதனாலே அந்த கொசுக்களிடம் இருந்து காத்துக்கொள்ளத்தான் இந்த ஏற்பாடு .வீட்டில் உள்ள அனைத்து நபர்களுக்கும் கொசுவலை சர்ட்கள் தைத்து தரப்படும்.”

வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்பவர்களுக்கு “ஊக்கத்தொகை” இது சரிப்பட்டு வருமா?
“ஏன் முடியாது? கண்டிப்பாக முடியும்.” முயற்சியுடையார் இகழ்ச்சியுடையார்”

‘கொசுவை அடித்து கொண்டு வந்து கொடுத்தால் ஒரு கொசுவுக்கு ஒரு ரூபாய் கொடுக்கறதா சொல்றீங்களே..அது பத்தி சொல்லுங்களேன் சார்..

“அது மிகவும் நல்லவேலை. .அப்படி அடித்தாலாவது நம் மக்கள் சுறுசுறுப்பு பெற்று நாட்டுக்கு உழைத்து பொருளாதாரம் வளர்ச்சி பெற உறுதுணையாக இருக்கும். கொசு அடிப்பது எவ்வளவு சிரமம் தெரியுமா உங்களுக்கு? அப்படியாவது கொசுத்தொல்லை கண்டிப்பாக தீரும்னு நம்பறேன்…

“சாக்கடை அள்ளும் போட்டி” பற்றி சொல்லுங்களேன் சார்”..
மக்களுக்கு சுகாதாரத்தின் மேல் நம்பிக்கை வர வேண்டும்..அதற்காகத்தான் அந்த போட்டி நடத்தப்படும்.அவரவர்கள் வீட்டை சுத்தத்துடனும், சுகாதாரத்துடனும்,வைத்துக்கொள்ள வேண்டும்.யார் நன்றாக ‘சாக்கடை’ அள்ளுகிறார்களோ அதை வீடியோவில் பதிவு செஇது மதிப்பெண்கள் மூலம் தேர்வு செய்யப்படும். பின்பு அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு “சுகாதாரத் திலகம்” என்று பட்டமளிக்கபடும்.

“கொசு விரட்டுவோர் சங்கம்” அது பற்றி சொல்ல முடியுங்களா சார்?

ஓ..கன்டிப்பாக சொல்லணும்..நம்ம நாட்டுலே மக்கள் நோயினால் பாதிப்படுவதற்கு மூல காரணமே கொசுக்கள்தான்னு நான் அடிச்சு சொல்றேன். பகல்லே எங்கேயோ போய் உழைச்சிட்டு களைப்பா
ராத்திரி வீடு திரும்புறான். அந்த ராத்திரி நேரத்துலெ அவன் தூக்கத்தை கெடுப்பது கொசுதனே?..அதனாலே மக்கள் கொசுத்தொல்லையிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காக ஒரு கண்காணீப்பு குழு மூலம் அதிகமாக கொசுவை விரட்டுபவரை நமது சிறப்பு கண்காணிப்பாளர் மூலம் கண்டுபிடித்து ‘கொசுத்திலகம்’ என்ரு ஒரு பட்டமும் அளிக்கப்படும்.

“கொசுவை விரட்டும் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை தர்றதா சொல்லியிருக்கீங்களே?

நான் முன்பே சொன்னதுதான். கொசுவை விரட்டுவது அவ்வளவு சுலபம் அல்ல. மிகவும் முயற்சி செய்துதான் அவைகளை விரட்ட முடியும்.அதனாலே வேலையில்லாத இளைஞைர்கள், பட்டதாரிகளை நியமித்து மாதம் ரூபாய் ஆயிரம் ஊக்கத்தொகையாக அளிக்க முடிவு செய்துள்ளேன்.

கடைசியாக ஒரு கேள்வி, நீங்கள் மாதம் முப்பது பாக்கெட் கொசுவர்த்தி சுருள் தர்றது பற்றி…

“கண்டிப்பாக தரணும். எனக்கு ஒட்டு போட்டு ஜெயிக்கவைக்கிற மகா

ஜனங்களாச்சே..கண்டிப்பாதருவேன்.. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்..இத்தனை வாக்குறுதிகளை கொடுத்திட்டு உங்களால் நிறைவேற்ற முடியுமான்னு கேட்கலாம்.. கண்டிப்பாக முடியும்…நான் முதல்வர் ஆனால்…கண்டிப்பாக நிறைவேற்றுவேன். என்று மக்களுக்கு உங்கள்“டமாரம்” பத்திரிக்கை மூலமா உறுதி அளிக்கிறேன்.

நிருபர் ‘ஆ’ என்று மயக்கம் போட்டு விழப்போனார்.

டெலிபோன் அலறியது.

“ஹலோ”

யாரு.? .சி.எம். பி .ஏ. வா? சொல்லுங்க.. நான் “டாம் டாம் தாமோதரன் பேசறேன். .என்ன விஷயம் சொல்லுங்க சார்?
சி.எம்.ஐயா பேசணுமா?.என்கிட்டேயா? .கொடுங்க…
ஐயா..வணக்கம்..நான் தாமோதரன் ..டாம்..டாம்..தாமோதரன் என்று எழுந்து நின்றபடியே பேசினார்.

என்ன? ஐயா..நானா..இந்த சாதரண சுகாதார மந்திரியாக்க போறீங்க?

சரிங்க..ஐயா..உடனே கிளம்பறேன் ஐயா..இப்ப வந்துக்கிட்டே இருக்கேன் ஐயா…என்றபடியே மகிழ்ச்சி பெருமிதத்துடன் போனை வைத்தார்.

“லட்சாதிபதி ஆகலாம்னு நினைச்சேன், ஆனால் கடவுள் என்னை கோடீஸ்வரன் ஆக்கிட்டான் மங்களம்” என்று மனதில் சொல்லிக்கொண்டே மனைவியை சந்திக்க எழுந்தார்.

1 thought on “டாம் டாம் தாமோதரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *