சிவலிங்க செட்டியார் பங்களாவில் தபாலாபீஸ்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: April 14, 2019
பார்வையிட்டோர்: 37,827 
 
 

சிவலிங்க செட்டியாரின் பங்களாவுக்கு நிகரான பங்களா எங்கள் கிராமத்தில் அப்போது ஏதுமில்லை.

மதிப்புக்குரிய செல்வந்தர்களான நாடார் இனத்தவரை ‘செட்டியார்’ என்று மரியாதையாக குறிப்பிடுவது எங்கள் வட்டார வழக்கு. அசல் செட்டி நாட்டுப் புகழ்பெற்ற பங்களாக்களைப் போலவே கட்டிட நேர்த்தியும், பளபளப்பும் மழமழப்புமாக ஊரே பிரமிக்கும்படி சிவலிங்கம் செட்டியார் பங்களா கட்டியிருந்தார்.

கண்ணாடியில் பார்ப்பதுபோல சுவர்களில் நம் உருவம் பிரதிபலிக்கும். தொட்டுப் பார்த்தால் ரொம்ப நாளைக்கு அந்த மழமழப்பை விரல்கள் தெரிவித்துக் கொண்டிருக்கும்.

முட்டைக் கருவும், வெல்லமும், சுண்ணாம்பும் சேர்த்துப் பூசப்பட்ட கலவையாலான பொன்னிறச் சுவர்கள். சில பருத்த தூண்களுக்குத் துணி சுற்றியிருப்பார்கள்.

அந்தப் பங்களாவின் முன்புற வராந்தா உயரமானது. சிறுவர்களால் சுலபத்தில் ஏற முடியாத உயரத்தில் அமைந்திருந்தது. படிகள் வழியாக ஏறி திண்ணைகளை அடையவேண்டும். வராந்தாவின் இடது கோடியிலும் வலது கோடியிலும் திண்ணையில் சிறிய அழகான அறை.

சித்திர வேலைப்பாடான அழகிய கதவு. அவற்றைத் திறந்து கொண்டு என்றைக்காவது ஒரு நாள் உள்ளே சென்று பார்ப்போமா என்ற ஏக்கம் எல்லாருக்குமே ஏற்படுவது உண்டு.

கால ஓட்டத்தில் சிவலிங்க செட்டியார் கரைந்தார். தற்கால உலகத்தின் நவீனங்கள் ஊரில் புகுந்தாயிற்று.

துருப்பிடித்த ஒரு நீண்ட ஈட்டியும் கையுமாக மேச்சேரியிலிருந்து ஒன்பது மைல் தூரத்துக்கு சிலுங் சிலுங் என்ற சலங்கை ஓசை எழுப்பிக்கொண்டு மெயில் பையுடன் கால்நடையாக ஓடிவந்து கொண்டிருந்த ரன்னர் ரங்கன் சைக்கிளில் இப்போது வரத் தொடங்கிவிட்டான். காடு, புதர், நாய்கள், நரிகள், திருடர்கள், இருட்டு பாதை வழியே வந்த அவனது வரலாறெல்லாம் மங்கத் தொடங்கிவிட்டது.

தபாலாபீஸ் ஏற்பட்டுவிட்டது. சிவலிங்க செட்டியாரின் மகன் பெரியதொரு ‘ஷாப் கடை’ நடத்தி வந்தார். (கேட் வாசல் என்பதுபோல ஷாப் கடை!) சிவலிங்க செட்டியாரின் மகன் பெயர் சதாசிவம்.

பகுதி நேரப் போஸ்ட் மாஸ்டராக சதாசிவத்தை அரசு நியமித்துவிட்டது. தபாலாபீஸ் நடத்த ஒரு கெளரவமான இடம் வேண்டியிருந்தது. சதாசிவம் தனது பங்களாவின் வராந்தா அறையைத் தபாலாபீசுக்கு ஒதுக்கினார் – எளிய வாடகைக்கு.

பொதுமக்கள் கார்டு, கவர் வாங்க முன் வராந்தாவிலிருந்த அறையின் ஒரு ஜன்னல் திருத்தி அமைக்கப்பட்டது. அந்தக் குறுகிய கமான் போன்ற கவுண்டருக்குள் கையை நுழைத்து கார்டு வாங்குவது எனக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் ஓர் இன்பமான அனுபவம்.

கார்டு வாங்க ஜன்னலுக்கு நெருக்கமாக நின்று, தபாலாபீஸின் உட்புற அழகையும் கப் என்ற புழுக்கத்தையும் சிறிது நேரம் ரசிக்கலாம். வாசனைகூட இழுக்கலாம்.

போஸ்ட்மேன் கோவிந்தன் தபால்களின் மேல் முத்திரையை மையில் தோய்த்து ‘டக்கு டக்கு டக்கு’ என்று குத்தும் சத்தமும் அழகுக் காட்சியும் நீடித்த நேரம் நிற்காது. அவ்வளவு தபால் எங்கள் கிராமத்துக்கு ஏது? ஆகவே தீபாராதனை காட்டும் நேரம்போல துளிநேரமே காட்சி. அதற்குள் அதை ரசித்து விடவேண்டும்.

தினமும் பொதுமக்கள் சுமார் ஏழெட்டுப் பேராவது தபாலாபீஸ் ஜன்னலுக்கு வெளியே மழமழ திண்ணையிலும் சுவரை ஒட்டியும் திரண்டிருப்பார்கள்.

சுவரோடு ஒட்டிச் சாய்த்திருப்பவர்களை, போஸ்ட் மேன் கோவிந்தன், “சுவரோட ஒட்டாதிங்கப்பா… எண்ணெய் சிக்கைத் தேய்க்காம தள்ளி உட்காருங்க. எத்தினி வாட்டி சொல்றது? இல்லாட்டி எல்லாரும் கீழே இறங்குங்க” என்று மிரட்டல் எச்சரிக்கை விடுவார்.

கதவை டபாரென்று சாத்திக் கொண்டு விடுவார். அது ஓர் இனிய சத்தம். கோவிந்தன் ஸார்ட்டிங் தொடங்கிவிட்டார் என்று அர்த்தம். சிறிது நேரம் கதவு திறக்கப்படாமல் இருக்கும். பிறகு ‘உஸ்ஸ்ஸ்’ என்று ஒரு நீண்ட எச்சரிக்கை சத்தம் உள்ளிருந்து வரும். அனைவரும் கப் சிப். கோவிந்தனின் கம்மிய குரல் சத்தமாக வெளியே கேட்கும்.

“வேப்ப மரத் தெரு புல்லாக் செட்டியார், வண்டிமேடு அர்த்தநாரி நாடார் அண்டு சன்ஸ் – கண் மார்க் டொபாக்கோ, சிக்கண்ண செட்டியார், ஸ்ரீ லட்சுமி தேவி பாடசாலை, முருக வாத்தியார், சோடாக் கடை நாயக்கர்….”

அபூர்வமாக கோவிந்தன் சில சமயம் வெளியே வந்து, “யாருய்யா செல்லுவடை செல்லப்ப கவுண்டரு” என்று கேட்பதும் உண்டு.

என் பெயர் வராதா, எனக்கொரு தபால் வராதா என்று தினமும் ஆவலுடன் சிறுவனான நானும் காத்திருப்பேன்.

எந்த அண்ணனாவது (சிறுவர் பத்திரிகை ஆசிரியர்) ஒரு தபால் கார்டில், ‘அன்புத் தம்பி, உன்னுடைய கதை பரிசுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. ‘ஜிகு ஜிகு’ அண்ணனின் இனிய வாழ்த்துக்கள்’ என்று நாலு வரியில் ஒரு கடிதம் வராதா? ‘யாருப்பா எழுத்தாளர் ஜ.ரா.சுந்தரேசன்’ என்று போஸ்ட்மேன் கோவிந்தன் குரலெழுப்பமாட்டாரா? குறைந்தபட்சம், ‘உன் கதை தேர்வு செய்யப்படவில்லை’ என்ற குறிப்போடு எந்த அன்பு அண்ணனாவது என் கதையைத் திருப்பியாவது அனுப்ப மாட்டாரா? ஊஹூம்.

ஆனால் தபாலுக்கு இளமையில் காத்திருப்பது ஒரு சுவையான அனுபவம்.

வெகு வருடம் கழித்து ஊரில் போஸ்ட்டாபீஸ் தெரு வழியே போனேன். உருமாறியிருந்தது சிவலிங்க செட்டியார் பங்களா. முன்புறம் கடைகள் அது இது. போஸ்ட் ஆபீஸ் பற்றி விசாரித்தேன். “அது இப்போ இங்கே இல்லையே சார். ஆர்.கே.பி. எக்ஸ்டென்ஷனுக்குப் போயிடுச்சே! புதுசா நீங்க?”

“இல்லே, பழசு!” என்றேன் ஏக்கத்துடன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *