சிலுக்காணத்தம்மன்!

 

மகாபாரதம் படித்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். அதில் ஒரு கட்டத்தில் கிருஷ்ணரைக் கட்டிப் போடுவதற்காகக் கயிற்றோடு வந்த சகாதேவனின் தலை சுற்றும்படி பார்த்த இடத்திலெல்லாம் பரந்தாமன் தெரிந்தானாம். அதுபோல , கொஞ்ச காலமாகவே சென்னையில் எந்த மூலை முடுக்குக்குச் சென்றாலும் எனக்கு சிலுக்கு ஸ்மிதாதான் தென்பட்டார்.

‘பார்த்த இடத்திலெல்லாம்
நந்தலாலா – சிலுக்கு
போஸ்டர் தெரியுதடா நந்தலாலா’
எங்கெங்கு நோக்கிலும்
சிலுக்கடா – அவள்
எழில் சென்னை மூலைமுடுக்கடா’

இப்படிப் புதுக் கவிதை எழுத வைக்கும் அளவுக்கு ‘சிலுக்குமாயை’ என்னை Inspire செய்து சிந்திக்க வைத்தது.

சரித்திரப் படமா, சமூக சினிமாவா, சோக காவியமா, நகைச்சுவை சித்திரமா – இப்படி ‘எதை எடுத்தாலும் எட்டணா’ என்பது போல, எந்த சினிமா போஸ்ட்டரை வேண்டுமானால் பாருங்கள்….சிலுக்குதான்!

என்னைக் கேட்டால் சினிமா போஸ்ட்டர் தீட்டுபவர்கள் முன்கூட்டியே சிலுக்கு ஸ்மிதா விதவிதமான உடைகளில் (?) விதவிதமான அபிநயங்கள் பிடித்து நடனமாடுவது போல போஸ்ட்டர்களை உருவாக்கி வைத்துக்கொண்டு விடலாம்.

ஒருவேளை ஏதாவது ஒரு தயாரிப்பாளர் தனது அடுத்த படத்துக்கு அவசரமாக போஸ்டர் கேட்டால் கூட ‘டக்’ கென்று சிலுக்கு ஸ்மிதாவை முன்னேற்பாடாக வரைந்து வைத்திருந்த போஸ்ட்டரில், படத்தின் பெயரை மட்டும் எழுதி சப்ளை செய்துவிடலாம்.

‘என்னடா இது… போஸ்ட்டரில் முக்கிய வேடம் தாங்கும் கதாநாயகன், கதாநாயகி உருவங்கள் இல்லையே?’ என்று சத்தியமாக அந்தத் தயாரிப்பாளரும் ஆட்சேபிக்கமாட்டார்.

ஒரு படத்தை எடுக்கத் துவங்குவதற்கு முன்பு அப்படத்துக்கு சிலுக்கை ஒப்பந்தம் செய்வதையே பிள்ளையார் சுழி போடுவதற்குச் சமமாகப் பல தயாரிப்பாளர்கள் கருதுவதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றன. படத்தின் கதையே தீர்மானமாகாத நிலையில், சம்பிரதாயத்துக்காக பூஜை முடிந்த கையோடு இசையமைப்பாளரிடம் ஒரு பாடலை ரிக்கார்ட் செய்து கொள்வது சென்ற வருடம் வரையில் சினிமா உலக வழக்கமாயிருந்தது. இப்பொழுது பாடலோடு (எப்படியாவது ஒரு காட்சியில் புகுத்தி விடலாம்…) சிலுக்கின் ஆடலையும் (எப்படியும் ஒரு காட்சியில் புகுத்தி விடவேண்டும்….) சேர்த்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

பூ, பழம், தேங்காய், சிலுக்கின் கால்ஷீட் இந்த நான்கும் கிடைத்துவிட்டால் தைரியமாகப் பூஜை போட்டுவிடலாம். அது சாமி படமாக இருந்தால் கூட சிலுக்கு வந்து சாஸ்திரத்துக்கு நடனம் ஆடவேண்டிய நிர்ப்பந்தம் தற்சமயம் நிலவுகிறது.

முன்பெல்லாம் தனது எந்த நாடகத்திலும், காட்சிக்குச் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ , ரசிகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக கிட்டப்பா கோடையிலே இளைப்பாறி …’ பாடலைப் பாடுவாராம். அதுபோல, கதைக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ, சிலுக்கு படத்தில் இருக்கவேண்டும் என்பது சினிமா வினியோகஸ்தர்களின் விருப்பமாகப் போய்விட்டது.

அட்டன்பரோ காந்தியில் அம்பேத்காரை மறந்துவிட்டார்கள்…ராஜாஜியை ஒதுக்கிவிட்டார்கள்…கொடி காத்த திருப்பூர் குமரனை விட்டுவிட்டார்கள் என்று பலர் பலவிதமாக அங்கலாய்த்தனர். அட்டன்பரோ சிலுக்கை மறந்ததுதான் எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

சத்தியமாகச் சொல்கிறேன்…சிலுக்கு மட்டும் காந்தியில் இருந்திருந்தால் இந்தியாவுக்கு சுதந்திரம் இடைவேளையின் போதே கிடைத்திருக்கும்.

அட, சினிமாதான் சிலுக்கு மாயையில் தவிக்கிறது என்றால் பத்திரிகைகள் அதற்கு ஒரு படி மேலேயே போய்விட்டன.

ஒரு பத்திரிகையில் சிலுக்கு, மடிசார் புடவையில் (ஒரு வேளை இதைத்தான் குலாம்காதர் கோகுலாஷ்டமி என்கிறார்களோ…) மங்களகரமாகச் சிரிக்கிறார். சென்ற வாரப் பத்திரிகையின் அதே இதழை மறந்து போய் இந்த வாரமும் போட்டு விட்டார்களோ என்று ஐயப்படும் அளவுக்கு எல்லா இதழின் அட்டைகளிலும் சிலுக்கு வியாபித்திருந்தார். ரொம்ப நாட்களாக சினிமாவே பார்க்காமலிருந்த எனது ஒன்றுவிட்ட வயதான அத்தை டி.வி-யில் சினிமா பார்க்க நேர்ந்தபோது அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடிந்த ஒரே ஆர்டிஸ்ட் சிலுக்கு ஸ்மிதாதான். நேற்று வெற்றிலை சீவல் போட்ட பொட்டலத்தைப் பிரித்தால் அந்தக் காகிதத்திலும் சிலுக்கு ஸ்மிதாதான் மோனாலிசா புன்னகையில் காட்சி அளிக்கிறார்.

இவ்வளவு ஏன்? ஆறறிவு இல்லாத இந்த ஆடு மாடுகள் கூட சிலுக்கு ஸ்மிதாவிடம் என்ன ஒரு மரியாதை வைத்திருக்கிறது தெரியுமா? மதில் சுவர்களில் ஒட்டப்பட்ட தாங்கள் விரும்பி உண்ணும் போஸ்டர்களைச் சாப்பிடும்போதுகூட அவை பயபக்தியோடு அந்த போஸ்ட்டரில் சிலுக்கு இருந்தால் தவிர்த்துவிட்டு அதே போஸ்ட்டரில் உள்ள கதாநாயகனை மட்டும் கபளீகரம் செய்வதை என் கண்களால் பல முறை பார்த்திருக்கிறேன்.

மொத்தத்தில் இந்த ஆண்டை ‘சிலுக்கு ஆண்டாக’ நாம் அவசியம் கொண்டாடி சிலுக்கு ஸ்மிதாவின் படம் போட்ட தபால் தலைகளைத் தயங்காமல் வெளியிடலாம். என்ன…தபால்காரர் சற்று நேரம் ஆசையாக, கடிதத்தில் ஒட்டப்பட்ட ஸ்டாம்பைப் பார்த்துவிட்டு சற்றுத் தாமதமாகக் கடிதத்தை டெலிவரி செய்வார்…அவ்வளவுதானே!

போகிற போக்கில் சிலுக்குக்கு மெரீனா பீச்சில் சிலை வைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஒருவேளை இப்படியாக எதிலும் சிலுக்கு, எங்கும் சிலுக்கு என்று ஆகிவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். என்ன ஆகும்? ‘ஸாரி… கொஞ்சம் ஓவர்’ என்று நீங்கள் கருதலாம். அட, நான் இனி கூறப்போவது நடந்துவிட்டால் தீர்க்கதரிசி என்ற பட்டம் கிடைக்குமே என்கிற சபலம்தான்.

சிலுக்கு ஸ்மிதா இல்லாமல் படங்கள் தயாரிக்கக்கூடாது என்ற தடை விதித்தாகிவிட்டது. இரட்டை வேடங்களில் சிலுக்கு நடிக்கும் படங்களுக்கு வரி விலக்கு கொடுத்தாகிவிட்டது. பீடியிலிருந்து பிஸ்கெட் வரை சிலுக்கு மார்க் குத்தியாகிவிட்டது. சிலுக்கு ஆஸ்பத்திரிகள், சிலுக்கு கல்லூரிகள், சிலுக்கு சாலைகள், சிலுக்கு ஸ்டேடியங்கள் என்று எல்லா இடங்களிலும் சிலுக்கு ஸ்மிதாவைப் புகுத்தியாகிவிட்டது. இனி சிலுக்கை பிரகடனப்படுத்த வேறு வழியே இல்லை என்கிற நிலை வருகிற போது யாராவது ஒரு ரசிகர், சிலுக்கை ‘சிலுக்காணத்தம்மன்’ என்ற பெயரில் தெய்வமாக்க நினைக்கலாம்.

சினிமாவில் நடிக்க சான்ஸ்’ கேட்டு அலைபவர்கள் சிலுக்காணத்தம்மனுக்கு வேண்டிக்கொண்டு மொட்டையடித்துக் கொண்டால் ‘ஹீரோ’ வேடம் கிடைக்காவிட்டால் கூட மொட்டையோடு பயங்கரமாக இருப்பதால் வில்லன் வேடமாவது கிடைக்கலாம்.

‘சிலுக்காணத்தம்மன்’ கோயிலுக்கு புலியூர் சரோஜாவைக் குருக்களாகப் போட்டு, அம்மனுக்குத் தினமும் காலையில் திருப்பள்ளியெழுச்சி பாடுவதற்குப் பதிலாக எக்ஸ்ட்ராக்களை அழைத்து வந்து ஆடவைத்து இந்த சினிமா அம்மனைக் குஷிப்படுத்தலாம்.

சிலுக்காணத்தம்மனுக்கு அர்ச்சனை செய்யும் போது நாமாவளியாக சகலகலா வல்லவன், மூன்றாம் பிறை, சில்க் சில்க் சில்க் போன்ற படங்களின் பெயரை உச்சரித்து, முடிவில் நமஹ சேர்த்துக்கொண்டால் போதும்! ரசிகர்களுக்குப் புரிவதற்காக அர்ச்சனையைத் தமிழிலும், அம்மனுக்குப் புரிவதற்காகத் தெலுங்கிலும் அர்ச்சனையைச் செய்யவேண்டியிருக்கும். ‘நேத்து ராத்திரி அம்மா… தூக்கம் போச்சுடி அம்மா….’ பாடலை மனம் கசிந்து உருகிப் பாடும் பக்தையின் பக்தியை மெச்சி சிலுக்காணத்தம்மன், தயாரிப்பாளர் கனவில் சென்று, பக்தைக்கு அடுத்தப் படத்தில் சான்ஸ் தருமாறு கட்டளையிட்டு அருள் புரிவார்.

சிலுக்காணத்தம்மனுக்கு அங்கப்பிரதட்சிணம் செய்வதாக வேண்டிக்கொண்ட பக்தர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தால் தமக்குப் பதிலாக வேறுயாரையாவது டூப்பாகப் போட்டு, அங்கப்பிரதட்சிணம் செய்ய அம்மனின் அனுமதி உண்டு.

சிலுக்காணத்தம்மனுக்கு அலங்காரம் செய்து பார்க்க விரும்பும் பக்தர்கள் முன்கூட்டியே என்ன மாதிரி அலங்காரம் என்பதை அம்மனின் பிரத்யேக மேக்கப் மேனிடம் கூறிவிடுவது குழப்பத்தைத் தவிர்க்கும். உச்சிக் கால பூஜை முடிந்து கோவிலை மூடிவிட்டாலும், பணக்கார பக்தர்களுக்காக அம்மன் திங்கள், வெள்ளி போன்ற நாட்களில் ‘நூன்ஷோ’ காட்சி தந்து அருள் பாலிப்பார்.

ஆண்டுக்கு ஒரு முறை சிலுக்காணத்தம்மன் கோவிலில் திருவிழா நடைபெறும். இந்த இடத்தில் நீங்கள் முக்கியமாகத் தெரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், கர்ப்பக்கிரகத்தில் உள்ள மூலவர் ஸ்மிதாதேவி என்றும், உற்சவர் சிலுக்காணத்தம்மன் என்றும் செல்லமாக அழைக்கப்படுகிறது.

சிலுக்காணத்தம்மனை அலங்கார வண்டியில் அமர்த்திக் கோடம்பாக்கம், வடபழனியில் உள்ள அத்தனை ஸ்டூடியோக்களுக்கும் அழைத்துச் செல்லலாம். ஸ்டூடியோ சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அம்மனுக்குக் கற்பூரம் காட்டி ஆரத்தி எடுத்து, அம்மனின் பரிபூரண அருளைப் பெறலாம்…..

ஹெலன், பிந்து, ஜோதிலட்சுமி, ஜெயமாலினி, மாயா போன்ற நடன நடிகைகள் அறுபத்தி மூன்று பேரை வரவழைத்து நாயன்மாரிகளாக சிலுக்காணத்தம்மனுக்குப் பின்னே பல்லக்குகளில் அழைத்துவந்து திருவிழாவைக் களைகட்டச் செய்யலாம்.

சிலுக்காணத்தம்மனுக்குத் தமது ஊர்களில் கோவில் கட்ட விரும்பும் பக்தர்களுக்காக, பிரபல ஸ்டூடியோக்கள் பிரமாண்டமான கோவில் செட்டுகளை மலிவான விலையில் சப்ளை செய்து தருவார்கள். என்.டி.ராமராவ் அரசியலில் குதித்து தெலுங்கு தேச முதலமைச்சராக ஆவார் என்று நீங்கள் நினைத்தீர்களாக்கும். ஏன் சிலுக்கு தெய்வமாகக் கூடாதாம்?

தற்போது நடப்பது கலப்படமில்லாத சுத்தமான கலிகாலம் சார்! என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எதற்கும் முன்னெச்சரிக்கையாக இன்றிலிருந்து சிலுக்கு ஸ்மிதா நடித்த திரைப்படங்களை மூன்று காட்சிகளும் விடாமல் தொடர்ந்து பார்த்து அவரைப் பரிச்சயம் செய்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் ஒருவேளை நாளை சிலுக்கு தெய்வமானால் துதிப்பதற்குத் தோத்திரங்கள் தெரியாமல் திண்டாடிப் போய்விடுவீர்கள்…ஜாக்கிரதை!

பி.கு: சிலுக்குப் பிரபந்த நாமாவளி, ஸ்மிதா அந்தாதி, சில்க் சில்க் சில்க்படக் கதையும் அதன் பாஷ்யமும் போன்ற சிலுக்காணத்தம்மன் பற்றிய புத்தகங்கள் கிடைக்கும். வெளியூர் பக்தர்களுக்குத் தபால் மூலம் புத்தகங்கள் அனுப்பப்படும். வி.பி.பி. கிடையாது.

- ஃபைவ் ஸ்டார் பலகாரக்கடை!, விகடன் பிரசுரம் 

தொடர்புடைய சிறுகதைகள்
ஆந்திர குருட்சேத்திரத்தில் தெலுங்குதேச மன்னர் கலியுகக் கிருஷ்ண பரமாத்மா என்.டி.ராமா ராவ் அவர்கள் தெலுங்குதேச ஊழியர்களுக்காக அரசியல் கல்லூரி ஒன்று ஆரம்பிக்கவேண்டும்' என்று திருவாய் மலர்ந்தருளியிருப்பதாகச் செய்திகள் வந்திருக்கின்றன. ராமராவ்காருவின் மேற்கூறிய ஆசை அகில இந்திய ரீதியில் செயலாக்கப்படவேண்டிய விஷயம் என்று தோன்றுகிறது. ...
மேலும் கதையை படிக்க...
'யோகநாயகி' என்றதும் சாண்டில்யனின் குதிரைகள் குளம்பொலி கேட்கும் சரித்திர நவீனம் என்று சபலப்பட்டு வருபவர்கள் சற்றே விலகுங்கள். இந்த யோகநாயகிக்குக் கொச்சையாகப் பலவித நாமாவளிகள் உண்டு. உதாரணத்துக்குச் சில... குருட்டாம் போக்கு அதிர்ஷ்டம், சுக்ரதசை, அடிச்சுது ஜாக்பாட், அவள் காட்டுல மழை...! யோகநாயகி நம்மைப் ...
மேலும் கதையை படிக்க...
பாகிஸ்தானில் தற்சமயம் பரிதாபத்துக்குரிய இந்திய அணிக்கும் புஜபலபராக்கிரம். இம்ரான்கான் அணிக்கும் நடக்கும் கிரிக்கெட் யுத்தத்தை பேரறிஞர் பெர்னார்ட்ஷா பார்த்திருந்தால் இப்படித்தான் குரூரமாக விமர்சனம் செய்திருப்பார். "பதினோரு முட்டாள்கள் (பாகிஸ்தான் அணி) விளையாடுகிறார்கள். அதைப் பதினோரு முட்டாள்கள் (இந்திய அணி ) விளையாடாமல் வெட்டியாக ...
மேலும் கதையை படிக்க...
'காதல் ஒலிம்பிக்ஸ்' - அன்று ஈடன் தோட்டத்தில் கைவசம் இளையராஜா இல்லாததால் டூயட் எதுவும் பாடாமல் ஆதாம் ஏவாளால் மௌனமாகத் துவக்கி வைக்கப்பட்ட காதல் ஒலிம்பிக்ஸ் இன்றுவரை ஜனரஞ்சகமாக விளையாடப்பட்டு வருவது உங்களுக்கெல்லாம் தெரிந்ததே! காதல் ஒலிம்பிக்ஸில் தலைதெறிக்க ஓடி எப்படியாவது கல்யாண ...
மேலும் கதையை படிக்க...
சயனஸ் மூக்கு!
"பளஸ் டூ மாணவர்களே, மாணவிகளே! சயனஸ்' என்றால் என்ன? டாக்டர் காளிமுத்து பாணியில் கூறுகிறேன், கேளுங்கள்! ஏ... வாலிப வயோதிக அன்பர்களே...! ஆஸ்துமா, ப்ராங்கைடீஸ், மார்பில் சளி, தொண்டையில் கபம், நாசித்துவாரங்களில் கபம், நாசித் துவாரங்களில் நயாகரா நீர்வீழ்ச்சி போன்ற ஜலதோஷ ...
மேலும் கதையை படிக்க...
வணக்கத்துக்குரிய வாசகர்களே! உங்களை வேதாளமாக பாவித்துக் கூறுகிறேன், கேளுங்கள்... எனக்கு பல நிறைவேறாத வக்கிரமான அபிலாஷைகள் உண்டு. அவற்றில் முக்கியமான மூன்று: முதலாவதாக - பாலசரஸ்வதி பாட , வழுவூர் ராமையாப் பிள்ளை ஜதி போட, சுப்புடு பாராட்ட, மியூசிக் அகாடமியில் சிலுக்கு ஸ்மிதாவுக்கும் ...
மேலும் கதையை படிக்க...
(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்) சென்னை சிவா-விஷ்ணு கோயிலில் இருந்து எச்சுமிப் பாட்டி ப்ளஸ் ஏகப்பட்ட பாட்டிகளோடு காசி, ரிஷிகேஷ், பத்ரிநாத் என்று க்ஷேத்திராடனம் செய்ய பஸ்ஸில் புறப்பட்டபோதே கிச்சாவுக்கு மெட்ராஸ்-ஐ வந்ததற்கு ஆரம்ப ...
மேலும் கதையை படிக்க...
'அவரோட ராத்திரிகள்' - இந்தத் தலைப்பைப் படித்துவிட்டு ஐ.வி.சசியின் அவளோட ராத்திரிகள் மலையாள அடல்ட்ஸ் - ஒன்லியின் சாயலை எதிர்பார்த்து விகல்பமான எண்ணத்தோடு வாசிக்க வருபவர்கள் ஏமாற்றமடைவீர்கள். தலைப்பில் உள்ள அவர் மயிலாப்பூரில் உள்ள எங்களது காலனியில் முன்பு குடியிருந்த திருவாளர் ரங்கபாஷ்யம்தான். ...
மேலும் கதையை படிக்க...
பிரம்மா, விஷ்ணு, சிவன் போல, நமது அன்றாட வாழ்க்கைக்கு அவசியமான புரொபஷனல் மும்மூர்த்திகள் - டாக்டர், இன்ஜினீயர், வக்கீல். இவர்களில் இன்ஜினீயரையும் (விக்கெட்கீப்பர் அல்ல, வீடு கட்டுபவர்) வக்கீலையும், விரும்பினால் சாகும் வரையில் சந்திக்காமலேயே இருந்துவிடலாம். உதாரணமாக, கடைசி காலம் வரையில் வீட்டைக் ...
மேலும் கதையை படிக்க...
எனக்குத் தெரிந்து எந்தவிதப் போட்டியும் இல்லாமல் பிரமிக்க வைக்கும் கின்னஸ் உலகத்தின் உச்சாணிக் கொம்பில் உட்காரும் தகுதி எனது நண்பனும் இந்தக் கதையின் நாயகனுமாகிய 'கிச்சா' ஒருவனுக்குத்தான் உண்டு. நண்பர்களால் 'கிச்சா' என்று செல்லமாக சுருக்கமாக அழைக்கப்படும் 'வேங்கட ரமண வராக சீனிவாச ...
மேலும் கதையை படிக்க...
பாலிடிக்ஸ் ப்ளஸ் டூ!
யோக நாயகி
என் சோக கதையைக் கேளு தாய்க்குலமே!
காதல் சைகாலஜி
சயனஸ் மூக்கு!
ஃபைவ் ஸ்டார் பலகாரக் கடை!
கிச்சாவும் கிட்நாப்பும்!
அவரோட ராத்திரிகள்!
டாக்டர்கள் பலவிதம்
வியாதிகள் இல்லையடி பாப்பா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)