சிங்கத்தின் குகையில் கிச்சா!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 17, 2023
பார்வையிட்டோர்: 3,751 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சொல்லாமல் கொள்ளாமல் சென்ற வாரம் காணாமல் போய்விட்ட கிச்சாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக திருவல்லிக்கேணிக்குக் கிளம்பிய என்னை டெலிபோன் மணி தடுத்து நிறுத்தியது. இந்த சம்மர் வெகேஷனுக்குப் பெங்களூரில் உள்ள பானர்கெட்டா என்ற இடத்தில் சிங்கம், புலி சுவாதீனமாக உலா வரும் லயன் ஸஃபாரிக்கு தான் சென்றதைக் கிச்சா சுருக்கமாக ‘ஒண்-லைன்’ ஃபா(வ)ரியில் கூறிவிட்டு, ‘மற்றவை நேரில்’ என்று பேஸ்-வாய்ஸில் சஸ்பென்ஸ் வைத்து, கூட போனையும் வைத்தான். இந்த முறை ‘சிங்கம்-புலி’ என்று கரடி விடக் காத்திருக்கும் கிச்சாவைச் சந்திப்பதற்காக திருவல்லிக்கேணிக்குச் சென்ற என்னை, சிங்கராச்சாரி தெருமுனையில் நிற்க வைத்து லயன் எஸஃபாரியில் தனக்கு ஏற்பட்ட சிங்கராச்சரியமான அனுபவங்களைச் சொல்ல ஆரம்பித்தான் கிச்சா.

சென்ற வாரம், டூர் போயிருக்கும் பெங்களூர் ஜெயநகர் அத்திம்பேரின் மனைவிக்குத் துணையாக இருக்க எச்சுமிப்பாட்டியும், கூடவே தொந்தரவாக இருக்க கிச்சாவும் பெங்களூர் போனார்கள். ‘தெற்கே சூலம், வடக்கே ஈட்டி’ என்றெல்லாம் நாள், கோள் பார்த்துப் பாட்டியும் பேரனும் பெங்களூர் போய்ச் சேருவதற்கும் டூர் முடிந்து அத்திம்பேர் திரும்பி வருவதற்கும் சரியாக இருந்தது.

‘இனி நீங்கள் தேவையில்லை… போகலாம்’ என்று அவர்களை வெட்டி விடுவது அத்திம்பேருக்கு அநாகரிகமாகப் பட்டதால், அவர்களை இரண்டு நாள்கள் தங்கியிருந்து பெங்களூரைச் சுற்றிப் பார்க்குமாறு சொல்லிவிட்டு, கடனெழவே என்று தன் ஆபீஸ் காரை டிரைவரோடு சேர்த்து அழுதார்.

போட்ட கோட்டை சம்மரிலும் கழட்டாமல் சுற்றும் பெங்களூர் மனிதர்களைப் பார்த்து முதல் நாளே அலுத்த பாட்டியும் பேரனும், இரண்டாம் நாள் டிரைவர் சொன்னதன் பேரில் மாறுதலுக்குப் புலி, சிங்கம் என்று மிருகங்களைப் பார்க்க முடிவு செய்து பானர்கெட்டா லயன் ஃபாரிக்கு வந்து சேர்ந்தார்கள்.

உள்ளே நுழைய டிக்கெட் வாங்கப் போன கிச்சா, கௌண்ட்டர் ஆசாமியிடம், “ஏன் சார்… பெங்களூர்ல மனுஷங்கதான் குளிருக்குப் பயந்துண்டு கோட்டு சூட்டுப் போடறீங்க… சிங்கம் கூடவா 0ஃபாரி சூட் போடனும்… இதுல கோடு போட்ட ‘லயன் ஸஃபாரி’ சூட் வேற.. பேத்தலா இருக்கு…!’ என்று கேட்டு தனது அறியாமையை வெளிப்படுத்த, அவர் ‘அட அசடே…’ என்ற பாவத்தில் கன்னடத்தில் பார்த்துவிட்டு அவனுக்கு அரை டிக்கெட் கொடுத்தார்.

அப்போது அங்கு வந்தவர்களை ஏற்றிச் சென்று லயன் ஸஃபாரியைச் சுற்றிக் காட்டுவதற்காக, கார்ப்பரேஷன் நாய்வண்டி கணக்கில் இருந்த ஒரு புராதனமான கம்பிவலை போட்ட மினி பஸ் வந்து பிரேக் போட்டு, சளிபிடித்த கிழட்டுச் சிங்கம்போல உறுமி விட்டு நின்றது. அந்த பஸ்ஸிலிருந்து தொப்பையும் தொந்தியுமாக இறங்கிய பெல்லியப்பா என்ற வழிகாட்டி அவசர அவசரமாக ‘ஹெள்ளி ஹோகு, சிம்ஹா’ என்று டிக்கெட் வாங்கியவர்களைத் துரிதப்படுத்த, கன்னடம் புரியாத கிச்சாவுக்கு பெல்லியப்பாவின் ஆவேசம் ஒரு வேளை சிங்கம்தான் தப்பித்துவிட்டதோ என்ற பிரமையை உண்டாக்கியது. கன்னடத்தில் வீரமாக எதையோ கூறிவிட்டுத் தைரியமாக முதலில் ஒரு பசவங்குடி ஃபேமிலி ஏற, அவர்களைத் தொடர்ந்து தயங்கித் தயங்கி ஏறிய அந்தக் குடும்பத்தின் மூத்த மாப்பிள்ளை, கிச்சாவின் உசிரை வாங்கினார்.

‘இந்த க்ஷணம் நாங்க சிங்கத்தைப் பார்த்துட்டு வரணும்னு தொந்தரவு செய்தாங்க. தெரியாத்தனமா வந்து தொலைச்சு இப்ப வசமா மாட்டிண்டுட்டோம் என்று மல்லேஸ்வரம் வந்த மயிலாப்பூர் தேசிகாச்சாரி, தன் மனைவி சார்பாகவும் சேர்த்து இம்போஸிஷன் போல கிச்சாவிடம் நூறாவது தடவையாகப் புலம்பிவிட்டு ஏற, கடைசியாகக் கழுத்தில் காமிரா மாலையோடு கிச்சாவும் எங்கு போனாலும் அலுமினிய சம்படம் டப்பாக்களில் தான் எடுத்துச் செல்லும் தனது இஷ்டமித்ர பட்சணங்களோடு எச்சுமிப் பாட்டியும் ஏறினார்கள். ஏறுவதற்கு முன் கிச்சா, பெல்லியப்பாவிடம் ‘நெஜ சிங்கமா? இல்லை, சும்மா இந்தப் பக்த பிரகலாதா டிராமால வர்ற நரசிம்மர் மாதிரி வேஷம் போட்ட சிங்கமா?’ என்று பயத்தில் வாய் தழுதழுக்கக் கேட்க, கிச்சாவை ‘உன்னோட கேள்வி ஸில்லியப்பா’ என்பது போல பெல்லியப்பா பார்த்துவிட்டு பஸ்ஸுக்குள் நாலு கால் பாய்ச்சலில் தாவி ஏறி பஸ் கதவைச் சிங்கம் அறைவது போல அறைந்து சாத்தினான்.

‘சிங்கம் மட்டுமில்லை, உள்ளே புலியும் இருக்கு…’ என்று புதிதாக ஒரு பயத்தைக் கிளப்பிய பெல்லியப்பா சடாலென்று தனது சொக்காயைத் தூக்கி, இரண்டு வருடத்துக்கு முன்பு இடுப்பில் புலி கடித்த வடுவைச் சாட்சியாகக் காட்டிவிட்டு, ‘ஒருவேளை சிங்கம்தான் மாறு வேஷத்தில் பெல்லியப்பாவாக வந்துள்ளதோ என்று கிச்சா சந்தேகமாகப் பயப்படும் அளவுக்கு பான் மசாலாவினால் தேய்ந்து போய்விட்ட தனது கோரைப் பற்களைக் காட்டியபடி பிடரி குலுங்க, தேவையில்லாமல் சிரித்தான்.

பிறகு அவர்களைப் பார்த்து ‘அப்படி ஒருவேளை சிங்கத்துக்கிட்ட மாட்டிக்கிட்டீங்கன்னா வளைஞ்சு வளைஞ்சு ஓடுங்க. சிங்கத்தால உங்களைப் புடிக்க முடியாது…’ என்று பெல்லியப்பா தனது சிங்க ஞானத்தை வெளிப்படுத்த, வாய்விட்டு உரக்கப் பெருமாளிடம் மாங்கல்யப் பிச்சை கேட்டுக் கொண்டிருக்கும் மனைவியை, ‘நான் முந்திண்டா நேக்கு… நீ முந்திண்டா நோக்கு’ என்ற விரக்தியில் பார்த்த தேசிகாச்சாரி, சட்டென்று கிச்சாவின் கையைப் பிடித்து ‘அப்படி ஒரு வேளை எங்களுக்கு ஏதாவது ஆச்சுன்னா, என்னோட மாமனாருக்கு நீதான்பா தகவல் சொல்லணும். மல்லேஸ்வரம் லயன்ஸ் கிளப் பிரசிடெண்ட் அவர். மாதவன்னு பேரு என்று கூறிவிட்டுத் தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.

எண்ணெய் சொட்டச் சொட்ட எச்சுமிப் பாட்டி தந்த அதிரசத்தைச் சாப்பிட்ட கிச்சா, இதுதான் சாக்கென்று தேசிகாச்சாரி முதுகை ஆதரவாக தடவுவது போல அவரது ஜிப்பாவில் தன் கை பிசுக்கைத் துடைத்துக் கொண்டு, “மாமா, வயசுல பெரியவர் நீங்க. உங்களுக்குத் தெரிஞ்சிருக்கணுமே, குரைக்கற நாய் கடிக்காதும்பா. அது மாதிரி துரத்தற சிங்கத்துக்கு ஏதாவது பழமொழி இருக்கா?’ என்று அசம்பாவிதமாகக் கேட்டு அவரது பயத்தைப் பீதியாக அதிகரிக்கச் செய்ய, அதுவரை நார்மலாக அழுது கொண்டிருந்தவர், கிச்சா மடியில் முகம் புதைத்து ‘க கா கி கீ கொ கோ’ என்று ‘சிங்காரவேலன்’ சினிமாப் படப் பாடலின் முதல் வரியை மட்டும் பாடிக் கதற ஆரம்பித்தார். தொடர்ந்து கிச்சா அவரிடம் “மாமா, நீங்க சுஜாதாவோட ‘சிங்கமய்யங்கார் பேரன் டிராமா பாத்தேளா? கமலோட ‘சிங்காரவேலன்’ பாத்தேளா?’ என்று சிங்க சம்பந்தமாகப் பேசி அவரைச் சாகடித்தான்!

‘லயன் என்க்ளோஷர்’ என்று ஆங்கிலத்திலும் கன்னடத்திலும் எழுதப்பட்ட போர்டு தொங்கும் கம்பிவேலியை பஸ் நெருங்கியதும், ‘கண்ணாடியைத் தூக்கி விடுங்க’ என்று பெல்லியப்பா எச்சரிக்க, ஏதோ ஞாபகத்தில் தேசிகாச்சாரியின் மூக்குக் கண்ணாடியைக் கிச்சா தூக்க, அந்தச் சமயம் பார்த்து பஸ் கவர்ச்சி நடிகை போல குலுங்க, தேசிகாச்சாரியின் சோடா பாட்டில் கண்ணாடி கீழே விழுந்து சுக்குநூறாகி ஃபிரேம் மட்டும் உள்ள காலி சோடாவாகியது. இனிமேல் சிங்கம் என்ன? டயனாஸரஸ் எதிரில் வந்தால்கூட தேசிகாச்சாரியின் கண்களுக்குத் தெரியாது.

பஸ் கம்பிவேலியைத் தாண்டியதும், ‘நல்லா பார்த்துக்குங்க, இதான் லயன் ஃபாரி. இங்க மொத்தம் இருபது இருபத்தைந்து சிங்கங்கள் இருக்கு. உத்துப் பாருங்க. எங்கேருந்து எப்ப சிங்கம் வரும்னு சொல்ல முடியாது’ என்று பெல்லியப்பா சொல்ல, கண்ணாடி போன அதிர்ச்சியில் காது அடைத்து தாற்காலிகச் செவிடாகிவிட்ட தேசிகாச்சாரி, ‘மேற்கொண்டு அந்த மூதேவி என்ன சொல்றான்?’ என்று கிச்சாவிடம் கேட்க, பதிலுக்குக் கிச்சா, ‘ஒண்ணுமில்லை > மாமா. சிங்கம் எங்கே இருக்குன்னு கேட்டோம்.

நரசிம்மாவதாரம் மாதிரி தூண்லயும் இருக்கும், துரும்புலயும் இருக்கும்னு சொல்றான்’ என்று கூறி, அவரது பயத்தைப் பயபக்தியாக மாற்றினான்.

மேடுபள்ளமான அந்தக் காட்டுப் பாதையில் பஸ் ஆடிய டிஸ்கோவினாலும் எச்சுமிப் பாட்டி தந்த பட்சண வகையறாக்களை ஏகமாகக் கொட்டிக் கொண்டதாலும் எடுக்கப் போகும் வாந்திக்குக் கட்டியம் கூறுவது போல கிச்சா அடிவயிற்றிலிருந்து ‘உவ்வே’ என்று குரல் கொடுக்க, ‘என்ன வாந்திச் சத்தம்… கர்ப்பிணி சிங்கமா..?’ என்று கண் தெரியாத தேசிகாச்சாரி அப்பாவியாகக் கேட்டார்.

பஸ்ஸை நிறுத்தச் சொல்லி அவசரமாகக் கதவைத் திறந்து கபாலென்று கீழே குதித்த கிச்சா, அங்குள்ள ஒரு புதரின் மீது அந்த லயன் ஃபாரியே நடுங்கும் அளவுக்குக் கர்ஜனை செய்து அதிரசம், முறுக்கு, பொரிவிளங்காய் உருண்டை, தேன்குழல் என்று சாப்பிட்ட அதே ஆர்டரில் வாந்தியெடுத்தான்! அப்போது, நயாகரா நீர்வீழ்ச்சிக்கு இணையாக கிச்சா எடுத்த வாந்தியால் அந்தப் புதர் மறைவில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த ஒரு சிங்கம் கர்ஜித்தது.

‘ஏன் இப்படி என்மீது ஊழலாக்கி விட்டாய்?’ என்ற ரீதியில் அந்த ஆசாரமான. சிங்கம் அனாசாரமாக உறும, சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்த கிச்சா, ‘ஓ, சிங்கம்கறது இதுதானா?’ என்ற பாவத்தில் காஷுவலாக பார்த்துவிட்டு உடனே நிலைமையை உணர்ந்து, ‘ஐயோ… சிங்கம்…!’ என்று அலறிப் புடைத்து பஸ்ஸுக்குத் தாவி ஏறிக் கதவைச் சாத்தினான். துரிதகதியில் தப்பிய கிச்சாவை பெல்லியப்பா உள்பட அனைவரும் பாராட்டிவிட்டு, பஸ்ஸை எடுக்குமாறு கோரஸாக டிரைவரிடம் கூறத் திரும்பியபோது, டிரைவர் ஸீட்டில் ஆஜானுபாகுவாக ஒரு ஆண் சிங்கம் ஸ்டியரிங்கைப் பிடித்தபடி ஸ்டைலாக அமர்ந்திருந்தது!

பஸ்ஸுக்குள் ஓட்டுநர் சிங்கம். பஸ்ஸுக்கு வெளியே கிச்சா எடுத்த வாந்தியால் கலர் மாறிய வெள்ளைச் சிங்கம். எனவே உள்ளே இருக்கவும் முடியாமல், வெளியே குதிக்கவும் முடியாமல் பானர்கெட்டாவில் ரெண்டும் கெட்டாவாக மாட்டிக் கொண்ட கிச்சா அண்ட் கோ, இனி என்ன செய்யலாம் என்று கண் ஜாடையில் கலந்து ஆலோசித்துக் கொண்டிருந்த வேளையில், ஓட்டுநர் சிங்கம் ஆக்ஸிலரேட்டரை அழுத்தி உடனடியாக மறு காலால் பிரேக்கை அடித்தது. பஸ் பத்து அடி தூரத்தை நூறு மைல் வேகத்தில் கடந்து பளிச்சென்று நின்றது. அவர்களது அவஸ்தையைப் பார்த்து, வெளியே இருந்த வெள்ளைச் சிங்கம் நக்கலாகச் சிரித்துவிட்டு விசிலடிப்பது போல லேசாக கர்ஜிக்க, அந்த சிக்னல் கேட்டு இதுவரை மறைந்திருந்த மற்ற இருபது பெரிய அப்பா, அம்மா, சித்தப்பா, சித்தி சிங்கங்களும், ஐந்து கடைச் சிங்கக் குட்டிகளும் ஓடிவந்து பஸ்ஸைச் சூழ்ந்துகொண்டு கும்மியடிக்காத குறையாகச் சுற்றி சுற்றி வந்தன.

என்ன நினைத்ததோ தெரியவில்லை. அந்த ஓட்டுநர் சிங்கம் சீட்டை விட்டு எழுந்து வந்து கதவைத் திறந்து, பயத்தில் பேயறைந்தாற் போல் இருந்த அவர்களைப் பார்த்து ஒரே டியூனில் என்னவோ திரும்பத் திரும்ப சொல்வதுபோல் கர்ஜித்தது. ஓரளவு சிங்க பாஷையை தபால் மூலம் பயின்றிருந்த பெல்லியப்பா எல்லோரையும் பத்து எண்ணுவதற்குள் இறங்குமாறு கேட்டுக் கொண்டான். அனைவரும் இறங்கியதும் ஓட்டுநர் சிங்கம் ஏதோ சிக்னல் காட்டிவிட்டு டிரைவர் ஸீட்டுக்குப் போக, அதுவரை வெளியில் இருந்த மற்ற சிங்கங்கள் பஸ்ஸுக்குள் ஏறி பதவிசாக அமர்ந்தன. குழந்தைச் சிங்கங்கள் ஜன்னலோரத்தில் இடம் பிடித்துக் கொண்டன. கடைசி சிங்கம் கதவை மெய்யாகவே அறைந்து சாத்த, பஸ் மெதுவாக ஓட ஆரம்பித்தது.

வெளியில் படபடக்கும் வெயிலில் நிற்கும் ‘கிச்சா அண்ட் கோ’வை பஸ் சுற்றிச் சுற்றி வந்தது. தங்களை அலைய விட்டு லயன் ஸஃபாரி என்று பேர் கொடுத்து வேன் – பஸ்ஸில் இருந்தபடி வேடிக்கை பார்க்கும் மனிதர்களைப் பழிவாங்குவது போல அவை, அவர்களை அலையவிட்டு வேடிக்கை பார்த்தபடி அந்த யைன் எஸஃபாரியை ஹ்யூமன் ஸஃபாரியாக்கியது.

இந்த அனிமல் சைக்காலஜியை உடனடியாகப் புரிந்துகொண்ட கிச்சா, ஒரு முடிவுக்கு வந்தவன் போல எச்சுமிப் பாட்டியின் காதில் ஏதோ கிசுகிசுக்க, எச்சுமிப் பாட்டியும் அதை ஆமோதிப்பது போல பதிலுக்கு கிசுகிசுத்துவிட்டு கிச்சாவின் நெற்றியில் வீரத்திலகம் இட்டு வழியனுப்பினாள். கிச்சா அஞ்சாத சிங்கம் போலப் பீடுநடை போட்டு பஸ்ஸை அணுகினான்.

கதவைத் திறந்து உள்ளே நுழைந்த கிச்சா தனது ஸீட்டுக்கடியில் இருந்த அலுமினிய சம்புடத்தைத் திறந்து ஒரு விள்ளல் அதிரசம் எடுத்து பஸ்ஸில் உட்கார்ந்திருந்த சிங்கங்களுக்குக் காட்டினான். ‘இதில் ஏதோ சதி இருக்கிறது’ என்பது போல அவை ஒன்றுக்கொன்று பார்த்தபடி சிங்‘கம்’மென்றிருக்க ஐந்து நிமிடத்துக்கு மயான அமைதி நிலவியது. தாய்ப்பால் மட்டும் குடிப்பதால் தற்சமயத்துக்கு சைவமாக இருக்கும் ஒரு தம்மாத்துண்டு சிங்கக்குட்டி, அதிரச மணத்தால் நாக்கில் ஜொள்ளு சொட்ட கிச்சாவை நோக்கி ஓடி வந்தது. கிச்சா தந்த அதிரச விள்ளலை ஒரே பைக்கில் முழுங்கிவிட்டு, தனது குடும்ப சிங்கங்களைப் பார்த்து ‘பேஷ் பேஷ் ரொம்ப நன்னாருக்கு…’ என்ற பாவனையில் மழலையில் கர்ஜிக்க, இதற்காகவே காத்திருந்தது போல மற்ற சிங்கங்கள் கிச்சாவை சூழ்ந்துகொண்டு அதிரசத்துக்காக தங்களது உள்ளங்கால், கைகளை நீட்டின. கொண்டு வந்த நான்கு சம்புடங்களையும் திறந்து அதிரசம், முறுக்கு, பொரிவிளங்காய் உருண்டை சிங்கங்களுக்கு விநியோகித்தபடி அவற்றுக்கு நடுவே கிச்சா தொப்பையோடு கூடிய டார்ஜான் போல நின்றான். திருட்டுத்தனமாக இரண்டாவது முறை முறுக்குக்கு கை நீட்டிய கிழச் சிங்கத்தின் பல்லிலேயே ஒரு போடு போட்டான். எச்சுமிப் பாட்டியின் பொரிவிளங்காய் உருண்டையைக் கடிக்க முயன்றதில் ஒரு சிங்கத்தின் சிங்கப்பல் உடைந்தது.

விருந்தோம்பல் முடிந்த பிறகு கிச்சா அண்ட் கோ பஸ்ஸில் ஏறவும், சிங்கங்கள் கீழே இறங்கிக்கொண்டு, கண்களில் நீர் தளும்ப, லயன்கள் லைனாக 3. நின்று கிச்சாவுக்கு டாட்டா காட்ட, பஸ் பானர்கெட்ட டாவை விட்டுப் புறப்பட்டது!

பெங்களூரிலிருந்து மறுநாள் சென்னைக்கு வந்த கிச்சாவும் எச்சுமிப் பாட்டியும் வீடு சேரும் வரை ஏதோ கீச்சுமூச்சென்று ஒரு சத்தம் தங்கள் கூடவே தொடர்வது புரியாமல், ‘என்னவாக இருக்கும்?’ என்று யோசித்தபடி வந்து சேர்ந்தார்கள்.

அலம்புவதற்காக அலுமினிய சம்புடங்களை கிணற்றடிக்கு கொண்டு போய் கிச்சா திறந்தபோது அதற்குள் இரண்டு சிங்கக்குட்டிகள் கீச்சுமூச்சென்று கத்தியபடி விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். இப்படியாக பானர்கெட்டா பயணக் கதையை கிச்சா கூறி முடிக்கவும், ‘சிங்கத்தை வச்சு என்கிட்ட நீ விட்ட ரீலை எம்.ஜி.எம்.கிட்ட சொல்லு. சினிமாவா எடுப்பான்’ என்றேன். வெறுப்பாகிப் போன கிச்சா என்னை அவன் வீட்டுக் கூடத்துக்கு இழுத்துப் போய் அங்கு தொங்கும் இரண்டு தூளிகளைப் பிரித்துக் காட்டினான். தூளிக்குள் சிங்கச் சிசுக்கள் தூங்கிக் கொண்டிருந்தன!

மிருகசீர்ஷ நட்சத்திரமும் சிம்மராசியும்கூடிய ஒரு சுபயோக சுபதினத்தில் சாஸ்திரிகளை வரவழைத்து இரண்டு சிங்கக் குட்டிகளுக்கும் புண்ணியாகவாசனம் செய்வித்து, ஆண் குட்டிக்கு நரசிம்மன் அலையஸ் நச்சு என்றும் பெண் குட்டிக்கு நந்தினி அலையஸ் நந்து என்றும் நாமகரணம் செய்வித்ததைப் பெருமையோடு சொல்லிக் கொண்டான் கிச்சா.

எல்லா வகை பிஸ்கெட்டுகளும் கிடைக்கும் டப்பாசெட்டி கடைக்கு கிச்சா சென்று, ‘செட்டியாரே, சிங்க பிஸ்கெட் இருக்கா?’ என்று கேட்க, தன்னைக் கிச்சா கிண்டல் செய்வதாக நினைத்து அவனை ரோஷமாக செட்டியார் பார்க்க, பதிலுக்கு கிச்சா ‘என்ன முறைக்கற? நாய் பிஸ்கெட் இருக்கறச்சே சிங்க பிஸ்கெட் இருக்கக் கூடாதா? சரி விடு. அட்லீஸ்ட் புலி பிஸ்கெட்டாவது இருக்கா? நச்சுவையும் நந்துவையும் அட்ஜஸ்ட் பண்ணிக்கச் சொல்றேன்…’ என்று கேட்டு, செட்டியார் கடையை மூடும் அளவுக்கு அவரைக் குழப்பியதை சிங்கப்பல் தெரிய சிரித்துக்கொண்டே சொன்னான்.

தன் வீட்டில் சிங்கம் வளர்ப்பது பற்றி விசாரிக்க திரண்டு வந்த திருவல்லிக்கேணிவாசிகளின் வாயை அடைப்பது போல கிச்சா வீட்டு வாசலில், ‘பிவேர் ஆஃப் லயன்ஸ் – சிங்கங்கள் ஜாக்கிரதை’ என்ற போர்டைத் தொங்க விட்டிருப்பதைக் காட்டினான்!

நச்சுவுக்கும் நந்துவுக்கும் பருப்பு சாதம், வத்தக்குழம்பு, சுட்ட அப்பளம் என்று தீனி போட்டு எச்சுமிப் பாட்டி சுத்த சைவமாக்கியிருந்தாள். பிரபந்தம், சகஸ்ரநாமம் படித்துக் காட்டி தினமும் பார்த்தசாரதி கோயிலுக்கு அழைத்துப் போய் கிச்சா அவற்றை சுத்த வைணவமாக்கி விட்டிருந்தான்.

டம்ளரில் பால் வைத்தால் அதை எச்சில் பண்ணாமல் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு நச்சுவும் நந்துவும் ஆசாரத்தில் அழகிய சிங்கங்களுக்கு சமமாகக் காணப்பட்டன.

ஒரு வாரம் கழித்து நச்சுவையும் நந்துவையும் பார்த்துவிட்டு வரலாமென்று கிச்சாவின் வீட்டுக்குப் போன எனக்கு வாசல் ரேழியில் ஒரு பூனைக்கு பயந்து நச்சுவும் நந்துவும் தூணில் ஏற முற்பட்டு முடியாமல் வழுக்கி வழுக்கி கீழே விழுவதைப் பார்த்ததும் மகா வயிற்றெரிச்சலாக இருந்தது.

‘பெருமாளில் ஆரம்பித்து புலி, சிங்கம் வரையில் எல்லாமே அது அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால்தான் அழகு என்பதைக் கிச்சாவுக்கு நயம்பட எடுத்துக் கூறி அவனைச் சம்மதிக்க வைத்து அன்று இரவே நச்சுவையும் நந்துவையும் இரண்டு அலுமினிய சம்புடங்களில் போட்டு எடுத்துக் கொண்டு நானும் கிச்சாவும் மெயில் பிடித்து பெங்களூர் போனோம்!

குழந்தை சிங்கங்களான நச்சு, நந்துவைக் காணாமல் பதறிப்போன அப்பா அம்மா சிங்கங்கள் பானர்கெட்டா போலீஸில் புகார் கொடுத்துவிட்டு கடந்த பத்து நாள்களாக சோறு, தண்ணி பிடிக்காமல் சோர்ந்து போய்ப் படுத்திருப்பதைக் காட்டினான் பெல்லியப்பா. காணமல் போன குழந்தைகள் கிடைத்துவிட்ட சந்தோஷத்தில் சீனியர் சிங்கங்கள் உணர்ச்சிவசப்பட்டன. ‘பிரிந்தவர் கூடினால் கர்ஜிக்கவும் வேண்டுமோ?’ ஸ்டைலில் கட்டித் தழுவிக் கொண்டன!

– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *