புலவர் பொன்னம்பலம் பேசுகிறார்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: March 19, 2023
பார்வையிட்டோர்: 3,081 
 

(1971ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“அன்பே உருவெடுத்தாற்போல் விளங்கும் அவைத் தலைவர் அவர்களே! மாரி மழை போல் சொற்பொழி வாற்றவல்ல சக பேச்சாளர்களே! ஆன்றவிந்தடங்கிய பெரியோர்களே! குடும்பத் தலைவர்களே! குடுமிக்காரர்களே! வாலிபர்களே! வனிதையர்களே! சிறுவர்களே! சிறுமியர்களே! குழந்தைகளே!…(இப்படி இன்னும் பல விளித்தல்கள். இடநெருக்கடியை உத்தேசித்து அவைகள் இங்கு விடப்பட்டுள்ளன.) உங்கள் அனைவருக்கும் எனது கரம் கூப்பிய – சிரம் தாழ்த்திய வணக்கங்கள் உரித்தாகுக!”

ஆண்டு விழா ஒன்றில் ‘குறளின்பம்’ பற்றிச் சிறப்புச் சொற்பொழிவாற்ற அழைக்கப்பெற்ற புலவர் பொன்னம்பலம் இப்படியாகத் தனது உரையை ஆரம்பித்தார். அவர் மேலும் தொடர்ந்து பேசியதாவது:

“அடியேனுக்கு எத்தனையோ வேலைகள் இருப்பினும் உங்கள் விழாக் குழுவினரின் வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாத அளவுக்கு உங்கள் மன்றத்தின் மீதும் இங்குள்ள மக்கள் மீதும் எனக்கு அளவுக்கதிகமான பற்றும் பாசமும் உண்டு. அதுவே அடியேன் இப்பொழுது உங்கள் முன் எழுந்தருளக் காரணமாயிருந்தது…”

(தான் ஒரு சாதாரண ஆள் அல்ல மிகப் பெரிய பிரமுகர் என்பதைச் சபையினருக்குக் காட்டுவான் வேண்டிப் புலவர் தன் பேச்சின் போதெல்லாம் வழக்கமாகக் குறிப்பிடும் ஓர் அவையடக்கம் இது.)

“உங்கள் வேண்டுகோளுக்கு என்னவோ அடிபணிந்து விட்டபோதிலும் கடைசி நேரத்தில் உங்களை எல்லாம் நான் தாமதிக்க வைத்துவிட்டேன். ஆறு மணிக்கு இங்கு வருவதற்குச் சம்மதித்திருந்த போதிலும் எட்டு மணிக்கே வந்து சேர வேண்டிய அளவுக்கு சில இக்கட்டான நிலைமைகள் வழியில் ஏற்பட்டுவிட்டன. இந்த அழகில் இங்கு வருவதற்கு முன் ஏற்கனவேயும் இரண்டு கூட்டங்களுக்கு வேறுபோய் சொற் பெருக்காற்றி விட்டு வந்திருக்கிறேன்…”

(புலவரை நீங்கள் மட்டு மல்ல வேறு சிலரும்கூட பேச அழைப்பதுண்டு என்பதை இப்படியாகச் சொல்லுகிறார்.)

“இருந்தபோதிலும் பங்சுவலிட்டிக்குப் பெயர்போன நான் அந்த இரண்டு கூட்டங்களிலுமே குறிப்பிட்ட காலத்திற்குள் பேசிமுடித்துவிட்டு உங்கள் மத்தியிலும் குறிப்பிட்ட காலத்தில் பேசுவதற்கென்று தான் வந்து கொண்டிருந்தேன். ஆனால் அந்தோ…வந்து கொண்டிருக்கும் போது இடைவழியில் எனது கார் பழுதாகிவிட்டது…”

(புலவரிடம் சொந்தத்தில் கார் இருக்கிறது என்ற செய்தியினை இப்படியாகச் சபையின் கவனத்திற்குக்கொண்டு வருகிறார். காருக்குப் புத்துயிர் வந்த கதையினை அவர் சொல்லியபின்)

“காரின் பழுதுகள் யாவும் ஒருவாறாக முடிந்து சிறிது தூரம் போனதும் இன்னொரு பேரிடி! அது என்னவெனில் நான் இங்கு வரவேண்டிய பாதையை டிரைவர் மறந்து விட்டு வேறொரு பாதையால் காரைச் செலுத்திக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதையெல்லாம் நினைக்கும்போது எனக்கு ஒரு கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது. அந்தக் கதையை உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்…”

(அந்தக் கதை உங்கள் எல்லாருக்கும் நன்றாகத் தெரிந்த ‘ஆவீன மழை பொழிய இல்லம் வீழ’ என்ற பாடலின் கருத்தேயாதலால் அதனை இங்கு விட்டோம்.)

“நான் கேட்டார்ப் பிணிக்கும் தகைய பெரும் சொற் பொழிவாளன் அல்லன். வெல்லும் சொல் இன்மை அறிந்து பேசும் வித்தகனும் அல்லன். எனது பேச்சில் தவறும் இருக்கலாம்; சரியும் இருக்கலாம். கொள்ளக் கூடியதும் இருக்கலாம்; தள்ளக் கூடியதும் இருக்கலாம். அதனால் நீங்கள் எப்படி அன்னப் பட்சியானது பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தால்…”

(அன்னப்பட்சி உவமையும் நீங்கள் அடிக்கடி கேட்டுப் புளித்த சங்கதி என்பதால் அதனையும் விடுவோம்)

“இப்பொழுது உங்கள் முன் ‘குறளின்பம்’ பற்றிச் சிறப்புரை நிகழ்த்துமாறு அடியேன் பணிக்கப்பட்டிருக்கிறேன். குறளை அறியாதார் – அதன் பெருமையை உணராதார் இந்தக் குவலயத்திலேயே இல்லை எனலாம்…”

(இந்த நேரத்தில் புலவருக்கு மாலை போடப்படுகிறது. அதிகமாக எல்லாரும் செய்வது போல் அவர் மாலையைக் கழற்றி வைக்காமல், அதற்குரிய காரணத்தை விளக்கிப் பேசுகிறார்.)

“அதிகமாக மேடையில் பேசும் அறிஞர்கள் எல்லாரும் தமக்கு மாலை போடப்பட்டதும், அதனை உடனேயே கழற்றி மேசையில் வைத்துவிடுகிறார்கள். இது பெறுமதி வாய்ந்த மாலைக்குக் கொடுக்கும் மரியாதையாகாது. இச் செய்கையானது மாலைக்கு மட்டுமன்றி பொதுவாக விழாக் குழுவினரையும் சிறப்பாக மாலை போட வந்தவரையும் அவமதிப்பதாக முடிகிறது. மாலையைப் போட்டதும் அதனை உடனேயே கழுத்திலிருந்து கழற்றி வைப்பதற்கும் மாலை போட்டவரின் முகத்தில் அடிப்பதற்கும் இடையில் என்னால் எதுவித வேறுபாடும் காணமுடியவில்லை. எனவே எல்லாவற்றிற்கும் முதலில் இந்த வழக்கத்தை நாம் ஒழித் துக்கட்டப் பழகிக் கொள்ளவேண்டும்…”

(எதற்காக அவர் மாலை பற்றி அப்படி விளக்கம் கூறுகிறார் என்பதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அது தன்னைப் படப்பிடிப்பாளர் படம் எடுக்கும் வரையிலாவது தான் ‘மாலையும் கழுத்து’மாக இருக்கவேண்டும் என்பதாகும்!)

“இனிக் குறிப்பிட்ட பொருளுக்கு வருகிறேன். பைபிளுக்கு அடுத்த படியாக அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பெற்ற ஒரே நூல் திருக்குறளே! அப்படி இருக்கும் போது குறளின்பம் குறிந்து உங்கள் முன் பேசுவது ‘கொல்லன் தெருவில் குண்டூசி விற்பது’ போன்றதாகும். அதாவது இதனை ஆங்கிலத்தில் சொல்வதாக இருந்தால் ‘கரீ யிங் கோல் ரூ நியூ காசில்…”

(அவருக்கு ஆங்கிலமும் தெரியும் என்பதைச் சபையினர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதனைச் சிரமப்பட்டு அவர் மனப்பாடம் செய்து வைத்திருந்தார்.)

“குறளின்பத்தை நீங்கள் இன்னும் இன்னும் அதிகமாக நுகர விரும்பினால் அந்த ஆவலைத் தீர்ப்பதற்காகவே குறள் பற்றிய நூற்றுக் கணக்கான நூல்கள் வந்திருக்கின்றன. அவைகளை நீங்கள் விலை கொடுத்து வாங்கிப் படியுங்கள். ‘விலை கொடுத்து’ என்று அதனை நான் அழுத்திச் சொல்லுவதற்கும் காரணம் உண்டு. குறிப்பிட்ட பொருளை விட்டுவிட்டு மீண்டும் விலகிச் செல்வதற்காக அன்பர்கள் தயவு செய்து என்னை மன்னிக்க வேண்டும். திருமுருக கிருவானந்த வாரியார் மீது எனக்குள்ள அளவுக் கதிகமான பற்றும் பாசமுமோ என்னவோ இப்படி ஒரு பழக்கம் எனக்கும் ஏற்பட்டு விட்டது…”

(தனது அறிவு வரட்சியையும் கையாலாகாத் தனத்தையும் மறைக்க பாவம், கிருவானந்தவாரியாரைத் துணைக்கு அழைக்கிறார்.)

“ஒரு சிகரெட் வாங்கி அதனை இரண்டு பேர்கள் புகைப்பதில்லை. ஒரு நுழைவுச் சீட்டைக் கொண்டு இரண்டு பேர்கள் சினிமாவோ நாடகமோ பார்க்க முடியாது. ஆனால் புத்தக விவகாரமோ வேறுவிதமாக இருக்கிறது. ஒரு புத்தகம் வாங்கி அதனை நூறு பேர்களும் படிக்கலாம்; அதற்கு மேலானவர்களும் படிக்கலாம். இப்படி ஒரு படு கேவலமான முறையும் வசதியும் இருப்பதால் தான் புத்தகம் போடுபவனால் உழைக்க முடிவதில்லை. எழுத்தாளர்கள் நித்திய தரித்திரர்களாக வாழவேண்டி இருக்கிறது. ‘புத்தகத்தை விலை கொடுத்துத்தான் வாங்குவது; இரவல் கொடுப்பதில்லை’ என்ற ஒரு நல்ல பழக்கம் நம்மவர்களுக்கு எப்பொழுது ஏற்படுகிறதோ அப்பொழுது தான் எழுத்தாளர்களுக்கு நல்ல காலம் வரும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்…”

(விரைவில் புலவரின் நூல் ஒன்று வெளி வரவிருப்பதாக அறியக் கிடக்கிறது.)

“எனக்குக் கொடுக்கப்பட்ட நேரமும் கடந்து விட்ட டது. உங்களின் மலர்ந்த செந்தாமரை போன்ற முகங்களை எல்லாம் பார்க்கும்போது மணிக்கணக்கில் அல்ல நாட்கணக்கிலும் பேசிக்கொண்டே இருக்கலாம் போல் தோன்றுகிறது…”

(கண்ணாடி அணிந்திருந்த போதிலும் அவரது ‘கண் பார்வைக் குறைவு’ நீங்கவில்லைப் போலும்! இல்லாவிட்டால் தனது பேச்சால் சலித்துப்போய் வாடித் தூங்கும் முகங்களை எல்லாம் செந்தாமரை மலரோடு ஒப்பிடுவாரா?)

“ஆனால் கடமை கழுத்தைப் பிடித்து அழுத்துகிறது . ஆமாம் எனக்கு இன்னொரு கூட்டமும் இருக்கிறது. இறுதியாக உங்கள் முன் பேசுகின்ற இப்பெருவாய்ப்பினைத் தந்துள்ள மன்றத்தினருக்கு எனது மனப்பூர்வமான – இதயந் திறந்த வாழ்த்தையும் வணக்கத்தையும் தெரிவிக்கிறேன். அதன் தன்னிகரில்லாத் தொண்டுகளுக்கும், ஏனைய மன்றங்களுக்கெல்லாம் முன் மாதிரியாகத் திகழும் அதன் ஆற்றல்களுக்கும் நான் தலை வணங்குகின்றேன்…”

(இப்படியெல்லாம் மன்றத்திற்கு ‘ஐஸ்’ வைத்தால் தான் அடுத்த முறையும் தன்னை அங்கு பேச அழைப்பார்கள் என்ற நப்பாசை அவருக்கு!)

– பெண்ணே! நீ பெரியவள்தான்! (நகைச்சுவைக் கட்டுரைகள்), முதற் பதிப்பு: ஆனி 1971, தமயந்தி பதிப்பகம், அச்சுவேலி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *