குருக்கள் ஆத்துப் பையன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: January 4, 2012
பார்வையிட்டோர்: 17,444 
 
 

ஒட்டுத் திண்ணையின் சாய்ப்பில் சாய்ந்து தலைக்கு மேல் இரண்டு கைகளையும் பிடரியில் சேர்த்துக் கொண்டு அம்மாவின் புலம்பலை எல்லாம் கண்ணை மூடியவாறு கேட்டுக் கொண்டிருப்பான் பையன். சில சமயங்களில் பெருமூச்செறிவான். பேசிக்கொண்டே, புலம்பிக் கொண்டே அம்மா தூங்கி விடுவாள். அதன் பிறகு அவனும் பெரிய திண்ணையில் ஏறிப் படுத்துக் கொள்வான்…

அம்மாவை நினைக்கையில் அவனுக்குப் பாவமாக இருக்கும். சில சமயம் தாங்க முடியாத வயிற்றுவலியால் துடிப்பாள். அவன் இரவெல்லாம் கண் விழித்துக் கொண்டு அவளுக்கு வெந்நீர் வைத்து ஒத்தடத்துக்குத் தருவான். அவள், கை பொறுக்காத சூட்டுடன் அந்த வெந்நீர்ச் செம்பை வயிற்றில் வைத்து உருட்டிக் கொண்டே, ‘என்னை அழைச்சிண்டு போயிடுங்கோளேன்..” என்று அப்பாவை நினைத்துக் கொண்டு அழுவாள்.

எப்போதுமா அப்படி? இதே திண்ணையில் உட்கார்ந்து கொண்டு நிலாவில் அவள் சொல்லிய திவ்யமான கதைகள் எத்தனை! எவ்வளவு அழகாக அம்மா பாடுவாள்! தெளிவாக அபிராமி அந்தாதி நூறு பாடலையும் ஒரே மூச்சில் அம்மா பாடுவாளே!

அம்மா தூங்கி விட்டாள் என்று தெரிந்த பிறகு அவன் நிம்மதியாகத் தூங்குவான். அவள் எழுந்திருக்கும் முன் எழுந்து, குளித்து, வெண்கலப் பானையில் சோற்றுடன் ஓடிப் பிள்ளையார் கோயிலைத் திறந்து, அவருக்கு இரண்டு குடம் கிணற்று நீரை அபிஷேகம் செய்து – பக்கத்தில் தாமரைக் குளம் இருக்கிறது – கிணற்று நீர்தான் விசேஷம் என்று அவன் அப்பா சொல்லி இருக்கிறார் – நைவேத்யம் செய்து பூஜை முடித்த பின் வெண்கலப் பானையில் உள்ள பிரசாதத்துடன் வீட்டுக்கு வந்து – அதற்குள் அம்மா ஒருவாறு சமாளித்து எழுந்து நடமாடிக் கொண்டிருப்பாள் – அவள் கையால் தானும் அவளும் அந்தப் பிரசாதத்தைப் பகிர்ந்து கொண்டு … இதுவரைக்கும் இப்படித்தான் நடந்திருக்கிறது. நாளைக்கு?

“அம்மா, நேக்கு ஒரு யோசனை தோண்றதே, நான் பட்டணத்துக்குப் போயி…” – அவள் தூங்கி விட்டாள். இல்லாவிட்டால் இந்நேரம் மறுபடியும் புலம்பத் தொடங்கி இருப்பாள். ‘பட்டணத்துக்குப் போயி? பட்டணம் எப்படி இருக்குமோ? பட்டணத்துக்கெல்லாம் போக வேண்டாம்; மாயவரம், சீர்காழி, சிதம்பரம் … எங்காவது போயி ஏதாவது!’ – அந்த ஏதாவதுக்கு மேல் அவனால் எதையும் தொடர முடியவில்லை. ‘என்னவானாலும் சரி, இனி ஒரு நாள் இந்த அன்னவயலிலே இருக்கப்படாது’ என்ற தீர்மானத்துடன், பிடரியில் கோத்த கைகளின் மேல் அவிழ்ந்து கிடந்த குடுமியை உதறி முடிந்து கொண்டு எழுந்தான். மேல் துண்டால் உடம்பைப் போர்த்திக் கொண்டு நிலா வெளிச்சத்தில் சற்று உலாவினான். ‘கோயில் பக்கம் போய் வரலாமே’ என்று தெருவில் இறங்கி நடந்தான் …

அக்ரஹாரத்திலிருந்து திரும்பியதும் தாமரைக் குளமும், பிள்ளையார் கோயிலும், ஆலமரத்தடியும் தெரிகிறது. அந்த ஆலமரத்தடியில் பகலில் சிறு கும்பல் இருக்கும். சிறுவர்கள் கோலி விளையாடுவதற்காகப் பறித்த குழிகளும், கிழித்த கோடுகளும், நிரந்தரமாய் இருப்பதை, அவன் நடந்து வந்தபோது வெறும் பாதங்களால் உணர்ந்தான். அவன்கூட எப்போதாவது சில பெரியவர்களுடன் அங்கு ‘ஆடு புலி’ விளையாடுவான்.

பிள்ளைமார் தெருவிலிருந்து பெரியவர்களும், லீவுக்கு வந்திருக்கிற வாலிபர்களும், ஆலமரத்தடியில்தான் வந்து பொழுது கழிப்பார்கள். சிலர் ரகசியமாகச் சீட்டு விளையாடுவார்கள். பத்திரிகை படிப்பார்கள். அரசியல், சினிமா பற்றியெல்லாம் அவரவர்க்குத் தெரிந்ததை வைத்துக்கொண்டு மிகுந்த சத்தத்துடன் விவாதிப்பார்கள். அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிற இந்தப் பையனுக்கு அதனால் ஏற்பட்ட ‘கேள்வி ஞானம்’ நிறைய உண்டு. அவர்கள் இவனையும் சில சமயங்களில் வம்புக்கிழுப்பார்கள். இவனது குடுமியையும், ஜாதியையும், பிள்ளையாரையும் கூட அந்தப் பையன்கள் பரிகாசம் செய்வார்கள். எல்லாவற்றுக்கும் எப்போதும்போல் அவன் சிரித்துக் கொண்டே இருப்பான்.

அவனை விசுவநாதன் என்று யாரும் பெயரை நினைப்பதே இல்லை. பன்னிரண்டு வயதில் அந்தப் பிள்ளையார் கோயிலுக்குக் குருக்களாக மாறியிருந்தும் கூட – இப்போது அவனுக்கு இருபத்தைந்து வயதாகியும் – இன்னும் அவனைக் குருக்களாத்துப் பையன் என்றே அந்தக் கிராமம் அழைக்கிறது.

அப்பா இருந்தபோது அவருக்கு ரொம்ப மரியாதை. கோயிலும் அதனைச் சார்ந்து வாழ்கிற வாழ்க்கையும் அர்த்தமுடையது என்று அவர் தன்னளவில் நம்பி இருந்தார். இந்தப் பிள்ளையார் கோயிலுக்கு குருக்கள் பாத்தியதை உடைய குடும்பத்தைச் சேர்ந்தவர் சாமிநாத ஐயர் என்பவர். அப்பாவுக்கு ஒன்றுவிட்ட தம்பி அவர்; அவர் பட்டணத்துக்கு உத்தியோகம் பார்க்கப் போய்விட்டார். ஆனாலும் அந்தப் பாத்தியதைப் பெருமையை விட மனமில்லாமல், கோயில் மானிய வீட்டை அவரே வைத்துக் கொண்டு எப்போதாகிலும் வந்து பூட்டித் திறந்து கொண்டு போகிறார். கிராமத்திற்கு வந்து தங்கியிருக்கிற நாட்களில் கோயிலுக்கு வந்து அதிகாரம் செய்வார். அப்பாதான் எப்போதும் குருக்கள் வேலை பார்த்து வந்தார்.

அப்பா திடீரென ஒருநாள் மத்தியானம் இறந்துவிட்ட போது, இவன் ஆலமரத்தடியில் மாட்டுக்காரப் பையன்களோடு கோலி விளையாடிக் கொண்டிருந்தான். அதன் பிறகு இவன் கோலி விளையாடியதே இல்லை. ‘குருக்களானப்புறம் அதெல்லாம் படாது’ என்று அம்மா சொல்லியிருந்தாள்.

நிராதரவாகிவிட்ட இவனையும், நோயாளித் தாயாரையும் ஆதரிப்பதற்காக ஊர் கூடி இவனைக் குருக்களாக நியமிப்பது என்று தீர்மானம் செய்தார்கள். சாமிநாத ஐயர்தான் அதற்கு முன் நின்றார். நல்ல வேளையாகப் பையனுக்கு ஏற்கனவே பூணூல் போட்டிருந்தார்கள்.

அப்போது உத்திராபதிப் பிள்ளை – இப்போது இருக்கிறானே நாகபூஷணம் இவன் தகப்பனார் – தர்மகர்த்தாவாக இருந்தார். அவர் நல்ல சிவ பக்தர். அவருடைய தகப்பனார் காலத்தில் ஏற்பட்ட பிள்ளையார் கோயிலைப் பரிபாலிப்பதில் பிதுர்க்கடன் செய்த நிறைவை அனுபவித்தார் உத்திராபதிப்பிள்ளை.

அவர்தான் விசுவநாதனைக் கேட்டார். “என்ன ஐயரே, உங்கப்பாரு கூட இருந்து எல்லாம் பாத்திருப்பீரே… ஒழுங்கா செய்வீரா, இல்லையா?” என்று கேட்டபோது அப்பாவை நினைத்துக் கண்கலங்கத் தலையாட்டினான் பையன். அப்போது ஊருக்கு வந்திருந்த சாமிநாத ஐயர் இவனிடம் தமிழில் எழுதிய சில ஸமஸ்கிருத ஸ்லோகப் புத்தகங்களைக் கொடுத்து இரண்டு மூன்று நாட்கள் அதை மனப்பாடம் செய்யச் சொல்லி இவனை ‘வதையாய் வதைத்து’ விட்டுப் போனபின், இவன் குருக்கள் பணியை மேற்கொண்டான்.

வருஷத்துக்கு இவ்வளவு நெல், இவ்வளவு தேங்காய், இவ்வளவு எண்ணெய், இவ்வளவு ரூபாய் என்று ஏதோ ஒரு காலத்து நிலைமைக்கேற்ப எழுதி வைத்தபடி, ஒரு கடமைக்காகக் ‘கடவுள் நம்பிக்கை தனக்கில்லை’ யென்று சொல்லிக் கொண்டே தருகிறான் நாகபூஷணம். சிறு வயதிலிருந்தே ஆலமரத்தடியில் உட்கார்ந்து கொண்டு இவனைக் கேலி செய்து பழகியவன் அவன்.

அவன் பஞ்சாயத்துத் தேர்தலில் நின்று ஜெயித்தபோது அவன் மனைவியும் குழந்தைகளும் பிள்ளையார் கோயிலுக்கு வந்து அபிஷேகம் நடத்தினார்கள். அவன் மனைவி நூற்றியெட்டுத் தேங்காய்களை இந்தக் குருக்கள் பையன் மூலமே உடைக்க வைத்தாள். இவனும் மிக உற்சாகமாகத் தேங்காய்களை உடைத்தான். ‘பிள்ளையாரையே உடைக்க வேண்டும்’ என்கிற நாகபூஷணம் அங்கு வந்து தேங்காய் உடைக்கிற குருக்களைப் பார்த்து பரிகாசம் செய்துதான் தனது பகுத்தறிவுக் கொள்கையைக் காப்பாற்றிக் கொள்ள முடிந்தது. குருக்கள் பையன் இதையெல்லாம் ரசித்துச் சிரிக்காமல் வேறு என்ன செய்வான்? – இப்படி எதையெதையோ நினைத்துக் கொண்டு நிலா வெளிச்சத்தில், ஆலமரத்தடியில் கிடந்த – உடைந்து போய்ப் பாதி மண்ணில் புதையுண்டிருந்த சிவலிங்கத்தின் மீது வந்து உட்கார்ந்தான் குருக்கள் பையன். என்னதான் குருக்களாத்துப் பையனாக இருந்தாலும் ஒருவன் எப்போதும் சிவலிங்கத்தையே நினைத்துக் கொண்டிருக்கவா முடியும்? அந்த சிவலிங்கம் உடைந்து போயிருந்தாலும் ஒரு பக்கம் மண்ணில் சாய்ந்து புதையுண்டிருந்தாலும், ‘அது சிவலிங்கம்’ என்கிற விஷயத்தையே எல்லாரும் மறந்திருந்தார்கள். அதன் மீது உட்காருவது ஓர் அபசாரமாக எவருக்குமே பட்டதில்லை. ஆனால், இவனுக்குப் படும். இவன் அதன்மீது உட்கார்ந்ததே இல்லை. இப்போதுள்ள மனக்குழப்பத்தில் … “அம்மா ரொம்பப் பாவம்… எட்டு வயசிலே கலியாணம் செய்து கொண்டவள். முப்பது வயதிலே ஒரு பிள்ளை பெற்று அதிலேயிருந்து தீராத நோயாளி…” அவளுக்கு என்ன வியாதி என்று யாரும் சொல்ல முடியாது. வயிற்றில் கட்டி என்று வைத்தியர் சொன்னார். ஆப்ரேஷனுக்கோ, ஆஸ்பத்திரிக்கோ அவளைச் சம்மதிக்க வைக்க முடியாது.

இந்த அன்னவயல் கிராமத்தை எட்டு வயதில் வந்து மிதித்தாளாம். அதன் பிறகு இந்த ஊரின் எல்லையை அவள் தாண்டியதேயில்லையாம்; அது இந்த ஜென்மத்தில் கிடையாதாம். அவளது புலம்பலுக்கிடையே இப்படிப் பட்ட வைராக்கிய வாசகங்கள் நிறைய வரும். பையன் அதையும் ரசிப்பான்.

இந்த ஊரைத் தாண்டிப் போய்விடுவது நிச்சயமாக அவளுக்குச் சாத்தியமில்லை. பஸ்ஸைப் பிடிப்பது என்றாலே வண்டி இருப்பவர்கள் ஐந்து மைல் வண்டிப் பாதையிலும், நடந்து போகிறவர்கள் மூன்று மைல் ஒற்றையடிப் பாதையிலும் பயணம் போகவேண்டும். ரயிலடி என்பதோ இருபது மைல்களுக்கு அப்பாலுள்ள ஒரு செய்தி என்றே அவர்களுக்குத் தெரியும். அவள் ரயில் சத்தத்தைக்கூடக் கேட்டதில்லை.

ஒரு காலத்தில் இந்த அக்ரஹாரம் களையோடும், பொலிவோடும் இருந்தது. ஆனால், இப்போது பெரும்பான்மையான வீடுகள் நமது புராதன வாழ்க்கைப் பெருமைகள் போலவே இடிபாடுகளாகிவிட்டன. நிராதரவான சில விதவைக் கிழவிகளும், பிள்ளைகளை யெல்லாம் எங்கோ பறிகொடுத்து விட்டது மாதிரிப் பிரிந்து வாழ்கிற இரண்டு வயதான தம்பதிகளும், பிள்ளை இல்லாத ஒரு குடும்பமும், குருக்களாத்து அம்மாவும், பையனும் … இவ்வளவுதான். குழியில் தேங்கிய வெள்ளத்து நீர் மாதிரி இப்போது அங்கே தங்கியிருந்தார்கள்.

அக்ரஹாரத்தைச் சேர்ந்த இவனுடைய விளையாட்டுத் தோழர்கள் குறைய ஆரம்பித்த பிறகுதான் இவன் மாட்டுக்காரச் சிறுவர்களுடன் கோலி விளையாடத் தொடங்கினான். அந்த அக்ரஹாரத்துப் பையன்களெல்லாம் இப்போது எங்கெங்கோ இருக்கிறார்கள். எப்போதாவது சிலர் நேரிலும் பலர் நினைவிலும் வருகிறார்கள். அவர்களில் யாரும் இவனோடு தோழமை கொண்டாடுவதில்லை. அவனும் அதற்காகவெல்லாம் ஏங்கியதும் இல்லை. இந்த வாழ்க்கை – காலையிலும் மாலையிலும் குளித்து ஜெபம் செய்வதும், பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்து விளக்கேற்றுவதும், தெரிந்த பாடல்களைச் சுதந்திரமாகப் பாடி மலர்களை அர்ச்சிப்பதும், கோயிலுக்கு வந்தவர்களின் முன் கற்பூரத் தட்டை ஏந்தி விபூதி கொடுப்பதும் – ஒரு தொழில் என்று போனவாரம் வரை அவனுக்குத் தோன்றியதே இல்லை.

ஆரம்பத்தில் சாமிநாத ஐயர் கொடுத்த அந்தப் புத்தகங்களைப் படிக்குமாறு அம்மா அவனை நச்சரிப்பாள். அப்போதே ஒருநாள் அவளிடம் அவன் சொல்லி விட்டான்: “அம்மா, நான் அங்கே என்ன சொல்றேன்னு யாருமே கவனிக்கறதில்லை; நேக்குத் தெரிஞ்சதையெல்லாம் நான் எந்தப் பாஷையில் பிள்ளையார்கிட்ட முணுமுணுத்தா யாருக்கு என்ன? நீ பாடிண்டிருக்கியே அதையெல்லாம் கேட்டு நான் பாடறேன்; அதைவிட என்ன மந்திரம் வேணும்? நான் பிள்ளையாரை ஒவ்வொரு தடவையும் மனப்பூர்வமா நமஸ்காரம் பண்றேன். அர்ச்சனைத் தட்டத்தை என் கையிலே தரச்சே என் மனசு நடுங்கறது. தீபாராதனை காட்டறச்சே நான் என்ன பிரார்த்தனை பண்றேன் தெரியுமோ; “விக்னேஸ்வரா, இவாள்ளாம் இந்தக் குழந்தையை குருக்கள்னு நம்பறா; நான் உன்னை நம்பறேன்.
இவா நன்னா இருந்தா நேக்கு ஒரு கொறையும் வராது. எல்லாரும் நன்னா இருக்கணும்… ‘ஸர்வேஜனா, ஸீகினோ பவந்து’ ன்னு நெனச்சுக்கறேன். அதுக்கு மேலே எந்த ஸ்லோகமும் நேக்கு முழுக்க வரலே? உடனே ‘வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்’ சொல்லிடுவேன். போறாதா?”

– எல்லாரிடமும் சாதுவாக இருந்துகொண்டு தன்னிடம் மட்டும் இப்படி விதண்டாவாதம் செய்கிறானே என்று அம்மா நினைத்துக் கொள்வாள்.
இப்போது கொஞ்ச காலமாய் அம்மாவின் கவலை அதிகமாகி விட்டது. பையனுக்குக் கல்யாணம் செய்து வைத்து பார்க்க முடியவில்லையாம். அதைச் சீக்கிரமாகச் செய்து பார்த்துவிட்டுத் தானும் சீக்கிரமாகக் கண்ணை மூடிவிட வேண்டுமாம். ரெண்டுத்துக்கும் நேரம் வரவில்லையாம். இந்தக் குக்கிராமத்தில் குருக்களாக இருக்கிற பையனுக்குப் பெண் கிடைக்க மாட்டேன் என்கிறதாம். இப்போதே இவனுக்கு வயதாகி விட்டதாம்… இப்படிப்பட்ட மன உளைச்சலினால் சில சமயங்களில் ‘இந்த வெண்கலப் பானைச் சாதத்துக்காக என் பிள்ளையின் வாழ்க்கையை நான்தான் பாழ்படுத்திட்டேனா?’ என்று சொல்லி அப்படி நினைத்த அபசாரத்துக்காகக் கன்னத்தில் போட்டுக் கொள்ளுகிறாள் அம்மா.

“அம்மா அம்மா, பகவானை நம்பறவா இப்படியெல்லாம் அஞ்ஞானமா அவஸ்தைப்படலாமோ? இதே கோயில்லே குருக்களாயிருந்த அப்பாவுக்கு நீ வரலியா?”

“ஆமா, நான் வந்து வாழ்ந்தேனே! அவர் என்ன பாவம் பண்ணினாரோ! அவர் பிள்ளைக்கும் அப்படி ஆக வேண்டாம். நேக்கு லட்சுமி மாதிரி ஒருத்தி வருவா, பாரேன்” என்று அந்தக் கற்பனையிலே மகிழ்ந்து போவாள்.

“வரலேன்னாதான் என்னவாம்; பிள்ளையார் ஒரு ஒண்டிக்கட்டை; நானும் ஒரு ஒண்டிக்கட்டை; அவருக்கு அபிஷேகம் பண்ணிண்டு ஆனந்தமா இருப்பேன். வெண்கலப்பானை சாதம்னு அவ்வளவு அலட்சியமா சொல்லிட்டா ஆச்சா? அந்த சாதத்துக்காகத்தான் பட்டணத்திலே ஏகக்கலவரமாம்; பேப்பர்லே கூடப் போட்டிருக்கான்” என்று தன்னைப் பார்த்துச் சிரிக்கிற இந்த உலகத்தையே அம்மாவின் முன்னால் மட்டும் பரிகசித்துச் சிரிப்பான். வெளியே இது மாதிரியெல்லாம் அவன் பேசுவானா என்ன?

‘ஐயோ! இதென்ன, சிவலிங்கத்தின் மீது உட்கார்ந்திருக்கிறோம்’ என்று பதறி எழுந்தான். அதைத் தொட்டு வணங்கிவிட்டு இன்னும் கொஞ்சம் நடந்து ஆலமரத்து நிழலுக்கு வெளியே நிலா வெளிச்சத்திலிருந்த சுமை தாங்கிக் கல்லுக்குப் போய் உட்கார்ந்தான். மேல் துண்டையெடுத்துத் தலைப்பாகையாகக் கட்டினான். ஆலமரத்தையும் தாமரைக் குளத்தையும் பார்த்து ‘அன்னவயல் அழகாய்த்தான் இருக்கிறது’ என்று நினைத்துக் கொண்டான்.

தற்கால வாழ்க்கை சம்பந்தப்பட்ட எல்லாப் பிரச்னைகளையும் ஒரு வேடிக்கையாகவே பார்த்துக் கொண்டு வாழ்ந்திருந்த இந்தக் குருக்களாத்துப் பையனுக்கு இந்த வாழ்க்கைக்கும் ஒரு பிரச்னை உண்டு என்று போனவாரம் தெரிந்தது. சாமிநாத ஐயர் எழுதிய கடிதத்தைக் கையில் வைத்துக் கொண்டு நாகபூஷணம் இவனிடம் ஒருநாள் சொன்னான்:

“உங்க சித்தப்பா ரிடையர் ஆகிட்டாராம்… சம்சாரம் போனத்துக்கப்புறம் பையனோட இருக்கப் பிடிக்கலையாம். கடைசிக் காலத்தில் இங்கே வந்து கோயில் திருப்பணி செய்யறதுன்னு முடிவு பண்ணிட்டாராம். ‘விசுவநாதன்தான் பெரிய பையனா வளர்ந்துட்டானே, இனிமேலாவது வேற ஏதாவது வேலை செய்து தாயாரை காப்பாத்த வேணாமா’ ன்னு அவர் கேக்கறார்… சரிதானே?” என்று நாகபூஷணம் இவனிடம் கேட்டபோது, ‘சரிதான்’ என்று தலையாட்டினான்: “அதுக்கு நான் என்ன செய்யணும்னு சொல்லுங்கோ.”

“உங்க சித்தப்பா வந்த உடனே கோயிலை அவர் கையில் ஒப்படைக்கணும்…”

“ஓ, பேஷா!” என்று சொல்லிவிட்டு வந்தான்.

“நீ என்னடா சொன்னே?” என்று வாசற்படியில் தலைசாய்த்துப் படுத்திருந்த அம்மா, இருட்டில்
எழுந்து உட்கார்ந்து கேட்டாள்.

ஒட்டுத்திண்ணையில் நிலா வெளிச்சத்தில் உட்கார்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்த
விசு சொன்னான்: “சரி, அப்படியே ஆகட்டும்னேன்.”

‘அசடே அசடே’ என்று அம்மா முனகிக் கொண்டாள். “வேறே என்ன செய்யறதா யோசனை? நீ
என்னடா கொழந்தை செய்வே?” என்று இருட்டில் இரண்டு உள்ளங்கைகளையும் ஏந்தியவாறே கேட்டாள் அம்மா. அவன் அவளைத் திரும்பிப் பார்த்தபொழுது இருட்டில் கவிழ்த்து வைத்திருந்த வெண்கலப் பானை பளபளத்தது.

“என்ன செய்யறது? மொதல்லே அதோ இருக்கே அந்த வெண்கலப் பானையையும், இரும்புச் சாவியையும் கொண்டு பொயி அவாகிட்ட குடுத்திட வேண்டியதுதான்.”

“அப்புறம்? நோக்குப் படிப்பும் கிடையாது; விதரணையும் கிடையாது; நோக்கு வேற ஒண்ணும் தெரியாதேடா?”

அவன் சிரித்துக்கொண்டே சொன்னான்: “என்னத்தைத் தெரிஞ்சுண்டு அம்மா நாம இவ்வளவு காலம் வாழ்ந்தோம்? கடவுள் காப்பாத்துவார்” என்று சொல்லிவிட்டு யோசித்தான்: “என்னடா இவன் வேதாந்தம் பேசறானேன்னு நோக்குத் தோண்றதா? இந்தக் காலத்திலே இப்படி வாழ்ந்திண்டிருக்கிற நாமதாம்மா வேதாந்தத்தைப் பேசவாவது முடியும்.”

“நோக்கு என்னடா கொழந்தை. நீ ரெக்கை முளைச்ச பறவை; என் கனத்தையும் கழுத்திலே கட்டிண்டு உன்னலே பறக்க முடியுமோ? என்னை இப்படி ஒரு ஜென்மமா பகவான் இன்னம் வெச்சிண்டிருக்க வேண்டாம். நேக்கு உடம்பு மண்ணாகவும் உசிரு கல்லாகவும் ஆயிடுத்து. பெத்தவளை இப்படி விட்டுடுப் போனா அந்தப் பாவம் உன்னை விடுமோன்னு நீ தவிக்கறே! பொழுது விடியறதுக்குள்ளே நேக்கு உயிர் போயி என்னை இழுத்துப் போட்டுட்டு நீ போகணும்னு நான் தவிக்கறேன். அதுக்கும் ஆகாம அனாதைப் பொணமாப் போயிடுவேனோ?…”

“அப்படியெல்லாம் பேசாதே அம்மா. எங்கே இருந்தாலும் ஆதிசங்கரர் வந்தமாதிரி நான் வந்துட மாட்டேனா?” என்று அவளை உற்சாகப்படுத்துவதற்காகச் சிரித்தான். அவன் வார்த்தை அவளுக்கும் இதமாக இருந்தது… அந்த இதத்தில் சற்று அமைதி அடைந்து நம்பிக்கையுடன் சொன்னாள்: “கொழந்தை! ஒரு காரியம் செய்யறயா? நாகபூஷணம் நல்ல பையன். நீ அவன்ட்ட போயி நல்லதனமா சொல்லு. எங்கம்மா இப்படி இருக்கா… அவளை விட்டுட்டு நான் ஓரெடத்துக்கும் போறத்துக்கில்லே… அது மகா பாவம்… அவ இன்னும் ரொம்ப நாளைக்கு உசிரோடு இருக்க மாட்டா… அவ உடம்பிலே உசிர் இருக்கிறவரையும் நானே கோயிலைப் பார்த்துண்டிருக்கேன்னு கேட்டுக்கோ… அவனையே விட்டு அந்தப் பிராமணனுக்கு ஒரு கடுதாசி எழுதிப் போட்டுடச் சொல்லு…”

விசுவநாதனுக்கு இந்த யோசனை சரியெனப்பட்டது. ஆனாலும், அவளது சாவை ஒரு கெடுவாக வைத்துக் கொண்டு இதை ஒரு வேலையாகக் கேட்பது அவனது மனத்திற்கு மிகுந்த வெட்கத்தைத் தந்தது. ஏதேதோ நினைத்துக் கொண்டு நாகபூஷணத்தின் எதிரே ஒருவாறு போய் நின்றான். நாகபூஷணத்திற்கு இவனைப் பார்த்தாலே ஒரு கேலி உணர்ச்சி வந்துவிடும். இப்போதும் ‘கடவுள் உண்டா இல்லையா?’ என்பது மாதிரி விளையாட்டாக ஏதோ பேச ஆரம்பித்தான்.

“இதோ பாரும். கடவுள் உண்டா, இல்லையான்னெல்லாம் நேக்கு வாதம் பண்ணத் தெரியாது; நேக்கும் எங்கம்மாவுக்கும் சுவாசம் விடற மாதிரி அது ஒரு அவசியம்; உமக்கு எவ்வளவோ ஐசுவரியம் இருக்கு; எவ்வளவோ தொல்லையும் இருக்கு. நேக்கு ஒரு தொல்லையும் கிடையாது… ஐசுவரியம்னாலே ஈஸ்வர அனுக்ரகம்னு பேரு… ஈசுவர என்கிற வார்த்தையிலிருந்துதான் ஐசுவரியம்னு வரது… இதெல்லாம் பெரியவா சொன்னது… நீ கல்லுன்னு நெனைக்கறதை இத்தனை வயசு வரையும் பிள்ளையார்னு நம்பிண்டு புஷ்பம் போட்டுண்டு விச்ராந்தியா நான் இருக்கேன்… நோக்குப் புரியற மாதிரி சொல்றேன். ஒரு வெண்கலப் பானை சோத்தை நம்பிண்டு அந்தப் பிள்ளையாருக்குச் சாட்சியா என் தாயாருக்குச் செய்ய வேண்டிய கடமையை நான் செய்திண்டிருக்கேன்… உங்க தாத்தா காலத்திலே ஆரம்பிச்ச இந்தப் புண்ணியத்திலே – நீர் நம்பினாலும் நம்பலேன்னாலும் – உமக்கும் ஒரு பங்கு உண்டுன்னு அம்மா உம்மகிட்ட சொல்லச் சொன்னா… ‘அன்ன தாதா சுகீபவ’ன்னு பெரியவா சொல்லியிருக்கா… அம்மா உயிர் இருக்கற வரைக்கும் நானே கோயிலைப் பாத்துக்கறதுக்கு நீர்தான் பெரிய மனசு பண்ணனும்…”

“என்னப்பா இது தர்மசங்கடமாப் போச்சு… அப்பவே நீ சொல்லியிருந்தா நான் அவருக்கு எழுதியிருப்பேன் இல்லே? நீ சரின்னதுனாலே நானும் அவரை வரச்சொல்லி எழுதிட்டேனே” என்று யோசித்தான் நாகபூஷணம்.

இன்று காலை சாமிநாத ஐயரே அன்னவயலுக்கு வந்துவிட்டார். வயது காரணமாகவோ, இவ்வளவு நாள் பட்டணத்தில் வாழ்ந்த காரணத்தினாலோ சாமிநாத ஐயர், நாகபூஷணம் தெரிவித்த தகவலைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்.

நாகபூஷணம் கூப்பிட்டனுப்பியதாக குருக்களாத்துக்கு ஆள்வந்து சொன்னான்.

பிள்ளையார் கோயிலுக்கு முன்னால் ஆலமரத்தடியில் ஆட்கள் நாற்காலிகள் கொண்டு வந்து போட, சித்தப்பாவும் நாகபூஷணமும் வந்து உட்கார்ந்தார்கள்.

“நீ என்ன ரொம்ப பெரியவாளா ஆயிட்டதாக நினைப்போ?” என்று பையனை மிரட்டினார் சித்தப்பா.

“சிவசிவா; பெரியவா என்னை மன்னிக்கணும்… அம்மா சொன்னா; அதை அவர்கிட்ட சொல்லிண்டிருந்தேன்” என்று வாய் மீது கைபொத்திச் சொன்னான் பையன். “அம்மா சொன்னா, ஆட்டுக்குட்டி சொன்னா! நோக்கு வயசாகலே? உடம்பை வளைச்சு வேலை செய்யச் சோம்பலா? நான்தான் பார்த்திண்டிருக்கேனே, நீ அர்ச்சனை பண்ற லட்சணத்தை!” என்று அவர் எப்போதும்போல் அவனைக் கண்டித்தார். நாகபூஷணம் அந்தச் சமயத்தில் சிரித்தது அனாவசியம்.

“சித்தப்பா, நீங்க ரொம்பப் பெரியவர்… அதுக்காக நான் ஆண்டவனுக்குச் செய்யறதைக் குறைச்சுச் சொல்றது உங்களுக்கே நன்னாயில்லை… நான் எப்படி அர்ச்சனை பண்றேன்னு அந்த விக்னேஸ்வரருக்குத் தெரியும். நீங்க என்னை இவ்வளவு அவமதிப்பா பேசறதனாலே உங்களுக்கு ஒண்ணு சொல்றேன்… அறுபது வயசுக்கப்புறம்தான் உங்களுக்கு இந்தப் பிள்ளையார் மகிமை தெரிஞ்சிருக்கு… நேக்கு இருபது வயசுக்குள்ளே தெரிஞ்சுடுத்து… அதனால்தான் அவர்கிட்ட நான் அப்படி சொன்னேன்… வேண்டாம்னா போயிடறேன்.” – மேல் துண்டையும் பூணூலையும் சேர்த்து அவன் மார்போடு கைகளை இறுகக் கட்டியிருந்தான்.
சாமிநாத ஐயர் சம்பந்தமில்லாமல் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தார்.

“இவனுக்கோ, இவன் அப்பனுக்கோ கூட இதிலே ஒண்ணும் பாத்தியதை இல்லையாம். இவன் சோம்பேறியாம். துப்புக் கெட்டவனாம். இந்த வேலையைக் கூட இவன் சரியா செய்யறதில்லையாம். இவர் எவ்வளவோ தலைப்பாடா அடிச்சிண்டும் இவன் அர்ச்சனை மந்திரம் கூடச் சரியாய்ச் சொல்றதில்லையாம்…”

‘இவர் ஏன் நாகபூஷணத்தையும் வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் பேசுகிறார்’ என்று குழம்பினான் விசுவநாதன்.

நாகபூஷணம் மிகவும் இளக்காரத்துடன் இவனுக்கு ஆறுதல் சொன்னான்: “உமக்குத் தகுந்த மாதிரி ஏதாவது வேலைப் பார்த்து வைக்கலாம்… எதுக்கு அரையும் குறையுமா இந்த வேலையைக் கட்டிக்கிட்டு அழறீர்? விடும்” என்று சொல்லிச் சிரித்து மறுபடியும் சொன்னான்: “நீர் எப்பவாவது வந்து சூறைத் தேங்காய் ஒடையும்… இத்தனை காலமா மந்திரம் தெரியாமலா நீ அர்ச்சனை பண்றே! மந்திரம் தெரியாம பூசை பண்றதைவிட …” என்று அவன் சொல்ல வந்ததை முடிக்குமுன் ஒரு நம்பிக்கையின் ஆவேசமாய்ச் சீறினான் குருக்கள் பையன்: “நாகபூஷணம் பிள்ளை, நாக்கை அடக்கிப் பேசும்…” அதைச் சொன்ன பிறகு மேலே வார்த்தைகள் வராமல் அவன் உதடுகள் துடித்தன. உடனே தனது கோபத்துக்காக வருந்துகிறவன் மாதிரி குரல் இறங்கிப் பேசினான்: “அவர் என்னைக் கண்டிக்கலாம். நீங்க அப்படியெல்லாம் பேசப்படாது பிள்ளை. உங்க அப்பா ரொம்பப் பெரிய மனுஷர். அவர்தான் எனக்கு இந்தப் பிள்ளையார்கிட்ட கைகாட்டி விட்டார். உம்மையுந்தான் படிக்க வெச்சார்… உமக்குப் படிப்பு ஏறலே… அதுக்காக உம்மை என்ன வேணும்னாலும் செய்யச் சொல்லலாமோ? நமக்கு அது மட்டும் சுத்தமா செய்யத் தெரியுமாக்கும்… அப்படியெல்லாம் எந்தத் தொழிலையும் கேவலமாப் பேசப்படாது பிள்ளை…” என்றெல்லாம் தனது கோபத்தினால் தானே பயந்து நாகபூஷணத்திற்குப் புத்திமதியும் சமாதானமும் கூறினான்.

“நான் தெரியாத்தனமா ஏதாவது செஞ்சிருந்தா பெரியவா மன்னிச்சுக்கணும். இதோ இப்போ எல்லாத்தையும் கொண்டு வந்து ஒப்படைச்சுடறேன்” என்று சித்தப்பாவிடம் உத்தரவு வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போய் வெண்கலப் பானையையும் கோயில் சாவியையும் கொண்டு வந்தான். வீட்டிற்குப் போனபோது, “என்னடா கொழந்தை சொன்னா” என்று அம்மா விசாரித்ததை அவன் காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.

சாவியைச் சித்தப்பாவின் கையிலும், பானையை அவர் அருகிலும் வைத்துவிட்டு, அவரை அவன் நமஸ்காரம் செய்து கொண்ட போதுதான், ‘இந்த அன்னவயலில் இனி ஒரு நாள் இருக்கப்படாது’ என்று மனத்துள் முனகியவாறு எழுந்தான்.

அம்மா இன்று கொஞ்சம் அதிகமாகவே புலம்பினாள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு இத்தனை நாள் தூங்குவது மாதிரி இன்றைக்கு அவனால் தூங்க முடியவில்லை. தூங்கினால் ஒரு நாள் ஆகிவிடுமே.

அவளிடம் சொல்லாமலே போய் விடுவதுதான் உசிதம் என்ற முடிவுடன் சுமைதாங்கியிலிருந்து இறங்கி வீட்டிற்குத் திரும்பினான்.

‘ஆத்திலே அரிசி இருக்கு; அம்மாவுக்கு மட்டும்தானே? ஒரு மாசத்துக்கு தாராளமா வரும்; பக்கத்திலே உதவிக்கு அவளை மாதிரியே மனுஷா இருக்கா. பட்டணத்துக்கெல்லாம் ரொம்ப தூரம் போகாம மாயவரம், சீயாழி எங்கேயாவது போயி ஏதாவது’ என்று அவன் எண்ணம் தேய்ந்தபோது, ‘ஏதாவதென்ன? ஒரு காபி கிளப்பிலே போயி, மாவாட்டிப் பிழைக்கிறது” என்று தெம்புடன் நினைத்துக் கொண்டான்.

வீட்டிற்கு வந்து தூங்கிக் கொண்டிருந்த அம்மாவின் பாதங்களைத் தொடாமல் நமஸ்காரம் செய்து கொண்டபோது, ‘எங்கே இருந்தாலும் ஆதிசங்கரர் மாதிரி வந்துட மாட்டேனா?’ என்று சற்றுமுன் அவளிடம் வேடிக்கை மாதிரி சொன்னதை மனப்பூர்வமாகச் சொல்லிக் கொண்டான். சாமிநாத ஐயர், பிள்ளையாருக்கு நைவேத்தியம் முடித்து வெண்கலப்பானை மீது ஈரத்துணி போட்டு எடுத்துக் கொண்டு வருகையில் அக்ரஹாரத்துக் கிழவியொருத்தி சொன்னாள்: “இந்த குருக்களாத்துப் பையன் எங்கேயோ போயிட்டான் போல இருக்கு… அவன் அம்மா அழறா… பாவமா இருக்கு.” சாமிநாத ஐயருக்கு மனம் சங்கடப்பட்டது. நேற்று அவன் சொன்ன வார்த்தைகள் – “உங்களுக்கு அறுபது வயசில் தெரியற மகிமை எனக்கு இருபது வயசுலே…” என்று சொன்னானே அந்த வார்த்தைகள்… அவருக்கு நன்றாகத் தைத்திருந்தது. அதற்கும் மேலே அந்த நாகபூஷணப் பயல் கொஞ்சம் மரியாதை தவறிப் பேசியபோது அவனை நம்பாத்துப் பையன் சரியாகக் கொடுத்து அடக்கினானே என்று ஒரு பாராட்டுணர்வும் இருந்தது.

விசுவநாதன் வீட்டு வாசற்படியில் வந்து நின்று உள்ளே தலை நீட்டி, “மன்னி மன்னி” என்று அழைத்தார். படுத்துக் கிடந்த அம்மா, முக்காட்டை இழுத்து விட்டுக் கொண்டு, “ஆரது?” என்று எழுந்தாள்.

“நான்தான்” என்று சொல்லிக் கொண்டு அந்த திண்ணையில் உட்கார்ந்தார் ஐயர்.

“இந்தக் கொழந்தை எங்கே போயி நிக்கும்? அவனுக்கு லோகமே தெரியாதே” என்று புலம்பிக்கொண்டே எழுந்து வந்தாள் அம்மா.

“நீங்க ஒண்ணும் கவலைப்படாதேங்கோ… நானும் அவனை அப்படித்தான் நெனைச்சேன். ஆனா அவன் மகா சமர்த்து. அவன் குழந்தையாயிருக்கிறது ஒண்ணும் குத்தமில்லே… வாக்கும் மனமும் சுத்தமா இருக்கே. போறாதோ? நீங்க வேணுமானா பாருங்கோ, அவன் செளக்கியமா சீக்கிரமா வருவான். சித்தமின்ன அவனை நெனைச்சுண்டே நான் பிள்ளையாருக்கு அபிஷேகம் பண்ணினேன். எப்படி அவனை நெனைக்காமலிருக்க முடியும்? பத்து வயசிலேருந்து தன் பிஞ்சு விரலால் அவரைத் தொட்டு அபிஷேகம் பண்ணிண்டிருந்திருக்கானே, அது மாதிரி – என்னென்னவோ செய்துட்டு கடைசிக் காலத்திலே என் பாவத்தைப் பிள்ளையார் தலையிலே கழுவ வந்திருக்கிற – என் கையாலே பண்ற அபிஷேகம் விநாயகருக்கு உகக்குமோ? அந்தக் கையாகுமா என் கை?” என்று அவனைப் புகழ்ந்து பேசிக் கொண்டே பேச்சுவாக்கில், “இந்தாருங்கோ மன்னி, பிரசாதத்தை உள்ளே எடுத்து வைங்கோ!” என்று மறக்காமல் சொன்னார் சாமிநாத ஐயர்.

(எழுதப்பட்ட காலம்: 1973)

நன்றி: சக்கரம் நிற்பதில்லை (சிறுகதைத் தொகுப்பு), ஜெயகாந்தன் – ஐந்தாம் பதிப்பு: ஜீலை,
1995 – மீனாட்சி புத்தக நிலையம், மதுரை – 1.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *