கிச்சாவும் கிட்நாப்பும்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: September 25, 2022
பார்வையிட்டோர்: 9,256 
 
 

(2004ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சென்னை சிவா-விஷ்ணு கோயிலில் இருந்து எச்சுமிப் பாட்டி ப்ளஸ் ஏகப்பட்ட பாட்டிகளோடு காசி, ரிஷிகேஷ், பத்ரிநாத் என்று க்ஷேத்திராடனம் செய்ய பஸ்ஸில் புறப்பட்டபோதே கிச்சாவுக்கு மெட்ராஸ்-ஐ வந்ததற்கு ஆரம்ப அறிகுறி தெரிந்தது. அவனது கண்கள் ஆனந்த பாஷ்பத்தில் ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்க’ ஆரம்பித்தது. கிச்சாவின் க்ஷேத்திராடனம் நேத்திராடனமாக ஆகும் அளவுக்கு, அவனது கண்களில் வந்த மெட்ராஸ்-ஐ, நீ செல்லச் செல்ல காசி-ஐ, ரிஷிகேஷ்-ஐ, பத்ரிநாத்-ஐ என்று பூதாகாரமாக வளர ஆரம்பித்தது. சென்னையில் ஸ்மால் ஐயாக இருந்த கிச்சாவின் மெட்ராஸ் ஐ, தலைநகர் டெல்லியில் ‘காபிடெல்-ஐ’யாக விஸ்வரூபம் எடுத்தது.

‘இவ்வளவு தூரம் வந்ததுதான் வந்தோம்… ஒரு நடை மிலிட்டரி மாதவனைப் பார்த்துவிட்டு (கடைசியாக எச்சுமிப் பாட்டி பார்த்தபோது மி.மாதவனுக்கு மூன்று வயது…) அப்படியே அவன் வீட்டில் தீபாவளியைக் கொண்டாடிவிட்டுப் போகலாம்…’ என்ற எச்சுமிப் பாட்டியின் நப்பாசையால், பாட்டியும் பேரனும் பாதி டூரில் டெல்லியில் கழட்டிக்கொண்டு மற்ற பஸ் பாட்டிகளுக்கு ‘டாட்டா’ சொல்ல… காசிக்குப் போயும் விடாத கிச்சா சனியனின் ரத்த விளாறிக் கண்வலிக்குப் பயந்து போட்ட பாதுகாப்பு கூலிங் கிளாஸுகளைக் கழட்டிக் கடாசிவிட்டு விசிலடிக்காத குறையாக மற்ற கிழங்கள் சந்தோஷத்தில் கும்மாளமிட்டன.

டெல்லி ராணுவத்தில் மேஜராகவோ, மைனராகவோ இருக்கும் மிலிட்டரி மாதவன், கிச்சாவின் நெருங்கிய உறவினரான எச்சுமிப் பாட்டியின் ஒன்றுவிட்ட அக்காவின் ஓடிவிட்ட மகளின் ஒரே ஓரகத்தி பெண்ணின் தத்துப் பிள்ளையின் தம்பி! இவரைப் பாட்டியும் பேரனும் அம்மாம் பெரிய டெல்லியில் அட்ரஸ்கூட இல்லாமல் தேடிக் கொண்டிருந்தார்கள்.

மதராஸ் மார்கழிக் குளிருக்கே தந்தி அடிக்கும் கிச்சா டெல்லி குளிரில் டெலக்ஸ் அடிக்க ஆரம்பித்தான். ஆபத்துக்குப் பாதகமில்லையென்று அஷ்மல்கான் ரோடு ப்ளாட்பாரத்திலேயே அவசர அவசரமாக சூட்கேஸைத் திறந்து, அரதலையாகக் கிழிந்த தனது ஆயிரம் ஜன்னல் ஸ்வெட்டரை முதலில் மாட்டிக் கொண்டு, அதன் மேலே தனது ராவ்பகதூர் தாத்தாவின் மார்பை நெருடும் மெடல் மெடலாகத் தொங்கும் கோட், அதன் மேலே அரைக்கைச் சட்டை, பிறகு கையில்லா பனியன் என்று ரிவர்ஸ் ஆர்டரில் ஒன்றன்மேல் ஒன்றாகப் போட்டுக் கொண்டு, முத்தாய்ப்பாகத் தலைக்கு தாத்தாவின் ஐரிகை வேலைப்பாடுடன் கூடிய சம்புடம் மூடி போன்ற தொப்பியைத் தரித்துக்கொண்ட கிச்சா, பார்ப்பதற்கு கிச்சா மாதிரியே இல்லை. (கூடவே ஒரு கிங் சைஸ் கூலிங் கிளாஸ் வேறு!)

நியூஸ் ரீலில் ஏரோப்ளேனிலிருந்து இறங்கி பிரதமருடன் கைகுலுக்கிவிட்டு – அங்கு காத்திருக்கும் குழந்தைகளோடு சர்வதேச ஒற்றுமைக்காக சுற்றிச் சுற்றி வந்து கும்மியடிக்கும் ஏதோ ஒரு கிழக்காப்பிரிக்க நாட்டு அதிபர் போல காட்சி அளித்தான். இதே கிழக்காப்பிரிக்கக் கோலத்தில் மி.மாதவனைத் தேடி எச்சுமிப் பாட்டியோடு புறப்பட்ட கிச்சா, ‘காணும் பொங்கலாக’ டெல்லியைச் சுற்றிவிட்டுக் கடைசியில் மிலிட்டரி ஐவான்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு அயல்நாட்டுத் தூதரகத்தைத் தரிசித்தான்.

மி. மாதவனைப் பற்றி அங்கு விசாரிக்கச் சென்ற கிச்சா, தான் டி.வி.-யில் கேட்ட ‘பிதாஸ்ரீ, ஆயுஷ்மான்பவ, பரந்து’வையெல்லாம் பரவலாகப் போட்டுக் கலக்கி அரைகுறை ஹிந்தியில் ரெண்டாங்கெட்டான் போல ரகளை செய்ய, முதலில் புரியாமல் பேய்முழி முழித்த அயல்நாட்டுத் தூதரக அதிகாரிகள் பின்பு சுதாரித்துக் கொண்டு கிச்சாவின் தோளில் கரிசனமாகக் கையைப் போட்டு, அழிச்சாட்டியமாக நகர மறுத்த அவனை மென்மையான பலவந்தத்தோடு முகப்பு வரை எக்கித் தள்ளி நைச்சியமாகப் பேசி விடை கொடுத்தார்கள்.

யாரையாவது கடத்திக்கொண்டு போகவேண்டும் (என்ன நேர்த்திக் கடனோ!) என்ற துடிப்புடன் காதுவரை பரவிய களேபரமான மீசையும், பாதத்தில் கிச்சுக்கிச்சு மூட்டும் அளவுக்குத் தரையைத் தொடும் நீண்ட தாடியும் கொண்ட கப்பர்சிங் மற்றும் அவனது இரண்டு சக தீவிரவாதிகளுக்கு அகஸ்மாத்தாக கிச்சா கண்ணில் பட்டது, தீபாவளி பம்பர் லாட்டரி அடித்தது மாதிரி இருந்தது. பைனாகுலர் வழியாகப் பார்த்த கப்பர்சிங், ‘கண்டேன் கிழக்காப்பிரிக்கத் தூதரை’ என்று புல்லரித்துப் போனான்.

கப்பர்சிங்குக்கு இது கன்னி முயற்சியாக இருந்ததால், ‘இன்னாரைத்தான் கிட்நாப் செய்யப் போகிறோம்’ என்ற திட்டம் ஏதும் இல்லாமல் ‘கிடைத்த அதிபரைக் கடத்துவது’ என சகட்டு மேனிக்கு வந்திருந்தான். கைக்கெட்டிய தூரத்தில் கிழக்காப்பிரிக்க தூதர் (கிச்சா…!) கிடைக்க… அந்தச் சந்தோஷத்தில் சுறுசுறுப்பாகித் தன் சகாக்களை அலர்ட் செய்தான்.

தூதரக அலுவலகத்திலிருந்து ஏதோ அணிவகுப்பைப் பார்வையிடுவது போல் கம்பீரமாக நடந்து வந்த கிச்சாவைத் துப்பாக்கியைக் காட்டி காருக்கு அருகில் தள்ளிச் சென்ற கப்பர்சிங் ‘தும் கோன் ஹோ?’ என்று கேட்க, ‘எச்சுமிப் பாட்டி கிச்சா’ என்று கிச்சா ‘கரடி, ரயில், டில்லி வேகத்தில் சொல்ல… கப்பர்சிங் கர்மசிரத்தையாக ‘எச்சுமிப் பாட்டி கிச்சா கிச்சுமி பாட்டி எச்சா…’ என்று அதை பல காம்பினேஷன்களில் மனசுக்குள் சொல்லிப் பார்த்து முடிவில், ‘எப்படிச் சொல்லிப் பார்த்தாலும் இது ஒரு கிழக்காப்பிரிக்க நாட்டுப் பெயர்தான்’ என்ற திருப்தியான முடிவுக்கு வந்தான். அதை ஊர்ஜிதப்படுத்துவதுபோல கிச்சாவும் அவனிடம் ‘மிலிட்டரி மாதவன் ஆபீஸராக இருக்கிறார். ஃபாரினுக்கெல்லாம் அடிக்கடி போயிருக்கிறார். அம்பாஸிடர் கார் டெல்லியில் வைத்திருக்கிறார்’ போன்ற மி.மாதவன் பந்தாவைத் தவணை முறையில் விட்டுவிட்டு ‘மிலிட்டரி… ஆபீஸர்… டெல்லி… ஃபாரின். அம்பாஸிடர்’ என்று சொல்ல கப்பர்சிங் கிச்சாவை டெல்லியில் தங்கும் வெளிநாட்டுத் தூதர் என்று மங்களகரமாக முடிவுகட்டினான்.

கிச்சாவின் பக்கத்தில் நின்று கொண்டிருந்த எண்பது வயது எச்சுமிப் பாட்டியைப் பார்த்து, இந்தக் கிழ ஆப்பிரிக்க அதிபி யார் என்று புரியாத கப்பர்சிங் ‘ஏ கோன் ஹை?’ என்று கேட்க, பதிலுக்கு ‘யாருடா இந்தக் கட்டைல போறவன்?’ என்று கிச்சாவிடம் பாட்டி விசாரிக்க, ‘மி.மாதவன் பேரைச் சொன்னதும் கார் கதவைத் திறந்து ஏறக் கட்டாயப்படுத்தறாங்க பாட்டி… என்ன எழவுன்னே புரியலை…’ என்ற கிச்சாவை வாத்சல்யத்தோடு பார்த்து, ‘எனக்குப் புரிஞ்சுடுத்துடா கண்ணா… மி.மாதவனுக்கு ஆள் படை பலம் ஜாஸ்தி… தன்னோட வேலைக்காரப் பசங்களை (கப்பர்சிங்குக்கு இது புரிந்திருந்தால் பாட்டியைக் குதறியிருப்பான்) விட்டு நம்ம ரெண்டு பேரையும் அழைச்சுண்டு போக மாதவன் கார் அனுப்பிச்சுருக்கான்…’ என்று கூறிவிட்டு உரிமையாக காரில் ஏறப்போனாள் எச்சுமிப் பாட்டி.

அவர்களாகவே காரில் ஏறினால் அது கிட்நாப் ஆகாது என்பதை கடத்தல் பால பாடத்தில் கற்றிருந்தான் கப்பர்சிங். எனவே, பாட்டியையும் பேரனையும் குண்டுக்கட்டாக காருக்கு உள்ளே தள்ளி தனது கோபத்தைக் கதவைச் சாத்துவதில் காண்பித்து கிட்நாப் இலக்கணத்தைப் பூர்த்தி செய்தான்.

கப்பர் சிங் உள்பட தீவிரவாதிகள் மூவரும் வரப்போகும் ஆபத்தை உணராமல் கிச்சாவின் மெட்ராஸ்ஐயோடு சுமார் அரை மணி நேரம் ‘ஓஸ் பாய்’ ஆடினார்கள். அவனுக்கு ஒரு கண்கட்டுப் போட்டுவிட்டு அது டைட்டாக இருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்ள, கப்பர்சிங் தனது விரல்களால் ‘நான்கு, ஏழு, ஒன்பது’ என்று காட்டி கிச்சாவிடம் ‘கித்னா ஹை?’ என்று கேட்க, கிச்சா குருட்டாம்போக்கில் ‘ஃபோர் ஹை… ஸெவன் ஹை… நைன் ஹை…’ என்று சொல்லி அவனைச் சாவடித்தான். எங்கே அவர்கள் தொட்டால் ஆசாரம் கெட்டுவிடுமோ என்பதால், எச்சுமிப் பாட்டி அவர்களுக்கு முன்பாக முந்திக் கொண்டு தான் கொண்டுவந்த மடி கர்சீப்பை தன் கண்களில் சமத்தாகக் கட்டிக் கொண்டாள்.

”எதுக்குப் பாட்டி, இப்படிக் கண்ணைக் கட்டியிருக்கா?’ என்ற கிச்சாவின் சந்தேகத்துக்கு, ‘ என்னதான் மி.மாதவன் நமக்கு உறவுக்காரனா இருந்தாலும். ராணுவ ரகசியங்களையெல்லாம் நாம தெரிஞ்சுக்கறது தப்பில்லையா, அதான்…’ என்று பதில் அளித்து அவனைச் சமாதானப்படுத்தினாள்.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் கிச்சாவும் பாட்டியும் கண்ணைக் கட்டி காட்டில் விட்டதுபோல் இறக்கப்பட்டார்கள்.

தூங்கும்போது கிச்சா முதல் சேனலில் குறட்டையும், இரண்டாவது சேனலில் அரட்டையும் அடிக்கும் சுபாவம் உள்ளவன் என்பது முன்பே தெரிந்திருந்தால், கப்பர்சிங் இந்தப் பாழாய்ப் போன கிட்நாப்பில் ஈடுபட்டிருக்கவே மாட்டான். லைட்டான மத்தியான தூக்கத்துக்கே கர்ண கரேமான குறட்டையோடு காணும் கெட்ட சொப்பனங்களுக்கெல்லாம் உடனுக்குடன் வாய்விட்டு பதில் அளிக்கும் கிச்சா, அன்று அதிகபட்ச அசதியால் காஷ்மீர் பள்ளத்தாக்கில் எதிரொலிக்கும் அளவுக்குக் குறட்டை என்ற பெயரில் கர்ஜித்து, ஐந்து நிமிடத்துக்கு ஒரு தடவை எழுந்து பந்தாவாக சம்மணமிட்டு அமர்ந்து வளவளவென்று ‘மேரா பாட்டி கோன் ஹை கிச்சா நாம் மேரா எச்சுமி ஹை…’ என்று உச்சஸ்தாயியில் பேசி ஒரு ஹிந்தி பிரசார சபாவையே நடத்திக் காட்டினான். ஏற்கெனவே கிச்சாவின் மெட்ராஸ்-ஐ தானத்தால் கண் எரிச்சலில் கஷ்டப்பட்டுக்கொண்டிருந்த கப்பர்சிங், கிச்சாவின் இந்த சொப்பன அவஸ்தைகளால், படுத்திருக்கும் பாயைப் பிறாண்டும் கட்டத்துக்குப் போய்விட்டான். இது போதாதென்று எச்சுமிப் பாட்டி ஜெபமாலையை உருட்டியபடி மகாவிஷ்ணுவே நேரில் பிரசன்னமாகி, ‘பாட்டி போதும் படுத்தாதே…’ என்று சொல்லும்வரை விடிய விடிய ‘நாராயணா நாராயணா’ என்று பேஸ் வாய்ஸில் பிளிறிக் கொண்டிருந்ததால், தூக்கம் வராமல் தவித்த தீவிரவாதி கப்பர்சிங் தேம்பித் தேம்பி அழும் நிலைக்கு ஆளானான்.

மறுநாள் காலை துப்பாக்கிச் சத்தம் கேட்டு வாரிச் சுருட்டிக் கொண்டு எழுந்த கப்பர்சிங்கும் அவனது கூட்டாளிகளும், கிச்சாவையும் பாட்டியையும் தவிர, தங்களுடைய நீளமான துப்பாக்கியும் காணாமல் போனதைக் கண்ட அதிர்ச்சியில் ஒன்றும் புரியாமல் தீவிரமாகத் திருட்டு முழி முழித்தார்கள். ‘டமால் டமால்’ என சீரான இடைவெளியில் வெடிச்சத்தம் வருவதைக் கேட்டு வெளியில் வந்து பார்த்தவர்கள், காட்டுக்குப் போன ராமர் பாணியில் வெகுதூரத்தில் கப்பர்சிங்கின் துப்பாக்கியைக் கையில் வில் போல் வைத்தபடி எச்சுமிப் பாட்டி முன்னே செல்ல, பவ்யமான இலக்குமணன் போல கிச்சா இடுப்பில் டவலோடும் கைகளில் எண்ணெய் பாத்திரம், குளிக்கும் சொம்போடு செல்வதைப் பார்த்தார்கள். கிட்நாப் அமளியில் தனது கைத்தடியைக் காணாமல் போக்கிய எச்சுமிப் பாட்டி, டெம்பரரியாக கப்பர்சிங் துப்பாக்கியை அதன் விசையில் விரல்களால் அழுந்தப் பிடித்து ஊன்றி ஊன்றிச் சென்றதனால் ஒவ்வொரு அடிக்கும் வானத்தை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்தாள். தனது தோட்டாக்கள் மேலும் விரயமாவதைத் தடுப்பதற்காக, நாய் துரத்துவதுபோல அந்தப் பள்ளத்தாக்கில் கப்பர்சிங் அண்ட் கோ ஓடி, பாட்டியையும் பேரனையும் வழிமறித்தார்கள்.

‘மூதேவிகளா! இன்னிக்கு தீபாவளிடா… அதான் எண்ணெய் தேச்சுக் குளிக்கலாம்னு நானும் எம் பேரனும் இங்க வந்தோம். மெட்ராஸ்ல கார்ப்பரேஷன் குழாய்லதான் கங்கா ஸ்நானம் பண்ண முடியும். எங்க அதிர்ஷ்டம் உங்க புண்ணியத்துல இந்தவாட்டி தீபாவளிக்கு கங்கா ஸ்நானத்தை நெஜ கங்கைலயே பண்ணப் போறோம். நீ உக்காருடா கிச்சா…’ என்று எச்சுமிப் பாட்டி சொல்லிவிட்டு சிறு வாய்க்காலாக அந்த காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஓடிய கங்கைக் கரையில் தனக்கு எதிராக அமர்ந்த கிச்சாவின் தலையில் எண்ணெய் வைத்து நலங்குப் பாட்டெல்லாம் பாடியபடி ஆவி பறக்கத் தேய்க்க ஆரம்பித்தாள்.

குளித்துவிட்டு ஈரத்துணிகளோடு சொட்டச் சொட்ட மறைவிடத்துக்கு வந்த கிச்சா, கப்பர்சிங் தடுப்பதற்குள் அவன் அடுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளின் மீது தன்னுடைய ஈரத்துணிகளைக் குறிபார்த்து பிழிந்து, இனிமேல் அவற்றைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு நமுத்துப் போகச் செய்தான். அதற்குள் பின்பக்க அறையில் தான் கிளறிய தீபாவளி லேகியத்தோடு வந்த எச்சுமிப் பாட்டி, ‘நஹி சாஹியே நஹி சாஹியே’ என்று வேண்டாம், வேண்டாம் என்று மறுத்த கப்பர்சிங்கின் கையை கிச்சாவை விட்டு கெட்டியாகப் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டு, கப்பர்சிங் வாயில் கிலோ லேகியத்தைத் திணித்தாள். மெட்ராஸ்-ஐ கண் எரிச்சலால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த கப்பர்சிங்குக்குப் பாட்டியின் தீபாவளி லேகியத்தால் வயிற்றெரிச்சல் வேறு சேர்ந்து கொண்டது.

அடுத்ததாக மெட்ராஸிலிருந்து கொண்டு வந்திருந்த லட்சுமி வெடி, குருவி வெடி, எலெக்ட்ரிக் பட்டாசுகளைக் கிச்சா கொளுத்த ஆரம்பித்தான். திரி கிள்ளிய ஒரு ஒத்தை வெடிக்கு கிச்சா தீ வைத்துவிட்டு வர, சுமார் ஒரு மணி நேரம் ஒன்றுமே ஆகாமல் தீப்பொறியோடு ‘தேமே’ வென்றிருந்த அந்த ஊமைக்குசும்பு ஒத்தை வெடியைக் கப்பர்சிங் உள்பட அனைவரும் காதைப் பொத்தியபடி படு டென்ஷனாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். கிச்சா அங்கு தங்கிய அந்த ஒரு வாரமும் அந்த ஊமைக்குசும்பு ஒத்தை வெடி வெடிக்காமலும் அதே சமயத்தில் திரியில் வைத்த தீப்பொறி அணையாமலும் பாவ்லா காட்டியது. ஒவ்வொரு முறையும் வெளியே செல்லும்போது அந்த ஒத்தை வெடியைப் பயபக்தியோடு ஹுைஜம்ப் செய்து எங்கே வெடித்துவிடுமோ என்ற பயத்தில் தலைதெறிக்க ஓடவேண்டிய நரகவேதனையில் திண்டாடினான் கப்பர்சிங். ஒரு மாதிரி செட்டில் ஆகிவிட்ட கிச்சாவும் எச்சுமிப் பாட்டியும் கொடி கட்டி துணிகளை உலர்த்துவது, வாசலில் சாணி தெளித்துக் கோலம் போடுவது, சுவரில் ஆணி அடிப்பது என்று அந்த ஒரு வாரத்தில் கப்பர்சிங் மறைவிடத்தை ஆல்மோஸ்ட் திருவல்லிக்கேணி ஒண்டுக்குடித்தனமாக்கி தூள் கிளப்பினார்கள்.

இந்த ஒரு வாரத்தில் கிச்சா எச்சுமிப் பாட்டியின் ஆதிக்கத்தால், திடகாத்திரமாக இருந்த தீவிரவாதி கப்பர்சிங், இனி பிக்பாக்கெட்கூட அடிக்க முடியாத அளவுக்குப் பூஞ்சையாகிவிட்டான்.

முதலில் கிச்சா உபயத்தால் கப்பர்சிங்குக்கு இரண்டு கண்களிலும் அம்பாள் குங்குமம் இட்டது போல மெட்ராஸ் ஐ வந்தது. அப்பால் பாட்டியின் தீபாவளி லேகியத்தால் அமீபியாவில் அடைமழை போல வயிற்றுப்போக்கு வந்தது. கிச்சாவின் குறட்டை – அரட்டையால் தூக்கமின்மை காரணமாக மைக்ரேன் தலைவலி வந்தது. பொழுது விடிந்தால் மறைவிடத்தைத் துப்புரவாக வைத்துக் கொள்கிறேன் பேர்வழி என்று கிச்சா ஒட்டடை அடித்துக் கிளப்பிய தூசி தும்பட்டையால் தும்மலுடன் கூடிய சைனஸ்-அலர்ஜி வந்தது. பத்தாத குறைக்கு வாசலில் இருக்கும் ஊமைக்குசும்பு ஒத்தை வெடியைத் தாண்டித் தாண்டிப் போனதில் முழங்கால்களில் ஆர்த்தரைட்டிஸ் பிராப்ளமும், ஒத்தை வெடி வெடிக்குமா, வெடிக்காதா என்ற நித்ய கண்டத்தில் டென்ஷன் – பி.பி.யும், எமோஷனல் அஸிடிடியும் சேர்த்து வந்தன. ஆகமொத்தம் அந்த ஒரு வாரத்தில் இன்டென்ஸிவ் கேர் யூனிட்டில் கொண்டு போட வேண்டிய அளவுக்குத் தீவிரவாதி கப்பர்சிங் தீவிர வியாதியானான்.

இதையெல்லாம்கூடத் தனது இயக்கத்தின் வெற்றிக்காகச் சகித்துக் கொண்ட கப்பர்சிங்கால், ‘கிழக்காப்பிரிக்க அதிபரின் உயிருக்குப் பணயமாக ஐம்பது லட்ச ரூபாயைக் குறிப்பிட்டு தான் எழுதிப்போட்ட மொட்டைக் கடுதாசியை ஒரு வாரம் ஆகியும் இந்திய அரசாங்கம் ஏன் இப்படிக் கண்டுகொள்ளாமல் உதாசீனப்படுத்துகிறது என்பதைத்தான் சுத்தமாக ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. இந்த சஸ்பென்ஸ் தாங்காமல் வாரக் கடைசியில் விஷயம் தெரிந்துகொள்ள டெல்லி போன கப்பர்சிங், ஜன்பத் ஏரியாவின் பிரதான வீதியில் ஒரு திறந்த காரில் கையைக் கூப்பியபடி ஒரிஜினல் கிழக்காப்பிரிக்க அதிபர் போவதைப் பார்த்துத் தீவிரமாக அசடு வழிந்தான்.

முதல் காரியமாக மறைவிடத்துக்கு வந்த கப்பர்சிங், நடந்த ஆள்மாறாட்டத்தைத் தனது சகாக்களிடம் கூனிக்குறுகி வெட்கத்தோடு வெளியிட்டான். அன்றிரவே தூங்கும் எச்சுமிப் பாட்டியையும் கிச்சாவையும் விட்டுவிட்டு நைஸாக அம்பது மைல் தள்ளியிருக்கும் தங்களது அடுத்த மறைவிடத்துக்குத் தாவினார்கள், கப்பர் சிங்கும் கூட்டாளிகளும்.

மறுநாள் காலை. புதிய மறைவிடத்தில் கிச்சாவின் குறட்டை இல்லாததால் நிம்மதியாகத் தூங்கி எழுந்த கப்பர்சிங், பாத்ரூமில் தண்ணி கொட்டும் சத்தம் கேட்டு கோன் ஹை?’ என்று குரல் கொடுக்க… கொல்லைப் புறத்திலிருந்து இடுப்பில் டவலோடு சந்தியாவந்தனம் செய்தபடி வந்த கிச்சா, கப்பர்சிங் முதுகைத் தட்டித் திருப்பி ‘பாத்ரூம் ஹை மேரா எச்சுமிப் பாட்டி ஹை பாணி பாத் ஹை’ என்று கூறி முடிக்க… சரியாக பாத்ரூம் கதவைத் திறந்து வந்த எச்சுமிப் பாட்டி, ‘ஏண்டா கட்டைல போறவனே, இப்படி அம்போன்னு வுட்டுட்டுப் போயிட்டீங்களே, வழி விசாரிச்சுண்டு புது இடத்துக்கு வர்றதுக்குள்ள போறும் போறும்னு ஆயிடுத்து…’ என்று பேசி முடிக்க… கப்பர்சிங் நின்றவாக்கில் மயக்கம் போட்டான்.

– மிஸ்டர் கிச்சா, முதற் பாதிப்பு: 2004, கிழக்கு பதிப்பகம், சென்னை.

கிரேசி மோகன் (16 அக்டோபர் 1952 - 10 சூன் 2019)[3] தமிழ்த் திரையுலகில் கதை-வசன கர்த்தாவாகவும், நடிகராகவும் பணியாற்றியவர். இது தவிர நாடக ஆசிரியராகவும் பணியாற்றியவர். பல மேடை நாடகங்களை இயக்கி நடித்தார்.[4] அடிப்படையில் பொறியாளரான இவர் நடிகர் கமல்ஹாசன் மூலம் திரையுலகில் அறிமுகம் ஆனார். அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதியதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜன், பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *