காடுவெட்டிக் கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: July 13, 2021
பார்வையிட்டோர்: 2,604 
 
 

பாதாளம் விக்கிரமாதித்தனுக்குச் சொன்ன காடுவெட்டிக் கதை

“விக்கிரமாதித்தன் மறுபடியும் முருங்கை மரத்தின் மேல் ஏறி, பாதாளத்தைப் பிடித்துக் கொண்டு வர, அது அவருக்குச் சொன்ன பத்தாவது கதையாவது:

‘கேளுமய்யா, விக்கிரமாதித்தரே! கேளும் சிட்டி, நீரும் கேளும்! ‘காடுவெட்டி, காடுவெட்டி’ என்று ஒரு கள்ளப் பயல் எங்கள் கொல்லிமலைச் சாரலிலே உண்டு. இது ஜனநாயக சோஷலிஸ யுகம் அல்லவா? இந்த யுகத்தில் அவனும் தன் தொழிலை ‘ஜனநாயக சோஷலிஸப் பாணி’யிலேயே செய்து வந்தான். அதாவது, ஜனங்களின் சம்மதத்துடன் இருப்பவர்களிடமிருந்து பிடுங்கி இல்லாதவர்களுக்குக் கொடுப்பதைத்தானே இந்தக் காலத்து அரசியல்வாதிகள் ‘ஜனநாயக சோஷலிஸம்’ என்கிறார்கள்? அதே மாதிரி அவனும் ஜனங்களின் சம்மதத்துடனே இருப்பவர்களிடமிருந்து கொள்ளையடித்து இல்லாதவர்களுக்குக் கொடுத்து வந்தான்! ‘அடித்ததை அவ்வப்போது ஏழைகளுக்குக் கொடுத்து வந்தானா? அல்லது, சில சினிமா நடிகர்களைப் போல அளவுக்கு மீறித் தான் சேர்த்துக் கொண்ட பிறகு, மீதமானதை என்ன செய்வதென்று தெரியாமல் பெயருக்கும் புகழுக்கும் ஆசைப்பட்டுக் கொடுத்து வந்தானா?’ என்று என்னைக் கேட்காதீர்கள்; அது வேறு சங்கதி!

இப்படியாகத்தானே சட்டத்துக்கும் போலீசுக்கும் சவால் விட்டுக்கொண்டு அவன் அந்தக் கொல்லிமலைச் சாரலிலே இருந்து வருங்காலையில், ஆனானப்பட்ட ஆதிசிவனையே அவ்வப்போது ஆட்டிப் படைத்து வந்த விரகதாபம் அவனையும் ஒரு நாள் ஆட்டிப் படைக்க, அதனால் வாட்டமுற்ற அவன் தன் சகாக்களை நோக்கி, ‘இத்தனை சகாக்கள் என்னுடன் இருந்து என்ன பிரயோசனம்? ஒரு பெண் இல்லையே, என் விரகதாபத்தைத் தீர்க்க!’ என ‘ஏங்கு, ஏங்கு’ என ஏங்க, ‘அந்தச் சனியன்கள் மட்டும் இங்கே வேண்டாம், எஜமானே! அவற்றால் எந்த ரகசியத்தையும் காப்பாற்ற முடியாது!’ என அவன் சகாக்களில் ஒருவன் அடித்துச் சொல்வானாயினன்.

‘அதெல்லாம் அந்தக் காலம்; இந்தக் காலத்தில்தான் அரசாங்கத்தார்கூடத் தங்கள் ஒற்றர் படையில் பெண்களைச் சேர்த்துக் கொள்கிறார்களே?’ என்று இன்னொருவன் எடுத்துச் சொல்ல, ‘என்னதான் இருந்தாலும் நாம் அரசாங்கத்தார் ஆக முடியுமா? அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள்; தட்டிக் கேட்க ஆள் கிடையாது!’ என்று மற்றொருவன் அடுத்துச் சொல்ல, ‘ஏன் இல்லை, எதிர்க் கட்சிக்காரர்கள் இல்லையா?’ என்று மற்றும் ஒருவன் தொடுத்துக் கேட்பானாயினன்.

‘அவர்களுடைய வாயை அடக்க ஆளும் கட்சிக்காரர்களுக்கு வழியா இல்லை? எத்தனையோ வழிகள்!’ என கண்ணைச் சிமிட்டிக் கொண்டே சொன்ன காடுவெட்டி, பொங்கிவரும் பெரு நிலவைக் கண்டு ஒருகணம் பெருமூச்சு விட்டு, மறுகணம் ‘பொக்’கென்று சிரிக்க, ‘என்ன எஜமானே, சிரிக்கிறீர்கள்?’ என ஒருவன் அவனை வினாவுவானாயினன்.

‘இத்தனை நாளும் இந்த நிலவைக் கண்டால் எனக்குப் பிடிக்காது; இருட்டைக் கண்டால்தான் பிடிக்கும் என்று உங்களுக்குத் தெரியுமல்லவா? இன்று என்னவோ தெரியவில்லை, எனக்கு நிலவைப் பிடிக்கிறது, ரொம்ப ரொம்பப் பிடிக்கிறது’ என்று தன் தோள்களை ஒரு குலுக்கு குலுக்கி விட்டுக் கொண்டு அவன் சிரிப்பானாயினன்.

‘இது என்னடா வம்பாய்ப் போச்சு, இதற்கு என்ன செய்வதென்று தெரியவில்லையே?’ என அவனுடைய சகாக்கள் அத்தனை பேரும் வானத்தைப் பார்க்க, அதுகாலை ‘ஜல், ஜல் என்ற சதங்கை ஒலி எங்கிருந்தோ வந்து அவர்கள் காதில் விழ, ‘எஜமானே, நாம் கும்பிட்ட தெய்வம் நல்ல தெய்வம். அதோ, ஒரு கூண்டு வண்டி வருவதுபோல் இருக்கிறது. அந்த வண்டியிலே எஜமானுக்கு வேண்டியது ஏதாவது இருந்தால் நாங்கள் அத்தனை பேரும் அப்படியே மறைந்து விடுகிறோம். எஜமான் தாகத்தைத் தீர்த்துக் கொண்டபின் குரல் கொடுக்கட்டும்; வருகிறோம்!’ என அவர்களில் இன்னொருவன் பணிவன்புடன் சொல்ல, ‘சரி, வரட்டும்’ எனக் காடுவெட்டி அந்த வண்டியை எதிர் நோக்கிக் காத்திருப்பானாயினன்.

வண்டி வந்தது; அதில் அவன் எதிர்பார்த்தபடி ஒரு பெண்ணும் இருந்தது. பெண் என்றால் சாதாரணப் பெண் அல்ல; கலியானப் பெண். சர்வலங்காரதாரியாக இருந்த அவளைக் கண்டதும், நல்ல வெய்யிலில் வெள்ளரிப் பிஞ்சைக் கண்டதுபோல் இருந்தது அவனுக்கு; அப்படியே ‘நறுக், நறுக்’கென்று கடித்துத் தின்றுவிடலாமா என்று நினைப்பவன் போல் நாக்கைச் சப்புக் கொட்டிக்கொண்டே அவன் அவளை நெருங்கிய காலையில், அவளுடன் இருந்த மூதாட்டிகளில் சிலர் அவனைக் கண்டதும், ‘ஐயோ, திருடன்! ஐயோ, திருடன்!’ என்று அலற, ‘ஸ், அப்படிச் சொல்லாதீர்கள்; ‘தர்மராசா ‘என்று சொல்லுங்கள்!’ என அவனை அறிந்த ஒரு பெரியவர் ‘அடக்க ஒடுக்கத்துடன் சொல்லிக் கொண்டே வண்டியை விட்டு இறங்கி, ‘ஏழைக் கலியாணம், தர்மராசா! பொழுது விடிந்ததும் முகூர்த்தம்; அதற்குத்தான் இப்போது போய்க்கொண்டிருக்கிறோம். நீங்களும் கடவுளைப்போலக் கண்ணுக்கு மறைவாகவாவது எங்களோடு வந்திருந்து கலியாணத்தை நடத்தி வைக்க வேண்டும்!’ எனக் கைகூப்பி வேண்ட, ‘ஆஹா! அதற்கென்ன, அமர்க்களமாக நடத்தி வைக்கிறேன்!’ என்ற காடுவெட்டி, ‘ஆனால் ஒன்று…’ என்று மேலே ஏதோ சொல்லத் தயங்குவானாயினன்.

‘என்ன?’ என்றார் பெரியவர்; ‘பெண்!’ என்றான் காடுவெட்டி.

‘பெண்ணா?’ என்றார் பெரியவர்: ‘ஆமாம்’ என்றான் காடுவெட்டி.

‘ஆமாம் என்றால்?’ என்றார் பெரியவர்: ‘இறக்கு, பெண்ணை!’ என்றான் காடுவெட்டி.

‘எந்தப் பெண்ணை?’ என்றார் பெரியவர்; ‘கலியாணப் பெண்ணை!’ என்றான் காடுவெட்டி.

“எதற்கு?’ என்றார் பெரியவர்; “சும்மாதான்!’ என்றான் காடுவெட்டி.

‘சும்மாதான் என்றால்?’ என்றார் பெரியவர்; ‘அதெல்லாம் உமக்குச் சொல்லாமலே தெரிந்திருக்க வேண்டும்!’ என்ற காடுவெட்டி, அதற்குமேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அந்தப் பெண்ணை அப்படியே தூக்கிக்கொண்டு நடக்க, ‘ஐயையோ! இது அநியாயம், அக்கிரமம்! உம்மைப் போன்ற பெரிய மனுஷனுக்கு இது அழகல்ல!’ எனப் பெரியவர் அவனையும் ‘பெரிய மனிதர்களின் பட்டிய’லில் சேர்த்துக் கூற, ‘பெரிய மனுஷனென்றால் அவன் இப்படி யெல்லாம் செய்ய மாட்டான் என்று உமக்கு யார் ஐயா, சொன்னது? சின்ன மனுஷன் பகிரங்கமாகச் செய்தால், பெரிய மனுஷன் ரகசியமாகச் செய்வான்; அவ்வளவுதான்! இதுதான் இரண்டு மனுஷன்களுக்கும் உள்ள வித்தியாசமே தவிர, மற்றபடி எல்லாம் ஒரே மனுஷன்தான்! நீராக ஏதாவது நினைத்துக் கொண்டு அவஸ்தைப்பட்டால் அதற்கு நானா பொறுப்பு? கொஞ்சம் பொறும்; இதோ, உம்முடைய பெண்ணை உம்மிடமே கொண்டு வந்து விட்டுவிடுகிறேன்!’ என அவன் மேலே நடக்க, ‘அடப் பாவி, அவள் மேல் இருக்கும் நகைகளை வேண்டுமானால் கழற்றிக் கொண்டு அவளை மட்டும் விட்டு விடு!’ எனப் பெரியவர் அவனைக் ‘கெஞ்சு, கெஞ்சு’ என்று கெஞ்ச, ‘எனக்கு இப்போது வேண்டியது பொன் அல்ல; பெண் பெரியவரே, பெண்!’ என அந்தத் ‘தர்மராசா’வாகப்பட்டவன் தனக்கென்று இருந்த அந்தப்புரத்துக்கு அவளைக் கொண்டு செல்வானாயினன்.

இந்த விதமாகத்தானே தன் அந்தப்புரத்துக்கு வந்த காடுவெட்டி, கலியாணப் பெண்ணை இறக்கிக் கீழே விட்டு விட்டு, ‘பெண்ணே, உன் பெயர் என்ன?’ என்று கேட்க, ‘கண்மணி!’ என்று அவள் தன் கண் இமைகள் படபடக்கச் சொல்ல, அந்த அழகிலே சொக்கிப்போன அவன், ‘ஆஹா, இன்றுபோல் என்றும் உன்னுடன் இருக்க என் தொழிலைக் கூட நான் விட்டுவிடலாம் போல் இருக்கிறதே!’ என்று அவளை அப்படியே சேர்த்து அணைக்கப் போக, ‘நில்லுங்கள்!’ என்று அவள் அவனைத் தடுப்பாளாயினள்.

‘நின்றேன்!’ என்றான் காடுவெட்டி; ‘கேளுங்கள்!’ என்றாள் கண்மணி.

‘கேட்டேன்!’ என்றான் காடுவெட்டி; ‘சொன்னேன்’ என்றாள் கண்மணி.

என்ன சொன்னாள்? ‘எதற்கும் ஒரு முறை உண்டு அல்லவா?’ என்று சொன்னாள்.

‘உண்டு!’ என்றான் அவன்.

‘திருடுவதாயிருந்தால்கூட சமய சந்தர்ப்பம் பார்த்துத்தான் திருட வேண்டும், இல்லையா?’

‘ஆமாம்!’

‘ஒரு பெண்ணின் கன்னித் தன்மை கழிவதற்கு முன்னால் அவள் தன் கற்பை இழக்கக் கூடாதல்லவா?’

‘இழக்கக் கூடாது!’

‘கலியாணமாகாமல் ஒரு பெண்ணின் கன்னித் தன்மை கழியாதல்லவா?’

‘கழியாது!’

‘அப்படியானால் இன்று என்னைப் போகவிடுங்கள்; நாளைக் காலை நான் கலியாணத்தைச் செய்து கொண்டு என் கன்னித் தன்மையையும் கழித்துக் கொண்டு மாலை இங்கே வருகிறேன்!’ எனக் கண்மணியாகப்பட்டவள் சொல்ல, ‘நிச்சயம் வருவாயா?’ எனக் காடுவெட்டியாகப்பட்டவன் கேட்க, ‘நிச்சயம் வருவேன்!’ என அவளாகப்பட்டவள் சொல்ல, ‘சத்தியமாக வருவாயா?’ என அவனாகப்பட்டவன் பின்னும் கேட்க, ‘சத்தியமாக வருவேன்!’ என அவளாகப்பட்டவள் பின்னும் சொல்ல, ‘சரி, இன்று போய் நாளை வா!’ என ஸ்ரீ ராமபிரானாகப்பட்டவர், ராவணனாகப்பட்டவனுக்குப் போர்க்களத்தில் சொல்லி அனுப்பியது போல் காடுவெட்டியாகப்பட்டவன் கண்மணியாகப் பட்டவளுக்குச் சொல்லியனுப்புவானாயினன்.

இப்படியாகத்தானே கண்மணியாகப்பட்டவள் அந்தக் கள்ளனிடமிருந்து விடுபட்டு வர, மூக்கைச் சிந்திக் கொண்டிருந்த மூதாட்டிகளும், தலையில் கையை வைத்துக் கொண்டிருந்த பெரியவரும் அவளைக் கண்டதும் ‘விருட்’ டென்று எழுந்து நின்று அவளை மேலுங் கீழுமாகப் பார்க்க, ‘சந்தேகப்படாதீர்கள்; போனது போனபடியேதான் திரும்பி வந்திருக்கிறேன்!’ என்று அவள் சிரித்துக்கொண்டே சொல்ல, ‘எனக்குத் தெரியுமே, அந்தத் தர்மராசா எந்தத் தப்புத் தண்டாவுக்கும் போகமாட்டாரே! என்று பெரியவர் மறுபடியும் எல்லோரையும் வண்டியில் ஏற்றிக்கொண்டு கிளம்ப, ‘அப்படிப்பட்ட தர்மராசா இந்தக் கொல்லிமலைக் காட்டிலே வந்து ஒளிந்துகொண்டு ஏன் கொள்ளையடிக்க வேண்டுமாம்?’ என்று மூதாட்டிகளில் ஒருத்தி கேட்க, ‘தெரியாமல்தான்!’ என்று பெரியவர் சொல்ல, ‘என்ன தெரியாமல்தான்?’ என்று மூதாட்டி ஒன்றும் புரியாமல் கேட்க, ‘சட்டரீதியாகக் கொள்ளையடிக்கச் சிலருக்குத் தெரிகிறது; அவர்கள் நாட்டிலே இருந்துகொண்டு தங்கள் தொழிலை நாகரிகமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அது தெரியாதவர்கள் காட்டிலே இருந்துகொண்டு தங்கள் தொழிலைக் காட்டுமிராண்டித்தனமாக நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுவே வித்தியாசம்!’ என்று பெரியவர் அவளுக்குப் புரிய வைப்பாராயினர்.

இந்த விதமாகத்தானே வழி நெடுகக் காடுவெட்டியின் அருமை பெருமைகளைப் பற்றிப் பேசிக்கொண்டே சென்ற அவர்கள் அனைவரும் ஊர்க் கோயிலை அடைய, அவர்களுக்காக அங்கே வந்து காத்திருந்த பிள்ளை வீட்டார் அகமும் முகமும் ஒருங்கே மலர அவர்களை வரவேற்று அழைத்துக் கொண்டு போய், அவர்களுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுப்பாராயினர்.

மறுநாள் காலை கொட்டுமேளம் முழங்க, கலியாணம் ‘ஜாம், ஜாம்’ என நடந்து முடிய, பந்தி போஜனம் முடிந்து, தாம்பூலம் தரித்துக் கொண்டதும், பெண் வீட்டார் பிள்ளையை அழைத்துக்கொண்டு தங்கள் ஊருக்குக் கிளம்ப, ‘இந்தத் தடவை அந்தக் கொல்லிமலைக் காட்டு வழியே போக வேண்டாம்; கொஞ்சம் சுற்று வழியாயிருந்தாலும் வேறு வழி பார்த்துக் கொண்டு போங்கள்!’ என மூதாட்டிகளில் ஒருத்தி சொல்ல, ‘வேண்டாம்; வந்த வழியே போங்கள்!’ எனக் கண்மணி சொல்வாளாயினள்.

‘ஏன்?’ என்று கேட்டாள் மூதாட்டி; ‘பொறுத்துப் பாருங்கள்!’ என்றாள் கண்மணி.

‘சரி!’ என்று பெரியவர் வந்த வழியே வண்டியை ஓட்ட, கொல்லிமலைக் காட்டை அடைந்ததும் கண்மணி வண்டியை விட்டுக் கீழே இறங்கிச் சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டே எதையோ எடுத்துத் தன் இடுப்பில் செருகிக் கொள்வாளாயினள்.

‘என்ன அது?’ என்று கேட்டார் பெரியவர்; ‘கத்தி!’ என்றாள் கண்மணி.

‘எதற்கு?’ என்று கேட்டார் பெரியவர்; ‘தற்காப்புக்கு!’ என்றாள் கண்மணி.

‘சரி, போய் வா!’ என்றார் பெரியவர்; ‘போய் வருகிறேன்!’ என்றாள் கண்மணி.

இப்படியாகத்தானே தன்னைத் தேடி வந்த கண்மணியைக் கண்டதும் காடுவெட்டி திகைத்துப்போய் நிற்க, இம்முறை அவன் கை தன்மேல் பட்டால் தன்னைத் தானே குத்திக்கொண்டு சாவது என்ற தீர்மானத்துடன் அவள் தன்னுடைய இடையில் செருகியிருந்த கத்திப் பிடியின்மேல் ஒரு கை வைத்து நிற்க, ‘இன்றுதான் சத்திய தேவதையை நான் கண்ணாரக் கண்டேன், தாயே!’ என்று அவன் அவளுடைய காலடியில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து எழுந்து, ‘என் சபலம் ஒழிந்தது; சஞ்சலம் தீர்ந்தது!’ என்று கன்னத்தில் வேறு போட்டுக்கொண்டு, ‘போய் வா தாயே, போய் வா! ‘உண்மை வெல்லும்’ என்று நீ என்னைக் கொண்டே எனக்கு உணர்த்திவிட்டாய்! இப்போது எனக்கு உண்மையிலும் நம்பிக்கை வந்துவிட்டது; உழைப்பிலும் நம்பிக்கை வந்துவிட்டது. இனி நான் கொள்ளையடித்துப் பிழைக்க மாட்டேன். என் பெயருக்குத் தகுந்தாற்போல் காடுவெட்டியாவது பிழைத்து வாழ்வேன்; எனக்கென்று ஒரு கன்னிப் பெண்ணையும் தேடி மணப்பேன்! போய் வா தாயே, போய் வா!’ என்று அவளைத் தன் மனம் மொழி மெய்களால் வணங்கி வழி கூட்டி அனுப்ப, அந்தக் காட்சியை அருகிலிருந்த ஒரு புதரின் மறைவில் நின்று பார்த்துக் கொண்டிருந்த அவளைச் சேர்ந்தவர்கள் ஆச்சரியத்தில் மூழ்க, ‘எனக்குத் தெரியுமே, என்ன இருந்தாலும் அவன் தருமராசாவாச்சே!’ என்று பெரியவர் தம் கண்ணில் துளிர்த்த நீரைத் துடைத்துக்கொண்டே அவர்களை அழைத்துக் கொண்டு தம்முடைய ஊருக்குச் செல்வாராயினர்.

பாதாளம் இந்தக் கதையைச் சொல்லி முடித்துவிட்டு, ‘மனிதன் எப்போது குற்றம் செய்கிறான்!’ என்று விக்கிரமாதித்தரைக் கேட்க, ‘ஏமாறும்போதும், ஏமாற்றப்படும் போதும்தான் அவன் குற்றம் செய்கிறான்!’ என்று விக்கிரமாதித்தர் சொல்ல, பாதாளம் அவரிடமிருந்து தப்பி, மீண்டும் போய் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு விட்டது காண்க… காண்க… காண்க….

– மிஸ்டர் விக்கிரமாதித்தன் கதைகள், முதற் பதிப்பு: 2000, அருந்ததி நிலையம், சென்னை.

விந்தன் என்று அறியப்படும் கோவிந்தன் (செப்டம்பர் 22, 1916 - ஜூன் 30, 1975) புதின எழுத்தாளரும், இதழாசிரியரும் ஆவார். கோவிந்தன் காஞ்சிபுரம் மாவட்டம் நாவலூரில் வேதாசலம், ஜானகி ஆகியோருக்குப் பிறந்தார். சென்னை சூளைப் பகுதியில் கோவிந்தன் ஆரம்பக் கல்வி கற்றார். சிறு வயதிலேயே தந்தையோடு கருமான் (ஆசாரி) வேலை செய்து வந்தார். இரவுப் பள்ளியில் சேர்ந்து மீண்டும் கல்வியைத் தொடர்ந்தார். தொடர்ந்து படிக்க இயலவில்லை. ஓவியக் கல்லூரியில் சேர்ந்து…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *