கல்லடி வேலன் நகைச்சுவைக் கதைகள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 2, 2021
பார்வையிட்டோர்: 5,910 
 

1

ஒரு சமயம் ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை செல்வந் தரான தமது நண்பர் ஒருவரைச் சந்திக்கச் சென்றார். புலவர் சென்ற போது அந்த நண்பர் வீட்டினுள் இருந்து உணவு உண்டு கொண்டிருந்தார். ஆதலினால் அந்த நண்பரின் மனைவி தான் புலவரின் கண்ணில்பட்டார்.

அந்த அம்மையாருக்கு வந்தவர் தான் கல்லடி வேலுப் பிள்ளை என்று தெரியாதிருந்தது. மிக எளிய கோலத்தில் காட்சி தந்த புலவரை அந்த அம்மையார் தரக் குறைவாக மதிப்பீடு செய்து விட்டார்.

வீட்டினுள்ளே போன அந்த அம்மையார் ஒரு சட்டியில் கஞ்சியைக் கொண்டு வந்து புலவரின் கையில் கொடுத்து விட்டு விரைந்து விட்டார்.

புலவருக்கு ஒரே ஆத்திரம். “அடடா இந்தப் பெண்மணி என்னைப் பிச்சை எடுக்க வந்த அன்னக்காவடி என்று கருதி விட்டாளே!”

உள்ளே உணவு உண்டுவிட்டு புலவரின் நண்பர் வெளியே வந்தார். வந்தவர் திடுக்கிட்டவராக “அடடா கல்லடி வேலுப்பிள்ளையா? நீர் வந்ததாக எனக்குத் தெரியாதே! ஓ இதென்ன கையிலே கஞ்சிச் சட்டி? இதில் என்ன செய்து கொண்டிக்கிறீர்!”

புலவர் சட்டென்று சொன்னார்:

“உமது மனைவி தந்த கஞ்சிச் சட்டியிலே சோறு ஏதாவது அகப்படுமா என்று சுழியோடிக் கொண்டிருக்கிறேன்”

புலவரின் குத்தல் பாஷையைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த அந்த நண்பர், தன் மனைவியை அழைத்து “இவர் தான் பிரபல கல்விமான் கல்லடி வேலுப்பிள்ளை” என்று அறிமுகம் செய்து வைத்தார். அந்த அம்மையார் நடந்த தவறுக்குப் புலவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்

2

அந்தக் காலத்தில் யாழ்ப்பாணம் முற்ற வெளியிலே சிறுநீர் கழிக்கக் கூடாது என்று ஒரு சட்டம் அமுலில் இருந்து வந்ததாம்.

விஷமம் செய்வதில் பேர் பெற்ற கல்லடியார் முற்ற வெளியிலே சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். திடீரென அப்பக்கமாக வந்த பொலிஸ்காரர் ஒருவர் புலவரைக் கண்டுவிட்டார். அவ்வளவு தான். ஆத்திரத்தின் அவதாரமாக மாறிய அவர் புலவரைப் பார்த்து “உமக்குத் தகுந்த பாடம் படிப்பிக்கின்றேன்” என்று கூறியபடியே சக பொலிசாரை அழைக்க அப்பால் ஓடினார்.

புலவரின் மூளை வேலை செய்தது. சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த புலவர் திடீரென எழுந்து தான் சிறு நீர் கழித்துக் கொண்டிருந்த இடத்திலிருந்து சற்றுத் தள்ளி இன்னுமொரு இடத்தில் மீதிச் சிறுநீரைக் கழித்து விட்டு அப்பாவி போல் ஒதுங்கி நின்று கொண்டார். குறிப்பிட்ட பொலிஸ்காரர் வேறு சில பொலிசாருடனும், ஒரு பொலிஸ் இன்ஸ்பெக்டருடனும் புலவர் நின்ற இடத்திற்கு வந்து சேர்ந்தார்.

“சேர்! இந்த மனிதர் தான் இவ்விடத்தில் சிறுநீர் கழித்தவர்”. அந்தப் பொலிஸ்காரர் புலவரைக் குறித்துக் குற்றஞ் சாட்டினார்.

அங்கு நின்ற அந்தப் பொலிஸ் இன்ஸ்பெக்டர் புலவரைக் கடுங்கோபத்தோடு பார்த்து “உமக்குச் சட்டம் தெரியாது போலிருக்கிறதே?” என்று கூறினார்.

புலவர் லேசாகச் சிரித்துவிட்டுச் சொன்னார்: “இன்ஸ்பெக்டர் அவர்களே! உங்களைக் கூட்டி வந்த இந்தப் பொலிஸ்காரர் வேண்டுமென்றே என்மீது பழி போடுகிறார். அவர் தான் முதன்முதல் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து விட்டுத் தான் நானும் சிறு நீர் கழித்தேன்” என்று சொன்னார். அத்தோடு நிற்காது தான் முதன் முதல் சிறுநீர் கழித்த இடத்தை இன்ஸ்பெக்டருக்குக் காட்டி இது பொலிஸ்காரர் சிறுநீர் கழித்த இடம் என்றார். பின்பு தான் மீதிச் சிறுநீர் கழித்த இடத்தைக் காட்டி இது தான் நான் சிறுநீர் கழித்த இடம் என்று சொன்னார்.

புலவர் சொல்வது பொய்தான் என்று தெரிந்த போதும் பொலிஸ் இன்ஸ்பெக்டரும், பொலிஸ்காரரும் புலவரின் மதி நுட்பத்தை வியந்து சென்றார்கள்.

3

அதிமுக்கிய வழக்கொன்றிலே புலவர் ஒரு சாட்சியாக விசாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தார். சட்டவாதி புலவ ரைப் பார்த்துக் கேட்ட கேள்விகளுக்குப் புலவர் சமத்காரமாகவும், நகைச்சுவையாகவும் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். புலவரின் பதில்கள் வழக்கைப் பார்க்க வந்தி ருந்தோரை விழுந்து விழுந்து சிரிக்கப்பண்ணிக் கொண்டிருந்தது.

நீதவான் ஒரு ஆங்கிலேயர். அவர் புலவரைப் பார்த்து ஆத்திரத்தோடு, ‘இங்கென்ன நடக்கிறது? நீர் பதில் சொல்லச் சொல்ல ஏன் சனங்கள் சிரிக்கிறார்கள்” என் றார்.

”ஐயா நீதிபதி அவர்களே! சிரிப்பது சனங்கள் அல் லவா? ஆன படியால் ‘நீங்கள் ஏன் சிரிக்கிறீர்கள்” என்று அவர்களை அல்லவா நீங்கள் கேட்க வேண்டும். என்னைக் கேட்டால் நான் என்ன செய்வது?” என்றார் புலவர்.

கல்லடியாரின் பதில் கேட்டுச் சனங்கள் கட்டுக்கடங் காமல் சிரிக்கத் தொடங்கி விட்டார்கள். நீதவானுக்குப் பெரிய அவமானமாகப் போய்விட்டது. ”உமக்கு அவ்வ ளவு திமிரா?” என்று கூறிய அவர் ‘நீதிமன்றத்தைப் புலவர் அவமதித்துவிட்டார்” என்ற கூற்றச்சாட்டை சுமத்தி ஒரு வழக்கைத் தாக்கல் செய்து விட்டார். விளைவு – அஞ்சா நெஞ்சோடு – நாமார்க்கும் குடியல் லோம் என்ற வீறோடு திகழ்ந்த புலவர்க்கு பல மாதச் சிறைத்தண்டனை கிடைத்தது.

புலவர் புன்னகையோடு ஏற்றுக் கொண்டார்.

4

புலவர் இளைஞராக இருந்த காலத்திலே நாடகங்கள், கூத்துக்கள் நடைபெறும் கொட்டகைகளிலே கதிரைக்கு இரண்டு ரூபா, கதிரைக்கு ஒரு ரூபா என்ற ரீதியிலேயே அறிவிப்புகள் செய்வது வழக்கம்.

புலவர் ஒரு சமயம் நாடகம் ஒன்றைப் பார்ப்பதற்குப் போனவர், நாடகம் முடிந்த கையோடு இருந்த கதி ரையையும் தூக்கிக் கொண்டு வீடு செல்ல ஆயத்தமானார்.

“ஓய் புலவரே எங்கே காணும் கதிரையோடு போகிறீர்?” – கொட்டகை நிர்வாகிகள் பதறித் துடித்தார்கள்.

“என்ன காணும் மடக்கதை பேசுகிறீர்? கதிரை இரண்டு ரூபா என்பது தானே உங்கள் அறிவிப்பு? அதன் படி நாடகம் பார்த்து விட்டு நான் கதிரையோடு புறப்படுகிறேன்.”

விரைந்து சென்றுவிட்ட புலவரைப் பார்த்து அசடு வழிய நின்ற கொட்டகை நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சிக்குப் பின்பு தான் இந்த இந்த இடத்தில் இருந்து பார்ப்பதற்கு இந்த இந்த மாதிரிக் கட்டணம் என்று விளக்கமாக அறிவிப்புச் செய்யத் தலைப்பட்டார்கள்.

5

குறிப்பிட்ட வழக்கொன்றிலே அந்நாளில் பிரபலமான சட்டவாதி ஒருவர் அவ்வழக்கின் சாட்சியான புலவரை உருட்டி, மிரட்ட முயற்சி செய்து கொண்டிருந்தார். “புலவரே! குறிப்பிட்ட இடத்திற்கு நீர் எப்படி போனீர்?”

புலவர் அலட்சியமாகச் சொன்னார்: “நான் நொண்டி போல் நொண்டிச் செல்லாது நேரான கால் கொண்டு வீறாக நடந்து சென்றேன்.

புலவரின் பதில் கேட்டு ஒரு கால் ஊனமுடைய அந்தச் சட்டவாதி ஆணவம் அடங்கி அமைதியானார்.

6

புத்தூரில் அந்தக் காலத்திலே மிகுந்த செல்வந்தர் ஒருவர் இருந்தார் அவரைக் காணும் நோக்குடன் புலவர் அவரின் வீட்டுக்குப் போனார்.

புலவர் போனது மத்தியான வேளை.

அவர் குறிப்பிட்ட செல்வந்தரின் பார்வையில் படும் படியாக பெளியிலே கதிரையில் உட்கார்ந்து கொண்டார்.

புலவர் வந்திருந்ததை குறிப்பிட்ட புத்தூர் வாசி அறிந்திருந்த போதும் அதை ஒரு பொருட்டாகக் கருதாதவராக தன்பாட்டில் அமர்ந்து மத்தியான போசனத்தை ஒரு பிடிபிடித்துக் கொண்டிருந்தார்.

நேரம் விரைந்து கொண்டிருந்தது. புலவர்க்குச் சலிப்பு ஏற்பட்டு விட்டது. “சீ இவனும் ஒரு மனிதனா மரியாதை தெரியாத பயல்?” என்று சொல்லிக் கொண்ட அவர் நெஞ்சில் வல்ல தமிழ் நல்ல கவி வந்து பிறந்தது. அக்கவிதை வருமாறு:

எத்தூர்க்குப் போனாலும் என்ன தொழில் செய்தாலும் புத்தூர்க்குப் போகப் புறப்படாதே – புத்தூரான் பார்த்திருக்கத் தின்பான் பசித்தோர் முகம்பாரான். கோத்திரத்திற் குள்ள குணம்.

7

முக்கியமான வழக்கொன்றின் விசாரணை நடைபெற் றுக் கொண்டிருந்தது. நீதிமன்றத்திலே அலை அலையாக மக்கள் கூட்டம். குறிப்பிட்ட அந்த வழக்கிலே கல்லடியாரும் ஒரு முக்கிய சாட்சி.

சாட்சியை நீதிபதி கேட்கிறார்:

“நீர் குறிப்பிட்ட இடத்திற்குப் போன போது அந்த நபர் எந்த மாதிரியாக இருந்தார்?”

“ஐயா நீதிபதி அவர்களே! நான் குறிப்பிட்ட இடத்திலே அந்த நபரைக் கண்ட போது அவர் கண்ட கோடாலியோடு உறங்கிக் கொண்டிருந்தார்”.

நீதிபதிக்கு ஒன்றும் புரியவில்லை.

“நீர் என்ன சொல்கிறீர்? கண்ட கோடாலி என்றால் என்ன?”

புலவர் சொன்னார்:

“கண்ட கோடாலி என்பது கைக் கோடாலி.”

புலவரின் பதிலைக்கேட்டு நீதிமன்றமே சிரிப்பிலாழ்ந்தது.

விஷயம் வருமாறு:

குறிப்பிட்ட அந்த வழக்கின் எதிரிக்கும், அவருக்கு எதி ரான சாட்சியாக வந்த புலவர்க்கும் அவ்வளவாக ஒத்துப் போகாது. மேற்படிவழக்கு சம்பந்தப்பட்ட குறிப்பிட்ட அந்த நபர் ஒரு பெண் பித்தன். அவர் அந்தக் காலத்தில் யாழ்ப்பாணத்தில் பேர் போன கண்ட கோடாலி என்ற தாசியுடன் சிநேகிதம். நீதவான் “அந்த நபரை எந்த நிலையிற் கண்டீர்” என்று கேட்டபோது இந்த விஷயத்தை அம்பலமாக்கி மேற்படி நபரை அவமானப்படுத்தும் நோக்கத்தோடுதான் “கண்ட கோடாலியுடன் உறங்கிடக் கண்டேன்” என்றார் புலவர்.

கண்ட கோடாலி என்பது சாதாரண கோடாலியையும், அதே வேளையில் சரசாங்கியான கண்ட கோடாலி என்ற பெண்ணையும் குறிப்பது கவனத்திற் கொள்ளத் தக்கது.

பாரதூரமான முறையில் கல்லடி வேலரின் பதில் இருப் பதாகக் கருதிய நீதவான் குறிப்பிட்ட அவ்வழக்கின் சாட்சியான புலவர்க்கு நீதிமன்றத்தை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சிறைத்தண்டனை வழங்கினார்.

8

உரும்பராயிலிருந்த புலவரின் வீட்டுச் மதிற் சுவரிலே யாரோ விஷமிகள் “கல்லடி வேலன்” என்று எழுதி விட்டுப் போய்விட்டார்கள்.

புலவர் பார்த்தார். “கல்லடி வேலன்” என்று எழுதப் பட்டதற்கு பக்கத்தில் “கண்டால் பொல்லடி” என்ற வாசகத்தையும் சேர்த்து விட்டார்.

“கல்லடி வேலன் கண்டால் பொல்லடி” என்ற சேதி அறிந்த விஷமிகள் பதுங்கி விட்டார்கள்.

9

இந்தக் காலத்தில் எந்த விதத் தகுதியும் இல்லாத அறிவற்ற பேர்வழிகள் கௌரவமான குடும்பத்தவர்களைப் பார்த்து மனம்போன போக்கில் அபிப்பிராயம் சொல்கின்ற போக்கினைப் பார்க்கிறோம்.

இத்தகைய பேடிகள் புலவரையும் பார்த்து “இவர் பெரிய கொம்பனோ?” என்ற போக்கில் விமரிசனஞ் செய்ய விளைந்தால் அவர் பொறுத்துக் கொண்டிருப்பாரா?

அதனால் பாட்டாலேயே அத்தகைய பேர்வழிகளுக்குச் சாட்டையடி கொடுக்கிறார் புலவர்.

அவர் பாடல் பின்வருமாறு:

பிஞ்சுப் பலாக்காய் இளநீர் பிடுங்கி
பெருத்த வயிறு வளர்த்தகா வாலிகள்
அஞ்சாமல் மற்றோர் பெருமை சிறுமை
அறியத் தலைப்பட்டார் பாருங்கடி.

10

குப்பிழான் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகரின் பெண்ணொருத்தி கள்ளக் காதலால் ஒரு பிள்ளை பெற்றாள் பெற்றது தான் பெற்றாள் தன் பிழை அறிந்து சும்மா இருக்க வேண்டாமா? அந்தப் படுபாவி தான் பெற்ற பிள்ளையை அவ்வூர் பாண் கிணற்றிலே தூக்கி எறிந்து விட்டு எல்லாருக்கும் நல்ல பிள்ளையாக இருந்து விட்டாள்.

கல்லடி வேலருக்கு யாரோ விஷயத்தைக் கக்கி விட்டார்கள்.

புலவர் அந்தப் பெண்ணின் தமையனைப் பார்த்து பின் வரும் பாடலைச் செய்தார்.

இங்குறு குப்பிழான் தோட்டக் கிணற்றிலே
ஏதோ பெருங் காரியமாய்த் தம்பி!
உன் தங்கச்சி போட்ட தகரம் இருக்குதாம்
ஓடிப்போய்ப் பார்த்துண்மை வந்தறிவி.

11

இன்று பனையின் பெருமையை மக்கள் உணரத் தலைப் பட்டு விட்டார்கள். சீனி, சர்க்கரை என்பவற்றின் விலை பல மடங்கு அதிகரித்து விட்டதால் பனங்காய், பனாட்டு போன்ற பொருட்களுக்குத் தனி மவுசு ஏற்பட்டுவிட்டது. இது போலவே பழஞ்சோறு, கூழ், குரக்கன் போன்றவற் றிற்கும் ஒரு மரியாதை இன்று ஏற்பட்டுள்ளது. இவ்வளவு காலத்திற்குப் பின் வந்த இந்த வரவேற்கத்தக்க மாறு தலை விழைந்து கல்லடி வேலர் இன்றைக்கு சுமார் ஐம்பது வருஷங்களுக்கு முன்னமேயே கீழ்வரும் அழகான அர்த்தமுள்ள பாடலைப் பாடியுள்ளார்.

பனங்காய் பனாட்டுப் பிட்டு
பழஞ்சோறு கூழ் குரக்கன்
தினைச்சோறு கஞ்சி ஒன்றும்
சீர்திருத்தம் இல்லை என்று
தேநீருங் கோப்பியுமாம்
பாருமடி வேடிக்கையை

மேலுள்ள பாடல் எம் மக்களின் ஆங்கிலேயப் பின் னணி உணவு மோகத்தை சிறப்பாகக் காட்டுகிறதல்லவா?

12

புலவரோடு ஒரு சிகை அலங்காரத் தொழிலாளி மனஸ்தாபப் பட்டுக் கொண்டிருந்தார். புலவர்க்கும் அந் கத் தொழிலாளியைக் கண்ணில் காட்டக் கூடாது. புல வர்க்கும். தொழிலாளிக்கும் ஏற்பட்டுள்ள அபிப்பிராய பேதத்தை அறிந்திருந்த புலவர்க்கு வேண்டிய ஒரு சில பிரமுகர்கள் குறிப்பிட்ட அந்த சிகை அலங்காரத் தொழி லாளியை புலவரிடம் அழைத்து வந்து அத் தொழிலா ளியை வாழ்த்தும் படியும் அதன் மூலம் இருவரதும் பகை யும் போய் விடுமென்றும் சொன்னார்கள்.

புலவர் சிலேடையாக கீழ்க்கண்டவாறு வாழ்த்தினார்;

“நீ சிரஞ்சீவியாய் இருக்கக் கடவாய்.”

மேலுள்ள வாசகம் அந்த தொழிலாளி சிரஞ்சீவி யாக (நிலை பெற்ற வாழ்க்கையுடையவனாக) இருக்க வேண் டும் என்ற கருத்திலும் சிரஞ் சீவியாக எப்போதும் (பிற. ரின் சிரத்தை – தலையை சீவுகிற – அலங்கரிக்கிற தொழிலா ளியாக) இருக்க வேண்டும் என்ற கருத்திலும் அமைவதைக் காணலாம்.

13

முன்னைய யாழ்ப்பாணத்துப் பெண்களுக்கு நோய் என் பதே எளிதில் வருவதில்லை. பன்றிக் குட்டி போலபதினாறு பிள்ளைகளைப் பெறக் கூடியவர்களாகப் பெண்கள் இருந்தார்கள். எந்தப் பெண்ணும் ஆஸ்பத்திரிப் பக்கம் போனதில்லை. ஆனால் புலவர் காலத்திலேயே நிலைமாறி விட்டது. இணுவிலை நோக்கிப் பெண்கள் கூட்டம் நோயின் நிமித்தம் படை எடுக்கத் தொடங்கி விட்டது. இதனைப் புலவரின் பாடல் அழகாகச் சொல்கிறது. புலவரின் பாட்டு பின்வருமாறு:

பன்றிக் குட்டி போலே முன்னே
பதினாறு பிள்ளை பெற்றார்
அன்று வருத்தம் இல்லை
ஆஸ்பத்திரி போன தில்லை
இன்று பார் இணுவிலிலே
பெண்கள் தொகை
எண்ணவுமோ முடியவில்லை..
.

14

புலவர் வாழ்ந்த காலம் ஆங்கிலேயர் இலங்கையை ஆண்ட காலம். அக்காலத்தில் எமது யாழ்ப்பாணத்து மக் கள் பலர் சுதேச தொழில்களை புறக்கணித்து விட்டுத் தமது முழுமீசையையும் முக்கால் மீசையாகக் ‘கட்’ பண்ணிக் கொண்டு தாம் படித்த சீனியர், ஜூனியர் தராதரப் பத்தி ரங்களுடன் கொம்பனி வேலைகளில் கொளுவப் பார்த்த வேடிக்கையை ஆசுகவி அழகாகப் பாடுவதைப் பாருங்கள்.

முழுமீசை தள்ளி விட்டு
முக்கால் மீசை வைத்துக்
கொண்டு சீனியராம் ஜுனியராம்
சோதனைகள் பாஸ் பண்ணி
கொளுவ வழி எங்கேயென்று
கொம்பனிக்குள் தேடி நுழைகிறார்கள்.

15

புகையிரதப் பகுதியார் “கோச்சி வரும் கவனம்” என்று பொது மக்களுக்கு அவதான அறிவிப்புகளை முன்னர் எழுதி வந்தார்கள். விகடவேந்தர் வேலுப்பிள்ளை அந்த ”கோச்சி வரும்கவனம்”- என்ற வசனத்திற்குக் கீழே கொப் பரும் வருவார் கவனம் என்று எழுதி வைத்து விட்டார்.

புலவரின் விஷமம் புகையிரதப் பகுதியாரின் கண்களைத் திறந்துவிட்டது. ‘கோச்சு’ என்பதனை அவர்கள் பின்பு “கோச்” என்று குறிக்க ஆரம்பித்தார்கள்.

16

தமது நெருங்கிய நண்பர் ஒருவர் மரணமடைந்தது கல்லடியாருக்கு மிகுந்த மனக் கஷ்டத்தை ஏற்படுத்தியது. தன் நண்பரின் உயிரைப் பறித்த எமன் மீது புலவர்க்குக் கட்டுக்கடங்காத ஆத்திரம் ஏற்பட்டு விட்டது. எமனுக்கு எமனாக நின்று அவர் இசைத்த பாடல் கேட்பின் காலனே கலங்கிப் போவான்.

பாடலின் பொருள் இது தான்: அன்னை வயிற்றிலே உருவாகும் கருவையும், பூமியிற் பிறந்த நன்மை தீமை அறியாத சிறு குழந்தைகளது உயிரையும் பலி எடுக்கும் எமனாகிய உன்னை உணர்வற்ற மனி தர்கள் தருமனென்றும், நடுவனென்றும் வீணில் புகழாரம் சூட்டுகின்றனரே!

காலனே! நீதி வழுவாத நல்ல மனிதர்களைக் கொல்லு கின்றாய். பிறர் துயர் கண்டு இரங்கும் உயர்ந்த மனி தர்களையும் ஈவிரக்கமின்றி சாகச் செய்கின்றாய். இத் தகைய உன்னைப் போய் நடுவனென்றும் தருமனென்றும் உணர்வற்ற மனிதர்கள் அன்றோ உரைக்கின்றார்கள் ?

அட எமனே! உன்னை எனக்குத் தெரியாதா? மார்க் கண்டயன் கோரிக்கைக் கிணங்க சிவனாரிடம் காலடி பட்ட உன்னை குருட்டு மனிதர்கள் தர்மனென்றும், நடுவ னென்றும் சொல்வது எத்தனை மூடத்தனம்?

மறைந்து நின்று உயிர் வாங்கும் உன்னை நேரிற் காண நேர்ந்தால் உன் மீது பகையுள்ள உலகோர் அந்த இடத் திலேயே உன் உடலை வெட்டி தீ மூட்டி விடுவார்கள். உன்னைப் போய் ஆண்மையாளன் என யார் சொல்லுவார்?

புலவரின் பாடலின் முக்கிய அம்சங்களை பார்த்த நாம் இனி பாடலைப் பார்ப்போம்:

1. அன்னை வயிற்றுக் கருவையும் பூவி லவதரித்த சின்னஞ் சிறிய குழந்தையை யுந்தீ மையிதென்று நன்மையி தென்றுண ராரையு நண்ணி யுயிரெடுக்கு முன்னைத்த ருமன் நடுவனென் பாருணர் வற்றவரே.

2. மன்னரை நீதிவழுவா தரசுசெய் மாதவரை
யின்னற் கிரங்கும் பெரியாரைச் சற்குரு வென் றுரைக்கு
மன்னார் கிழவரை யன்பின்றி யாங்குயிர்க் கொள்ளை கொள்ளு
முன்னைத் தருமன் நடுவனென் பாருணர் வற்றவரே

3. மாதவ மார்க்கண்ட னாற் சிவன் காலுதை வாங்கியவன்
ஏத வெருமையை வாகன மென்று கொண் டேறுபவன்
சீத விழியற்ற வந்தகன் நீயென் பது தெரிந்தோ
ரோதுவ ரோவிங்கு தர்ம னடுவ னெனவுனையே.

4. உன்னி லுலகத் தவருக் குளபகை யுன்னைமுக
முன்னிற் கண் டாலுட னே வெட்டி யுன்னுடல் மூட்டுவர் தீ
பின்னர் மறைந்துயிர் வாங்குவ தாண்மை. பெருமை யென்றார்
சொன்னவர் சொல்பவ ரந்தக பேடித் துணி விதுவே

17

நவ நாகரிகம் இன்றைய இளம் பெண்களைப் பிடித தாட்டுகிறது. அந்தோ பரிதாபம்! பாவாடை உயர்ந்து கொண்டே போகிறதே? டைட்ஸ் கேட்… மினிஸ் கேட் இப்படி எல்லாம்?

இத்தகைய நாகரிக உணர்ச்சி (?) புலவர் காலத்துட் பூவையரிடத்திருந்தே தொடங்கி விட்டது போலும். இதோ பாருங்கள் புலவர் அடுக்களையில் இருக்கும் அக்கா ளிடம் இதுபற்றி முறையிட்டு அழும் விதத்தை :

படிப்பு ஏற ஏற
பாவாடை தான் உயர
அடுக்களையில் இருக்குமெந்தன்
அக்கா நீ பார்க்கலையோ?

18

கோயிற் திருவிழாக்களுக்காகப் பணத்தைத் தண்ணீர் போல் இறைக்கிறார்கள் பலர். சின்ன மேளத்தில் ஆரம்பித்து இன்று முருகனுக்கு ‘ஹபி பேர்த்டே’ பாட்டு பொப் இசையில் பாடும் அளவுக்கு பக்தி பெருகி விட்டது.

காதலாகி கசிந்து கண்ணீர் மல்கிக் காண வேண்டிய கடவுளை மூடர்கள் வெறும் வேடிக்கை காட்டி காண நினைக்கிறார்கள் என்ற கவலை கவிஞருக்கும் ஏற்பட்டு விட்டது. அவர் குரலைக் கேளுங்கள்:

சப்பறமோ தேர் முட்டியோ
சார்ந்திருக்கும் மடப்பள்ளியோ
எப்புறமும் வேடிக்கைகள்
சிறப்பாய் நடக்கையிலே
சுவாமிதான் என்ன தரும்?
சும்மா இருந்திடுமே .

19

இன்றைய பெண்கள் தான் படாடோபமாகக் கோயிலுக்குப் போகிறார்கள் என்றால் கல்லடி வேலர் காலத்துப் பெண்களும் ஸ்டைலாக டிரஸ் பண்ணி ‘ கம கம ‘ சென்ட் வாசனையோடு தான் கோயிலுக்குப் போயி ருக்கிறார்கள் போலிருக்கிறது. கவிஞரின் பாட்டைப் பாருங்கள்:

ஒய்யார சேலை கட்டி
உடம்பெல்லாம் நகை பூட்டி
கோவிலுக்குப் போகிறார்கள்
கால்மைலுக் கப்புறத்தே
வீசுகுதே வாசனைகள்

20

சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்தவர் அந்த நீதும் வான். அவருக்கும் புலவர்க்கும் அவ்வளவாகச் சரிவராது. அந்த நீதவான் முன்னால் ஒரு வழக்கின் சாட்சியாகவுல வர் போக வேண்டி வந்தது.

நீதவான் மிடுக்காகக் கேட்டார்: “நீர் குறிப்பிட்ட இடத்தை அடையும் போது என்ன நேரம்?”

“ஐயா நான் குறிப்பிட்ட இடத்தை அடையும் போது பொழுது குலைக்குள் மறைந்து கொண்டிருந்தது. அதாவது மாலை நேரம்.”

புலவரின் பதில் “குலைக் காட்டார்” என்று அந்தக் காலத்தில் அழைக்கப்பெற்ற சாவகச்சேரிப் பகுதியைச் சேர்ந்த நீதவானுக்குச் சரியான அவமானமாகப் போய் விட்டது.

21

ஒரு பெரிய வெள்ளைக்கார அரசாங்க அதிகாரிக்கு வரவேற்புக் கொடுப்பதற்காக புலவரின் சொந்த ஊரான வசாவிளான் மக்கள் புலவரின் தலைமையில் ஒன்று திரண்டு மாலைகளுடன் அதிகாரியின் கார் வரும் திக்கைப் பார்த்த வண்ணம் இருந்தார்கள்.

என்னே துரதிர்ஷ்டம்! கார் வசாவிளானில் நிறுத்தப் படாமலேயே போய்விட்டது.

புலவரின் பரம எதிரியான ஒரு உள்ளூர் அதிகாரியின் சூழ்ச்சியே, இவ்வாறு கார் நிறுத்தப்படாமல் போனதற்கு காரணம் என்று புலவர்க்குப் புரிந்து விட்டது

புலவர் ஆக்ரோஷத்துடன் சொன்னார்: “அந்த ஆண்டசட்டி ஆளும் பயல் செய்த சூழ்ச்சிதான் இங்கே கார் நிறுத்தப்படாததற்குக் காரணம்.”

புலவர்க்கு எதிரியான அந்த உள்ளூர் அதிகாரி வேறு யாருடனோ வாழ்க்கை நடாத்திய பெண்ணைத் தன் ஆசை நாயகியாக வைத்திருந்தவராம். அதனால் தான் புலவர் ஆண்ட சட்டி – இன்னொருவன் பயன்படுத்திய பொருளை – ஆளும் பயல் – வைத்திருக்கும் பேர்வழி என அந்த அதிகாரியை ஏசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

22

புலவரின் நண்பரான செல்வந்தர் ஒருவரின் மக ளுக்கு அன்று திருமணம். பெரும்பிரபுக்களும், கல்வி மான் களும் கல்யாண மண்டபத்தில் நிரம்பி வழிந்தனர்.

மணமக்களை வாழ்த்தி கல்லடி வேலுப்பிள்ளையும், இன்னுமொரு பண்டிதர் ஒருவரும் வாழ்த்துப்பாக்கள் – இசைத்தார்கள்.

கல்லடி வேலர் கவிதையில் இலக்கணக் குற்றம் இருக் கிறதென அந்த பண்டிதர் சபையில் இருந்த சிலரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

“என்ன என் பாடலில் குற்றங் காணுகிறீரா? ஓய் மூடப் பண்டிதரே! நான் உம்மைப் போல் திருமண வாழ்த் துப் பாடலை அமங்கலமாகப் பாடுகிற பேர்வழி என நினைத்து விட்டீரா?”

பண்டிதர் துடிதுடித்து “என்ன என் பாட்டில் அமங் கலமா?” என்று சொல்லி விட்டு தனது பாடலை மீண்டும் சபையில் படிக்கலானார்:

மங்கலியந் தரித்தாளே – மனோன் மணி
மங்கலியந் தரித்தாளே

ஓய் பண்டிதரே உமது ஒப்பாரியை நிறுத்தும்.

மங்கவி + அந்தரித்தாளே – மனோன்மணி
மங்கலி + அந்தரித்தாளே

என்ன காணும் மணமகள் மனோன்மணி அந்தரிக்க வேண்டிய நிலையிலா இருக்கிறார். நீர் கல்யாண வீட்டில் பாடுவது இழவு வீட்டில் பாடவேண்டிய பாடல் போல் அல்லவா இருக்கிறது?

தனது பாட்டில் குறை கண்ட பண்டிதரின் பாடலை சிலேடை நோக்கில் குறை கண்டுரைத்த நாவளம் அன்னாரின் பாவன்மை போலவே சபையிலிருந்த கல்விமான்களின் பாராட்டைப் பெற்றது.

23

கல்லடி வேலுப்பிள்ளையிடம் இரண்டு பெரிய குதிரை வண்டிகள் இருந்தன. அந்த வண்டிகளில் அழகான மேல் நாட்டுக் குதிரைகளைப் பூட்டிக் கம்பீரமாகச் சவாரி செய்வது புலவர்க்கு மிகவும் பிடித்தமான காரியம்.

புலவரின் குதிரை வண்டிச் சாரதி ‘ வேலன் ‘ என்ப வர். இப்போதும் குடு குடு கிழவராக வசாவிளான் சிற் றூரில் இருக்கிறார். ‘குதிரைக்கார வேலன்’ என்றழைக்கப் படும் அந்த வயோதிபர் கூறிய தகவல் வருமாறு :

அந்தக் காலத்தில் வசாவிளானின் அயற் கிராமமான மயிலிட்டிக் கிராமத்தைச் சேர்ந்த சில நாட்டாண்மைக் காரர் ஒன்றும் அறியாத வசாவிளான் வாசிகள் சிலர் மீது அவ்வப்போது தம் கைவரிசையைக் காட்டி வந்தார்கள்.

ஒருநாள் கல்லடியார் தன் குதிரைச் சாரதி வேலனை ஏதோ அலுவலாக மயிலிட்டிக்கு அனுப்பினாராம்.

மயிலிட்டி நாட்டாண்மைக்காரர் குதிரைச் சாரதி வேலனை அடித்து விரட்டியதும் அல்லாமல் அவரை தாழ்ந்த சாதிப் பயல் என்றும் பழித்து விட்டார்களாம்.

தனது பணியாளுக்கு நேர்ந்த அவமானத்தைக் கேட்டு புலவர் வெகுண்டெழுந்தார். உடனே தனது பணியாளை மயிலிட்டி கிராமத் தலைமைக்காரரிடம் கூட்டிப்போய் விஷயத்தைச் சொல்லி குறிப்பிட்ட நாட்டாண் மைக்காரரை வரவழைத்து “எங்கே இப்போது எனது பணியாளில் கைவையுங்கள் பார்ப்போம். அவன் சாதியைச் சொல்லுங்கள் பார்ப்போம் என்று நேருக்கு நேர் சவால் விட்டுத் தமது வல்லமையை மயிலிட்டி வாசிகளுக்குக் காட்டினாராம்.

மேல் உள்ள சம்பவம் கல்லடியாருக்குத் தாழ்த்தப் பட்ட சமூகத்தாரிடம் உள்ள பரிவுக்கும், சண்டித்தனத்திற்கும் பணிந்து போகாத துணிச்சலுக்கும் நல்ல சான்றாகும்.

24

ஒரு வழக்கில் எதிரி தரப்பு சட்டத்தரணி புலவரிடம் மமதையாகக் கேட்டார்:

“வேலுப்பிள்ளை உமது தொழில் என்ன?”

“ஐயா எனக்கு வேலை கோச்சிக்கு ஆள் கூட்டுவது”

புலவரின் பதில் சட்டத்தரணியை நிலைகுலைய வைத்தது.

கோச்சிக்கு ஆள் கூட்டுவது என்பது குதிரை வண்டிப் பிரயாணத்திற்கு ஆள் சேர்ப்பது என்ற கருத்திலும், கோச்சிக்கு — சட்டத்தரணியின் தாயாருக்கு விபசாரஞ் செய்ய ஆள் சேர்த்துக் கொடுப்பது என்ற கருத்திலும் அமைவதைக் காண்க.

25

ஒரு வழக்கில் நீதவான் புலவரை எச்சரித்தார்:

“கல்லடி வேலுப்பிள்ளை; உமது தலைக்கறுப்பு இனி இந்த நீதிமன்றத்தில் தெரியக் கூடாது” என்று.

மறுமுறை புலவர் நீதிமன்றம் போக நேரிட்ட போது தலையிலே சட்டியொன்றைப் போட்டுக் கொண்டு போனாராம்.

26

நயினார் என்ற சொல் எசமான், தலைவர் என்ற கருத்தில் அமைவது. அக்காலத்தில் சாமான்யர்கள் பெரியார்களை நயினார் என்றே அழைப்பர்.

கல்லடி வேலுப்பிள்ளை அவர்கள், அவர் குற்றவாளி யாக நீதிமன்றத்திலே நிறுத்தப்படுகின்ற வேளைகளில் நீத வானே தன்னைப் பார்த்து நயினார் வேலுப்பிள்ளை – எசமான் வேலுப்பிள்ளை என்று அழைக்க வேண்டுமென்பதற்காக தன் பெயரோடு நயினார் என்ற சொல்லையும் இணைத்துக் கொண்டார்.

பிற்காலத்தில் நயினார் என்ற பெயர், ஆங்கிலத்தில் அபாரப் பேச்சுத்திறனும், எழுத்துத்திறனும் பெற்றிருந்த புலவரின் இளைய மகன் க.வே.இரத்தினசபாபதி அவர்களுக்கே நிலைத்து விட்டது.

27

சுவாமி ஞானப்பிரகாசர் சிறந்ததோர் தமிழறிஞர். கல்லடி வேலரின் நெருங்கிய நண்பர். இருப்பினும் சுவாமி ஞானப்பிரகாசர் தமது கத்தோலிக்க மதப் பிரசாரத்திற் காக இந்து சமயத்தைக் கண்டிக்கும்போது கல்லடி வேலர் ஞானப்பிரகாசரைக் கண்டனஞ் செய்யத் தவறுவதில்லை. ஒரு சமயம் புலவர் ஞானப்பிரகாசரைக் கீழ்க்காணும் வாறு தாக்கி எழுதினார்:

“முன்பட்டச்சாமி பின் தம்பட்டச்சாமி”

இதன் விளக்கம் : முன்பு தமது சுவாமி பட்டத்திற் கேற்ற குணக்குன்றாகத் திகழ்ந்த ஞானப்பிரகாசர் இப் போது தமது மதப் பிரசாரத்திற்காக கீழ்த்தரமான தம் பட்டச்சாமியாக மாறிவிட்டார் என்பதாகும்.

28

கல்லடி வேலர் பாலியல் சம்பந்தப்பட்ட நூல் ஒன்றை எழுதினார். அந்நூல் ஆபாசமானதெனச் சொல்லி அவர் மீது வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது.

புலவருடைய நூல் படிக்கத்தகா தென்றும், அதனை வாசித்தால் காமக் கிளர்ச்சி ஏற்படும் என்றும் நீதிமன் றத்திலே ஒரு சைவப் பெரியாரும், கிறிஸ்தவப் பாதிரியார் ஒருவரும் சாட்சி சொன்னார்கள்.

புலவர் சார்பில் வாதாடியவர் அவரின் நண்பரும், அந்நாளைய முன்னணி சட்ட மேதையுமான ஐசக் தம் பையா அவர்கள்.

அவர் புலவரின் தூண்டுதலின் பேரில் சாட்சிகளில் ஒரு வரான பாதிரியாரைப் பார்த்து “இந்த நூலைப் படித்தால் காமக்கிளர்ச்சி ஏற்படும் என்பது தானே உமது கருத்து” என்றார். பாதிரியார் “ஆம்” என்றார்.

தொடர்ந்து ஐசக் தம்பையா அவர்கள் புலவரின் நூலினை பாதிரியார் கையிற் கொடுத்து ஆபாசமென பாதிரியார் குறிப்பிட்ட பகுதிகளை படிக்கும்படி வேண்டினார். அப்படி மூன்று முறை குறிப்பிட்ட பகுதிகளை வாசிக்கும்படி பாதிரியார் வேண்டப்பட்டார். பின் சட்டமேதை ஐசக் தம்பையா கேட்டார்:

“பாதிரியாரே நீர் இப்போது இந்நூலைப் படிக்கும் போது உமக்கு காமக் கிளர்ச்சி ஏற்பட்டதா?”

“இல்லவே இல்லை” பாதிரியார் பதறிக் கொண்டு பதில் அளித்தார்.

“அப்படியானால் இந்த நூலை வாசிப்பவர்க்கு காமக் கிளர்ச்சி ஏற்படும் என நீர் சொன்னது பொய்தானே?”

பாதிரியார் மௌனமானார்.

நீதிமன்றத்திலே திரண்டிருந்த மக்கள் கூட்டத்தினர் புலவரின் நூலினை ஆபாசமென சாட்சியமளிக்க வந்த பாதிரியாரையும், சைவப் பெரியாரையும் நையாண்டி பண்ணினார்கள்

29

புலவர் நடாத்திய ‘சுதேச நாட்டியம்’ பத்திரிகை இலங்கையில் மட்டுமல்லாது இந்தியா, மலாயா போன்ற இடங்களிலும் மகத்தான செல்வாக்கைப் பெற்றுத் திகழ்ந்தது.

ஒரு சமயம் ‘சுதேச நாட்டியம்’ பத்திரிகை சந்தாப்பணம் பெறும் பொருட்டு கல்லடியார் மலாயா போனார்.

படித்த பெருமக்கள் அவரை தக்கபடி உபசரித்து கௌரவித்தார்கள்.

சிங்கையில் ஒரு கருமிச் செட்டி இருந்தார். அவர் புலவரை அவமானப்படுத்த எண்ணி ‘காசு தண்டலுக் காக யாழ்ப்பாணத்திலிருந்து வருபவரானாலுஞ் சரி, வந்து உள்ளூரில் வசிக்கிறவரானாலுஞ் சரி நம் கிரகத்தினுட் பிரவேசிக்கக் கூடாது” என்று ஒரு அறிவிப்பை எழுதி வருபவரிடம் காட்டும்படி வேலையாளைப் பணித்து விட்டு போய்விட்டார்.

“செட்டியார் எங்கே?” என்று கேட்ட புலவர்க்கு பதிலுக்கு குறிப்பிட்ட அறிவிப்பைக் காட்டினான் செட்டியாரின் பணியாள்.

செட்டியாரின் வாசகத்திற்கு மறுபுறத்தே தாயுமானவருடைய

“எவ்வுயிரு மென்னுயிர் போ
லெண்ணி யிரங்க வுனின்
தெய்வ வருட் கருணை
செய்வாய் பராபரமே”

என்ற பாடல் காணப்பட்டது. புலவர் செட்டிக்குப் பாடம் புகட்ட எண்ணினார். எழுது கோலை எடுத்தார்; அறிவிப்பு பலகையின் ஒரு புறத்தே கீழ் உள்ளபடி எழுதினார்:

“தட்டி யுண்ணுஞ் செட்டியிடம்
தண்டு பவர் இங்கிருந்தால்
மட்டி யவ ரென்றே
மதிப்பேன் பராபரமே”

புலவரின் பாட்டின் பயன்?

குறிப்பிட்ட அந்தச் செட்டி புலவர் மீது வழக்குத் தொடுத்தார். ஆனால் ஈற்றில் மண் கவ்வினார். கல்லடி வேலரின் மதிநுட்பமான பதில்கள் குறிப்பிட்ட வழக்கின் நீதவானையே பிரமிக்கச் செய்து புலவரைப் பாராட்டும் படி வைத்தது.

30

‘குழி உடையார்’ என அழைக்கப்பட்ட ஆசிரியர் ஒருவர் இளமையிற் புலவரைப் படிப்பித்தாராம்.

ஒருநாள் குழி உடையார் புலவரைப் பார்த்து, “நீர் ஒரு கூரன்” என்று சினந்துரைத்தார்.

புலவர்க்கு வந்தது கோபம்; “இந்தக் கூராற் கிண்ட குழி வரும்” என்றார் அவர்.

31

“கொட்டாவி விட்டதெல்லாங் கூறுதமிழ்ப் பாட்டாச்சே” என்று, தமிழ்க் கவிதைத் துறையில் போலிப் புலவர்களின் பிரவேசங் கண்டு கொதித்தெழுந்து பாடுகிறார் புதுமைப்பித்தன்.

அவரைக் காட்டிலும் ஆவேஷமாக போலிப் புலவர்களுக்கு எதிராக ஆசுகவி சக்திமிக்க ஒரு எறிகுண்டைச் செய்து வீசுகிறார்.

கலைமகள் முகத்திற் கரிபூசுகிற போலிப் புலவர்களை நோக்கி நம்புலவர் வீசிய அந்தச் சக்திமிக்க எறிகுண்டு இதோ;

முன்னே ஒருகவிக்கு முன்னூறும் நானூறும்
பொன்னே கொடுப்பர் புலவர்க்கு – இந்நாளில்
வாசிக்க அறியாத வம்பர் தலைப்பட்டு
காசுக்கஞ் நூறு கவி.

32

பட்டப்பகல் வேளை; நெருப்பாக வெயில் எறிக்கிறது: நிவிற்றிக் கொல்லை என்னும் ஊரிலுள்ள தனது அன்புத் தோழரான டாக்டர் ஒருவரின் இல்லம் நுழைகிறார் ஆசு கவி. தனது நண்பரின் பசிக்கு ஒடியற்கூழ் கொடுக்கிறார் டாக்டர்.

புலவர் விடைபெறப் போகும் வேளை. டாக்டர் சொல்கிறார் :

“புலவரே! தங்கள் வருகையின் நினைவாக ஒரு பாடல் உடன் சொல்வீர்களா?”

“ஓ இதோ!” புலவர் பாடுகிறார்:

அல்லையுற்று இரத்தினபுரியண்டி யப்பாலே நிவிற்றிக்
கொல்லையடைந்தலுப்புக் கொண்டதற்கு-கல்லடியான்
வண்டாரும் மாலையணி மற்புயச் சுப்பையனுடன்
கொண்டாடினான் ஒடியற் கூழ்.

– கல்லடி வேலன் நகைச்சுவைக் கதைகள், முதற் பதிப்பு: பெப்ரவரி 1975, நயினார் பிரசுரம், மாவிட்டபுரம், இலங்கை.

***

ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை வாழ்க்கை நிகழ்ச்சிகள்

  • 1860 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7ஆம் தேதி யாழ்ப் பாணத்திலே – வலிகாமம் வடக்குப் பகுதியைச் சேர்ந்த வசாவிளான் சிற்றூரிலே சைவ வேளாண் மரபினரான கந்தப்பிள்ளை – வள்ளியம்மை தம்பதி களின் மைந்தனாக ஆசு கவி கல்லடி வேலுப்பிள்ளை பிறந்தார்.
  • உரும்பராயைச் சேர்ந்த ஆச்சிகுட்டி என்ற பெண் மணியையும், பின் அவர் மரணமடைய அன்னாரின் சகோதரியான ஆச்சிமுத்து என்பவரையும் புலவர் மணம் முடித்தார்.
  • 1902 ஆம் ஆண்டிலே “சுதேச நாட்டியம்” என்ற தனது சரித்திர பிரசித்தி பெற்ற பத்திரிகையைத் தொடங்கி இலக்கியம், சமயம், அரசியல் போன்ற துறைகளிலே தமது பணியைச் செய்தார். அப்பத்திரிகை சுமார் முப்பது ஆண்டுகள் புலவர் நிழலில் நடந்தது.
  • தலைசிறந்த ஆராய்ச்சி நூலான “யாழ்ப்பாணவைபவ கௌமுதி” உட்பட சுமார் இருபது நூல்களை புலவர் வெளியிட்டார்.
  • எவர்க்கும் அஞ்சாத, பணிந்து போகாத குணங்களினால் சில தடவை சிறை வாழ்வையும் ஆசுகவி மேற் கொள்ள வேண்டி வந்தது.
  • கல்லாதாராலும் போற்றப்படும் மக்கள் கவியான கல்லடி வேலுப்பிள்ளை 1944 ஆம் ஆண்டு எண்பத்தினான்காவது வயதில் தனது சொந்த ஊரான வசா விளானில் இறைவனடி சேர்ந்தார்.

***

“ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை” நூல் மூலம் இந் நூலாசிரியர் பெற்ற பாராட்டுக்கள்

திருமிகு விஜயேந்திரன் வாழ்க! தங்கள் ஆசுகவி வர லாறு மிக்க நன்றாக இருக்கிறது. நான் இலங்கையில் இருந் தபோது கல்லடி வேலுப்பிள்ளையின் சொல்லடியால் திருந் திய தமிழரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். நூல் தெளிவாக இருக்கிறது.
– பன்மொழிப்புலவர், கவியோகி சுத்தானந்த பாரதியார்.

ஆசிரியர் இளைஞராக இருந்தபோதும் எழுத்துத்துறை யில் அநுபவம் பெற்றவர். தெளிவான நடையிலே தர்க்க ரீதியாகத் தமது முடிவுகளை நாட்டியுள்ளார்.
– பேராசிரியர், கலாநிதி சு. வித்தியானந்தன் M.A.Ph.D.

தங்களுடைய அருமையான நயனாய்வு வரலாற்று நூலைப் படித்தின்பங் கொண்டோம். அதைப் போல. மேலும் பல நூல்களை ஆக்கித் தமிழன்னைக்கு அணிகலன் செய்க.
– புலவர்மணி சோ. இளமுருகனார்.

மொழி நடை என்பதைத் தனது விரல்களிற்கொண் டிப்பவனே சிறந்த எழுத்தாளன் என்று நம்புகிறவன் நான் என்பதால் சொல்கிறேன், தமிழை ஆளும் ஆற்றல் உம்மிடம் அற்புதமாகவே அமைந்திருக்கிறது.
– எழுத்தாளர் மு. கனகராஜன்.

நூலாசிரியர் விஜயேந்திரன் நிகரற்ற ஒரு தமிழ் நடை கைவரப்பெற்ற எழுத்தாளர். அவருடைய முன்னைய நூல் களைப் போலவே இந்நூலிலும் அன்னாரின் தமிழ்நடை தனித்துவம் பெறுகிறது.
– விமர்சகர் மயிலங்கூடலூர் பி. நடராசன்.

ஈழத்துப் புலவர் வரலாற்றுத் துறையிலே “ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை” என்ற நூலுக்குச் சிறந்ததோர் இடமுண்டு.
– ஈழநாடு.

கல்லடி வேலுப்பிள்ளையின் பன்முகப்பட்ட சாதனைத் திறனைத் தெட்டத் தெளிவாக, ஆதாரபூர்வமாகக் காட் டும் நூல் தான் கவிஞர் விஜயேந்திரன் எழுதியுள்ள “ஆசுகவி கல்லடி வேலுப்பிள்ளை” என்கிற நூல்.
– சுதந்திரன்.

நூலாசிரியரின் துள்ளு தமிழ் நூல் முழுவதும் பரவிக் கிடக்கிறது. தமிழர்கள் அனைவரும் படிக்கவேண்டிய நூல்.
– சிரித்திரன்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *