கல்யாணத்தை நிறுத்து!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 27, 2020
பார்வையிட்டோர்: 37,058 
 
 

கல்யாணத்தை நிறுத்துசாத்வீகா புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்தாள். கண்களை மூடினால் நவீன் நினைவு வந்துகொண்டே இருந்தது. ஒரு வருடமா? இரண்டு வருடமா? ஐந்து வருடங்கள் பழகினாள். திடீரென கழண்டுகொண்டு விட்டான். வேறு பெரிய இடத்தில் பெண் கிடைத்து விட்டது.

காலை எட்டு மணி சுமாருக்கு முகத்தில் வெயில் வந்து தாக்கியவுடன் எழுந்தாள்.

பல் தேய்ப்பதற்காக வாஷ் பேசின் முன் நின்றாள். கண்ணாடியில் நவீன் உருவம் வந்து மறைந்து போனது.அவளின் செல்போன் ஒலித்தது. தினமும் இதே நேரத்தில் நவீன் கூப்பிடுவான். இந்த எட்டு மணி அழைப்புகள் நின்று ஒரு மாதம் ஆகிறது.

போனை எடுத்துப் பார்த்தாள். கேட்டரிங் காண்டிராக்டர்தான் பேசினார்.“இன்னைக்கு சாயங்காலம் ஒரு மேரேஜ் ரிசப்ஷன் இருக்கு. நாளைக்கு காத்தால முகூர்த்தம். உனக்கு டூட்டி போட்டுடலாமா?”“யார் போன்ல?” என்று அம்மா வந்தாள்.“நாளைக்கு முகூர்த்தம் இருக்காம். ரெண்டு நாள் டூட்டி போட்டுக்கலாமான்னு காண்டிராக்டர் கேக்கறாரு…”“சரின்னு சொல்லு. கரண்ட் பில் இன்னும் ஒரு வாரத்துல கட்டணும்!”“வர்ரேன் சார்…” என்றாள்.

சங்கரா கேட்டரிங் சர்வீஸிலிருந்து அவளை அவ்வப்போது கூப்பிடுவார்கள். யூனிபார்ம் புடவை கட்டிக்கொண்டு வாசலில் பதுமை மாதிரி நிற்க வேண்டும். செயற்கையாக சிரிக்க வேண்டும். பழ ஜூஸ் தட்டை தூக்கிக் கொண்டு சுற்ற வேண்டும்.டூட்டி முடிந்து போகும் போது கையில் பணம் கொடுத்து விடுவார்கள்.மாலை மூன்று மணி. கல்யாண மண்டபம் போனாள். யூனிபார்ம் புடவை கொடுத்தார்கள். கட்டிக் கொண்டு வாசலுக்கு வந்தாள். நான்கு பெண்களில் இவள் மட்டும் மத்தியில் தனியாகத் தெரிந்தாள்.

வரவேற்பு மேஜைக்குப் பின்னால் நின்றவள் கண்களில் கல்யாண மண்டபம் வாசலில் இருந்த போர்டு பட்டது.தெர்மோகோல் மேல் சம்கி வேலை செய்து மணமக்கள் பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. நவீன் – மீனா என்ற பெயர்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன.

நவீன்? அவளுடைய நவீனா? அவன் திருமணத்திற்கா டூட்டி போட்டிருக்கிறார்கள்? இந்த நவீன் அவனேதான் என்றால் இந்த இடத்திலிருந்து இப்போதே ஓடிவிட வேண்டும்.

காண்டிராக்டரின் உதவியாளரிடம் போனாள்.“சார். இன்னைக்கு எனக்கு டூட்டி வேணாமே. உடம்பு என்னமோ மாதிரி இருக்கு…”

“இங்கே பாரு. வேற ஆள் இல்லே. போய் காபி குடி. வேணும்னா நானே கொண்டு வர்ரேன்…” கூறிவிட்டு போய் விட்டார்.

மெதுவாக மண்டபத்துக்கு உள்ளே நடந்தாள். மணமகன் அறை உள்ளே தாழ்ப்பாள் போட்டு மூடியிருந்தது. உள்ளே நவீன் இருப்பானா? இருக்கக் கூடாது. இவன் வேறு நவீனாக இருக்க வேண்டும். உயரமாக இருக்கக் கூடாது. குள்ளமாக சொட்டைத் தலையுடன் இருக்க வேண்டும்.

மறுபடியும் வாசலுக்கு வந்தாள். ரோஜாப்பூ தட்டை அவளிடம் கொடுத்தார்கள்.

‘பாவி… எவ்வளவு முறை தலையில் ஒற்றை ரோஜாவை சொருகியிருக்கிறான்? நல்ல பணக்கார இடம் வந்ததும் எல்லாவற்றையுமே மறந்துவிட்டானே!’

உள்ளிருந்து திடீரென இரைச்சல். அறையிலிருந்து மாப்பிள்ளை வெளியே வந்து விட்டார். பார்த்தாள். அதே நவீன்தான். அதே உயரம். அவளைக் கிறங்கடித்த சிரிப்பு. பைஜாமா குர்தாவில் இருந்தான். பாவி…ப்யூட்டி பார்லர் போய் கூடுதலாக அலங்காரம் செய்து கொண்டு வந்திருந்தான்.

“எங்கே வேடிக்கை பார்த்துகிட்டு இருக்கே… வந்தவங்களை கவனி…” என்றார் கேட்டரிங் சூப்பர்வைசர்.உள்ளே ஒரு தம்பதியர் நுழைந்தார்கள். ரோஜாப்பூவைக் கொடுத்தாள்.

“பேர் என்னம்மா?” என்று கேட்டார் அந்த அம்மா.“சாத்வீகா…”“நல்லா அமோகமா இரு. லட்சணமா இருக்கே…” வாழ்த்திவிட்டுப் போனார் அந்த அம்மாள்.‘போய் மாப்பிள்ளையிடம் இதைச் சொல்…’ என்று கத்த வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.மாலை. ரிசப்ஷன் நேரம். மணமகனும் மணமகளும் மேடைக்கு வந்து விட்டார்கள். கருநீல கலரில் கோட் சூட் போட்டிருந்தான் நவீன். வெளிர் பச்சை புடவையில் அழகாக இருந்தாள் பெண்.

“ஏம்மா… இங்கே வா…” என்று அழைத்தார் சூப்பர்வைசர்.

“இங்க வாசல் டூட்டிக்கு கோகிலா போதும். நீ ஸ்டேஜ் டூட்டிக்கு போ…”

“ஸ்டேஜ் டூட்டியா?”

“ஆமா… போய் பொண்ணு மாப்பிள்ளைக்கு என்னென்ன வேணும்னு கவனி…”

“சார்… நான் இங்கேயே இருந்திடறேனே…”“ஸ்டேஜ் டூட்டி பாத்தா நிறைய போட்டோவுல விழுவே. போ… போ…” என்றார் சிரித்துக் கொண்டே சூப்பர்வைசர்.‘நவீனுடன் மறுபடியும் போட்டோவா? எவ்வளவு போட்டோ எடுத்திருக்கிறாள்? அனைத்தும் இன்னும் செல்போனில் அப்படியே இருக்கின்றனவே…’சாத்வீகா தலையைக் குனிந்து கொண்டு நின்றாள்.

“ஜூஸ் எடுத்துகிட்டுப் போய் பொண்ணு மாப்பிள்ளைக்குக் கொடு…”ஜூஸ் தட்டை எடுத்துக் கொண்டு மேடை ஏறினாள். படிக்கட்டில் கால்கள் இடறின.நவீன் அருகே போனாள். அவனை நிமிர்ந்து பார்க்காமல் ஜூஸை நீட்டினாள். வாங்கிக் கொண்ட நவீன் இவள் முகத்தை நிமிர்ந்து நோக்கினான். அவன் முகம் குப்பென வியர்த்தது. சடாலென முகத்தைத் திருப்பிக் கொண்டவன் கர்சீப்பினால் முகத்தை துடைத்துக் கொண்டான்.

மணப் பெண்னிடம் ஜூஸ் கப்பை நீட்டினாள். அவள் குனிந்த தலை நிமிராமல் வாங்கிக் கொண்டாள். பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தாள். மேடை ஏறியது முதல் அமைதியாகவே இருந்தாள். அவ்வப்போது நவீனை ஓரக் கண்ணால் பார்த்தாளே தவிர குனிந்த தலை நிமிரவில்லை. அந்த அடக்கம் சாத்வீகாவை சுட்டது. சாத்வீகா இவ்வளவு அமைதி கிடையாது. நவீனைக் காதலிக்கும்போது நிறைய பேசுவாள். அவனை வம்புக்கு இழுப்பாள்.

அவள் செல்போனில் இருக்கும் போட்டோக்கள் போதும். ஒரே நிமிடத்தில் திருமணத்தை நிறுத்தி விடலாம்.‘கல்யாணத்தை நிறுத்து’ என்ற ஒரு கூச்சல் போதும்.மணப்பெண் மேடையிலேயே அழுவாள். அல்லது கத்துவாள். மாலையைப் பிய்த்து எறிவாள். பூக்கள் உதிர்ந்து கீழே விழும். கூடவே அவள் வாழ்க்கையும்.நவீன் செய்த துரோகத்துக்கு அந்த பெண்ணுக்கு தண்டனையா? சாத்வீகா தலையை ஆட்டிக் கொண்டாள். வேண்டாம். பிழைத்துப் போகட்டும்.

நவீனின் கண்கள் அடிக்கடி அவளைத் தேடின. மிரண்டு போயிருக்கிறான் என்று தெரிந்தது.“சார்… இங்கே பாருங்க…” என்றார் வீடியோ கேமிராமேன்.நவீன் தலையைத் தூக்கினான். மணப்பெண்ணும் அவனுடன் சேர்ந்து தலையைத் தூக்கினாள்.“சிரிங்க…” என்றார் கேமிராக்காரர்.நவீன் சிரித்தான். செயற்கையாக இருந்தது. மணப் பெண்ணால் அந்த அளவுக்குக் கூட சிரிக்க முடியவில்லை.

ரிசப்ஷன் முடிந்து விட்டது.“காத்தால சீக்கிரமே முகூர்த்தம். எல்லாரும் சீக்கிரம் ரெடி ஆயிடுங்க…” என்றார் சூப்பர்வைசர்.

மறுநாள் காலை. முகூர்த்தத்திற்கு அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் ஆசிக்காக தாலி சுற்றி வந்து கொண்டிருந்தது.

“இங்கே வாம்மா…” என்று சாத்வீகாவை அழைத்தார் சாஸ்திரிகள்.“எல்லார்கிட்டயும் அட்சதையைக் கொடும்மா…” என்று அட்சதை தட்டை நீட்டினார்.

தாலி கட்டும் நேரம் நெருங்கியது.

“ம்ம்… ம்ம்…. நேரம் ஆச்சு…” அவசரப்படுத்தினார் சாஸ்திரிகள்.“சாஸ்திரிகளே… ஒரு அஞ்சு நிமிஷம் வெயிட் பண்ணுங்க. என் கேமிராவுல திடீர்னு ப்ராப்ளம். எங்க பாஸ் வேற கேமிரா கொண்டு வந்துகிட்டு இருக்காரு. அஞ்சே நிமிஷம்…” என்றார் கேமிராமேன்.

“டைம் ஆயிடுச்சு. போட்டோவுக்காக முகூர்த்தத்தை நிறுத்த முடியாது. சீக்கிரம் வந்துடணும்…”

சாத்வீகா மேடையில் இருந்தாள். ஒரு சிறிய இடைவெளி கிடைத்திருக்கிறது. இந்த நேரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ‘கல்யாணத்தை நிறுத்து’ என்று கத்தலாம். போட்டோக்களைக் காட்டலாம்.மணமக்கள் பக்கத்தில் போனாள்.“அக்கா…” என்று குரல் கேட்டது.மணப்பெண்தான் சாத்வீகாவை அழைத்தாள்.“நாக்கு வறண்டு போச்சு… கொஞ்சம் ஜூஸ் கிடைக்குமா?”மணப்பெண்ணைப் பார்த்தாள். புகையும், ஃபோக்கஸ் விளக்கு வெளிச்சமும் அவள் முகத்தில் வியர்வையை அள்ளித் தெளித்திருந்தன.“அக்கா…” என்றாள் மறுபடியும் மணப்பெண்.

“ஜூஸ்தானே? கொண்டு வர்ரேன்…”‘அக்கா’ என்ற அழைப்பில் எவ்வளவு அப்பாவித்தனம். இவள் அழக் கூடாது. என்றைக்குமே.போனை ஸ்விட்ச் ஆப் செய்தாள் சாத்வீகா. திருமணம் முடியும் வரை இனி ஆன் செய்யக் கூடாது.“நேரம் ஆச்சு. கேமிரா வந்துடுச்சா?” என்றார் சாஸ்திரிகள்.

“இதோ வந்தாச்சு…”

கேமிராக்காரரின் பாஸ் வேக வேகமாக மேடையில் ஏறினார்.மணப்பெண்ணைப் பார்த்தவர் திடுக்கிட்டார்.

“நீயா?” என்று கத்தினார்.அனைவரும் திரும்பிப் பார்த்தார்கள்.

“அடிப்பாவி! என்னை நாலு வருசம் காதலிச்சிட்டு இப்போ இன்னொருத்தன் கூட சொல்லாம கொள்ளாம கல்யாணமா? திருட்டு சிறுக்கி. இதுல அப்பாவி மாதிரி நடிப்பு வேற. கல்யாணத்தை நிறுத்துடி…”

மூச்சுவிடாமல் கத்திக் கொண்டிருந்தார் அவர்!

– ஜூன் 2019

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *