சாலையில் பிரதானமான இடம் அது. அவ்விடம், அந்த பூங்கா ஓட்டிய இருந்தது. நடைபாதை நடைப் பயில்வோர்கள், அந்த இடம் தாண்டியே பூங்காவிற்குள் செல்லவார்கள். வாகன போக்குவரத்தும், மக்கள் நெரிசலும் அங்கு கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.
அந்த பூங்காவின் மதில் சுவர் ஓட்டி, ஒரு பெரிய மரம். அந்த மரத்தில் ஒரு விளம்பர பலகையில், “இங்கு எலி ஜோசியம் பார்க்கப்படும் உங்கள் எதிர்காலம் சிறந்த முறையில் கனித்து சொல்லப்படும்” என்று தொங்கவிடப்பட்டு, காற்றில் பலமாக ஆடிக்கொண்டிருந்தது. அது ஆடிமாதக் காற்று, ஆடிக் காற்று அம்மியே நகரும் போது பலகை எம்மாத்திரம்.
அந்த மரம் தாண்டிச் சில அடித் தூரத்தில் ஒரு பழைய வீடு இருந்தது. அவ்வீடு பல ஆண்டு காலம் பூட்டியே இருக்கிறது. அது அங்கிருந்த மரங்கள் அடர்த்தியில் இருள் படிந்துக்கிடந்தது.
“..கீச், கீச்” என்ற சத்தம்.
“ஏய் கணேசா, சும்மா இரு” என்று அதட்டினான் முருகன்.
சில மாதங்கள்தான் ஆச்சு, முருகன் அந்த இடத்தில் எலி ஜோசியம் பார்த்துக்கொண்டிருப்பது. முருகனுக்கு மதுரைதான் பூர்விகம். அவன் குடும்பம், ஒரு ஜோசியக்காரக் குடும்பம். இவன் தாத்தா ஒரு கைரேகை ஜோசியர். இவன் அப்பாவும் கைரேகையுடன், கிளி ஜோசியம் பார்த்தார். ஆனா, முருகன் எலி ஜோசியம் மட்டுமே பார்கிறான். இவன் கடலூர் மாவட்டம், குறிஞ்சிபாடியில், குடும்பத்துடன் தங்கி, அங்கிருந்து ஊர் ஊராக சென்று, எலி ஜோசியம் பார்கிறான். மதுரையில் இருந்துதான் இந்த சீம எலியை 1000 ரூபாய் கொடுத்து வாங்கினான். அதுக்கு வயது, 8 மாதம்தான் ஆகிறது. அதை கொஞ்சம் கொஞ்சமாக பழகி, இப்பொழுதான் அது முழுமையான ஜோசியத் தொழிலுக்கு ஏற்றதாக மாற்றினான். முருகனுக்கு தினம்தோறும் பொழப்பே அந்த எலியை வைத்துதான் நடக்கிறது.
கூண்டிலே எலி, அதன் அருகில் விரிக்கபட்ட பாய், அதன் மேல் சீராய் அடுக்கி வைப்பட்ட சீட்டுக் கட்டு இருக்க, அவன் சந்தன பொட்டுடன், கழுத்தில் காவித் துண்டைப் போட்டுக் கொண்டு மங்களகரமாக உட்கார்ந்துக் கொண்டிருந்தான்.
கணேசன், அங்கு வருவோர், போவோர் எல்லோரையும் பார்த்துக்கொண்டிருந்தது.
அவ்வழியே ஒரு சின்ன பையன் தன் அப்பாவின் கையை பிடித்துக் கொண்டு சென்றுக்கொண்டிருந்தான். அவன், கூண்டிலே இருந்த எலியைப் பார்த்துவிட்டான். கனேசனும் அந்த பையனையே பார்த்தது. இதை முருகனும் பார்த்துவிட்டான்.
முருகன், அந்த பையனை பார்த்து, அருகில் வர, தலையை அசைத்தான். அப்பையன்,
“அப்பா, அப்பா.. எலிப்பா. வாப்பா.. பார்கலாம்” என்று சொல்ல..
“டேய், அதை வச்சு அவங்க ஜோசியம் பார்கறாங்கடா..”
“சரிப்பா, நாமும் ஜோசியம் பார்போம். வாப்பா.. எலிப்பா..” என்று அவன் சொன்னதும்.
அவர், பையனின் வற்புறுத்தலால், எலி ஜோசியர், முருகனிடம் வந்தார்.
“வாங்க சார், பையனுடைய எதிர்காலம் பிரமாதமா இருக்கும். நம்ம கணேசன் அருமையா கனித்து தருவான். வாங்க சார், உட்காருங்க..” என்று சொல்லிக் கொண்டே அருகில் வைத்திருந்த சீட்டை எல்லாம் மேலும், கீழுமாக மாற்றி, மாற்றிப் போட்டான்.
அதை வரிசையாகப் பரப்பி வைத்து, கூண்டைத் திறந்துவிட்டான்.
அந்த கொழுக் கொழுத்த சீம எலியை பார்த்து பையன், ஆச்சரியப்பட்டு போனான். நின்றுகொண்டிருந்த அப்பாவையும் உட்கார வைத்தான்.
“ராசா, உன் பேரு என்ன.?“ என்று முருகன் கேட்க,
“நீ சொல்லுவதுதாம்பா அவன் பேரு, ராஜா..” என்று பையனின் அப்பா சொன்னதும்.
“அடடா, அருமையான பேரு..! வா கணேசா, வா.. ராஜாவுக்கு ஏத்த ராணி எங்கிருப்பா என்று பார்த்து சொல்லு.. ராணி வந்தா.. பிறகு, ராஜா எந்த கோட்டையை பிடிப்பாரு.. என நினச்சு, ஒரு சீட்ட எடுத்து கொடு” என்று முருகன் சொன்னதும், கணேசன், பரப்பி வைத்திருந்த சீட்டை எடுக்க தயங்கி, தயங்கி வந்தது. அது முருகன் விரலையே கவனித்துக் கொண்டே வந்தது. முருவன் விரல் தரையை ஒரு தட்டுத் தட்டியதும், அது ஒரு சீட்டை எடுத்தது. அதை வாங்கிய முருகன்,
“இதை நம்பலாமா ராஜாவுக்கு ஏத்த ராணி வருவாளா.?! நான் பிரிக்களாமா.?!” என முருகன் தொடர்ந்து கேட்டதும், அது தன் கொழுக் கொழுத்த உடலை ஆட்டிக் கொண்டே..
“..கீச், கீச்” என சத்தமிட்டது.
முருகன், அந்த வருத்த வேர்கடலையை சிலவற்றை அதன் அருகில் போட்டான். அது, அதை கொரித்து தின்றது. பின், பாதுகாப்பாக கூண்டிற்குள் ஓடிப்போனது.
“பையன் பேரு ராஜா, ராஜாவுக்கு ஏற்ற ராணியே வந்திருக்கா.. ல்ஷ்மிகடாச்சமா மகாலஷ்மியே வந்திருக்கா.. மகாலஷ்மி போல பெண்ணே இவனுக்கு மனைவியாக வருவா… பையனுக்கு அப்பா பாசம். அம்மா அழுதா.. அது அம்மா பாசம். கடைசிகாலத்துல பெத்தவங்களுக்கு கஞ்சி ஊத்துவான். மகாலஷ்மியே இவனிடம் அடைக்கலமாவாள். கணேசன் வாக்கு, அது அருள் வாக்கு. அது பொய்யாகாது” என்று முருகன் சொல்லச் சொல்ல… பையனின் அப்பா, அதை முழுவதும் நம்பியவராய் தலையை அசைத்துக் கொண்டிருந்தார். ஆனா பையன், அந்த எலியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அப்பா, பர்ஸில் இருந்து முருகனுக்கு ஜோசிய தட்சனை கொடுத்துவிட்டு அங்கிருந்து பையனை அழைத்துக் கொண்டு கிளம்பினார்.
சிறிது நேரத்தில் இரு இளைஞர்கள் அந்த பக்கமாக செல்கையில் அவர்களின் ஒருவன்,
“ஏய் மச்சான், பாருடா எலி, இதவச்சு அவங்க ஜோசியம் பார்குறாங்கடா… வேலை தேடி நாம அலையிறோம் வா.. நமக்கு அது, என்ன சொல்துன்னு கேட்போம்” என்றான்.
இருவரும் முருகனிடம் வந்தார்கள்.
“வாங்க தம்பி, வாங்க.. எதிர்காலம் உண்டு. ஏமாற்றம் இல்லை. காத்திருந்தா கணேசன் வாக்கு பொய்யாகாது. ஆமாம் தம்பி, யாருக்கு ஜோசியம் பார்கனும்.”
“இதோ இவனுக்குதான்” என்று வந்தவனில் ஒருவன், இன்னொருவனை சொல்ல..
“தம்பி பேரு என்ன..?” என்று முருகன் கேட்டான்.
“கார்த்திக்”
“கார்த்தி என்ற பேருக்கு ஒரு நல்ல சீட்ட எடுத்து கொடு கணேசா… கார்த்தி எதிர்காலம் எப்படி கனிந்துவரும்.? என்று சொல்லு, தாமதிக்காதே, கார்த்தி கார்த்திருக்க நேரம் இல்ல, கதவு திறந்தாச்சு ஒரு நல்ல சீட்ட எடுத்து போடு கணேசா..“ என்று முருகன் சொன்னதும்.
அது முருகன் கைவிரலுக்கு மயங்கியதாய் மற்றும் வேர்கடலை கொரிப்பதற்கு ஆசையாய், ஒரு சீட்டை எடுத்து கொடுத்தது. முருகன், வேர்கடலையை சிலதை போட்டான். அதை அது கொரித்து தின்றுக்கொண்டிருந்தது.
ஒவ்வோரு முறை கணேசன் வெளியே வந்து வேர்கடலை கொரித்து தின்னும் போதேல்லாம், அந்த இருள் படிந்த வீட்டில் இருந்த இரு கண்கள், கணேசனையே பார்த்துக் கொண்டிருந்தது.
“கார்த்தி தம்பி, படிப்பின் தாய், சரஸ்வதியே வந்திருக்கா.! கார்த்திக் படிப்பில் கெட்டி, இவர் ஆயுசும் கெட்டி… ஏத்த படிப்புக்கு இன்னும் வேலை கிடைக்கல.. கிடைத்த வேலை செய்ய மனமில்ல. வெளிநாடு போக வாய்ப்பிருக்கு. கார்த்திக் கம்முன்னு இருந்தா காரியக்காரன். உம்மூன்னு இருந்தா ஊமைக்காரன். ஆனா, மிக்க பாசக்காரன். லவ் மேரஜ்தான் நடக்கும். இப்போ ஏழரை சனி ஆட்டி படைக்குது. இந்த ஆடி போய் ஆவணி வந்த எல்லாம் சுப செய்திதான்“ என்று முருகன் படப்படவென சொல்லி முடித்ததும்.
கணேசன் அடுத்த வேர்கடலையை கொரிப்பதற்கு கூண்டில் காத்திருந்தான்.
கணேசன், வேர்கடலைக் கொரிப்பதற்கு மற்றொரு வாய்ப்பும் வந்தது. அந்த வயதான பெண்மணி முருகனிடம் வந்தாள்.
“வாங்கம்மா, வாங்க.. இந்த தள்ளாத வயதிலும் தளராத மனது. எதிர்காலம் நிச்சயம் உண்டு. கணேசனின் அருளும் நிச்சய்ம் உங்களுக்கு உண்டு.” என்று முருகன் வழமையாக வசனத்தில் சீட்டை பரப்ப, அதை கணேசன் எடுத்து கொடுத்ததும், கணேசனுக்கு கிடைக்கும் வழக்கமான வேர்கடலையும் விட இப்போது கொஞ்சம் அதிகமாகவே கிடைத்தது.
வாக்கு சொல்ல முருகன் ஆரம்பிக்கும் வேலை, முருகனின் கைப்பேசி மணி ஒலித்தது. பேசியது அவன் மனைவி, ஏதோ முக்கியமான சமாச்சாரம் போல.. அவன் எழுந்து சிறிது தூரம் நடக்க.. அப்பொழுது அந்த இருள் படிந்த வீட்டில் இருந்து கணேசன் மேல் பாய்ந்த்து. மின்னல் வேகத்தில் கணேசனை, தூக்கிக் கொண்டு சென்றது.
“ஐய்யோ. எலி போச்சு, எலி போச்சு..” என்று அந்த பெண்மணி கத்த திடுக்கிட்டு, சட்டென முருகன், திரும்பி பார்த்தான்.
மின்னல் வேகத்தில் தூக்கிக் கொண்டு ஓடியது, ஒரு கரும்பூனை. அது அந்த இருள் படிந்த வீட்டின் மேலே பாதுகாப்பாக, ஒரு இடத்தில் போய் நின்றது. அதன் வாயில் கணேசன், அது குத்துயிரும், கொலையிருமாக இருந்தது. அப்பூனை தன் கூரிய பற்களால், கணேசனின் கழுத்தை கடித்தது. கணேசனின் உயிர் இப்போது பிறிந்தது. பூனையின் வாய் முழுவதும் கணேசனின் இரத்தக் கரை. முருகன் எதுவும் செய்வதறியாமல், அக்காட்சியை பார்த்துக் கொண்டு…
“ஐய்யோ, என் எதிர்காலமே போச்சே.. இனிமேல என் பொழப்புக்கு நான், என்ன பண்ணுவேன்” என்று சொல்லி, தன் தலைமேல் கைவைத்து அந்த நடைமேடையிலே உட்கார்ந்தான்.
இதையேல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அந்த பெண்மணி,
“அடப் பாவமே.! பூனை இப்படி பண்ணிடுச்சே” என்று ஊச்சுக் கொட்டிக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தாள்.
கொழுக் கொழுத்த அந்த எலியை உண்ண, பூனையின் நீண்ட நாள் ஆசை ஒருவழியாக நிறைவேறியது. பூனைக்கு, எலியால் அன்று நல்ல காலம் பிறந்தது.
ஒன்றின் அழிவில்தான் இன்னொன்று வாழ்கிறது. இதுதான் பூமியின் உயிர் சூழற்சி மற்றும் இங்கிருக்கும் ஒவ்வொரு உயிர்களின் எதிர்காலமும். இந்த நீயதி, முருகனுக்கு புரிந்ததோ இல்லையோ… தெரியவில்லை ஆனால், அவன் அந்த நடைமேடையிலையே தலையில் கைவைத்தே உட்கார்திருந்தான். அப்போது அங்கு வந்த ஒருவர், முருகனிடம்,
“ஏங்க, இங்கு யாரோ, எலி ஜோசியம் பார்க்கறாங்களாமே.. அவங்க இப்போ எங்கே.?” என்று கேட்க…
முருகன், கேட்டவரை பார்த்துவிட்டு. பின், அந்தப் பூனையை பார்த்தான். பூனை, வாயில் இரத்தம் வடிந்துக் கொண்டே, முருகனைப் பார்த்தது.