உல்லாசப் பிரயாணம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: May 9, 2021
பார்வையிட்டோர்: 1,656 
 

(1965ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

நானும் என் நண்பர்களும் சிதம்பரம் செல்வது என்று தீர்மானித்தோம். இரண்டு வாரங்களுக்கு முன்ன தாகவே தேதி குறிப்பிட்டு, பிரயாணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தோம். சிதம்பரத்தில் நடராஜரைத் தரிசனம் செய்துவிட்டு, அங்கிருந்து அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தையும் காண்பது என் பதே எங்களது நிகழ்ச்சி முறை.

ஆனால், புறப்படும் தினம் வருவதற்குள் பல துன் பங்கள் வந்துவிட்டன. அப்பொழுது மார்கழி மாதமான தால், ரயில்வேயில் டிக்கெட் தரமாட்டோம் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டனர். “சிதம்பர தரிசனமா? அப்படியானால் டிக்கெட் கிடையாது” என்று நந்த னுக்கு வேதியர் குறுக்கே நின்றதுபோல, எங்கள் பயணத்துக்கு வேதியனாக நின்றனர். ” என்னதான் கஷ்டம் வந்தாலும், சிதம்பரம் போகாமல் இருப்ப தில்லை. இந்த ஜென்மத்தை வீணாகக் கழிப்பதில்லை ” என்ற திடசித்தத்துடனேயே இருந்தோம்.

புறப்படும் நாள் வந்தது. என்னை நண்பர்கள் டிக்கெட் வாங்குவதற்கு, எதிர்ப்பில்லாமலேயே தேர்ந் தெடுத்து அனுப்பினார்கள். சீக்கிரமாகவே போய்விட்ட படியால், டிக்கெட் கொடுக்கும் ஜன்னல் பக்கமாகப் போய் நின்றுகொண்டேன். பின்னால் வந்தவர்கள் எல்லாம் என்னுடைய பலத்தில் நின்றுகொண்டிருந்தார்கள். டிக்கெட் கொடுத்த பாடாயில்லை. டிக்கெட் கொடுப்ப வரின் தரிசனம் கிட்டாதபடி ஜன்னல் கதவு நந்தியாக மறைத்திருந்தது. அநேகர் சத்தம் போட்டனர். கதவை உடைக்க முயன்றனர். என்ன செய்தாலும் சாவதானமாகத்தான் திறக்கப்பட்டது.

கதவு திறந்ததுதான் தாமதம். ஒருவர் மேல் ஒருவர் விழுந்து ஜன்னலை நோக்கிக் கையை நீட்டினர். ஆனால், எல்லாருடைய பலமும் என் மேல் தான் தாக்கிற்று. இந்தக் கூட்டத்துக்குள் என்னுடைய மிதியடியை அறுத்துவிடுவது என்று ரொம்பப் பேர் முயற்சி செய்தனர்; பலிக்கவில்லை.

சிதம்பரத்துக்கு டிக்கெட் கொடுக்காததால் மாயவரத் துக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டேன். வெளியே வருவ தற்குள் எனது குடல் வெளியே வந்துவிடும் போலா யிற்று. ஆனால், நடராஜர் கிருபையால் தப்பினேன்.

என் வெற்றியை எனது நண்பர்கள் மெச்சினர். எல்லோரும் ரயிலை நோக்கிச் சென்றோம். நாங்கள் தாம் முதலில் சென்றுவிட்டோம் என்று எண்ணினோம். ஆனால், அங்கே ஏராளமான கூட்டம் ஏற்கெனவே இருந்தது. சி.ஐ.டி. உத்தியோகஸ்தர் குற்றவாளியைத் தேடுவது போல ஒவ்வொரு வண்டிக்குள்ளும் தலையை விட்டுப் பார்த்தும் இடமில்லாது அலைந்துகொண்டிருந்தோம்.

கடைசியாக ஒரு வண்டி காலியாக இருந்தது என் கண்ணில் பட்டது. என் நண்பர்களைக் கூட்டிக் கொண்டு அங்கே ஓடினேன்.

“எவனுக்காவது இது தெரிந்ததா! எல்லாம் செம்மறி ஆட்டுக் கூட்டம்தான். இவ்வளவு இடம் இருக்கிறது. பஞ்சு மூட்டைபோல் போய் அடைகிறார்களே!” என்று கூறிக்கொண்டே யிருந்தேன்.

என் நண்பர்களும், “உன் புத்திக்கு மெச்சினோம்” என்று தட்டிக்கொடுத்தனர். சாமான்களை இடம் பார்த்து அடுக்கிக்கொண்டே யிருந்தோம்.

அப்பொழுது அங்கே வந்த ஒரு ரயில்வே உத்தி யோகஸ்தர், “யாரது? நீங்க பொம்மனாட்டிகளா?” என்று கேட்டார். இருட்டாயிருப்பதால் தெரியவில்லை போலிருக்கிறது என்று நினைத்து, “இல்லை. நாங்கள் ஆண்கள்” என்றேன்.

“அப்படின்னா, பொம்மனாட்டிகள் வண்டியிலே உங்களுக்கு என்ன வேலை? போர்டு போட்டிருக்கிறது தெரியவில்லை?” என்றார்.

அவ்வளவுதான்; பேச்சு மூச்சு இல்லாது (மூச்சு இல்லாது என்பதை சும்மா எதுகைக்காகக் கூறினேனே தவிர, உண்மையில் அல்ல) கீழே இறங்கி வேறு இடம் பார்த்தோம்.

ரொம்ப நேரம் அலைந்தோம். கடைசியாக ஒரு வண்டியில், தவறுதலாக வண்டி மாறி உட்கார்ந்த ஐந்தாறு பேர் இறங்கினர். அந்த இடத்தை நாங்கள் வெற்றிகரமாகக் கைப்பற்றிக்கொண்டோம்.

வண்டியில் வந்து ஏற வருபவர்களையெல்லாம், “அடடா, அந்தக் கம்பார்ட்மெண்டில் காலி இருக்கிறதே! கடைசி வண்டி காலியாயிருக்கிறதே! பின்னால் நாலு வண்டிகள் புதிதாகக் கோக்கிறானே!” என்றெல்லாம் சமாதானம் செய்து பார்த்தோம். அதற்கெல்லாம் மசியாத சில பேர் வழிகள் எங்கள் வண்டியில் ஏறிவிட்டால், “ஏன் சார், எங்கு போகிறீர்கள்?” என்று கேட்போம். பக்கத்து ஊராயிருந்தால் பரம சந்தோஷந்தான். எங்களுடனேயே முழுவதும் வருவதாகவோ, அல்லது அதற்கு மேலேயும் செல்வதாகவோ பதில் வந்தால், “ஏண்டா கேட்டோம்” என்று இருக்கும்.

ஒரு கிழவனார் எங்கள் வண்டியில் வந்து ஏறினார். அவருக்கு நிற்கக்கூட இடமில்லை. ரொம்பக் கஷ்டப்பட்டார். அப்பொழுது என் நண்பன் சோமு, “தாத்தா, நீங்கள் இந்த இடத்தில் உட்காருங்கள்” என்று எழுந்து கொண்டு தான் இருந்த இடத்தைக் காண்பித்தான்.

உடனே அந்தப் பெரியவர், “அடடா, அதெல்லாம் வேண்டாம் தம்பி. நீயே உட்கார்ந்திரு; பாவம் எதற்காக உனக்கு இந்தக் கஷ்டம்” என்றார்.

ஆனால் சோமு, அவரை விடவில்லை. தன் இடத்தில் அவரைப் பிடித்து உட்கார வைத்தான்.

அந்தக் கிழவனாருக்குப் பரம சந்தோஷம். பக்கத்திலிருந்த ஒருவரிடம், “பார்த்தீர்களா! என்ன கருணை! அதுவும் இந்தக் கஷ்ட காலத்திலே, யாரப்பா இந்த மாதிரி இடம் கொடுக்கிறார்கள்!” என்று புகழ்ந்து கொண்டே சோமுவை ஆச்சரியத்துடன் பார்த்தார்.

ஆனால், சோமு ரயிலைவிட்டுக் கீழே இறங்கி, “சரி, இரண்டாவது மணியும் அடிச்சாச்சு. நான் போய் வரட்டுமா?” என்று எங்கள் விடையை எதிர்பார்த்து நின்ற போதுதான், சோமு, எங்களை வழியனுப்ப வந்த பேர்வழி என்பது கிழவனாருக்கு வெட்டவெளிச்சமாயிருக்கும். ஆச்சரியம் இருந்த இடத்தில் ஏமாற்றம் குடி கொண்டிருக்கும்.

சோமு சென்றதும் ரயிலும் நகர்ந்தது. நேரம் ஆக ஆக ஜனங்கள் உறங்க ஆரம்பித்தனர். சிலர் நின்று கொண்டும், சிலர் உட்கார்ந்துகொண்டும், சிலர் முழங் காலைக் கட்டிக்கொண்டும் உறங்கினர். சிலர் ஒருவர் மேல் ஒருவராகச் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந் தனர். குழந்தைகள் சீட்டுகளை மடக்கி, வரிசையாக நிற்க வைத்து, கடைசிச் சீட்டைத் தள்ளினதும், ஒன்றன் மேல் ஒன்றாய் எல்லாச் சீட்டுகளும் விழுந்து கிடக்குமல்லவா? அதுபோல இருந்தது அந்தக் காட்சி.

எனக்குக் கீழே படுத்து உறங்கினால் தான் தூக்கம் வரும். ஆனால் படுப்பதற்கு இடம் ஏது?

மகாத்மா காந்தி, முன்பு ஒரு தடவை ரயிலில் மூன்றாவது வகுப்பில் பிரயாணம் செய்தாராம். கூட்டம் அதிகமில்லாததால், காலை முடக்கிக்கொண்டு நன்றாகத் தூங்கிக்கொண் டிருந்தாராம். ஒரு ஸ்டேஷனில் கூட்டம் வந்து ஏறியது. அந்தக் கூட்டத்தில் வந்த ஒரு பட்டிக்காட்டு ஆசாமி, காந்திஜியை எழுப்பி, “ஏனய்யா, இது என்ன உங்க அப்பன் வீட்டு வண் டின்னு நினைச்சிக்கிட்டியோ? ஏந்திருச்சு உக்காரய்யா” என்றானாம்.

காந்திஜி மன்னிப்புக் கேட்டுக்கொண்டு உட்கார்ந் தாராம். அவர்தாம் காந்தி என்று அப்போது அவனுக் குத் தெரியாது. கொஞ்ச நேரத்தில், இவன் குஷி வந்து, “காந்தியோ பரம ஏழை சன்யாசி” என்று பாடுகிறோமல்லவா, அந்த மாதிரி ஒரு பாட்டைப் பாட ஆரம்பித்து விட்டானாம். இது கட்டுக் கதையாகத்தானிருக்கும்.

என்னவாயிருந்தாலும், சாதாரண காலத்திலேயே யாராவது படுத்திருந்தால், “ஏனையா, எழுந்திருக்கிறீரா அல்லது எழுந்தருளப் பண்ணட்டுமா?” என்று கேட்பார்கள். நெருக்கடி காலத்தில் சொல்லவேண்டியதே இல்லை.

போட்டோவுக்கு உட்காருவது போலவே ஆடாமல் அசையாமல் உட்கார்ந்துகொண் டிருந்தேன். இந்த லட்சணத்தில் மழை வேறு ஆரம்பித்துவிட்டது. ரயிலில் ஓட்டை அதிகமானதால், எல்லோரும் எழுந்து நிற்க ஆரம்பித்தனர். “சாதாரணமாகவே, மாமியார் அக்கிலிப் பிக்கிலி (பிடாரி); கள்ளு குடித்தாளாம்; தேளும் கொட்டியதாம்” என்று சொல்லுவார்கள். அது போலவே உள்ள கஷ்டத்தோடு, இந்தக் கஷ்டமும் சேர்ந்துவிட்டது. ஆனாலும் என்ன செய்வது? பொறுத்தவர்தாமே பூமியாள முடியும்?

பொறுத்துப் பொறுத்துப் பார்த்தோம். ஒரு வழியாகத் தில்லை மூதூரின் எல்லையும் வந்து சேர்ந்தது. சிறிது நேரத்தில், ஸ்டேஷனும் வந்துவிட்டது. அவசர அவசரமாகக் கீழே இறங்கி மூச்சுவிட ஆரம்பித்தோம்.

அடேயப்பா, நடராஜப் பெருமானைத் தரிசனம் செய்ய எவ்வளவு சிரமம்! எத்தனை இடையூறுகள்! இவ்வளவையும் நாங்கள் மீட்டு வந்துவிட்டோம். இதற்காகவாவது எங்களுக்கு நடராஜர் மோட்சம் அளிப்பார் என்பது நிச்சயம்.

– வாழ்க்கை விநோதம் (நகைச்சுவைக் கட்டுரைகள்), நான்காம் பதிப்பு: நவம்பர், 1965, பழனியப்பா பிரதர்ஸ், சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *