இலக்கண மேதை!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 2, 2022
பார்வையிட்டோர்: 2,849 
 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

பக்கத்துப் பள்ளிக்கூடத்தில் படிப்பித்த பக்கிரிசாமி வாத்தியாருக்குக் கிடைத்ததோ கிடைத்தது ஒரு ‘புறமோசன்!’

பன்னிரு வருஷம் பக்கத்துப் பள்ளிக் கூடத்திலும் கூட பத்து நிமிடங்கள் தினமும் பிந்திச் சென்றதால் தள்ளாத வயதில் தண்ணீரில்லாத ஊரான படுவான்கரைக்கு மாற்றலாகி தலைமை ஆசிரியராக புறமோசனுடன் சென்றார் பக்கிரிசாமி.

அப்பாடசாலையில் அவர் மட்டுமே ஒரேயொரு வாத்தியாராகையால் அவர் நினைத்த நேரம் பாடசாலைக்குச் சென்று திரும்புவர்.

பெருத்த வயிறைத் தூக்கிக் கொண்டு ஆறு மைல் சைக்கிளை நகர்த்திட சைக்கிளோ ஆமை வேகத்தில் அரைமணி பிந்தி பாடசாலையை அடைந்திடும்.

தூங்கு மானின் (குரங்கின்) மூஞ்சியின் தோற்ற அமைப்பை உடைய பக்கிரிசாமி வாத்தியார் ஆள் ஒரு தூங்கு மூஞ்சி. பாடசாலைக்குச் சென்றதும் கொண்டு செல்லும் சாப்பாட்டுப் பார்சலை அவிழ்த்துத் தின்று விட்டு ‘ப்பான்’ காற்றின் கீழே கும்பகர்ணன் படுக்கை படுத்தெழும்ப பன்னிரெண்டு மணியாகி விடும்.

பின்பு ஆமை வேகத்தில் பைசிக்கிளை வீடு நோக்கி நகர்த்திடுவார்.

வழக்கம் போலவே அன்றும் 9 மணிக்கு பாடசாலையை அடைந்த பக்கிரிசாமி வாத்தியார் – வந்ததும் வராததுமாக சாப்பாட்டு பார்சலைத் திறந்து கொண்டு வகுப்பறையில் மாணவர்களுக்கு முன்னால் இருந்த மேசையில் அமர்ந்த வண்ணம் சாப்பாட்டை உண்ண ஆரம்பித்தார்.

அவர் சாப்பிடுவதையே கண் இமைக்காமல் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தனர் வகுப்பிலுள்ள மாணவர்கள்.

இதைக் கண்ட வாத்தியாருக்கு இவர்களது கண்பட்டு வயிற்றாலை அடி அடித்தாலும் அடிக்கும் என்ற பயம் பீடிக்கவே, ஆத்திரத்தில் அம்மாணவர்களைப் பார்த்து ‘பிள்ளைகளே!..ஒருவர் சாப்பிடும்போது மற்றவர் பார்த்துக் கொண்டிருப்பது கெட்டப்பழக்கம். அப்படிப் பார்க்கக் கூடாது’ என்றார்.

உடனே கூட்டத்தில் இருந்த மாணவன் ஒருவன் எழும்பி ‘சேர் நீங்கள் சொல்வது தப்பு. எங்களுடைய வீட்டுக்கு பக்கத்தில் இருக்கிற கந்தசாமி வாத்தியாருடைய வீட்டில் ஒவ்வொரு நாளும் ரி.வி.யில் பாணும் பட்டரும் சாப்பிடுறதையெல்லாம் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறவங்க. அவங்க வாய் பார்க்கலாம் நாங்கதான் வாய்பார்க்க இயலாதாக்கும்’ என்றான்.

இவ்வார்த்தையைக் கேட்ட வாத்தியாருக்கு ஆத்திரத்தில் மீசை துடித்தது.

அவசரம் அவசரமாக சாப்பாட்டை சாப்பிட்டு (விழுங்கி) முடித்து விட்டு – சாப்பாட்டுக்கு மேல் பழம் சாப்பிடுவதற்காக ஒரு மாணவனை அழைத்து ‘அருகில் உள்ள கடைக்குச் சென்று நல்ல உயிர்ச் சத்துள்ள பழம் இரண்டு ரூபாய்க்கு வாங்கி வா’ என்று அனுப்பினார்.

சிறிது நேரத்தில் கடைக்குச் சென்ற மாணவன் ஒரு சிறிய பார்சலுடன் திரும்பி வந்தான். பார்சலை வாத்தியாரிடம் கொடுத்ததும் பழம் சாப்பிடும் ஆசையில் ஆவலுடன் பார்சலைத் திறந்தார்.

அங்கே வண்டுகள் பிடித்து அழுகிய பேரீச்சம் பழங்கள் இருந்தன.

வண்டுப் பழங்களைக் கண்ட வாத்தியார் அந்த மாணவனைப் பார்த்து ‘ஏன் வண்டுப் பழங்களை வாங்கி வந்தாய்?’ என்று அதட்டினார்.

அதற்கு அப்பையனோ ‘சேர் நீங்கதானே உயிர்ச்சத்துள்ள பழம் வாங்கிவரச் சொன்னீர்கள். அதனால் தான் உயிருடன் கூடிய சத்துள்ள பழம் வாங்கிவந்தேன்’ என்றான்.

வாத்தியாருக்குக் கோபம் எல்லை மீறவே ஆசிரியர் மேசையில் கையைத் தலையின் கீழ் வைத்துப் படுத்துக்கொண்டார்.

அன்று ‘பவர்க்கட்’ இருந்ததனால் அவருக்கு வியர்த்த வியர்வை வழிந்தது.

காரணம் அவருடைய தலைக்கு மேலேயிருந்த ‘பான்’ சுற்றாததனாலேயே ஆகும்.

உடனே தலையை நிமிர்த்தி மாணவர்களைப் பார்த்து, ‘எனக்கு ஒரு விசிறி வேண்டும்’ என்றார்.

உடனே அங்கிருந்த ஒரு மாணவன் எழுந்து ‘மன்னிக்க வேண்டும் சேர் . நான் கமலுடைய விசிறி’ என்றான்.

அடுத்த மாணவன் ‘ரஜனியுடைய விசிறி’ என்றான்.

இப்படியாக ஒவ்வொரு மாணவர்களும் எழுந்து ‘சிவாஜி ! ஸ்ரீதேவி!… சில்க் சுமிதா !… ஜெயமாலினி!’ என்று கூறினர்.

இதைக் கேட்ட வாத்தியாருக்குச் செவிப்பறையே வெடித்து விடும் போல இருக்கவே காதுகள் இரண்டையும் இறுகப் பொத்திக்கொண்டு ‘எல்லோரும் வீட்டுக்கு ஓடுங்கள்’ என்று கட்டளை இட்டார்.

எல்லோரும் வீட்டை நோக்கி ஓடிச்சென்றனர்.

வழமையில் பாடசாலைக்குப் பிந்தி வரும் பக்கிரிசாமி வாத்தியார் அடுத்த நாள் எட்டு மணிக்கெல்லாம் விழுந்தடித்துக் கொண்டு ஓடிவந்தார்.

வந்ததுதான் தாமதம் எல்லா மாணவர்களையும் அழைத்து ‘இன்று ஸ்கூல் இன்ஸ்பெக்டர் (பாடசாலைப் பரிசோதகர்) வருகிறார். எனவே அவர் கேட்கும் எல்லாக் கேள்விகளுக்கும் தவறாது பதில் கொடுக்கவேண்டும்’ என்றார்.

முற்பகல் பத்து மணியளவில் பாடசாலையை வந்தடைந்த ஸ்கூல் இன்ஸ்பெக்டர் ஒவ்வொரு ஒவ்வொரு வகுப்பாகச் சென்று மாணவர்களிடம் கேள்விகள் கேட்டபின் இறுதியில் மூன்றாம் வகுப்புக்குச் சென்று கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்.

ஒரு மாணவனை அழைத்து ‘தம்பி நீ எத்தனையாவது…’ என்று முதல் கேள்வியைக் கேட்டார்.

அதற்கு அம்மாணவன் ‘நான் எங்கட அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான்காவது கடைக்குட்டி’ என்று பதிலளித்தான்.

சிரித்துக்கொண்ட ஸ்கூல் இன்ஸ்பெக்டர் ‘ஆசிரியருக்கு வாத்தியென்று ஏன் பெயர் வந்தது தெரியுமா?’ என்று இரண்டாவது கேள்வியைத் தொடுத்தார்.

அக்கேள்வியைக் கேட்ட அம் மாணவன் ‘ஆம் சேர் வாள் வாள் என்று கத்துவதால் வாத்தியென்று பெயர் வந்தது’ என்றான்.

அவ் விடையைக் கேட்ட ஸ்கூல் இன்ஸ்பெக்டர் மாணவனின் தோளில் தட்டி ‘பலே கெட்டிக்காரா! இதோ உனக்கான கடைசிக் கேள்வி’ என்று கூறிக்கொண்டு இறுதிக் கேள்வியைக் கேட்டார்.

‘ஆறு மைல்களுக்கப்பால் இருந்து ஒரு ஆமையும் முயலும் போட்டி போட்டு ஓடினால் யார் முந்துவார்கள்?’

சில நிமிடங்கள் ‘ஆமை…முயல்..யாரு..?’ என்று முணு முணுத்துக் கொண்டிருந்தவன்…ஒன்று….இரண்டு என்று கை விரல்கள், கால் விரல்கள் மற்றும் கண், வாய் எல்லாம் வாய் விட்டு எண்ணிக் கணக்கிட்டுக் கொண்டு, ‘எங்களுடைய வாத்தியாரு ஆறு மைல்களுக்கு அப்பால் இருந்து 9 – 00 மணிக்கு பாடசாலைக்கு வருவதனால் நிச்சயமாக எங்கட வாத்தியார் முந்துவார் சேர்’ என்றான்.

அம்மாணவன் சொன்ன பதிலைக் கேட்ட ‘ஸ்கூல் இன்ஸ் பெக்டர்’ ஒரு தடவை திரும்பி வாத்தியாரைப் பார்த்தார்.

அங்கே வாத்தியார் கோபத்தினால் மீசை துடிக்க, கண்கள் கொவ்வைச் சிவப்பேறி இருக்க தலையைக் குனிந்து கொண்டிருந்தார்.

– ஓ. கே.குணநாதன் நகைச்சுவை கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1993, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *