(1940ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
“ஞாயிற்றுக்கிழமை உனக்கு நான் டெலிபோன் பண்றேன். பிறகு நாம் இருவரும் ஷினிமாவுக்குப் போகலாம்” என்று கூறினேன்.
“சரி, நானும் அதை எதிர்பார்க்கிறேன். போய் வரட்டுமா?” எனக் கூறி விடைபெற்றுக்கொண்டு சென்றாள் என் காதலி.
அவள் போனபிறகு எனக்கு ரொம்பக் கஷ்டமாயிருந்தது. கையிலே பணமிருந்சால், அவளோடு ரிக்ஷாவிலே பீச்சுக்குப் போயிருப்பேன். ஆனால் என்ன செய்வது! பணமோ பத்து ரூபாய் தானிருக்கிறது. அதுவும் வீட்டுக்காரனுக்கு வாடகைக்கு அழவேண்டும். இப்படியெல்லாம் யோசித்துவிட்டு, “சரி, மனம் நிம்மதியாயிருக்க வெளியே யாவது கொஞ்ச தூரம் போய் வரலாம் எனப் புறப்பட்டேன் வீட்டைவிட்டு. சென்று கொண்டேயிருந்தேன். காப்பி கிளப் அருகே வந்தேன். அவ்வளவுதான். காதலி ஞாபகமெல்லாம் காற்றாய்ப் பறந்துவிட்டது. பலகாரம் சாப்பிட வேண்டுமென்ற ஆசையே மேலிட்டது.
காலை 8-30 மணிக்குச் சாப்பிட்டுவிட்டு ஆபீஸுக்குப் போனதுதான். இதுவரை ஒரு இட்டலிகூடச் சாப்பிடவில்லை. வயிற்றுப்பசி அகோரமாயிருந்தது. ‘வாடகைப் பணத்தில் கிளப்புக்காரனுக்குக் கொடுத்துவிட்டால், நாளை வந்துவிடுவானே வீட்டுக்காரன் எமன்போல. அவனுக்குப் பணம் கட்டித் தொலையவேண்டுமே’ என்ற எண்ணத்தாலேயே பகலெல்லாம் உண்ணாவிரதமிருந்தேன். ஆனால் வயிறு கேட்கிறதா? கலகம் செய்ய ஆரம்பித்துவிட்டது. “சரி” என்று காப்பிக் கிளப்புக்குள் நுழைந்தேன். ஒரு நாற்காலியில் உட்கார்ந்து கொண்டேன்.
பரிமாறுபவர் வந்து, “என்ன,சார், வேண்டும்?” என்றார்.
“ஒன்றும் வேண்டாம். ஒரு இட்டலி மட்டும் கொண்டு வாரும்” என்றேன்.
இட்டலி கொண்டுவரச் சிறிதுநோமாயிற்று. எனது கண்கள் மேலும் கீழும் பிரயாணம் செய்துகொண்டிருந்தன; அப்பொழுது தற்செயலாகக் கீழே காலடியிலுள்ள தரையையும் நோக்கின.
ஆ! அங்கே ஒரு நோட்டு கிடந்தது.
அது ஐந்து ரூபாய் நோட்டோ, அல்ல பத்து ரூபாய் நோட்டோ. அதை அறிவதில் நான் காலத்தைச் செலவழிக்க விரும்பவில்லை. எனது காலைத் தூக்கினேன். அந்த ரோட்டின் மேல் வைத்தேன். அவ்வளவுதான்; ஒன்றும் அறியாதவன்போல உட்கார்ந்து கொண்டேன்.
எனக்கு முன்னால் ஒருவர் எதிர் நாற்காலியிலே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவர் கண்டுவிடுவாரோ என எண்ணி ரோட்டை எடுக்காமலிருந்தேன். “இவர் இங்கேயே சாசுவதமாசா இருக்கப்போகிறார்? எப்படியிருந்தாலும் வெளியே போய் விடுவாரல்லவா?” எண்ணிக் கொண்டேயிருந்தேன். நான் கிளப்புக்குள் நுழைவதற்கு முன்னரே அவர் அங்கே இருந்தார். “இவன் என்ன பெரிய அசடனாய் இருப்பான் போலிருக்கிறதே. எனக்கு முன்னமே இங்கே இருந்துகொண்டிருக்கிறான். ஆனாலும் இந்த நோட்டை இதுவரை எடுக்காதிருந்திருக்கிறானே!” என்று அவனை இழிவாக நினைத்துக்கொண்டிருந்தேன்.
இதற்குள் இட்டலியும் வந்துவிட்டது. இட்டலியைப் பார்த்தவுடன் எனக்குச் சிரிப்பு வந்தது. ‘என்னடா, என்றைக்கும் இந்த இழவு இட்டலி தானா? பணம் இருந்தாலும் ஒன்று; பணம் இல்லாவிட்டாலும் ஒன்றா? இன்றைக்குத்தான் பணம் இருக்கிறதே. நன்றாய் வயிறு நிறையத்தான் சாப்பிடுவோமே. ஆத்மத் துரோகம் பண்ணவே கூடாது’ என்று எண்ணிக்கொண்டு, ஸ்வீட்டே பிடிக்காது என்று நண்பர்களிடம் சொல்விக்கொள்ளும் நான் வயிறு கொள்ளும்வரை ஸ்வீட் சாப்பிடுவது எனத் தீர்மானித்தேன்.
ஆனால் கிளப்பில் பரிமாறுபவரோ என்னை வந்து ஒன்றுமே கேட்கவில்லை. ஏனென்றால் முன்பு அவரிடம் நான் “ஒரு இட்டலிமட்டும் கொண்டு வாருங்கள்” என்று கூறியதிலிருந்து “இவர் எங்கே இதைத் தவிர வேறு பணங்கொடுத்து வாங்கப் போகிறார்.” என அவர் நினைத்து விட்டார் போலும்!
நான் அவரை ஒருமுறை பார்த்து “சார், ஒரு பாசந்தி, ஒரு லட்டு, ஒரு ப்ளூட்சாலட் இவை யெல்லாம் கொண்டு வாரும்’ என ஆடம்பரமாய்க் கட்டளையிட்டேன். அப்பொழுது எனக்கு இருந்த ஆனந்தத்தில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு கட்டளையிட்டிருப்பேன். ஆனால், அங்ஙனம் செய்யாததற்குக் காரணம் எனது வலது காலின் அடியில் நோட்டிருந்ததே யாகும்.
ஸ்வீட் கொண்டுவரப் பட்டது.வயிறு புடைக்கச் சாப்பிட்டேன். ஆனாலும் அது வரை எனக்கு முன்னிருந்தவர் எழுந்திருக்கவே யில்லை. “இவர் ஒரு பெரிய சாப்பாட்டு ராமனாயிருக்கிறார். அதோடு ஒரு பெரிய சோம்பேறி. தின்று விட்டு விரைவாய்ப் போவாரா? சொந்த வீடுபோல நினைத்துக் கொண்டிருக்கிறாரே? இப்படித் தின்றுகொண்டேயிருந்தால் எழுந்து நடக்கமுடியுமோ?” என்று பலவாறாக எண்ணலானேன். அவர் போகிற வழியாய்த் தெரியவில்லை.
நான் எனது தூரதிர்ஷ்டத்தை நினைத்து வருந்திக் கொண்டேயிருந்தேன். காலுக்கு எட்டியது கைக்கு எட்டாமல் போய் விடுமோ என்றுகூடச் சந்தேகப்பட்டேன். இருந்தாலும் நானும் விடவில்லை. “வரட்டும். எவ்வளவு நேரமானாலும் விடுவதில்லை” என்று கங்கணம் கட்டிக்கொண்டேன். “ஒரு அரைக் கப் காப்பி கொடும்” என்றேன். காப்பி வந்தது. ஆறின காப்பியாயிருந்தாலும் சுடுவதுபோலப் பாவனை செய்து கொண்டே ஆற்றினேன். ஆற்றி ஆற்றிக் கை வலிக்க ஆரம்பித்துவிட்டது. ஆனாலும் அவர் எழுந்து செல்லவில்லை.
ஏதாவது அவர் செல்வதற்கான உபாயத்தைச் செய்யலாமென யோசித்தேன். சிறிதுநேரம் சென்று நான், “ஆஹா! நீந்துவதற்கு இதுதான் மிக மிக நல்ல நாள். என்ன ஜோரான நாள்! ஏன், நண்பரே! தங்களுக்கு நீந்தத் தெரியுமோ?” என்று அவரை வினவினேன்.
அவர்:- ஆஹா! ‘ரொம்ப நன்றாய் நீந்துவேனே. எங்கள் ஊர் திருச்சினாப் பள்ளி. அங்கே ஒரு நீச்சுப் போட்டி நடந்தது. அதிலே நான்தான் முதற் பரிசு வாங்கினேன்.
நான்:- அப்படி என்றால் இன்று நல்ல நாள் இல்லையா?
அவர்:- நல்ல நாள்தான். அதனாலே தான் சிறிது நேரத்துக்கு முன்னே சமுத்திரத்திலே நீந்திவிட்டு வந்தேன்.
இவ்வாறு கூறிவிட்டுக் கடியாரத்தைப் பார்த்தார்.
நான்:- நீங்கள் யாரையாவது எதிர்பார்க்கிறீர்களா, என்ன?
அவர்:- எனது நண்பர் ஒருவர் சரியாய் இங்கே 6 மணிக்கு வருவதாய் அறிவித்திருந்தார். மணி 6 1/4 ஆகியும் அவர் இன்னும் வரவில்லையே.
நான் :- இப்பொழுது மணி 6 1/4 தானா இருக்கும்? இந்தக் கடியாரத்தை நம்பவே கூடாது. இது எப்பொழுதும் இப்படித்தான் ஸ்லோவாகவே போகிறது; சந்தேகமில்லை. இப்பொழுது மணி 6 3/4 இருக்கும். இனிமேல் எங்கே வரப் போகிறார்? சண்டையை உத்தேசித்து ஊரெல்லாம் விளக்குகளை அணைத்து விட்டார்கள். ஒருவர் மூஞ்சி ஒருவருக்குத் தெரியவில்லை. இந்த இரூட்டிலா வருவார். சந்தேகமே வேண்டாம்; வரவே மாட்டார்.
அவர்:- இல்லை, இல்லை. எவ்வளவு நேரமானாலும் இங்கே அவர் வராமற் போகவே மாட்டார். அவர் சொன்ன சொல்லைக் கட்டாயம் காப்பாற்றுவார்.
இவ்வாறு அவர் வாய்மூடாமல் பதில் சொல்லிக்கொண்டேயிருந்தார். நோட்டு மேலே காலை அசைக்காது அரைமணி நேரத்திற்கு மேலாக வைத்திருந்ததால், எனக்கு விரலெல்லாம் வலிக்க ஆரம்பித்துவிட்டது. தொடை, நரம்பு எல்லாமே தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தன. ‘பொறுத்தார் பூமியாள்வார்’ என்ற பழமொழியை நான் நன்குணர்ந்தவனாதலால், காலைப் பூமியைவிட்டு எடுக்காமல் கெட்டியாய் நோட்டின்மேலே வைத்துக் கொண்டிருந்தேன்.
எதிரிலுள்ள மனிதர் எழுந்துபோவதாய்த் தெரியவில்லை. அவரும் என்னைப் போலவே நன்கு பணத்தைச் செலவழிப்பவர் போலத் தோன்றினர், ஏராளமான பலகாரத்தை வாங்கி உள்ளே திணித்துக்கொண்டே யிருந்தார்ர். ஏதாவது யுக்தி செய்து பணத்தை எடுக்கலாமென எண்ணினேன். மெதுவாக டவலைக் கிழே போட்டேன்.
நான் குனிந்து எடுக்கப் போகுமுன் அந்த மனிதரும் கீழே குனிந்து “என்ன? எதையாவது காணோமா?” என்று கேட்டார்.
நான் “ஒன்றுமில்லை. டவல் கீழே விழுந்துவிட்டது. அதைத்தான் எடுக்கக் குனிந்தேன். வேறொன்றுமில்லை” என்றேன்.
வெளியே அவ்வாறு நயமாக அவருடன் பேசினாலும் உள்ளூா அவரை வெட்டிவிடலாமா என்று தோன்றியது. “கால் வேறு தொந்தரவு படுத்துகிறது. இவன் வேறே எழுந்து தொலையாது கழுத்தை அறுக்கிறனே!” என்று மனதுக்குள் திட்டிக்கொண்டேயிருந்தேன். திட்டி என்ன பிரயோசனம்? இருவரும் ஒருவரை யொருவர் பார்த்துக் கொண்டு கொஞ்சநேர மிருந்தோம்.
அவர் கீழே குனிந்து பார்ப்பார்; தும்முவதுபோலப் பாவனை செய்வார்; டவலால் மூக்கைத் துடைப்பதுபோல் கீழே குனிவார். இவ்வாறு அங்க சேஷ்டைக ளெல்லாம் செய்து கொண்டேயிருந்தார்.
சில நிமிஷங்கள் சென்றன. எனது காலை அவர் மிகக் கூர்மையாகச் சந்தேகத்துடன் கவனிக்க ஆரம்பித்துவிட்டார். நான் சமாளித்துக்கொள்ள நினைத்து, “என்ன எனது பூட்ஸையே பார்க்கிறீர்கள்? அது என்ன அழுக்காயிருக்கிறதா அல்லது புது மாடலா? இதைவிட நல்ல மாடல் பூட்ஸெல்லாம் கடையில் இருக்கிறதே?” என்றேன்.
அவர் இதுதான் சமயம் என்று பூட்ஸைப் பார்ப்பதுபோலவே எனது காலுக்குக்கீழே கூர்மையாகக் கவளிக்க ஆரம்பித்துவிட்டார்.
சரி, இனிப் பேச்சை நிறுத்திக் கொள்வதே மெலென எண்ணி நிறுத்தி விட்டேன்.
பிறகு மெதுவாக அவர், “பூட்ஸ் ஒன்று மில்லை. இங்கே தரையிவே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி ஒரு பத்து ரூபாய் நோட்டு இருந்ததே அதைத்தான் பார்த்தேன். வேறொன்றுமில்லை” என்றார்.
எனக்கு மூகம் மூன்றாம் ‘பேஸ்’ வைத்தவன் மூஞ்சிபோல் ஆகிவிட்டது. கீழே குனிந்து விரைவாய் நோட்டை எடுத்தேன்.
நான் :- இதுதானா அந்த நோட்டு?
அவர்:- ஆமாம்.
நான் :- உம்முடையதா இது?
அவர்:- இல்லை.
நான் :- அப்படியானால் என்ன யோசிக்கிறீர்?
அவர்:- ஒன்றுமில்லை. அந்த நோட்டை நான்தான் முதலில் கண்டது.
நான் :- பிறகு, ஏன் முதலில் நீர் அதை எடுக்கவில்லை? அல்லது என் போலக் காலைவைத்து என் மூடிக் கொள்ளவில்லை?
அவர்:- நீர் எழுந்துபோன பிறகு எடுத்துக் கொள்ளலாமென நினைத்தேன். ஆனால் நீர் எழுந்து போவதாய்த் தெரியவில்லை. அதுதான் என் தாமசத்துக்குக் காரணம்.
நான் :- ஆமாம். பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? அந்தப் பணத்திற்கு என்ன வாங்கலாம் என யோசித்து, வேண்டியதெல்லாம் வயிறு நிறையச் சாப்பிட்டேன்.
அவர்:- ஐயோ! நானும் அந்தப் பணத்தை நம்பியல்லவா ஏராளமாய்த் தின்றுவிட்டேன்! இப்பொழுது என்ன செய்வது?
நான்:- உம், ஒன்றும் சத்தம் போடாதேயும். இருவரும் நோட்டைப் பங்கு போட்டுக் கொள்ளுவோம். ஆளுக்கு ஐந்து ரூபாய் எடுத்துக்கொள்ளலாம்.
அவரும் சரியென ஒப்புக்கொண்டார். இருவரும் ஒன்றாய் எழுந்து இரண்டு பில்களுக்கும் பணத்தைக் கொடுத்துவிட்டு மீதியைப் பங்கு போட்டுக்கொண்டோம்.
பிறகு நான் எனது அதிர்ஷ்டத்தை எண்ணிச் சந்தோஷப்பட்டுக்கொண்டு (பத்து ரூபாய் நோட்டுக் கிடைத்தால் அடையும் சந்தோஷத்தில் பாதிதான் இது) வீட்டை நோக்கிச் சென்றேன்.
வீட்டுக்குச் சென்று, கோட்டின் மேற்பையில் கையை விட்டு, என் பங்குப் பணத்தை எடுத்து மேஜை மேல் வைத்து விட்டு, கீழ்ப் பையில் கையை விட்டேன். ஐயோ! பையில் போட்டுக் கொண்டு போயிருந்த 10 ரூபாய் நோட்டைக் காணோம்.
அதற்குப் பதிலாக ஒரே ஒரு பெரிய ஓட்டைதானிருந்தது!
– சக்தி: விக்கிரம, கார்த்திகை, நவம்பர் 1940
அழ.வள்ளியப்பா வை.கோவிந்தனின் ‘சக்தி’யில் 1940-இல் சேர்ந்தார். அங்கிருந்த தி,ஜ.ர போன்றோர் ஊக்குவிக்கவே, ‘சக்தி’யில் கதைகள் எழுதத் தொடங்கினார். இதோ அவர் எழுதிய முதல் கதை! 1940 ‘சக்தி’ நவம்பர் இதழில் வெளியானது. ஓர் ஆங்கிலக் கதையின் தழுவல் என்று ’சக்தி’ ஆசிரியரே இதைச் ‘சக்தி’யில் அறிமுகம் செய்கிறார்.