ஆன் லைன் வர்த்தகமும் அப்பாவி அண்ணாசாமியும்

 

“கொரியர்!”

குரல் கேட்டதும் ஓடிப் போய் கதவைத் திறந்தார் அண்ணாசாமி.

“மணிகண்டன்’ னு யாராச்சும் இருக்காங்களா?”

“ஆமாம்! எதிர் ஃப்ளாட்! வீடு பூட்டியிருக்கே? அவரு சனி ஞ்£யிறு தான் வீட்டில இருப்பாரு!”

“நீங்க மிஸ்டர் அண்ணாசாமியா? ஒங்க கிட்ட குடுக்க சொல்லி சொன்னாங்க!”

“சரி! குடுங்க! ராத்திரி அவரைப் பார்த்து குடுத்துடறேன்!” என்று அந்த பெரிய பார்சலை வாங்கிக் கொண்டு போய் உள்ளே வைத்ததும் மொபைல் ஒலித்தது.

“அப்பா! வீட்டில தானே இருக்கீங்க?” மருமகள் தான். அலுவலகத்திலிருந்து கூப்பிடுகிறாள்.

“ஆமாம்மா! என்ன விஷயம்? சொல்லு!” என்றார்.

“ஒண்ணுமில்ல. என் பேருக்கு ஒரு கொரியர் வரும். ஒங்க கிட்ட சொல்ல மறந்திட்டேன்!”

“அதுக்கென்னம்மா? வந்தா வாங்கி வெக்கிறேன்!”

“தேங்க்யூப்பா!” என்று லைன் ஆஃப் ஆனது.

உடனே வாசலில் அழைப்பு மணி ஒலித்தது.

“சார்! ஸ்ருதி இந்த வீடுங்களா? ஒரு கொரியர் இருக்கு!”

மருமளுக்கு வந்த கொரியரை கையெழுத்திட்டு வாங்கினார். இதுவும் கிட்டத்தட்ட எதிர் வீட்டுக்கு வந்த கொரியரைப் போலவே பெரிய பார்சலாக இருந்தது.

கொரியர் மாறிப் போய்விடப்போகிறதே என்று எதிர் வீட்டு கொரியரை ஹாலில் சோஃபாவிற்கு அடியில் வைத்தார். ஸ்ருதிக்கு வந்த கொரியரை பெட் ரூமில் கட்டிலில் வைத்தார்.

திரும்ப மொபைல் ஒலித்தது. கீழ் ப்ளாட்டில் குடியிருக்கும் ரமேஷ்.

“அங்கிள்! வீட்டில இருக்கீங்களா?”

“ஆமாம்ப்பா! என்ன வேணும் சொல்லு”

“பானு கொழந்தையை கூட்டி வர ஸ்கூலுக்குப் போயிருக்கா. எனக்கு ஒரு கொரியர் வந்திருக்காம். கீழேயிருந்து கொரியர் பையன் ஃபோன் பண்ணினான். அதான் நீங்க மேல இருந்தா வாங்கி வைக்க முடியுமான்னு கேக்கலாம்னு தான் அங்கிள்!”

“வரச் சொல்லுப்பா! வாங்கிக்கிறேன்!”

“ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்! நீங்க கீழே போக வேணாம். பானு வந்ததும் மேலே வந்து வாங்கிக்க சொல்றேன். ஸாரி ஃபார் தி ட்ரபிள் அங்கிள்!”

எல்லாம் ஒரே மாதிரி பார்சலாக இருக்கவே ரமேஷ§க்கு வந்த கொரியரை அடையாளமாக ஃப்ரிட்ஜ் மேல் வைத்தார். மணியைப் பார்த்தார்.

‘மணி ஒன்றாகி விட்டதே? சாப்பிடணுமே?’

மருமகள் வங்கியில் வேலை பார்க்கிறாள். தனக்கும் ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் கணவனுக்கும் பகல் உணவு டிஃபன் பாக்ஸில் கட்டி வைத்து மாமனாருக்கான உணவை சாப்பாட்டு மேஜை மேல் வைத்து, “நேரத்துக்கு சாப்பிடுங்க!” என்று அக்கறையாக சொல்லி விட்டு தான் போகிறாள் தினமும். வீட்டில் பகல் வேளையில் தனியாக இருப்பதால் தானே மணியைப் பார்த்து ‘சாப்பாட்டு நேரம் வந்திடிச்சே!’ என்று தட்டையெடுத்து வைத்துக் கொள்வதாக இருக்கிறது.

தனியாக சாப்பிடுவது எவ்வளவு கொடுமைன்னு அவருக்குத் தான் தெரியும். மனைவி உயிரோடு இருந்தவரை இருவரும் தினமும் காப்பி கூட ஒன்றாகத் தான் குடிப்பார்கள். இப்போது எல்லாம் மாறி விட்டது. மகனும் மருமகளும் உட்கார்ந்து சாப்பிடக் கூட நேரமில்லாமால் நின்றபடியே காலையில் இரண்டு இட்லிகளை விழுங்கி விட்டு ஓடுகிறார்கள். பகல் உணவு டப்பாவில் அடைத்து எடுத்துப் போகிறார்கள். இரவு நேரமானால் வரும்போதே மருமகள் மெஸ்ஸிலிருந்து சப்பாத்தி வாங்கி வந்து விடுவாள். அதை அவரவருக்கு பசிக்கும்போது தின்று கொள்ள வேண்டியதுதான்.

வயதானதால் பகல் உணவுக்குப் பிறகு சற்றே கண்ணை அசத்தும். நிச்சியமாக கொஞ்ச நேரம் உடம்பைக் கிடத்தியெடுக்கணும். ஆனால் அந்த நேரந்தான் அழைப்பு மணி ஒலிக்கும். “ஆசிரமத்திலிருந்து வறோம். ஒங்களாலானது ஏதாச்சும் நன்கொடை குடுக்கிறீங்களா?” என்பதிலிருந்து “சூடிதார் வேணுமா?”, “பாய் வேணுமா?”, “சிடி வாங்கிக்கிறீங்களா? கொழந்தைங்க ‘ரைம்ஸ்’ இருக்கு!” என்று விதவிதமாக அழைப்புகள். சமீபகாலமாக ஆன் லைன் வர்த்தகம் அதிகரித்து ஜட்டி, பனியன், புடவை, பாத்திரம், ஷெல்ஃப், பெட்ஷீட் என்று எல்லாம் வீட்டுக்கே கொரியர் மூலமாக வருகிறதே?

கீழே ரமேஷ் வீட்டில் குழந்தைக்கு பால் பாட்டில், நிப்பிள்,
நாப்கின், ட்ரெஸ் என்று சகலமும் கொரியர் மூலந்தான். பாதி நேரம் பானு கைக்குழந்தையை தூக்கிக் கொண்டு கடை, கண்ணி அல்லது மூத்த குழந்தையை கூட்டி வர பக்கத்துத் தெரு பள்ளிக்கோ சென்று விடுகிறாள். சரியாக அவள் அந்தப் பக்கம் போய்விட்டாளா என்று பார்த்துக் கொண்டு வருவது போல அந்த நேரத்தில் தான் கொரியர் பையன் வருவான். வர வர, ரமேஷ் வீட்டுக்கு கொரியர் வந்தால் அண்ணாசாமி வாங்கி வைத்து விடுவார் என்ற அசாத்திய நம்பிக்கை கொரியர் பையன்களுக்கு வந்து விட்டது. நேரே படியேறி வந்து விடுகிறார்கள்.

மாலை ஐந்து மணிக்கு மற்றொரு கொரியர் மணிகண்டனுக்கு. வாங்கி மறக்காமல் ஹாலில் சோஃபாவிற்கு அடியில் (மணிகண்டனுக்கு வரும் கொரியருக்கான இடம்) வைத்தார். இப்போது தான் புதிதாக எதிரே குடி வந்திருக்கிறான். அடுத்த மாதம் கல்யாணம் ஆகப் போகிறது. வீட்டுக்கான சாமான்கள் எல்லாமே ஆன்லைனில் தான் வாங்குகிறான்.

அன்று காலை மணிகண்டனுக்கு முதல் நாள் வந்த கொரியர் பாக்கெட்டெல்லாம் கொடுத்த போது, அவன் தயங்கித் தயங்கி ஒரு பாக்கெட்டை அவரிடம் கொடுத்தான்.”அங்கிள்! ஷ¨ ஆன்லைன்ல வாங்கினேன். சைஸ் சரியா இல்ல. ரிடர்ன் கொரியர்னு ஒரு கொரியர் பையன் வந்து இதை வாங்கிட்டு போவான். கொஞ்சம் குடுத்திடறீங்களா?” என்றான்.

‘அடப் பாவி!’ கடைக்குப் போய் கால்ல போட்டுப் பார்த்து வாங்க வேண்டிய ஷ¨வை இப்படியா ஆன்லைன்ல வாங்குவாங்க? பக்கத்து வீட்டுக்காரங்களை எப்படித்தான் படுத்துவது என்று ஒரு முறையேயில்லையா’ கொதித்துப் போனார் அண்ணாசாமி.

இரண்டு நாட்களாக மூன்று வீட்டுக்கும் கொரியர் வாங்கி வாங்கி கை காலெல்லாம் அசந்து விட்டது அண்ணாசாமிக்கு. ராத்திரி மகனும் மருமகளும் பேசிக் கொண்டிருந்ததிலிருந்து தான் விஷயம் விளங்கிற்று அவருக்கு. ஆன் லைன் கம்பெனிக்காரர்கள் ‘ஆடித் தள்ளுபடி’ விற்பனை அறிவித்திருக்கிறார்களாம். அதான் எல்லோரும் போட்டி போட்டுக் கொண்டு அந்த சலுகையை பயன் படுத்தி வாங்குகிறார்களாம். மருமகளுக்கு சலுகை விலையில் ‘ஹேண்ட் பேக்’, சூடிதார் எல்லாம் வந்தது கொரியரில். மகனுக்கு எலக்ட்ரிக் ஷேவிங் செட், புதுவிதமான டிசைனில் ‘டீ ஷர்ட்’!

கண் பார்வையில் சிறிது தடுமாற்றம் இருப்பதால் இருட்டியதற்கப்புறம் அண்ணாசாமி வெளியே போவதில்லை. போவதென்றால் மாலை ஐந்து மணிக்குள்ளாக சென்று வருவார். ‘வாக்கிங்’ எல்லாம் காலையிலேயே முடித்துக் கொள்வார். என்ன ஒன்று, அவருக்கு ‘மூக்குப் பொடி’ போடாமல் முடியாது. பொடி டப்பா காலியானால் உடனே கடைக்கு ஓட வேண்டும். ஒரு எட்டு கடைக்குப் போய் விட்டு வந்து விடுவோம் என்று வீட்டைப் பூட்ட பூட்டைக் கையிலெடுக்கும்போதே அடுத்த கொரியர் வந்து விடுகிறது. அவர் காலையில் வாக்கிங் போகும்போது ‘மூக்குப் பொடி’ விற்கும் கடை திறந்திருக்காது. அது தான் கஷ்டம். இன்று சுத்தமாக பொடி இல்லை. தவித்துப் போனார்.

மாலை ஐந்து மணிக்கு வீட்டைப் பூட்டி விட்டு மெதுவாக படியிறங்கி வாசலுக்கு வந்தபோது அங்கேயே அவரை எதிர் கொண்டான் வழக்கமாக வரும் கொரியர் பையன். அவன் கையில் கனக்கும் பாக்கெட்டுகள்.

“சார்! வெளியிலேயா போறீங்க? எல்லா வீட்டுக்கும் கொரியர் இருக்குங்களே?” என்றான்.

வாயே திறக்காமல் படியேறி மேலே போன அண்ணாசாமி கையெழுத்திட்டு எல்லா பார்சல்களையும் வாங்கி வைத்துவிட்டு அவனைப் பார்த்து பரிதாபமாகக் கேட்டார்.

“ஏன் தம்பி? ஆன்லைன்ல மூக்குப்பொடி ஆர்டர் செய்ய முடியுமா? கொண்டு வந்து குடுப்பீங்களா?”

ஒரு கணம் ஒன்றும் புரியாமல் கண்கள் அகல அவரை விழித்துப் பார்த்த கொரியர் பையன் அடுத்த நிமிடம்,”என்ன சார் இது? இப்பிடி தமாஷ் பண்றீங்களே?” என்று வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்கத் தொடங்கினான்.

- லேடீஸ் ஸ்பெஷல் தீபாவளி மலர் 2016 

தொடர்புடைய சிறுகதைகள்
காசியில் கங்கைக்கரையில் தஸாஸ்வமேத கட்டத்தில் ஏழு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே மாலை நேர கங்கா ஆரத்திக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன. ஒரே மாதிரி உடையலங்காரத்துடன் ஒவ்வொரு வளைவிலும் பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட பாலகர்கள் பூஜையை ஆரம்பித்தனர். கரையிலிருந்து சற்று நேரம் ஆரத்தி ஏற்பாடுகளை ...
மேலும் கதையை படிக்க...
மஞ்சு கை கால்களெல்லாம் ஓய்ந்து போய் படுத்தாள். எப்போதடா பொழுது விடிந்து இந்த நீண்ட இரவு முடியும் என்று ஆயாஸமாக இருந்தது. நேற்று இரவு ஒன்றுமே விபரீதமாக நடக்காததைப் போல எப்பொழுதும் போல ஜகன் காலை எட்டு மணிக்குக் கண் முழித்து ...
மேலும் கதையை படிக்க...
காசியில் கங்கைக்கரையில் தஸாஸ்வமேத கட்டத்தில் ஏழு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. அங்கே மாலை நேர கங்கா ஆரத்திக்கான ஏற்பாடுகள் ஆரம்பித்தன. ஒரே மாதிரி உடையலங்காரத்துடன் ஒவ்வொரு வளைவிலும் பன்னிரண்டிலிருந்து பதினைந்து வயதுக்குட்பட்ட பாலகர்கள் பூஜையை ஆரம்பித்தனர். கரையிலிருந்து சற்று நேரம் ஆரத்தி ஏற்பாடுகளை ...
மேலும் கதையை படிக்க...
"இன்னும் எவ்வளவு நேரம் இங்கே உட்காரப்போறே?" என்றாள் வீணா முகத்தை சுளித்துக் கொண்டு. அவளுக்கு அவள் சலிப்பு! அவளுடைய பள்ளியில் முதலாவதாக வந்த பெண்ணுக்கு மட்டுந்தான் சென்ற வருடம் இங்கே இடம் கிடைத்ததாம். அந்தப் பெண்ணை விட ஓரிரு மதிப்பெண்கள் குறைவாக வாங்கி இரண்டாம், ...
மேலும் கதையை படிக்க...
இன்று ஞாயிற்றுக்கிழமை! விடுமுறை என்று பெயர் தான். ஆனால் இன்றும் ராபர்ட் வெளியே போய் விட்டான், யாரோ முக்கியமான கஸ்டமரை சந்திக்க வேண்டுமாம்! ராபர்ட் சர்ச்சுக்கு வந்து எத்தனை நாட்களாகிவிட்டன என்று நினைத்து வருத்தத்துடன் பெருமூச்செறிந்தவாறே டேவிட்டை அழைத்துக் கொண்டு ஞாயிறு பிரார்த்தனை ...
மேலும் கதையை படிக்க...
"கங்கிராட்ஸ்! நீங்க மறுபடி தந்தையாகப் போறீங்க!" டாக்டர் சொன்னதைக் கேட்டு வசீகரன் மனதில் ஏற்பட்ட அதிர்ச்சி அவன் முகத்தில் பிரதிபலித்தது. பதில் பேசாமல் டாக்டர் கொடுத்த மருந்துச் சீட்டை வாங்கிக் கொண்டு மைதிலியுடன் வெளியே வந்தபோது அவள் சந்தோஷமாக இருக்கிறாளா இல்லையா என்று ...
மேலும் கதையை படிக்க...
மழை விட்டிருந்தது. அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கிய வாணி விறுவிறுவென்று நடக்க ஆரம்பித்தாள். சட்டென்று இடது கால் கோணிக்கொண்டது. ஒரு நொடி குனிந்து அந்த கால் செருப்பு அறுந்திருப்பதை கவனித்தாள். சாலை ஓரமாக ஒரு குப்பைத்தொட்டி இருந்தது. ஜோடி செருப்பையும் அவிழ்த்து ...
மேலும் கதையை படிக்க...
"ஏ புள்ள! நானெல்லாம் அந்த காலத்துல நெதமும் எட்டு மைலு தொலவு நடந்து போய் படிச்சிட்டு வந்தவந்தான்! அப்போ மாதிரியா இருக்குது ஊரு இப்போ? ரோட்டு போட்டிருக்காங்க. அக்கம் பக்கத்து ஊருங்களுக்கு பஸ்ஸ§ ஓடுது?" இளங்கோ வாத்தியார் பேசுவதை பூங்கோதையும் காவேரியும் ...
மேலும் கதையை படிக்க...
உடம்பெல்லாம் கோபத்திலும் அவமானத்திலும் பதறியது வரதனுக்கு. நாலு பேர் எதிர்ல வச்சு எப்படி மட்டமா பேசிட்டாரு இந்த மொதலாளி, அதுவும் ஒரு சின்ன தப்புக்காக? வார்த்தீங்களா அது? நெருப்புத் துண்டங்களா இல்லே எடுத்து வீசினாரு? இன்னா சொன்னாரு? "ஸ்பானரு புடிக்கத் தெரியாத பயலுவளெல்லாம் எதுக்குடா பேண்ட்டை மாட்டிக்கினு ...
மேலும் கதையை படிக்க...
ஆடி வெள்ளிக்கிழமை! ஆடி வெள்ளிக்கிழமையென்றாலே மைத்ரேயியின் அலுவலகத்தில் பட்டுப்புடவை சீருடைதான். இன்று என்ன புடவை கட்டிக் கொண்டு போவது என்று யோசித்துக் கொண்டு இருந்தாள் மைத்ரேயி. படுக்கையறை கட்டிலின் மீது புடவைகளை கடை பரப்பிக் கொண்டு உட்கார்ந்தாள். நிச்சியதார்த்தப் புடவை? சம்பங்கி வண்ணத்தில் வைர ஊசிகள் ...
மேலும் கதையை படிக்க...
சின்னஞ்சிறு பெண் போலே…
போராட்டம்
சின்னஞ்சிறு பெண் போலே…….
இழந்ததும் பெற்றதும்
தற்காலிக உன்னதங்கள்
ஒன்றா…. இரண்டா?
சொல்லாமலே…
ஜான்சி ராணிகள்
மனம் ஒரு குரங்கு!
இவர்களும் வேலைக்குப் போகும் பெண்கள் தான்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)