ஆன்லைன் டாக்டர் – ஒரு பக்கக் கதை

0
கதையாசிரியர்:
கதை வகை: ஒரு பக்கக் கதை
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: June 6, 2023
பார்வையிட்டோர்: 10,907 
 
 

அன்பர் சீக்காளி ஆன்லைனில் டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட்-க்கு பணம் செலுத்தியப் பின் குறிப்பிட்ட நேரத்தில் போனில் பேச ஆரம்பிக்கிறார்.

‘ஹலோ, ஹலோ, நலமேகம் டாக்டருங்களா?. என் பேரு சீக்காளி’.

‘வணக்கம். கன்சல்டன்சிக்கு வீடியோ கால்ல வாங்க. வழவழன்னு இல்ல கொழகொழன்னு இல்லாம சீக்கிரமா உங்கப் பிரச்சினை என்னன்னு சொல்லுங்க!’.

‘பிரச்சினை கொட்டிக் கிடக்குது டாக்டர். தலைக்கு மேலே பிரச்சினை , தலைக்குக் கீழே பிரச்சினை. வீட்டுக்கு உள்ளே ஒரு பிரச்சினை, வெளியேப் போனா ஒரு பிரச்சினை. ‘

‘உங்க பிரச்சினையை தெளிவா, விளக்கமா சொல்லுங்க. டைம் வேஸ்ட் பண்ண வேணாம்.’

‘சொல்றேங்க. வீட்டுலே ஒய்ப் அத செய்யி, இத செய்யின்னு சொல்றா. சும்மா இருக்க விடுறதது இல்ல. பசங்க நான் சொல்றத கேக்குறதில்ல. வெளியே நான் கடன் கொடுத்ததைக் கேட்கப் போனா ஆசாமி எஸ்கேப். பைனான்ஸ் கம்பெனி மூலமா நான் வாங்கின காருக்கு தவணை ஒண்ணு கட்டலேன்னு அவன் வந்து மிரட்றான். இப்படி விதவிதமா பிரச்சினை.

‘யோவ், இதெல்லாம் உன் சொந்த குடும்ப தனிப்பட்டப் பிரச்சினைப்பா. உன் உடம்புக்கு என்னப் பிரச்சினைன்னு கரெக்டா சொல்லுப்பா!.

‘நீங்களும் அந்த மாதிரி கரெக்ட்டா கேளுங்க டாக்டர், சொல்றேனுங்க. போன வாரம் ஹோட்டல்ல பிரியாணி சாப்பிட்டேன். பழசை சூடு பண்ணிக் குடுத்திருப்பான் போலிருக்கு. வாந்தி பேதி ஆச்சி. ரெண்டு நாள் கஞ்சி மாத்திரம் சாப்பிட்டுச் சரியாச்சி. அப்புறம் முந்தா நாள் ஒரு டிவியில் ஒரு இயற்கை வழி மருத்துவர் ‘காய்கறியெல்லாம் பச்சையா சாப்பிட்டா நல்லது. இல்லாட்டி அரைகுறையா ஆவியில வேக வச்சிச் சாப்பிட்டா நல்லது’ என்றார். அதெ என் ஒய்ப் அரைகுறையாக் கேட்டுட்டு சாதத்தையும் அரைகுறையா சமச்சியிருக்கா. அத சாப்பிட்ட எனக்கு ஜீரணமாகல.’

‘சுருக்கமாச் சொல்றத மெகா சீரியல் மாதிரி இழுக்கற. சரி, ப்ரீஸ்க்ரிப்சன் வாட்ஸப்பில் அனுப்பறேன். அப்புறம், டிவிலே யாரோ ‘இங்கிலிஷ் மருந்துலே நெறைய பக்கவிளைவு இருக்கு, கான்சர் எல்லாம் வர சான்ஸ் இருக்குன்னு சொல்றத வச்சி மருந்தை அரைகுறையாய் நிறுத்திடாதிங்க. சரியா?.’.

ஒரு சின்ன டவுட்டு!. ஒரு டாக்டர் வெயில்ல போனா வைட்டமின் டி கிடைக்கும்கிறாங்க. இன்னொரு டாக்டர் வெய்யில காஞ்சா UV லைட்டாலே கான்சர் வந்துடும்னுறாங்க. ஒரே குழப்பம். எதை நம்பறது டாக்டர்?

“நண்பகல் வெயில்ல வைட்டமின், UV ரெண்டுமே அதிகமா கிடைக்கும். ஆனா, காலையோ மாலையோ வெயில் மிதமா இருக்கறப்போ உலா போறது நல்லது. அளவு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு தானே?”.

“சரிங்க. டாக்டர், தப்பா நினைச்சிடாதிங்க. ஒன் அவர் முன்னாடியே டும்முன்னு இருந்த வயிறு சரியாய்டிச்சி. கன்சல்டிங் பீஸ் வேஸ்ட் ஆக கூடாதுன்னு, கொடுத்த காசுக்கு அரட்டை அடிக்கலாம்ன்னு தான் இத்தன நேரம் உங்ககிட்டப் பேசினேன். பொறுமையா கேட்டதுக்கு பதில் சொன்னிங்க. ரொம்ப நன்றி டாக்டர்”.

“சின்ன பிரச்சினையைப் பெரிசா பண்ணி நம்ம டைமை நல்லா வேஸ்ட் பண்ணிட்டார். இந்த நேரத்தில ரெண்டு பேஷண்டை பார்த்திருக்கலாம். நல்ல ஆசாமி” என்று டாக்டர் நலமேகம் முணுமுணுப்பது எதிர் முனையில் சீக்காளிக்கு நன்றாகக் கேட்டது.

– 09 மே 2023 – My Vikatan

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *