அவருக்கு ஒரு ஆசை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை
கதைப்பதிவு: December 2, 2022
பார்வையிட்டோர்: 1,797 
 

(1993ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

ஒவ்வொருவருக்கும் ஆசை வருவது இயல்பானது. பொதுவாக எழும் ஆசைகள் டெலிவிஷன் வாங்க வேண்டும். மாடி. வீடு கட்ட வேண்டும் போன்ற ஆசைகளே. ஆனால் திருவாளர் ராஜசாமிக்கு வந்ததோ புதுவித ஆசை.

பைத்தியகார ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டும். அவர்களின் நாகச்சுவையை மனதார ரசிக்க வேண்டும் என்பதே அந்த ஆசை!

அவருக்கு அந்த ஆசை வந்ததில் தப்பில்லை. ஏனெனில் அவரே பலவகைப் பைத்தியம்.

ராஜசாமியோ ஆரியக்கூத்து ஆடினாலும் காரியத்திலேயே கண்ணாய் இருப்பார். இதனால் அவரைக் காரியப் பைத்தியம் என்றே அழைப்பர்.

தினம் 24 மணி நேரமும் பெண்டாட்டி சொர்கனலெட்சும்யுடன் நாயும் கறிச்சட்டியும் போல் சத்தம் போடுவார்.

இச் சத்தத்தை தெருவால் போகிறவர்கள் கேட்டு விட்டு “என்னடா ஒரு பைத்தியம் கிடந்து கத்துது” என்று கூறிச் செல்வர்.

ரூபவாஹினி ‘மப்பெற் ஷோ’ வில் வரும் ஓணானின் தோற்றத்தை உடையவர் தான் ராஜசாமி.

அவரின் தலையழகோ எண்ணெய் பூசித் தடவிவிட்டால் பார்பவரின் முகம் தெரியும் வழுக்கல் மொட்டை.

அதனிடையே தப்பித் தப்பி நிற்கும் 4 நரைமயிர்கள் அவருக்கு ஐம்பது வயதை நினைவூட்டி நிற்கின்றன.

ஆனாலும் அவர் ஒரு ‘ரிட்டயர்’ என்ஜினியர்.

அவர் சிரித்தாலே போதும் அவர் கட்டியிருக்கும் தங்கப் பல் முதலாளி வர்க்கத்தின் சுரண்டலை வெளிக்காட்டும் சின்னமாக பளிச்சிடும்.

நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுவதற்காக நண்பர்களில் ஆலோசனையின்படி வெள்ளை பஸ் ஏறி அங்கொடைக்குப் போக ஆயத்தமானார்.

மருதானை பஸ் தரிப்பில் வெள்ளை பஸ்ஸுக்காகக் காத்திருந்தார். ஆனால் வெள்ளை பஸ் வரவேயில்லை. அதனால் ஏமாற்றமடைந்த ராஜசாமி சிவப்பு பஸ்ஸில் அங்கொடையை அடைந்தார்.

அங்கொடை ஆஸ்பத்திரியை அடைந்த ராஜசாமி அங்கிருந்த பைத்தியங்களை அடைத்து வைத்திருக்கும் அறையை எட்டிப் பார்த்தார்.

அங்கே ஏழு பைத்தியங்கள் சுவரருகே காதைக் கூர்மையாக்கிய வண்ணம் இருந்தார்கள்.

இந்நிகழ்ச்சியைக் கண்டதும் ராஜசாமிக்கும் சுவரில் என்ன சத்தம் கேட்கிறது! என்று கேட்க வேண்டும் என்ற அவா வரவே அவரும் சுவரருகே காதை வைத்து செவிமடுத்துக்கொண்டார்.

நீண்ட நேரம் சத்தம் எதுவுமே கேட்காததை உணர்ந்த அவர் பொறுமையை இழந்து ‘என்ன ஒரு சத்தத்தையும் காணவில்வையே?’ என்றார்.

அதற்கு பைத்தியக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து ‘நாங்கள் எவ்வளவு நேரமாகக் கேட்டுக்கொண்டிருக்கும் எங்களுக்கு ஒரு சத்தமும் கேட்கல்ல. இப்ப வந்த உங்களுக்கு எப்படிக் கேட்கும்?’ என்றனர்.

இதைக் கேட்டதும் ராஜசாமி என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கண்ணிரெண்டும் பிதுங்கி வெளியில் வர முழுசினார்.

அந்த நேரம் பார்த்தாற் போல அக்கூட்டத்திலிருந்த ஒருவன் ‘நீங்க ஆரு’ என்று கேட்டான்.

இதைக் கேட்டதும் ராஜசாமிக்கு உள்ளமெல்லாம் குளிரவே தனது பெருமையைக் காட்ட எண்ணி, தமிழ் நாட்டு முதலமைச்சர் எம்.ஜி.ஆர். என்ற தோரணையில் ‘நான் தான் என்.ஜி.நீர்.ராஜசாமி’ என்றார் பெருமையுடன்.

அவர் கூறியதைக் கேட்ட பைத்தியத்தில் ஒருவன் தனது வாயில் விரலை வைத்து ‘உஸ்… அப்படிச் சொல்லாதீங்க.

நானும் அப்படிச் சொல்லித்தான் என்னை இங்கு கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள்’ என்றான்.

அதற்கிடையில் இன்னொரு பைத்தியம் ‘இங்க ஓடி வாங்கடோ நம்மட மொட்ட வாத்தியார் வந்திருக்கார்டோ’ என்று கூறவே எல்லாப் பைத்தியங்களும் ராஜசாமியைக் குழுமி விட்டனர்.

அப்பொழுது அக்கூட்டத்தில் இருந்த ஒருவன் ராஜசாமியின் மொட்டையைத் தடவி ‘மொட்டை எண்டாலும் மொட்ட தான், சரியா வெல் முடி மாதிரித்தான் இருக்குது அச்சா மொட்ட’ என்றான்.

அதற்கு அடுத்தவன் ‘அப்ப இது நம்மட மொட்ட வாத்தியாரில்ல. வெல்மூடி வாத்தியாரோ’ என்றான்.

நிலைமையைச் சாமாளிக்க முடியாமல் திண்டாடிய ராஜசாமி தனது நரிப்புத்தியைப் பயன்படுத்தி தனது சேர்ட் பக்கெட்டுக்குள் இருந்த ஐந்து சதக் காசை எடுத்து மொட்டையைத் தடவிக் கொண்டிருந்தவனின் கையில் திணித்தார்.

அதற்கு அவனோ ‘ஓடி வாங்கடோ நம்மட வெல்மூடி வாத்தியார் எல்லோருக்கும் காசு கொடுக்கார்ரோ’ என்றான்.

உடனே எல்லாப் பைத்தியங்களும் காசைப் பறிக்கும் நோக்கில் அவர் மேல் தாவி சேர்ட்டையும், வேஷ்டியையும் இழுக்க (அதை ஏன் கேட்பான்) சேர்ட் கிழிந்து…வேஷ்டி உரிந்து அரை நிர்வாணம் …

இந்த இக்கட்டான நிலையில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள மீண்டும் தனது நரிப்புத்தியைப் பயன்படுத்தி ‘எல்லோரும் குத்துச் சண்டை பிடியுங்கோ பார்க்கலாம்’ என்றார்.

ஆறு பேரும் ஜோடி சேர்ந்து மூன்று கூட்டங்களாகக் குத்துச் சண்டையில் ஈடுபட்டனர்.

ஏழாவது நபருக்கு ஆள் கிடைக்கவில்லை. உடனே ராஜசாமி மேல் தாவிப் பாய்ந்து முகத்தில் இரண்டு மூன்று குத்துக் குத்தினான்.

ராஜசாமியின் முகத்தில் இரத்தம் பீறிட கீழே விழுந்தார். கீழே விழுந்தவுடன் ராஜசாமியின் வாயில் காணப்பட்ட தங்கக் கட்டுப் பல்லை எடுத்துக் கொண்டு ஒரே ஓட்டம் பிடித்தான்.

பல்லு பறி போனதை உணர்ந்த் ராஜசாமி ‘ஐயோ பல்லு! ஐயோ பல்லு!’ என்று கத்தினார். இவரின் சத்தத்தைக் கேட்ட ஏனைய நபர்கள் நிலைமைமைப் புரிந்து கொண்டு ‘எலிகள் கொண்டு போனதம்மா பல்லைப் பல் இளித்துக் காட்டி’ என்று கோரஸாகப் பாடினர்.

இனியும் நின்றால் மேலும் ஆபத்து வரும் என்று எண்ணிய ராஜசாமி பொடி நடையில் பஸ் தரிப்பு நிலையத்தை நோக்கி நடக்கலானார் ஒட்டைப் பல்லூடன்.

அப்பொழுது அருகேயிருந்த தேநீர்க் கடை வானொலிப் பெட்டி ‘ஐம்பதிலும் ஆசை வரும்’ என்ற பாடலை ஒலித்துக் கொண்டேயிருந்தது.

– ஓ. கே.குணநாதன் நகைச்சுவை கதைகள், முதற் பதிப்பு: அக்டோபர் 1993, ப்ரியா பிரசுரம், மட்டக்களப்பு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *