தத்தாத்ரேயன். அப்படி ஒரு பெயரை வைத்திருக்க வேண்டியதில்லை. வைத்துத் தொலைத்து விட்டார்கள். சாதாரணமாகச் சொல்வதற்கே கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். சொல்ல ஆரம்பித்த உடனேயே கேட்பவர் அலுப்படைந்து விட்டதாகத் தோன்றும். கல்யாணப் பத்திரிகையில் கூட இவன் இப்படித் தத்தகாரம் பாடிக்கொண்டு நிற்க, நறுக்குத் தெறித்தாற்போல் இரண்டே எழுத்தில் பெண் பெயர். ‘கீதா ‘.
‘எனக்கு ஓர் அலையஸ் போடுங்கோ ‘.
‘என்ன போட ? ‘
‘கிச்சா ‘.
கல்யாணம் முடிந்து எட்டு வருஷம் ஆகிவிட்டது. அந்த நினைவுகூட இந்த நேரத்தில் அனாவசியம். இப்போது செய்ய வேண்டியதெல்லாம் சத்தம் போட வேண்டியதுதான்.
‘நான் கிச்சா . லிப்டில் மாட்டிக் கொண்டிருக்கிறேன் ‘ என்று அலறினால் யாரும் புரிந்து கொள்வார்களா ? முழுப் பெயரைச் சொல்லி நாலுமுறை கூவினால் மூச்சு வாங்க ஆரம்பித்து விடும். அடையாளமாக இல்லாமல் இப்படி உபத்திரவமாகப் போகிற பெயரை வைத்தவர்களை .. சரி சரி .. வருஷா வருஷம் இறைக்கப்படுகிற எள்ளும் நீரும் வாங்கிக் கொண்டு அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கடும்.
திறக்க முடியாமல் லிப்டில் மாட்டிக் கொண்டவன் வேறு என்ன சொல்லிக் கதவை இடிப்பது ? ‘கிளெய்ம்ஸ் செக்ஷன் கிளார்க் லிப்டில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.. ‘ கிளெய்ம்ஸ் செக்ஷனில் முப்பத்தெட்டு கிளார்க். ‘கிளெய்ம்ஸ் செக்ஷனில் தஞ்சாவூர் ரீஜன் கிளெய்ம்ஸ் பார்க்கிற .. ‘ இதற்கு ‘தத்தாத்ரேயன் ‘ தேவலை.
இந்த லிப்டின் சங்கதி தெரிந்தும் இதில் வந்து மாட்டிக் கொண்டோமே என்று தன் மேலேயே கோபம் ஏற்பட்டது. அதுவும் எல்லோரும் வேலை முடிந்து வீட்டுக்குப் புறப்பட்டுப் போய் ஆபீஸ் அங்கங்கே இருட்டுத் தீவாக விளக்குகள் அணைக்கப்பட்டதற்கு அப்புறம்.
‘தஞ்சாவூர்லே பெரிய பார்ட்டி .. இன்னிக்குள்ளே நோட் தயார் செஞ்சுடுங்க. நான் நாளை மறுநாள் கிளெய்ம் ரிலீஸ் செய்யறதா வாக்குக் கொடுத்திட்டேன்.. ‘
மேனேஜர் நாலு மணிக்குச் சொல்லிவிட்டுப் பல்பொடி விற்கிறவன் போல் பெட்டியைத் தூக்கிக் கொண்டு கிளம்பிப் போய்விட்டார். பைல் பைலாகத் தேடிக் கூட்டிக் கழித்து எழுதுவதற்குள் ஏழு மணியாகிவிட்டது. முடியாது என்று சொல்லிவிடலம் என்றால் புரமோஷன் வருகிறது என்று ஆசை காட்டுகிறார்கள் பாவிகள்.
எல்லாம் முடிந்து நாலாவது மாடியிலிருந்து கீழே வந்து செக்யூரிட்டியில் சொல்லிப் பூட்ட வைத்து வீட்டுக்குக் கிளம்ப வேண்டும். ரங்கநாதன் தெருவில் யானையைத் தவிர மீதி எல்லாம் வாங்கிவர கீதா போட்டுக் கொடுத்த லிஸ்ட் பையில் இருக்கிறது. வாங்கிக் கொண்டு மின்சார ரயில் ஏற வேண்டும். அப்புறம் குரோம்பேட்டையில், ஸ்டேஷனிலிருந்து நேரு நகருக்கு லொங்கு லொங்கென்று நடை. வீட்டிலிருந்து ஸ்டேஷனுக்கு வரவும் திரும்பவும் சாயந்திரம் வீடு போகவும் வசதியாக எல்லோரும் ஸ்டேஷனில் சைக்கிளை நிறுத்தி வைக்கிறார்கள். சைக்கிள் விடத் தெரியாததால் அதற்கும் வழியில்லை. பையைத் தூக்கிக்கொண்டு நடந்தால் பத்து நிமிஷத்துக்கு மேல் ஆகும். ரிக்ஷா கிடைத்தால் சீக்கிரம் போகலாம்.
எல்லாம் யோசித்துக்கொண்டு லிப்டில் ஏறிக் கீழே வரப் பொத்தானை அழுத்திப் புறப்பட்டு, இதோ அந்தரத்தில் அந்தகாரத்தில் லிப்ட் நிற்கிறது.
மின்சாரம் இல்லையா, இல்லை வழக்கமான யந்திரக் கோளாறா என்று தெரியவில்லை. தனியாக மாட்டிக் கொண்டாகிவிட்டது. உலகத்துக்கு அறிவிக்க வேண்டும். வற்றல் குழம்பும் துவையலும் செய்து வைத்துவிட்டுக் கீதா காத்துக் கொண்டிருப்பாள். மாத ஆரம்பத்து சாக்லெட் கட்டிகளுக்காகக் குழந்தைகள் காத்திருப்பார்கள். கால் ஆணிக்குத் தடவக் களிம்புக்காக அம்மா காத்துக்கொண்டிருப்பாள். யாருக்கும் தெரியாது இவன் ஓர் இரும்புக் கூண்டில் அடைபட்டுக் கிடக்கிற விஷயம்.
டப்டப் என்று லிப்டின் கதவில் பலம் கொண்ட மட்டும் மோதினான்.
‘ஹலோ ..ஹலோ ‘
இது என்ன ஃபோனா ? சத்தம் வெளியே எப்படிக் கேட்கும் ? கீழே தெருவில் பஸ்ஸும், காரும் பாய்ந்து கொண்டிருக்கிற இரைச்சலில் யார் காதில் விழும் ?
போன மாதம் ஆபீஸ் நேரத்தில் டைப்பிஸ்ட் சுமதியும் இன்னொரு பெண் கிளர்க்கும் இப்படித்தான் மாட்டிக் கொண்டார்கள். வேலையைப் போட்டுவிட்டு செய்தி தெரிந்த எல்லோரும் ஓடி வெளியே நின்றார்கள்.
‘மேடம் .. தைரியமா இருங்க .. பயப்படாதீங்க .. இதோ வெளியே எடுத்துட்றோம் .. ‘
யாரோ லிப்ட் பதையில் தெரிந்த இடுக்கு வழியே பார்த்துக் கத்தினார்கள். எல்லோரும் கதவில் காதை வைத்துப் பார்த்தார்கள்.
‘அழறாங்கப்பா .. ‘
இவனும் காதை வைத்துப் பார்த்தான். ஒன்றும் கேட்கவில்லை. ஒரு மணி நேரம் போராடி வெளியே கொண்டு வந்து சேர்க்க, அந்தப் பெண்கள் வியர்த்து விறுவிறுத்து முகம் சிவந்து, சுற்றி நின்றவர்கள் கைதட்டி ஆர்ப்பரிக்க வீட்டுக்கு உடனே புறப்பட்டுப் போனார்கள்.
முந்தாநாள் ராத்திரி துக்கம் கலைந்தபோது இது நினைவுக்கு வந்தது. சுமதியோடு தான் லிப்டில் மாட்டிக் கொண்டதாகவும், கறுப்பிலும் களையாகச் சிரிக்கிற அவளோடு அந்த இருட்டில் தப்புக் கரியம் பண்ணி சந்தோஷமாக இருந்ததாகவும் மனது கற்பனை செய்து தூக்கம் கெட்டது.
இப்படிக் கற்பனை செய்ததற்குத் தண்டனையாகத்தானோ நாம் இன்று தனியாக மாட்டிக் கொண்டோம் ?
‘தப்புப் பண்ணினா சாமிகிட்டே மன்னிப்புக் கேட்கணும் .. சொல்லு சுக்லாம் பரதரம் .. ‘
சாமி. கைவிரல்கள் இருட்டில் கைப்பையை விரைந்து திறந்தன. உள்ளே ஏகப்பட்ட விஷயம். துண்டு துண்டுக்காகப் பேப்பர். வாசனையடிக்கிற இலைவீபுதி. இரண்டாக மடித்த ரூபாய் நோட்டுகள். பூக்காரனுக்குக் கொடுக்க, பஸ்ஸுக்குக் கொடுக்க என்று சேர்த்து வைத்த சில்லறை. பியூஸ் போட வந்த எலக்ட்ரீஷியன் ஐந்து ரூபாய் அன்பளிப்பு வாங்கிக் கொண்டு, போகும்போது அட்டையில் சுற்றிக் கொடுத்த ப்யூஸ் ஒயர் மிச்சம். பிளாஸ்டிக் அட்டையில் ரயில் சீசன் டிக்கட்.. எல்லவற்றுக்கும் அடியில் கடவுள்.
வெங்கடாசலபதி பிரதிமை. மரத்தில் தோராயமாகக் கூம்பு பிடித்த கிரீடமும், இரண்டு புறமும் வழிகிற மாலையுமாகச் செய்தது. யார் கொடுத்தது என்று நினைவு இல்லை. ரொம்ப நாளாகச் கூடவே இருக்கிறது. எல்லாவற்றுக்கும் தேவைப்படுகிற கடவுள். காலையில் கிளம்பும் போது நிலைப்படி தரையில் இடித்துச் சகுனத் தடை ஏற்பட்டால் பிரார்த்திக்க ..அலுவலகத்தில் தேடிய பைல் சீக்கிரம் கிடைக்காமல் போய் அதிகாரியின் கோபத்தை வாங்கிக் கொள்ளாமல் செய்ய .. யாரும் விரோதம் பாராட்டி முகம் கடுத்தால் விபரீதமாக விளைவு ஏற்பட்டு விடாமல் இருக்க .. எல்லாவற்றுக்கும் பிரார்த்தித்து மனதால் வருடக் கடவுள் வேண்டியிருக்கிறது. கைப்பையில் ஒரு கடவுள். கூட அலுவலகம் வந்து போகிறவர். பிரார்த்திக்க வேண்டும். ‘பகவானே.. லிப்ட் கீழே இறங்க வேண்டும்… ‘. பிரார்த்தனை பலிக்கக் கொஞ்சம் நேரமாகலாம். பாதகமில்லை. பலித்தால் போதும்.
நினைக்கும்போது ஆச்சரியமாகத்தான் இருந்தது. சின்ன வயசிலிருந்தே ஒரு கடவுள் எப்பொழுதும் கூட வருகிறார். படிக்கும் பொழுது அது உடுப்பி கிருஷ்ணனின் சுண்டு விரல் அளவு பிரதிமை. யாத்திரா ஸ்பெஷலில் போய்விட்டு வந்து பெரியப்பா கொடுத்து விட்டுப் போனது. காய்ந்து போன துளசி இலைகளும், நிறம் வெளுத்த சந்தனத் துகள்களும், கிருஷ்ணனோடு கூடப் பிரசாதப் பொட்டலத்தில் வந்தன.
சந்தனம் மணக்கிற கிருஷ்ணனை பூஜையறையிலிருந்து இரண்டே நாளில் கிளப்பி வருவது கஷ்டமாக இல்லை. எல்லோரிடமும் முகர்ந்து பார்க்க வைக்கத்தான் டிரவுசர் பையில் போட்டு எடுத்துப் போனது. அன்றைக்கு என்னவோ எப்ப்போதும் கடுகடுவென்று இருக்கிற கணக்கு வாத்தியார் ராஜமன்னார் இவனைப் பார்த்துப் பிரியமாகச் சிரித்தார். அன்றைக்குப் பாடமெல்லாம் சுலபமாகப் புரிந்த மாதிரி இருந்தது. கிச்சா தீர்மானித்துக் கொண்டான். இனி உடுப்பி கிருஷ்ணன் நம்மோடு இருக்க வேண்டியவர். டிரவுசர் பாக்கெட்டில் கோலிக்குண்டு, பம்பரத்தோடு கிருஷ்ணனுக்கும் இடம் ஒதுக்கப்பட்டது. குளிக்கப் போகும்போது மேசையில் எடுத்து வைத்துக் குளித்து விட்டு வந்ததும் மறுபடி பையில் திணித்துக் கொள்ளவும் பழகிவிட்டது. சிலநாள், விழுத்துப் போட்ட துணியோடு கிருஷ்ணரும் வெளுக்கப்பட்டார்.
பையில் அவர் இல்லாமல் போய் எந்த வாத்தியார் எப்போது திட்டுவாரோ, எதற்காக அடிப்பாரோ என்று பயந்து பயந்து இருக்க வேண்டி வந்தது. கல்லூரிக்குப் போகும்போது அந்தக் கிருஷ்ணன் விடை பெற்றுக்கொண்டு போய்விட்டார். படித்து வேலைக்குச் சேர்ந்து கல்யாணம் ஆகிறவரை எந்தக் கடவுளையும் கூட்டிக் கொண்டு போகவேண்டிய அவசியம் நேரவில்லை. வேலைக்கு இண்டர்வியூ வந்தபோது உடுப்பிக் கிருஷ்ணனைத் தேடிய நேரத்தில் கிடைக்கவில்லை. மேஜையில் தட்டுப்பட்ட பூச்சருகு ஒன்று இரண்டைப் பையில் திணித்துக்கொண்டு போனபோது சிரிப்பு வந்தாலும் ஆசுவாசமாகவும் இருந்தது.
கல்யாணத்துக்கு அப்புறம் எல்லாமே மாறிப்போனது. வீட்டில் பிக்கல் பிடுங்கல், அம்மாவுக்கும் மனைவிக்கும் ஆகிறதில்லை. பிள்ளைக்குத் திடார்க்க் காய்ச்சல். பெண் விளையாடுகிற பொழுது கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டாள். ஆபீசில் புதிதாக வந்த அதிகாரிகள் கஷ்டப்படுத்தினார்கள். நாளைத் தொடங்கும் போதே நல்லபடியகப் போக வேண்டுமே என்ற கவலை. எல்லாக் கடவுளையும் தினசரி விடிந்ததுமே துணைக்குக் கூப்பிட வேண்டி வந்தது. ஒவ்வொன்றுக்கும் ஒரு வேண்டுதல் .. மாவிளக்கு, வடை மாலை, மொட்டை, அங்கப் பிரதட்சணம் .. தேதிவாரியாகப் பட்டியல் போட்டு, எழுதி வைத்து நிறைவேற்றி ..
‘வீடெல்லாம் பிள்ளையார் எறும்பு. வினாயகருக்குப் பிடி கொழக்கட்டை நேர்ந்துண்டோமே நம்ம சாந்தாவுக்குத் தலையில் கரப்பான் வந்தபோது .. இன்னம் அதைப் பண்ணலியே .. அதுதானோ என்னவோ.. ‘
ஒவ்வொன்றாக முடிவதற்குள் புதிதாக ஒரு பிரார்த்தனை சேர்ந்து விடும். வீட்டு விஷயம் இப்படித் தீர்க்கப்பட்டுக் கொண்டிருக்க, ஆபீஸ் போகவும் துணை தேவைப்பட்ட போது யாரோ கொடுத்தார்கள் வெங்கடாசலபதி பிரதிமையை.
‘மரப்பாச்சிதானே .. குழந்தைக்குக் கொடுங்கோ .. ‘
கீதா சொன்னாள்.
கிச்சாவுக்கு மனமில்லை. சனிக்கிழமையும் அதுவுமாக வந்து சேர்ந்த கடவுளை அப்படிச் சாதரணமாகத் தூக்கிக் கொடுக்க மனம் வரவிலை.
‘இருக்கட்டுமே .. நானே வச்சுக்கறேன் என் ஆபீஸ் பேக்கில் .. ‘
‘அழகுதான் .. பச்சைக் குழந்தையாட்டம் மரப்பாச்சியைக் கட்டித் தூக்கிண்டு .. ‘
‘குழந்தைன்னு வச்சுக்கோயேன் .. ‘
‘குழந்தை ‘ இருட்டில் கைபையை இன்னொரு முறை தடவிப் பார்த்தது.
இருக்கிறார். கடவுள் பத்திரமகவே இருக்கிறார். இருட்டில் துணையாக. வழக்கம் போல் கை கொடுக்க.
‘ஆண்டவனே, எப்படியாவது என்னைக் கீழே கொண்டு போய்ச் சேர்த்துடு. எனக்கு, வேண்டாம், பிள்ளைக்க்கு மொட்டை அடிக்கறேன் .. ‘
திடாரென்று தோன்றியது கைப்பையில் இருக்கிற கடவுள் பேசப்போகிறார் என்று.
இன்னும் அதிகமாக வியர்த்தது. அப்படி ஏதும் நடந்து வைத்தால் ?
‘கிச்சாவா ? சாமி அருள் வந்த ஆள்ப்பா .. கிச்சா இல்லே, தத்தாத்ரேய தாசர் .. ‘
‘சாமி என் பொண்ணு கல்யாணம் தள்ளிக்கிட்டே போறது ..எப்ப வாய்க்கும்னு ஒரு வார்த்தை சொல்லணும் .. ‘
‘சாமி ஆபீஸ் விட்டு வந்து குளிச்சு காபி குடிச்சுட்டுத்தான் அருள் வாக்கு சொல்றது .. போய் ஏழு மணிக்கு வாங்கோ .. ‘
‘ஞாயிற்றுக் கிழமை மத்யானம் ரெண்டு மணிக்கு அழைச்சுண்டு வரட்டா ? ரொம்ப வேண்டப்பட்டவர். நிலம் சம்பந்தமா ஆறு வருஷமாக் கோர்ட்டிலே கேஸ் நடந்துண்டிருக்கு. எப்போ முடியும்னு கேட்கணும்னார் .. ‘
‘அடடா. லீவு நாள்லே, மத்தியானத் தூக்கத்தைக் கெடுத்துட்டோமா .. சாமிக்கு ரொம்பக் கஷ்டம் பாவம் .. ‘
‘ஜி.எம் உங்ககிட்டே கன்ஸல்ட் பண்ணணுமாம் .. பெர்சனல் பிராப்ளம் .. ‘
‘உங்ககிட்டே என்ன பாஷையிலே பேசுவார் கடவுள் ? ‘
‘சார் பங்களூர் யூனிவர்சிட்டியிலே ப்ரபசர் .. சைகிக் பினாமினா பற்றி ஆராய்ச்சி பண்றார் .. சாமி நேரம் கொடுத்தா சோதிச்சு .. இல்லே சந்தேகம் தீர்த்துக்கணும்னு .. ‘
வேண்டாம். பேசுகிற கடவுள் பொருந்தமாட்டார் புழங்குகிற வட்டம் எதிலும். பேண்ட், ஷர்ட், ஹவாய்ச் செருப்போடு தலைக்குப் பின்புறத்து ஒளிவட்டம் ஒத்துப் போகமுடியாது. அருள் பெற்றவன் ஓட்டலுக்குப் போய், ‘சக்கரை ஜாஸ்தியா ஒரு காப்பி ‘ என்று கேட்டுக் காத்திருக்கவோ, சவரபிளேடு வாங்கக் கடையேறவோ, லோக்கல் டிரெயினுக்கு இரண்டாம் வகுப்பு சீசன் டிக்கெட் எடுக்கவோ முடியாது. ராத்திரியில் மனைவியைச் சீண்ட முடியது. ஆபீஸில் அரட்டை அடிக்க முடியாது.
உள்ளபடிக்கே பயந்து போனான். எங்கேயாவது பேசி வைக்கப் போகிறார். கைப்பையில் கடவுள் வெறுமனே இருந்தால் போதும். அவ்வப்போது தொட்டுக் கொள்ள. இப்படி இக்கட்டு வரும்போது மனதாலும், கையாலும் வருட. தீர்ந்த பிறகு காணிக்கை செலுத்தி நன்றி சொல்ல.
பளீரென்று லிப்டில் விளக்கு எரியத் தடதடவென்று கீழே இறங்க ஆரம்பித்தது.
கீழே யாரும் செக்யூரிட்டியில் இல்லை. பக்கத்துக் கடைகளில் மெழுகுவர்த்தியை அணைத்துக் கொண்டிருந்தார்கள். மின்சாரம்தான் போய்த் திரும்ப வந்திருக்கிறது.
பெட்ரோல் வாடையும் தூசியும் நனைந்த காற்றைச் சுவாசித்தபடி, ஜனசமுத்திரத்தில் ஒரு புள்ளியாகக் கரைந்து ரயில்வே ஸ்டேஷனை அடைந்தபொழுது மணி எட்டரை. களைத்துப் போய் வீட்டுப்படி ஏற, ஹாலில் கடியாரம் வழக்கம்போல நாலேகால் என்றது. ‘ஞாயிற்றுக் கிழமை ரிப்பேருக்குக் கொடுக்கணும் ‘.
‘ஒவர் டைமா ? ‘
கீதா கண்ணில் கொஞ்சம் போல் சந்தோஷம். பணம் சேராவிடாலும் செலவழிக்கவாவது அதிகமாகக் கிடைக்கக் கூடும்.
‘டயர்டா இருக்கு .. அப்புறம் எழுப்பு .. ‘
சோபாவிலேயே சரிந்து தூங்கிப் போனான. குழந்தைகள் சுற்றிலும் ஓடிப்பிடித்து விளையாடிய சத்தம்கூடக் கலைக்க முடியாத தூக்கம்.
எழுந்தபோது விடிந்திருந்தது. பசி வயிற்றைக் கிள்ளியது.
‘ஏன்னா இப்படிப் படுத்தறேள் .. டாக்டர் கிட்டெப் போகச் சொன்னாலும் போறதில்லை. உங்க அம்மாவானா நான் உங்களைக் கவனிக்கறதே இல்லேன்னு வரவா போறாவாகிட்டே எல்லாம் புகார் பண்ணிண்டு இருக்கா. ராத்திரி நீங்க பாட்டுக்குச் சாப்பிடாமப் படுத்துண்டுட்டேள். விடிஞ்சதிலேருந்து எனக்கு சஹஸ்ரநாமம் ஆயிண்டு இருக்கு. நான் ராத்திரி உங்களை எத்தனை தடவை எழுப்பினேன் தெரியுமா ? அது என்ன, பேண்டைக் கூடக் கழட்டாம வந்தபடிக்கு சோபாவிலே படுத்து அப்படி ஒரு தூக்கம் ? உடம்புக்கு என்னதான் பண்றதுன்னு வயைத் திறந்து சொல்லவே மாட்டேளா ? ‘
‘ஒண்ணும் இல்லை. நான் நன்னாத்தான் இருக்கேன். சரி, ஏதாவது சாப்பிடக் கொடு. அப்புறம் காப்பி சாப்பிடறேன் ‘.
தூங்கி எழுந்து பல்தேய்த்துவிட்டுப் பால் குடிக்க சமையல்கட்டுக்குள் நுழைந்த குழந்தைகள், அவன் தயிர் சாதத்தை அவசரமாக விழுங்கிக் கொண்டிருந்ததை ஆச்சரியமாகப் பார்த்தார்கள்.
அலுவலகம் கிளம்பச் செருப்பு மாட்டிக் கொண்டிருந்தபோது கவனித்தான். சோபாவில் கைப்பை திறந்தபடிக்குக் கிடந்தது. எடுத்துப் பார்க்க உள்ளே கடவுளைக் காணோம்.
‘ராத்திரி பத்து மணி வரை விளையாடிண்டிருந்தது ரெண்டும். சத்தம் போட்டுத் தூங்க வச்சேன். சாந்தா உங்க பையைத் திறந்து ஒண்ணொண்ணா எடுத்து வெளியே போட்டுண்டிருந்தா. பிடுங்கி வைக்கறதுக்குள்ளே போறும் போறும்னு ஆயிடுத்து. ரொம்பவும் தான் செல்லம் கொடுத்து வச்சிருக்கேள் .. ‘
கடவுள் எங்கே ? சுற்றிலும் பார்த்தான். சுவர் ஓரமாக ஏழெட்டு பிளாஸ்டிக் பொம்மைகள். நடுவே கைப்பைக் கடவுளும். பழைய தினசரியைக் கிழித்துச் சடம்பால் கட்டிய வஸ்திரத்தோடு இருக்கிற கடவுள்.
‘அப்பா என் பொம்மையை எடுக்காதே .. ‘
குழந்தை வேகமாக ஓடிவந்து கையைப் பிடித்து இழுத்தது.
‘இல்லேடா கண்ணு.. அது எனக்கு வேணும்.. ‘
‘தரமாட்டேன் போ ‘ – அழ ஆரம்பித்தது.
கிச்சா பின்வாங்கினான். குழ்ந்தையை அழவைத்துப் பிடுங்கிக் கொண்டு போக மனம் வரவில்லை.
‘அப்பா.. ‘
அவன் படியிறங்கிக் கொண்டிருந்தபொழுது குழந்தை பின்னால் வந்து அவசரமாகக் கூப்பிட்டது.
‘நீ வேணுமானா இதை வச்சுக்கோ .. ‘
மூக்குச் சப்பையாய் ஒரு செலுலாய்ட் பொம்மையைப் பையில் போட்டது.
கிச்சா அலுவலகம் போகிறபோது கைப்பையில் கடவுள் இருந்தார்.
( ஆதம்பூர்க்காரர்கள் தொகுதி – 1992 – ஞானச்சேரி வெளியீடு)
அன்புள்ள கதாசிரியருக்கு,வணக்கம். இது போன்றதொரு குடும்பக் கதையைப் படித்து நீண்ட காலமாயிற்று.வாழ்த்துகள்ச.சிறு வயதில் எனக்கு’ஆபத்சகாயம்’என்றொரு பெயர் எங்கள் வீதியில் புழங்கியது.எப்படி ஏற்பட்டது என்பது நினைவில் இல்லை.அதனைச் சிலர்’ஆபத்து’என்று விளிப்பர்.நல்ல வேளை அப்பெயர் சிறு வயதிலேயே எப்படியோ மறைந்து போயிற்று.இப்பவும் என் பெயரை’சுவாழ்’என்று உச்சரிப்போரும் உண்டு.இச்சிறு கதை எனது இளம்பிராய நினைவுகளை அசை போட வைத்து விட்டது.இப்போது எனது வயது66.தங்கள் வலைத்தளத்திற்கும் கதாசாரியருக்கும் வாழ்த்துகளும்,பாராட்டுகளும் உரித்தாகுக.