அடடா மாமரத்துகதையே…..உன்னை இன்னும் நான் மறக்கலியே…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: நகைச்சுவை  
கதைப்பதிவு: April 27, 2016
பார்வையிட்டோர்: 32,722 
 
 

அது அந்த வீட்டின் பிரதான நபர். யார் யாரைப்பற்றி பேசப்பட்டாலும் விடிந்ததும் ஒரு முறை , பின் தூங்கப்போகும் முன் ஒரு முறை கட்டாயம் பேசப்பட்டுவிடும். அந்த வீட்டின் நாயகன் – மாமரம். இல்லை, நாயகன் என்பது பிழையோ..பூத்துக்குலுங்கும் அந்த சில மாதங்களில் புதிதாக தாவணி போட்ட பெண் போல இலைகளை சிலிர் சிலிர்த்து பூக்களாக சிரிக்கும். மாமரம் நாயகியோ? எதுவோ, பார்ப்பதற்க்கு கம்பீரமாக ஒரு மதர்ப்போடுதான் அந்த மரம் நிற்கும்.

சரி, கதைக்கு வருவோம்.

இதை எந்த நாளிலிருந்தும் ஆரம்பிக்கலாம். ஏனென்றால் எல்லா நாளிலுமே ஆரம்பம் மற்றும் முடிவு இந்த மரம் பற்றித்தான். அதனால் ஏதோ ஒரு ஞாயிற்றுக்கிழமை, வாரத்தின் முதல் நாள் காலை….

“வள்ளி, வேலய முடிச்சுட்டு ஓடிடாத. இன்னிக்கு தோட்டம் க்ளீன் பண்ணனும்”

“அம்மா வூட்டுல புள்ளக்கு ஜுரம், நாளைக்கு பண்றேனே”

“ வேண்டாம் வள்ளி, நீயும் ஆறு மாசமா ஏதோ காரணம் சொல்லிண்டு இருக்கே. இன்னிக்கு துணி தோய்க்க வேண்டாம். குப்பைய அள்ளிடு”

வள்ளியின் எரிச்சல் பாத்திரத்தின் மேல் விழுந்தது. ஏற்கனவே நமீதா நடனம் ஆடிக்கொண்டிருந்த குக்கரின் கைப்பிடி கையோடு வந்து விட்டது!

“அம்மா குப்பையை எரிச்சுடவா?”

தெருக்கோடியில் இருக்கும் குப்பை தொட்டிக்கு எடுத்துச்செல்ல சோம்பல் அவளூக்கு.

” வேண்டாம், புகை எரிச்சல்ன்னு பின்னாடி வீட்டுல சத்தம் போடறாங்க. கார்ப்பரேஷனுக்கு கம்ப்ளைன் பண்ணீடுவேன்னு சொல்றாங்க. குப்பை தொட்டியிலேயெ கொண்டு போய் போடு. எனக்கு பஜன் க்ளாஸ் இருக்கு, நா கெளம்பறேன். சுத்தமா பெருக்கி கொண்டு போடு”

பஜனை க்ளாஸ் என்று பஜனை செய்துவிட்டு வந்தபோது வீடு வாசலில் குப்பை மலை.

“ அய்யய்யோ! மாமா! நீங்க பாக்கலையா? வீட்டு வாசலிலேயெ போட்டு விட்டு போயிருக்காளே?”

“ ஏம்மா எங்கிட்ட சொல்லிட்டா போனே? எனக்கு எப்படி தெரியும்?

ஞாயிறு இரவு

“ வள்ளி ஃபோன் பண்ணினா, இனிமே வரமாட்டாளாம். அதனால தட்டை தேய்ச்சு வெக்கணும்

“ஏன் என்ன கேடாம்?”

“எல்லாம் இந்த மாமரம் தான்”

“அது பாட்டுக்கு தேமேன்னு இருக்கு. எதா இருந்தாலும் அது மேல பழியப்போடு. ஊருக்கு இளச்சது நாம் வீட்டு மாமரமா?”

“ஜோக் போறும், கார்த்தால குப்பை பெருக்கினா. சாயங்காலம் வரலேன்னு ஃபோன். நம்ம வீட்டுல வேலை ஜாஸ்தியா இருக்காம். கூட 200 ரூபாய் குடுத்தா வருவாளாம். சரி, வேண்டாம்னு நிறுத்திட்டேன்”

“யாரைக்கெட்டு நிறுத்தினே? 200 ரூவாய் எல்லாம் பீனட்ஸ்! குடுத்துடறேனு சொல்லி உடனே வரச்சொல்லு.”

“ஓக்கெ, அப்போ ஒரு அக்ரீமெண்ட். மாமரத்த வெட்டிடணும். நான் வள்ளிய வரச்சொல்றேன்.”

“போச்சு! மாமரம் எஙக வந்துது இங்க?”

“அந்த குப்பைய எடுக்கத்தான் அதிக சம்பளம். மலை மாதிரி குப்பை இருக்கு. யாரால இந்த வேல செய்யமுடியும்?”

” ஆரம்பிச்சுட்டியா? நீயாச்சு உன் வேலைக்காரியாச்சு. மரம் தெய்வத்துக்கு சமானம், வெட்ட முடியாது.”

அடுத்த நாள் காலை

“ சார்! கார்ப்பரேஷன்லேர்ந்து வரோம். வாசலிலேயெ இப்படி குப்பையை போட்டு வெச்சுருக்கீங்க? டிவி, பேப்பர் ன்னு எல்லாம் போடறாங்களே, கவனிக்க மாட்டீங்களா? ஃபைன் கட்டுங்க!”

“ஐய்யயோ! 500 ரூபாய் ரொம்ப ஜாஸ்தி! தெரியாம வீட்டு வேலைக்காரி பண்ணிட்டாங்க.”

“ஏங்க நாங்க என்ன வேலைக்காரி வீட்டுக்கு போயா ஃபைன் கேகமுடியும்? சுற்றுபுரத்தை சுத்தமா வெச்சுக்க வேண்டியது உங்க ட்யூட்டி, கடமை”

அந்த நேரத்திலும் இந்த மேஜர் சுந்தரராஜன் பேச்சு சிரிப்பு வந்தது. கூடவே “புளிச்”சென்று புகையிலை சாறு சுகாதாரமாக துப்பபட்டது!

“சார் இதப்பாருங்க எனக்கு 300 ரூபாய் குடுத்துடுங்க,நானே அள்ளிக்கொண்டு போட்டுர்ரேன்”

டீல் முடிக்கப்பட்டது.

அன்று இரவு

“ ஏண்டா சுரேஷ்!இந்த மாமரத்துக்கு எதானும் பண்ணேன்?”

“ ஏம்ப்பா, அதுக்கு என்ன நிறை மாசமாவா இருக்கு ஏதானும் பண்ண?

“ இல்லைடா!இன்னிக்கு வீண் செலவு! பத்மா என்கிட்ட சொல்லிட்டு போயிருந்தா குப்பை தொட்டில போட வெச்சிருப்பேன். நாம என்ன செய்யலாம். நம்ம காண்ட்ராக்டர் ஐ கூப்பிட்டு மரத்துக்கு அடியிலெ ஒரு நெட் அடிச்சுடலாம். நானே வாரத்துக்கு ஒரு தடவை கொண்டு போட்டுடுவேன்”

“ இதப்பாருங்கொ, 300 ருபாய்க்கு 3000 ரூபாய் செலவு. காபி டம்ளரை தேக்க முடியலை. இந்த குப்பையை கொண்டு போடமுடியுமா? பேசாம மரத்த வெட்டிடலாம்”

“ ஆரம்பிக்காதே! அதான் நாள் முழுக்க டீவி பாக்கற இல்ல, என்ன சொல்றான் வீட்டுக்கு ஒரு மரம் வெக்கணும்னு. இருக்கற மரத்த வெட்டறேனு கெளம்பாதே, ஸ்டுப்பிட்!

செவ்வாய்க்கிழமை காலை

” அம்மா ஸ்கூல் கரஸ்பாண்டண்ட் மண்டயப்போட்டுட்டார், லீவு. ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் நாம்ம வீட்டுக்கு வெளையாட வருவா, கிரிக்கெட் ஆடப்போறோம்”

“ குட்! என்னோட பழைய கிரிக்கெட் பாட் கூட இருக்கு,அந்தக்கலத்துலேயெ நம்ம தெருப்பசங்க எல்லாம் இந்த மாமரத்தடியில தான் கிரிக்கெட் ஆடுவோம். அதோ அங்க தான் போலிங். மாமரத்துல பட்டா ஃபோர். வா, எங்க ரூல்ச் சொல்லறேன் அதையே நீங்களும் ஃபாலோ பண்ணலாம்!”

“ என்னது அந்த வெய்யில்லியா நாள் முழுக்க விளையாடப்போறே?

“ போடி வெய்யிலாவது ஒண்ணாவது? இந்த மாமரத்தோட நிழல் எத்தனை ஜிலு ஜிலுன்னு இருக்கு, அது தனி சுகம்”

அன்று மாலை

“ அம்மா ப்ரவீனோட அம்மா ஃபோன் பண்றா உன்னோட பேசணுமாம்”

“ஹல்லொ நான் பத்மா! கார்த்தால ப்ரவீன் வந்தானே,ரொம்ப ஸ்மார்ட். என்னமா பழகறான்?

“ என்னது…..’ என்ன என்ன சொல்லுங்கோ….”

இரவு

“ப்ரவீன் அம்மா ஃபோன்ல ஒரே சண்டை. மாமரத்து பூச்சி கடிச்சு உடம்பு முழுக்க தடிமனா வீங்கி இருக்காம். இப்படி கண்ட குப்பயிலா வெளையாட விடுவீங்கன்னு ஒரே சத்தம். டாகடர் சொன்னாராம், மாமரத்து இலையில வண்டு இருக்குமாம், குழவி மாதிரி கொட்டினா அரிப்பு போகாதாம்.”

சுரேஷ் அடுத்த பேச்சுக்கு காத்திருந்தான்.

“மாமரத்த வெட்டிடுங்கோ. நம்ப குழந்தைக்கும் இது கேடுதானே. இவனானா அந்த மரத்தடியிலேயெ போய் விளையாடறான்”

”இங்க பாரு, இந்த மாமரம் என்னோட உயிர். நான் கட்டையோட போனதுக்கு அப்புறம் நீ அந்த கட்டையும் தூக்கிப்போடு”

அடுத்த நாள் காலை

”பத்மா இன்னிக்கு எங்கேயும் வெளின போகாத, மாமரத்துக்கு பூச்சி மருந்து அடிக்க சொல்லியிருக்கேன். எனக்கு ஆஃபீஸ் போயாகணும். கூடவே பக்கத்துல இருந்து பாத்துக்கோ”

“ வேற வேல இல்ல. மரமே வேண்டாங்கறேன் அதுக்கு பூச்சி மருந்து வேறயா? எனக்கு ஆஸ்துமா. அந்த மருந்து எனக்கு ஒத்துக்காது”

இரண்டு பேர் வந்தனர்.

“மருந்து வீட்டுக்குள்ள வந்துடும்மா. ஜன்னல் கதவ சாத்திடுங்க”

“ போப்பா நீயே உள்ள போய் சாத்திடு, எனக்கு வேல இருக்கு”

கதவு சாத்த ஒரு தரம், பரணிலிருந்து ஸ்டூல் எடுக்க ஒரு தரம், துடப்பம் கேட்க ஒரு தரம்.. இந்த ஒரு தரங்கள் கணக்கில்லாமல் நீண்டன.

அன்று இரவு

“ நீங்களூம் உங்க பூச்சி மருந்தும்! ஒரு கடிகாரம், என்னோட ரேபான் கூ;லர்ஸ், பூச்சியோட சேர்ந்து காலி. அதெப்படி சுத்த காலிப்பசங்களா தேர்ந்தெடுத்து அனுப்பினீங்க? எல்லாம் இந்த சனியன் பிடிச்ச மாமரத்தால வந்தது”

“நீ கண் தெரியாம சேர்ல இடிச்சுண்டு சேர் இடிச்சுடுத்துன்னு சொல்றாமாதிரி,. உனக்கு பொறுப்பு இல்லாம கண்டவனை உள்ள அனுப்பி இருக்க. நீ வெளில நின்னு பாத்துண்டா இது நடந்திருக்குமா? புத்தருக்கு ஞானம் போதி மரத்தடியில. உனக்கு மாமரத்தடியிலயா?”

வியாழன் காலை

“ அம்மா பூஜைக்கு மாவில வேணும், பறிச்சுக்கட்டுமா? இந்த தெருவுலயே நம்ம வீட்டுலதான் மாமரம் இருக்கு. அதான் அல்லாரும் நம்ம வீட்டுலெயெ பறிச்சுண்டு வரச்சொல்றாங்க.”

வாட்ச்மேன் தன் வாரிசுகளோடு வீட்டு வாசலில்

“ இதப்பாரு இந்த பசங்களை வாசலிலேயெ நிக்க வெச்சுட்டு நீ மட்டும் போய் பறிச்சுக்க ”

மிகவும் குறைந்த ரெண்டு மணி நேரத்தில் கூடை நிறைய மாவிலைகளோடு வாட்ச்மேன் சென்றான்.

வியாழன் இரவு

“ இந்த மாமரத்தால தொல்லை. என்னோட ரோஜா செடியெல்லாம் காலி. அந்த பிசாசு குழந்தைங்க மொட்டெல்லாம் பறிச்சு போட்டு, வாட்ச்மேன் மல்லிப் பதியன் மேல ஏறி மிதிச்சு.. எல்லாம் பாழ்”

“ஆரம்பிச்சாச்ச, அவனை எதுக்கு உள்ள விட்டே?”

“கேப்பீங்களே.. நாம ஊருக்கு போனா வீட்டை பூட்டிண்டு போறோம். ஒரு கண் வெச்சுக்கோனு அவன் கிட்ட சொல்லுன்னு என்னத்தானே அனுப்பறீங்க!”

“இதப்பாரு, உன் பேச்சு அங்க சுத்தி இங்க சுத்தி எங்க வரும்னு தெரியும், மாமரத்த வெட்டக்கூடாது”

வெள்ளி காலை

மிஸ்டர் சுரேஷ்! உங்க கிட்ட கொஞ்சம் பேசணுமே”

“ வாங்க உள்ள வாங்க, பக்கத்து வீடுன்னு பேரு,ஆனா பாத்துக்கறதுகூட இல்ல”

“உங்க வீட்டு மாமரம் எங்க வீட்டுக்கு ரொம்ப க்ளோசா இருக்கு. டாய்லட் உள்ள எல்லாம் வேர் வந்திருக்கு. வெட்டிட்டீங்கன்னா பரவாயில்ல”

நல்ல் கதையா இருக்கே சார்! எங்க காம்பௌண்டுக்கு இடம் விடாமல் வீட்டை நீங்க கட்டிருக்கீங்க. அப்புறம் எங்க மரம் க்ளோசா இருக்குன்னு சொல்வீங்க. எத்தனை வருஷத்து மரம் வெட்ட முடியாது சார்”

அன்று இரவு

டேய்! சுரேஷ்! அக்கம் பக்கம் சண்டையெல்லாம் வேண்டாம் டா! அவா வீட்டுப்பக்கம் வர்ற கிளையெல்லாம் கழிச்சு விட்டுடலாம். மரம் வெட்டறவனை நாளைக்கு வரச்சொல்லு.”

“அப்பா! மரத்த வெட்ட முடியாதுப்பா….”

சனிக்கிழமை காலி

சார்! அப்பா சொல்றது ரொம்ப சரி, மரம் வீட்டுக்கு ரொம்ப கிட்ட இருக்கு. இப்படியே வேர் விட்டை உள்ளுக்கு இழுத்துடும். விரிசல் வேற விட்டிருக்கு. வேணாம் சார், மரத்த வெட்டிடுங்க”

சனிக்கிழமை இரவு

“ அந்த காண்ட்ராக்டர் என்ன சொன்னான் கேட்டியோனோ மரத்த வெட்டிடலாம்”

“அப்பா! அது மட்டும் முடியாதுப்பா. இவன் என்ன பெரிய எஞ்சினீயரா? ஒரு நல்ல எஞ்சினீயரா பாத்து கேட்போம்”

இது ஒருவாரத்துகதை. 2000லிலோ 2005 லிலோ எந்த வருஷத்தை எடுத்தாலும் எந்த வாரத்திலும் பேர் மாறுபடும், காரணம் மாறுபடும். ஆனால் முடிவு ஒன்றே ”மாமரத்த வெட்ட முடியாது”

அந்த நாள் வரும் வரை..

“அம்மா! நானும் கல்யாணம் முடிஞ்சு இவ்வளவு வருஷம் தாண்டி இந்தியா வந்திருக்கேன். ஏதோ நம்ம வீடு ஃப்ளாட் ஆகியிருக்கு. சுத்து வட்டாரம் மாறவே இல்லை.இங்க பாரு, பூதாகாரம அந்த பின்னாடி வீட்டு மாமரம். வெளிச்சத்த அடச்சுண்டு. குழந்தை மேலே எல்லாம் நேத்தி ஒரே கொசு.இப்படி குப்பையா வீட்டச்சுத்தி இலை விழுந்திருக்கு. எவ்வளவு வருஷமா நாம சொல்றோம். வெட்டறாளா பாத்தியா? நான் காலேஜ் போகும்போதெல்லாம் எங்க அந்த மரத்துல எவனாவது ஒளிஞ்சுண்டு பாக்கப்போறானேன்னு பயந்து பயந்து கக்கூசுல டிரெஸ் மாத்திப்பேன். ஜன்னலோரத்துல நின்னு பாத்துண்டே இருப்பேன் ஜாக்கிரதைக்கு”

அப்போ ஜன்னல் பக்கத்துல நின்னு பாத்தது பயத்தில்தானா? என்னை பார்க்க இல்லியா? திரும்பி நின்னு கண்ணாடி பிடித்தது என் மேல வெளிச்சம் அடிக்க இல்லியா? கை யை அப்படி இப்படி அசைத்தது கொசு விரட்டவா? ச்சே! பப்பி லவ்வின் நினைவுச்சின்னம் அன்றுதான் உடைந்தது.

இனிமேலும் மாமரம் அங்கே இருக்குமா?

“நாளைக்கு மரம் வெட்ட ஆள் வருவான்……!!!!! “

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *