விபரீத விளையாட்டு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: December 3, 2023
பார்வையிட்டோர்: 4,096 
 
 

திடீர் மரணம் என்பது பல விதங்களில் நிகழ்கிறது. சிலருக்கு பல்லவனின் கனமான டயர்களுக்கு அடியில். சிலருக்கு அதிகாலை மூன்றரை மணிக்கு வரும் மார்பு வலியில். சில தப்பான பேர்வழிகளுக்கு காவல் துறையின் என்கௌண்டரில். எனக்கு நிகழ்ந்தது ஒரு வித்தியாசமான திடீர் மரணம். அது எப்படி என்று சொல்கிறேன், சூடாக ஒரு டீயோ காபியோ போட்டுக் கொண்டு உட்காருங்கள்.

நான் கணிதத்தில் பி.எச்.டி பட்டம் பெற்ற, பெங்களூர் இந்திரா நகரில் வசிக்கும், 23 வயது இளைஞன். அமேசான் கம்பெனியின் AI துறையில் நிபுணன். போக்கர் எனும் சீட்டு விளையாட்டில் சூரன். என் உயிர் நண்பன் மூன்று மாதங்களுக்கு முன் ஒரு கார் விபத்தில் இறந்த பிறகு, நான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி, போக்கர் விளையாடுவதை நிறுத்தினேன். எனது மனநல மருத்துவர், நான் எனது மன நிலையை ஒழுங்கமைக்கும் வரை விளையாட வேண்டாம் என்று எச்சரித்தார். நானும் விளையாடாமல் தான் இருந்தேன். ஆனால்…

இரண்டு நாட்களுக்கு முன்பு என் போக்கர் கூட்டாளி பாஸ்கர் போனில் கூப்பிட்டு, “என்ன, ரொம்ப நாளா உன்னைக் காணோம். இந்த வெள்ளிக்கிழமை போக்கர் விளையாடுகிறோம். வருகிறாயா?” என்று கேட்டான்.

என்னால் ஏன் வர முடியாது என்பதற்கான காரணத்தை நான் சொல்ல முயற்சிக்கையில், பாஸ்கர், “இந்த தடவை நாங்கள் கொஞ்சம் வித்தியாசமாக விளையாடப் போகிறோம். அது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும்.” என்றான்.

“என்ன வித்தியாசம்?” என்று நான் கேட்டேன்.

“நாங்கள் பணத்தை பணயமாக வைத்து விளையாடப் போவதில்லை. ஃபோன், வாட்ச், கார் போன்ற பொருள்களை பணயமாக வைத்து விளையாடப் போகிறோம்.”

அவன் அப்படி சொன்னது எனக்கு திடீர் ஆசையை மூட்டியது. பாஸ்கரின் நண்பர்களை எனக்கு தெரியும். விலையுயர்ந்த கார்களை ஓட்டும் மேல் தட்டு பணக்கார ஜாதி. ஆனால் போக்கர் விளையாட்டில் சராசரி. எனது கேரேஜில் ஓரிரு BMW க்களை சேர்க்க இது ஒரு எளிதான வழியாகத் தோன்றியது. நான் ஒப்புக்கொண்டேன்.

வெள்ளிக்கிழமை இரவு 8 மணியளவில் ஆட்டம் தொடங்கியது. நாங்கள் ஐந்து பேர் இருந்தோம் – நான், பாஸ்கர், சேகர், ஆதித்யா மற்றும் கெளரவ். அவர்கள் எல்லோருக்கும் என்னுடைய போக்கர் திறமையைப் பற்றி தெரியும். அதை நினைத்து அவர்கள் பயந்திருந்தால், அதைக் கொஞ்சமும் வெளிக்காட்டவில்லை.

முதல் நான்கு ஆட்டங்களிலும் எனக்கே வெற்றி. மிகத் திறமையாக விளையாடி எல்லோருடைய கைக்கடிகாரத்தையும் காரையும் அபகரித்துக் கொண்டேன். அடுத்த இரண்டு ஆட்டங்களில் எனக்கு வந்த சீட்டு சரியில்லாததால் நான் ஒதுங்கிக்கொண்டு அவர்களை விளையாட விட்டேன். ஏழாவது ஆட்டத்தில் நான் வெற்றி பெற்றிருக்க வேண்டும், ஆனால் நீண்ட யோசனைக்குப் பிறகு, எப்படியோ என் முகத்தில் ஒளிந்திருந்த பொய்யை கண்டு கொண்டு சேகர் என்னைத் தோற்கடித்தான்.

அதற்குப் பின் என்னுடைய விளையாட்டு சறுக்க ஆரம்பித்து கீழ்நோக்கிச் சென்றது. சீட்டை எடுக்கும் போதெல்லாம் என் கைகள் நடுங்க ஆரம்பித்தன. 22வது ஆட்டத்தின் முடிவில், அது வரை நான் வெற்றி கொண்ட பொருட்கள் மட்டுமின்றி எனக்கு சொந்தமான ரோலக்ஸ், Audi மற்றும் ஐபோன் உட்பட அனைத்தையும் இழந்திருந்தேன்.

23வது ஆட்டத்தில் நான் எனது இந்திரா நகர் அபார்ட்மெண்டை இழந்தேன்.

அடுத்த ஆட்டம் தொடங்கியதும், ஆதித்யா என்னைப் பார்த்து, “நீங்கள் இன்னும் விளையாட விரும்பினால், ஏதாவது மதிப்புமிக்க ஒரு பொருளை பணயமாக வைக்க வேண்டும்.” என்றான் அழுத்தமான குரலில்.

அந்த சமயம் எது என்னை ஆட்கொண்டது என்று தெரியவில்லை. “இது வரை விளையாடியது போதும்” என்று சொல்லத் தான் நான் வாயைத் திறந்தேன். ஆனால் என் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகளோ, “எனது பி.எச்.டி. பட்டம்.” என்று சொன்னது.

அந்த அறையில் ஒரு வினாடி திடுக்கிட்ட மௌனம் நிலவியது. பிறகு ஆதித்யா, “இதன் அர்த்தம் உங்களுக்குப் புரியும் என்று நம்புகிறோம். இந்த ஆட்டதில் நீங்கள் தோற்றால், உங்கள் பட்டத்தை எந்த வகையிலும் பயன்படுத்த முடியாது போகும்.” என்றான்.

“ஆமாம், புரிகிறது,” என்றேன் நடுங்கிய குரலில்.

24வது ஆட்டத்தின் முடிவில், எல்லாவற்றையும் இழந்து விட்டு அங்கே அமர்ந்திருந்தேன். எனது பட்டப்படிப்பு, வேலை உட்பட எனக்கு சொந்தமான உடைமைகள் அனைத்தும் இரண்டு மணி நேரத்திற்குள் மறைந்துவிட்டன. நான் போட்டிருந்த சட்டையும் ஜீன்சும் மட்டுமே இப்போது எனக்கு சொந்தம்.

25வது ஆட்டம் தொடங்கியபோது, நான் இன்னும் விளையாடுவதற்கு தயாராக உட்கார்ந்திருந்ததை கண்டு கொண்டு கெளரவ் என்னை கேள்விக் குறியுடன் பார்த்தார்.

“என்னிடம் இன்னும் பணயம் வைக்க மதிப்புமிக்க பொருள் ஒன்று இருக்கிறது,” என்றேன் நான் தளர்ந்த குரலில்.

“என்ன அது?”

“என் உயிர்.”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *