வாய் பேச்சில வென்றவன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: May 9, 2024
பார்வையிட்டோர்: 2,772 
 
 

வேகமாய் வந்த கார் ஒன்று ! அதிலிருந்து இறங்கிய ஆறு பேர், ஒருவன் இவர்களை வழிநடத்தி அந்த பழைய கால பங்களாவுக்குள் பிரவேசிக்கின்றனர்.

கிழவனை கட்டிவிட்டீர்களா? நீங்கள் அனைவரும் சற்று வெளியே நில்லுங்கள், இந்த கிழவனிடம் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது. நம் தலைவனை என்ன செய்தான் என்று விசாரிக்கிறேன்.

அவனுடன் வந்திருந்த ஐந்து பேரும் வெளியே செல்கிறார்கள்

அருகில் வந்து தலையில் துப்பாகியை வைத்து அழுத்தியவனை மெளனமாய் பார்த்தான்.

இதோ பார் நீ என்னை தவறாக நினைத்து கொண்டு வந்திருக்கிறாய்? தயவு செய்து நான் சொல்வதை கேள். முதலில் என்னை பார், நான் உன்னை காட்டிலும் மிகவும் வயதானவன்.

அதுதான், அதுதான் காரணம், உன்னை பார்த்தாலே பயமாக இருக்கிறது. நீ பயங்கரமானவன், பேசியே கொல்பவன். அவன் துப்பாக்கியை அமுக்கி பிடித்தது தலையில் வலித்தது.

மறுபடி சொல்கிறேன், என்னை நாற்காலியில் கட்டி வைத்து துப்பாக்கியை தலையில் வைத்து சுடும் அளவுக்கு உனக்கு என்ன தீங்கு செய்தேன். அதை மட்டும் சொல்.

அவன் முகத்தின் கடுகடுப்பையும் மீறி மெல்லிய சிரிப்பொன்று உதிர்ந்தது, நீ எனக்கு மட்டுமல்ல, எங்களுடைய நோக்கங்களை சிதைக்க வந்த துரோகி என்று எனக்கு தெரியும்.

ஒன்றே ஒன்றை சொல், நான் உங்களுக்கு துரோகம் செய்தவன் என்று ஒத்துக்கொள்கிறேன், அப்புறம் என்னை சுட்டு போட்டுவிட்டு போ, உயிரை பற்றி கவலைப்படவில்லை, இப்படி அநியாய பழியோடு உயிர் போவதுதான் மனசுக்கு வருத்தமாக இருக்கிறது.

நீ எங்கள் கூட்டத்தில் ஒண்ட வந்து எத்தனை காலமாயிற்று, இரண்டு வருடம் இருக்குமா? அதுவரை அந்த ‘ராபின்’ கூட்டத்தில் தானே எடுபிடியாய் இருந்தாய். அவன் இறந்த பின்னால் வயதான உன்னை விரட்டி விட்ட அவன் தம்பியை, நீ தான் போலீசுக்கு தகவல் கொடுத்து மாட்டி விட்டிருக்கிறாய்.

இது தெரியாமல் தலைவர் உன்னை அணியில் சேர்த்ததற்கு பலனாய் அவரையும் போலீசில் காட்டி கொடுத்து சிக்க வைத்திருக்கிறாய். அடுத்த நிலையில் இருக்கும் என்னையும் காட்டி கொடுக்க தயாராகி விட்டாய்.

இங்கு பார் மறுபடி மறுபடி என்னால்தான் என்று சொல்லாதே. நீ என்னை சுடு, அதற்காக இப்படி அவர்கள் மாட்டிக் கொண்டதெற்கெல்லாம் என் மீது அபாண்டமாய் பழி போட்டு என்னை துரோகிகளின் பட்டியலில் சேர்க்காதே.

ஏன் உன் கை நடுங்குகிறது, சுட்டு விட்டு போக வேண்டியதுதானே. நீயாக ஒரு கற்பனையை வளர்த்து கொள்ள வேண்டியது, அப்புறம் நான்தான் உன் கூட்டத்து தலைவனையும், ராபின் தம்பியையும் பிடித்து கொடுத்ததாக சொல்லிக் கொண்டிருப்பது. இப்பொழுது எதற்கு தயங்குகிறாய்? சுடு..கை நடுங்காமல் சுடு. இதுவரை எத்தனை பேரை ஒளிந்து சுட்டிருக்கிறாய்? நேருக்கு நேராய் சுட சொன்னால் இப்படி உன் கை நடுங்குகிறது.

ஏய் கிழவா உன்னை சுட எனக்கு நீண்ட நேரம் ஆகாது, ஆனால் எனக்கு ஒரு உண்மை மட்டும் சொல்லி விடு. என் தலைவரை எப்படி காட்டிக் கொடுத்தாய். இப்பொழுது அவர் எங்கே? இதை மட்டும் சொல்லி விடு.

சொன்னால் என்னை உயிரோடு விட்டு விடுவாயா? சிரிப்பு, தம்பி நீ இளைஞன் அவ்வளவுதான் எனக்கு அனுபவம் எவ்வளவு தெரியுமா? நானும் உன்னைப்போல் தலைமை பதவியில் இருந்தால் எனது பாணியே தனி, உனக்கு சொன்னால் புரியாது, எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை, உனக்கு கிடைத்து இருக்கிறது. சுடு..சுடு..என்னை சுட்டு விட்டால் உன் தலைவன் உனக்கு திரும்ப கிடைத்தால் மிகுந்த சந்தோசம்.

இதுதான் இதுதான் கிழவா உன்னிடம் இருக்கும் நயவஞ்சகம், சரி உன்னை சுட வில்லை, இப்பொழுது சொல் என் தலைவன் எங்கே?.

அப்படி வா வழிக்கு, என் கை கட்டுக்களை அவிழ்த்து விடு, ம்..செய்..

கிழவா உன்னை..உறுமியபடி கட்டுக்களை அவிழ்த்து விடுகிறான்.

நல்லது, கொஞ்சம் தண்ணீர் கொடு..இவ்வளவு நேரம் நீ என்னை கட்டி வைத்ததில் தொண்டை வறண்டு விட்ட்து. அதோ அந்த டேபிளின் மேல் தண்ணீர் வைத்திருக்கிறேன், பக்கத்தில் டம்ளர் இருக்கிறது பார், அதில் ஊற்றி கொடு.

இந்தா கிழவா.

இதில் விஷம் ஊற்றி வைத்திருக்கிறேன், உன் துப்பாக்கியால் சாவதை விட இதை குடித்து சாகிறேன். மட மடவென குடிக்கிறார்.

ஏய் கிழவா பாய்ந்து தடுக்கு முன் முழுவதும் குடித்து முடித்து ‘ஏவ்.’.ஏப்பம் விடுகிறார்.

என்ன பயந்து விட்டாயா? இந்த கடத்தல், கொலை, கொள்ளை செய்யும் கூட்டத்தில் நான் சேர்ந்த பொழுது எனக்கு வயசு பதினேழு, இப்போ அறுபது,

நாற்பத்தி மூணு வருசம் அனுபவம், புரியுதா? இந்த தண்ணிய குடிச்சு சாவேன்னு நினைச்சுட்டியா?

ம்..இப்பவாவது சொல் என் தலைவன் எங்கே?

எதற்கு உன் தலைவனை இப்படி கேட்டு தொல்லை கொடுக்கிறாய் என்பது எனக்கு தெரியும்..சிரிக்கிறார். அவன் தொலைந்து விட்டால் அடுத்த தலைமை நீயாகலாம் அப்படித்தானே..

சுற்று முற்றும் பார்த்து கிழவா இந்த மாதிரி பேசி என்னை இந்த கூட்டத்தில் வம்பில் மாட்டி விட பார்க்காதே.

உண்மைதான் அப்பனே, இந்த அறை வெளியே நிற்கிறானே அவனை கூப்பிடு, அடுத்த தலைவர் நீதான் என்று அறிவிக்கிறேன்.

வாயை மூடு, என்னை சிக்கலில் மாட்டி விடாதே, ஏற்கனவே அவர்கள் என் மீது சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இல்லை என்று நிரூபிக்க நான் மிகுந்த கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன். எல்லாம் உன்னால்தான், சந்தேகமே இல்லை. உன்னை சுட்டு விடுகிறேன்.

சுடு..சுடு..ஆனால் தலைவனை நீதான் ஆள் வைத்து கொன்றாய் என்று உன் பின்னால் நின்று உன்னை சுட தயாராய் இருக்கிறான் பார் அவனையும் சுடு..

எனக்கு பின்னாலா யார் அது? திரும்பினான். கிழவன் சட்டென டேபிள் டிராயரை திறந்து துப்பாக்கியை எடுத்து அவனை சுட அவன் அடி மரம் போல கீழே சாய்ந்தவன் ஏய்..கிழவா என்னை ஏமாற்றி விட்டாய்..சரிகிறான்.

துப்பாக்கி சத்தம் கேட்டு உள்ளே வந்த கூட்டத்திடம் ‘எடுத்து செல்லுங்கள்’ இவனை, தலைவனை இவன் தான் கொன்றிருக்கிறான், தெரிந்தவுடன் சுட்டு கொன்று விட்டேன்.

ம்..சீக்கிரம்..உடனே காலி செய்ய வேண்டும்.. துப்பாக்கியில் வந்த புகையை ஊதி விட்டுக்கொள்கிறான்.

ஒரு நிமிடம் என்ன செய்வது என்று திகைத்த கூட்டம் கீழே கிடந்தவனை தூக்குகிறார்கள். முட்டாள்களா நில்லுங்கள், அடுத்த தலைவனின் கையை பிடித்து முத்தம் இட்டு விட்டு எடுத்து செல்லுங்கள். ஆங்காரமாய் கத்துகிறான், கிழவன்.

ஒவ்வொருவராய் வந்து அவன் கையை முத்தமிட்டு இறந்து கிடந்தவனை தூக்கி செல்கிறார்கள்.

ஒரு கூட்டத்திற்கு தலைவனாக நாற்பது ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிருக்கிறது. அந்த ராபினுக்கு பின்னால் நான் ஆகலாம் என்றால் அவன் தம்பி அங்கு வில்லனாய் முளைத்தான். இங்கு இவன் துப்பாக்கியை காட்டி சும்மா பூச்சாண்டி காட்டி கொண்டிருக்கிறான்.

‘காவல் துறை பயிற்சி அதிகாரிகள்’ கூடி இருந்த அந்த இரூட்டறையில் இந்த காட்சி முடிந்தவுடன் விளக்குகள் ஏற்றப்பட்டன.

உயரதிகாரி எழுந்தார். தற்போது நீங்கள் பார்த்த இந்த கொள்ளை கூட்டத்தின் நிகழ்ச்சியை பார்த்தீர்கள், இதில் நீங்கள் உணர்ந்தது என்ன?

ஒரு அதிகாரி : பதட்டம் இல்லாத அணுகு முறை

உயரதிகாரி: குட்…அடுத்து

மற்றொரு அதிகாரி : அவரது வேகம், சட்டென துப்பாக்கி பிரயோகம்

உயரதிகாரி : குட்..துப்பாக்கி வைத்திருப்பவன் கவனம் சிதறுவதும், நீண்ட நேரம் துப்பாக்கியை வைத்து நின்று கொண்டிருந்தது, இவைகள் அவனது மரணத்திற்கு காரணமாகிவிட்டது.

மற்றொரு அதிகாரி : பேச்சு திறமை

உயரதிகாரி : தட்..ஸ்..குட்.. நன்றாக கவனியுங்கள், அந்த கிழவன் சற்று நேரத்தில் குண்டு பட்டு சாகப்போகிறான், இந்த சிக்கலான நிலைமையிலும் நிதானம் தவறாமல் தன்னுடைய பேச்சு திறமையால் பேசி அந்த நிகழ்ச்சியையே தனக்கு சாதகமாக்கி அந்த கொள்ளை கூட்டத்துக்கு தலைவனாகவும் ஆகி விட்டான்.

மற்றொரு அதிகாரி : மன்னிக்கவும் இது சித்தரிக்கப்பட்டதா?

உயரதிகாரி : இல்லை இது 1990 ல் நடந்த ஒரு நிகழ்ச்சி, நம்முடைய உளவுத்துறை ஒளிந்து எடுத்த அந்த நிகழ்வுதான் அது.

பத்திரிக்கையாளர்கள் உயரதிகாரியிடம் கேள்விகளை கேட்க ஆரம்பித்தார்கள்

அப்பொழுதே ஏன் அந்த கூட்டத்தை கைது செய்யவில்லை.

இல்லை, இன்னும் கொஞ்சம் பேர் மீதம் இருந்தார்கள், அவர்களையும் சேர்த்து பிடித்து தருவதாக அந்த கிழவன் போலீசிடம் வாக்கு கொடுத்திருந்தார்.

அப்படியானால்..அந்த கிழவர்.?.

ஆம் காவல் துறைக்கு முப்பது வருடம் ஒற்றுத்துறையில் உதவி புரிந்து கொண்டிருந்தார். கடைசியில் எல்லோரையும் பிடித்து ஒப்படைத்தார். அப்பொழுதுதான் அந்த கூட்டத்தை அடியோடு பிடிக்க முடிந்தது.

அந்த கிழவருக்கு?

ஒரு வெடி விபத்தில் காலமாகி விட்டார்.

வெடி விபத்தா..இல்லை திட்டமிட்டு….

அதை சொல்ல கூடாது அரசாங்க இரகசியங்கள்.

Print Friendly, PDF & Email
பெயர்: ஸ்ரீ.தாமோதரன் பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவ கல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார். “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *