கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: February 27, 2016
பார்வையிட்டோர்: 47,735 
 
 

“என் பேரு மஞ்சுஷா”’ என்றாள்.

பெயர்தான் சற்று விசித்திரமாக இருந்ததே தவிர ஆள் சித்திரம். அழகான 3d ஓவியம். எல்லாமே அளவாக அழகாக. கடவுள் நிச்சயம் இவளைப் படைப்பதற்கு முன் ஒரு மாதிரிச்சித்திரம் வரைந்து வைத்துக்கொண்டு தான் பின்னர் படைத்திருக்க வேண்டும். உந்திச் சுழியின் முளைத்து எழுந்த உரோமப் பசுந்தாள் ஒன்றில் இரண்டு அந்திக் கமலம் கொண்ட அவளைப் பார்த்ததும் நான் காதலில் விழுந்துவிட்டேன் என்பது தான் உண்மை.

அவ புராணம் இருக்கட்டும்.. நீ யாருன்னு சொல்லு என்று நீங்கள் கேட்பதற்கு முன் என்னைப் பற்றி. நான் சந்திரன். அழகான இளைஞன். பணக்கார இளைஞன். கோடைகானலில் எங்களுக்கென்று எஸ்டேட் இருக்குமளவுக்கு வசதியான குடும்பத்தைச் சார்ந்தவன். ஐஐடி சென்னையில் படித்து பின் அமெரிக்கா சென்று மேல் படிப்பும் படித்து அங்கேயே ஒரு வேலையிலும் இருக்கிறேன். அம்மா கல்யாணம் செஞ்சுக்கோ என்று நச்சரித்ததால் ஒரு மாசம் லீவு எடுத்துக்கொண்டு சென்னை வந்து வரிசையாக நாலு பெண்களைப் பார்த்துவிட்டேன். எல்லாம் அழகானவர்கள். அறிவானவர்கள். வசதியானவர்கள். ஆனால் எனக்குப் பிடிக்க வேண்டுமே!

அம்மாவுக்குக் கோபமான கோபம். ‘’எக்கேடோ கெட்டுப் போ’ என்று ஆசீர்வாதம் செய்தாள். அப்பாதான் அவளைச் சமாதானம் செய்து என்னிடம் “டேய், ஒரு வாரம் நம்ம எஸ்டேட் பங்களா போயிட்டு வா. வந்து பேசிக்கலாம்” என்று விரட்டினார்.

நானும் அம்மாவின் நச்சரிப்பின் இருந்து தப்பித்தால் போதும் என்று புதிய டஸ்டர் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். ஸெல்ப் ட்ரைவிங்.

மறுநாள் காலை ஏழு மணி சுமாருக்கு எங்கள் பங்களாவை அடைந்து விட்டேன். அப்பா முன்னமே இன்பார்ம் செய்திருந்ததால் வாட்ச்மேன் கன்னியப்பன் எல்லா ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தார். உள்ளே நுழைந்து என் அறைக்குள் சென்று அங்கிருந்த fridge திறந்து பார்த்தேன். கன்னியப்பன் உண்மையிலேயே எல்லா ஏற்பாடும் செய்துதான் வைத்திருந்தார். நாலைந்து பீர் பாட்டில்கள். சோடா பாட்டில்கள். பக்கத்தில் இருந்த சிறிய டேபிள் மீது இரண்டு விஸ்கி பாட்டில்கள்.

“ சார், எதுனா வேணும்னா கேளுங்க. சாப்பாடு சமைக்க என் பொண்ணு வருவா. எனக்குத் தோட்டத்துல கொஞ்சம் வேலை இருக்கு” என்று சொல்லி கன்னியப்பன் கிளம்பினார்.

நான் விசில் அடித்தபடியே ஜீன்ஸ் பாக்கெட்டிலிருந்து ஸிகரெட் பெட்டி எடுத்துத் திறந்து ஒன்று பற்ற வைத்தேன். புகையை நன்றாக உள்ளிழுத்து வெளியே விட்டபோது வாசலில் நிழலாடியது.

“யாரு?”

“ சார், நான் கன்னியப்பன் பொண்ணு. சமைக்க வந்திருக்கேன். அப்பா சொல்லலியா?”

“சொன்னார். உள்ள வா.”

உள்ளே வந்தவள் தான் மஞ்சுஷா. (திரும்பவும் ஒரு தடவ பர்ஸ்ட் பேராவ படிச்சிருங்க)

அமெரிக்காவில் எத்தனையோ பெண்களைப் பார்த்திருந்த நான் இப்படி ஒரேயடியாகச் சரிந்து விடுவேன் என்பது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. அவள் சமைத்து விட்டுப் போகும் வரை எனக்கு இருப்புக் கொள்ளவே இல்லை. ஏதாவது ஒரு காரணம் சொல்லிக்கொண்டு கிச்சனுக்குப் போய் பேச்சுக் கொடுத்துக் கொண்டு இருந்தேன். என்னுடைய இந்த அவசர புத்தியால் அவளுக்கு ஒருமாதிரி புரிந்துவிட்டது. ஓரக்கண்ணால் பார்த்துச் சிரித்தாள். அருமைராசனின் ‘வரிகளில் சிக்காத சிரிப்பு’! தடுமாறித்தான் போனேன்.

அப்புறம் அவள் சிறிது நேரத்தில் போய் விட்டாள். தன்நிலை தவறி இருந்த நான் அந்த விஸ்கி பாட்டிலைச் சரணடைந்தேன். இரண்டு பெக் உள்ளே போனதும் தான் உயிர் திரும்பி வந்தது. அப்புறம் சாப்பிட்டு விட்டு எப்போது தூங்கினேன் என்று எனக்கேத் தெரியவில்லை.

“ சார்” என்ற கன்னியப்பன் குரல் கேட்டுத் தான் எழுந்தேன். “பொளுது சாயப்போவுது. அதான் எளுப்பி விட்டேன்” என்றார்.

“ ஓ! தேங்க்ஸ்!”

“ரெண்டு கிலோமீட்டர்ல பக்கத்து கிராமம் இருக்குது. அங்கிட்டு திருவிளா நடக்குது. போறதுனா போயி வரலாமா?”

“சரி. ஒரு அஞ்சு நிமிஷம் கொடுங்க.”

சொன்னபடியே ஐந்து நிமிஷத்தில் ரெடியாகி கன்னியப்பனுடன் காரில் பயணமானேன். அரை மணி நேரத்தில் பக்கத்துக் கிராமத்தை அடைந்தோம்.

கலர் கலர் ட்ரெஸ்ஸில் நிறைய பேர். கைகளில் தாரை தப்பட்டை போன்ற சமாச்சாரங்கள். காரை விட்டு இறங்கிய என்னைப் பார்த்ததும் அங்கே உட்கார்ந்திருந்த இரண்டு மூன்று பெரியவர்கள் சட்டென்று எழுந்து என்னை நோக்கி வந்தார்கள்.

“ சின்னையாவா? வரணும் வரணும். உங்க அப்பாரு எப்பனாச்சியும் இந்தப்பக்கம் வந்தா விளாவுக்கு வருவாரு. இப்ப நீங்க வந்திருக்கீங்க. ரொம்ப சந்தோசம். உட்காருங்க” என்று ஒரு மரச்சேரை எடுத்துப் போட்டார்கள்.

திருவிழா ஆரம்பித்தது. ஒரு விதமான மலைப்பிரதேச டான்ஸ். ஒரே மாதிரி பீட். அதுக்குத் தகுந்தாற்போல சில ஆண் பெண்கள் ஆடினார்கள். சற்று சுவாரசியம் குறைந்தாற்போல தோன்றிய அந்தக் கணத்தில்தான் நான் மஞ்சுஷாவை மீண்டும் பார்த்தேன். அட! அந்த ஏழெட்டு டான்சர்கள்ல அவளும் ஒருத்தி! வாவ்!

மஞ்சுஷா ஆடினாள். அவளுடனே சேர்ந்து என் இதயமும் ஆடியது. என் ஒவ்வொரு உயிரணுவும் ஆடியது. அந்தச் சின்ன இடையும் ஆழ நாபியும் என் கண்களை அகலவே விடவில்லை. என் உடம்பெல்லாம் ஜிவ்வென்று ஆனது. திடீரென்று ஒரு ஸிகரெட் பிடிக்க வேண்டும் போல ஒரு உந்துதல். எழுந்தேன்.

“சின்னையா! எதுனாச்சியும் வேணுமா?” என்று கூடவே எழுந்த ஒரு பெரியவரை, “நீங்க உக்காருங்க. ஒரு அஞ்சு நிமிஷம் காத்து வாங்கணும்” என்று சற்று தூரம் நடந்து சென்றேன். புதர்களும் மரங்களும் மண்டியிருந்த ஒரு இடத்துக்குச் சென்று ஸிகரெட் எடுத்துப் பற்ற வைத்தேன். ஒரு இழுப்பு இழுப்பதற்குள் ஏதோ சத்தம். யாரோ வருவது மாதிரி.

சட்டென்று திரும்பிப் பார்த்தேன். அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞன். கட்டுமஸ்தான கன்னக்கரேல் தேகம்.

“சின்னையாவா? ஆரோன்னு நெனச்சுப்பிட்டேன். ஏதோ பொக வர்ற மாரி இருந்திச்சா.. அதான் பாக்க வந்தேன்.”

“இட்ஸ் ஓகே” என்று சொல்லியபடியே ஸிகரெட் பாக்கெட்டை அவனை நோக்கி நீட்டினேன். அவன் ஆசையுடன் ஒரு ஸிகரெட்டை உருவி பற்ற வைத்துக் கொண்டான். அப்புறம் அவர்களுக்கு உரிய ஒரு மரியாதையுடன் அந்தப்பக்கம் திரும்பி புகைத்தான். இப்படி அமைதியாக சில நிமிடங்கள் போயின.

கடைசி இழுப்பு இழுத்துவிட்டு இருவரும் ஒரே நேரத்தில் கீழே போட்டோம். “ உங்க பேரு என்ன?”

“எம்பேரு சின்னையா!” என்று சொல்லி ஹாஸ்யம் போல சிரித்தான். எனக்கும் சிரிப்பு வந்தது.

சரி என்று நான் நகர் எத்தனிக்கும் போது “கொஞ்சம் நில்லுங்க சின்னையா! ஒங்ககிட்ட ஒரு விசயம் பேசணும்” என்றான்.

“நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்கிடாதீங்க சின்னையா. ஆனா நீங்க வெளியூரு. உங்களுக்கு நல்லது கேட்டது எடுத்துச் சொல்லவேண்டியது எங்க கடமை. அங்க டான்ஸ் நடக்கையில நான் உங்களைப் பாத்தேன். உங்க கண்ணு கன்னியப்பன் பொண்ணு மேலே இருந்ததையும் பாத்தேன். நீங்க பெரிய எடத்துப் பிள்ளை. உங்களுக்கு இதெல்லாம் சகஜம். அப்புறம் இது ஒங்க சொந்த விசயம் வேற.

ஆனா நான் சொல்ல வந்த விசயமே வேற. அந்தப் பொண்ணு ஒரு மாதிரி சின்னையா”

“ஒரு மாதிரின்னா…”

“அது சின்ன வயசா இருக்கையில ஒரு பாம்பு கடிச்சிருச்சு. அதுக்கு அப்பறமே அவ நடத்த கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கு. பேசையில நாக்கு டக்கு டக்குன்னு வெளிய துருத்திக்கும். (இதை நான் காலையிலேயே கவனித்திருந்தேன்). கண்ணு கூட பாம்பு மாரி சின்னதா இருக்கும். அவ நடக்கையில கூட பாம்பு மாரி நெளிஞ்சு நெளிஞ்சுதான் நடப்பா”

“என்னப்பா சொல்ற?”

“ ஆமா சின்னையா! அவளே ஒரு பாம்பா ஆகிட்டான்னு ஊருக்குள்ள ஒரு பேச்சு அடிபடுது. இதுக்கு முன்னாடி நம்ம கிராமத்துல ஒரு ரவுடிப்பய இருந்தான். கிட்டப்பன்னு பேரு. அவன் இவளக் கண்டா வளிவான். ஒரு நாள் இவகிட்ட கொஞ்சம் எக்கத்தப்பா நடந்துக்க முயற்சி பண்ணிருக்கான். மறு நாள் கிட்டப்பன் பாம்பு கடிச்சு செத்திட்டான். கன்னியப்பன் கூடக் கலங்கிப்போயிட்டான். ஆனா இந்தச் சிறுக்கி கண்ணுல ஒரு பொட்டுத் தண்ணியில்ல.. நான் சொல்றதச் சொல்லிட்டேன். பாத்து சூதானமா நடந்துக்குங்க சின்னையா” என்று சொல்லிவிட்டு சரேலென்று முன்னே நடந்து வெளியே போய்விட்டான்.

ஒரு விதமான பய உணர்ச்சியில் உறைந்து போயிருந்த நான் தள்ளாடியபடியே வெளியே வந்தேன். என் நடையைப் பார்த்து கன்னியப்பன் ஓடி வந்தான்.

“என்னாச்சு சின்னையா? ஏன் இப்படி பேயறஞ்ச மாரி வர்றீங்க? எதுனாச்சும் பாம்பு பல்லி பாத்தீங்களா?”

“ஒண்ணுமில்ல கன்னியப்பன். திடீர்னு தலைவலி. வீட்டுக்குப் போயிரலாமா?”

“போயிறலாம் சின்னையா. அப்புறம் ஒங்களுக்கு பரவாயில்லேனா என் பொண்ணையும் கார்ல கூட்டிட்டுப் போயிரலாங்களா? நேரமாவுது..” என்று இழுத்தான்.

நான் ஒரு வித மயக்கிதிலேயே சரி என்று சொன்னேன். சில நிமிடங்களில் கிளம்பினோம். கன்னியப்பன் தான் கார் ஓட்டினான். நான் பின்னால். மஞ்சுஷா அப்பாவின் பக்கத்தில் முன் ஸீட்டில். கொஞ்ச தூரம் போனதும் அவள் காஷுவலாகத் திரும்பி உட்கார்ந்து தன் வலது கையை எடுத்துச் ஸீட்டின் பின்புறம் போட்டாள். பின் என்னைப் பார்த்து ஒரு ரகசிய சிரிப்பு சிரித்தாள்.

அவள் எதுவும் அறியாதவள் போல தன் கையை ஆட்டிக்கொண்டு இருந்தாள். ஒரு விதமான mesmerising மோஷனில். பெண்டுலம் போல ஆடிய அவள் கையில் என் கண்கள் பதிந்தன.

நான் உறைந்தேன். அந்தக் கையின் தோல் சற்றுச் செதில் செதிலாக இருந்தது போல தோன்றியது. ஆண்டவா! நான் கண்களை இறுக மூடிக்கொண்டேன்.

சற்று நேரத்தில் எஸ்டேட் பங்களாவை அடைந்தோம். காரில் இருந்து இறங்கி உடனேயே என் அறைக்குச் சென்றேன். ஒரு டம்ளர் தண்ணீர் குடித்துவிட்டு பெட்டில் விழுந்தேன். எப்போதோ அம்மா கற்றுத்தந்திருந்த கந்தர் சஷ்டி கவச்சத்தின் நினைவில் இருந்த வரிகளை மனதுக்குள் சொல்லியபடியே தூங்கிப் போனேன்.

மறுநாள் நான் விழித்தபோது காலை மணி பத்து. சமையல் அறையில் பாத்திரச் சத்தம். மஞ்சுஷா! பாம்பு! என் சப்த நாடியும் ஒடுங்கியது.

“கன்னியப்பன்” என்று சப்தமாக இரைந்தேன்.

“அப்பா மதுரைக்குப் போயிருக்காங்க. ராவுல தான் வருவாங்க” என்ற மஞ்சுஷாவின் பதில் வந்தது.

“எங்கிட்டச் சொல்லாம ஏன் போனார்?”

“உங்களுக்கு என்ன தேவையோ, அத என்னச் செஞ்சு கொடுக்கச் சொல்லியிருக்கார். டீ சாப்பிடறீங்களா சின்னையா?”

“சரி கொண்டுவா”

டீ கொண்டு வந்தவளைப் பார்த்ததும் என் பாம்பு பயங்கள் எல்லாம் காணாமல் போயின. ஒரு மெல்லிய மஞ்சள் புடவை மஞ்சள் ரவிக்கையில் மஞ்சுஷா ஒரு தேவதை போல தெரிந்தாள். அதுவும் அந்தப் புடவை நாபிக்குக் கீழே வெகு கீழே லாவகமாக இறக்கிக் கட்டப்பட்டிருந்தது.

“இந்தாங்க” என்று டீயை என்னிடம் தந்தபோது அவள் விரங்கள் என்னைத் தீண்டின. நான் அவளைப் பார்த்தேன். அவளது ஏராளமான கண்களில் விழுந்து என்னைத் தொலைத்தேன்.

டீயை ஒரு ஓரமாக வைத்துவிட்டு அவளை இழுத்து என் மீது போர்த்திகொண்டேன். ம்ம்ம்ம் என்ற ஒரு தீனமான முனகலோடு மஞ்சுஷா என்னுள் சேர்ந்தாள்.

அந்த சுகிர்த லாகிரியின் மயக்கம் வெகு நேரம் கழித்துத் தான் தெளிந்தது. பின்னர் மஞ்சுஷா எழுந்து தன் ஆடைகளைச் சரிசெய்து கொண்டு வெளியே ஓடிவிட்டாள்.

என்னுள் ஒரு பயம் பரவியது. அந்தக் கிராமத்துச் சின்னையா என் கண்முன் வந்து “விழுந்துட்டீங்களே சின்னையா!” என்று சிரித்தான். “அந்தக் கிட்டப்பன் மறுநாள் பாம்பு கடிச்சுச் செத்துட்டான்” என்று யாரோ என் காதில் சொன்னார்கள். அந்தச் சின்னையாவாகத் தான் இருக்க வேண்டும்.

அவன் சொன்னது சரியாத்தான் இருக்கவேண்டும். இல்லையென்றால் ஒரு பெண் இவ்வளவு சீக்கிரம் எப்படி மசிவாள் என்று என்னுள் இருந்த சந்தேகம் சந்துரு கேட்டான். என் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது. பத்து நிமிடங்களுக்குள் நாலு ஸிகரெட்!

இனிமேல் அங்கே இருப்பது டேஞ்சர் என்று தோன்றியது. கன்னியப்பன் ராத்திரி தான் வருவான். அதற்குள் கிளம்பிவிட வேண்டும்.

இயந்திர வேகத்தில் தயாரானேன். ஒரு அரை மணி நேரத்தில் என் பெட்டியை எடுத்துக் கொண்டு பங்களாவை விட்டு வெளியே வந்தேன். காரில் அதைப் பின்ஸீட்டில் வைத்துவிட்டு பங்களாவைப் பூட்டி விட்டு காரை ஸ்டார்ட் செய்தேன்.

அந்தப் பின்மாலை அமைதியை குலைத்துக் கொண்டு கார் கிளம்பியது. இரண்டு வளைவுகள் தான் கடந்திருப்பேன். மூன்றாம் வளைவில் கன்னியப்பன்! காரை நிறுத்தவேண்டி கையைக் காட்டினான்.

நான் காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கினேன். “கொஞ்சம் உடம்பு முடியல கன்னியப்பன். அதான் கிளம்பிட்டேன்”

அவன் அமைதியாக என்னைப் பார்த்தான்.
“என்ன அப்படிப் பாக்கறீங்க கன்னியப்பன்?”

“சின்னையா! பொய் சொல்லாதீங்க. நீங்க பெரிய எடத்துப் பிள்ளை. இப்படிப் பொய் பேசறது நல்லால்ல. மஞ்சுஷா எல்லாம் சொல்லிச்சி….”

“அது அது….”

“ரெண்டு பேரும் சின்ன வயசுக்காரங்க. தப்பு நடந்து போச்சு. அவ மேலேயும் தப்புதான். இல்லைங்கல. ஆனா இப்படி நீங்க விட்டுட்டுப் போயிட்டா நஷ்டப்படப் போறது அவ மட்டும்தானே? ரெண்டு பேரும் தப்பு செஞ்சுட்டு அவளுக்கு மட்டும் தண்டனைன்னா எப்படி சின்னையா?”

“இப்ப என்னச் செய்யச் சொல்றீங்க? நான் அவளக் கல்யாணம் பண்ணிக்கணுமா? உங்களுக்கு என் அப்பாவை நல்லாத் தெரியும். பொல்லாத மனுஷன். வெட்டியே போட்ருவார்”

“அது தப்பு செய்யிறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்க வேணும் சின்னையா. நீங்கள் அவளக் கல்யாணம் கட்டறதத் தவிர வேற வளி இல்ல”

எனக்குக் கோவம் தலைக்கேறியது. உன் பொண்ணப் பத்தி ஊருக்குள்ள என்ன பேசிக்கறாங்க தெரியுமா? அவ லட்சணம் தெரியுமா?” என்று இரைந்தேன்.

“தெரியும். ஆனா அதெல்லாம் நெசமில்ல. அவளப் பாம்பு கடிக்கவேயில்ல. என்ன நம்புங்க”

“அப்ப பாம்பு யாரக் கடிச்சுது கன்னியப்பன்? உங்களையா?”

“ என்னையும் இல்ல சின்னையா. பாம்பு கடிச்சது கன்னியப்பனத் தான்.” என்றான் கன்னியப்பன்.

“என்ன ஒளர்ரீங்க? கன்னியப்பனப் பாம்பு கடிச்சுதுன்னு சொல்றீங்களே அப்ப நீங்க யாரு?”

“நான் ஊருக்குக் கன்னியப்பன் தான்.”

“அப்ப உண்மையில?”

“நான் உண்மையில கன்னியப்பனக் கடிச்ச பாம்பு. இச்சாதாரி பாம்பு. நான் கடிச்ச உடனேயே அவன் செத்துட்டான். இந்தப் பொண்ணுக்கு அப்ப ரெண்டு வயசிருக்கும். ஒண்ணும் அறியா வயசு. அளுதுகிட்டு நின்னுது. எனக்கு ரொம்ப வருத்தமாயிடிச்சி. அப்ப என்னோட ஜோடிப் பாம்பு சொல்லிச்சி நீ அந்த ஆளு உருவம் எடுத்துக்கிட்டு இந்தப் பொண்ண காப்பாத்து. அவ வளந்து ஆளான பிறகு என்கிட்டே வந்திருன்னு. நானும் சரின்னு கன்னியப்பன் உருவத்த எடுத்துக்கிட்டேன். இந்தப் பொண்ணையும் வளத்துக்கிட்டு வர்றேன். அப்பப்ப என் ஜோடியப் பாக்கனும்னு தோணும்போது மதுரைக்கு போறேன்னு சொல்லிட்டு பாம்பா மாறிடுவேன்.

இவ கிட்ட வம்பு செஞ்ச கிட்டப்பனக் கடிச்சதும் நான்தான். இப்ப ஒங்களக் கடிக்கபோறதும் நான் தான்.”

நான் பயத்தில் வெலவெலத்தேன்.

“பயப்படாதீங்க. நீங்க சாக மாட்டீங்க. அந்த வெசத்த முறிக்குற மருந்து இலையையும் உங்க கிட்ட வச்சுட்டுத் தான் கடிப்பேன். அதோட அவ என் பொண்ணாத் தான் வளந்தா. அவ கல்யாணத்துக்கு கொடுக்க எங்கிட்ட எதுவும் இல்லை. மேலும் நீங்க ரொம்ப வசதியானவங்க. உங்களுக்கு எதுவும் தேவையும் இல்ல. ஆனா வெறும் கையோட அனுப்ப முடியுமா? அதுனால உங்களுக்கு ஒரு பொருள் தர்றேன். உங்க எல்லாச் சொத்த வச்சும் அத வாங்க முடியாது. பத்திரமா வச்சுக்குங்க.”

இப்படிச் சொல்லிக்கொண்டே கன்னியப்பன் தன் கையில் இருந்த பையில் இருந்து ஒரு கட்டு இலைகளையும் ஒரு பேப்பரில் சுற்றியிருந்த ஒரு வஸ்துவையும் காரின் மேல் வைத்தான்.

“இதும் பேரு நாகமணி. ரொம்ப ராசியானது. உங்க பல தலைமுறைகளக் காக்கும். என் பொண்ண கைவிட்ராதீங்க. அப்படி எதுனாச்சியும் செஞ்சீங்கன்னா நான் ஒங்களத் தேடி வருவேன் சின்னையா. ஆனா அப்ப இந்த இலைகள் இருக்காது. அப்புறம் ஒரு விசயம். நான் கடிச்ச ஒடனே இத எடுத்து வாயில போட்டு மெல்லுங்க. வெசம் முறிஞ்சிரும்” என்று சொல்லியவாறே கிட்டத்தட்ட ஆறடி இருந்த கன்னியப்பன் சட்டென்று மிக மெலிதான ஒரு நாகமாகக் குறுகினான்.

நான் பார்த்துக்கொண்டு இருக்கையிலேயே மிக வேகமாக என் வலது காலில் கொத்தினான். கொத்திவிட்டு சரசரவென்று அங்கிருந்த புதர்களில் மறைந்தான்.

ஒரு இருள் என்னை அணைக்க ஆரம்பித்தது. என் கைகள் காரின் மேலே இருந்த இலைகளை நோக்கி நீண்டன.

Print Friendly, PDF & Email

2 thoughts on “நாகமணி

  1. Hi venkadesh…..
    It was a superb story n superb thrilling.But the end wasnt that unpredictable…but u have a superb talent…I have also lots of ideas can you teach me to how they can be expressed….thank u….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *