சத்தமின்றி செத்துவிடு

2
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: July 22, 2014
பார்வையிட்டோர்: 35,248 
 

நான் நுழைந்த போது அவள் கட்டிலில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தாள். கையில் அந்த வார பிரபல பத்திரிகை. மேலே ஒரு fan இதைவிட மெதுவாக சுற்றமுடியாது என்பது போல சுழன்று கொண்டிருந்தது. என்னைக் கண்டு எழுந்து உட்கார யத்தனித்ததில் புடவைத் தலைப்பு நழுவியது. அதைச் சரி செய்வதில் எந்தவித அவசரமும் காட்டாமல் “அவரா நைட்டா?” என்றாள்.

“நைட்டுதான்’ கதவை மூடியபடியே சொன்னேன்.

புத்தகத்தை மூடி அருகாமை டேபிளில் வைத்துவிட்டு, கீழே விழுந்திருந்த தலைப்புடனேயே “வாங்க” என்றாள்.

“ நான் பத்திரிகைகளுக்குக் கதை எழுதுபவன்”

“அதுனால என்ன? வாங்க”

அவளருகில் சென்று தலைப்பை எடுத்து அவள் தோளில் போட்டபடி “நான் இதுக்கு வரல” என்றேன்.

“பின்ன என்னப்பத்திக் கதையெழுத வந்தீங்களாக்கும்”

“இல்ல, உண்மையச் சொல்லணும்னா என்னால என் ஆபீசுக்கும்
போக முடியல்ல, வீட்டுக்கும் போக முடியல்ல. அதனாலதான் இங்க வந்தேன்.”

மெல்லிய புன்னகையுடன் அவள், “ நான் கேட்டதுக்கு சாரி. சரி என்னத்துக்கு வந்தீங்கன்னு நீங்களே சொல்லுங்க” என்றாள்.

‘என்னத் தேடி ஒரு கும்பல் அலையுது. என் வீட்ட தொம்சம் பண்ணிட்டாங்க. ஆபீசுக்கும் வந்தாங்க. அவங்க கைல சிக்காம தப்பிச்சு இங்க வந்துட்டேன்.”

“என்ன வேணுமாம் அவங்களுக்கு”

நான் அவளைச் சந்தேகமாகப் பார்த்தேன். என் தயக்கத்தைப் புரிந்து கொண்ட அவள் “ சரி நான் இப்ப என்ன செய்யணும்?” என்றாள்.

“ ஒண்ணும் வேண்டாம். உன் புக்கப் படி போதும். போகும் போது உனக்குப் பணம் தர்றேன். இந்தப் பிளக் பாயின்ட் வர்க் பண்ணுதா?”

“பண்ணுதே! என்ன சார்ஜ் பண்ணனும். மொபைலா?”

‘இல்லை லேப் டாப். அதாவது கம்ப்யூட்டர்.”

அவள் நான் சொன்னது போலவே படிக்க ஆரம்பித்தாள். நான் என் லேப்டாப்பைச் சார்ஜில் போட்டு விட்டு என் பையிலிருந்த டிஜிட்டல் கேமராவை எடுத்தேன். ஓரக்கண்ணால் கேமராவைப் பார்த்துவிட்ட அவள் “ படம் பிடிக்கப் போறீங்களா?” என்று சிரித்தாள்.

எனக்குச் சிரிப்பு வரவில்லை. கேமராவில் இருந்த மெமரி கார்டை வெளியே எடுத்தேன். ஒரு கார்டு ரீடரில் பொருத்தி லேப்டாப்புடன் இணைத்தேன். மெமரி கார்டு உயிர் பெற்று தன்னுள் வைத்திருந்த பைல்களைக் காட்டியது. அவற்றைக் காப்பி செய்து லேப்டாப்பில் இறக்கினேன்.

நான் செய்வதை எல்லாம் மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்த அவள், “இதுக்குத் தான் உங்க பின்னாடி சுத்தறாங்களா?” என்று கேட்டாள்.

திடுக்கிட்டு நிமிர்ந்த நான் “ம்ம்ம்ம்” என்றேன்.

“சரி இப்ப அதை என்ன செய்யறீங்கன்னு சொல்லமுடியுமா?”

“அத கம்ப்யூட்டர்ல காப்பி செஞ்சிட்டு இன்டர்நெட் மூலமா என் க்ளவுட் ட்ரைவுக்கு மாத்திடுவேன். என் பாஸ்வர்ட் என் உயிர் நண்பனுக்குத் தெரியும். எனக்கு எதுனாச்சியும் ஆயிடிச்சுன்னா கூட நான் எந்த உண்மைய வெளில கொண்டு வர இப்படிப் பாடு படறேனோ அது வெளில வந்துடும். நான் செத்தாலும் நிம்மதியா சாவேன்”

வியப்புடன் என்னைப் பார்த்து “ சுத்தமா புரியல. ஆனா நீங்க நல்லவர்ன்னு தெரியுது” என்றாள்.

ஒரு புன்னகையுடன் என் வேலையைத் தொடர்ந்தேன். திடீரென்று ஒரு சந்தேஹம். ரொம்பவும் உளறிக் கொட்டி விட்டேனோ? இனி வாயத்திறக்காமல் வேலையை முடிக்க வேண்டும் என்று நான் நினைத்த கணத்தில், அவள் கட்டிலில் இருந்து இறங்கி என்னருகில் வந்தாள்.

சரேலென்று திரும்பினேன். அவள் கைகளில் ஒன்றும் இல்லை.

“என்ன வேணும்? என்ன டிஸ்டர்ப் பண்ணாதே!”

“இல்ல, எனக்கொரு ஒதவி வேணும்.”

“எனக்கே ஒதவி செய்ய ஆளில்லாம நாயாட்டம் ஓடிக்கிட்டிருக்கேன். இதுல உனக்கு என்ன செய்ய முடியும்?”

(திடீரென்று ஒருமையில் மாறி) “தொர, நீ நல்லவன் மாரி தெரியுற. அதுனால ஓங்கிட்ட சொல்றேன். ஓங்கிட்ட இருக்கற மாரியே என்னான்டையும் ஒரு ரகசியம் இருக்கு. என்னையும் சில பேரு தொந்தரவு பண்றாங்க. ஆனா நான் அவங்க கண்ணுல படமா அத்த பத்திரமா வெச்சிருக்கேன்.”

“எனக்கு என் ரகசியமே ரொம்ப ஜாஸ்தி. இதுனாலேயே என் உயிர் போகலாம். இதுல உன் ரகசியங்கள் வேண்டாம்.”

“இல்ல, நா சொல்றதக் கேளுங்க. என் கிட்டயும் இது மாறி ஒரு கார்டு இருக்குது. அதுல இருக்கற மேட்டரையும் உங்க பிரெண்ட் கிட்ட அனுப்பிடுங்க. எனக்கு எதுனாச்சியும் ஆச்சுன்னா அவரு அத்தயும் வெளில கொண்டு வரட்டும்”

“உன்கிட்ட என்ன ரகசியம் இருக்கமுடியும்? யாராவது பெரிய புள்ளிங்க இல்லேன்னா அரசியல்வாதிங்க உன்கிட்ட அப்படி இப்படி இருக்கும்போது படம் பிடிச்சிருப்ப. அதுக்கெல்லாம் இந்தக் காலத்துல யாரும் அஞ்சறதில்ல. மிஞ்சிப் போனா ஒரு சீடி போடலாம்” என்று சிரித்தேன்.

“இல்ல. இது அந்த மேட்டர் இல்ல. அத்த விட பெருசு. கொல மேட்டரு. அதுக்கு மேல இப்ப வேண்டாம். முடியுமா முடியாதா?”

எனக்கு அவளைப் பார்க்க சந்தேகமாக இருந்தது. “மொதல்ல என் வேலை முடியட்டும். அப்புறம் டைம் இருந்தா பார்க்கலாம்”

“சரி, நான் அத எடுத்து தர்றேன். உங்க வேலை முடிச்சிட்டு செய்யுங்க” என்று சொல்லியபடியே அங்கிருந்த ஒரு அலமாரியின் கீழ்த்தட்டில் வைத்திருந்த இரண்டு செருப்புகளில் ஒன்றை எடுத்தாள். அதன் மேல் பக்கமிருந்த தையலை பல்லால் அறுத்து ஒரு இழு இழுத்தாள். பிரிந்து வந்த

மேல்புறத் தோலைத் தூக்கினாள். உள்ளே ஒரு சிறிய பிளாஸ்டிக் கவரில் ஒரு மெமரி கார்ட்!

சட்டென்று என் அருகாமையை உணர்ந்தவள் திரும்பினாள். வெகு அருகே என்னைப் பார்த்துச் சிரித்தாள். “மூடு வந்திரிச்சா?”

“இல்ல, வந்த வேல முடிஞ்சிரிச்சு.” என்று சொல்லியவாறே அவளைத் ஒரு தள்ளு தள்ளி அவள் முதுகில் என் கால் முட்டியை வைத்து அழுத்தியவாறே என் செல் போனை எடுத்து ஒரு கால் செய்தேன்.

“என்ன காண்ட்ராக்டு, என்ன விசயம்?” என்று மறுமுனையில் ஒரு கரகரப்பான குரல்.

“கெடச்சிருச்சு.”

“முடிச்சிரு. ராஜத்துக்கிட்ட ஒரு அஞ்சு லச்சம் குடுத்திரு. கிளீனா மேட்டர் முடிச்சிருவா”

“சரி”

பின்னர் என் பாண்ட் பாக்கெட்டிலிருந்து ஒரு திறந்து மூடக்கூடிய மெலிதான கத்தி ஒன்றை எடுத்தேன்.

அவள் தலையைப் பின்பக்கம் இழுத்ததில் அவள் தொண்டைக் குழி நன்கு தெரிந்தது. கத்தியை அங்கு வைத்து பலமாக அழுத்தியதில் சட்டென்று ஒரு ரத்தக் கோடு. பின் அதை வலமிருந்து இடமாக ஒரு இழு இழுத்ததும் அவள் சத்தமின்றி செத்துப் போனாள்.

ஒரு ஐந்து நிமிடத்தில் என் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்தேன். வெளியே மெயின் ஹாலில் ராஜம் என்கிற அந்த ‘விடுதி’யின் ‘காப்பாளர்’ என்னைப் பார்த்து வெற்றிலைக் காவியேறிய பற்கள் தெரிய சிரித்தாள்.

மெளனமாக ஒரு ஐந்து லட்சம் ரூபாய் எடுத்து அவளிடம் தந்தேன். பின்னர் ஏதோ தோன்ற ஒரு நூறு ரூபாய் கட்டு ஒரு எடுத்துக் கொடுத்தேன்.

“அலமாரிகிட்ட கீழ கார்பெட் மாத்த வேண்டி வரும்” என்றேன். அவள் என்னைப் பயத்துடன் பார்த்தாள்.

வெளியே விசிலடித்தபடி வந்து ரோட்டில் சற்று ஒதுக்குபுறமாக நிறுத்தி வைத்திருந்த என் காருக்குச் சென்றேன். கார் கதவைத் திறக்க ரிமோட்டை எடுத்தபோது இருட்டிலிருந்து ஒரு உருவம் “ ஆரு, காண்ட்ராக்ட் குமாரா?” என்றது.

மூளையின் எச்சரிக்கைச் செல்கள் விவரம் சொல்ல ஆரம்பிக்கும் முன்னரே என் முகத்தின் மீது ஆசிட் வீசப்பட்டது. face pack உரிவது போல என் முகத்தின் சதை உரிந்து நான் நினைவிழக்கையிலே “ அவன் பையில சாக்ரதையா தேடி அந்த மெமரி கார்ட எடுரா” என்று எனக்குப் பரிச்சயமான கரகரப்புக் குரல் கேட்டது.

– டிசம்பர் 2013

Print Friendly, PDF & Email

2 thoughts on “சத்தமின்றி செத்துவிடு

  1. எளிய நடையில் எழுதப்பட்டு, சில நல்ல திருப்பங்க்களைக் கொண்ட கதை. வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *