காசுக்கு வாங்கிய காதல்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: September 2, 2012
பார்வையிட்டோர்: 14,710 
 
 

நிகில் இன்று காலையிலிருந்து நிலத்தில் கால்படாமல் திரிந்து கொண்டிருக்கிறான். உங்களுக்கும் எனக்கும் அது சிம்பிள் காரணம்தான் ஆனால் நிகிலுக்கு அது அத்தனை சந்தோஷம் தரக்கூடிய காரணம். வேறொன்றுமில்லை, நிகிலின் மனைவி ஊருக்குப் போகிறாளாம். பதினைந்து நாட்களுக்கு அவள் ஊரில் இருக்கப் போவதில்லை. நிகில் அபிஷேக் பச்சன் அளவுக்கு ’தத்தி’ இல்லை என்றாலும் நிகிலின் மனைவி ஐஸ்வர்யா ராயைவிட ஒரு மி.மீ மட்டும் குறைவான அழகுடன் இருப்பாள்.

அவள் ஊருக்குக் கிளம்பிய அடுத்த வினாடியிலிருந்து தான் அவிழ்த்துவிடப்பட்ட கழுதையென சுற்றப்போவதாகச் சொல்லிவிட்டு அலுவலகத்தில் இருந்து வெகு சீக்கிரமாக கிளம்பிவிட்டான். நிகில் கெட்டால் குட்டிச்சுவரெல்லாம் இல்லை குட்டி சொர்க்கம்தான். பெங்களூரின் காஸ்ட்லி க்ளப்களிலெல்லாம் அவனது கிரெடிட் கார்டுகள் உறைக்கப்பட்டிருக்கின்றன. நிகில் வாங்குகிற சம்பளத்திற்கு பெங்களூரில் “பெங்”ஐ வாங்கிவிடலாம். ஆனால் மீதிப்பாதியான “ளூரில்” இத்தனை இலட்சம் பேர்கள் வாழ முடியாது என்பதால் கருணை அடிப்படையில் விட்டு வைத்திருக்கிறான். ஆறு மாதங்களுக்கு முன்பாக நாற்பத்தியெட்டு மாடிகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பின் உச்சியில் ஒரு ப்ளாட் வாங்கியிருக்கிறான். வீட்டின் பால்கனியில் நின்று பார்த்தால் விஜய் மல்லையாவின் வீட்டுத் தோட்டம் தெரிவதாகச் சொல்லி அலுவலகத்தில் எங்களின் வயிற்றெரிச்சலைக் கட்டிக் கொண்டான். யார் விட்ட சாபமோ தெரியாது போன வாரம் இந்தோனஷியாவில் கால் நீட்டிப் படுத்திருந்த பூமாதேவி தொடையை மட்டும் துளியூண்டு சிலிர்த்ததில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெலவெலத்துக் கிடந்தான்.

மாலை மூன்று மணிக்கெல்லாம் அவள் விமானம் ஏறியிருப்பாள் என்பதால் நான்கு மணிக்கு எஸ்கார்ட் சர்வீஸுக்கு தனது ரேஞ்ச் ரோவர் காரை அனுப்பி உஸ்பெகிஸ்தான் பெண்ணொருத்தியை அனுப்பி வைக்கச் சொல்லியிருக்கிறான். எஸ்கார்ட் சர்வீஸ் என்பது பாதுகாப்பு அளிக்கும் நிறுவனம் என்றோ அல்லது உஸ்பெகிஸ்தான் பெண் வந்து நிகிலுக்கு சமையல் செய்து தரக்கூடும் என்றோ எக்குத்தப்பாக நினைத்தால் இதை வாசிப்பதை இத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள். அதுதான் உங்களுக்கு உசிதம்.

உஸ்பெகிஸ்தான் பெண் வந்து இறங்கியபோது நிகில் கொஞ்சம் கிறுகிறுத்துப்போனான். ரசிகர்களை மச்சான்ஸ் என்று அழைப்பாரே ஒரு நடிகை அவரின் பெயர் எனக்கு மறந்துவிட்டது அவரளவுக்கு ஆஜானுபாகுவாக வந்திறங்கினாள். ஸ்லீவ்லெஸ்ஸும், லோ-கட்டும், முக்கால் பேண்ட்டும். இந்த இடத்தில் ஹ்ம்ம்ம்ம் என்று நாம் பெரு மூச்சு விட்டுக்கொள்ளலாம். உஸ்பெகிஸ்தான்காரி முன்பாக 1 மிமீ அழகு குறைந்த ஐஸ் உருகிவிட்டாள் என்று நினைத்துக் கொண்டான். அவளை இந்தச் சந்தர்ப்பத்தில் நினைப்பது பாவம் என தன் கவனத்தை திசை திருப்ப முயன்றபோது உஸ்பெகிஸ்தான்காரி திரும்பி நின்றிருந்தாள். இந்த திருப்பலில் நிகில் மொத்தமாக கவனத்தையே இழந்திருந்தான். இன்று இரவு முழுவதும் அவனோடுதான் தங்கியிருக்கப்போகிறாள். வெளிநாட்டுப்பெண்ணொருத்தியை வேட்டையாடப்போகிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்தவன் கடந்த சில நிமிடங்களாக தான் வேட்டையாடப்படப்போவதாக பதட்டமடைந்திருந்தான்.

வரவேற்பறையில் அமர்ந்தவளின் ஃபெர்ப்யூம் வாசனை தூரத்தில் தனது தோட்டத்தில் கோல்ஃப் விளையாடும் விஜய் மல்லையாவிற்கே தெரிந்தாலும் கூட ஆச்சரியப்பட வேண்டியதில்லை போலிருந்தது. அந்த வாசனையினூடாக மிக நெருக்கமாக அமர்ந்து இருவரும் ஏதேதோ மதுவகைகளை அருந்தினார்கள். அப்பொழுது இருவரின் கைகளும் கொஞ்சம் விடுதலையுற்றன. போதை தலைக்கேறிக் கொண்டிருந்தது. அவளுக்கு ஆங்கிலம் தெளிவாக பேசத் தெரியவில்லை. ”வசனமாடா முக்கியம் படத்தைப் பாருடா” என்ற விவேக்கும்,விக்ரமும் நொடிப்பொழுது வந்து போனார்கள். நிகில் மெலிதாக சிரித்துக் கொண்டான்.

போதையின் தள்ளாட்டத்தோடு நிகிலும், உ.பெ.காரியும் படுக்கையறைக்குச் சென்றிருந்தார்கள். பதினைந்து நிமிடங்கள் ஆகியிருந்த போது காலிங்பெல் ஒலிக்கத் துவங்கியது. சத்தம் கேட்ட ஒரு வினாடிக்கு நிகில் மூர்ச்சையானான். நிகிலின் மனைவிதான் இரண்டு முறை மெதுவாக அடித்துவிட்டு மூன்றாவது முறை காலிங்பெல்லை படுவேகமாக அடிப்பாள். அதே ஸ்டைலில்தான் அழைப்புமணி இப்பொழுது ஒலிக்கிறது. உஸ்பெகிஸ்தான்காரியை எப்படி வீட்டைவிட்டு வெளியேற்றுவது என நிகில் குழப்பமானான். இதற்காகவாவது தரைதளத்தில் வீடு வாங்கியிருக்க வேண்டும் என நினைத்து முன் நெற்றியில் அறைந்து கொண்டான். ஆடைகளை அணிந்து கொள்ளச் சொன்ன போது அவள் குழப்பத்துடன் கீழே கிடந்த ஆடைகளை பொறுக்கத் துவங்கினாள். அவளை ஒளித்து வைத்து சமாளிக்க முடியும் என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் நிகிலுக்கு அப்படி ஒரு உணர்வு வந்ததாகவே தெரியவில்லை.

குளியலறைக்குள் போவதற்கு முன்பாக ஒரு கணம் யோசித்தவன் நாற்பத்தியெட்டாவது மாடியிலிருந்து குதித்துவிடுவதைத் தவிர தான் தப்பிப்பதற்கோ அல்லது சமாளிப்பதற்கோ வழியில்லை என முடிவு செய்திருந்தான். அவனது அதீத போதையும் இந்த முடிவை ஆரவாரத்துடன் ஆதரித்தது. குளியலறையிலிருந்து வெளியே வந்து ஆடைகளை அணிந்துகொண்டவன் பால்கனியை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருந்தான். காலிங்பெல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. உஸ்பெகிஸ்தான்காரி பதட்டமானாள் ஏதோ விபரீதம் நடக்கவிருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டவளாக மிக அவசரமாக வெளியேற விரும்பினாள். அவள் கதவைத் திறந்த போது நிகில் குதித்துவிட்டானா என்று தெரியவில்லை வெளியில் நின்றிருந்த கூரியர் பையன் அவளிடம் ஒரு கவரை நீட்டினான்.

– மே 4, 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *