‘‘புரொபசர் நரேந்திரன்! நீங்க பூரணமா குணமாயிட்டீங்க. நாளைக்கு டிஸ்சார்ஜ் ஆயிடலாம்!’’ என்றபடி கை குலுக்கினார் டாக்டர் மாதப்பன்.
‘‘ஆனா, அதுக்கு முன்னாடி… ஒரு முக்கியமான பேஷன்ட் பக்கத்து அறையில் இருக்கிறார். அவரை நீங்க அவசியம் சந்திக்கணும்!’’ என்றார்.
கோவையின் மிகப் பெரிய தனியார் மருத்துவமனை அது. பரபரப்பான சினிமா தியேட்டர் காம்ப்ளெக்ஸ§ம், பெரிய ஓட்டல்களும் ஒருபுறமும், மிக அமைதியான ரேஸ் கோர்ஸ் சாலை மறுபுறமுமாக அமைந்த இடத்தில் இருந்தது அந்த மருத்துவமனை. அதன் பணக்காரத்தனத்துக்குத் துளியும் சம்பந்தம் இல்லாமல் இருந்தது, டாக்டர் மாதப்பன் சொன்ன பக்கத்து அறைக்காரரின் தோற்றம்.
அவருக்குச் சுமார் அறுபது வயது இருக்கும். சாயம் போன… ஆனால், சுத்தமான காவி வேட்டி, காவிச் சட்டை உடுத்தியிருந்தார். அதே நிறத்தில் மேல் துண்டு. நெற்றியில் குங்குமம். வழுக்கை விழாத தலையில் அடர்ந்த நரைமுடி. நீண்ட தாடி.
‘‘இவர் பேரு மணவாளச் சித்தர். இவர்கிட்ட ஏன் உங்களை அழைச்சுக்கிட்டு வந்தேன்னு யோசிக்கிறீங்களா? உங்க ரெண்டு பேருக்கும் சில விசித்திர ஒற்றுமைகள் இருக்கு. இவரும் உங்களை மாதிரி ஒரு சாலை விபத்தில் அடிபட்டு, நூலிழையில் உயிர் பிழைச்சவர். அதுமட்டுமில்லை… இவர் பிளட் குரூப்பும் உங்களது மாதிரியே ரொம்ப அபூர்வமான வகையைச் சேர்ந்தது. ஸீரம் அடர்த்தி கூட ரொம்ப விசித்திரமா, ஒரே மாதிரி இருந்தது. அதான், உங்களை இவர்கிட்ட அறிமுகப்படுத்தணும்னு தோணிச்சு. நீங்க பேசிக்கிட்டு இருங்க. நான் ரவுண்ட்ஸ் போயிட்டு வந்துடறேன்’’ என்றவாறு அறையை விட்டு வெளியேறினார் டாக்டர்.
புரொபசர் நரேந்திரன் சித்த ரைக் கைகூப்பி வணங்கிவிட்டுத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். ‘‘எனக்குச் சொந்த ஊர் ஊத்துக்குளிங்க. ஆனா, படிச்சதெல்லாம் மெட்ராஸ்லதான். அப்புறம் மேல்படிப்புக்காக லண்டன் போய் பி.ஹெச்டி முடிச்சு, டாக்டர் பட்டம் வாங்கி னேன். கொஞ்ச நாள் அங்கேயே புரொபசரா வேலை பார்த்தேன். பூர்விகச் சொத்து நிறைய இருக்கு. வேலைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு அதுல ஆர்வமும் இல்லை. அதனால, வேலையை விட்டுட்டு கோயமுத்தூர்லயே துடியலூர் பக்கம் செட்டிலாயிட்டேன். ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பத்திப் பதினஞ்சு வருஷமா ஆராய்ச்சி பண்ணிட்டிருக்கேன். போன வாரம்தான் கார் விபத்தாகி, இங்கஅட்மிட் ஆனேன்’’ என்றார்.
மணவாளச் சித்தர், புரொபசர் நரேந்திரனையே உற்றுப் பார்த்தார். சட்டென்று அவர் முகம் வியர்த்துப் போயிற்று. மேல் துண்டை எடுத்து, அழுந்தத் துடைத்துக் கொண்டார். அவரது உடல் லேசாக நடுங்கியது. வறண்டு போன தன் உதடுகளை நாவால் ஈரப்படுத்திக் கொண்டு, மெலிதான குரலில், ‘‘உங்க ஆராய்ச்சி உலோகம் சம்பந்தப்பட்டதா?’’ என்றார்.
புரொபசர் நரேந்திரனுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை. படபடப்புடன், ‘‘ஆமாங்க ஐயா! எப்படி அவ்ளோ கரெக்டா கேட்கறீங்க? என்னால நம்பவே முடியலை. ஆராய்ச்சி செய்ய உலகத்துல எவ்வளவோ விஷயங்கள் இருக்கும்போது, மிகச் சரியாக எப்படி உங்க ளால நான் செய்ற ஆராய்ச்சி பற்றிக் குறிப் பிட்டுக் கேட்க முடிஞ்சுது? நான் யார்கிட்டேயும் அதைப் பத்தி எப் போதும் பேசியதுகூடக் கிடையாதே!’’ என்றார்.
மணவாளச் சித்தர் பதிலேதும் சொல்லாமல், அண்ணாந்து மேலே பார்த்தவாறு இருந்தார். அவரது உதடுகள் லேசாக முணு முணுத்தன…
‘அஞ்ஞானி பல பேர்கள் அடையாத வாத வித்தை, விஞ்ஞானி துணையுடனே விரைவாகக் கைகூடும்!’’
‘‘சித்தரே! நீங்க சொல்றது ஒண்ணுமே புரியலீங்க. தயவுசெய்து விளக்கமாகச் சொல்லுங்க’’ என்றார் புரொபசர் நரேந்திரன்.
‘‘சொல்றேன்… சொல்றேன்! அதுக்கு முன்னாடி என்னைப் பத்திக் கொஞ்சம் சொன்னாத்தான், உங்கள் கேள்விக்கும் பதில் கிடைக்கும்’’ என்று தொண்டையைக் கனைத்துக் கொண்டு, பேசத் தொடங்கினார் சித்தர்.
‘‘என்னைப் பார்த்து ஏதோ சாமியார்னு நினச்சுடாதீங்க. முப்பத்தஞ்சு வருஷத்துக்கு முன்னாடி சர்வீஸ் கமிஷன் பரீட்சை எழுதி பாஸ் பண்ணி, ஃபாரஸ்ட் டிபார்ட்மென்ட்டில் ரேஞ்ச் ஆபீஸரா செலக்ட் ஆகி, முதல் போஸ்ட்டிங்கில் கொல்லி மலையில காட்டி லாகா அதிகாரியா வேலைக்குச் சேர்ந்தேன். அப்ப காட்டுக்குள்ளே சுத்தும்போது, எனக்கு ஒரு மகானுடைய அறிமுகம் கிடைச்சுது. அவர் மேல உள்ள ஈடுபாட்டில் வேலையை ராஜினாமா பண்ணிட்டு, அவரைக் குருநாதரா ஏத்துக்கிட்டு அவர்கூடவே இருந்துட்டேன். அவருக்குத் தெரியாத மூலிகை ரகசியங்களே கிடையாது. அந்தப் பகுதியில் இருக்கிற பாவப்பட்ட மலைவாசி ஜனங்களுக்கு இலவசமா மூலிகை வைத்தியம் செய்வார். அதோட அவர் இன்னொரு விஷயத்திலேயும் தீவிரமா இருந்தார். ஏதேதோ மூலிகைகளையும் சில விநோதமான வஸ்துக்களையும் கலந்து கொதிக்கவெச்சிட்டே இருப்பார். பழைய ஓலைச் சுவடிகளைப் பார்த்துப் பார்த்து, தினமும் தனக்குத்தானே பேசிக்கிட்டு இருப்பார். என் மேல பூரண நம்பிக்கை வந்ததும், ஒரு நாள் அவராகவே என்னைக் கூப்பிட்டு, ‘நான் மேற்கொண்ட முயற்சிகள் என் காலத்திலே ஜெயிக்காது மணவாளா! என் அந்திம நேரம் நெருங்கிட்டிருக்கு. அதனால, இதுவரை நான் செஞ்ச ரகசிய ஆராய்ச்சிக் குறிப்பு களை உனக்குச் சொல்றேன். நான் விட்ட இடத்திலிருந்து அந்த ஆராய்ச்சியை நீ தொடரணும்’னார். ஒரு விஷயம் சொல்ல மறந்துட் டேனே… அவர் தயாரிக்கிற கலவைகளைச் சின்னச் சின்ன இரும்புப் பொம்மைகள் மேல தடவிப் பார்ப்பார். அந்த பொம்மைகளில் சிலது லேசா நிறம் மாறும்!’’
புரொபசர் நரேந்திரன் தன்னை மீறி, ‘ஆல்கெமி!’ என்றார். மணவாளச் சித்தர் புன்னகைத்து, ‘‘ஆமாம்! ஆல் கெமின்னு நீங்க சொன்ன அதே ரசவாத வித்தையில் ஜெயிக் கணும்கிறதுதான் அவரோட லட்சியம். எப்படியாவது இரும்பைத் தங்கமா மாத்தியே தீரணும்னுதான் அவ்வளவு பாடுபட்டார். அவரோட ஆராய்ச்சியில் நூத்தியெட்டு நிலைகளைத் தாண்டிட்டதா சொல்லி, அதையெல்லாம் ஓலைச் சுவடிகளைப் படிச்சு, அர்த்தங்களைக் கஷ்டப்பட்டுக் கண்டுபிடிச்சு செய்யுள் மாதிரி எனக்குச் சின்னச் சின்னக் குறிப்புகளா கொடுத்தார். இன்னும் நாற்பத்தெட்டு நிலைகள் இருக்குன்னு சொல்லி, அவரது ஆராய்ச்சியை நான் தொடரணும்னு கட்டளை போட்டுட்டு, ஜீவ சமாதி ஆயிட்டார். கடைசிக் குறிப்பை மட்டும் ஏனோ அவர் தரவே இல்லை.
அவர் கத்துக்கொடுத்த வைத்தியத்தையும், பார்த்துக்கிட்ட ரசவாத வித்தை முயற்சியையும் தொடர்ந்தேன். இத்தனை வருஷமா நானும் எவ்வளவோ போராடி, அவர் விட்டதில் இருந்து மேற்கொண்டு நாற்பத்தாறு நிலைகளை முடிச்சுட்டேன். ஒரு சேர்மானப் பொருளுக் காக கோயமுத்தூர் வந்தப்ப, ஒரு பஸ் என் மேல மோதிடுச்சு. அடிபட்டுக்கிடந்த என்னை, யாரோ ஒரு நல்ல மனுஷன் இங்கே கொண்டு வந்து சேர்த்து, சிகிச்சை செலவு முழுக்கக் கட்டிட்டுப் போயிட்டாரு. நாற்பத்தேழாவது நிலை பத்தின வாசகமும் இன்னிக்குப் பலிதமாயிருச்சு’’ என்றவர் மீண்டும்,
‘‘அஞ்ஞானி பல பேர்கள் அடையாத வாத வித்தை விஞ்ஞானி துணையுடனே விரை வாகக் கைகூடும்!’’ என்று வாய்விட்டு உரக்கச் சொன்னார்.
‘‘ஆக, இன்னும் ஒரே ஒரு நிலைதான் பாக்கி! அதுவும் கைகூடுகிற காலம் நெருங்கி வந்திருச்சுன்னு நினைக்கிறேன்!’’
புரொபசர் நரேந்திரன் தாங்க முடியாத ஆச்சர்யத்துடன், ‘‘ஸோ, வாத வித்தைன்னு நீங்க சொல்றது ‘ஆல்கெமி’. அதாவது, இரும்பைத் தங்கமாக்குற ரசவாதம்! வொண்டர்ஃபுல்! ஐயா, சித்தரே! நானும் அதே ஆராய்ச்சிலதான் ஈடுபட்டிருக்கேன். நாம ரெண்டு பேரும் சந்திச்சது ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. என் ஆராய்ச்சியும் கிட்டத்தட்ட முடியற தறுவாயிலதான் இருக்கு. இன்னும் ஒரே ஒரு கெமிக்கல் சேர்த்தா போதும், அந்த சேர்க்கைப் பொருளைக் கண்டுபிடிக் கிறதுக்குதான் முயற்சி பண்ணிட்டு இருக்கேன்’’ என்றார்.
மணவாளச் சித்தர் கொஞ்ச நேரம் ஆழ்ந்து யோசித்தார். ‘‘எனக்கும் இன்னும் ஒரு நிலைதான் பாக்கி இருக்கு. ஏன் நாம ரெண்டு பேரும் ஒரே இடத்தில், அதாவது கொல்லி மலையிலேயே நம்ம ஆராய்ச்சி யைத் தொடரக் கூடாது?’’ என்று கேட்டார்.
‘‘நல்ல யோசனை தான்! நாளை மதியம் என்னுடைய சோதனைச் சாலையிலிருந்து தேவையான பொருட் களை மட்டும் எடுத்துக்கிட்டுப் புறப்படலாம்’’ என்ற புரொபசர் நரேந்திரன், சித்தரிடம் விடை பெற்றுத் தன் அறைக்கு வந்தார்.
மறுநாள் பிற் பகலில், சித்தரும் புரொபசரும் கொல்லி மலை நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தனர். புரொபசரின் இரட்டை ஏ.ஸி. பொருத்தப்பட்ட குவாலிஸ் கார், தார்ச் சாலையில் வழுக்கிக்கொண்டு பறந்தது. அவரே ஓட்டி வந்தார்.
ராசிபுரம் தாண்டி கோம்பைக்காடு பிரிவில் மலைப் பாதையில் நுழையும் வரை கண்களை மூடிவந்த சித்தர், ‘‘உங்க ஆராய்ச்சி பற்றிக் கொஞ்சம் சொல்லுங்களேன்’’ என்றார்.
‘‘கூடியவரை புரியற மாதிரி சுருக்கமா சொல்ல முயற்சிக்கிறேன். எல்லா உலோகங்களுடைய அணுக்களிலும் புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் என்று அணுவைக் காட்டிலும் நுணுக்கமான சங்கதிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருக்கு. இரும்பின் மூலக்கூறுகளுடைய அந்த அணு உள் கட்டமைப்பைத் தங்கத்தின் அமைப்பா மாத்தறதுதான் அடிப்படை. அதுக்காகப் பல ரசாயனக் கலவைகளை யும் பல விதங்களிலும் மாற்றி மாற்றிக் கலந்து, நிறையச் சோதனைகள் செய்து பார்த்து கிட்டத்தட்ட தங்கத்தை நெருங்கிட்டேன்’’ என்றவர், ‘‘ஆமா! உங்க குருநாதர் ஏதோ நிலைகள்னு சொன் னாரே, அது என்னன்னு சொல்லுங்களேன்!’’ என்றார் புரொபசர்.
‘‘பல சேர்க்கை வஸ்துக்களையும் குறிப் பிட்ட எடையில் கலந்து, இரும்பிலே பூசிப் பூசிப் பாடம் பண்ணுகிற முறை அது. உதாரணமா,
‘மணமாகாக் கன்னியின் மதன நீர் ஒரு மல்லி யெடை, பிணமாகாக் கருநாகப் பல்லோ வொரு பிடங்கி னெடை, குணமான சிறுகுறிஞ்சி குன்றாத விரற் பிரண்டை மணங்கமழும் மாம்பூ அளவோடு மையாக அரைத்துவிடு’ &இது ஒரு நிலையின் வாசகம். இது மாதிரிப் பல நிலைகள் தாண்டி, எல்லாம் பலிதமாயிடிச்சு. இன்னும் ஒரே ஒரு நிலைதான் பாக்கி! அதைக் கண்டுபிடிக்கக் குருநாதர்தான் திருவுளம் செய்ய வேண்டும்’’ என்றார் சித்தர்.
மலைப் பாதையில் வளைந்து வளைந்து கார் மேலேறியது. சாலையின் இருமருங்கும் கிரிவியா ரோபஸ்டா மரங்களின் மஞ்சள் நிறப் பூக்கள் வர்ணஜாலம் காட்டின. செம்மேடு தாண்டி, சித்தர் காட்டிய வழியில் பயணித்து, ஒரு மண் சாலையில் கிளை பிரிந்து, ஆள் அரவமற்ற வனாந்திரத்தில் மேலும் ஒரு மணி நேரம் பயணம் செய்த பிறகு, ஆதிவாசிகளின் குடியிருப்பு ஒன்றின் அருகே சென்று சாலை முடிந்தது.
‘‘இந்த இடத்துக்குப் பெயர் குழிவளவு. இங்கே இருக்கிற மலைவாசிகளுக்கு அரசாங்கமே குடியிருக்க இடம் கொடுத் திருக்கு. செட்டில்மென்ட் ஏரியான்னு பேர். இந்த ஆதிவாசிகள் எனக்காகக் கட்டிக் கொடுத்த வீட்டில்தான் என்னுடைய ஆராய்ச்சியும் நடக்குது. வாங்க, போகலாம்’’ என புரொபசரை அழைத்துச் சென்றார் சித்தர்.
ஓலையால் வேயப்பட்டுப் பெரிய ஹால் போலிருந்தது சித்தரின் வீடு. காய்ந்துபோன பச்சிலைகள் குவியல் குவியலாகக் கிடந்தன. நகைக் கடைகளில் எடை போட உதவும் காற்றுப் புகாத எலெக்ட்ரானிக் தராசு ஒரு ஓரமாக இருந்தது. இறைச்சிக் கடைகளில் அடிக்கும் ஒருவித மாமிச வாடை சுழன்றுகொண்டு இருந்தது.
வீட்டுக்கு வெளியே இருபது அடி தூரம் தள்ளி, மிகப் பெரிய பள்ளத்தாக்கு. அங்கே அறுநூறு அடிக்கும் கீழே அதல பாதாளத்தில், ஆகாச கங்கை என்ற பெயர் கொண்ட நதி ஸ்ஸ்ஸ்ஸ் என்ற சப்தத்துடன் கரை புரண்டு ஓடிக்கொண்டிருந்தது.
ஒரு மாத காலம் பறந்தது. பெரும்பாலும் சமைக்காத காய் கறிகள்தான் இருவருக்கும் ஆகாரம். இரவில் காய்ச்சாத ஆட்டுப் பாலை, அரப்புளி என்ற மலைவாசி இளைஞன் கொண்டுவந்து தருவான். புரொபசர் நரேந்திரன் ஓரளவு அந்த வகை உணவுகளுக்குத் தன்னைப் பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டார். சித்தரின் இரும்புப் பொம்மைகளும் புரொபசரின் இரும்புத் துண்டுகளும் தனித்தனியே அடுக்கி வைக்கப்பட்டுப் பலவித பரிசோதனைகளுக்கும் ஆட்படுத்தப்பட்டு இருந்தன.
ஒரு நாள் புரொபசர் நரேந்திரன் மிகக் கவனமாக ஒரு கண்ணாடி சீசாவில் இருந்து துளித் துளியாக ஒரு திரவத்தை இன்னொரு குடுவையில் இட்டுக் கலக்கிக்கொண்டு இருந்தார்.
பீங்கான் பாத்திரம் ஒன்றில் சில பசுந் தழைகளை அரைத்துக்கொண்டு இருந்த மணவாளச் சித்தர் லேசாகச் சிரித்த படியே, ‘‘என்னங்கய்யா அது… அவ்வளவு கவனமா கலக்குறீங்க?’’ என்று கேட்டார்.
பார்வையைத் திருப்பாமலே, ‘‘இது டி.என்.டி. அதாவது, ட்ரை நைட்ரோ டொலுவீன்! பயங்கரமான வெடி பொருள். அதைத்தான் இப்போ ட்ரை பண்ணிட் டிருக்கேன்’’ என்றார் நரேந்திரன்.
அடுத்த நொடி… மிகப் பலமான ஓசையுடன் அந்தக் கலவை வெடித்துச் சிதறியது. படுகாயப்பட்ட இருவரின் உடம்பிலிருந்தும் பீறிட்ட ரத்தம் ஒரே குழம்பாகக் கலந்து, ஓடிச் சித்தரின் இரும்புப் பொம்மைகள் மீதும், புரொபசரின் இரும்புத் துண்டுகள் மீதும் பீய்ச்சி அடித்த அதே விநாடி, அவை தகத் தகாயமாய்ப் பளீரிட்டு சொக்கத் தங்கமாக மாறி, மின்னின. அந்தக் காட்சிதான் அவர்கள் இருவரும் கடைசியாகப் பார்த்த காட்சி!
மறுபடியும் பெருத்த ஓசையுடன் வெடித்துச் சிதறியது அந்த ஆராய்ச்சி சாலை. அங்கிருந்த சகலமான பொருட் களுடன் இருவரின் சடலங்களும் ஆகாச கங்கை பாயும் அதல பாதாளத்தில் வீசி எறியப்பட்டு, மூழ்கி மறைந்தன.
சித்தரின் குருநாதர் சொல்லாமல் விட்ட கடைசிச் சுவடி, குருநாதரின் சமாதிக்குள்ளேயே எலும்புக்கூடாகக் கிடந்த அவரது மூடிய கையில் கிடந்தது.
‘ஈடுபட்ட இரு பேரின் செங்குருதி ஒன்றாகிப் பாடுபட்ட பலனது பலிதமாகும் வேளையிலே, கூடுவிட்டு ஆவிகள் போய்க் குணவான்கள் உடலங்கள் மேடுவிட்டுப் பள்ளம்சேர் வெள்ளநீர் கலந்திடுமே!’
– ஜூன் 2006