ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்

3
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: த்ரில்லர்
கதைப்பதிவு: January 14, 2012
பார்வையிட்டோர்: 48,706 
 
 

அது இரண்டாம் உலக மகா யுத்த காலம்! அப்போது யுத்தம் நடந்து கொண்டிருந்தது; முடியவில்லை. ஆனால் பட்டாளத்துக்குப் போயிருந்த அம்மாசி ஊர் திரும்பி விட்டான். அவன் விருப்பத்துக்குப் புறம்பாக அவன் வீட்டுக்கு அனுப்பப்பட்டான். அவன் ராணுவத்துக்கு இனிமேல் உபயோகப்பபட மாட்டானாம்.

அவன் இப்போது – ராணுவ வாழ்க்கை மென்று எறிந்த சக்கை.

அவனது வருகையை எதிர்பார்த்து வரவேற்கவோ, கொண்டாடவோ அவனுக்கு யாருமில்லை. அது அவனுக்குத் தெரியும். எனினும் வேறு வழியின்றி, தான் வெறுத்து உதறிவிட்டுப் போன அந்த தாழ்ந்த சேரிக்கே அவன் திரும்ப வேண்டி நேர்ந்தது.

அம்மாசி போரைக் கைப்பிடித்து, ராணுவத்தைப் புக்ககமாய்க் கொண்டிருந்தான்…

வேற்று நாடுகளில் விதேசி மனிதரிடையே திரிகின்ற அனுபவத்தை, அவனை ஜாதியறிந்து ‘தள்ளி நில்’ என்று விலக்கி வைக்காத விரிந்த உலகத்தோடு உறவாடும் ராணுவ வாழ்க்கையை அவன் நேசித்ததில் ஆச்சரியமில்லை.

தாழ்ந்து கிடந்த இந்திய சமுதாயத்தால் தாழ்த்தி வைக்கப்பட்ட தனது சமூக வாழ்க்கையின் சிறுமையை வெறுத்தே முதல் மகா யுத்த காலத்தில் பட்டாளத்தில் சேர்ந்து பதினெட்டு வயதிலேயே கடல் கடந்து செல்லும் பேற்றினை அடைந்தவன் அம்மாசி.

ஆயினும் அப்பொழுது ஒரு முறை சில காலம் கழித்து யுத்தம் நின்றபின் அதே வாழ்க்கைக்கு அவன் திருப்பி அனுப்பப்பட்டான். உலகையே வலம் வந்து அவன் சேகரித்துக் கொணர்ந்த அறிவும் அனுபவமும் அந்தச் சமூகத்தினரால் ‘ஆ’ வென்று வாய் பிளந்து கேட்டுத் திகைக்கும் மர்மக் கதைகளாகவும், ‘பொய்’யென்று அவன் முதுகுக்குப் பின்னால் உதட்டைப் பிதுக்கிக் கேலி செய்யும் மாய்மாலப் பேச்சுக்களாகவுமே அன்று கொள்ளப்பட்டன.

அவ்வாறு அவர்களோடு ஒட்டியும் ஒட்டாமல், பட்டும் படாமல் வாழ்ந்து கொண்டிருந்த அம்மாசியை மீண்டுமொரு பொன்னான சந்தர்ப்பமாய் வந்து வலிய அழைத்தது இரண்டாவது உலக மகா யுத்தம். நாற்பது வயதுக்கு மேல் மீண்டும் அவனுக்கு ராணுவ வாழ்க்கை கிட்டிய மகிழ்ச்சியில், தனது சேரிக்கு ஒரு சலாமடித்து விட்டு ராணுவ விறைப்போடு கம்பீரமாகப் புறப்பட்டு விட்டான் அம்மாசி.
யுத்த களத்தில் மார்போடு இறுக்கிப் பிடித்த யந்திரத் துப்பாக்கியைத் தாங்கி எதிரிகளோடு போராடிக் கொண்டிருக்கையில் எதிரிகளின் குண்டு வீச்சுக்கு அவன் இலக்கானான். சில மாதங்கள் ராணுவ ஆஸ்பத்திரியில் கிடந்தான். அதன் பிறகு அவன் ராணுவத்துக்கு உபயோகமற்றவனாகி விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

அவனால் இப்போது ‘அட்டென்ஷ’னில் கூட நிற்க முடியாது. யந்திரத் துப்பாக்கியை இரு கரங்களிலும் தாங்கி அணைத்துப் பிடித்துச் சுடும்போது, எப்படி உடலும் கரமும் அதிர்ந்து நடுங்குமோ அது போல், எழுந்து நின்ற வெற்றுடம்பே நடுங்கிக் கொண்டிருக்கிறது அவனுக்கு.

ராணுவ விறைப்போடு கம்பீரமாக ஊரை விட்டுப்போன அம்மாசிக்கு – தலையாட்டம் கண்டு உடல் நடுக்கம் கொண்டு கூனிக் குறுகித் திரும்பி வருகின்ற தன்னை, சலாமடித்து வரவேற்க யாரும் வரமாட்டார்கள் என்று தெரியும். இருப்பினும் அவன் வந்தான்.

அந்தக் குக்கிராமத்தின் ரயில்வே ஸ்டேஷனில் பாசஞ்சர் வண்டிகள்தான் நிற்கும். அதுவும் பகல் நேரப் பாசஞ்சர் வண்டிகள் மட்டுமே நிற்கும். ஆனால், சில சமயங்களில் பல காரணங்களின் நிமித்தம் அந்தப் பகல் நேரப் பாசஞ்சரை முந்திக்கொண்டு இரவு வந்து விடும். அப்படிப்பட்ட விதிவிலக்கான சமயங்களில் இரவிலும் அங்கே ரயில்கள் நிற்பதுண்டு.

அப்படி ஒரு விதிவிலக்கான சமயத்தில் – நேற்று இரவு – வடக்கே இருந்து வந்த அந்தப் பகல் நேரப் பாசஞ்சர் வண்டி இந்த ஒற்றைப் பிரயாணியான அம்மாசியை மட்டும் இறக்கிவிட்டபின் அந்த ரயில்வே ஸ்டேஷனில் கொஞ்ச நஞ்சமிருந்த வெளிச்சத்தையும் வாரிச் சுருட்டிக் கொண்டு போய் விட்டது. உலகத்திலிருந்தே தனிமைப் பட்டு விட்ட ஒற்றை மனிதனாய் அவன் நான்கு புறமும் இருளில் சுற்றிப் பார்த்தவாறு நின்றிருந்தான்.

பிறகு தனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஊரில் திரிவது போல் தோள்மீது தன் கான்வாஸ் பைச்சுமையுடன், தான் பிறந்த ஊருக்குள்ளே போய் நான்கைந்து தெருக்களை அர்த்தமற்றுச் சுற்றிப் பார்த்தான். அப்புறம் ஊருக்கு வெளியே வந்து பல்லாண்டுகளாய் ஒதுக்கி வைத்திருக்கும் தனது சேரியை தூரத்திலிருந்தே பார்த்தான். மனமில்லாமல் தானே சேரியை நோக்கி நடந்து கொண்டிருப்பதைத் திடீரெனெ உணர்ந்து ஒரு நிமிஷம் நின்றான். வாய்க்கால் மதகு என்ற சேரியின் எல்லைக்கு வந்து விட்டோம் என்று தெரிந்தபோது – மேலே நடந்து சென்று சேரிக்குள் போய் யாரைப் பார்த்து, யாரோடு உறவாடுவது? என்றெல்லாம் யோசிப்பதற்காக மதகுக் கட்டையின் மீது சுமையை இறக்கி வைத்து விட்டுச் சற்று உட்கார்ந்தான்.

அவன் காலடியில் வாய்க்கால் நீர் சலசலத்து ஓடிக்கொண்டிருந்தது. அவன் தலைக்கு மேல் சிள் வண்டுகளின் நச்சரிப்பு ரீங்கரித்துக் கொண்டிருந்தது. சாலையின் இரு மருங்கிலும் இருளில் நின்றிருந்த கரிய மரங்களின் நிழல் உருவங்களின் மேலெல்லாம் ‘மினுக்கட்டாம் பூச்சிகள்’ மொய்த்துக் கொண்டிருந்தன. தூரத்தில் தெரியும் சேரியும் சிறு வெளிச்சமும், குடிசை வீடுகளின் மீது புகையும் தெரிந்தன. குழந்தைகளின் அழுகுரலும் ஒரு கிழவியின் ஒப்பாரிச் சத்தமும் லேசாகக் கேட்டது.

அம்மாசிக்குத் திடீரெனத் தன் தாயின் நினைவு வந்தது.

இதே மதகுக் கட்டையின் மீது எத்தனை முறை அவன் உட்கார்ந்திருக்கிறான்! சலசலத்தோடும் இந்த வாய்க்கால் தண்ணீரில் அவன் தாய் புல்லுக்கட்டைப் போட்டு அலசிக் கொண்டிருந்த போதெல்லாம் வெறும் கோவணத்துடன் சின்னஞ்சிறு பையனாய்க் கையிலொரு கரும்புத் துண்டுடன் நின்று கொண்டிருந்த நாளெல்லாம் அவனுக்கு இப்போது நினைவு வந்தது. அவன் தாய்க்கு அன்றிருந்த ஆசையெல்லாம் தன் மகன் வளர்ந்து ஒரு கண்ணாலம் கட்டிக்கொண்டு நாலு பேரைப் போலப் பயிர்த்தொழில் செய்தோ, மாடு மேய்த்தோ வாழ வேண்டுமென்பதுதான். அந்த ஆசைகளையெல்லாம் கேலி செய்து பழித்து விட்டுத்தான் அவன் முதல் மகா யுத்த காலத்தில் பட்டாளத்துக்குப் போனான். அவன் ராணுவத்தில் இருந்த காலத்தில் அவள் செத்துபோன சங்கதியைத் திரும்பி வந்தபோது தான் அவன் அறிந்தான். அவளுக்காக அவன் அழக் கூட இல்லை…

அம்மாசிக்கு மரணம் என்பது ரொம்ப அற்பமான விஷயம். அவன் சாவுகளின் கோரங்களோடு நெருங்கி உறவாடியவன். இப்போது அவனுக்கு தாங்கொணாக் கொடுமையாக இருந்தது, உயிர் வாழ்பவன் உபயோகமற்று வெறும் ‘உயிர் சுமக்கும்’ காரியந்தான்.

‘சண்டையில், தான் செத்துப் போயிருந்தால் எவ்வளவு சௌகரியமாய் இருந்திருக்கும்!’ என்று இப்போது கற்பனை செய்து பார்த்தான் அவன். அவனுக்கு இப்போது யார் இருக்கிறார்கள்? அவன் யாருக்காக வாழ்வது? அவன் மடியில் இப்போது சில நூறு ரூபாய்கள் இருக்கின்றன. அதை வைத்துக்கொண்டு என்னதான் செய்வது…?

ஐம்பது வயதுக்குள்ளாக அடைந்துவிட்ட முதுமையையும் இந்த நிராதரவான திக்கற்ற வெறுமையையும் அனுபவிப்பதைவிட, மரணம் சுகமான கற்பனையாய் இருந்தது அவனுக்கு.

அப்போது ‘கிரீச் கிரீச்’ என்று சக்கரத்தில் அச்சாணி உரசிக் கொள்ளும் சங்கீதமும் ‘கடக் கடக்’ என்று மேடு பள்ளங்களில் இறங்கி ஏறும் தாளகதியும் ஒலிக்க, தூரத்தில் ஒரு கட்டை வண்டி சேரியை நோக்கி வந்து கொண்டிருந்தது.

வண்டி நெருங்கி வரும்போது அதிலிருந்து ஒரு பெண்ணின் குரல் “தே! சும்மா கெட… அதோ ஆளு யாரோ குந்திக்கினு கிறாங்க” என்று தன்னைக் குறித்து எச்சரித்த ரகசியக் குரலிலிருந்து ஏதோ வாலிப சேஷ்டை என்று யூகித்துக் கொண்ட அம்மாசி தனது பிரசன்னத்தை ஒரு செருமலின் மூலம் உணர்த்தினான்.

“யாருய்யா அது மதகு மேலே?” என்று வண்டிக்காரன் குரல் கொடுத்தான்.

“அசலூரு… மடுவங்கரைக்குப் போறேன்” என்று பதில் குரல் காட்டினான் அம்மாசி.

வண்டி அவனைக் கடந்து சற்று தூரம் சென்றதும் வண்டி சப்தத்தையும் மீறி அந்தப் பெண் பிள்ளையின் கலகலத்த சிரிப்பொலி அம்மாசியின் காதில் வந்து ஒலித்தது…. அவர்கள் பேசிய தோரணையிலிருந்து இருவருமே கொஞ்சம் காதல் போதையில் மட்டுமல்லாமல் சிறிதே கள்ளின் போதையிலும் இருக்கிறார்கள் என்று அறிந்த அம்மாசி, “ம்… வயசு!” என்று முனகிக் கொண்டான்.

‘நான் வீணாக எதையெதையோ நாடி, இந்த வாழ்க்கையையும் வெறுத்து ஓடி என்ன பயன் கண்டு விட்டேன்?’ என்று அவன் மனத்தில் ஓர் இழை ஓடிற்று இப்போது.

சற்று முன் வண்டியில் அவனைக் கடந்து போன இளமையின் கலகலப்பு, கடந்துபோன தனது இறந்த காலமே தன்னைப் பார்த்துச் சிரிப்பது போல் இருந்தது அவனுக்கு.

“ஆ!… வயசு, அதெல்லாந்தான் பூடிச்சே!… எனக்குந் தான் இருந்திருக்கு… பதினெட்டு வயசும், இருபது வயசும், முப்பதும் நாப்பதும்… ம், அப்போ அதை கெவுனிக்காம நானு… ஓடினேன்… அத்தோட பெருமை அப்போ தெரியல்லே… ஓடினேன்… மனுசங்க என்னாதான் சாதின்னும் மதமின்னும் ஒதுக்கி வெச்சாலும் கடவுள் கருணையோட எல்லாருக்கும் சமமா குடுத்திருக்கிற வயசையும் வாலிபத்தையிம் எட்டி உதைச்சுட்டு என்னா வேகமா ஓடினேன்டா நானு! ஓடிக்கினு இருக்கும் போதே அது என் கிட்டே இருந்து ஓடிக்கினு இருந்திச்சுன்னு அப்ப தெரிஞ்சுதா? நானு ஓடறதுக்கே அந்த வயது திமிருதானே காரணமா இருந்திச்சு! ஓடிஓடி ஓய்ந்தப்புறம் இப்ப தெரியுது… ஆ! பூட்டுதேன்னு… என்னா லாபம்” என்று தன்னுள் அவலமாய் அழுது முனகிக் கொண்டான் அம்மாசி.

– ஆம்; இழந்த ஒன்று – ‘இருக்கிறது’ என்ற நினைப்பிலேயே இழக்கும்போது, ‘இழந்து கொண்டிருக்கிறோம்’ என்று தெரியாத அளவுக்கு இழப்பைத் தாங்கிக்கொள்ளும் சக்தியாகவும் இருந்து, முற்றாக இழந்துவிட்ட பின் ‘இழந்து விட்டோமே’ என்ற நினைப்பிலேயே அந்த இழந்த ஒன்று – அது எதுவாக இருந்தாலும் எத்தனை மகத்தானதாக மாறிவிடுகிறது! ஒன்று மகத்தானது என்பதற்கான இலக்கணமே அதுதான்…

அம்மாசி இரவு வெகு நேரம்வரை சேரியில் நுழைய மனமில்லாமல் மதகுக் கட்டையின் மீதே உட்கார்ந்திருந்தான். இன்னும் சேரியிலிருந்து மனிதக் குரல்களும், நாய்களின் ஓலமும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தன.

சேரியைச் சேர்ந்த முண்டாசு கட்டிய ஒருவன் வாயில் சுருட்டின் நெருப்புக் கனிய, காற்றையே நாற்றப்படுத்தும் புகையுடன் இருண்ட வழியில் பயத்தை விரட்ட உரத்த குரலில் பாடிக்கொண்டே வந்தான். மதகின் மீதுள்ள உருவத்தைக் கண்டதும் “யாரு அது?” என்று திகிலடித்த குரலில் கேட்டவாறு, பாட்டு நின்றது போலவே, தானும் திடீரென நின்றான்.

“ஆளுதான், பயப்படாதே!” என்று எழுந்து நின்று பூமியில் தன் பூட்ஸ் காலைத் தேய்த்து ஓசை காட்டினான் அம்மாசி.

முண்டாசு கட்டிய ஆள் அம்மாசியை அடையாளம் கண்டு கொள்வதற்கு நெருங்கி வந்து, “யாரது?” என்று வினவியவாறே பார்த்தான். அந்த நிமிஷம் திடீரென அம்மாசிக்குத் தன் ஒன்று விட்ட தங்கச்சி காசாம்பூவின் நினைவு வந்தது. உடனே அவள் கணவன் சடையாண்டியின் பேரைச் சொல்லி அவர்களைத் தேடி வெளியூரிலிருந்து வந்திருப்பதாக அறிவித்துக் கொண்டான்.

“சடையாண்டிக்கி… ரயில்வே போட்டர் வேலை கெடைச்சது; அவன் பட்டணத்துக்குப் பூட்டானே… பொஞ்சாதியையும் கூட்டிக்கினு…. தெரியாதா உனக்கு?” என்று முண்டாசுக்காரன் கூறியதும், அம்மாசிக்குப் பெருத்த ஏமாற்றமாய் இருந்தது. அவன் காசாம்பூவையோ அவள் கணவனையோ எதிர்பார்த்து வரவில்லை. இருப்பினும் சேரிக்குள் புகாமல் திரும்புவதற்கு அதுவே போதுமான காரணமாயிருந்தது அவனுக்கு. “பட்டணத்தில் எங்கே இருக்காங்கன்னு தெரியுமா?” என்று விசாரித்தான்.

“எய்ம்பூர் டேசன்லேதான் போட்டர் வேலை செய்யறானாம் சடையாண்டி; போனா பாக்கலாம்” என்று கூறிவிட்டு முண்டாசுக்காரன் சேரியை நோக்கி நடந்தான்.

அம்மாசி அவன் முதுகுக்குப் பின்னால் நின்று அந்தச் சேரியை வெகு நேரம் வெறித்துப் பார்த்துவிட்டுத் தனது கான்வாஸ் பையைத் தூக்கித் தோள்மீது வைத்துக் கொண்டு ரயில்வே ஸ்டேஷனை நோக்கித் திரும்பி நடந்தான்.

அன்பு காட்டவும் அரவணைத்துக் கொள்ளவும் யாருமில்லாத தனியனான தனக்கு உள்ள ஒரே பிடிப்பு அந்த ஒன்று விட்ட தங்கையும், அவள் புருஷனும், அவள் குழந்தைகளும்தான் என்ற தீர்மானம் அவன் மனத்தில் உருவான அந்த நிமிஷமே அவன் நடையில் ஒரு தெம்பு பிறந்தது.

மறுநாள் காலை, பொழுது விடிந்து வெகு நேரம் கழித்துச் சில மணி நேரங்கள் தாமதமாக – பகல் நேரத்திலேயே வந்து சேர்ந்தது அந்தப் பாசஞ்சர் வண்டி.

வண்டியில் ஏறி நின்ற அம்மாசி தனது கிராமத்தை, தூரத்தில் தெரியும் சேரியை, வாய்க்கால் மதகைக் கண்கள் பளபளக்க வெறித்துப் பார்த்தான்.

அவனது சேரியைச் சேர்ந்த கோவணாண்டிச் சிறுவர்களும், மேல் சட்டையில்லாமல் இடையில் அழுக்குப் பாவாடை தரித்த கறுப்புச் சிறுமிகளும் அந்தக் கிராமத்தின் விளைபொருள்களான நுங்கு, வெற்றிலை, வெள்ளரிப்பிஞ்சு முதலியவற்றை விலை கூறி விற்றவாறு ரயிலின் அருகே ஓடித் திரிவதை ஒரு புன்னகையுடன் பார்த்தவாறிருந்த அம்மாசி, எதையாவது அவர்களிடமிருந்து வாங்க வேண்டும் என்று சற்று நேரம் கழித்தே ஆசை கொண்டான்.

வெள்ளரிப் பிஞ்சு விற்ற ஒரு சிறுமியை, சட்டைப்பைக்குள் கையை விட்டுச் சில்லறையை எடுத்தவாறே அவன் கூவி அழைத்த நேரத்தில் ரயிலும் கூவி நகர ஆரம்பித்தது. உடனே அவன் அந்தச் சிறுவர் சிறுமியரை நோக்கிச் சில்லறையை வாரி வீசினான்.

அவர்கள் ஆர்வத்தோடு அவற்றைச் சேகரித்துக் கொண்டு தலை நிமிர்ந்த போது வண்டி நகர்ந்து கொண்டிருந்தது. அம்மாசி குழந்தையைப் போல் குதூகலத்தில் வாய்விட்டுச் சிரித்தான். அவர்கள் இந்தப் பட்டாளத்துக்காரனுக்குப் பதில் புன்னகையுடன் சலாம் வைத்தவாறு வரிசையாக நின்றனர்.

பிறந்த மண்ணுக்கே விடை கூறிக்கொள்வது போல், நடுங்கிக் கொண்டிருக்கும் தலைக்கு நேரே கரம் உயர்த்திச் சலாமிட்டான் அம்மாசி. அவன் கண்ணிமைகளில் கண்ணீர் சிதறிப் பரந்திருந்தது.
வண்டியில் கூட்டமில்லை. அம்மாசியின் தலைக்கு மேல் சாமான் வைக்கும் இடத்தில் காலில் மேஜோடும் இடுப்பில் வேட்டியின் மேல் பச்சை நிற சிங்கப்பூர் பெல்ட்டும் அணிந்த ஒரு பட்டிக்காட்டு மைனர் பீடி புகைத்தவாறு படுத்திருந்தான்.

அவனுக்கு எதிரில் ஒரு தாய் தனது தூங்குகின்ற பெண் குழந்தையை மடியில் கிடத்தித் தானும் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.

அம்மாசி அவளை வெறித்துப் பார்த்தான். அவளது தோற்றத்திலிருந்து அவள் ஓர் இளம் பிராமண விதவை என்று தெரிந்தது. நாட்பட்ட க்ஷயரோகத்தால் அரிக்கப்பட்டு வெறும் அஸ்திக் கூடே உயிர் தரித்து அயர்ந்தது போல் தோற்றம். அவளது தொண்டைக் குழியில் பிராணன் துடித்துக் கொண்டிருந்ததும் தெரிந்தது.

பட்ட மரத்திற் படர்ந்த பசுங்கொடியில் ஒற்றை மலர் பூத்தது போன்று அவள் மடியில் படுத்திருந்த அந்த அழகிய பெண் குழந்தை உறக்கத்தில் முகத்தைச் சுருக்கிப் பின் மலர்ந்து சிரித்தது.

ரயிலின் மெதுவான ஓட்டத்தின்போது ஏறிய டிக்கட் பரிசோதகர் வாசற்படியிலேயே சற்று நின்று சிகரெட்டைப் புகைத்தெறிந்துவிட்டுச் சாவதானமாய் வந்து அம்மாசியின் அருகில் அமர்ந்தார். சற்றுநேரம் ஏதோ யோசனையோடு அமர்ந்திருந்த டிக்கட் பரிசோதகர், பக்கத்து ஸ்டேஷனை வண்டி நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்து, அம்மாசியின் தலைக்குமேல் படுத்திருந்த பட்டிக்காட்டு மைனரை நோக்கி டிக்கட்டுக்காகக் கை நீட்டினார். அம்மாசியும் தனது கோட்டுப் பைக்குள் கிடந்த டிக்கட்டைத் துழாவி எடுத்தான்.

அவற்றை வாங்கிப் பின்புறம் கையெழுத்திட்டுக் கொடுத்த பின், உறங்கிக் கொண்டிருக்கும் அந்தப் பிராமண விதவையை எழுப்புவதற்காகக் கையிலிருந்த பென்சிலால் பலகையில் தட்டினார் டிக்கட் பரிசோதகர்.

அந்தத் தாய் உள்ளூற மனத்தாலும் உடலாலும் என்னென்னவிதமான துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்தாளோ?… உயிரின் பசையற்ற தனது வரண்ட விழிகளை அவள் ஒரு முறை திறந்து பார்த்தாள். பிறகு அப்படியே கிறங்கிப்போய் விழிகள் மூடிக் கொண்டன. உள்ளூற வருத்தும் உபாதை பொறுக்க முடியாதவள் போன்று வெளிறிய உதடுகளைக் கடித்துப் புருவங்களைச் சுருக்கிக் கொண்டு ‘தெய்வமே’ என்று சிணுங்கினாள் அவள்.

“அம்மா… இந்தாங்க. டிக்கட் கேக்கறாரு பாருங்க” என்று கனிவோடு அவளை எழுப்பினான் அம்மாசி.

நிமிர்ந்து உட்கார முடியாமல் அப்படியே விழித்துப் பார்த்த அவள் “டிக்கட்டா?…” என்று ஈனசுரத்தில் முனகினாள்.

“டிக்கட் இல்லியா? – வர்ர ஸ்டேஷன்லே எறங்கிடும்மா…” என்று நிர்த்தாட்சண்யமாய்ச் சொல்லிவிட்டு வேறு புறம் திரும்பி வெளியே எட்டிப் பார்த்தார் டிக்கட் பரிசோதகர்.

அம்மாசி அவளது பரிதாபத்தை ஆழ்ந்த சிந்தனையோடு கூர்ந்து பார்த்தவாறிருந்தான். அடுத்த ஸ்டேஷன் நெருங்கிக் கொண்டிருந்தது. அவள் மிகவும் பிரயாசைப்பட்டு எழுந்திருக்க முயன்றபோது மடியில் படுத்திருந்த இரண்டு வயதுக் குழந்தை உட்கார்ந்து கண்களைக் கசக்கிக் கொண்டு பசியினாலும், தூக்கம் கலைந்த எரிச்சலினாலும் அழுதது…

“எவ்வளவு தூரம்மா போகணும் நீங்க?” என்று அம்மாசி அவளை விசாரித்தான்.

“பட்டணத்துக்குப் போகணும் ஐயா!” என்று அவலமாய்ப் பெருமூச்செறிந்தாள் அந்தத் தாய்.

“ஸார்.. பட்டணத்துக்கு ஒரு டிக்கட் போட்டுக் குடுங்க… நான் பணம் தர்ரேன்…” என்றவாறு தனது கோட்டுப் பையிலிருந்து உப்பிக் கனத்த தோல் பர்ஸை எடுத்தான் அம்மாசி.

டிக்கட் பரிசோதகர் அவனை ஒரு விநாடி பார்த்து அவனது பெருந்தன்மையைப் பாராட்டுவதுபோல் புன்னகை பூத்துவிட்டு, நின்ற நிலையிலே ஒரு காலை தூக்கிப் பெஞ்சின் மீது வைத்து முழங்காலின் மீது நோட்டுப் புத்தகத்தைத் தாங்கி ரசீது எழுதினார்.

அந்த விதவைப் பெண் அம்மாசியைப் பார்த்து, “உங்க குழந்தை குட்டியெல்லாம் தீர்க்காயுசா இருக்கணும், ஐயா” என்று நன்றியுடன் குச்சுக் குச்சாய் இருந்த விரல்களோடு கும்பிட்டாள். தூக்கம் கலைந்து அழுத குழந்தை மீண்டும் தாயின் மடியில் முகம் புதைத்துக் கொண்டது.

அந்த வாழ்த்துக்களைக் கேட்டு ஒரு விநாடி யோசித்துத் தலை குனிந்து உள்ளூறச் சிரித்துக் கொண்டான் அம்மாசி.

டிக்கட் பரிசோதகர் ஒருபுறம் கீழே இறங்கியதும் மறுபுறத்தில் டிக்கட் இல்லாத ஒரு கிழட்டுப் பிச்சைக்காரனும் அவனது மனைவியும் ஏறி உள்ளே வந்தனர்.

அந்தப் பிச்சைக்காரத் தம்பதிகள் – பெஞ்சுகளில் இடமிருந்தும் – கையில் டிக்கட் இல்லாததால் பிரயாணம் செய்யவே உரிமையற்றவர்களான தாங்கள் பெஞ்சின் மீது உட்காரக் கூடாது என்ற உணர்வோடு – ஒரு மூலையில் முழங்கால்களைக் கட்டிக் கொண்டு உட்கார்ந்தனர். அந்தப் பிச்சைக்காரன் தன் கையிலிருந்த கம்பைக் கீழே ஓர் ஓரமாகக் கிடத்திவிட்டு மடியிலிருந்த வேர்க்கடலையை எடுத்து மனைவிக்குப் பாதி பகிர்ந்து கொடுத்தான். இருவரும் அதைக் கொறிக்க ஆரம்பித்தனர்.

ரயில் அந்தச் சிறிய ஸ்டேஷனிலிருந்து புறப்பட்டு நீண்ட கூக்குரலை முழக்கிக் கொண்டு வேகமாய் ஓடிற்று.

ஒரு பெரிய ஜங்ஷனில் இந்தப் பாசஞ்சர் வண்டி அதிக நேரம் நின்றிருந்தது…

பிரக்ஞை இல்லாதவளாய் மயங்கிக் கிடந்த தாயின் மடியில் படுத்திருந்த குழந்தை விழிப்புற்று மலரத் திறந்த விழிகளோடு வெளியே பார்த்தாள். பிஸ்கட்டுகள் நிறைந்த தட்டுடன் ஜன்னல் அருகே நின்றிருந்தவனைப் பார்த்ததும், தாயின் கன்னத்தை நிண்டி நிண்டி “அப்பிச்சிம்மா… அப்பிச்சி” என்றூ வெளியே கையைக் காட்டி குழந்தை அழுதாள்.

குழந்தைக்கு ஏதாவது வாங்கித் தரலாம் என்று எண்ணிய அம்மாசி, தனது பிறப்பையும் அவர்கள் குலத்தையும் எண்ணித் தயங்கியவாறே குழந்தையைப் பார்த்துப் புன்னகை காட்டினான். குழந்தை அவன் முகத்தைப் பார்த்தவாறு, “ம்… அப்பிச்சீ” என்று உரத்த குரலில் அழுதது.

அப்போது நினைவு திரும்பிய தாய் கண் விழித்தாள்.

“அம்மா… கொளந்தை அளுவுதுங்க; ஏதாவது வாங்கித் தரட்டுங்களா?” என்று விநயமாகவும் அன்புடனும் கேட்டான் அம்மாசி. அவள் கலங்கிய கண்களோடு பார்வையிலேயே தன் சம்மதத்தைத் தெரிவித்தாள்.

அம்மாசி வண்டியிலிருந்து இறங்கி பிளாட்பாரத்திலிருந்த ஸ்டாலுக்குச் சென்றான். ஒரு ‘பன்’னும் ஒரு கப் பாலும் வாங்கினான். அதை வாங்கிக் கொண்டு திரும்பும்போது திடீரென என்னவோ நினைத்துக் கொண்டவன் போல், இன்னொரு கப் பாலும் பாலும் இன்னொரு ‘பன்’னும் கேட்டான். காகிதத்தில் சுற்றிய இரண்டு ‘பன்’களையும் கோட்டுப் பைக்குள் வைத்துக் கொண்டு, நடுங்குகின்ற கைகளில் இரண்டு வடாக்களை ஏந்தியவாறு அவன் ரயில் பெட்டியை நோக்கி நடந்து வந்தான்.

பார்க்கிறவர்களுக்கு ‘இந்தத் தள்ளாத உடம்போடு இவன் ஏன் இவ்வளவு சிரமப்படுகிறான்?’ என்று தோன்றலாம். ஆ! அவனுக்கல்லவா தெரியும், பிறருக்காகப்படும் சிரமத்தின் சுகம்!

வண்டிக்குள் வந்து பெஞ்சின்மீது பால் நிறைந்த தம்ளர்கள் கவிழ்ந்துள்ள வட்டாக்களை வைத்துவிட்டுக் குழந்தையிடம் ஒரு ‘பன்’னை எடுத்துப் புன்னகையுடன் நீட்டினான். குழந்தை ஆர்வத்துடன் தாவி வாங்கி இரண்டு கைகளிலும் வைத்துப் பிடித்துக் கொண்டு ‘பன்’னைக் கடித்தாள்.

அப்போது கண்களைத் திறந்த அந்தத் தாய் அவனைப் பார்த்தாள். அவன் தயக்கத்தோடு அவளிடம் ஒரு ‘பன்’னை நீட்டினான். அவள் ‘வேண்டாம்’ என்று தலையை அசைத்தாள்.

“இந்தப் பாலையாவது குடிங்க அம்மா… ரொம்பக் களைப்பா இருக்கீங்களே?…” என்று வட்டாவிலிருந்த தம்ளரை எடுத்துப் பாலை மெதுவாக ஆற்றி அவளிடம் கொடுத்தான்.

அவளும் நடுங்குகின்ற கைகளால் அதை வாங்கித் தணியாத தாகம் கொண்டவள் போல் ஒரே மூச்சில் ‘மடக் மடக்’கென அதைக் குடித்தாள். அவள் குடிக்கக் குடிக்க வட்டாவிலிருந்த பாலைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தம்ளரில் வார்த்துக் கொண்டிருந்தான் அம்மாசி. அவள் அடங்காத பசியும், தணியாத தாகமும், தீராத சோர்வும் கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்த அம்மாசி, குழந்தைக்காக வாங்கி வந்த பாலையும் அவளுக்கே ஆற்றிக் கொடுத்தான். அவள் அதில் பாதியைக் குடித்தபின், “போதும்” என்று கூறிவிட்டுக் களைப்பு மேலிட்டவளாய்ச் சாய்ந்து கண்களை மூடிக் கொண்டாள்.

குழந்தை, தன் தாயைத் தொந்தரவு செய்யாமல் இருக்கும் பொருட்டு அவளைத் தூக்கித் தன் அருகே உட்கார வைத்துக் கொண்டு ‘பன்’னைப் பிய்த்துப் பாலில் நனைத்து ஊட்டினான் அம்மாசி. குழந்தை ரொம்ப சொந்தத்தோடு அவன் மடியில் ஏறி உட்கார்ந்து சாப்பிட்டாள். பிறகு குழந்தையைத் தூக்கிக் கொண்டு பால் தம்ளர்களைக் கொண்டு கொடுத்தபின், ஸ்டாலிலேயே ஒரு கப் பால் வாங்கிக் குழந்தைக்குப் புகட்டினான். தானும் ஒரு கப் டீ வாங்கிக் குடித்தான். குழந்தை அவனோடு வெகுநாள் பழகியிருந்தவள் போல் சிரித்து விளையாடினாள். அவன் குழந்தைக்கு ஒரு விளையாட்டுப் பொம்மையும் வாங்கினான். அழுத்தினால் ‘கிறீச் கிறீச்’ சென்று கத்தும் அந்த வாத்துப் பொம்மையை வைத்துக் கொண்டு குழந்தை அமர்க்களமாய்ச் சிரித்தாள்… அம்மாசியும் உலகையே மறந்து குழந்தையின் விளையாட்டோடு ஒன்றிக் கலந்திருந்தபோது வண்டி புறப்படுவதற்கான மணி அடித்தது. குழந்தையோடு வேகமாய் ஓடி வண்டியில் ஏறினான் அம்மாசி. அவனுக்கு வாலிபம் திரும்பியது போல் உற்சாகம் மிகுந்திருந்தது இப்போது.

வெகு நேரமாய் அந்த ஜங்ஷனில் நின்றிருந்த பாசஞ்சர் வண்டி நிதானமாக நகர்ந்து புறப்பட்டது.

பசி நீங்கிய தெம்பிலும், விளையாட்டுப் பொம்மை கிடைத்த குதூகலத்திலும் அந்த முகமறியாத புதிய மனிதனின் மடியில் முகத்தைப் புதைத்தும், அவன் மோவாயைப் பிடித்திழுத்தும் சிரித்து விளையாடும் தன் குழந்தையைப் பார்த்து அந்தத் தாய் புன்னகை புரிந்து கொண்டாள்.

அதைக் கவனித்த அம்மாசி அவளிடம் பேச்சுக் கொடுத்தான்: “பட்டணத்திலே எங்கேம்மா போறீங்க?”

அவள் அதற்குப் பதில் சொல்லுமுன் அவலமாய்ப் பெருமூச்செறிந்தாள். பிறகு மெலிந்த விரல்களால் நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே பலஹீனமான குரலில் சொன்னாள்:
“பட்டணத்திலே தெரிஞ்சவா இருக்கா… என் சிநேகிதி ஒருத்தி… எப்பவோ ஒரு தடவை ஊருக்கு வந்தப்ப ‘நுங்கம்பாக்கத்திலே இருக்கோம்’னு சொன்னா; அட்ரஸீம் சரியாத் தெரியலே… அவ்வளவு பெரிய ஊர்லே போயி எங்கே தேடறதுன்னு நெனைச்சுண்டு இருந்தேன்… ஆனா இப்ப… போய்ச் சேரவே மாட்டேன்னு தோண்றதே!” என்று சொல்லும்போது அவளுக்கே தொண்டை அடைத்துக் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

“ஏம்மா அப்படி சொல்றீங்க?… நீங்க எங்கே போகணுமோ அங்கே கொண்டுபோயி நான் சேக்கறேன்” என்று தைரியம் தந்தான் அம்மாசி.

அவனது நல்ல தன்மைகளை மனத்துள் பாராட்டியவாறே அந்தத் தாயின் மனம், தான் நிராதரவாய்த் தவிக்க விட்டு விடப் போகும் குழந்தையைப் பார்த்துக் குழைந்தது.

அவள் திடீரென்று அவனிடம் பேசினாள்: “ஐயா! நீங்க யாரோ? தெய்வந்தான் உங்களை அனுப்பியிருக்கு…. இந்த நிமிஷம் எனக்கு ஆதரவு, சொந்தக்காரன், உடன் பொறந்த சகோதரன் எல்லாம் நீங்கதான்…”

அந்த வார்த்தைகளைக் கேட்டு அம்மாசி மெய் சிலிர்த்தான்.

அப்போது தாயின் நினைவே இல்லாத குழந்தை அந்த வாத்துப் பொம்மையை அவன் காதருகே அழுத்தி ஓசைப் படுத்தினாள். அவன் தலையை ஆட்டிக்கொண்டு, சப்தம் பொறுக்காதவன்போல் காதைப் பொத்திக் கொள்வதைக் கண்டு குலுங்கக் குலுங்கச் சிரித்து மகிழ்ந்தாள். குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்த அம்மாசியை அந்தத் தாயின் பார்வை தீர்க்கமாய் அளந்தது.

அம்மாசி, அவள் தன்னிடம் என்னவோ சொல்லி ஆறுதல் பெறவோ, எதையோ கேட்டு உதவி பெறவோ எண்ணித் தவிக்கிறாள் என்று உணர்ந்து அதைத் தர அந்த உதவியைச் செய்ய சித்தமானவன் போன்று அவள் முகத்தையே கனிவுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அந்தக் குழந்தையோ அவனிடம் இதுவரை யாருமே காட்டாத பாசத்துடன் அவன் மடிமீது ஏறிச் சட்டையைப் பிடித்து இழுத்து அவன் இருதயத்தையே தன்பால் ஈர்த்துக் கொண்டிருந்தது.
திடீரென்று குழந்தையின் தாய் மீண்டும் அவனிடம் பேசினாள்:

“ஐயா! எனக்கு யாருமே… ஒத்தருமே நாதியில்லே…” என்று அவள் விம்மி விம்மி அழுதாள். சற்று நேரம் தாரை தாரையாகக் கண்ணீர் வடித்து அழுதபின், முகத்தைத் துடைத்துக் கொண்டு, அழுததால் கம்மிப் போன குரலில் கூறினாள்:

“போன வருஷம் அவ – பொறந்த ஒரு வருஷத்துக்குள்ளே – பெத்தவரை எடுத்துத் தின்னுட்டா” என்று அவள் அங்கலாய்த்தபோது, அம்மாசி குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டான்:

“ஏம்மா, கொளந்தையைத் திட்டறீங்க?” என்று அவன் கேட்டபோது அவளூம் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு முனகினாள்: “பாவம், அந்தச் சிசு என்ன பண்ணும்? அவருக்கும் சாகிற உடம்புதான்… கலியாணத்தப்பவே அவருக்கு வயசு அம்பதுக்கு மேலே… எங்கப்பா ஏழை! வரதட்சிணைக்கு வழியில்லாம மூணாந்தாரமா கட்டி வெச்சார்… அடுத்த வருஷம் எங்கப்பாவும் போய்ட்டார். இவ அப்பா தங்கமாத்தான் என்னெ வெச்சிண்டிருந்தார்… தெய்வத்துக்கே பொறுக்கலே… கண்ணவிஞ்ச தெய்வம்!” என்று அவள் பல்லைக் கடித்துக் கொண்டு திட்டினாள்.

அவள் மூக்கை சிந்திக் கொண்டு பேசினாள்: “இவ அப்பாவுக்கு ஓட்டல்லே வேலை. அவருக்கு க்ஷயரோகம் வந்துடுத்து. அப்புறம் வேலைக்கு யாரும் வச்சுக்க மாட்டேன்னுடா – நாலு கொழந்தெங்க பெத்தேன். ஒண்ணொண்ணா வளத்து வளத்து வாரிக் குடுத்துட்டேன். கடைசிலே இவ! இவளும் இல்லேன்னா எங்கேயோ ஆறோ கொளமோ பாத்து விழுந்து பிராணனே விட்டுடுவேன்… தாங்க முடியலே ஐயா, இந்த நோயோட இம்செ. தாங்க முடியலே! இனிமே பொழைக்கறதாவது! கொஞ்சம் கொஞ்சமா வதைபட்டு சாகறதெ விட ஒரேயடியா போயிடலாம்னா, இந்தக் கொழந்தெ நேக்கு ஒரு கழுத்தறுப்பு! அவராலே எனக்குக் கெடச்ச சம்பத்தெப் பார்த்தீங்களா? இந்தக் கழுத்தறுப்பும் இந்தப் பிராணாவஸ்தையும் தான்!” – கோபத்தாலும் விரக்தியாலும் அவள் உடம்பில் ஒரு படபடப்புக் கண்டது. பேச முடியாமல் மூச்சிளைக்க வெறித்துப் பார்த்தவாறு மௌனமானாள் அவள்.

அந்தப் பாசஞ்சர் வண்டி ஏகமாய் இரைச்சலிட்டுக் கொண்டு ஓடிய போதிலும் அந்தப் பெட்டிக்குள் ஓர் அமைதியே நிலவுவது போல் தோன்றியது. அவள் மெல்ல மெல்லக் கண் மூடினாள். வண்டியின் ஆட்டத்திற்கேற்ப, கண்களை மூடிச் சாய்ந்திருந்த வளது சிரம் இடமும் வலமும் கொள கொளத்து ஆடிக் கொண்டிருந்ததைக் கண்ணுற்ற அம்மாசி, ‘அவள் செத்துக் கொண்டிருக்கிறாளோ’ என்று ஒரு விநாடி திடுக்கிட்டான்.

நல்லவேளை; அவள் தன் உடலிலோ மனத்திலோ விளைந்த வேதனையைத் தாங்க மாட்டாமல் உதட்டைக் கடித்தவாறு முகத்தைச் சுளித்துக் கொண்டே கண் திறந்தாள், ஒரு கைத்த சிரிப்புடன்.
“பொண் ஜென்மம் எடுக்கவே படாது. அப்படிப் பொண்ணாப் பொறந்தாலும் ஏழையாய்ப் பொறக்கப் படாது” என்று சொல்லி விட்டு, எதையோ யோசித்துத் தான் சொன்னதை மறுப்பதுபோல் தலையை ஆட்டிக் கொண்டாள்: “ஏழையாப் பொறந்தாத்தான் என்ன? நீங்க என்ன ஜாதியோ, என்ன குலமோ? உங்களவாள்லே, ஏழையாய் பொறந்த பொண்களும் ஏதோ அவாளுக்கேத்த மாதிரி சந்தோஷமா வாழல்லியா, என்ன? பொண்ணாப் பொறந்தாலும் ஏழையாப் பொறந்தாலும் எங்க ஜாதியிலே பொறக்கப்படாது ஐயா; அதெவிடச் சேரியிலே பொறந்துடலாம்…” என்று அவள் சொல்லிக் கொண்டிருந்தபோது அம்மாசியின் நினைவில் – நேற்று கட்டை வண்டியில், இருளில் சென்ற சேரிப் பெண்ணின் எக்காளச் சிரிப்பு எதிரொலித்தது.

“என்ன பாவம் பண்ணினேனோ பொண்ணாப் பொறந்து ஒரு பொண்ணையும் பெத்து வெச்சிருக்கேன்! இது என்னென்ன படப்போறதோ?” என்று கண் கலங்க அவள் பெருமூச்செறிந்தபோது, அம்மாசி தன் மடியில் கிடந்த குழந்தையின் மிருதுவான கேசத்தை வருடியவாறு கூறினான்:

“ம்… நீங்க வாழ்ந்த காலம் மாதிரியே இந்தப் பொண்ணு வாழப் போற காலமும் இருந்துடுமா என்னா?”

“காலத்தெ சொன்னாப் போறுமா ஐயா, மனுஷா பண்ற அக்ரமத்துக்கு! நான் கிராமத்துலே பொறந்தவ. டவுனுக்கு வந்தப்பறம் ஜாதியும் ஆசாரமும் அர்த்தமில்லாததுன்னு நன்னா மனசுக்குத் தெரியறது. யார் தைரியமா விடறா, சொல்லுங்கோ? நீங்க யார் – எவர்னு தெரியாம – ‘ஐயோ பாவம், ஒருத்தி மயங்கிக் கிடக்கிறாளே’ன்னு பால் வாங்கிண்டு வந்து தந்தேள்… நானும் சாப்பிட்டேன். இதையே நாலு மனுஷா மத்தியிலே என்னாலே செய்ய முடியுமோ? செய்வேனா? ‘நகந்துக்கோ, நகந்துக்கோ’ன்னுதான் சீலம் கொழிச்சிருப்பேன். என்ன காரணம்? என்ன காரணம்னு எனக்கெ புரியாத – ‘நாலு மனுஷா என்ன சொல்லுவாளோ?’ங்கற காரணம்தான். இந்த ‘நாலு மனுஷா பயம்’தான் எல்லார் கிட்டேயும் இருக்கு. வேற என்ன ‘காரணம் மண்ணு’ இருக்கு. இந்த மாதிரி நிராதரவான நெலையிலே இருந்தா அந்த நாலு மனுஷாள்லே மூணு மனுஷா இப்படித்தான் நடந்துப்பா. இல்லேன்னா – ஜாதியையும் ஆசாரத்தையும் – ஏதாவது ஒரு காரணத்தோட எல்லாரும் மனப்பூர்வமா… நெஜத்துக்கு ஏத்துண்டிருந்தா, அது எப்பவோ மாறிப்போயிருக்கும். ஒவ்வொருத்தரும் அதெப் பொய்யா, ஒரு ஒப்புக்குப் போலியா ஏத்துண்டிருக்கிறதனாலேதான் அது இன்னும் வாழ்ந்துண்டு என்னெப் போல ஏழைகளோட கழுத்தை அறுக்கறது!”

சற்று நேரத்துக்கு முன் அருந்திய பாலினால் விளைந்த தெம்பும், மாலை நேரக் குளிர்ந்த காற்றும் தொடர்ந்து சில நிமிஷங்கள் அவளுக்குப் பேசச் சக்தி அளித்தன. ஆனால் பேசிய பிறகு அவளுக்கு மூச்சுத் திணறியது. இவ்வளவு நேரப் பேச்சுக்குப் பிறகும் அவள் அவனிடம் என்ன சொல்ல நினைத்துப் பேச ஆரம்பித்தாளோ அதை அவனிடம் சொல்லவில்லையே என்று அவளுக்குத் தோன்றியது. மிகவும் அவசரத்தோடு அவள் சற்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

“இவ்வளவு பேசறயே – நீயாவது அந்த ஜாதிக் கட்டை மீறி ஏதாவது செய்திருக்கிறதுதானேன்னு நீங்க கேக்கலாம். ஆமா, இதுவரைக்கும் நான் செய்யலே – செய்யற மாதிரி என்ன வளர்க்கலே…. ஆனா, நான் செய்யப் போறேன்… ஆமா, எனக்குக் கெடச்ச தண்டனை என் மகளுக்காவது கெடைக்காம இருக்கணுமோல்லியோ? நான் செய்யத்தான் போறேன்” என்று பலமான தீர்மானத்தோடு யார்மீதோ பழி தீர்த்துக் கொள்வதுபோல் உதட்டைக் கடித்தவாறு தலையாட்டிக் கொண்டாள்.

இதற்கிடையே ரயில் பல சிறிய ஸ்டேஷன்களில் நின்று நின்று கடகடத்து ஓடிக்கொண்டிருந்தது.

அவள் திடீரென்று நெஞ்சை அழுத்திக்கொண்டு ஓங்கரித்து வாந்தியெடுத்தாள். இரண்டு மணி நேரத்துக்கு முன் குடித்த பால் முழுவதும் ஜீரணமாகாமல் வெளி வந்தது. மடியிலிருந்த குழந்தையை பெஞ்சின் மீது உட்கார வைத்துவிட்டு அம்மாசி எழுந்து நின்று அவள் தலையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான். மூலையில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரக் கிழவி எழுந்தோடி வந்தாள். அவள் கையிலிருந்த தகரக் குவளையைப் பார்த்ததும் தண்ணீர் கொண்டு வரச் சொன்னான் அம்மாசி. கிழவி பாத்ரூமிலிருந்து அதில் தண்ணீர் கொணர்ந்து அவள் முகத்தைத் துடைத்து விட்டு இரண்டு மிடறு தண்ணீர் புகட்ட முயன்றாள். தண்ணீர் கடைவாயில் வழிந்தது. தண்ணீரோடு ஒரு கோடு ரத்தம் கடைவாயிலும் நாசித் துவாரத்திலிருந்தும் வழிந்தது.

“ஐயோ ரத்தம் வருதே!” என்று கிழவி அலறினாள். அம்மாசி தனது மேல் கோட்டால் ரத்தத்தைத் துடைத்து அந்தப் பெஞ்சின் மீது அவளை மெல்லச் சாய்த்துப் படுக்க வைத்தான். அவளுக்குக் கையும் காலும் சில்லிட்டிருந்தது. முதுகில் மட்டும் சூடு இருந்ததை அவளைப் பெஞ்சின்மீது கிடத்தும்போது உணர்ந்தான் அம்மாசி. அவளைப் படுக்க வைத்த பின் குழந்தையைத் தூக்கி அவள் அருகில் உட்கார வைத்தான். குழந்தை தாயின் மார்பில் முகத்தைச் சாய்த்துக் கொண்டு அவளைப் பார்த்துச் சிரித்தாள்.

குழந்தையின் தாய் அம்மாசியின் பக்கம் கை நீட்டினாள். பெஞ்சின் அருகே முழந்தாளிட்டு உட்கார்ந்திருந்த அம்மாசியின் கையை இறுகப் பிடித்துக் கொண்டு ரகசியம் பேசுவது போன்ற குரலில் அவள் சொன்னாள்: “நீங்க யாராயிருந்தாலும் எனக்குத் தெய்வம் மாதிரி! அடுத்த ஸ்டேஷனிலே இந்த உடம்பெ எறக்கி செய வேண்டியதெ செஞ்சுடுங்கோ… செய்வேளா?” என்று கேட்ட போது, எவ்வளவோ மரணங்களைச் சந்தித்திருந்த அம்மாசியும் கூடக் கண்ணீரை அடக்க முடியாமல் முகத்தை மூடிக் கொண்டான்.

“உதவின்னு கேக்காமலே செய்யற மனுஷன் நீங்க… நான் ரொம்ப நாழியா… சொல்ல நினைச்சிருந்ததைச் சொல்லிடறேன்… இவளை.. என் குழந்தையை…” – அவள் கண்களில் நிறைந்த கண்ணீர் காதோரமாய் வடிந்தது – “உங்க குழந்தையா வளர்க்கணும்… அவள் நன்னா வாழ்ந்துடுவா என்கிற நம்பிக்கை வந்துடுத்து… என் குழந்தையை உங்க குழந்தைகள்லே ஒருத்தியா… வளர்ப்பீங்களா, ஐயா…?” என்று மலர்ந்த முகத்தோடு அவன் கையை இறுகப் பற்றிக்கொண்டு கேட்டாள் அந்தத் தாய்.

அவன் அவளைக் கும்பிட்டான்.

அவள் பிடி அவன் மணிக்கட்டின்மேல் இறுகி இருந்தது….

ஒரு திறமையற்ற நடிகை உயிர் விடுகின்ற காட்சியில் நடிப்பதுபோல் முகத்திலுள்ள புன்முறுவல் மறையும்முன் அவள் கண்களை மூடிக்கொண்டாள். மெல்ல மெல்ல அவளது வாய் திறந்தபோதும், உதட்டின்மீது ஒரு ஈ வந்து அமர்ந்தபோதும் தான், அவள் உயிர் வாழ்க்கை சம்பூர்ணமெய்தி விட்டது என்பதை அறிந்த அம்மாசி எழுந்து தலைகுனிந்து நின்றான்…

ஏதோ ஒரு சின்ன ஸ்டேஷனில் வண்டி நின்றதும், பிச்சைக்காரக் கிழவி ஓலமிட்டதைத் தொடர்ந்து அந்தப் பெட்டியைக் கும்பல் சூழ்ந்தது. கும்பலை விலக்கிக் கொண்டு ஒரு ரயில்வே அதிகாரி உள்ளே நுழைந்தார்…

மூன்றாம் நாள் மத்தியானம் அந்தச் சின்னஞ்சிறு ரயில்வே ஸ்டேஷனில் தெற்கே இருந்து வரும் பகல் நேரப் பாசஞ்சர் வண்டிக்காகக் கையில் குழந்தையுடன் காத்திருந்தான் அம்மாசி.
தன் தாய்க்குச் செய்யத் தவறிய ஈமக் கடன்களை யெல்லாம் நேற்று ஒரு தாய்க்குச் செய்துவிட்டு, வாழ்க்கையில் தனக்குக் கிடைத்திருக்கும் பொக்கிஷம் போல் அந்தக் குழந்தையை இரவெல்லாம் மார்போடு அணைத்துக் கொண்டு அந்த ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்தான் அம்மாசி.

இன்று சரியான நேரத்திலேயே அந்த பாசஞ்சர் வண்டி வந்து நின்றது. தலையும் உடம்பும் ஆட்டம் கண்டு விட்ட அம்மாசி, குழந்தையோடு தனது பைச் சுமையையும் ஒன்றாய் எடுத்துச் செல்ல முடியாமல் முதலில் குழந்தையை ஜன்னல் வழியாக ஒரு அம்மாளிடம் கொடுத்துவிட்டுப் பையைத் தூக்கிக் கொண்டு உள்ளே சென்றான்.

வண்டியில் இருந்தவர்கள் எல்லாரும் குழந்தையையும் கிழவனையும் மாறி மாறிப் பார்த்தனர். ‘இந்தக் கிழவனுக்கு இவ்வளவு அழகான குழந்தை என்ன உறவு’ என்று நினைத்தார்களோ?
“பொண்ணு… மகளா, பேத்தியா?” என்று விசாரித்தாள் சன்னல் வழியாகக் குழந்தையை வாங்கிய அந்த அம்மாள்.

பிள்ளையே பெறாத அம்மாசி ஒன்றும் யோசிக்காமல் உடனே “பேத்தி!” என்று பதில் சொன்னான்.

குழந்தையின் கன்னத்தில் செல்லமாய்த் தட்டியவாறே மீண்டும் அந்த அம்மாள் “என்ன பேரு?” என்று வினவினாள்.

அந்த நேரத்தில் ரயில் ‘கூ’வென்று கூவிச் சிரித்தது. ‘குழந்தையின் தாயிடம் பெயரைக் கேட்க மறந்து விட்டோமே’ என்று உதட்டைக் கடித்துக் கொண்டான் அம்மாசி. ரயிலின் கூவல் நின்ற அதே விநாடியில், தான் கண்டுபிடித்த பெயரைப் பிரகடனம் செய்தான் அம்மாசி: “பாப்பாத்தி!”

“பாப்பாத்தி! பொருத்தமான பேருதான்!” என்று சிலாகித்தாள் அந்த அம்மாள்.

பொருத்தமோ, இல்லையோ…. இனிமேல் அது ஒரு பெயர்தான்!

– ஜெயகாந்தன் சிறுகதைகள் – முதற்பதிப்பு 1973 – நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

Print Friendly, PDF & Email

3 thoughts on “ஒரு பகல் நேரப் பாசஞ்சர் வண்டியில்

  1. கற்றலில் கேட்டலே நன்று என்பதைப்போல் இந்த கதையை படிப்பதை விட முனைவர் ஜெயஸ்ரீ பாலகிருஷ்ணன் அவர்கள் மூலம் கேட்கும்போது அவ்வளவு இனிமை என்பதைவிட அத்தனை கதாபாத்திரங்களும் நம் கண்முன்னே தோன்றுவதை உணரலாம். என்ன ஒரு அருமை.

  2. ஜெயகாந்தன் ஒவ்வொரு கதையும் காவியம்… பல்லாயிரம் ஆண்டுகள் கடந்தும் அழியா உயிர் பெற்றவை.. அவர் கதைகளை படிக்கும் ஒவ்வொருவரும்… கொடுத்து வைத்தவர்கள்…நன்றி JK!!!

  3. நமக்காக இருக்கும் ஒவ்வே ா ர் உறவுமே இறை வன் கெ ாடுக்கும் பரிசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *